-ரூபன் சிவராஜா
உண்மையான புறக்கணிப்பென்பது மனித உரிமையின் பொருட்டா? ஜனநாயகத்தின் பொருட்டா? அல்லது அப்பட்டமான அதிகார அரசியல், பொருளாதார நலன்களின் பொருட்டா என்றால் அதற்கான விடை மிக இலகுவானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் புறக்கணிப்பு என்பது அதிகார மற்றும் பொருளாதார அரசியலின் பாலானது. ஆனால் இம்முறை ரஸ்யா மீதான புறக்கணிப்புகளின் விளைவுகள் ஐரோப்பிய நாடுகளில் பல தளங்களில் விளைவுகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளன. எறிந்த பந்து சுவரிற்பட்டு எறிந்தவரின் முகத்திலேயே பட்டமை போன்றது ஐரோப்பா எறிந்த ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக்கணைகளின் விளைவு.
பலம்மிக்க அரசுகளின் பொருளாதாரப் புறக்கணிப்பு மற்றும் வணிக, ஏற்றுமதி, இறக்குமதி தடைகள் ஒரு நாட்டின் சர்வாதிகாரப் போக்கினையோ, அரசியலையோ, போர் முனைப்புகளையோ மாற்றியதான நிகழ்வுகளை வரலாற்றிற் காண்பது அரிது. பொருளாதார தடைகள் உகந்த விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அதாவது தடைவிதிப்போர் முன்வைக்கும் காரணங்களின் அடிப்படையில், தடைவிதிக்கப்படுவோர் மீது அவை தாக்கங்களை ஏற்படுத்துகின்றனவா என்றால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். அதுதவிர தடை கொண்டுவருவோர் முன்வைக்கும் காரணங்களின் அடிப்படைகளும் கேள்விக்குரியவை. குறிப்பிட்ட ஒரு நாடு மீதான பொருளாதாரப் புறக்கணிப்புகள், அந்நாட்டின் ஆட்சியாளர்களைவிட மக்களின் வாழ்வாதாரத்தையே அதிகமதிகம் சிதைக்கின்றன.
தலைகீழ் விளைவுகள்
பொருளாதாரப் புறக்கணிப்புகளுக்காகச் சொல்லப்படும் ‘அசலான’ நோக்கங்களுக்கு எதிரான விளைவுகளையே அவை ஏற்படுத்துகின்றன என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ரஸ்யா மீதான புறக்கணிப்புகள் அதற்கான சமகால எடுத்துக்காட்டு. ரஸ்யா மீதான அமெரிக்க – ஐரோப்பியக் கூட்டினது பொருளாதாரத் தடைகள் புதியவை அல்ல. அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. அதிலும் 2014இல் உக்ரைனின் ஆள்புலத்திற்கு உரித்துடையதாகவிருந்த கிரிமியா குடாவினைப் பலவந்தமாக ரஸ்யா தன்னுடன் இணைத்ததை (Annexation) அடுத்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஸ்யா மீது பல தடைகளைக் கொண்டு வந்தன. தடைகள் அவற்றின் நோக்கத்திற்கான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பின் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்காது.
2014இல் கொண்டுவரப்பட்ட தடைகள் உக்ரைன் தொடர்பான ரஸ்ய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக தீவிரப்படுத்தியுள்ளன. தற்போதைய தடைகள் ரஸ்யாவின் போர் முனைப்பினைத் தணிக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம். தடைகள் விளாதிமீர் பூதினைப் பலப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பூதினுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளன. தற்போதைய தடைகள், ஐரோப்பிய நாடுகளைப் பெரும் எண்ணெய், எரிசக்தி தட்டுப்பாட்டுக்குள்ளும், மின்சார விலையேற்றத்திற்குள்ளும் தள்ளியுள்ளன.
