ஜீவ கரிகாலன்
கேள்வி என்னவோ சமகாலக்கலையைக் குறித்து தான், ஆனால் யாளிக்கு பைபலோபர் டிஸ்ஸார்டர் வந்துவிட்டதாக, பக்கத்து தூணில் நைட்டி அணிந்த ரதி சிற்பம் உயிர்பெற்றதும் யாளியை கேலி பேசியதில் இருந்து, அதை உண்மையென நம்பி, இப்படித்தான் – தான் பேசவந்ததை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது யாளி. அதுசரி, திடீரென்று சாதிக்காரர்ரகள், தேசியவாதிகள், நாத்திகர்கள் கூட தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பக்தர்கள் மட்டும் கம்பிகளுக்குள் வரிசைவரிசையாக வளைந்து நெளிந்து மூச்சு வாங்க மூலவரைப் பார்த்து, மீதமிருக்கும் பிரசாதத்தை தன் வாயில் கட்டப்பட்டிருக்கும் திருநீற்றுக் கிண்ணத்தில் கொட்டிச் சென்று கொண்டிருக்கும் மக்கட்கூட்டத்தைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்.
“சமகாலக் கலையை பற்றி உபதேசித்த உன் ஆசான்களின் வார்த்தைகளை இன்னும் நினைத்துக் கொண்டிருக்காதே, ஏனென்றால் சமகாலத்தில் அவருடன் அவர் வார்த்தைகளும் காலாவதி ஆகியிருக்கும்” என்கிற தத்துவத்தை கலையுலகில் ஒரு சகபயணியோடு உரையாடும்போது முதன்முறை கேட்டேன். அதன் உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடுமையானது தான். ஆனால் ரசனையின் வளர்ச்சிக்கு அது எத்தனை அவசியமாகிறது? உண்மையில் கோட்பாடுகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ஏதோ ஒரு கோட்பாட்டில் தங்கிவிடுவது அல்லது தனக்கென ஒன்றினைச் சுவீகரித்துக் கொள்வது வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
நேற்றைக்கு வரை ஒரு நண்பரோடு வந்த பயணத்தில் கலை கலைக்கானது என்று நம்பியவன், அதற்கு முன்னர் கலை மக்களுக்கானது என்று நம்பியிருந்தேன். மனம் நெகிழ்வாக இருப்பதால் எல்லாக் கோட்பாடுகளையும் உள்ளே அனுமதித்துப் பயணிக்க முடிகிறது. பயணிக்காமல் வெற்றுக் கூப்பாடு போடுவதால் பிழைப்பு நடக்கலாம். பிழைப்புவாதத்திற்காக கலைகளை அணுகுபவர்களுக்கு அத்துடன் முடித்துக்கொள்ளலாம் பாதகமுமில்லை. சூப்பர் ஈகோ என்று சொல்லப்படும் உணர்வுகளோ அல்லது நித்தியத்தை தேடி அலையும் மனமோ பயணிக்காது ஒன்றையும் கண்டடையமுடியாது.
இப்போது எந்த மனநிலையில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால், மேற்சொன்ன அவ்விரு வாக்கியங்களையும் மறு ஆய்வு செய்ய விரும்பும் நிலையில் இருப்பதாக உணர்கிறேன், கலை – கலைக்கானது, மக்களுக்கானது என்கிற இரண்டு விவாதங்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகத் தான் பார்க்க முடிகிறது. ஆனால் கலைஞன் யாருக்கானவன் – கலைஞன் மக்களுக்கானவனா அல்லது கலைக்கானவனா?
கலைஞன் தன் இருப்பு மீது எழும் கேள்விகளுக்காகத் தான் அந்த விவாதத்தை உருவாக்கினானா? அல்லது கோட்பாட்டாளன் கலைஞனை தன் வசத்தில் வைத்திருக்க உருவாக்கினானா? மேற்சொன்ன கோட்பாட்டாளன் என்பது அரசாங்கமாகவும் இருக்கக்கூடும்.
