சுஷில் குமார்
ஓவியம் : சீராளன் ஜெயந்தன்
“ஏன்டா, சாப்பாடு ருசியா இல்லன்னா டா ஊர விட்டு ஓடி வந்த?” முதலாளி கேட்டபோது சட்டெனப் பொங்கி வந்த கோவத்தை மறைத்தபடி நின்றான் நாராயணன். சுற்றி நின்ற மற்ற வேலையாட்கள் கை கொட்டிச் சிரித்ததைப் பொருட்படுத்தாமல் பாத்திரம் கழுவ தண்ணீர் குழாயைத் திறந்து விட்டான். அதன் இரைச்சல் சத்தத்தினூடே காதுகளை இறுக்க பொத்திக்கொண்டதைப் போல பாவனை செய்தான்.
“அட, என்னாக் கோவம் வருகு மயித்தானுக்கு! சோத்துக்கு வழி இல்லன்னாலும் சூடும் சொரணையும் ஒருவாடு உண்டும், என்னடே?” நெருங்கி வந்த முதலாளியை மீண்டும் அவமதிக்க மனம் கொள்ளாமல் எழுந்து நின்றான் நாராயணன்.
“மரியாத மயிரெல்லாம் ஒன்னும் வேண்டாம் கேட்டியா? அவவன் குனிஞ்சு குனிஞ்சே கொதவளையக் கடிக்க நிக்கானுவோ. நீ கொள்ளாம் டே. செரி, சொல்லு, கேப்பம். சாப்பாட்டுல ருசி இல்லன்னுலா ஓடி வந்தியான், உள்ளது தானா புள்ளோ?”
என்னதான் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் பெருகி வந்தாலும், வாழ்க்கை கொடுத்த மனிதன் முன் திமிறி நிற்க முடியாமல் மெல்லத் தலையாட்டினான் நாராயணன். கண்கள் நீர் நிறைந்து நின்றன.
“அட பயலே, என்னத்துக்கு இப்போ?…. செரி, விடு. விடு… ஒனக்கு எப்போ தோணுதோ, அப்போ சொல்லு, கேட்டுக்கறேன், என்ன? கோம்பப்பய, ஆம்புளப் புள்ள அழலாமா டே? நாங்கல்லாம் என்ன குடும்பத்தோட ஒட்டியா கெடக்கோம். நா ஓடி வந்தப்போ எனக்கு பன்னெண்டு வயசாக்கும், தெரியுமால? பின்ன, நமக்குன்னு வந்து சேரதுதான் குடும்பம். போ, போ.. செனம் கழுவிக் கமத்து.. மாஸ்டர் இப்போ வருவாரு.. ரெண்டு மூணு டிபன் ஆர்டர் உண்டும்..”
சரியெனத் தலையாட்டியவன் தேங்காய் சவுரியுடன் புளியும் உப்பும் சேர்த்து கரி பிடித்த போணிகளை அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தான்.
“பெரிய மவராசன் வீட்டுப் பிள்ளல்லா இவரு. ஊத்ததக் குடிச்சிட்டுப் போனும் பாத்துக்கோ. குண்டிக்குத் துணி இல்ல, வாய்க்கு மட்டும் வக்கணையா கேக்குது, என்ன? பிச்சக்காரப் பயல. ஒங்கப்பன் ஊருக்கு ஒழச்சிட்டே இருப்பான். நா பெத்துப் போட்ட எல்லாத்துக்கும் பீத்துணி கழுவிட்டே கெடக்கேன். இதுல வக்கண மயிரு, வக்கண, ராஸ்கல். சத்தங்காட்டாம தின்னுட்டுக் கெடக்கணும். மீச மொளச்சி ரெண்டு நாள் சம்பாதிச்சிட்டா பெரிய ஆம்பளைன்னு நெனப்போ? ஒட்ட நறுக்கிருவேன்.. அவனுக்க மொறப்பும் மயிரும்..” அம்மா கத்திக் கொண்டிருந்தபோது உப்போ புளிப்போ அற்ற சோற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணன். ஒருநாளும் உப்பு, புளிப்பு எதுவும் இருந்ததில்லை தான். ஏனென்று எவ்வளவு யோசித்தாலும் பதிலில்லை. அம்மாவும் அதைத்தான் சாப்பிடுகிறாள். ஒரு நாள் கூட அவள் பசித்தோ ஆர்வத்தோடோ சாப்பிட்டுப் பார்த்ததில்லையே!
