ஸ்டாலின் சரவணன்
கிருஷ்ணசந்தர் ராஜஸ்தானில் பிறந்து ஜம்மு-காஷ்மீரில் வளர்ந்தவர். உருது மற்றும் இந்தியில் எழுதியவர். இவருடைய 14 கதைகள் அடங்கிய தொகுப்பை எழுத்தாளர் ராணி திலக், எழுத்து பிரசுரத்தில் “கிருஷ்ண சந்தர் கதைகள்” என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். சக்தி, தீபம், நம்பிக்கை நட்சத்திரம் (கதைத் தொகுதி), உர்தூக் கதைகள் (கதைத்தொகுதி) ஆகிய சிற்றிதழ்கள், தொகுப்புகளிலிருந்து இந்தக் கதைகளை ராணிதிலக் தொகுத்துள்ளார்.
இத்தொகுப்பு அச்சில் வருவதற்கு முன்பே கிருஷ்ண சந்தர் கதைகள் குறித்து ராணிதிலக் என்னிடம் பகிர்ந்திருந்தார். அந்த ஆர்வத்தில் முதல் கதையாக “புதுச்சட்டை” என்ற கதையை வாசிக்கத் தொடங்கினேன். பனிப்படலமிக்க ஒரு நிலக்காட்சியை அறிமுகம் செய்து கதை தொடங்கும். பேகமாவின் பால்ய தோழன் குல்ஹமிதுதான் கணவன். மலையடிவாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் அவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவள் காதல் மிகுந்து சட்டென அவனைப் பார்க்கக் கிளம்பிவிடுவாள். குன்றின் மேல் இருந்து அவனைச் சந்திக்க அடிவாரத்து வயலுக்குச் செல்லும் பயணத்தில் கதை நகர்ந்து, சந்திந்தபின் அவர்களின் காதல் விளையாட்டோடு கதை சென்று கொண்டிருக்கும். அப்போது அங்கு வரும் தையல்காரர் கொண்டு வரும் பேகத்தின் புதுச்சட்டை அணிவதில் கதை வந்து நிற்கும். துள்ளலும் காதலும் திகட்டாமல் நிரம்பி வழியும் கதை முடியும்போது மனம் அதிர்ந்துவிடும். அதை வாசித்துப் பல நாட்களான பின்பும் அக்கதையில் இருந்து வெளியேற முடியவில்லை.
கிருஷ்ணசந்தர் ஒரு முற்போக்கு எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பு உருவாக்கக் காரணமாக இருந்து, இயங்கி உள்ளார். அவரின் இடதுசாரி மனநிலை “அணைந்த சுவாலை” கதையில் உள்ளார்ந்து வெளிப்பட்டு இருக்கும். தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க முதலாளி செய்யும் கொலைகளுக்குக் கையாளாக இயங்கும் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கும். கொலைகள் புரிய புரிய அவனுக்குள் நிகழும் மாற்றங்களுக்குட்பட்டு உண்மையை நோக்கி அவன் நகருவான். தான் முதலாளியின் பழைய அடிமைதான். ஆனால் காலமாற்றத்தில் தொழிலாளிகள் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். நவீனப் பாட்டாளியின் முகத்தை அவர்களிடம் தான் காண்பதாக முதலாளியிடம் கதையில் அடியாள் கூறுவான். முதலாளியிடம் காலத்தை உணர்த்த அவனது அடியாளையே கிருஷ்ண சந்தர் தேர்வு செய்ததும் கூட தெளிவான அரசியல் பார்வைதான். கதையில் ஒரு இடத்தில் படம் வரைந்து கொண்டிருக்கும் தோன்டு மேஸ்திரியின் மகனிடம் அடியாள் கேட்பான், இப்படத்தில் சன்னல் இருக்கிறது. வீடு இல்லையே என்று. வீடும் நிர்மாணிக்கப்பட்டுவிடும் என்று அவன் பதில் கூறுவான். பாட்டாளிகளுக்கான குரலை நவீன மொழிக்குச் சமரசம் இல்லாமல் பேசுவதுதான் கிருஷ்ண சந்தரின் தனித்துவம்.
காதல், வாழ்வின் மீதான தத்துவ விசாரணை, மனிதன் மீது உளவியலாகத் தொடுக்கும் பசியின் பாதிப்புகள், நோய்மையைக் கண்டு மனிதன் ஓடி ஒளியாமல் அதனை ஏற்றுக் கொள்ள பணிப்பது எனக் கதைகள் பலவற்றையும் பேசுகிறது. வாழ்வை எள்ளலோடு சொல்வதும் சிறப்பாக அமைந்துள்ளது. புதிய சிந்தனைகளும், புத்துணர்ச்சியும் கதைகள்தோறும் உள்ளன. அவரின் எழுத்து நடை ஆற்றொழுக்குடன் கூடிய வேகம் கொண்டிருக்கின்றன. வாசிக்கும்போது அதன் அலைகளுக்குள் ஆட்பட்டு அலைதல் சுகத்தைத் தருகிறது.
