Thursday, May 2, 2024
Homesliderசெந்நிற மரணத்தின் களியாட்டு - எட்கர் ஆலன் போ

செந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ

தமிழில் – நரேன்

(எட்கர் ஆலன் போ (1809-1849) – அமெரிக்கச் சிறுகதை தொடக்க அலையின் முன்னணி எழுத்தாளர்களில் முக்கியமானவர். கற்பனாவாத காலகட்டதைச் சேர்ந்த இவர் அதீத துயரமும் மர்மங்களும் கொண்ட கதைகளை ஆங்கில இலக்கிய மரபிற்குள் அறிமுகப்படுத்தியதன் மூலம் ‘இருண்மை கற்பனாவாதம்’ என்ற ஒரு புது பிரிவை உருவாக்கினார். மாயங்களும் மர்மங்களும் சாத்தான்களும் மரணமும் இவரது கதைகளில் பாத்திரங்களாகவே உலவும். இவர் ஒரு கவிஞர் என்பதாலும் இவரது கதைகளில் உருவகங்களும் அருவங்களும் நிறைந்திருக்கும். “கோதிக் இலக்கியம்” என்று வகைப்படுத்தப்படும் இவரது படைப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை. அதீத மன அழுத்தத்தாலும் கோரக் கனவுகளாலும் பீடிக்கப்பட்டிருந்த தன் வாழ்விலிருந்தே அவரது கதைகளுக்கான பேயுருவங்களையும் மாயப் பாத்திரங்களையும் புனைந்தார்.

கொள்ளை நோய் குறித்தான புனைவிலக்கியத்தில் முதன்மையானதாக அறியப்படுகிறது இவரது The Masque of the Red Death என்ற சிறுகதை. பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலிய எழுத்தாளர் Boccacio எழுதிய ‘The Decameron’ என்ற குறுநாவலினால் தூண்டுதல் பெற்று இச்சிறுகதையை எழுதினார் போ. உருவகக்கதைகளுக்கு இன்றளவும் முன்மாதிரியாகத் திகழ்கிறது இச்சிறுகதை. கொள்ளை நோயால் தாக்கப்பட்ட ஒருவனையே நடமாடும் கொள்ளை நோயின் உருவகமாகப் புனைந்ததின் மூலம் மரணம் எனும் என்றுமழியா ஒரு புள்ளியின் மீது வாசகனின் கவனத்தைக் குவிக்கிறார். இக்கதையில் வரும் வண்ணங்களும் ஏழு எண்ணிக்கையிலான அறைகளும் வெவ்வேறு குறியீட்டு அர்த்தங்களைத் திறந்தபடியே இருக்கின்றன. வண்ணங்களை நிறைத்து இருண்மையான ஒரு கனவுலகத்தைக் கட்டி நிறுவுகிறார். கொள்ளை நோயினால் மக்கள் மரணிப்பதை விடவும் மரணத்தை ஒரு நோயென எதிர்நோக்குவதைத்தான் பெரும் துன்பமென முன்வைக்கிறார்.)

செந்நிற மரணத்தின் களியாட்டு

அந்தச் செந்நிற மரணம் நாட்டை நீண்ட காலமாகச் சூறையாடிக் கொண்டிருந்தது. இவ்வளவு பயங்கரமான, அழிவேற்படுத்தக்கூடிய ஒரு கொள்ளை நோய் இதுவரை வந்ததில்லை. இரத்தமே அது கொண்ட அவதாரம், அதன் முத்திரை – குருதியின் செந்நிறமும் திகிலச்சமும். கூர்வெட்டு வலிகளும் திடீர் தலைச்சுற்றல்களும் முதலில் வரும், அதன் பிறகு உடற் நுண்துளைகள் கரைந்தழியுமளவிற்கு அடக்கவியலாத இரத்தப் பீறிடல்கள். நோயாளியின் உடம்பிலும் முக்கியமாக முகம் மீதும் பரவும் கருஞ்சிவப்பு நிறம் தொற்று பரவியதை அடையாளமிட்டு எந்த விதமான உதவியையும் சக மனிதர்களின் பரிவையும் பெற முடியாமல் அவனைத் தனியே வெளியேற்றியது. மேலும், இந்த நோயின் ஒட்டுமொத்த தாக்குதல், பரவுதல், முடிவு என அத்தனையும் அரை மணி நேரத்தில் நிகழ்ந்தேறி விடுவன.