தாந்தேயைப் போன்று மற்றொரு மறுமலர்ச்சி கால ஓவியரான சேண்ட்ரோ போட்டிட்ஸெல்லி (SANDRO BOTTITSELLI) வரைந்திருக்கும் நரகத்தின் வரைபடத்திலிருந்து கிடைக்கும் துப்புகளைக் கொண்டு தாந்தேயின் படைப்புகளை பின்தொடர்ந்து செல்வதால், உலகின் 90 சதவீத மக்களை அழிக்குமளவுக்கு ஜோப்ரிஸ்ட் பதுக்கிவைத்திருக்கும் வெடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் மோசமான (ப்ளேக் நோய் போன்ற தொற்று நோய்) வைரஸினை செயலிழக்க வைக்கிறார் ராபர்ட் லேங்டன். இத்தகைய கொடூரமான அழிவை முற்படுத்த விரும்பும் பெர்ட்னார்ட் ஜோப்ரிஸ்ட் உலகப் பணக்காரர்களில் ஒருவன், மதப்பிரச்சாரகன் போல் உலகமெங்கும் பக்தர்களைப் பெற்றிருப்பவன்.
“உலகத்தின் மக்கட்தொகை வருங்காலத்தின் உலகநன்மைக்கு எதிராக இருக்கிறது” என்று பிரச்சாரம் செய்பவன்.
“கலைஞன் யாருக்கானவன்?” என்று அந்த படம் என்னைப் பிரித்துப் பார்க்க உதவியது.
சென்ற வருடம் மும்பை சென்று வந்த நினைவுகளில், கலையை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று நம்பியவனாகத் தான் இருந்தேன். எல்லா வகைகளிலும் கலைப்படைப்புகளை, கலைஞர்களை போஷிக்கத் தெரியாத நம் ஊர் மக்கள் எங்கே, எங்கே தம் பிள்ளைகள், பேரன்களென குடும்பத்துடன நவீன கலைக்கூடங்களுக்குக் கூட்டிச் சென்று காண்பிக்கும் மக்கள் எங்கே என்று நினைத்துக் கொண்டு தான் அம்முவுடன் பேசிக்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் தமிழகம் பின் தங்கியிருக்கிறதே என்று நொந்து கொண்டிருக்கையில் தான், அவள் எனது மும்பை பயணம் பற்றி விசாரித்தாள்.
அது தான் என் நம்பிக்கைகளை மீண்டும் சிதைத்துப் போட்டது.
அம்மு சிதம்பரத்தைச் சேர்ந்தவள், நடனம், இசை, ஓவியம், கவிதைகள் என பல்வேறு பரிச்சயமும் உண்டு எல்லாவற்றையும் விட அவள் ஒரு சிறந்த பயணி. பலமுறை அவளை அழைக்கும் பொழுதும், அவள் கைப்பேசியை எடுக்கவில்லை என்பதை இதுவரைக்கும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தெரிந்து கொண்டிருக்கிறேன். மும்பையில், ’இந்தியாவின் நுழைவாயில்’ என்று சொல்லப்படும், பார்ஸி இனத்தவர்கள் அதிகமாக வாழும் செல்வச்செழிப்பு மிக்க நகரத்தின் ஒரு மூலையை மட்டும் மும்பை என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை எண்ணிச் சிரித்தாள்.
“மும்பையைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் சுகெத் மேஹ்தாவின் MAXIMUM CITY எனும் நூலினைப் படி, இல்லாவிட்டால் ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களைப் பார்” என்றாள்.
ஆனந்த பட்டவர்தனின் ஆவணப்படங்கள் யூட்யூபில் கிடைக்கிறது, அதிலிருந்து அப்படியே பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றிய ஆவணப்படங்களும் பார்த்தேன். ஹுசைன் சைதி எழுதிய மும்பை டூ டோங்கிரி எனும் மற்றொரு புத்தகம், மும்பை நகரத்தின் கறுப்புப் பக்கங்களைக் காட்டுகிறது. இவற்றோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழகம் ஒரு WELFARE STATEதான் என்று அவள் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.