“நாற்சந்தி கிணறு” என்ற கதையைக் கட்டமைத்து இருப்பதே புதிதாக இருக்கும். நோய்வாய்பட்ட குழந்தையை உயிர்பிக்க வழிதேடி செல்லும் ஒருவன் சந்திக்கும் அனுபவங்கள் அலாதியானவை. கிணற்றுக்குள் விழுந்த பழைய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து உரியவர்களைக் கேட்டு ஒப்படைக்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை வரும். ஒரு பொருள் காதலைக் கொண்டு சகதிக்குள் அத்தனை ஆண்டுகள் கிடந்திருக்கும். இன்னுமொரு பொருள் பழிவாங்கிய களைப்பில் சாட்சியின்றி ஒளிந்திருக்கும். ஒரு பொருள் சுமந்த துயரத்தை ஊரே மறக்க இயலாத ஒன்றாக இருக்கும்.
மலைக்கன்னி, பெளர்ணமி நிலவிலே, திலீப்குமாரின் நாவிதன், குப்பை சாமியார் போன்ற கதைகள் உணர்வின் எல்லைக்குள் நின்று செழுமையான மொழியோடு புதிய களங்களோடு உள்ள கதைகள். பெளர்ணமி நிலவிலே கதையில் வரும் நிலமும் காட்சியும், அமைதியான தொனியில் அணுகும் வாழ்வின் சூட்சமங்களும் புதிதினும் புதிது. சந்தரிடம் இருக்கும் எள்ளல்மொழி திலீப்குமாரின் நாவிதன் கதையில் வசனமும் பொருத்தமான காட்சியோடு வெளிப்பட்டபிருக்கும். குப்பைச் சாமியார் கதை, நோயின் குறுக்கீட்டால் அலைவுறும் ஒருவனைப் பற்றிப் பேசுகிறது. இக்கதையில் வரும் துலாரி என்னும் மனைவி பாத்திரம் எடுக்கும் முடிவைக் கையாண்டிருப்பதும் அவர் பக்க நியாயத்தைக் கணவன் ஏற்றுக் கொள்வதும் கதையில் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஒருவன் வாழ்வதற்கு அர்த்தமுள்ள பிடிப்புக்காகக் காத்திருக்கிறான். இதுபோல் பலதரப்பட்ட மனிதர்களை முன்வைத்து கதைகள் வாழ்வை விசாரிக்கின்றன.
இப்பொதுவானவைகளைத் தாண்டி கிருஷ்ண சந்தர் அரசியல் சம்பவங்கள், தலைவர்கள், இதிகாசப் பாத்திரங்களை உடைத்து காலத்திற்கேற்ப சில மீட்டுருவாக்கங்களை நவீன வாழ்வோடு பொருத்தி எழுதியுள்ளார்.
சிலை விழிக்கிறது, பாலகங்காதிர திலகர், தாதாபாய் நெளரோஜி, கோகலே சிலைகளோடு சுதந்திரப் போராட்டத்தில், தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு இழப்புகளைச் சந்தித்து வரலாற்றில் அறியப்படாத மனிதர்களின் அரூபங்கள் உரையாடுவது போல் அமைந்த கதை. தலைவர்கள் மட்டுமல்ல, எண்ணற்றோர் செய்து பெற்றதே இச்சுதந்திரம் என்று சுதந்திர தின விழா மேடைகளில் நாம் பேசியிருப்போம். அந்த எண்ணற்றவர்களில் இருந்து உயிர்பெற்று வரும் கேள்விகள் எளிய மக்கள் எல்லோருக்குமானதே. அவர்களின் இழப்புக்குக் கணக்கு தீர்க்கப்படாமலே காலத்தில் உள்ளது. தலைவர்களின் சிலைகள் இந்த எளிய மனித மீட்டுருவாக்கங்களின் கேள்விகளைக் கண்டு பதட்டமடைகின்றன. கோபம் கொள்கின்றன. பதிலற்றபோது வரும் ஆத்திரங்கள் இவை. சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, நாடும் தலைவர்களும் முதலாளிகளின் கைப்பாவைகளே என்பதைதான் கதை, காலத்தால் உறுதிபடுத்துகிறது. 1953 இல் எழுதப்பட்ட இக்கதையின் அரசியல் கூறுமிக்க நாட்டு நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை. அந்தக் கேள்விகள் இன்னும் உயிர்ப்போடு உள்ளன என்பதும் கடந்து போகும் ஒன்றல்ல.