அப்பாவுடன் கல்யாண வீடுகளுக்குச் செல்வதற்காக ஏங்கிக் காத்திருப்பான் நாராயணன். ஏழு கறியா? ஒன்பது கறியா? பருப்புப் பாயாசமா, அடைப் பிரதமனா? என்று பலத்த யோசனையாக இருக்கும். நேந்திரம்பழ பாயாசம் வைக்கும் வசதியான திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலி ஃப்ளவரையோ அல்லது சேனைக் கிழங்கையோ சிக்கன் பொரிப்பு மாதிரியே எப்படித்தான் செய்கிறார்களோ என்று வியந்து சாப்பிடுவான். அப்பாவும் கல்யாணப் பந்தியில் அவன் செய்வதையெல்லாம் ரசித்துப் பார்த்திருப்பார். தலை வாழை இலையாகக் கேட்பான். சிறு கைக் குழிவில் நீரேந்தித் தெளித்து இடம் வலம், வலம் இடமாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவான்.
“மாப்ளேய், சோப்பு வேணுமா?” என்று கண்ணடித்துக் கேட்பார் மணி மாமா. அவரது கைப்பக்குவம் தான் நாஞ்சில் முழுதும். ‘மணி மாமா மாதிரி மாஸ்டர் ஆகணும்’ என்று லட்சியம் வேறு.
“பொட்டப்புள்ள மாதில்லா அடுக்களய சுத்திச் சுத்தி வாரான். மூக்க வெட்டித் தூரப் போட்டா செரி ஆயிரும். வாசம் புடிச்சிட்டு சுத்துது சவம்,” என்று விரட்டுவாள் அம்மா. “மாஸ்டர் ஆவனுமாம் மாஸ்டர். அப்பன் கிழிச்ச கிழி போறாதுன்னு நல்ல மவன் வந்து சேந்துருக்கான். அந்த மணிய பாத்துட்டும். பயலுக்க கூட என்ன சேர்க்கன்னு கேக்கேன்.”
வாழையிலையின் நிறம் பார்த்துக் கூட சில சமயம் முகம் சிறுத்து விடுவான் நாராயணன். அப்பாவை நோண்ட, “எப்போ, பயலுக்க எலய ஒன்னு மாத்திக் குடுப்போ,” என்று சமாதானப்படுத்துவார் அப்பா.
இலையின் இடது ஓரத்தில் சிறு பொட்டென பொடி உப்பு, அதன் அருகே வாழைக்காய் துவட்டல், நேந்திரம் பழ வத்தல் இருந்தால் இவை இரண்டிற்கும் இடையே இரண்டோ மூன்றோ, சில பந்திகளில் நேந்திரம்பழ உப்பேரியும் உண்டு, பின் இடமிருந்து வலமாக தயிர்ப் பச்சடி, இஞ்சிப் பச்சடி, நார்த்தங்காய்ப் பச்சடி, மாங்காக்கோசு என்று சென்று இலையின் வலது பகுதியில் சிறு குன்றென அவியல். ஏற்கெனவே வைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் விரல் தொட்டு நக்கிப் பார்த்து அப்பாவைப் பார்த்துத் தலையாட்டுவான்.
“சாப்புடு மக்ளே, நல்லா சாப்புடு..” என்று சிரிப்பார் அப்பா.