எதிர்ப்பு அரசியல்
புறக்கணிப்பு என்பது அடிப்படையில் ஒரு வகையான எதிர்ப்பு அரசியல் நடவடிக்கை. அது தார்மீக ரீதியில் சிக்கலானவற்றோடு உடன்பாடின்மையை வெளிப்படுத்துகின்றது. புறக்கணிப்பு என்பது ஒரு நிறுவனத்தின், ஒரு நாட்டின், ஒரு நிகழ்வின், அல்லது ஒரு உற்பத்திப் பொருள் மீதான எனப் பல்வகையினது. அதன் நோக்கம் தார்மீக ரீதியில் எதிர்ப்பவற்றின் மீது மாற்றத்திற்கான அழுத்தத்தினைப் பிரயோகித்தல், கோரிக்கையை முன்வைத்தல், பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல் மற்றும் உடன்பாடின்மை தொடர்பான தார்மீக இடைவெளியை அடையாளப்படுத்துதல் என்பதாகவும் அமைகின்றது. தார்மீகச் சீற்றத்தினை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவும் புறக்கணிப்பினைக் கொள்ளலாம். ஆகவே ஒரு எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக புறக்கணிப்பின் விளைவுகளுக்கு அப்பால், அதற்கு ஒரு பெறுமானம் உள்ளது. அதன் உள்ளார்ந்த அர்த்தம், இன்னொருவருக்கு அநீதியிழைப்பதன் மூலம் நன்மையடைவது தவறென்பதை உணர்த்துவது. இதுவே புறக்கணிப்பின் பின்னாலுள்ள நியாயப்பாடாகும்.
ஆனால் நவீன உலகின் பலமிக்க அரசு சார் தரப்புகளின் புறக்கணிப்புகள் அவற்றின் அரசியல்-பொருளாதார நலன்களின் பாற்பட்டவை. தார்மீக அடிப்படைகளின் பாற்பட்டவை அல்ல. ஜனநாயகம், மனித உரிமை, போருக்கெதிரான அழுத்தம் என்பதெல்லாம் முலாம் பூசப்பட்ட சொற்கள். அரசியல் நேர்மையுடனும் உண்மையான அர்த்தத்துடனும் முன்வைக்கப்படுபவை அல்ல. தமக்கு எதிரான தரப்புகளை அடிபணிய அல்லது வழிக்குக் கொண்டுவருவதே அமெரிக்க – ஐரோப்பிய புறக்கணிப்பு அரசியலின் நோக்கம். தம்மோடு ஒத்துப்போகின்ற சர்வாதிகாரிகள், மனித உரிமை மீறல்களை மேற்கொள்வோர், ஐனநானகத்தைப் பின்பற்றாதவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கு புறக்கணிப்பு அரசியலைப் பிரயோகிப்பதில்லை. தம்மோடு முரண்படுகின்ற, தமக்குச் சவாலான சக்திகளை நோக்கியே தமது பொருளாதாரத் தடைகள், புறக்கணிப்புகளை அவை நடைமுறைப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக பலஸ்தீனர்கள் மீது இன அழிப்பினையும் நிலப்பறிப்பினையும் எழுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கு எந்தவிதப் புறக்கணிப்புகளையும் இதுவரை செய்யவில்லை. செய்யப்போவதில்லை.