ஆனால் இளவரசர் ப்ராஸ்பெரோ குதூகலமிக்கவராகவும், அச்சத்திற்கு ஆட்படாதவராகவும், மதிநுட்பம் கொண்டவராகவும் விளங்கினார். அவர் ஆட்சிக்குட்பட்டவையெல்லாம் சரிபாதியாக குடியழிந்துக் கொண்டிருந்தபோது அவர் வலிமையான, களிமனம் உடைய ஒரு ஆயிரம் மாவீரர்கள் மற்றும் பேரழகுப் பெண்களை தன் முன்னிலையில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இவர்களோடு அவர் தன்னுடைய அரண்மாளிகை கட்டிடங்கள் ஒன்றில் ஒதுங்கி அணுகவியலாத அரணிடப்பட்ட தனியுலகிற்குள் சென்றார். மிகப் பரந்தகன்ற விசித்திரமான கட்டமைப்பு கொண்டது அது, இளவரசரின் விந்தையான ஆனால் தனித்துவமான சுவையின் உருவாக்கம். ஓங்கியுயர்ந்த உறுதியான சுற்றுச் சுவர் ஒன்று அதை இறுக ஒட்டிச் சூழ்ந்திருந்தது. இந்தச் சுவர் இரும்பினாலான வாயிற்கதவுகள் கொண்டிருந்தது. பரிவாரங்கள் உள் நுழைந்ததும், திண்மையான சுத்தியல்களும் உலையடுப்புகளும் கொண்டு வரப்பட்டு மரையாணிகளை உருக்கி அது முழுவதுமாக அடைக்கப்பட்டது. மனங்கசந்ததினால் எழும் திடீர் உந்துகையினாலோ அல்ல உள்ளுக்குள் எழும் வெறிக் கொந்தளிப்பினாலோ எவரும் உள்நுழைவு வயமோ வெளியேறும் வழியூடாகவோ இங்கிருந்து அகலுவதில்லை என்று தங்களுக்குள் உறுதிமொழி பூண்டனர். அந்த மாளிகை போதுமானளவு அத்தியாவசியப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அரசவையினர் கொள்ளை நோயை எதிர்த்து நிற்கக்கூடும். வெளியுலகு தன்னை தானே பார்த்துக் கொள்ளட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆழச் சிந்திப்பதோ துயரப்படுவதோ மடமை. களியாடுவதற்கான அத்தனைச் சாதனங்களையும் இளவரசர் ஏற்பாடு செய்தளித்திருக்கிறார். அங்கே கோமாளிகள் இருந்தனர், விகடகவிகள் இருந்தனர், பாலே நடன மங்கைகள் இருந்தனர், இசைக் கலைஞர்கள் இருந்தனர், அனைத்திலும் அழகு இருந்தது, திராட்சை மதுரசமும் இருந்தது. இவை எல்லாவற்றினோடும் பாதுகாப்பும் இருந்தது. அங்கு இல்லாதது ‘செந்நிற மரணம்’ மட்டும்தான்.

அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதற்குப் பிறகான ஐந்தாவது அல்லது ஆறாவது மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோதுதான் இளவரசர் ப்ராஸ்பெரோ தன்னுடைய ஆயிரம் நண்பர்களை மகிழ்விக்க முன்னெப்போதும் நிகழ்ந்திரா வண்ணம் ஒரு ஆரவாரமான முகமூடி நடன நிகழ்விற்கு ஏற்பாடு செய்தார். கொள்ளை நோய் வெளியுலகை அச்சமயம் சீற்றங்கொண்டு வீசியெறிந்து கொண்டிருந்தது.