அவியல் வைத்ததும் அடுத்து வருவது என்னவென ஆர்வமாய்ப் பார்ப்பான். சேனைக் கிழங்கு எரிசேரி பக்கத்துப் பந்தியில் வந்தாலே தெரிந்து விடும். நாராயணன் முகமும் அப்படி சொலிக்க ஆரம்பிக்கும். இல்லை, உருளைக் கிழங்கு மசாலா என்றால் ஒரு பெருமூச்சு விட்டு, ‘சரி, என்ன செய்ய’ என்பதைப் போல பார்ப்பான். அதுவும் சுடு சோறு இலையில் கொட்டப்படும் வரையில்தான். இரண்டு பங்குகளாகப் பிரித்து, ஓரம் கரிந்த அல்லது சரியாகப் பொரியாத பப்படம் வந்துவிடக் கூடாதே என வேண்டியிருப்பான். பப்படத்தைப் பொடிக்கும் ஓசையில் அவனையறியாமல் சிலிர்த்துக்கொள்வான். பருப்பு விட்டு அதன் நடுவே குழிவில் வாழையிலைத் தண்டிலிருந்து வடியும் நெய்யோடு சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையாக உருட்டி வாய்க்குள் திணித்ததும் கண்களில் நீர் நிரம்பி விடும்.
“பிள்ள கொள்ளாம் அண்ணாச்சி, பாயாசத்துக்கு நார்த்தங்கா பச்சடியும் அவியலும்லா கேக்கான்!”
“கண்ணு வைக்காதீரும் ஓய்! மருமவன அப்பிடியாக்கும் வளக்கேன்.”
ஒரு நாள் விளம்பத் தெரியாத யாரோ மாற்றி மாற்றி விளம்பிவிட, சாப்பிட்ட திருப்தி இல்லாமல் தலைவலியே பிடித்துக் கொண்டதாய் அவன் சொன்னதைக் கேட்டு வீடே சிரித்தது. அம்மா மட்டும் ஏனோ சிரிப்பதேயில்லை.
கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவனைச் சாக்காக வைத்து அப்பாவைத் திட்டுவாள் அம்மா. அவளது அழகும், மகிழ்ச்சியும் இங்கு வந்த பிறகு இல்லாமல் ஆகிவிட்டதென திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பாள். அடுக்களைக்குள் அவள் இருக்கும்போதெல்லாம் ஒரே எரிச்சல்தான். தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டேதான் சமைப்பாள். பாத்திரங்கள் உருளும். கரிந்த வாடை வரும். கடுகிற்குப் பதிலாக வெந்தயத்தைப் போட்டு தாளிப்பாள். உருளைக் கிழங்கைத் தோலோடு அப்படியே பெரிய பெரிய துண்டுகளாகப் போடுவாள். சேனை என்றால் தொண்டையைப் பிடித்துக்கொண்டு ஓடுவான் நாராயணன். முட்டைப் பொரியலில் எப்போதும் முட்டை ஓடு கண்டுபிடித்துப் பொறுக்கி வைத்து விளையாடுவான். அவியல் என்றால் நறுக், நறுக், பொரியல் என்றாலே தீய்ந்து போனது என்றுதான் அக்குடும்பத்து சிறுசுகளுக்குப் பழக்கம்.
“என்ன மாப்ள, இந்தா தேய் தேய்க்க? பாத்து டே, பக்கத்துக் கடைக்கு ஓட்ட போட்டுட்டுப் போய்ராத,” என்று நாராயணனின் தோளில் தட்டிச் சிரித்தான் குட்டிமணி.
“என்ன, மொதலாளி கேட்டதுக்கு கடுப்பாய்ட்டியா மக்ளே?”