புறக்கணிப்பின் பாதிப்புகள்
ரஸ்யாவைப் பொருத்தவரை மொத்த தேசிய வருமானம், நாணயப் பெறுமதி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் எனப் பல தளங்களில் அதன் பொருளாதாரத்தின் மீது அமெரிக்க-ஐரோப்பியத் தடைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அத்தோடு சர்வதேச நிதிப்பரிமாற்றத்திற்கான பொறிமுறையிலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication -SWIFT) ரஸ்யாவை விலத்தியுள்ளமை சர்வதேசச் சந்தையிலிருந்தும் அதனை விலக்குகின்றது. அத்தோடு சாதாரண மக்களின் நாடுகடந்த நிதிப்பரிமாற்றத்தையும் தடுக்கின்றது. வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருட்களின் விலையேற்றம் என்பன மக்களின் நுகர்வுவலுவைச் சிதைக்கின்றன. சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வருமானத்தை இழக்கின்றன. சர்வதேச வான் எல்லைகளுக்குள் ரஸ்ய விமானங்கள் பறப்பதற்கான தடைகள் ரஸ்ய மக்களின் நாடுகடந்த பயணங்களையும் வெளியுலகுடனான உறவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது புறக்கணிப்பின் நோக்கம் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதாக முன்னிறுத்தப்பட்டாலும் அதனால் நடைமுறையில் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
கட்டார் – உதைபந்தாட்ட உலகச் சுற்றுக்கிண்ணம் 2022
2022ஆம் ஆண்டு உதைபந்தாட்ட உலகச் சுற்றுக்கிண்ணம் கட்டாரில் இடம்பெற்றபோதான விமர்சனங்கள் கட்டாரின் மனித உரிமை, தொழிலாளர் உரிமை மீறல்கள் குறித்த கவனக்குவிப்பினை ஏற்படுத்தின. சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட இன்னபிற உரிமை அமைப்புகள் ஊழியர்களின் நிலைமைகளை ஆராய்ந்து இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் கட்டாரில் அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே உட்பட்ட பல்வேறு மேற்கு நாடுகளின் பெற்றோலிய மற்றும் ஏனைய உற்பத்தி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவற்றின் தொழிலாளர்களும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு உட்படுகின்றனர் என்பது இலகுவில் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு விடுகின்றது.
தங்குவிடுதி(Hotel) பெருநிறுவனங்களான Accor> Hilton மற்றும் கட்டடக்கட்டுமான நிறுவனமான Vinci ஆகியவை குடிபெயர் தொழிலாளர்களின் (Migrant workers) உழைப்பை துஷ்பிரயோகம் செய்த நிறுவனங்களின் வரிசையில் உள்ளடங்குகின்றன என நோர்வேயின் தேசியத் தொலைக்காட்சி (NRK) அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தது. நோர்வேயின் எண்ணெய் நிதியம் (Petroleum fund norway) இந்த நிறுவனங்களில் முதலீடு செய்கிறது என்பதையும் NRK வெளிப்படுத்தியது. ஆனால் Accor> Hilton மற்றும் Vinci ஆகியன பிரெஞ்சு மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிடப்படவில்லை.
கட்டார் நாட்டின் 2.6 மில்லியன் மக்கட்தொகையில் 90 வீதமானவர்கள் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு குடிபெயர் தொழிலாளர்கள். இவர்களிற் பெரும்பான்மையினர் வங்காளதேசம், பிலிப்பைன், இந்தியா, நேபால் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள். பல தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மிக மோசமான வாழ்விடச் சூழலில் அவர்கள் வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள், வேறு வேலைக்கு மாறவோ, நாட்டைவிட்டு வெளியேறவோ அனுமதிக்கப்படுவதில்லை. தொழிற்சங்க உறுப்பினர்களாக முடிவதில்லை, அதனால் ஒரு பொதுவான தொழிலுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க முடிவதில்லை. அத்தோடு மிக ஆபத்தான தொழிற்சூழலில் பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகின்றது. பாலைவனக் கொடுவெயிலில் பலர் இறந்துள்ளனர். அந்த சாவுகளுக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை போன்றனவே தொழிலாளர் உரிமை மீறல்கள் சார்ந்து கட்டார் மீதான சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட அமைப்புகளின் குற்றச்சாட்டுகள்.
