Saturday, February 28, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்புனிதங்களற்ற, பயன்படுத்தத்தக்க காந்தி

புனிதங்களற்ற, பயன்படுத்தத்தக்க காந்தி

ஆஷிஷ் நந்தி

தமிழில் : சுனில் கிருஷ்ணன்

(திரிதீப் சுஹ்ருத்தின் காந்தியின் தன்வரலாறு (சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு) நூலுக்கான முன்னுரையை காந்தி சிறப்பிதழுக்காக நல்கிய காலச்சுவடு பதிப்பகத்திற்கு நன்றி)

த்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உருப்பெற்றதுமான குஜராத்தி இலக்கிய, பண்பாட்டுப் புலம்; அறிவொளி கால விழுமியங்கள், நகர்மயமானதும் தொழிற்வயபட்டதுமான உட்டோபிய உலகம் இவற்றின் கவர்ச்சிகரமான கலவையை மறுத்து, முற்றிலும் வேறான லட்சிய சமூகத்தை முன்வைத்த தீர்க்கமான பார்வையைக் காந்தியிடம் காணும் உலகளாவிய அறிஞர் கூட்டம். இவ்விரண்டிற்கும் முக்கிய இணைப்புப் பாலமாக திரிதீப் சுஹ்ருத் கடந்த இருபதாண்டுகளாக உருவாகியிருக்கிறார்.

மனித நாகரிகத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அறிவொளிக் காலம் ஆற்றியிருக்கக் கூடும் என்பதை அந்த மாற்றுப் பார்வை ஒப்புக்கொள்கிறது. மனித குலம் இன்று எதிர்கொள்ளும் மையச் சிக்கல், சக மனிதர்கள்மீதும் உயிரோட்டமான இயற்கைமீதும் வருங்காலத் தலைமுறையின்மீதும் நிகழ்த்தப்படுகிற மிகப்பெரியதும் முறைபடுத்தப்பட்டதும் அமைப்புரீதியானதும் (இன்னும் ஒன்றைச் சேர்க்கலாம் என்றால்) ‘அறிவியல்பூர்வமான’துமான வன்முறை. இதற்கான எந்தத் தீர்வும் அறிவொளிக் காலம் முன்வைக்கிற ‘இன்பஉலகு’ என்னும் கற்பனையிடம் இல்லை. 

இருபதாம் நூற்றாண்டில் இன அழிப்பில் மட்டுமே சுமார் இரண்டரை லட்சம் உயிர்களைப் பறித்த ஒருவித நிகிலிச வன்முறைக்கு இரு முக்கியக் கூறுகள் உள்ளன. முதலாவதாக, பல சமூகங்களில் தொற்றுநோயாகப் பரவும் வடிவம் கொண்டுள்ள நாகரிகமற்ற கொடூரம். இரண்டாவது, அரசியல் ரீதியான பயங்கரமான அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தல் இல்லாமல் அறத்தை நிலைநாட்ட முடியாது என்று பிரெஞ்சுப் புரட்சி நாயகர்களில் ஒருவரான மாக்ஸிமில்லியன் ராபிஸ்பியர் நம்பினார். 

வேறு பலரைப் போல் சுஹ்ருத்தும், 1970களில் நெருக்கடி நிலை அமலாகி, மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட பிறகுதான் காந்தியை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டார். இந்தக் கண்டடைதல், காந்தியைச் சீரிய சிந்தனையாளராகக் காணும் போக்கின் ஒரு பகுதி. முந்தைய காலங்களில் அவரைப் பற்றிய படிமங்களைக் கட்டமைத்துப் பரப்பியதில் முக்கியமாக ஈடுபட்ட இருவகையான காந்திய ஆர்வலர்களின் ஆளுகையில் காந்திய மரபை இனியும் விட்டுவிட முடியாது என்று நம்புகிறவர்கள் இவர்கள். முதல் தரப்பினர், அழுக்கான, வன்முறை நிறைந்த, ஊழல் மிகுந்த அன்றாட அரசியலில் அவரை இழுப்பது நியாயமில்லை எனக் கருதினார்கள். இந்த காந்தியைப் பற்றிப் பேசும்போது, ஒருமுறை மெய்யியலாளரும் சிந்தனையாளருமான ராமச்சந்திர காந்திக்கு ஒரு கருத்தரங்கில் கவிஞர் உமாசங்கர் ஜோஷி அளித்த கூர்மையான பதில் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் புனிதர்கள் வகைக்கு எத்தனையோ பேர்; காந்தி தனித்துவமானவர், அவர் ‘அரசியல் சாக்கடை’யில் வாழத் துணிந்த புனிதர் என அவருக்கு நினைவுபடுத்தினார். வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் டாயின்பீ, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் தனது அஞ்சலிக் குறிப்பில் ‘வருங்காலங்களில் மனித குலம் அதன் தீர்க்கதரிசிகளிடம், “அரசியல் சாக்கடையில் நீங்கள் வாழத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் என்று சொன்னதிலிருந்து இந்த வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டதாக ஜோஷி கூறினார். 