இல்லையெனத் தலையாட்டிவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
“அது, சும்மா எதுக்கோ உம் பேச்சு வந்தா, அப்போ மொதலாளி தான் உன்னப் பத்தி பெருமையாப் பேசுனாரு. கெட்டிக்காரனாம். சொன்ன வேலையும், சொல்லாத வேலையும் சேத்துப் போட்டு செய்வியாம். நம்ம பயலுவளுக்கு ஒருத்தனப் பத்தி நல்லதா ஏதும் சொன்னா பொறுக்காதுல்லா! அதான் போட்டுக் குடுத்துட்டானுவோ, அதுக்கென்னா இப்போ, மொதலாளி மொதல்ல சிரிச்சாரு. பொறவு ஆள் அமைதியா நின்னு தலையாட்டிட்டே ஏதோ யோசிச்சாரு. அவரு பாக்காததா என்ன? இன்னிக்கி நீ மாட்டிக்கிட்டயா, மனசுல வைக்காம கேட்டுட்டாரு மக்ளே. நீ ஒன்னும் நெனைக்காத என்ன?”
குட்டிமணி சொல்லச் சொல்ல கழுவிய ஒவ்வொரு பாத்திரமாகப் பளபளத்து வந்தது. அடுப்பங்கரையில் ஊதுபத்தி மணம். மாஸ்டர் வந்திருக்க வேண்டும்.. சட்டென எழுந்தவன் குட்டிமணியைப் பார்த்து சைகை காட்டிவிட்டு அடுப்பங்கரைக்குள் ஓடினான்.
“வாடே, வா. என்ன, செரியான தீவனமோ? கொடவண்டி முன்னாடி சாடிச் சரிஞ்சிரும் போலயே?” மாஸ்டரைப் பார்த்ததும் எல்லாம் மறந்து சிரித்தபடி, “ஒரே எண்ணெத் தீவனம்லா மாஸ்டர். பின்ன, உளுந்தவடையக் கண்டா கை நிக்க மாட்டுக்கு, இந்த வயித்தெரிச்சல் வேற கொடஞ்சிட்டே வருகு. ஒரு மாதி நெஞ்சுல தீய வச்ச மாதி. என்னவாருக்கும் மாஸ்டர்?” என்று கேட்டபடி பனியனில் ஈரக் கைகளைத் துடைத்தான்.
“ஆமா, இப்போ வந்து கேளு. வாயி தான் கேடு. பெருஞ்சீரகத்த கொஞ்சம் கொதிக்க வச்சிக் குடி. செரி ஆவும். என்னத்த தின்னாலும் செரிக்க வயசுதான் மக்ளே. ஆனாலும் கொஞ்சம் வயிறு சொல்லதையும் கேக்கணும் பாத்துக்க. ஊருக்கே ஆக்கிப் போட்டாலும் நம்ம வயிறு அரப் பக்கா தான கொள்ளும். ஆனா, நீ அப்பிடி அள்ளி முழுங்க ஆளும் கெடயாதே! எண்ணப் பலகாரத்த கொஞ்ச நாளைக்கி கொறச்சிப் பாரு மக்ளே.”
மாஸ்டருக்கு நாராயணன் இருந்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். எல்லா கறிகளையும் கூட்டுகளையும் ஆரம்பிப்பது அவர் என்றால் முடிப்பது அவனாக இருப்பான். சுவையில் பாதிப்பங்கு அவனுக்கு. பல நேரங்களில் மொத்தத்தையும் அவன் கையில் விட்டுவிட்டு சுகமாகக் கால் நீட்டி உட்கார்ந்து பீடி இழுத்துக் கொண்டிருப்பார். அவனும் ஆசான் முன்னால் தன் கைப்பக்குவத்தைக் காட்டுவதில் மும்முரமாக இருப்பான்.