கலைகளை போஷிக்கும் அரசாங்கம் இருந்தும், கலாச்சாரங்களைப் புராணங்களைத் தொழும் மக்கட் கூட்டம் இருந்தும் வடயிந்தியா மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்றாள். பல கிராமங்கள் தேசத்துடன், அரசாங்கத்துடன் துண்டிக்கப்பட்டு இருப்பதை, அவளுக்கு அஞ்சலிலோ அல்லது கூரியரிலோ ஒரு புத்தகம் அனுப்ப இயலாத அளவுக்கு சிரமப்பட்டபோது தான், இப்படியான கிராமங்கள் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவள் இருப்பது அரியானா மாநிலத்தில்.
செல்வந்தர்களின் வாழ்வியல் முறையை மட்டும் வைத்துக் கொண்டு வடக்கினைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களை சுட்டிக்காட்டினாள். தமிழகத்தில் உருவாகியிருக்கும் ஒரு மத்தியத்தரவர்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பெரியது என்றாள்.
அரசியல்வாதிகளாலும், மத்தியிலிருக்கும் காழ்ப்புணர்வுகளாலும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் வாழ்வியல் முறை பிரதமரை உருவாக்கியிருக்கும் குஜராத்தைக் காட்டிலும் சிறப்பாகத் தான் இருக்கிறது.
***
கலாச்சாரங்கள், தொன்மங்கள், கலைகள் ஆகியவற்றில் பின் தங்கியிருந்தாலும் பெரியதொரு மதக்கலவரம் இங்கே வரவே இல்லை. வடக்கிற்கு இணையான சாதிக்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை, அப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்கெதிரான குரல்கள் சத்தமாகவே ஒலிக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேசிய நீரோடையில் நாம் சற்று ஓரமாக ஓடிக்கொண்டிருப்பதாலும் எனலாம். ஆனால் இதையெல்லாம் தடுக்கும் குரலாகத்தான் தேசியக்கட்சிகள் தமிழகத்தைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன, அவர்கள் சாதிய மோதல்களையும், மதத்துவேஷங்களையும் பெருக்கினால் மட்டுமே தமிழகத்தைத் தேசிய நீரோடையில் இணைப்பார்கள். அவர்களுக்கு மற்றொமொரு காரணமாக அமைவது தான் கலைத்தன்மை. கலைகளை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று ஆழ்மனதில் கொண்டு சேர்ப்பதும் ஒரு கலையாகத் தான் கற்பிக்கப்படுகிறது அது அவநம்பிக்கைகளை உருவாக்கும் கலை.
அதிகாரத்தின் கீழ்படிதலால் உருவான கலை அவநம்பிக்கை எழுப்பவே முயற்சி செய்யும், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் விமானநிலையத்தின் ஓவியங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். கலைகளைக் கொண்டாடும் LAND OF OPPORTUNITIES என்று சொல்லப்படும் அமெரிக்காவில் தான் இப்படியான ஒரு ஓவியம் இருக்கிறது, நரகத்தைக் காட்டி பயமுறுத்தும் மத அமைப்புகளை விட பயங்கரமானதாக புது உலக ஏற்பாடு (NEW WORLD ORDER) என்றும் புதிய நாஜிக்களின் உலகம்(NEO NAZI) என்று சொல்லப்படுகிறது டென்வர் விமானதளம் அமைந்திருக்கும் பகுதி. அந்த விமானநிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள் பொதுமக்களை அச்சுருத்துபவை, திகிலடையச் செய்பவை.
பன்னாட்டு விமான நிலையத்தின் சுவரோவியங்களில் மாண்டு போன சிறுவர்கள், நோய்வாய்ப்பட்ட, பிச்சையெடுக்கும் மனிதர்கள், கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், உயிர் பிழைக்கும் அச்சத்தில் எங்கிருந்தோ எங்கோ செல்பவர்கள், அவர்களைக் காப்பாற்றும் ராட்சஷத போர்வீரர்கள், கொள்ளை நோய்கள், தொற்று நோய்கள் என்று வாதையும், வலியுமான ஓவியங்கள் எதற்காக வரையப்பட்டிருக்கின்றன.
இது யாருக்கான கலை?
