மடி திரும்பல்
நெடிந்துயர்ந்த மா மலை ஏற்றம் போல்தான் இருக்கிறது
ஒரு குழந்தை நம்மேல் உறங்குவதற்கு
மடியில் கிடத்தப்படுகையில் (கவனம்… கவனம்… தொடையசைவுகள் அக்குழந்தை துயில் கலைந்து எழுவதற்கல்ல)
சிகர உச்சிப்பயண முடிவில் அங்கங்கள் அனைத்திலிருந்தும்
கொட்டும் வியர்வைத்துளிகளை ஆதுரமாய் வருடும்
காற்றைப் போன்றதுதான்
அக்குழந்தையை அவளம்மை திரும்ப வாங்கிக் கொள்கையில்
*
நகத்தின் இறுதி வரை குருதி பெருக்கெடுக்கும் வரை
கோதி முடிக்கிறது இப்பற்கள் ஆழ்ந்த யோசனைக்கு பிறகான
முடிவு தருணங்கள்
சொட்டும் சிகப்புநிற நீர்மத்தை வெறித்து பார்த்தபடியும்;
சாட்சியற்ற மனோபாவத்தை சபித்தபடியும்
மின்கம்பியை மிதித்த வினாடியாய்
தீர்வு கண்ட குறுநகையோடு
மின்னல் பளீரிடும் சொடக்காய் அதை முழுமுற்றாய் கைவிடுதல்
எவ்வளவு பெரிய வரம்?
*
ஒரு கலைத்துப் போடப்பட்ட சொல்லின் தொடர்
காற்றில் எதையெதையோ
எழுதிச் செல்கிறது
கவிழ்த்து போடப்பட்ட கரப்பான் பூச்சியாய்
அப்பெண்மணி ஜன்னலோரம்
வைக்கப்பட்ட தம் கைப்பையை எடுக்க
தன் பெரும் பிருஷ்டத்தை
அசைத்தசைத்து விரற்கணுக்கள் அளவில் கொஞ்சமாய்ப் பற்றி
வெளியிழுத்து வெற்றிப் பெருமிதத்தோடு
பெருமூச்செறிவதெல்லாம் உங்களுக்கு அசெளகர்யமாய்
தோன்றாமல்
இருப்பதுதான் இங்கு ஆச்சர்யம்
*
மரணித்தலின் கலை எனப்படும் மீட்சி
உருள்வதும் உருட்டப்பெறுவதும்
வெவ்வேறல்ல என்கையில்
உணர்வதும் உணர்த்தப்பெறுவதும்
ஒன்றாகக் துலங்க ஆரம்பிக்கும் கணம்
பிற்பகலின் நினைவுகள் கண்ணடியின் பிரதிபலிப்பாய்
புங்கன் மரத்தின் நிழலில் இருந்தவாறும்
குன்றின் சிகரத்தில் உறைந்த
நிலவின் பௌர்ணமியின் பூரணத்திலும்
முடிந்து விடாமலும் நமது பெயரின் இடை எழுத்திலேயே
நிற்கும் சப்தத்தில் எஞ்சி
நசுங்கி நிற்கிறது சொடக்கு இறப்பு
*
வரிசைக்கிரமம் தம் மூச்சின் எண்ணிக்கையை
ஆழ்ந்து கவனித்தபடி மனதை
ஒருமுகப்படுத்துகிறான்
எண்ணம் சிதறாவண்ணம்
அலையலையாய் பெருகும்
கற்பிதங்களின் கற்பனையை
நசுக்குவதாக சபதம் ஏற்கிறான்
இதோ.. இப்போது கடந்துவிடுமென
மெல்ல மெல்ல பூரகத்தை
கைவிட்டு ரேசிக்கத் துவங்குகிறான்
அங்கோ..
நரகல் நிரம்பி வழிந்தபடி நகராமல் நிறுத்தப் பெற்றிருக்கும்
நான்கு சக்கர வாகன ஓட்டுனன்
மெல்லிய இரும்புத்தகடு வேய்
கூரை கீழ் வாகாய் நின்றபடி
மட்டரகமான ஒன்றை
புகைத்துக் கொண்டிருக்கிறானே..
அவனிடம்தான்..
இரு கால்களில் ஒன்றை இழந்த
பிச்சைக்காரனொருவன்
இடம்விட்டு நகர இயலாமல்
யாசகம் செய்ய முனைகிறானென
அறிவித்துவிடு
*
வேறுபடுத்தி பிரித்துக் கொள்ளலில்
ஒன்று சுயம் மற்றொன்று இன்மை
இல்லாததில் ஏக்கம், ஆக்கத்தின் பால் இறைஞ்சுதல்;
தவறியும் தராமல் போன,
தந்ததில் திருப்தியுறாத;
கொடுவாள் கொண்ட காலதேவனின் முன்
முகமற்று இதழ்களற்ற உதடுகளைப் பிரித்து
ஈனஸ்வரத்தில் முனகும் உள் குரல் கேட்டாலென்ன? கேட்காவிடில் என்ன?