“அது சும்மா ஒன்னும் இல்ல. ருசி அறிஞ்ச நாக்கு உள்ளவனுக்குதான் ருசி அறிஞ்ச கை அமையும். அதுலயும் அவன் பசிச்சிக் கெடந்தவனாக்கும். சும்மா சாதாரண பசியில்ல கேட்டேளா, அது ஒரு மாதி வக்கணையான பசியாக்கும். நளன் மாதின்னு சொல்லலாமா இருக்கும். அவனுக்க கையில ருசின்னா இவனுக்கு மொத்தமும் ருசிதான். பெருசா என்ன தின்னுரப் போறான், ரெண்டாளு திங்கதத் திம்பானா இருக்கும். ஆனா, அதில்ல விசயம். அந்தக் கை தொட்டாலே எதுல என்னத்தக் கொறன்னு சொல்லிரும். தொடணும்னு கூட இல்ல, வாசம் புடிச்சாலே சொல்லிருவான். அதாக்கும் உள்ளது. அன்னிக்கி, நா வெச்ச சக்கப்பழப் பாயாசத்தயே சரியில்லன்னு சொல்லிட்டாம்லா! எனக்குக் கோவந்தான். ஆனா, ஒருத்தன் நமக்கும் மேல ஏறி வாராம்னு வைங்கோ, ஒரு அளவுக்கு மேல நம்ம ஒன்னுமே இல்லன்னு ஆயிரும் பாத்துக்கோங்கோ. நாராயணன் ருசிக்கப் பொறந்தவன். அவன் பட்ட கஷ்டமெல்லாம் இதுக்குதானோன்னு நெனப்பேன்.”
அடுப்பங்கரையில் மட்டுமல்ல. விளம்பும் நேரத்திலும் மங்கலமாகக் கிளம்பி வந்து நிற்பான் நாராயணன். நெற்றிப் பட்டையும் பளிச்சென்ற சிரிப்பும். வரும் வாடிக்கையாளரின் முகமறிந்து அங்குமிங்கும் ஓடி பணியாளர்களிடம் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.
“உப்புமால அடில புடிச்சதச் சொரண்டிப் போட்டு கொஞ்சம் மொளவாடில தேங்காயெண்ண விட்டுக் கொழச்சு ஒரு உருண்ட உருட்டி வச்சிப் பாருங்கோ. நம்ம ஹோட்டல் தான் நம்பர் ஒன்! தெரியுமா?”
“இவன் என்னத்த டே ஒளருகான்? கரிஞ்சிப் போனா ஏன் கரிஞ்சின்னு சண்டைக்கு வாரான். இப்போ அடில புடிச்சத சொரண்டித் திங்கச் சொல்லுகான். வட்டுப்பய..”
“அட, எது கரிஞ்சா நல்லது, எது கரியக்கூடாதுன்னு இருக்குல்லாண்ணே. சாளக் கருவாட்ட கரிச்சி சுட்டுக் கஞ்சி குடிச்சிருக்கேளா? அது ஒரு இதாக்கும்.”
முதல் வாடிக்கையாளர் வரும் முன் அடுப்பங்கரையில் சம்மணம் போட்டமர்ந்து ஒவ்வொரு கறியையும் கூட்டையும் தானே விளம்பி ஒரு தட்டம் சோற்றோடு ருசித்து எழுவான் நாராயணன். அவன் முகத்து திருப்தியைப் பார்த்தாலே அன்றைய வியாபாரம் தெரிந்து விடும் என்பார் மாஸ்டர்.
“சரி மக்கா, ஓடி வந்துட்ட செரி, திரும்பப் போற யோசன இருக்கா இல்லையா? யார்ட்டயும் போன்லயும் பேச மாட்டுக்க, ஊருக்கும் போன மாதி தெரியல்ல. மாசாமாசம் யாருக்கோ பணம் மட்டும் போட்டு விடுக, என்னவாக்கும் எண்ணம்?”
“அது அப்பிடித்தாம்ணே..”
“என்னடே அப்பிடி, நொப்பிடின்னு. கேக்கம்லா? சொல்லு, ஊருக்கு ஒரு தடவ போய்ட்டுதான் வாயேன். என்னதான் கொடுமக்காரின்னாலும் அம்மைல்லா மக்ளே?”
சட்டென முகம் இருண்டு விட, “அண்ணே, இந்த அட்வைஸ் மயிரெல்லாம் வேண்டாம்ணே. ஒனக்கு எல்லாம் கேக்க உரிம உண்டும். ஆனா, இத விடு. அது செரி வராது..”
“அப்பிடி என்னடே பிரச்சன?”