இரண்டாவது தரப்பினர் காந்தியை நடைமுறைத் தொலைநோக்குக் கொண்டவராகக் காணும் தரப்பு. அவருடைய அரசியல், சமூகச் செயல்பாடுகள் எல்லாம் இந்திய மரபிலிருந்தே அல்லது சூனியத்திலிருந்தே கிளைத்தவை எனக் கருதுபவர்கள். இந்த வகை காந்திய ஆர்வலர்கள், காந்தியிடம் தீவிர அறிவார்ந்த ஈடுபாட்டோடு அணுகுவதை நேர விரயம் என்றோ அல்லது அது உண்மையான காந்தியைப் புரிந்துகொள்வதிலிருந்து தற்காலத் தலைமுறையைத் தடம்மாற்றும் உத்தி என்றோ எண்ணுகிறார்கள். காந்தியை இப்படி வகைப்படுத்துவதில் ஒருவித மெல்லிய வக்கிரம் படர்ந்துள்ளது. காந்தி செயல்வீரர்தானே ஒழிய, சிந்தித்தவரோ ஆராய்ச்சி செய்தவரோ அல்லர் எனச் சொல்வது இப்போது ஒரு அரசியல் தந்திரமாகவே மாறிவிட்டது. இத்தகைய நிலைப்பாடுதான் வினாயக் தாமோதர் சாவர்க்கர் போன்றவர்களை காந்தி அறிவியலுக்கு எதிரானவர், மூட நம்பிக்கைகள் உடையவர், நவீன ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை அறியாதவர் எனத் துணிவுடன் கூறவைத்தது. 

ஐம்பது ஆண்டுக்காலமாக அவ்வப்போது காந்தியுடன் உறவாடிக்கொண்டிருப்பவன் எனும் முறையில் ஒன்றைச் சொல்லத் துணிகிறேன்: இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்திய விடுதலை வீரர்களில், அரசியல் சமூக சீர்திருத்தவாதிகளில் ஐரோப்பிய நாகரிகத்தின் டயனோசிய சுயத்திலிருந்து துணிவுடன் துண்டித்துக்கொள்ள முயற்சித்த மேற்கத்திய மாற்று அரசியல் சிந்தனையாளர்களுடனும் அறிஞர்களுடனும் அதிகபட்ச அறிமுகம் கொண்டிருந்தவர் காந்திதான். காந்தி தன் அறிவாசான்கள் என அறிவித்துக்கொண்ட லேவ் தல்ஸ்தோய், ஹென்றி டேவிட் தோரோ, ஜான் ரஸ்கின் ஆகிய மூவரும் மேற்கத்தியர்கள்; நான்காவதாக ரால்ப் வால்டோ எமர்சனையும் சேர்த்துக்கொள்ளலாம். உலகின் பிற பகுதிகளில் இனவாதத்திற்கும் காலனியத்திற்கும் எதிராகப் போராடிய இயக்கங்களோடும், இப்போது நாம் பெண்ணியம், மனித சக்திக்குட்பட்ட தொழில்நுட்பம், சூழலியல் நீதி என அடையாளப்படுத்தும் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களோடும் சீரிய முறையில் அவர் தொடர்பில் இருந்தார். 

நெருக்கடி நிலையின்போது மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட ‘த்விஜா’ என்ற நூலில் அதன் ஆசிரியரான இலங்கை காந்தியர் டி.கே. மகாதேவன், காந்தி வாழ்க்கையில் இருமுறை மட்டுமே தீவிரமாகத் தெருவில் இறங்கிப் போராடினார், பிற சமயங்களில் சிந்திக்கவும் எழுதவுமே செய்தார் எனும் கருத்தை முன்வைக்கிறார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தொண்ணூற்றி ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ள காந்தியின் எழுத்துக்கள் மகாதேவனின் கூற்றையே வலுப்படுத்துகின்றன; காந்தியின் விமர்சகர்களின் முடிவை அல்ல.

இந்தப் பின்புலத்தில்தான் இந்தத் தலைமுறை இந்திய அறிவுஜீவிகளுக்கு காந்தியின் சிக்கலான, ஆற்றல் மிகுந்த சிந்தனைப் புலத்தைக் கொண்டுசேர்க்கும் திரிதீப் சுஹ்ருத்தின் முயற்சிகளை மதிப்பிட வேண்டும். இந்த வரிசையில் சுஹ்ருத்தின் முதல் பெருமைமிகு முயற்சி, குஜராத்தி மொழியில் நாராயண் தேசாயின் நான்கு தொகுதிகளாக வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாறான ‘என் வாழ்வே என் செய்தி’யை நான்கு தொகுதிகளாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததாகும். கலவரத்தால் சீரழிந்த குஜராத்தில் தேசாய் ‘காந்தி கதை’ என்னும் தொடர் கதைசொல்லலை இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நிகழ்த்துவதற்கு இந்த நூல் அடித்தளமாக அமைந்தது. தேசாய் குஜராத்தின் சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கு மட்டும் காந்தி கதையைக் கொண்டுசெல்லவில்லை; இந்தியா முழுக்கக் கொண்டுசென்றார், அமெரிக்காவிற்கும்தான். வங்கதேச மக்களிடம் கொண்டு செல்வதற்காக அவர் அழைக்கப்பட்டார். ஆனால் மரணம் அதற்குள் குறுக்கிட்டுவிட்டது.