காமதுரக் காட்சியாக இருந்தது அந்த பொய்த்தோற்ற களியாட்டம். ஆனால் முதலில் இது நிகழும் அறைகளைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவை மொத்தம் ஏழு – பேரரசனுக்குரிய அடுக்கு அறைகள். பல அரண்மனைகளில் இத்தகைய அறைகள் இரு புறங்களிலும் நேராக நீண்டு அணிவகுத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது போன்று இருக்கும், மடிப்பு அறைக்கதவுகள் சுவரோடு ஒட்டியபடி அமைந்திருக்கும். இதனால் முழு பரப்பளவும் ஒரு நேர்ப் பார்வையிலேயே பட்டுவிடும். ஆனால் இங்கு எல்லாமே மிகவும் விநோதமாகயிருந்தது, புதுமைகளின் மீதான பிரபுவின் பித்து அறிந்த எவரும் இது எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்றுதான். பகுப்பறைகள் மிகவும் ஒழுங்கற்று வரிசைப்படுத்தப்பட்டிருந்ததால், ஒரு நேரத்தில் ஒரு அறையை மீறி பார்வை அப்பால் உரசிச் செல்லவில்லை. ஒவ்வொரு அறுபது அல்லது தொண்ணூறு அடிக்கும் ஒரு கூர்மையான வளைவு இருந்தது, அவ்வொவ்வொரு திருப்பத்திலும் எதிர்பாரா விநோதமொன்று உருவாக்கப்பட்டிருந்தது. இருபுறங்களிலுமிருக்கும் ஒவ்வொரு சுவற்றின் மத்தியிலும் ஒரு நெடிந்துயர்ந்த குறுகிய கோதிக் பாணியிலான ஜன்னல், தொகுப்பறைகளின் சுற்றுப்பாதைகளான அடைக்கப்பட்ட நடைவழியை நோக்கியிருந்தது. இந்த ஜன்னல்கள் சாயமேற்றப்பட்ட கண்ணாடிகளால் ஆனவை, அதன் வண்ணங்கள் அது உட்திறக்கும் அறையில் வியாபித்திருக்கும் வண்ண அலங்காரங்களுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டிருந்தன. உதாரணமாகக் கிழக்கு மூலையில் இருக்கும் அறையின் வண்ணம் நீலம் – அதன் ஜன்னல்கள் கண்ணைப் பறிக்கும் நீல வண்ணத்திலானவை. இரண்டாவது அறையின் நிறம் ஊதா, அதன் அணிமணிகளும் திரைச்சீலைகளும் சாளரப் பலகமும் கூட ஊதா நிறம். மூன்றாவது முழுதும் பச்சை, அதனால் அதன் சாளரங்களும் அதே வண்ணம். நான்காவது அறையில் அமைந்திருந்த பொருட்களும் நிறைந்திருந்த ஒளியும் செம்மஞ்சள் நிறம் – ஐந்தாவது வெள்ளை – ஆறாவது கருஞ்சிவப்பு. ஏழாவது அறை, உட்கூரையிலிருந்து சுவர்களின் வழியாகக் கீழிறங்கும் கருப்பு மென்பட்டுத் திரைச் சீலைகளால் நெருக்கி மூடப்பட்டிருந்தது, அதே வண்ணத்திலும் வகையிலுமான தரை விரிப்பின் மீது அவை தடித்த மடிப்புகளாக உருண்டு விழுந்திருந்தது. ஆனால் இந்த அறையில் மட்டும்தான் அலங்காரங்களோடு ஒத்துப் போகாமல் இருந்தது சாளரங்களின் வண்ணம். இங்கே பலகங்கள் ஒண்சிவப்பு நிறத்தில் இருந்தது – குருதியின் கடுஞ்சிவப்பு வண்ணம். இந்த ஏழு பகுப்பறைகளில் ஒன்றில் கூட, தரையிலிருந்து கூரைமீதேறி படர்ந்து விரவியிருக்கும் அல்லது கூரையிலிருந்து தரைதழுவித் தாராளமாகப் பரவியிருக்கும் தங்க ஆபரணங்களுக்கு மத்தியில் ஒரு விளக்கோ அல்லது மெழுகுவர்த்தி தொகுப்புகளோ கிடையாது. அவ்வறைகளுக்குள்ளிருந்து விளக்கினாலோ அல்ல மெழுகுவர்த்திகளிலிருந்தோ எந்தவொரு ஒளியும் பெருகி வரவில்லை. ஆனால் அறை தொகுப்புகளை பிந்தொடரும் இடைவழியில், ஒவ்வொரு சாளரத்தின் எதிரிலும் நின்றிருந்த கனமான முக்காலிகள் கனன்றெரியும் தீயைத் தாங்கியிருந்தது. அவை வண்ணக் கண்ணாடிகள் வழியாகக் கதிர்களைப் பாய்ச்சி அறைகளை மிகப் பளபளப்பாக ஒளிர்வித்தது. இதனால் விதவிதமான, கற்பனைக்கும் எட்டாத ஆர்ப்பரிக்கும் தோற்றங்கள் ஏராளமாக உருப்பெற்றன. ஆனால், மேற்குப்புற அறையில் அல்லது கறுப்பு அறையில் இரத்தச் சாயங்கொண்ட சாளரப் பலகங்கள் ஊடே தொங்கிய கருந்திரைச்சீலைகளின் மீது ஓடிய தீயொளியின் தோற்றங்கள் அதீத கோரமாக இருந்தது. மேலும் உள்ளே நுழைபவர்களின் முகத்தோற்றத்தை மிருகத்தனமேறியதாக உருமாற்றிக் காட்சிப்படுத்தியது, இதனால் கூட்டாளிகளில் வெகு சிலரே அதன் எல்லைக்குள் கால் பதிக்கத் தைரியம் கொண்டிருந்தனர்.