அப்பாவின் முடிவு அன்று அப்படி வருமென்று நாராயணன் நினைத்தும் பார்க்கவில்லை. கொத்த வேலையிலிருந்து அழுது தெவங்கி வந்து நின்றவன் காதில் விழுந்த முதல் குரல், “தவிச்ச வாய்க்கு தண்ணி கூட குடுக்க மாட்டால்லா. இந்த மனுசனுக்கு என்னத்தக் குடுத்தாளோ? சாப்புடும்போது பொதப்பேறில்லா சரிஞ்சி விழுந்தாராம்.” என்றது. அம்மா மயங்கிக் கிடந்தாள். அவளை உலுக்கி எழுப்பிக் கேட்க வேண்டும். அப்பாவின் ‘விடு மக்கா’ என்ற குரல் கேட்க பரிதவித்து நின்றான்.
அடுத்த நாள் காடாற்று முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவன் புடக்களையில் பேசிக்கொண்டிருந்த அம்மாவைக் கவனித்தான்.
“தடியங்கா புளிக்கேறிதானண்ணே நல்லாருக்கும். முட்டக்கோசு தொவரனும், எதாம் பச்சடியும் தருவான். ஒரு இருவது சாப்பாடு சொல்லுங்க போறும்.”
“மாப்ளக்கி காடாத்து நடத்துன பொம்பள மாதியா இருக்கா? என்னத்தச் சொல்லதுக்கு? விட்டா நாளைக்கே ஊரு சுத்தக் கெளம்பிருவா போலாருக்கு,” என்றது ஒரு குரல்.
“இந்தப் பிள்ளேளுக்கு சோறு போடுவாளோ என்னமோ! எல்லாம் ஒட்டடக் குச்சி மாதில்லா இருக்கு. அவளும் வக்காடு மாதி தான் இருக்கா? என்னமோ, செய்வின எதாம் இருக்குமோ?” என்றது மற்றொரு குரல்.
“ஆமாக்கா, நான் கேட்டது அப்பிடியாக்கும். இவளுக்க அடுப்பச் சுத்தி யாரோ செய்வின வச்சிட்டாளாம். அடுப்பங்கரைல ஒன்னுமே வெளங்காதாம். பாதி சண்ட அதுக்கு தானாம்.”
“அதுக்கென்ன, எங்க வீட்டுலயும் அப்பிடித்தான். ஒரு வருசத்துக்கு கறி எடுத்தா கல்லு மாதில்லா கெடந்து. எவ்ளோ வேக வச்சாலும் வாய்ல வைக்க முடியாம. பொறவு, ஒரு பூசாரி சொல்லித்தான் அடுப்பச் சுத்திப் போட்டு எரிச்சேன். பின்ன, எவளுக்க கண்ணோ என்னவோ?”
அம்மாவிற்கு செய்வினை வைக்க யாரால்தான் முடியும்? அது மட்டுமா பிரச்சினை? அப்பாவைக் கண்டாலே அவளுக்கு ஆகாதே? பாசம் இருந்தால் ருசி தானாக வரப் போகிறது.
அடியந்திரம் அன்று. மூன்று தலைவாலை இலைகள் நெடுவாக்கில் போட்டு, ஐயர் சொல்லச்சொல்ல, ஒவ்வொரு காய்கறியாய் அவர் சொன்ன இடங்களில் அடுக்கினான். எலுமிச்சை, முருங்கை, கத்தரி, வெண்டை, கிழங்குகள், மஞ்சள், என்று அத்தனையும் ஒவ்வொரு நினைவாய் கொண்டுவர கண்ணீர் விட்டுத் தேம்பி அடுக்கினான்.
அப்பாவின் படத்தின் முன் நின்று கண் மூடி வணங்கிய போது அவனுக்கு அவரோடு சேர்ந்து சாப்பிட்ட பந்திகள் நினைவு.