சுஹ்ருத்தின் இரண்டாவது முக்கிய முயற்சி, சந்துலால் பாகுபாய் தலால் குஜராத்தியில் எழுதிய காந்தியின் புகழ்பெற்ற மூத்த மகனான, எதற்கும் அடங்காத ஹரிலாலின் வாழ்க்கை வரலாற்றை மொழியாக்கம் செய்தது. வாசிப்பவரை நெகிழவைக்கும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை என்றாலும் நம்மை நெகிழவைக்கும் நூல் அது. ‘ஹரிலால் காந்தி; ஒரு வாழ்க்கை’ எனும் பெயரில் இது வெளியானது. இந்நூலுக்கு ராமச்சந்திர காந்தி சிறிய, இரண்டு பக்க முன்னுரையை வழங்கியிருக்கிறார். மயக்கும் எதிர் ஆளுமையாகவும் விமர்சனம் வாய்ந்த அறக் குரலாகவும் ஹரிலால் தன்னையறியாமலேயே தன் தந்தையின் வாழ்வில் எப்படி முக்கியப் பங்காற்றினார் என்பதை அவர் அற்புதமான புதிய கோணத்தில் சொல்கிறார். இந்த நூலையும் அதன் குறிப்புணர்த்தும் முன்னுரையையும் மோகன்தாஸ் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைய முற்படும் எவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.

சுரேஷ் சர்மாவுடன் திரிதீப் சுஹ்ருத் இணைந்து பதிப்பித்த ‘இந்து சுயராஜ்ஜிய’த்தின் ஆய்வுப் பதிப்பை இந்தப் புத்தகத்தின் முன்னோடி எனக் குறிப்பிடலாம். தன்வரலாற்றின் இந்தச் செம்பதிப்பிற்குத் துணைநூலாக அதைக் கருதலாம். ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே தன்வரலாற்றை வாசிக்க முடிவதோடு குஜராத்தி வடிவத்தின் வாசனையையும் கொஞ்சம் உணர முடியும். மூல ஆசிரியரின் நோக்கங்கள், மொழியாக்கம் செய்தவரின் தயக்கம், தடுமாற்றங்கள், குஜராத்தி, ஆங்கில வடிவங்களுக்கு இடையிலான தொனி வேறுபாடு ஆகியவற்றையும் ஓரளவு ஊகிக்கலாம். சுஹ்ருத் குறுக்கீடு  செய்யாத அருமையான வழிகாட்டி. அதேசமயம் நாம் சுயமாக முடிவு செய்துகொள்வதற்கும், எது உண்மை என்று அவர் பார்க்கும் பார்வையிலிருந்து கடுமையாக வேறுபடுவதற்கும் தேவைக்கு அதிகமாகவே இடமளிக்கிறார். (உண்மையில் இந்த முன்னுரையும்கூட அவருடைய அவ்வளவாகப் புகழ்பெறாத புத்தகமான ‘Reading Gandhi in Two Tongues and other Essays’ நூலுடன் சில விஷயங்களில் மாறுபடுகிறது) 

மீண்டும் யோசிக்கையில், இந்த நூலானது காந்தியின் காலத்திற்கும் நமது காலத்திற்குமிடையே இணைவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பார்வை கொண்ட காந்தியை, இந்தியமயப்படுத்திப் போற்றித் துதிக்க வேண்டியவராக்கிப் புரட்சிகரச் சிந்தனைநீக்கம் செய்யப்பட்ட – இந்திய அரசியல் என்ற சிலந்திவலையில் சிக்கிக்கொண்டுள்ள – காந்தியோடு வைத்துச் சீர்தூக்கிப் பார்ப்பதாகவும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.

***

அஷிஷ் நந்தி நவீன இந்தியாவின் மிக முக்கிய அறிவுஜீவிகளில் ஒருவர். பின் காலனிய ஆய்வாளர். காந்திய சிந்தனையாளர்.

***

சுனில் கிருஷ்ணன் – காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். காந்தி குறித்து தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருபவர். சிறுகதை, நாவல், காந்தியக் கட்டுரைகள், மருத்துவம் சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக இலக்கியப் பங்காற்றி வருகிறார். ‘அம்புப் படுக்கை’ நாவலுக்காக சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வென்றவர். மின்னஞ்சல் : drsuneelkrishnan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here