இந்தப் பகுப்பறையில்தான் மேற்கு சுவற்றின் எதிரே கருங்காலி மரத்தாலான ஒரு பிரம்மாண்டமான கடிகாரம் நின்றிருந்தது. அந்த மணிப்பொறியின் ஊசலாடி ஒரு மந்தமான, சந்தம் மாறாத கனத்த ஒலியெழுப்பி முன்னும் பின்னும் ஊசலாடியது; ‘நிமிடக் கரம்’ கடிகார முகத்தை ஒரு சுற்று முடித்து ‘மணிநேரத்தை’ சென்றடையும் தறுவாயில், கடிகாரத்தின் உறுதியான நுரையீரலிலிருந்து மேலெழுந்தது ஒரு சத்தம் – அது தெளிவாகவும் உரத்தும் ஆழமாகவும் இன்னிசையென இசைத்தது, ஆனால் விசித்திரமாக ஒற்றிசைக் குறிப்பாகவும் பேரழுத்தம் ஒன்றும் கொடுக்கப்பட்டதுமாக இருந்தது. அதாவது ஒவ்வொரு மணிநேர முடிவிலும் அச்சத்தத்தை உற்றுக் கேட்பதற்காக இசைக் குழுவின் இசைக்கலைஞர்கள் அனைவரும் அவர்கள் இசைப்பதைக் கணநேரம் இடைநிறுத்தும்படி ஆட்படுத்தியது அச்சத்தம்; சுழன்று நடனமாடுபவர்கள் தங்கள் சுருளவிழ்தல்களை நிறுத்தும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அத்தனை கூட்டாளிகளின் மத்தியிலும் குதூகலிப்பு சற்றே குலைந்தது; கடிகாரத்தின் மணியொலி நிற்காமல் மேலும் ஒலித்தபோது தடுமாறும் மனதுடையவர்கள் வெளிர் நிறமாக மாறுவதைக் காணமுடிந்தது, சற்றே வயதேறியவர்கள் மற்றும் அமைதிப் பாங்கானவர்கள் குழப்பத்தில் தன்னிலை மறந்தவர்கள் போலவோ அல்லது தியானத்தில் மூழ்கிவிட்டதைப் போலவோ தங்கள் கைகளால் புருவங்களைத் தடவிக் கொடுத்தனர். ஆனால் எதிரொலிகள் முற்றிலுமாக நின்றுபோனதும் ஒரு மெல்லிய சிரிப்பொலி சபையிடையே ஊடுருவியது; இசைக்கலைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர், அவர்களுடைய பதற்றத்தையும் முட்டாள்தனத்தையும் நோக்கிப் பரிகசிப்பதைப் போல. கடிகாரத்தின் அடுத்த மணியோசை இதைப்போன்றதொரு உணர்வு அவர்களுக்குள் மீண்டும் ஏற்படுத்திவிடக் கூடாதென இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர்; அதன் பின்னர் அறுபது நிமிடங்கள் கடந்ததும், (மூவாயிரத்து அறுநூறு நொடிகளை அரவணைத்துப் பறந்து போய்விடுகிறது அக்காலம்) கடிகாரத்தின் மற்றுமொரு மணியோசை மேலெழுந்ததும் மீண்டும் அங்கே தோன்றியது முன்பிருந்த அதே மனக்குலைவு, நடுக்கம் மற்றும் தியானம்.

ஆனால் இதையெல்லாம் மீறியும் மிகச் சிறப்பான பெரும் கொண்டாட்டமான களிவிழாவாகவே அது இருந்தது. கோமானின் சுவை தனித்துவம் வாய்ந்தது. வண்ணங்களையும் விசேஷத் தோற்றங்களையும் நுட்பமாகத் தேறும் கண் இருந்தது அவருக்கு. வெறும் மரபார்ந்த அலங்காரங்களை அவர் புறந்தள்ளினார். அவருடைய திட்டங்களெல்லாம் தீரமிக்கதாகவும் துடிதுடிப்புடையதாகவும் இருந்தன, அவருடைய எண்ணங்களெல்லாம் ஒரு காட்டாளனின் மிளிர்வுடன் பிரகாசித்தன. அவரை பித்துப் பிடித்தவர் என்று நினைத்தவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர் அப்படி இல்லை என்று அவரை பின்பற்றுபவர்கள் உணர்ந்தனர். அவர் அப்படி இல்லை என்பதை உறுதி செய்ய அவரை நேரில் காண்பதும் கேட்பதும் தொட்டுணர்வதும் அவசியம்.

