தமிழின் நவீன சிறுகதைக்கு ஒரு நீண்ட தொடர்ச்சி இருக்கிறது, அந்த வரிசையில் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு பெரிய பங்குண்டு. அவருடைய காலத்தில் வந்த சிறுகதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சொல்முறையை இவரின் கதைசொல்லல் கையாளப்பட்டு இருந்தது, எந்த பெரும் விவரிப்புகளும் வர்ணனைகளும் இன்றி மிகவும் எளிய சொல் முறையில் மனிதர்களின் வாழ்க்கையை இவரின் கதைகள் நிகழ்த்திக் காட்டிய விதம், அந்த சொற்களின் இடைவெளியில் விடப்படும் மௌனங்களும் வாசகனுக்கு அவனுக்கான ஒரு இடத்தை தருவதாலோ என்னவோ இவரின் கதைகள் ஒரு கணத்தில் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வை தட்டி எழுப்பிவிட்டுச் செல்கிறது.
இவரின் கதைகளை வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் உணர்வானது, அந்த எழுத்துக்களை வாசிக்கும் போது உருவாகும் ஒரு உலகத்தின்(மனிதர்களால்) கீழ் வேறொரு பார்வையைக் கொண்டு ஒரு உலகம்(உணர்வுகளால்) உருவாகிறது என்பதுதான். இந்த இரண்டாம் பார்வை பெருவாரியாக அந்தக் கதையில் இருக்கும் உரையாடல்களும், இடையிடையே விடப்படும் மௌனங்களின் மூலமாகத் தான் உருவாகிறது. இந்த இருமை நிலை எனக்கு எளிதில் கிடைக்கப் பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவரின் நாவல்கள், குறுநாவல்கள் வாசித்து வந்ததினால் இப்படி ஒரு பார்வை எனக்குக் கிட்டி இருக்கிறது போலும்.
பெருவாரியாக எளிய மனிதர்கள் தான் இவரின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள். அதுவும் கீழ் நிலை நடுத்தர வர்க்கத்தினர்கள். அவர்களிடத்தில் அதிகாரம், பணம், பதவி என்ற எந்தச் சிறப்புத் தகுதிகளும் இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் தான் இவரின் கதைகளை நகர்த்துகின்றன. அம்மனிதர்கள் மீளமுடியாத கஷ்டங்களும் துயரங்களும் அந்தக் கதையின் கருவாகிறது, அவற்றை எதிர்கொண்டு வீழ்ந்து போகாமல் முன்னேறி செல்கிறார்கள், இவற்றைதான் இவரின் கதை நெடுகிலும் காண முடிகிறது.
இவரின் கதைகள் பெருவாரியாக தன்னிலையில் இருந்து கூறப்படுவதால், வாசகன் அதில் எளிதில் ஒன்றி அவனை அதில் கண்டடைந்து பொருந்திக்கொள்கிறான். இந்தத் தன்னிலையில் கூறும் நபர்கள் எல்லாம் பள்ளிப் பருவ பிள்ளைகள், கல்லூரி இளைஞர்கள், வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்கள், வேலையில் இருப்பவர்கள், குடும்பஸ்தர்கள், முதியவர்கள் என்று எல்லா வயது பருவங்களையும் உடையவர்களாக இருக்கிறார்கள், ஏன் மரணித்தவர்கள் கூட இருக்கிறார்கள். இந்தத் தன்னிலையில் கூறுவதாலோ என்னவோ இதுவெல்லாம் அசோகமித்திரனின் வாழ்க்கையோ என்று பல கதைகளில் சிந்திக்க முடிகிறது, அதில் திரும்பத் திரும்ப வரும் ஒன்றாக நான் கண்டது – அப்பாவின் மரணம். அதேபோல் இவரின் கதைமாந்தர்கள் சந்திக்கும் பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு லேசான பகடியை தூவிவிட்டு செல்லும் போது மனதில் கூடும் கணம் சற்றுக் குறைத்து அவனின் வாழ்வை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க நகர்த்துகிறது, இதுவும் அசோகமித்திரனின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக உணர முடிகிறது.