மாவும் எள்ளும் சேர்த்துப் பிசைந்து பிடி உருண்டை உருட்டி அவன் கையில் கொடுத்து, “அப்பாவுக்கு வையிப்போ” என்று ஐயர் சொன்னபோது, “அப்பா, அப்பா” வெனக் கதறி விட்டான்.
பூசை முடிந்து படையலின் முதல் இலை முன் அமர்ந்தபோது ஒரு சொட்டு வாசம் கூட இல்லை. நிறமற்ற கறிகள். ருசியற்ற உணவு. உயிரற்ற வெறும் குவியல். ஒரு உருண்டை உருட்டி எடுத்து வாயில் வைத்த கணம், அடுக்களையில் இருந்து அம்மா யாரிடமோ கேட்டாள், “என்னத்த டே கறி வச்சிருக்கான் கறி மயிரு. அடியந்திரத்துக்கு எரிசேரி வைக்காண்டாமா? எவனாக்கும் மாஸ்டரு? நா என்னான்னு கேக்கேன்..”
சட்டென எழுந்து அம்மாவின் முன் சென்று, “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? அப்பா செத்ததுக்கு ஒரு சொட்டு கண்ணீர் விட்டியாட்டி நீ? எரிசேரி மயிரு கேக்கா ஒனக்கு? ஊருல எல்லாவனும் சொல்லது சும்மா ஒன்னும் இல்ல, அவருக்கு என்னவாம் குடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்ப நீ. இப்ப எரிசேரி மயிரு! ஒங் கையால ஒரு சொட்டு கஞ்சி குடிச்சாக்கூட வெளாங்காது. அப்பிடியே எனக்கும் ஒரு காடாத்து நடத்திரு…” என்று கத்திவிட்டு வெளியேறியவன் தான்.
*
புது ஹோட்டல் திறப்பு விழாவன்று நாராயணனுக்கு அப்படி நடந்தது எல்லோருக்கும் சங்கடம் தான். அடுப்பங்கரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறி அழுது விழுந்திருக்கிறான். முதலாளியே வந்து தன் காரில் தூக்கிக்கொண்டு போய் ஊரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்தார். வயிறு முழுதும் புண்ணாக்கி வைத்திருக்கிறான். எண்ணெயும் காரமும் வக்கணையும் சேர்ந்து செய்த காரியம். குடலின் சில பகுதிகளை நீக்கித் தைத்து ஓய்வில் கிடத்தினார்கள். குட்டி மணியும் மாஸ்டரும் வேலை நேரம் போக சென்று பார்த்து வந்தாலும் கூடவே இருக்க யாருமில்லாமல் தனித்துக் கிடந்தான். நினைவு வந்ததும் பசி, பசி. சாப்பிட்டுப் பல நாட்கள் ஆயிருக்கும். நரம்பு வழி உள்ளேறும் திரவங்களின் ருசி அறியத் தெரிந்தாலும் தெரிந்திருக்கும் அவனுக்கு. விழித்தவன் குட்டி மணியையும், மாஸ்டரையும் தேடினான்.
“என்ன தம்பி, எப்பிடி இருக்கு இப்போ? டாக்டர் நீ முழிச்சதும் சொல்லச் சொன்னாரு.. இன்னா வாரேன்.. எதாம் குடிக்கியா?”