அவனுக்குத் தெரியும் வாள் வீசும்முன்
*
விரிந்து விரிந்து கருணை பரப்பிய
எல்லா மலர்களும் வீழ்ந்து வீழ்ந்தே இருப்பை
நிச்சயித்துக் கொள்கின்றன
இரத்தம் சிந்துதலை மறக்க வேண்டிய
பொதுவான தேவை குறித்து
சகலவகைகளிலும் ஒத்திருக்கும்
முரண்கூற்று வார்த்தைகள் பற்றி உளறலாம்
அல்லது ஒருவேளை எனது பைத்தியக்காரத்தனமான
நேர்கூற்று போல் த்வனிக்கக்கூடிய
அசாத்தியமானதொரு கலவை சொற்கூட்டங்களை
செவிமெடுக்கலாம்
ஆனாலும்
நாட்டுச் சேவலின் இரைப்பை பிரித்து
கல்லில் உரைத்து
உள்ளுக்குள் கொடுத்துப் பரவும்
யானைத்தீயின் சுவாலையாய் எரிக்கிறது
உன் மேல் யென் காமம் என்று
சொல்லிச் செல்கையில் மட்டும் ஆசுவாசமடைகிறது
எல்லாமும்
*
நிகரின் பெறுமான எடை
எவரது சரிகளையும் தேர்ந்து சீர்தூக்கி
மெல்மலரின் இதழ்களின் மேற்படியும்
தூசு முதலான அழுக்குகளாய் போர்த்தப்பட்டவைகளை
ஈரத்துணி கொண்டு வாஞ்சையாய் தடவிவிடும்
நளிர் நல்லாள் அவளின் அடர் இருட் கனவின்
புதைசேற்று நிலத்தில்
அவர்களுக்காய்
பொருத்தக் காலணியும் வழிவரைந்து விழிகாட்டவென்று
ஒளி ஊடுருவும் கண்ணாடி பொதிந்த மா விளக்கும்
மேலிருந்து வீசி எறிக
இறையே இப்போது
*
காலாற நடந்து மீன் பிடித்தல்
ஒற்றையடிப் பாதையில் கனவின் படலங்கள், மேற்பரப்பில் படியும் மகோன்னதம்;
விருப்பங்களை வரிசைக்கிரமமாக கேட்டறிந்து
ஆமாம் நானும் என ஒத்துப்பாடி மேலும் மேலும் முன்னேறி
இடையில் நிறுத்தி நேர் கண்கண்டு
முக இலாவண்யம் புகழ்ந்து
ஒரு முத்தத்திற்கான முத்தாய்ப்பு தருணம் எதிர்பார்த்து
இதழ் பூட்டித் திறந்த பின்
‘மீனும் பறவைகளும் எப்போதும் தடயங்களை
விட்டுச் செல்வதில்லை… உன்னிதழ் அழுந்திய தடம் போல்
கன்றிச் சிவப்பதில்லை காண்‘
எனச் சொல்லப்படுவதின் தாத்பர்யம் எதுவாக இருக்கக் கூடும்
*
சட்டகத்தின் இருப்பிடமும் குழைந்த சோற்றுப் பருக்கையும்
வெளிப்புறம் அரூபமொன்றுமில்லை
சுண்ணம் பூசியதாகவோ
வர்ணக்கலவை ஏற்றியதாகவோ;
அடுக்கு மாடியின் விசாலமான அறையாகவோ
கீழ்தளத்தின் ஒடுங்கிய அறையிலோ;
கணிசமான பார்வையாளர்களாலோ
தேர்ந்தெடுத்த விமர்சகர்களாலோ;
முன்கூட்டியே வந்தவர்களாலோ
தாமதமாக வந்து சேர்ந்தவர்களினாலோ;
மிகச் சாதாரண மரத்தில் செய்யப்பட்ட சட்டகத்தாலோ
தேவதரு, தேக்கால் ஆக்கப்பட்ட அடைப்புக்குள்ளோ;
உள்ளே பூசப்பட்ட முதல் வண்ணம் காணாமலோ
இறுதி வர்ணம் துலங்குதலாலோ;
காலை கடற்கரைக் காட்சியாலோ
மாலை மலை ஓரஞ்சரியும் சூரியனாலோ;
அடர் வனங்களாலோ
நீர் பசையற்ற வறண்ட பாலைகளாலோ;
யுவதிகளின் அழகு பெருத்தவைகளாலோ
சிறுவர்களின் குறும்புகளினாலோ;
குளிர்நீர்ச் சொட்டும் பழங்களாலோ
விதவிதமான மலர்களினாலோ;
கற்பனை மிருகங்களாலோ
வினோத பறவைகளினாலோ;
தன்னோவியப் படங்களாலோ
நிலக் காட்சிகளாலோ;
கருப்பு வெள்ளையாலோ
அடர் வெவ்வேறுவித நிறங்களாலோ;
போர்க்களக் காட்சிகளாலோ
ஏகாந்த நிலைப் பதிவுகளினாலோ;
சில ஓவியங்கள் உங்களது பார்வைக்குப் பட்டு
விழிகளைத் துளைத்து பின்மண்டை வழியே
வெளியேறி விடத்தான் துடிக்கிறது
ஆயின் நீங்கள் மூளையில் ஏற்றி அசை போட்டவாறே
கனவில் நடப்பதே போல் அவ்வோவியம்
இறுமாந்து கிடப்பதும் நிகழ்கிறது
அதன் மூலங்கொள்ளும் பீதியை மறைக்கவும்
வாயிலெடுக்கும் உணர்வை சட்டென வடிக்கவும்;
கழிப்பறைக் கதவை தேடி ஓடும் வடிவக்கூறுகள்
அங்குமிங்கும் மிதந்து கொண்டிருப்பதனால்தான்
அதைப் பற்றிய விவாதங்களுக்கும்
குறைவில்லாமலிருக்கிறது
***
வேதநாயக் – தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: [email protected]