இந்தியாவில் கூட எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் இந்திராகாந்தியின் காலக்கட்டத்தில் எம்.எஃப்.ஹுசைனும், ஜே.ஸ்வாமிநாதனும் நம் ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதே சமயம் இந்த அதிகாரத்தை எதிர்த்து முற்போக்கு கலை அமைப்புகளும் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. குஜராத் கலவரத்திலிருந்து இன்று வரை மோடி அரசை விமர்சிப்பதில் எந்த ஒரு தயவும் காட்டாதவராக இருக்கும் விவான் சுந்தரம் போன்ற ஓவியர்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சொந்த மண்ணை விட்டு அண்டை மாநிலங்களைச் சிறப்பாக இருக்கிறது என்றும், அண்டை மாநிலங்களை விட மேலை நாடுகள் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நம்பிக்கைகளை உருவாக்கும் கலைகள் தான் இங்கே அவசியம் அது தான் சமகாலக் கலையாக இருக்கும் என்று உணரமுடிகிறது.
உலகில் மிக அதிகமாக நகரமயமாதலாகும் நகரம் சென்னை தான், சென்னையோ, தமிழகமோ எத்தனையோ பேருக்கு இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தபடி தான் இருந்து வருகிறது. இங்கிருக்கும் கலைகளில் மட்டும் அது இல்லாமலா போய்விடும்?
சமகாலத்தின் தேவைகளை உணராதப் படைப்புகள் எத்தனை உச்சமான செயல்திறன்களால் உருவாக்கப்பட்டாலும் அது சமகாலக்கலையாகப் பார்க்கப்படாது.
***
அண்மையில் நான் சென்று வந்த ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியரைச் சந்தித்தேன் பெயர் விஜய் பிச்சுமணி (வயது 29), ஒரு பதிப்போவியராக இயங்கும் அவர் பதிப்போவியத்தில் 56ஆவது ஆண்டு தேசிய விருது பெற்றவர். இவரது படைப்புகள் ART HOUZ கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது (அக்டோபர் 30ம் தியதி வரை)
DOT என்னும் தலைப்பில் நடைபெற்ற அவரது கண்காட்சியில் பதிப்போவியங்கள் அனைத்தும் WOODCUT முறையில் உருவாக்கப்பட்டிருந்தன.
அவரது படைப்புகள் அறுபட்ட மரங்கள், இலைகள், வேர்களின் சப்தங்களை பொதிந்து வைத்திருந்தன. அழிந்து கொண்டிருக்கும் வனத்தின் ஓசையைப் பதிவு செய்வதற்கு அவர் பிரதான ஊடகமாக WOODCUT பயன்படுத்தப்பட்டது சிறப்பானது. நம் வனம் அழிய அதைவிட வேகமாக அழிந்துக் கொண்டிருக்கும் பல்வேறு உயிரினங்களில் பிரதானமான யானைன் WOODCUT பதிப்பு யானையின் அளவிற்கே உருவாக்கியிருந்த விதம் சிறப்பானது. அவர் செயல் திறன், துல்லியத்தன்மையுடன் சமகாலத்தின் உணர்வுகளோடு படைப்புகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியது.
மேலும் ஒரு படைப்பு – YOU & ME என்கிற ஓவியம் பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் அது சமகாலத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அது உலகமயமாக்களுக்குப் பின்பான DEFORESTATIONஐயும், அதைப் பொறுக்க இயலாத ஒரு தனிமனிதன் பதிவு செய்யும் வனத்தின் ரணங்களின் ஓசையாக இருக்கிறது. உச்சம். அவருக்கு வாழ்த்துகள்.
ஏ.பாலசுப்ரமணியம் பற்றித் தெரிந்து கொண்ட போதும், மும்பையில் எல்.முனுசாமியின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அவரது MONOGRAMஐத் தேடித்தேடி மும்பையில் வாங்கியபோதும் ஏற்பட்ட மனநிலையில் தான் இப்போது விஜய் பிச்சுமணியையும் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கிறது! சமகாலத்தில் எல்லோருக்குமே வாய்ப்பு இருக்கிறது.
சமகாலத்தை அறிந்து கொண்ட ஒரு கலைஞன், நம்பிக்கையை உருவாக்கும் கலைஞனாகத் தான் இருப்பார். அந்த வகையில் விஜய் பிச்சுமணியைக் கண்ட திருப்தியோடு யாளியை அனுப்பி வைத்தேன்.
–
ஜீவ கரிகாலன்