Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்காந்தியும் கோட்சேவும்

காந்தியும் கோட்சேவும்

மலையாளம் – என்.வி. கிருஷ்ணவாரியர்

தமிழாக்கம் – அரவிந்த் வடசேரி

(கேரள சாகித்ய அகாடெமி விருது வென்ற கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை)

அரிசி வாங்கிட 
வரிசையில் 
நெருக்கி நிற்கிறார் காந்தி;
அருகே,
பிரம்மாண்ட காரிலேறிப்  போகின்றான் கோட்சே!
மூட்டைக்கு ரூபாய் ஐம்பது இலாபத்தில், 
தன் கையிருப்பினை விற்றொழித்திருந்ததால், 
உலகம்தான் என்னே அழகு என்றெண்ணி, 
மதுவும் சீட்டாட்டமும் சினேகிதமும் தரும் கிளப்பினை,
சீக்கிரம் எட்டிடவே விரையும் மதிப்பிற்குரிய வியாபாரி கோட்சே. 
அந்தியில் குடிசைக்கு எதை எப்படிச் சேர்ப்பது எனச் 
சிந்தனையில் நிற்கும் காந்தியைக் காண்கையில்,
எண்ணிக் கொண்டேன் “ ஐயகோ! இந்த ஏழையைக் கருதியா 
எண்ணி கைத்துப்பாக்கியில் நிறைத்தேன் விலைமிகும் குண்டுகளை?
ஊதினாலே பறந்துவிடும் இந்நிழலின் பின்னாலா 
சூதாடிக் களிப்பதற்கான அந்தியில் பதுங்கினேன் நான் ?”
வரிசையில் நிற்கையில் காரினுள் கோட்சேயைக் கண்டாரா  காந்தி? 
வாயிலிருந்து ‘ஹே, ராம்!’ எனும் கீச்சொலி எழவில்லையே, ஏன்? 
நேற்று சாயந்திரம் காந்தியைக் கண்டேன் நான் :
கிடக்கிறார் பார்க்கின் வாயிலில், 
நடைபாதை கான்கரீட்டில்!
தொண்டையில் சிக்கிடும் மூச்சினால் நெஞ்சு விம்மித்துடித்திட , 
நீர் கோர்த்த கால்கள் மடங்கிக் கிடந்திட 
அனாதையாகச் சாகும் அப்பரிதாபத்தைப் 
பார்த்தபோது கிசுகிசுத்தான்:“பட்டினி!” 
வேகமெடுத்து நடந்தேன் வீடடைய. 
நிற்கவேண்டும் வேகமாய்ச் சென்று வரிசையில்;
(மனையாளுக்கு மாதம் பத்தாகிவிட்டதிப்போ !) 
போடுவதென்ன இன்று கோதுமையா? கல்லா? பூசனமா! 
இன்று காலையில் கண்டேன் கோட்சேவை 
காந்தியின் பக்கத்தில் 
நிமிர்ந்த தலையில் வெண்குல்லா வெண் ஜிப்பாவோடு . 
“செத்த இந்துவை பண்பாட்டு முறைப்படி அடக்க 
ஆனதைத் தாருங்க”ளென உண்டியல் நீட்டினான் கோட்சே. 
(தெரியும் : அடுத்த தேர்தலில் வேட்பாளராவேன் என்பதால்தான் இந்தத் 
தீவிர மக்கள்சேவை விரதம்!)
இட்டேன் கால் ரூபாய் அந்த நீட்டின உண்டியலில் நான் 
மதியம் குடிக்கத்தான் இருக்குமே குழாய்த் தண்ணீர். 
மாலையில் விருந்தினர் மாளிகையில் இறங்குகிறான் கோட்சே காரிலிருந்து:
மந்திரியைக் காண, வந்து சேர்கின்றனர் பிரபலங்கள்; தொழிலதிபர்கள், தரகர்கள், ஓபந்ததாரர்கள், 
கட்சி பிரமுகர்களும் பின்னே கலெக்டரும்.      
மதுவும் மற்றவைகளும் மரியாதையாய் கொணர்ந்து வைத்தனர் 
நன்றி மறவாத சுற்றுலா விடுதியினர்!  
மயக்கும் புன்னகையாள் வந்தாள் சமூக சேவகியும்! 
இரவின் சிறுபொழுதினை அரைத்தபடி இயங்கிற்று 
அதிக எடை கொண்ட அவ்வரசு இயந்திரம்.
அன்னநடையாள் அந்திமவிருந்தாளி 
கார் ஏறிச் செல்கையில்
வழியனுப்பித் திரும்புகையில் 
வைகறை வெளிச்சத்தில் 
கேட் சாத்தக் காத்திருக்கும் காந்தியை 
அடையாளம் தெரிந்திருக்காது மாண்புமிகு கோட்சேவுக்கு. 
இருப்பினும் துக்கம் கவிந்த ‘ஹே ராம்’ கீச்சொலி 
காந்தியின் உள்ளம் தாண்டி லேசாக முழங்குகையில்
திரும்பி, அதிர்ந்து, நிரந்தரப் பகை கண்டு அவசரமாய்த் திரும்பினான்; 
பிறகு, 
கோபத்தில் கத்தினான் கோட்சே:
“வேலை வேண்டும் உனக்கெனில் வாய் மூடி இருந்துக்கொள்!”
வைகறைக் குளிரினாலா நடுங்குகிறார் காந்தி!