நாட்டின் அரசியல் சூழலை ஒரு கதையில் அசாத்தியமான கற்பனையால் தலைவர்களின் சிலைகளின் வழி கேள்விக்குட்படுத்துகிறார். மனிதனின் மகத்தான காதல் உணர்ச்சியால் ஷேக்ஸ்பியர் உருவாக்கிய பாத்திரங்களான ரோமியோ-ஜூலியட், காலத்தால் வாழும் லைலா-மஜ்னு, ஹீர்-ரான்சா ஆகிய புனித பிம்பங்களை உடைக்கிறார். அலைகள் ஓய்வதில்லை படம் வந்த போது, கடைசி காட்சியில் கார்த்திக்-ராதா ஜோடி பூணூலையும், சிலுவையையும் அறுத்து எறிந்துவிட்டு ஓடுவது போல் பாரதிராஜா வைத்திருப்பார். பார்வையாளர்கள் இதனை விளையாட்டாகக் கேலி செய்வார்கள், அதன் பிறகு வாழ்க்கை தரும் நெருக்கடியில் காதலர்கள் என்னாவார்கள் என்று இயக்குநர் காட்டவில்லை என்று.
அதே போல் நாம் காதலின் உன்னத உதாரணங்களாகக் குறிப்பிடும் மூன்று ஜோடிகளின் பிறகான வாழ்வைக் கற்பனையால் “காதலுக்குப் பிறகு” கதையில் மிகுந்த எள்ளலோடு கிருஷ்ண சந்தர் எழுதியிருப்பார்.
லைலாவும் மஜ்னுவும் வறுமைக்கு ஆட்பட்டு, சாதாரண வாழ்க்கைக்குக் கடன்பட்டு அல்லலுறும்போது காதல் காணாது போய் இருக்கும். மாமியார்-மருமகள் சண்டை வரும். ஒரு மூலையில் லைலா அடுப்பில் ஈரமான விறகுகளை எரிக்க முயற்சிக்கும் காட்சி வரும். வேலை கிடைக்காத கோபத்தில் மஜ்னு லைலாவோடு கத்தி சண்டையிடுவான். இன்னொரு பக்கம் ரோமியோ-ஜூலியட் ஜோடிக்குள் வரும் விலக்கத்தையும் கதை நாடக வடிவில் பேசி இருக்கும். விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடுவார்கள். மது அருந்திவிட்டு இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வரும் ரோமியோ விடும் குறட்டையில் இரண்டாயிரம் குதிரைகள் ஒன்றாகக் கத்துவது போல் இருப்பதாக லைலா புகார் தெரிவிப்பாள். வில்லியம் ஷேக்ஸ்பியர் அமரத்துவமடைய செய்த காதல் ஜோடியை நிதர்சன வாழ்வுக்குள் தள்ளிக் காதலின் பெயரால் கட்டப்பட்ட புனிதத்தைப் புனைவால் உடைத்திருப்பார் கிருஷ்ண சந்தர். ரோமியோ கொடுத்த விஷத்தில் போலியாக்கி, ஜூலியட் பாய்ச்சிக்கொண்ட கத்தியை இதயத்தில் இருந்து விலக்கி விலா எழும்புக்குள் பாய வைத்து உயிர்ப்பித்துச் சந்தர் இக்கதையை எழுதியிருப்பதை வாசிப்பது தனி அனுபவம். எழுத்தாளனுக்கு இருக்கும் சுதந்திரத்தை இக்கதை உறுதிபடுத்துகிறது. வரலாற்றின் பாதையில் அடி ஒற்றி நடக்க வேண்டிய அவசியம் புனைவு எழுத்தாளனுக்கு இல்லை. அவன் நினைக்கும் பாதைகளில் வரலாற்றுப் பாத்திரங்களை அழைத்துச் செல்லும் துணிச்சலை இதுபோன்ற கதைகள் வழிகாட்டுகின்றன.