இந்தப் பெருநிகழ்வின் பொருட்டு ஏழு அறைகளின் அசையும் அலங்காரங்களை அவரே பெருமளவில் இயக்கினார்; அவரது சொந்த சுவைத்திறம்தான் முகமூடி நடனக்காரர்களுக்கான பாத்திரங்களைத் தெரிவு செய்ய வழிகாட்டியது. அவை கோரத்தோற்றம் கொண்டவை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அங்கே கண்ணைப் பறிக்கும் பளபளப்பும் மினுமினுப்பும் சீண்டும் ஆர்வமும் பேயுறுவமும் அதீதமாக இருந்தன – பெரும்பாலும் ‘ஹெர்னானி’[ ஹெர்னானி (Hernani) – ப்ரெஞ்ச் ஆசிரிய விக்டர் ஹியூகோ எழுதிய அரசவைக் காதல் நாடகம். ] நாடகத்தில் காணப்பட்டவையே. பொருத்தமற்ற உறுப்புகளும் இணைப்புகளும் கொண்ட ‘அரேபிஸ்க்’[ அரேபிஸ்க் (Arabesque) – பாலே நடனத்தின் ஒரு அமைவு நிலை. ஒற்றைக் காலால் உடலை நிலை நிறுத்தி மற்றொரு காலை பின்பக்கத்தில் கிடைமட்டமாக உயர்த்தி நிற்கும் நிலை. ] பாலே உருவத்தோற்றங்கள் அங்கே இருந்தன. மனம் பிறழ்ந்தவன் உவக்கும் பாணியிலான மயக்க வெறி கொள்ளும் கற்பனைகள் அங்கே நிறைந்திருந்தன. அங்கே அதீத அழகு இருந்தது, வரம்பற்ற ஒழுக்க மீறல்கள், மிகையான விநோதங்கள். அச்சமுண்டாக்குபவைகள் சில, ஆனால் சிறிதளவும் வெறுப்பைத் தூண்டக்கூடிய ஒன்றுகூட அங்கில்லை. உண்மையில், அவ்வேழு அறைகளிலும் முன்னும் பின்னும் கனவுத்திரள் ஒன்று அமைதியாகச் சஞ்சரித்தது. மேலும், இவை – இந்தக் கனவுகள் – அறையின் சாயங்களை ஏற்றுக்கொண்டு கூட்டத்தினுள்ளே வளைந்து நெளிந்தசைந்தபடியிருந்தது. இசைக் குழுவினரின் கட்டிலடங்காத இசையே அவற்றின் காலடிச் சத்தத்தின் எதிரொலியெனத் தோன்றியது. அப்பொழுதுதான் வெண்பட்டு கூடத்தில் நின்றிருந்த கருங்காலி கடிகாரம் மணியடித்தது. அதன் பிறகு, ஒரு கணம், அனைத்தும் அசைவற்று நின்றது, அனைத்தும் அமைதியாகிப் போனது அக்கடிகாரத்தின் குரலைத் தவிர. அக்கனவுகளும் நின்றபடி விறைப்பாய் உறைந்து போனது. ஆனால் மணியோசையின் எதிரொலிகள் மறைந்து போனதும் – கணநேரம் மட்டுமே அவை நீடித்தது – அவை நகர்ந்து செல்கையில் ஒரு மெல்லிய, அடங்கிய சிரிப்பொலி அவற்றின் பின்னால் காற்றில் அலைந்தது. இப்போது மீண்டும் இசை பெருகத் தொடங்கியது, கனவுகளும் உயிர்கொண்டது. முக்காலிகளிலிருந்து வரும் கதிரொளிகளை தன்னூடே பாய்ச்சும் சாயமேற்றப்பட்ட பல சாளரங்களிலிருந்து தன் வண்ணத்தை அவை ஏற்றுக் கொண்டு முன்னெப்பொழுதையும்விட அதிக களிப்புடன் முன்னும் பின்னும் நெளிந்தாடின. ஆனால் ஏழு அறைகளில் மேற்குப்புறத்தில் அமைந்திருந்த ஒன்றில் மட்டும் முகமூடியர்களில் ஒருவரும் நுழையத் துணியவில்லை; இரவு விலகிச் சென்றுக்கொண்டிருந்தது; இரத்த நிறங்கொண்ட பலகங்களின் ஊடாக குருதியொளி பாய்ந்து கொண்டிருந்தது; மென்மயிர் தூரிகை மடிப்புகளின் கருமை திகைப்பூட்டியது; துயருறுக்கும் அக்கருமையான தரைவிரிப்பின் மீது கால் பதிக்கும் ஒருவனுக்கு, கருங்காலிக் கடிகாரத்தின் அருகிலிருந்து எழும் உள்ளடங்கிய ஒலியலை மற்ற அறைகளில் விதவிதமான வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் செவிகளை அடைவதைவிடவும் அச்சமூட்டும் அழுத்தத்துடன் வந்து சேரும்.