இவரின் மொத்த கதைகளையும் வாசித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை மீண்டும் வாசிக்கும் போது இந்த கதைகளின் ஊடாக இருக்கும் வெவ்வேறு விடயங்களை வைத்து தொகுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அந்தக் கதைகளில் பெரும்பான்மையாக இருப்பது குழந்தைகள் தான் என்று என்னுடைய சித்தத்திற்கு முதலில் பட்டது, அதுவும் பள்ளிப் பருவ பிள்ளைகள். இவர் எழுதி இருக்கும் 280 கதைகளில் 60க்கும் மேற்பட்ட கதைகளில் குழந்தைகள் தான் வருகிறார்கள், அந்தக் கதைகள் எல்லாம் வெவ்வேறான பார்வைகளிலிருந்து கூறப்படுகின்றன. மீண்டும் அந்தக் கதைகளை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அதில் இருக்கும் சில பிரிவுகளாக நான் கண்டது, குழந்தைகளின் பார்வையிலிருந்து கதையை நகர்த்தும் போது அதில் பெரியவர்கள் வாழ்வு எப்படி இருக்கிறது என்றும், பெற்றோர்கள் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை எப்படி நடத்துகிறார்கள் என்றும், நினைவுகளின் மீட்டுருவாக்கமாக சிறுவயதில் பார்த்த பிறரின் வாழ்வியல் அனுபவங்களை மீள் பார்வைக்கு உட்படுத்துதல், அந்த சிறுவயதில் மனதின் ஆழத்தில் பதிந்த முக்கியமான நிகழ்வுகள், காதல், அன்பு, துரோகம், இழப்பு, பிரிவு, விளையாட்டு, நட்பு வட்டம் என சிறுவர்களின் வாழ்வில் இருக்கும் உணர்ச்சிகளை தான் அதிகம் காண முடிகிறது.
நினைவுகளின் மீட்டுருவாக்கமாக இருக்கும் நிலமாக செகந்தராபாத் தான் பிரதானமாக வருகிறது, அந்தக் கதைகள் அனைத்தும் பெருவாரியாக இந்தப் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் தான் வருகிறது, அதாவது ஆரம்ப நாட்களில் எழுதாமல் பிற்காலத்தில் எழுதி இருக்கிறார். இந்தக் கதை எல்லாம் வெறும் ஒரு nostalgic மட்டும் என்ற வட்டத்தில் சுருக்காமல் அந்த வாழ்வியலில் இருக்கும் அழகழகான நிகழ்வுகளை மட்டும் கூறிச் செல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உணர்ச்சிகளை தொட்டுச் செல்கிறார். சில கதைகளை வாசிக்கும்போது திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கூறுவது போன்ற எண்ணங்களை தந்து அது வாசகனுக்கு ஒரு அயர்வையும் தரக்கூடும். ஆனால் மிக மெல்லிய உணர்வுகளின் வாயிலாக கதை வெவ்வேறு உணர்ச்சிகளை உள்ளுக்குள் கடத்தி செல்லும் போது வேறொரு கதையாக மாறுதல் அடைகிறது. இந்த செகந்தராபாத் நிலத்தில் இருக்கும் கதைகள் மட்டும் எடுத்துத் தொகுத்தால் அது ஒரு நாவல் தன்மையிலும் இருக்கக் கூடும்.
சிறு வயதில் நாம் நம்முடைய சகோதர சகோதரிகள் இடத்தில் வேண்டும் என்றே வீண் வம்புக்கு இழுப்போம். அது விளையாட்டாகத் தொடங்கி விபரீதத்தில் முடிந்து இருவருக்குள்ளும் அணையாத தழல் ஒன்று எரிந்து கொண்டே இருக்கும், அல்லது பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் மீது அதிக அக்கறை காட்டுவது மற்றவரை பெரிதாக அக்கறை காட்டாதது போல அப்போது அந்த பிஞ்சு உள்ளங்களில் சில நஞ்சுகள் அவர்களுக்குள் புகும். அதனாலேயே தம்முடைய சகோதர சகோதரிகளின் மேல் சில கோபங்கள் இருந்து கொண்டே இருக்கும், இப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து விட்டால் இந்த பிஞ்சு மனம் அவர்களுக்காக வருந்தி பிரார்த்திக்கும். அப்படியாகத்தான் விபத்து, வாழ்விலே ஒரு முறை, சிரிப்பு ஆகிய கதைகளை பார்க்கிறேன்.