கட்டார்: எண்ணெய், எரிவாயு வளம்
அரபு நாடுகளிலேயே வறுமை மிகுந்த நாடாகவிருந்த கட்டார், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் எண்ணெய் வள அடைவினாலும், 1971இல் சுதந்திரத்தைத் தொடர்ந்தும் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1970 களில் உட்கட்டுமானம், சேவைத்துறை மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் அங்கு நவீனமயமாக்கல் நிகழத்தொடங்கியது. முதன்மையாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் நாடு முன்னோக்கி நகர்ந்தது. ரஸ்யா மற்றும் ஈரானுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியைக் கட்டார் கொண்டுள்ளது.
கட்டார் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தவிர இயற்கை வளங்கள் எவற்றையும் கொண்டிராத பாலைவன நிலம். நாட்டின் பொருளாதார மேம்பாடானது, வெளிநாட்டு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. தற்போது தோராயமாக. வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 90 வீதமெனத் தரவுகள் கூறின. 2005 இல், எண்ணெய் மற்றும் எரிவாயு மொத்த தேசிய வருமானத்தில் 60 வீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 85 வீதம். கிட்டத்தட்ட முழு எண்ணெய் ஏற்றுமதியும் ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. விற்கப்படுகிறது, ஜப்பான் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது. எண்ணெய் மட்டுமல்ல, எரிவாயுக்கான முதன்மைச் சந்தையாகவும் ஆசியா உள்ளது. அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் கட்டாரின் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளம்
1991இல் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போரின் விளைவாக கட்டாருடனான அமெரிக்க உறவு வலுப்பெற்றது. அதுவொரு அரசியல், இராணுவ பொருளாதார உறவு. 1992இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, வளைகுடாவில் தனது முதன்மையான இராணுவ இருப்பினை அமெரிக்கா இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் கட்டாரில் கட்மைத்துக்கொண்டது. சவுதி அரேபியாவிற்குப் பின்னர் பிராந்தியத்தின் அடுத்த முக்கிய அமெரிக்க இராணுவக்கூட்டு கட்டார் ஆகும். கட்டாரில் அல்-உதீத் பிராந்தியத்தில் அமெரிக்கா பாரிய இராணுவத்தளத்தினைக் கொண்டுள்ளது. இது கட்டாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாயினும் அமெரிக்க விமானப்படையின் முன்னணித் தளமாகும். 2001 தொடக்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடாத்திய போரிலும், பின்னர் 2003இல் ஈராக்கிற்கு எதிரான அதன் போரிலும் இவ்விமானத்தளம் முக்கிய பங்காற்றியது.
கட்டாருடனான அமெரிக்க உறவு மேற்சொன்ன வகையில் இருக்க, ஐரோப்பிய நாடுகளும் அதனுடன் வணிக உறவினைக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக ரஸ்யாவிலிருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை வெகுவாகக் குறைத்துவரும் ஐரோப்பிய நாடுகள் கட்டாரிலிருந்து எரிவாயு இறக்குமதிக்கான உடன்படிக்கைகளைச் செய்துவருகின்றன. 2022இறுதியில் ஜேர்மன் அவ்வாறான உடன்படிக்கையினைச் செய்தது. ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன் திரவ இயற்கை எரிவாயுவை ((Liquefied natural gas – LNG) வழங்கும் ஒப்பந்தம் அதுவாகும். இது குறைந்தது பதினைந்து வருட தொடர் விநியோகத்திற்கான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் எரிசக்தி உறுதிப்பாட்டிற்குக் கட்டார பங்களிக்கும் என்று கட்டாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி தெரிவித்திருந்தார். கட்டார், நோர்வே உட்பட பிற நாடுகளிலிருந்து பெருமளவிலான எரிசக்தி இறக்குமதிக்குரிய ஒப்பந்தங்களை ஜேர்மனி செய்துவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிசக்தி விநியோகத்தினை அதிகரிக்கக் கோரிய பேச்சுவார்த்தைகளை 2022 ஜனவரி காலப்பகுதியிலிருந்தே அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் கட்டார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க – ஐரொப்பிய மனித உரிமை, ஜனநாயகப் போர்வை