ஆனால் மற்ற இந்த அறைகளிலெல்லாம் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது, அவர்களுள் வாழ்வின் இதயத்துடிப்பு கொந்தளிப்புடன் தாளமிட்டுக் கொண்டிருந்தது. களியாட்டம் மேலும் மேலுமென சுழன்றேறிக் கொண்டிருந்தது, நீண்ட நேரம் கழித்து கடிகாரத்தின் நள்ளிரவு மணி மீண்டும் அடிக்கத் தொடங்கியது வரை. நான் சொன்னது போலவே இசை நிறுத்தப்பட்டது; சுழல் நடன மலர்தல்கள் நின்று அரவமடங்கியது; முன்பு போலவே அத்தனையும் சங்கடமான அமைதிக்குள் தள்ளப்பட்டு நின்றுபோனது. ஆனால் தற்போது கடிகார மணி பன்னிரண்டு தாக்கொலிகளை முழங்க இருந்தது; அது நீண்ட நேரம் என்பதால், சிந்தனைகள் ஒருவருள் அதிகம் ஊடுருவியதாலோ என்னவோ, களியாடியவர்களில் சிந்தனையார்ந்தவர்கள் நீண்ட தியானத்திற்குள் மூழ்கினர். இதனால் இன்னொன்றும் நிகழ்ந்தது, கடைசி மணியொலியின் கடைசி எதிரொலிகள் முற்றிலுமாக மூழ்கி அமைதியடைவதற்கு முன்னால், அக்கூட்டத்தில் சற்று நிதானமடைந்திருந்த பலர் இதற்குமுன் ஒருவரின் கவனத்தையும் தொடாத முகமூடி அணிந்த ஒரு உருவத்தின் இருப்பை அறிந்து கொண்டனர். இந்த புதியவொன்றின் இருப்பை பற்றிய வதந்திகள் காதோடு காதாக அதைச் சுற்றியே பரவத் தொடங்கியது, மொத்த குழுவிடமிருந்தும் ஒரு நீண்ட சலசலப்பு அங்கே எழுந்தது, அல்லது ஒரு முணுமுணுப்பு, ஆச்சரியத்திற்கும் மறுதலிப்பிற்குமான ஒரு வெளிப்பாடு – பின்பு, கடைசியாக பேரச்சமும் நடுக்கமும் அருவருப்பும்.

நான் தீட்டிக் காட்டியதைப் போன்ற புனைவுத்தோற்றங்களின் சங்கமத்தில் எந்தவொரு சாதாரண உருவமும் அத்தகைய உணர்வைக் கிளர்த்தியிருக்காது என்று கருதக்கூடும். உண்மையில் இந்த இரவின் களியாட்டத்திற்கான சலுகைகள் வரம்புகளற்றது; ஆனால் சந்தேகத்திற்குரிய அவ்வுருவம் ‘ஹெராடு’[ ஹெராடு அரசன் (Herod the Great) – கி.மு. 72லிருந்து கி.மு. 1 வரை வாழ்ந்ததாக அறியப்படும் ரோமானிய அரசன். வரலாற்றிலும் இலக்கியங்களிலும் அப்பாவிகளை கொன்று குவித்த கொடூரனாக குறிப்பிடப்படுபவன். ] அரசனை விடவும் இரக்கமற்ற தோற்றம் கொண்டிருந்தது. மேலும், இளவரசரின் வரையறையற்ற தகுதிகளையும் கூட மிஞ்சி எல்லை கடந்து விட்டிருந்தது. மிகவும் அசட்டையானவர்களின் இதயங்களை மிகச் சரியான உணர்வுகளின்றி தொட்டுவிடமுடியாது. வாழ்வும் மரணமும் வெறும் விளையாட்டே என்று எண்ணும் மதியிழந்தவர்களால் கூட புறந்தள்ளிவிட முடியாத சில விஷயங்கள் உண்டு. மொத்த குழாமும் தற்போது அந்நியனைப் போன்ற ஆடையிலும் தோற்றத்திலும் இருக்கும் அது, ஒரு விளையாட்டுச் செயலோ அல்ல இவ்விடத்திற்குப் பொருத்தமான ஒன்றோ இல்லை என்று ஆழமாக உணரத்தொடங்கினர். இந்த உருவம் நெடிந்தும் மெலிந்தும், தலை முதல் கால் வரை பிணமுக்காடிட்டு கல்லறைக்கான உடையணிந்து இருந்தது. முகத்தை முற்றிலுமாக மறைத்திருந்த முகமூடி, விறைத்துப்போன சடலத்தின் முகபாவத்தை ஒத்து இருந்தது. நுணுகி ஆராய்ந்திருந்தாலும் இவ்வஞ்சகச் செயலை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்திருக்கக் கூடும். இருப்பினும், பித்தேறிய இக்களியாட்டகாரர்களால் இவையனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பொறுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஊமை நாடகமாடி செந்நிற மரணத்தின் வகையைச் சார்ந்தவனோ என்று ஊகம் கொள்ளுவதற்கு இடம் கொடுத்து விட்டான். அவனது அணியாடை குருதி படர்ந்து ஈரமாகயிருந்தது – மேலும் அவன் முகம் முழுதும், அவனின் அடர்ந்த புருவங்களிலும் கூட திகிலூட்டும் கருஞ்சிவப்பு தெறித்திருந்தது.