சிறுவர்களின் உலகத்தை நாம் எந்தவித தர்க்கங்களினுள் வரையறை செய்து கொள்ள முடியாது, அவர்களுக்கு எது சரியோ அது தான் அவர்களின் உலகம். அப்படி நாம் அதில் நுழைந்து கொண்டாலும் நம்முடைய மேதாவித்தனத்தை பிள்ளைகளின் மேல் செலுத்தி அவர்களின் பார்வையை மாற்றி எழுத முயற்சிக்கிறோம், இதெல்லாம் தோல்வியில் தான் முடிகிறது. அந்த உலகத்தின் அழகைக் கண்டு ரசிக்காமல் இருக்கும் மனதை வெளிப்படுத்தும் இடமாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இந்த விடயங்களை மழை மற்றும் ரிக்ஷா கதையில் இருக்கும் தன்மையோடு பொருத்திக் கொள்ளலாம்.
சிறுவயதில் ஒரு விடயத்தைக் கண்டு பிரமித்து அந்த செயலை தானும் செய்ய வேண்டும் என்ற அவா உள்ளுக்குள் ஆழமாக பதிந்து விட்டால் பெற்றோர்களை நச்சரிக்கத் துவங்கிவிடுவார்கள், அந்தப் பெற்றோர்களின் நிலை அவற்றுக்கு எதிராக இருந்தால் சிறுவர்கள் இன்னும் அடம்பித்துக் கொண்டு பெற்றோர்களின் கோபத்தை தூண்டச் செய்து அப்போதைக்கு சில அடிகளையும் பெற்றுக்கொண்டு, பின்பு ஆறுதலாக அந்த பிள்ளைக்கு தரும் சத்தியம் பெரும்பாலும் பொய் சத்தியங்களாகத் தான் இருக்கிறது. அச்சிறுவர்களின் நிறைவேறாத ஆசையாக இருந்த ஒரு விடயம் பிற்காலத்தில் அவர்கள் பெற்றோராக இருக்கும்போது அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வைத்து தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். இது தான் பெரும்பான்மையான இந்தியப் பெற்றோர்களின் மனநிலையாக இருக்கிறது, அசோகமித்திரன் இதே கருவை வைத்து இரு கதைகளை எழுதி இருக்கிறார். இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கதையில் இருக்கும் இந்திரா என்ற குழந்தையின் ஆசை, இந்திராவால் வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கதையில் அவள் தாயாக வளர்ந்து தன்னுடைய மகன் வரை அந்த ஆசை நீள்கிறது. இதே கதையில் அவளின் காதல் பற்றிய ஒரு பார்வையையும் வைத்து கதையை வேறொரு திசைக்கு நகர்த்தியும் காண்பித்து இருந்தார்.
அதிகாரத்தை எளிதாக செலுத்தக்கூடிய இடமாகத்தான் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு அந்நியர்களாக இருந்தாலும் சரி இந்த அதிகாரம் அவர்களின் மேல் செலுத்தப்படுகிறது. அந்த குழந்தை ஒரு குற்றத்தை செய்ததோ இல்லையோ அவர்களின் மேல் செலுத்தப்படும் ஒரு அவதூறுவைக் கூட பொருட்படுத்திக் கொள்ள முடியாமல் பெற்றோர்கள் அவர்களின் மேல் செலுத்தப்படும் அதிகாரம்(இவனை எப்படி?), ஒரு வரிசையில் பெரியவர்களுக்கு மத்தியில் சிறுவர்கள் நிற்க்கும்போது அவர்களின் மேல் செலுத்தக் கூடிய அதிகாரம்(வரிசை), அரசு அதிகாரிகளுக்கு சொல்லவே வேண்டாம்(கொடியேற்றம், புத்தகக் கடை), உபதேசம் என்ற பெயரில் சில அதிகாரங்களும் வரத்தான் செய்கின்றன(பொறுப்பு). இப்படி அவர்களின் மேல் செலுத்தப்படும் அதிகாரத்தில் அவர்களின் குரல் நசுக்கப்பட்டாலும் அவர்களின் குரல்களை வாசகன் உணர்ந்து அதில் இருக்கும் வலிகளையும் உண்மையையும் கண்டடைகிறான்.
சிறு வயதில் பார்க்கும் பிறரின் வாழ்க்கையை அப்போதிருக்கும் வளர்ச்சியால் பெரிதாக எந்தப் புரிதலும் தெளிவாக கிட்டப்போவதில்லை. அந்த வயதின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் ஒரு புரிதலோடு நின்றுவிடுகிறது, ஆனால் அதை வாசிக்கும் வாசகனுக்கு அந்த மனிதர்களின் வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையை உணரமுடிகிறது. இந்த சிறுவர்கள் பார்வையிலிருந்து காண்பிக்கும் நபர்கள் பெருவாரியாக ஏதோ ஒரு விடயத்தாலோ நபராலோ நிராகரிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த சிறுவர்கள் ஆறுதலாகவும் இருக்கிறார்கள், தங்களுடைய இருண்மையை சற்று இறக்கி வைக்கும் ஜீவனாகவும் இருக்கிறார்கள் என்ற நிம்மதி அவர்களின் மனதில் குடி புகுகிறது, அப்பொழுதும் அவர்களின் சிலருக்கு ஆறுதல் பெறாத சுமையும் அவர்களிடத்திலேயே நிலைக்கத்தான் செய்கிறது. அவள் ஒருத்திதான், நடனத்துக்கு பின், உத்தர ராமாயணம், சில்வியா, வாழைப்பழம் ஆகிய கதைகளில் மேலே குறிப்பிட்ட அந்தப் பார்வையை வைத்து பல பரிமாணங்களில் கதை நகரும், எல்லா கதைகளிலும் வருவது அதே சிறுவன் தான் என்ற புரிதலையும் தரக்கக்கூடும்.
பள்ளியில் படிக்கும் போது உருவாகும் நட்பானது தன்னுடன் படிக்கும் வகுப்பு மாணவர்களை தாண்டியும் உருவாகிறது, அந்த நண்பர்கள் மற்ற வகுப்பு நண்பர்களாகவும், மற்றப் பள்ளியில் படிக்கூடிய மாணவர்களாகவும், வேலைகளைச் செய்யக்கூடிய பிள்ளைகளாகவும், தன்னுடைய சுற்றதிற்கு வந்த புதிய நபர்களாகவும் என்று இந்த நட்பு வட்டம் எப்படி வேண்டுமானாலும் விரிவடைந்து கொண்டே செல்வதுண்டு. இந்த நண்பர்களில் பெரும்பான்மையினோர் தம்முடைய சமகால வாழ்வு தொடர்பில் இருக்கப் போவதில்லை, ஆனால் நினைவுகளின் பாதையில் இருக்கும் அவர்களின் தடம் என்றும் நீங்காத ஒன்றை சுமந்து கொண்டு தான் நம்மோடு ஜீவித்துக் கொண்டு வருகிறது. இம்மாதிரியான நண்பர்களை வைத்துக் கொண்டு அசோகமித்திரன் பத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கிறார், அந்தக் கதைகளில் இருக்கும் நண்பர்களாக இருப்பவர்கள் தையல் கடையில் வேலை செய்யும் பதின் பருவ இளைஞன், லாரி கிளீனராக இருக்கும் சிறுவன், வீட்டு வேலை செய்யும் சிறுவன், விளையாடும் போது உருவாகும் நண்பர்கள், கலைக்காக கிடைக்கும் நண்பர்கள் முதலிய பள்ளி வட்டத்தைத் தாண்டி இருக்கும் நண்பர்களைப் பற்றி கூறும் கதைகளில் கதைசொல்லியின் வாழ்வியலை விட அந்த நண்பர்களின் வாழ்வியல் தான் மிகவும் ஆழமாக பாதிக்கிறது. அப்படி இருக்கக் காரணமாக அந்த நண்பர்களின் வாழ்க்கை இந்தக் கதைசொல்லியின் வாழ்வியலை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது என்பதை தான் உணர்த்துகிறது.
“நீ சிறுபிள்ளையாக இருந்தபோது அவர்கள் உன்னை எப்படிப் பார்த்துக் கொண்டார்களோ அவ்வாறு நீ அவர்களை முதுமையில் கனிவாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பது போன்ற ஒரு வசனம் திருக்குர்ஆனில் வருகிறது. முதியவர்களின் செயல்களைக் கண்டாலே அதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருக்கும் – பேதமற்ற தனம். அது தான் முதலில் என் கண்ணுக்கு படும், அதை பெருவாரியானோர் கவனிப்பதில்லை, அதனால் தான் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் என்னுடைய அவதானம். அதேபோல சிறுவர்கள் சில நேரங்களில் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு முதிர்ச்சியான மனிதனின் சாயலை உணரக்கூடும். இப்படி குழந்தைமை – முதுமை என்ற ஒரு பரிமாற்றம் இருக்கிறது. இந்த விடயத்தை வைத்துத்தான் பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது மற்றும் அப்பாவிடம் என்ன சொல்வது என்ற கதைகள் எழுதப்பட்டிருந்தது.
பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு விளையாட்டை விளையாடும் போது, உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம், ஒருவரிடத்தில் மட்டை இருக்கும் இன்னொருவர் இடத்தில் பந்து இருக்கும். விளையாடும் பொருட்களை வைத்திருக்கும் அவர்கள் தன்னிடத்தில் இருக்கும் அதிகாரத்தை வைத்து ஏதும் இல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை தராமல் தானே விளையாடித் தீர்த்து, தம்முடைய பொருளை எடுத்துச் சென்று விடுவேன் என்ற கிலியில் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி இருக்கும் நபர் பல ஆண்டுகள் கழித்து தன்னால் பாதிக்கப்பட்ட அந்த நண்பனை காணும் போது அவன் நம்மை நிராகரித்து சென்று விட்டால் நம்முடைய மனம் முதலில் தேடுவது நாம் முன்பு அவனை என்னவெல்லாம் செய்தோம் என்பதை தான், அப்போது நாம் செய்த பல விடயங்கள் நினைவில் தோன்றி இதன் காரணத்தால் தான் அவன் என்னை பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டானோ என்றொரு தீர்வுக்கு வரும். அப்படி இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, அவனுக்கு நீ யார் என்று மறந்து போயும் இருக்கலாம், அதேசமயம் அவன் இப்போதிருக்கும் சூழலில் சிரித்து பேச இயலாமல் இருக்கலாம் என்றும் ஆறுதலுக்காக சில எண்ணங்களும் எழமால் இருக்கப்போவதில்லை, அப்படியாகத்தான் பார்த்த ஞாபகம் இல்லாமல் போதல் கதையைக் காண்கிறேன். இதே சாயலை வைத்தும் சில கதைகள் இருக்கிறது. இதுவெல்லாம் அந்த சிறு வயதில் இருக்கும் ஒரு விதமான பொறாமை குணத்தால் நேரும் நிகழ்வுகள் என்றும் வைத்துப் பார்க்கலாம். அதிலும் நினைவுகளின் ஊடாக நகரும் கதைகள் தான் அதிகம்.