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் உலகெங்கும் தமது கொலனித்துவ ஆக்கிரமிப்புகளின் மூலம் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பினர். மதமாற்றறப் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். அந்தத்த நாடுகளின் மக்கள் சமூகங்களை இன, மத, மொழி ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு, அரசியல், இன, மத முரண்பாடுகளுக்கு வித்திட்டனர் என்பது வரலாறு. ஆனால் இன்றைய மேற்கு நேரடியாக மதம், கடவுள், யேசு என்று உலக நாடுகளில் இறங்குவதில்லை. இப்பொழுது மனித உரிமை, ஜனநாயகம், பெண்ணுரிமை, LGTBQ உரிமைகள் என்பனவே பிற பிராந்திய நாடுகள் மீதான மேற்கின் தலையீடுகளுக்கான கருவிகள். வுடிவங்கள் மாறினாலும் பிற கீழைத்தேச நாடுகள் மீது தமது நம்பிக்கைகளைப் பிரயோகிப்பதிலிருந்து மேற்கு மாறவில்லை. தமது நம்பிக்கைகள், நலன்களுடன் உடன்படாத நாடுகள், தரப்புகள் மீது பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கின்ற அணுகுமுறையை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
அமெரிக்கப் பொருளாதாரத் தடை அணுகுமுறை சார்ந்து ரஸ்யாவிற்கு முந்தைய முக்கிய எடுத்துக்காட்டு கியூபா. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நடைமுறைப்படத்தி வருகின்றது. தான் மட்டுமல்லாமல் தனது நட்புநாடுகள் மற்றும் தான் வணிக உறவுகளைக் கொண்டிருக்கும் அனைத்துக் கட்டமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் நாடுகளையும் நிர்ப்பந்தித்து வந்துள்ளது. கியூபாவுடன் வணிக உடன்படிக்கைகளைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகக்கூட அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். இதன் விளைவாகவே கியூபா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றது. கட்டட உபகரணங்கள், கார்கள், மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், ஆடைகளை இறக்குமதி செய்வதிற்கூட கியூபா நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. அத்தோடு சர்வதேச நிதிப்பரிமாற்றம், அமேசோன், ஸ்கைப், சூம் போன்ற கொள்வனவு மற்றும் தொடர்பாடற் தொழில்நுட்ப இணையச் செயலிகளையும் கியூபா பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது.
கியூபா மீதான தடைகள்
1996இல் கியூபா இணைய இணைப்பினை நிறுவ முனைந்தபோது அது தடுக்கப்பட்டது. இணைய இணைப்புத் தொழில்நுட்பத்தினை ஏற்படுத்த முன்வந்த Grupo Demos என்ற மெற்சிக்கோ நாட்டு நிறுவனத்தின் மீது அமெரிக்கா அபராதம் விதித்ததையடுத்து அந்நிறுவனம் பின்வாங்கியது. கியூபாவிற்கு கணினித் தொழில்நுட்பக் கருவிகளை விற்பனை செய்த சுவீடனைச் சேர்ந்த எரிக்சூன் (Ericsson) நிறுவனத்திற்கும் 1.75 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்நிறுவனம் மன்னிப்புக்கோரி, விற்பனைக்குப் பொறுப்பான அதிகாரியைப் பதவியிலிருந்தும் நீக்கியது. 2011 வரை கியூபா செயற்கைக்கோள் மூலமான இணைய இணைப்பினையே கியூபா பொண்டிருந்தது. பின்னர் வெனிசுவோலாவினால் கடற்கீழ் கேபிள் மூலமான இணைய இணைப்பு உருவாக்கப்பட்டது.