இளவரசர் ப்ராஸ்பெரோவின் கண்கள் இந்தப் பேயுருவத்தின் மீது விழுந்தபோது (அப்போது அவ்வுருவம் மெதுவாக ஆனால் கம்பீரமாக, தன்னுடைய பாத்திரத்தை முழுமையாக நிறுவி விட்டதைப் போலச் சுழல் நடனக்காரர்களை நோட்டமிட்டபடியே முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது). அவர் அதைப் பார்த்ததுமே, முதல் நொடியில் பயத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ ஒரு பலமான உதறல்கொண்டு அதிர்ந்துபோனதைப் போலத் தோன்றியது; ஆனால், அடுத்த நொடி, அவருடைய புருவம் ஆத்திரத்தில் சிவந்தது.

“யாருக்கு வந்தது இந்த தைரியம்,” – அவர் அருகில் நின்றிருந்த பரிவாரத்திடம் கரகரத்த குரலில் அதட்டலாகக் கேட்டார் – “இந்த இழிவான போலி வேஷம் பூண்டு எங்களை நிந்தனை செய்யும் தைரியம் உள்ளவன் யாரவன்? அவனைப் பிடித்து அவன் முகத்திரையைக் கிழியுங்கள் – கொத்தளத்தில் நாளை சூரியோதயத்தில் நாம் தூக்கிலிடப்போவது யார் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.”

இளவரசர் ப்ராஸ்பெரோ இவ்வார்த்தைகளை உச்சரித்தபோது கிழக்கு அறையிலோ அல்லது நீல அறையிலோ அவர் நின்று கொண்டிருந்தார். இளவரசர் தீரமும் கட்டுரமும் மிக்கவர் என்பதால் அக்குரல் ஏழு அறைகள் முழுவதும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டது, அவரின் கையசைவில் இசையும் சப்தமடங்கிப் போனது.