உங்களை நான் கொன்றதன் நினைவுதினம்: 
‘ரகுபதி’ நல்லிசை குழைய மீண்டும் விடிகையில்,
ராஜகம்பீரம் மிளிர வருகிறேன் நான் 
ராஜ்காட்டிற்கு. 
கேமிரா மின்னல்கண்களைத் திறந்திட 
பியூன் தாங்கிட 
நான் வைக்கிறேன் மலர்வளையம் 
உங்கள் சமாதியில்.
எழுகிறதா ‘ஹே ராம் !‘ கீச்சொலி? 
சிலையிலிருந்துதிரும் மலர்களல்லவோ 
தேம்புகின்றன ‘ஹே, ராம்!’ என.      
கார் ஏறி நான் திரும்புகையில் வயலில் 
ஏரோட்டும் உழவனின் பாடல் 
‘ஹே, ராம்! ஹே, ராம்’ என்றொலிப்பதுதான் ஏனோ?
வேலையிழந்து 
மில்லின் 
பூட்டு விழுந்த கேட்டில் 
கூடி நிற்கும் மக்கள் கூச்சலிடுகின்றனர் 
ஏன் ‘ஹே, ராம்! ஹே, ராம்!’ என?
கொஞ்சம் அரிசி வேண்டி 
வரிசையில் காத்திருக்கும் இப்பெண்கள் 
‘ஹே ராம் ! ஹே ராம்’ என்றல்லவோ முணுமுணுக்கின்றனர்!  
சட்டைப் பையில் துழாவி எடுத்துத் திறக்கிறேன் துப்பாக்கியினை, 
ஆசுவாசம் கொள்கின்றேன் 
நிறைந்திருக்கும் 
தோட்டாக்களை எண்ணிப்பார்த்து. 
பிரார்த்தனைக்காக அன்று நான் செல்கையில் 
பைத்தியத்தின் சொரூபமாக வந்தாய் நீ என் முன்னே, மகனே!
காலில் விழ அல்ல, துப்பாக்கியினை எடுக்கத்தான் குனிந்தாய் நீ:
ஈய குண்டு மலர்களை பொழிந்தாய் நீ என் மார்பில் 
உன் உள்ளுறை பலவீனத்தின் 
குருட்டு ஆங்காரத்தில் 
துக்கம் கொண்டு 
இரக்கப்பட்டு 
‘ஹே, ராம்’ எனக் கிரீச்சிட்டேன். 
இன்று நீ 
நான் அடைந்ததையெல்லாம் 
வேஷத்தால் உன்னுடையதாக்கி 
வெற்றிச்செருக்கு கொள்கின்றாய்,
யாரை முன்னேற்ற 
இறுதி வரை முனைந்தேனோ 
அந்த கிராமத்து இந்தியரை 
இடித்து 
அரைத்து 
அக்களிமண்ணால் 
பொய்யைப் புலமையாக்கி  
பேராசையைப் பேறெனப் பற்றும் 
மனிதப் பேய்களைப் படைக்கையில், 
நடுவே அற்பர்கள் ஆர்பாட்டமாய் வந்து 
மலர்கொண்டு 
ஈய நெருப்பின் குண்டுகளை 
என்மீது பாய்ச்சுகையில்,
கோபத்தை வென்ற என் 
ஆன்மாவின் சனாதன சீற்றம் வீறுகொண்டு 
‘ஹே, ராம்!’ எனக் 
கரைமீறுகிறது, கொடியவனே!    

***

என்.வி. கிருஷ்ண வாரியர் – கவிஞர், மொழி அறிஞர், பத்திரிக்கையாளர் என பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தவர் என் வி கிருஷ்ண வாரியர். மலையாள இலக்கிய விமர்சனத் துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். கவிதை, கட்டுரை, நாடகம், சிறார் இலக்கியம், விமர்சனம், பயண நூல், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளிலும் படைப்பாற்றல் கொண்டிருந்தார். கவிதை, இலக்கிய ஆய்வு, விமர்சனம் என மூன்று துறைகளில் கேரள சாகித்ய அகாடெமி விருது வென்றுள்ளார். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற மாத்ருபூமி குழுமத்தின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். கல்லூரி விரிவுரையாளர், கேரள மொழியியல் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். 1916 இல் திருச்சூரில் பிறந்த இவர் 1989 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.      

அரவிந்த் வடசேரி – பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்த சிறுகதை ஒன்று மாத்ருபூமி பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆவநாழி எனும் இருமாத இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மின்னஞ்சல் முகவரி : v.aravi.cbe@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here