பெஷாவர் எக்ஸ்பிரஸ் கதை மிக முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டி எழுதியிருப்பார். ரயில் உயிரோடு கவனித்து எழுதியது போல் அமைந்திருக்கும். ரயிலின் பார்வையில் இந்து-இஸ்லாமியர் என்பதை தாண்டி மனிதனாக அவர்களின் குரூரங்களைக் கதை வெளிப்படுத்தி இருக்கும். பாகிஸ்தானில் உயிருக்குப் பயந்து வன்முறைகளைச் சந்தித்து வெளியேறும் இந்துக்கள், இந்திய எல்லைக்குள் வந்ததும் இஸ்லாமியர்களுக்குத் தரும் பதில் வன்முறைகளை அப்படியே எந்த மனச்சாய்வுமின்றித் தந்திருப்பார். ரயிலுக்குள் குடித்துவிட்டு மகாத்மாகாந்தியைப் புகழ்ந்து கோஷம் இடுவார்கள். ‘மரத்தால் செய்த ரயில் வண்டிதான் நான். ஆனால் வெறுப்புணர்ச்சியை விரும்பவில்லை’, என்று ரயில் ஒரு இடத்தில் குறிப்பிடும். ஒரு முஸ்லிம் துணைக் காவல் அதிகாரியைக் குடும்பத்தோடு எரிப்பார்கள். அதில் இளம்பெண்ணொருத்தி இருப்பாள். அவள் அறிவாளியாக, நாட்டுக்குச் சேவை செய்பவளாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் அவள் கொல்லப்படுவாள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இந்து குடும்பங்களும் கொல்லப்படுவார்கள். இக்கதையை அவர் அந்நிலத்தில் இருந்து சந்தர் எழுதி இருப்பார்.
கிருஷ்ண சந்தர் வரலாற்றைப் புனைவாகமாற்றும்போது, அரசியல் சரிநிலையோடு இருந்துள்ளார் என்பதைப் பல கதைகள் உணர்த்துகின்றன. பெஷாவர் எக்ஸ்பிரஸ் கதையை முடிக்கும்போது, ‘மனிதர்களாக இவர்கள் மதம் கடந்து இணைய வேண்டும்’ என்பதோடு விவசாயிகளாக, தொழிலாளர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்று அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார். விவசாயிகளாக, தொழிலாளர்கள் என்பவர்கள் மதம் போன்ற வேற்றுமைகள் கடந்தவர்கள். அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து நிற்பது காலத்தின் தேவை.

1950 களில் எழுதப்பட தொடங்கிய இக்கதைகள் இப்போதும் புத்துணர்வு இழக்காமல் உள்ளன. இக்கதைகளின் உண்மைக்கு நெருக்கமான பண்புகள் முக்கியமானவை. வரலாற்றைச் சேர்த்து எழுதியபோது உள்ள சமூக, அரசியல் சிக்கல்கள் இப்போதுவரை நீடித்து வருவது காலத்தின் சாபம். இப்போது தலை தூக்கி ஆண்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான புள்ளிகளை இக்கதைகள் சமரசமின்றித் தொட்டுப் பேசி உள்ளன.
சமகால அரசியலைக் கதைகள் பேசுவதன் அவசியத்தைச் சந்தர் கதைகள் வலியுறுத்துகின்றன. கலைத்தூய்மையை மட்டுமே பேசுவோம் என்று சத்தியம் செய்து விட்டவர்கள், அதனைப் பரிசீலனை செய்யலாம். சந்தரின் அரசியல் கதைகள் இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளன. புனிதம் என்று அவர் எதனையும் கண்டு மருளவில்லை. மொழியின் துணைகொண்டு அவற்றைக் கேள்விகேட்டு உள்ளார்.
இந்தியக் கதை மரபில் கிருஷ்ண சந்தர் தவிர்க்க இயலாத ஆளுமை. அவரைத் தேடி வாசிப்பது அவசியம். உணர்வின் கதகதப்பு குறையாமல் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் தரும் வாசிப்பனுபவமும் உள்ளத்து நெருக்கடியும் விவரிக்க இயலாதது. மண்டோவின் காலத்தில் இஸ்மத் சுக்தாய் போன்றோரோடு இயங்கியவரின் கதைகளை கவனப்படுத்திய ராணிதிலக்கும், எழுத்துப் பிரசுரத்திற்கும் பாரட்டுக்குரியவர்கள். சிற்றிதழ்களில் சந்தரின் கதைகளை மொழிபெயர்த்த அசோகன், முக்தார், ரா. வீழிநாதன் போன்றோரையும் சிறுபத்திரிக்கை மரபையும் நன்றியோடு நினைவில் கொள்ள வேண்டும்.
கலையையும் சமகால அரசியலையும் நேர்த்தியான மொழியோடு கைகொண்ட கிருஷ்ண சந்தர், எழுத்தில் தனித்துவதையும் பொறுப்புணர்வையும் விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமானவர்.
***
ஸ்டாலின் சரவணன் : தமிழ்க்கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கியச் செயற்பாட்டாளர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “2000 க்குப் பிறகான இந்திய சினிமாவில் பெண்களின் வாழ்வியல்” என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். தேவதைகளின் வீடு, ஆரஞ்சு மணக்கும் பசி, ரொட்டிகளை விளைவிப்பவன் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : stalinsaravanan@gmail.com