இத்தனை தடைகளின் மத்தியிலும் மருத்துவத்துறையில் கியூபாவின் சாதனைகள் உலகறிந்தவை. சிறந்த விளைவுத் தாக்கம் மிக்க கொரோனாத் தடுப்பூசியை கியூபா உருவாக்கியிருக்கிறது. அதனை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்ளாததால், கியூபாவிற்கு தடுப்பூசி உற்பத்தியினாற் கிடைக்கக்கூடிய வருமானம் இல்லாமற் போயுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரபட்சமான தடுப்பூசிப் பங்கீட்டினையும் வறிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் பற்றாக்குறையும் தொடர்கின்றன.
இரட்டை அணுகுமுறை
உதைபந்தாட்ட உலகச்சுற்றுக் கிண்ணம் கட்டாரில் இடம்பெற்ற போது, பல உலக ஊடகங்களில் அதனைப் புறக்கணிப்பது தொடர்பான வாதங்கள் எழுந்தன. முதலில் அங்குள்ள குடிபெயர் தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றன. பின்னர் கட்டார் ஓரினப் பாலுறவாளர்களைச் சகிப்பதில்லை, பெண்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற நாடு என்பதான வாதங்கள் முன்னிடம் பெற்றன.
அடுத்த உதைபந்தாட்ட உலகச்சுற்றுக் கிண்ணப் போட்டிகள் அமெரிக்காவில் 2026 இடம்பெறவுள்ளன. அப்போது புறக்கணிப்புத் தொடர்பான கோரிக்கைகள் ஒலிக்கப்போவதில்லை. நவீன யுகத்தில் உலகின் பல பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையிலான போர்களைத் தொடங்கிய நாடு அமெரிக்கா. அணுவாயுதத்தைப் பொதுமக்கள் மீது பிரயோகித்த (1945இல் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் நாகசாக்கியிலும்) உலகின் ஒரேயொரு நாடு. சிறுவர் உரிமைகளுக்கான ஐ.நா உடன்படிக்கையிற் கையெழுத்திடாத ஒரே நாடு (18 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கக்கூடிய வசதிக்காக). எனவே மனித உரிமை, சிறுவர் உரிமை, கறுப்பின மக்கள் மீதான படுகொலைகள், உலகில் அதிக போர்களுக்குக் காரணம் என்ற காரணங்களின் பொருட்டு அமெரிக்காவை எந்த நாடும் புறக்கணிக்க முன்வரப் போவதில்லை. இதுதான் இன்றைய அரசுகளின் ஜனநாயக நடைமுறை.
அதிகார அரசியலும் பொருளாதார நலன்களும்
உண்மையான புறக்கணிப்பென்பது மனித உரிமையின் பொருட்டா? ஜனநாயகத்தின் பொருட்டா? அல்லது அப்பட்டமான அதிகார அரசியல், பொருளாதார நலன்களின் பொருட்டா என்றால் அதற்கான விடை மிக இலகுவானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் புறக்கணிப்பு என்பது அதிகார மற்றும் பொருளாதார அரசியலின் பாலானது. ஆனால் இம்முறை ரஸ்யா மீதான புறக்கணிப்புகளின் விளைவுகள் ஐரோப்பிய நாடுகளில் பல தளங்களில் விளைவுகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளன. எறிந்த பந்து சுவரிற்பட்டுத் எறிந்தவரின் முகத்திலேயே பட்டமை போன்றது ஐரோப்பா எறிந்த ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக் கணைகளின் விளைவு. பொருளாதாரத் தடைகள், புறக்கணிப்புகளை ஜனநாயகம், மனித உரிமைகள், போருக்கெதிரான உன்னத நோக்கங்களாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் பிரஸ்தாபித்து வருகின்றன. அதற்கு அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான ஊடகங்களும் துணைநிற்கின்றன. உன்னத நோக்கமாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் மக்களிடம் அதனை எளிதில் விற்றுவிட முடியாது என்பதால் ஏகாதிபத்திய இலட்சியங்கள் நவீனச் சொல்லாடல்களாலான மொழியை அணிந்து வலம் வருகின்றன.
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்