நீல நிற அறையில் நின்றிருந்தார் இளவரசர் ப்ராஸ்பெரோ, வெளிறிய படைக்குழு அவரருகே சூழ்ந்திருந்தன. முதலில், அவர் பேசியபோது, ஊடுருவியனின் திசையை நோக்கி அக்குழுவினரிடமிருந்து ஒரு பரபரப்பான வேகத்துடன் அசைவுகள் எழும்பியது, அவனும் அந்நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தான். ஆனால் இப்போது, வேண்டுமென்றே வீறார்ந்த நடை போட்டுப் பேசியவரின் அருகாமையை நோக்கி நகர்ந்தான். அந்த ஊமை நாடகமாடியைப் பற்றிய மடத்தனமான அனுமானங்களால் தூண்டப்பெற்று வர்ணிக்கமுடியாத பிரம்மிப்பில் இருந்த மொத்த கூட்டத்திலிருந்தும் அவனைக் கைப்பற்ற ஒருவர் கூட முன்வரவில்லை; இதனால் இளவரசனின் ஆட்களிடமிருந்து சில அடி தூரத்திலேயே அவ்வுருவக்காரன் எத்தடையுமின்றி கடந்து செல்ல முடிந்தது; மேலும், ஒட்டுமொத்த குழாமும் ஒற்றை விசையில் அறைகளின் மையங்களிலிருந்து விலகி சுவர்களோரம் சுருங்கிக் கொள்ள, அவன் எந்த இடையூறுமின்றி அவனை முதலில் தனித்துக் காட்டிய அதே ஸ்திரமான அளவெடுத்த அடிகளால் தனது வழியில் நகரத் தொடங்கினான் – ஊதாவின் வழியாகப் பச்சைக்கும் – பச்சையினூடாக செம்மஞ்சளுக்கும் – அதிலிருந்து மீண்டும் வெள்ளைக்கும் – அங்கிருந்து கருநீலத்திற்கும். அவனைக் கைது செய்வதற்குத் தீர்மானமான ஒரு செயல்பாடு அப்போது தொடங்கியிருக்கக்கூட இல்லை. எனினும் இதற்கு பிறகுதான் இளவரசர் ப்ராஸ்பெரோ தன் கணநேர கோழைத்தனத்தால் வெட்கமுற்றுச் சினங்கொண்ட வெறியுடன் ஆறு அறைகளைக் கடந்து அவசரமாக விரைந்தார். தங்களைப் பீடித்திருந்த பயங்கரமான அச்சத்தின் காரணமாக ஒருவரும் அவரை பின்தொடரவில்லை. உருவிய தன் உடைவாளை அவர் தலைக்கு மேலே உயரப் பிடித்திருந்தார். விலகிச் சென்று கொண்டிருக்கும் அவ்வுருவத்தின் அருகில் கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றதும், கருநீல அறையின் எல்லையை அப்போது எட்டிவிட்டிருந்த அவ்வுருவம் சடாரென திரும்பி தன்னை பிந்தொடரும் அவரை எதிர்கொண்டது. செவியைத் துளைக்கும் கூர்மையான கதறல் ஒலி அங்கு எழுந்தது – உடைவாள், பஞ்சுத் தரை விரிப்பின் மீது மின்னி விழுந்தது. அதன் மேல், அடுத்த கணமே, மரணித்து நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார் இளவரசர் ப்ராஸ்பெரோ. பிறகு, நம்பிக்கை அத்தனையையும் இழந்ததின் விளைவாகப் பிறந்த துணிவை ஒன்றாகத் திரட்டி, களியாட்டக்காரர்களின் ஒரு திரல் கருப்பு அறைக்குள் மொத்தமாகப் பாய்ந்தது. கருங்காலி கடிகாரத்தின் நிழலில் அசைவற்று நிமிர்ந்து உயரமாக நின்ற, எவ்வுருவிலும் காணச் சகியாத அந்த ஊமை நாடகமாடியை வன்மையுடன் முரட்டுத்தனமாகக் கைப்பற்றியதும், அவனின் பிணமொத்த முகமூடியையும் போர்த்தியிருக்கும் கல்லறை ஆடையையும் கண்டு விவரிக்க முடியாத அச்சத்தினால் மலைத்து மூர்ச்சையாகினர்.

செந்நிற மரணத்தின் இருப்பு இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒரு கள்ளனைப் போல இரவில் வந்திருந்தான். களி கூத்தாடியவர்களை ஒருவர் பின் ஒருவராக இரத்தம் சிதறித் தோய்ந்திருந்த கூடத்தில் வீழ்த்தினான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தோல்வியை விரக்தியுடன் ஏற்றுக்கொள்ளும் தோரணையில் இறந்து கிடந்தனர். அந்தக் கடைசி களியாட்டத்தோடு கருங்காலி கடிகாரத்தின் வாழ்வும் முடிவிற்கு வந்தது. முக்காலிகளில் ஒளிர்ந்த தீப்பிழம்புகளும் அணைந்து போயின. இருண்மையும் சிதைவும், அச்செந்நிற மரணமும் அத்தனையின் மீதும் வரம்பற்ற ஒட்டுமொத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

RELATED ARTICLES

1 COMMENT

  1. கோரமும் , திகிலும் , விதிர்ப்பும், சிலிர்ப்பும் குறையாத போ வின் நடையை அசலாகப் பெயர்த்த மொழிபெயர்ப்பு.வாழ்த்துகள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க மேட்டிமை சமூகத்தினரின் உளப்பாங்கை எதிர்நிலையிலிருந்து எள்ளலோடு வெளிப்படுத்துவது போ வின் நோக்கம்.தற்போதைய கொரோனா தீநுண் கிருமியின் பின்னணியில் இக்கதையை வாசிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நினைவுக்கு வருகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular