லாவண்யா சுந்தர்ராஜன்
பொன்வண்டின் விஷப்பல் வேலை செய்யவில்லை. இது எவ்வளவு ஆபத்தானது. குறிப்பேட்டின் படி ஒரடிக்குள் எந்த அந்நிய நடமாட்டமிருந்தாலும் பொன்வண்டு அதைக் கொல்ல வேண்டும். களத்தில் நெருப்புப்பெட்டியுள் இருக்கும் போதே அந்நியர் வருகையை மோப்பம் பிடிக்க வேண்டும். இப்போது என் மேசை மீது எந்த கவசமும் இல்லாமல் திரியும் போதே இந்த பொன்வண்டை கொசு இவ்வளவு எளிதாக சுற்றி சுற்றி வருகிறதே. நியமப்படி அந்த கொசு பத்தடி தொலைவில் ரீங்காரம் கேட்கும் போது இதன் இறக்கை விரியவேண்டும், ஒரடிக்குள் வரும் முன்னர் பறந்து சென்று விஷப்பல்லால் சிறுகடி, கொசு மயங்கி விழுந்து இறந்து போய்விடும். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. அந்த கொசு ஒருசில சமயம் பொன்வண்டின் வாயருகில் கூட வந்து இளிக்கிறது. அன்று ஆராய்ந்துப் பார்த்த போது தான் பொன்வண்டின் பற்கள் காலவதியாகி சொத்தையாகியிருக்கும் விஷயத்தை கண்டுபிடித்தேன் இது மிக ஆபத்தானது. உடனடியாக குழுவில் விசாரித்த போது மழுப்பலான பதில் கிடைத்தது. மேலாளரிடம் சொன்னபோது பத்து வருடமாக விற்பனையில் இருக்கிறது. பயனாளர்களின் அறையில் வெறுமனே அலங்கரிக்கவா இதனை வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று சாடினார். சரி நான் என்ன செய்ய முடியும் என்று நினைத்தேன். இரண்டே வாரத்தில் அவரது ஊழ் அவரை வேறு மாதிரி பேச வைத்தது.
ஹும்ம் இந்த புது குழுவில் இன்னும் எத்தனை கஷ்டம் தான் படவேண்டுமோ தெரியாது!! குழுவில் சேர்ந்து சில மாத காலமே ஆயிருந்தாலும் குழுவில் செய்ய முடியாத சில வேலைகளை உடனடக்குடன் முடிந்து கொடுத்திருந்தேன். என் போறாத வேளை களத்தில் ஒரு பயனாளர் பொன்வண்டின் செயல்திறனை நான் குழுவுக்கு சேர்ந்த சமயத்தில் தான் சோதனை செய்ய வேண்டுமென்று நினைத்து அதைப் பரிசோதித்திருக்கிறார். பாவம் அவர் ஊழ் அந்த சோதனையை இப்போது செய்யவேண்டும் என்று எழுதி வைத்துவிட்டது. பயனாளர் தெய்வங்களாயிற்றே! அவர்களுக்கே சந்தேகம் வந்த உடன் விசாரணை தொடங்கியது. அதனால் தான் நானும் ஆராயத்தொடங்கினேன். நான் சொன்னதை முதலில் மறுத்தவர், இரண்டாம் வார முடிவில் அப்படியே நாக்கு நரம்பில்லாமல் புரண்டு விட்டது.
மேலாளருக்குத் தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. ‘இதுவரைக்கும் இந்த விஷப்பல் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்குமே தெரியாது. இந்த பாவப்பட்ட ஜந்து (மின்)பொன்வண்டு நம்மிடம் வந்ததிலிருந்து இதே பல்லோடு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை இதை மாதிரியாகக் கொண்டு உருவாக்கும் பிற வண்டுகளும் அதே போலொரு பல்லோடு தான் களத்துக்கு அனுப்பப்படுகின்றன. அவை பேருக்கு தான் போர் புரியுமாம் அல்லது போரிடுவது போல நடிக்குமாம். நிஜமாய் களத்தில் விஷ ஐந்துகள் எதுவுமிருந்தால் அதைக் கடித்து நமது பயனாளர் நிறுவனத்துக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கதாம். இதுவரை நமது பொன்வண்டு இடப்பட்ட நெருப்புப் பெட்டியை வாங்கிய நிறுவனங்கள் அதனைத் திறந்தே பார்க்கவில்லை என்பதால் நாம் தப்பித்தோம். நல்லவேளை இந்த விஷப்பல் சொத்தையாகி விட்டதை நீங்களே கண்டறிந்து விட்டீர்கள். மகிழ்ச்சி வாழ்த்துகள். பல் காலாவதியானது யாருக்கும் இதுவரை தெரியாமல் போனது நமது துரதிருஷ்டம், அதனால் வண்டின் பிற செயல்பாடுகளுக்கு எதுவுமே பாதிப்பில்லை என்றாலும், இது கண்டறிப்பட்டாலோ, விஷமிகள் யாரேனும் அவர்களது ஊடுருவ நினைத்து அவர்களது ஈக்களையோ ஈசல்களையோ பொன்வண்டிலிருக்கும் பெட்டிக்குள் நுழைந்து அவை நம் பொன்வண்டால் கொல்லப்படாமல் உயிரோடு தீப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறையில் நுழைந்து விட்டால் நம் கதி அவ்வளவு தான். எத்தனை லட்சம் டாலர்கள் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமோ தெரியாது. அப்படி கொடுப்பது ஒருபுறமிருந்தாலும் இதுவரை நாம் சந்தையில் கட்டமைத்திருக்கும் தரமான பாதுக்காப்பான பொருட்களை மட்டுமே சந்தைப்படுத்துவோம் என்ற நம்பிக்கை பிம்பம் என்றாவது? நினைத்துப் பார்க்கவே கொடூரமாக உள்ளது. அய்யோ!!!
உங்களுடைய அடுத்த பணி இந்த வண்டுக்கு சொத்தைப் பல்லை மாற்றி நற்பல்லை அமைப்பது எப்படி என்பதைப் பற்றியும் அதில் விஷத்தை வேறு யாருக்கும்(மிக முக்கியமாக பயனாளர்களுக்கே) தெரியாத வண்ணம் ஏற்றி வைப்பது எப்படி என்பதையும் மேலும் களத்தில் அந்த பல்லை சரியாக கண்டறிந்து பிடிங்கி விடாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே ஆகும். இதைவிட தலை போகும் வேலையை நானே அளித்தாலும் நீங்கள் அதை செய்யத் தேவையில்லை. உங்கள் மேல் எனக்கு பரிபூரண நம்பிக்கையிருக்கிறது. இதுவரையிலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் திறன்பட முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல் அவை நமது எல்லா தரக் கட்டுப்பாட்டையும் ஒரு குறையும் இல்லாமல் பூர்த்தி செய்திருக்கிறது. இதெல்லாமே பிரச்சனையை சரிவர புரிந்து கொண்டு தீவிரமாய் தொலைநோக்கு பார்வையோடு தீர்வை கட்டமைக்கும் திறனே.
ஆனால் இந்த பணி எவ்வளவு முக்கியமானது என்பதும் இதன் தீவிரத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும். ஏற்கனவே சந்தைபடுத்தப்பட்டு பத்து வருடங்கள் இயங்கும் ஒரு பொருளில் இருக்கும் சிக்கலை தீர்ப்பது முக்கியம். மேலும் நமது தீர்வு அதன் செயல்திறன் எதையும் பாதிக்கக்கூடாது இதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை இருந்தாலும் என்ற ஒரு நீண்ட பிரசங்கத்தைக் கொடுத்து விஷப்பல்லை மாற்றும் வேலையை என் தலையில் கட்டினார்.அவர் ஒவ்வொரு பணியை என்னிடம் கையளிக்கும் போதும் இதுவரை அதனை செய்து முடிக்காத நிலுவையிலிருக்கும் வேலைகளையே கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை கொடுப்பதாலும் அவர் சொல்லும் விபரங்களை கேட்க கேட்க அவர் பேச்சின் தீவிரம் மூளையை தீப்பிடித்து எரிய செய்து விடும், மூளையிலிருந்து அந்த தீ இதயத்துக்கு தாவும். பின் ரத்தநாளங்கள் வழி உடல் முழுவதும் தீ ஆழ எரியும். இரத்த அழுத்தம் இதுவரை கூடாமல் இருந்தால் இன்னும் கூடும். தனது பணிகளை தீவிர செயலூக்கத்துடன் செய்யும் பணியாளர்களை இன்னும் தீவிரப்படுத்துவதில் இந்த இந்திய மேலாளரின் திறன் அதீதமானது.
மிகத் திறமையான மேலாளர் இந்தியாவிலிருந்து சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் குடியேறியவர். வாய்திறமை அதிகம். அதைக் கொண்டே தனக்கு மேலிருக்கும் அதிகாரிகளை வசியப்படித்தி வைத்திருப்பதாக குழுவுக்குள் பேச்சு திரிகிறது. பணியாளர்களை வேலை வாங்குவதில் வல்லவர் ஆனால் அந்த வல்லமை இந்தியப் பணியாளர்களிடம் மட்டுமே செல்லுபடியாகிறது. அது அவருக்கும் தெரிந்தேயிருக்கிறது. அமெரிக்காவில் பணியாளர்களிடம் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் பேசினால் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். அப்படியெல்லாம் இந்தியப் பணியாளர்கள் செய்ய மாட்டார்கள் என்பது இவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. அமெரிக்க மேலாளர்கள் பணியாளர்களை இவ்வளவு கெடுபிடி செய்வதில்லை. ஆனால் அவர்களெல்லாம் அங்கேயே வசிக்கும் இந்திய மேலாளர்களின் பின்னால் மறைந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் பணியை முடித்துக் கொடு என்று தங்கள் கண்களை மூடிக் கொள்கிறார். பேருக்கு தான் ‘உனது வேலை தனி வாழ்க்கையை எதுவும் பாதிக்கவில்லையே?’ என்ற கேள்வியை பட்டும் படாமலும் கேட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அந்த கேள்வியைக் கூட கேட்க அவசியமில்லாத பாவனையில் கேட்டுவிட்டு ‘பிரச்சனையெல்லாம் எதுவுமில்லை எனது வேலை தனி வாழ்க்கையை நேரத்தை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை’ என்ற பதிலை மட்டுமே எதிர்நோக்குகின்றார்கள்.
வேறு எதையும் சொல்லி வைத்தால், அடுத்த சில வாரங்களிலேயே உங்களிடம் இது குறை அதை சரி செய்து கொள்ளலாம் என்ற புகார் பட்டியல் கேட்பவர் காது நோகாமல் கொடுப்பதில் அமெரிக்க மேலாளர்கள் வித்தகர்கள். இந்திய மேலாளர்கள் அமெரிக்கர்களும் அவர்கள் இவர்களுக்கு மூடிக்கு குமிழாக இருந்து ஜாடியை பாதுகாப்பார்கள். அமெரிக்க மேலாளர்கள் அடித்து பேசி வேலை வாங்குவதை இந்தியாவிலிருந்து வந்து அங்கே அமர்ந்து கொண்டு கொத்தடிமைக் குழுக்களை உருவாக்கும் மேதமைகளை நம்பியே தங்களது குழுவை நிர்வாகிக்கும் உரிமையைத் தாரளமாக அவர்களின் பொறுப்பில் எந்தக் கேள்வியும் கேட்காமல் விட்டு விடுகின்றார்கள். தங்களது எழுத்து மற்றும் எறுப்பை எருமையாக்கும் வல்லமையால் இந்திய மேலாளர்கள் குழுவில் ஏற்படும் மனகசப்புகளை மேல்பூசி மறைந்து பிரச்சனை அடிமைகளே உங்களிடம் தான் என்று சொல்லி மாயம் செய்ய உதவுவார்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும் இந்திய மனப்பான்மை கொண்ட மேலாளர்களை அவர்கள் எப்போதும் ஆதரிக்கவே செய்வார்கள். பெயருக்கு தான் எங்களுக்கு பொறியாளர்களே முக்கியம் அவர்கள் எங்கள் கண்கள் என்று சதிபாடல்கள் எல்லாம். மேலாளர்கள் மேலாளர்களே அடிமைகள் என்றும் அடிமைகளே என்பது தனிக்கதை. பாவம் சொத்தைப் பல் பொன்வண்டே என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு புலம்பாதே மேலே கதை சொல் என்கிறது.
எனக்கு இது தேவை தான் என்று இருந்தது ஒருவேளை இது எனது ஆர்வக்கோளாருக்கு கிடைத்த தண்டனையே. இதற்கு முன்னர் ஒருவருஷமாக இந்த வண்டின் செயல்பாடுகளை வடிவமைப்பது போல பாவனை செய்து கொண்டிருந்த இருவர் குழுவில் நான் சேர்ந்ததும் அவர்கள் இருவர் முன்னிலையிலும் மேலாளர் நான் வந்து சேர்ந்தது குழுவின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்று சொல்லி வரவேற்றபோது அமைதியாக இருந்தனர். மிக மிக மகிழ்ச்சி என்று கை குலுக்கிய போது இருவரின் பிடியிலும் தெரிந்த வெறுப்பு என்னை இந்த குழுவோடு எப்படி பயணிக்கப் போகிறோம் என்ற திகிலைக் கொடுத்தது. பொன்வண்டு வளர்த்தெடுப்பதிலேயே அதன் செயல்பாடுகளைப் பழக்குவதில் எனது பெரும்பாலான வேலைக்காலம் கழிந்திருந்ததே அந்த குழுவுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம். என்னுடைய பழைய குழுவில் தயாரித்து சந்தைபடுத்தப்படும் விளைப்பொருளில் பகுதியாகவே பொன்வண்டு இருந்தது. அந்த பொருளின் முக்கிய செயல்பாடுகள் பொன்வண்டின் பல்வேறு செயல்திறனில் இருந்தது. பொன்வண்டின் ஒவ்வொரு மூச்சும் அசைவும் எனது கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் விழி அசைவுகளிலிருந்தே அதன் நோவென்ன என்று கண்டறியும் அளவு என்னிடம் அனுபவமும் கண்டறியும் கருவிகளுமிருந்தன. முன்னர் வேலைப்பார்த்த குழுவும் ஒத்திசைந்த எண்ணத்தோடு உதவும் மனப்பான்மையோடும் இருப்பார்கள். ஒவ்வொருவர் வேலையும் தனித்துவமானது ஆகவே எனது என் என்ற எந்த தனி இசையும் அங்கில்லை.
புதுக்குழுவில் பொன்வண்டின் செயல்பாடுகளைத் தெரிந்தவர்கள் அதிகமில்லை, சில தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு ஆலோசனை தேவைப்படுகிறது ஆகவே உங்களை அங்கே பணியமர்த்துகிறோம் என்று சொல்லி உயர்பதவி கொடுத்து குழு மாற்றம் செய்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் கைக்குலுக்கிலேயே தங்களது எதிர்ப்பை நசுக்காய் தெரிவித்த குழுவோடு நான் கொஞ்சம் சூதானமாக இருந்திருக்க வேண்டும். மென்பொருள் கட்டுமானம் எதையுமே அவர் எனக்கு சரிவர சொல்லித் தரவில்லை. பொன்வண்டும் சொந்தமாக உருவாக்கப்படவில்லை. அதைப் பெரும் பணம் கொடுத்து இன்னொரு நிறுவனத்திலிருந்து வாங்கியிருக்கின்றார்கள். அந்த விஷப்பல் சொத்தையான விஷயத்தை முதன்முதலில் கண்டறிந்து சொன்னது மேலாளருக்கு முதலில் அதிர்ச்சி. அப்படியிருக்க வாய்ப்பில்லை. களத்தில் பத்து வருடமாய் இயங்குகிறதே. நம்மிடம் திறமையான பொறியாளர்கள், குற்றம் குறை எதுவும் இருந்தால் சாதனத்தை இந்த கட்டத்திலிருந்து வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க முடியாத கடுமையான திட்டவட்டங்கள் இருக்கின்றன. இப்படியெல்லாம் அவதூறு பரப்பவேண்டாம் என்று பொறிந்து தள்ளினார். பத்து வருடங்களாக இந்த சாதனத்தோடு பயணிக்கும் இவர்களுக்கு தெரியாதா என்றபோது குழுவின் நண்பர்கள் இளக்காரம் காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். ஏற்கனவே இந்தப் பிரச்சனை இருப்பது சமீபத்தில் அவர்கள் கண்டுபிடித்ததாகவும், சொன்னால் இப்படித் தான் சிக்கலாகும் என்றே நாங்கள் சொல்லவில்லை என்றும் நன்றாக அனுபவி என்று சபித்துவிட்டு இரண்டு பாவனையாளர்களும் தத்தம் கோட்டைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.
இந்த குழுவுக்கு வந்த நாள் முதல் அறிந்து கொண்ட ஒரே விஷயம் இரண்டு பொறியாளர்களும் செய்வது புள்ளியளவே ஆனாலும் காட்டிக் கொள்வது புவியளவு. அதைக் கண்டறியாமல் இருக்க திருக்கி திருக்கி அமைக்கப்பட்ட மென்பொருள் வடிவமைப்பை இந்த இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் எளிதாக நெருங்கி விடாதபடி வடிவமைத்து வைத்திருந்தனர். அதன் செயல்படுகளை விளக்கச் சொன்னால் இருவரும் நாள்கணக்கில் பேசுவார்கள். ஆனால் அதில் ஒரு தூசியைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் சொல்லும் சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள். மென்பொருளின் செயல்பாடுகளை சொல்லும் போது ஒருபோதும் சம்மந்தப் பட்ட கோட்பாடுகளைக் காட்டி செயல்விளக்கம் தரமாட்டார்கள். எதையாவது நானே கண்டறிந்து அதனை சார்ந்த கேள்விகளைக் கேட்டால் அது தான் உங்களுக்கே தெரிந்திருக்கிறதே என்ற பதிலையும் தருவார்கள். சொல்லிக் கொடுத்தால் சில மணி நேரமே ஆகும் கட்டுமானத்தை தானே அறிந்து கொள்ள பல மாதம் பிடிக்கும். ஆனாலும் குழு என்ற உணர்வு ஒன்று இல்லாத இடத்தில் ஒத்திசையை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமென்ற முடிவோடு களமிறங்கிய போது கண்டறியப்பட்டதே இந்த சொத்தைப்பல் விவகாரம். சொல்லிய போது அதிர்ச்சியடைந்தவர் பல்வேறு பழியைப் போட்ட அதே மேலாளர் தான் இன்று காலை இளித்த முகத்தோடு இதன் செயல்பாடுகளை இதுவரை யாரும் முழுதாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லி வேலையை சமர்த்தியமாக தலையில் கட்டிவிட்டார். முன்னர் பேசிய கடும்சொற்களுக்கான மன்னிப்போ குற்ற உணர்வோ கொஞ்சமும் இல்லாத முதலாளித்துவ மனோபான்மையை நிலைநாட்டிவிட்டு நகர்ந்து விட்டார்.
பொன்வண்டை இயக்கும் மென்பொருளை எங்கள் பழைய குழு தானே தயாரித்து எல்லா செயல்பாடுகளையும் கைச்சொடுக்கில் வைத்திருந்தது. அந்த குழுவில் இருக்கும் போதே இந்த விஷப்பல் சார்ந்த இயக்குமுறைகளை நான் வெறுப்பதுண்டு, அது சம்மந்தப்பட்ட எந்த மென்பொருள் வடிவமைப்பையும் நான் கடந்த குழுவில் என்னுடைய நண்பருக்கு அளித்துவிடுவது வழக்கம். அதனால் அந்த செயல்முறை கோட்பாடுகளை இணையத்தில் தேடிப் படிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் சந்தேகங்களை பழைய குழு நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அது நான் ஒவ்வொரு முறை படிக்கும் போது தலைகீழாய் தவம் செய்யும் வவ்வாலுக்கு மண்ணிலிருந்தே புகட்டுவது போன்ற கடுமையான செயலாக இருந்தது. எத்தனை முறை கோட்டுபாடுகளைப் படித்தாலும் மண்டைக்குள் இறங்க மறத்தது அதன் அடிப்படைகள். மேலும் அதனைப் படித்து புரிந்து கொண்டவர்களும் சொல்வது வவ்வாலை தரையிருக்கும் எந்த யுத்தியோடும் இருக்கவில்லை. இது தான் இப்படித் தான் என்பதை அறிந்து கொள்ள இரவு பகலாக மறுபடி மறுபடி படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை ஒரு மரமேறினால் வவ்வால் மறுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதன் அடிப்படைகளை புரிந்து கொண்ட பின்னரே பொன்வண்டின் செயல் கோட்பாடுகளை வரைந்து கொடுத்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைத் தொடங்க வேண்டும். இரவில் உறக்கத்தில் கூட பொன்வண்டு தனது சொத்தைப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
புரிந்த விஷயங்களைக் கொஞ்சம் வைத்துக் கொண்டு கொள்ளைப் பணம் கொட்டி வாங்கிய வண்டியக்க மென்பொருளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்நுழைய ஆரம்பித்தேன். எனது முதல்கட்ட கேள்வியை சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பியதும் அவருடைய முதல் பதில் உங்கள் குழுவில் ஏற்கனவே இதனை செய்து கொண்டிருந்த திருவாளர் டேஷ் இடம் கேட்டுபாருங்கள் என்றார். திருவாளர் டேஷ் தனது இரும்புக்கரங்களை விரித்து இதுவரை அது சார்ந்த எந்த விஷயத்தையுமே நான் செய்யவில்லை. கடந்த ஒருவருடமாக மென்பொருள் ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருந்தேன் என்று என்னிடம் இந்த வேலையை ஒப்படைந்த மேலாளருக்கும் எனக்கும் மடல் அனுப்பிவிட்டு தன்னுடைய பணியைத் தொடர சென்றுவிட்டார். சரி என்ன ஆராய்ச்சி செய்தீர்கள் அதில் கண்டறிந்த எதையாவது கொடுங்கள் என்று கேட்ட போது அதெல்லாமே இணையத்தில் இருக்கிறது தேடிக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக சொல்லி இதிலிருந்து விலகிக் கொண்டார். தற்சமயம் எனதருமை மேலாளரே ஒருவருக்கு ஒரு வருடம் வரை ஆராய்ச்சிக்கு நேரம் கொடுப்பீர்கள் அதில் அவர் பல் சொத்தையானதை கூட கண்டறிந்து சொல்ல மாட்டார் அதைப் பற்றிய எந்த புகாருமில்லையா என்று கேட்கத் தோன்றும். அதை முகர்ந்தறிந்து இது கவலைக்குரிய விஷயம் தான், அதனால் தான் உங்களிடம் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் கண்டிப்பாக சொத்தை பல்லை உடைத்தெரிந்து சரியானத் தீர்வை கண்டடைவீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது என்ற இனிப்பு தடவிய வார்த்தைகளை சொல்லி விடுவார்.
ஆனால் கேள்வி மலையாக எழும். ஒவ்வொரு கேள்வியும் வேலை எப்போது முடிப்பீர்கள் என்பதை நோக்கியே இருக்கும். வேறு வழியில்லாமல் மறுபடி மென்பொருளை விற்ற நிறுவனத்திடம் கேள்விகளை மடைமாற்றிய போது, நீங்கள் இன்னுமா விஷப்பல்லையே நம்பியிருக்கிறீர்கள். அது வண்டின் சோதனையோட்டத்துக்காக செய்யப்பட்டது. அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. களத்தில் வண்டின் பல்லை யார் வேண்டுமானாலும் பிடிங்கி விடலாமே!!! நீங்கள் வண்டின் மென்பொருள் கோட்பாடுகளை திருகி விஷத்தை உமிழ்நீர் சுரப்பிக்குள் வைத்திருப்பது போல மென்பொருளை எழுத வேண்டுமென்றார். அதை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை என்று இருமாப்புடன் சொன்னார். உமிழ்நீர் சுரபி எப்படி விஷத்தை வைத்துக் கொள்ளும் அது தேவைப்படும் நேரத்தில் எப்படி வெளிப்படும் என்று கேட்டேன். அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் அது மென்பொருள் பார்த்துக் கொள்ளும் அந்த கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டு விஷத்தை எப்படி உமிழ்நீர் சுரப்பிக்கு செலுத்துவது என்ற குறிப்பேடுகளைப் பாருங்கள் என்று சொல்லி கறார் பதிலை அனுப்பி வைத்தார். குறிப்பேடுகளில் கொடுக்கப்படிக்கும் விஷயத்தை வைத்துக் கொண்டு வண்டின் வாயைக்கூட திறக்க முடியாது என்பதை வெவ்வேறு விதமாக சொன்னாலும் புரியாதவர் போல பதில் அளிப்பதோடு கடும் எரிச்சல் கொண்ட ஒரு மொழியில் பதில் எழுதப்பட்டிருந்தது. சரி நரியை வேட்டையாட வருவாயா என்று அழைப்பதை விட நாமே சுட்டுத் தள்ளுவோம் என்று தூப்பாக்கியை தேடத் தொடங்கினேன். மறுபடி தூக்கமற்ற இரவுகள், பக்கம் பக்கமாய் ஆராய்ச்சி, பார்த்தவர்களிடமெல்லாம் புலம்பல்.
எது நடந்தால் என்ன தீர்வு வேண்டுமே எத்தனை ஆராய்ச்சி செய்தாலும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது ஆராய்ச்சி நேரம் எல்லையில்லாமல் என் சொந்த நேரத்தைத் தின்றது. எப்போது கணினி முன் அமர்கிறேன் எப்போது படித்து உறங்குகிறேன் சாப்பிடுகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. சூன்யச் சுழலில் சிக்கிக் கொண்டதுபோல மூச்சு முட்டியது. கணினி முன்னே தவமிருந்த ஒருநாள் கணினியுள் தெரிந்த எழுத்துருக்கள் பிறழ்ந்து பறந்தன. நான் உட்கார்ந்த நிலையில் மயங்கியிருந்தேன். கண்கள் சொருகி மயங்கி மேசை மீது தலை சாய்த்து உறங்கிப் போனேன். கனவில் வந்த பொன்வண்டு நீ ஏன் தீர்வை என்னிடம் கேட்கவில்லை என்று கேட்டது. களத்தில் இருப்பவர்கள் என் வாயை எப்படித் திறப்பார்கள் என்று யோசி. சட்டென எழுந்தேன். இதுவரை வண்டின் வாயை எப்படி திறக்க வைப்பது என்றே யாருக்கும் தெரியாதே என்று இணையத்தில் தேடத் தொடங்கினேன். யாரோ ஒரு புண்ணியவான் வண்டின் வாயைத் திறக்க அதன் வாய்க்கு அருகே கன்ன கதுப்பு போன்றதொரு கரும்புள்ளியை அழுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான். அந்தப் புள்ளியைக் கண்டறிவதை பெரும் வித்தையாக இருந்தது. அதனைக் கண்டறிந்து மெல்லத் தடவிய போது வண்டு தானே வாயை திறந்து காட்டியது. பல்லை எப்படி மாற்றுவது என்ற கோட்பாட்டை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். அதை மாற்றிய உடன் சோதனையோட்டத்தை அந்த விஷப்பல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட எதிரியை கடித்துக் கொன்றது. அந்த மாயகணத்தில் வண்டையை கையில் ஏந்தி முத்தமிட்டேன். அது வெட்கம் கொண்டது.
சரி சொத்தைப் பல்லை மாற்றி புதுப்பல் கட்டி அதில் விஷத்தை சரிவர செலுத்தி எதிரியை தாக்குமளவுக்கு வண்டைத் தயார் செய்து விட்டால் மட்டும் போதுமா, அது தான் பாதுகாப்பனாது கிடையாதே என்ற கேள்வியை இப்போது எப்படி எதிர்கொள்வது என்று மறுபடி மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மொத்த குழுவுக்கும் எப்படி இந்தப் பல்லை மாற்றிக் கட்டினேன் என்பதை செயல்விளக்கமாக சொல்லும் போது இந்த கேள்வி வருமல்லவா அதுவும் என்னுடைய குழுவில் இதுவரை இந்தத் தீர்வைக் கூட கண்டறியாதவர்கள் தங்களுடைய பங்களிப்பாக ஏதாவது செய்யத் தானே வேண்டும். “அவர்களைப் பற்றி தெரியுமல்லவா தெரிந்தே பின்னர் இந்த விளக்கமுறையை நீயேன் செய்ய வேண்டும்” என்று கேட்டது வண்டு. பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்தபடி அடுத்தகட்ட செயலாக்கத்தில் ஈடுப்பட்டேன். நான் வண்டின் வாயைத் திறக்கும் வழிமுறையை சற்றே சிக்கலாக மாற்றினேன். சங்கேத எண் உள்ளீடு செய்யாமல் வண்டின் வாயை இனிமேல் திறக்க முடியாது. அதை வடிவமைக்கும் போது பாவம் பொன்வண்டு மிகவும் சிரமப்பட்டு விட்டது. அந்த கோபத்தில் மறுபடி கேட்டது “உனக்கு யார் எந்த உதவி புரிந்தார்கள்” என்றது மறுபடியும். ஆமாம் வண்டு சொல்வது சரி தான். சின்னச் சின்ன தகவல் கூட பரிமாற விரும்பாத குழுவில் நான் மட்டும் எல்லா தகவல்களும் எல்லோருக்கும் என்று இருப்பது சரியாகுமா? “குழுவில் உனது இருப்பு இன்றியாமையாது என்று ஆக்கிக் கொள்ள நீயும் தகவல்களை உன்னோடு வைத்துக் கொள் பொதுவில் வைக்காதே. எதை சொல்லாமல் விட்டால் கட்டுப்பாடு உன்னோடு இருக்கும் என்று சில தகவல்களை மட்டுபடுத்தும் கலை உன்னிடமில்லை”
வண்டு சொன்னது எதையும் காதில் வாங்காமல் நான் என் வேலையைத் தொடர்ந்தேன். என்ன தான் தலையால் நடந்தாலும் கைலாசம் இருக்கும் இடத்தில் தானே இருக்கும். வண்டின் வாயைத் திறக்க சங்கேத எண்ணை யாரும் கண்டு பிடித்து விட்டால்? சரி அதை இன்னும் கடினமானதாக மாற்றினேன். ஒவ்வொரு முறை உள்ளீடு செய்த பின்னும் சங்கேத எண் மாறிக் கொள்ளும் விதத்தில் மென்பொருளை வடிவமைத்தேன். மேலும் இது எப்படியெல்லாம் பாதுகாப்பானது என்ற விளக்கங்களை எல்லாம் தெளிவாகக் குழுவில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி வைத்தேன். மேலும் இத்தனை அடுக்கு பாதுகாப்பை உடைத்து வண்டின் விஷப்பல்லை நெருக்குவது அசாத்தியமானது. அது மட்டுமல்லாமல் இந்தச் சின்ன சிக்கல் பொருட்டு களத்தில் யாரும் அதன் வாயைத் திறக்க நினைக்க மாட்டார்கள். அப்படியே நினைத்தாலும் அவ்வளவு எளிதாக வண்டின் வாயை யாரும் திறக்க முடியாது. மேலும் அதன் எந்த பல்லில் எந்த பகுதியில் விஷம் உண்டு என்பதை ஆராய முடியாது. அதற்கு தனது வாய்க்குள் ஏதோ ஆராய்ச்சி நடக்கிறது என்ற தகவல் நமக்கு வந்து விடும் என்று சட்ட நுணுங்கங்கள் போல எழுதி வைத்துக் கொண்டேன். எப்போது வண்டு மட்டுமல்ல நானும் யாரையும் சமாளிக்கத் தயாராகி விட்டேன். வண்டு என்னைப் பார்த்து சிரித்தது. நான் சொன்னேன் வண்டே என் பொன் வண்டே வாயை மூடி சிரி அல்லேல் நான் உன்னால் மாட்டிக் கொள்வேன். பிறகு உனக்கு வாய்ப்பூட்டு ஒன்றை தயாரிக்க நான் தான் மறுபடியும் தலையை வெட்டி என் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றேன். அதுவும் புரிந்தது போல தலையாட்டியது.
***
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com