பள்ளிப் பருவத்தில் பலரும் அனுபவித்திருக்க கூடிய தொந்தரவாக இருப்பது தன்னை நோக்கி வரும் கேலி கிண்டல்கள். அதை எப்படி எதிர்கொள்வது எந்த அறிவும் இல்லாமல் சில நேரங்களில் கேலி கிண்டல்களை செய்வோர் இடத்திலேயே சேர்ந்து கொள்வது அல்லது அந்த இன்னல்களை எதிர்கொள்ள முடியாமல் அதிலேயே வாடுவது, அந்த நேரத்தில் ஆசிரியர்கள் தம்மை ஏசினாலும் அடித்தாலும் எல்லோரும் தன்னை நிராகரித்து கைவிடப்பட்ட நிலையை உணராமல் இருக்கப்போவதில்லை. அந்த சிறார்களின் மனநிலையை கல்வி என்ற கதையில் ஓர் உவமையோடு கையாண்டிருந்த விதம் அருமையாக இருந்தது. பெற்றோர்களின் மரியாதையும் மதிப்பும் பிள்ளைகளின் மதிப்பெண்களில் இருக்கிறது. அவர்களைப் பொருத்தமட்டில் தம்முடைய பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் பிள்ளைகளின் செயலில் அறமில்லை என்றாலும் சரியே என்பது போன்ற ஒரு பார்வையை யுகதர்மம் கதை உணர்த்துகிறது.
கிரிக்கெட், கில்லி, பாண்டி போன்ற விளையாட்டுகளை அசோகமித்திரனின் கதைகளில் காண முடிகிறது, அந்த விளையாட்டுகளின் விவரிப்புகள் இவரின் கதைகளில் வெளிப்படும் போது அதில் இருக்கக்கூடிய நுட்பமும் அவதானிப்பும் அது அந்த விளையாட்டின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது, அந்த விளையாட்டுகளால் உருவாகும் நண்பர்கள் வட்டம் பல கோணங்களில் இருக்கும், எதிர் அணியிலிருந்தவன் நண்பனாவதும், புதிதாக தன் நிலத்திற்கு வந்தவன் நண்பனாவதும் என நட்பு என்பது எந்தெந்த வகையில் எல்லாம் வந்து சேகரம் ஆகிறது என்றும், அதேபோல காலப்போக்கில் அந்த நட்பில் உருவாகும் முரண்கள், முறிவுகள், இழப்புகள், பிரிவுகள் என்று அது எப்படி நம்முடன் வாழ்நாள் முழுவதும் பின் தொடர்கிறது எனவும் சில கதைகளில் காணமுடிகிறது.
இந்த சிறுவர்கள் சார்ந்த கதைகள் பெரும்பான்மையாக கதைசொல்லல் முறை தன்னிலையில் இருப்பதாலும் நிகழும் நிலம் செகந்தராபாத் என்பதால் இதுவெல்லாம் அசோகமித்திரனின் சுயசரிதமாகத்தான் எனக்குப் பட்டது, அதுவும் அப்பாவின் மரணங்கள் திரும்பத் திரும்ப வருவது அவரின் தந்தை மரணத்தையே எனக்கு நினைவூட்டி இதுவெல்லாம் அவரின் வாழ்வு தான் என்ற ஆழமான தடம் மனதில் நீங்காமல் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. மீண்டும் சில காலங்கள் கழித்து வாசிக்கும் போது இதை நான் கைவிட்டும் இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாசிப்பும் இருக்கிறது என்று தான் மனம் ஒப்புதல் அளிக்கிறது. இதேபோன்று வேறு சில பார்வைக் கோணங்களில் அவரின் கதையை அணுகி அவதானிக்க வேண்டும் என்ற அவா மனதில் துளிர்கிறது.
***
முகமது இப்ராஹிம் அலி – சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர். ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com



சற்று நிதானமாக வாசித்த பின் சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் இருக்கும் இடைவெளி அழகாக புரிகின்றது.
மேலும் தொடர்ந்து எழுதவும்.
அசோகமித்திரனின் கதைகளில் தவறாமல் ஒரு முஸ்லிம் பாத்திரம் இடம் பெறும். இதைப்பற்றி அவரிடமே ஒரு சந்திப்பில் கேட்டபோது தனது ஹைதராபாத்,செகந்திராபாத் வாழ்க்கையில் இடம் பெற்றவர்கள் என்று பதிலளித்தார்.