நற்செய்தி
முதலில்
தேவகுமாரனின்
வருகையை
அந்த வால்நட்சத்திரம்
அறிவித்ததாக
பள்ளியில் சொன்னார்கள்
பிறகு
இது ஹாலி
எழுபத்தியாறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை வருமென்ற
கல்லூரியின் பேச்சிற்கிடையே
எனக்குப் பிடித்த
‘பிரிடேட்டர்’ கெவின் பீட்டருடன்
பெருந்திரள் மரணித்தது.
இன்று
இதோ
அந்த யுவதி
முன்னிரவின்
சந்தடி குறைந்த
இருண்ட பாதையில்
திறன்பேசியுடன்
தன் காதிற்கொரு
ஒளிநகைப் பொருத்திக்
கடக்கிறாள்
அலுவலகத்திலிருந்து
தினமும் பார்க்கும்
என்னையும்
ஓரக்கண்ணால்
பார்த்தபடி
அந்த இரவு
வெளிச்சமாகும்
பால்வீதியின்
பின்னிரவில்
எதையோ
மறந்துவிடுகிறேன்
என்பதையும்
மறந்துவிடுகிறேன்
இப்படி தினமும்
தூமக்கேது.
தேவனே!

*
இல்லம்
ஒரு நாவலுக்கான
கவிதை சாத்தியம்தானா?
அன்றிரவு
ஆமாம் என்றே பதில்
வந்தது
இறுதியான
காமத்திற்கானது
மரணம்தான்
என்பது நீங்கள்
ஒரு பிரேதத்திலிருந்து
வெளியேறிய விந்திலிருந்து
தெரிந்து கொள்ள முடியாதுதான்.
இரண்டும் ஒன்றுதான்
புதுமைப்பித்தனும்
விபரீதமாக இதை
முயன்றுதான் பார்த்தான்
அதற்கான ஏற்பாடுகள்
சந்தர்ப்பவசமானதிலிருந்து
அதிக சாத்தியமாக்கியது
இந்தத் திறன்பேசிகள்தான்
நள்ளிரவு
பாருங்கள்
வெந்து தணிகிறது
பரிணாமத்தின்
அற்புதமான விளைபொருள்
எனவே
அந்தக் கவிதை
இப்படி முடிகிறது
இந்த யுகத்தில்
ஒவ்வொரு வீட்டின்
‘தனி’யறையும்
‘தூங்கும் அழகிகள்
இல்லம்தான்’
முடியாது
தப்பித்துக் கொள்ள
மகாத்மாவின்
சத்திய சோதனைகளில்
ஒன்றுதானே
இதுவும்?
”வானத்திலிருந்து
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை”
என்பது உண்மையைப்போல
இருக்கலாம்.
(யசுனாரி கவாப்பட்டாவிற்கு)
*
பிரசங்கம்
கடவுள் இப்படி
ஓங்கிச் சொன்னார்.
இன்று எல்லாமே
மிகுந்துவிட்டது
அன்று
திராட்சை ரசத்தையும்
அப்பத்தையும்
பெருக்கப் பண்ணியது
குமாரனின் மாபெரும்
தவறு.
இதோ இந்த
இரவையும்
பகலையும் பாருங்கள்
பன்னிரெண்டு மணிக்கொன்றுதான்
சூரிய கிரணமும்
சந்திர கிரணமும்
அபூர்வமாய்
இலக்கங்களைத்
தின்றே நிகழ்கிறது
அவ்வளவு ஏன்
இந்த பிரபஞ்சத்தில்
நீங்களறிய ஏதேனும்
வேறு பூமியுண்டா?
எனவே
நீங்கள் யாவரும்
சொற்பமாயிருங்கள்
யாவற்றிலும்
அப்போது
நீங்கள் ஒரேயொரு
கவிதையையே
எழுதியிருப்பீர்கள்
அதுவொரு
பூரண சூரிய கிரணத்தின்
வைர மோதிர தோற்றமாய்
ஜொலிக்கும்
அப்படியும்
வெளியே வராதவர்களைப்
பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்
அவர்கள்
உங்களைக் கண்டு
அஞ்சுகின்றனர்
மேலும்
அவர்கள்
அனேகமாகவும்
இருக்கலாம்.
*
கருதத்தக்கது
இனிப்பு
யாருக்குத்தான் பிடிக்காது?
ஹா!
கொஞ்ச நாளாக
இனிப்புகளை நிறுத்திவிட்டேன்
ஏன்,
தேநீருக்கும்தான்.
இப்போதுதான் தெரிகிறது,
அரிசியில்
கோதுமையில் என்று
எல்லாவற்றிலும்
அந்த அதியற்புதம்
இருப்பதை மொட்டுகள்
கண்டு கொண்டன.
இப்போதும் பாருங்கள்
கொஞ்சம் என் நிலத்தின்
மண்ணையும் சோதித்துவிடலாம்.
நகரத்திலிருந்து
எங்கள் நீர்முள்ளிக்குட்டைக்கு
செல்லும் நினைவு
இந்திராவின் வீட்டு வேலி
பாகற்காயின் இனிப்பை
ஓர் இரவு
கனவின் நினைவு
கனவில் வந்ததின்
நினைவு
அந்தக் கனவில்
தென்பட்டது
நினைவுப் பிழையில்லை
எல்லையில்லா
பிரபஞ்சத்தின் பூமிபோல
அதுவொரு மீச்சிறு
இருப்பு.
***
சாகிப்கிரான் – 90′ களிலிருந்து தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதிவரும் சாகிப்கிரானின் கவிதைகள், ‘வண்ணச் சிதைவு’ (2009), ‘அரோரா’ (2020) என்ற தொகுப்புகளாக வந்துள்ளன. எழுத்துக் களம் ‘இலக்கிய ஆளுமை’ விருதும் (2020), கோவை விஜயா வாசகர் வட்ட ‘மீரா விருதை’ ‘அரோரா’வும் பெற்றது (2022). தமிழ் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி. மணியுடன் அவரது இறுதிக் காலம் வரை உடனிருந்தவர், சேலத்தில் கணினி வன்பொருள் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து கவிதை, திரைப்படம், சிறுகதை குறித்தக் கட்டுரைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: shahibkiran@gmail.com