தலை தானாக ஆடியது. அப்பாவின் வயிற்றில் பார்த்த அதே நெடிய தழும்பு. பம்பாயில் அலைந்த காலத்தில் வயிற்றுப் பிரச்சனையில் தான் அப்படி ஆனது என்று சொல்லியிருக்கிறார். தன் வயிற்றுப் பஞ்சில் கைவைத்து கண் மூடிக் கிடந்தான். அந்த வலியின் ஊடாக பல குரல்கள், பல முகங்கள், மலர்ந்து ருசித்துச் சாப்பிடும் முகங்கள், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்கும் கண்கள், விரல் நக்கிச் சாப்பிடும் குழந்தைகள், ருசியின் உச்சத்தில் உள்ளிருந்து தெறித்து விழும் புன்னகைகள்…
கண்களை அறை முழுதும் ஓட விட்டான். வெறும் வெள்ளை. ஒற்றை நிறம் கூட இல்லா வெள்ளை. ஏதும் வாசம் வருகிறதா என முகர்ந்து பார்த்தான். மருத்துவமனை மருந்து வாடைகள் மட்டுமே வர குமட்டிக் கொண்டு வந்தது. பார்க்க யாரும் வந்திருந்தால் ஏதும் வாங்கி வந்திருப்பார்களே என கட்டிலின் அருகே கிடந்த சிறு மேசையை நோக்கித் தலையைத் திருப்பினான். வெறும் குளுக்கோஸ் பாட்டில்கள். ஒரு பிரெட் பாக்கெட் கூடவா வாங்கி வந்திருக்க மாட்டார்கள்? இதோ இப்போது சென்ற நர்ஸ் திரும்பி வந்தால் கேட்டுப் பார்க்கலாம். ஏதும் குடிக்க வேண்டுமா என்று கேட்டாளே! நல்ல ஒரு டிக்காசன் காப்பி கேட்டுப் பார்ப்போம். கூட ஒரு உளுந்த வடை! ம்ம்…
அந்த அறையின் மேல் சுவரிலிருந்து ஒரு சத்தம் வந்தது. கூர்ந்து பார்த்தபோது மெல்லிய ஒரு விரிசல் விழுந்தது. அதன் தூசி அவன் மீது விழ கைகளை ஆட்டி விலக்கினான். மெல்ல விரிந்த விரிசலிலிருந்து மென்கைகள் இரண்டு நீண்டு வந்தன. கைகளில் ஒரு தங்கத் தட்டு. என்ன அதன் மீது? அட, மொறுமொறு உளுந்த வடையும் தேங்காய்த் துவையலும்! அடுத்து வந்தது மல்லிகைப்பூ இட்லியும் சாம்பாரும், கூட ஒரு கிண்ணத்தில் ரச வடையும்! அற்புதம், அற்புதம். என்ன ருசி! ஒன்றைச் சாப்பிட்டு முடிக்க இன்னொன்று, பிறகு இன்னொன்று என வந்து கொண்டேயிருந்தது. நின்றபாடில்லை. அறை முழுதும் தங்கத் தட்டுகள்! தின்று முடித்த எச்சில்கள்!
தட்டுகளும் மிச்சங்களும் சேர்ந்து மலை போலக் குவிய அதன் மேல் படுத்திருந்தான் நாராயணன். நறுமணங்கள் மெல்ல மெல்ல நாற்றமாக மாறின. மூச்சுத் திணறி, “போதும், போதும்” என்று அரற்றினான். மேலும் மேலுமென உணவுகள் குவிய நறுமணங்களும் வாடைகளும் நிறைய, அவற்றுள் மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கினான். மணி மாஸ்டரின் குரல், “நாராயணா, நாராயணா, எப்பிடி இருக்க மக்ளே?”
மருத்துவர் வந்து பார்த்து விட்டு, “ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கு போலாம் தம்பி. கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட்டு தான் கேட்டியா? ஆமா, கூட யாரு இருப்பாங்க? வேளைக்கு சாப்பிடணும். நேரத்துக்கு சாப்பிடாம இருக்கக் கூடாது. பின்ன, காரம், எண்ணப் பலகாரம் கொஞ்ச காலத்துக்கு அவுட். என்ன? புரிஞ்சுதா?” என்றார்,
“சார், கூட யாரும் இல்லன்னு நெனைக்கேன். அந்த ஹோட்டல்காரரு கூட்டிட்டு வந்த பேசண்ட் சார்.”
“ஓ, ஆமா, சரி சரி.. யாரும் கூட இருந்து பாத்துக்க முடியுமான்னு பாருங்க. கொஞ்சம் குடல் ஆறிடுச்சுன்னா பரவால்ல..”
வீட்டிற்கு வந்தவனுக்கு வேளாவேளைக்கு ஹோட்டலிலிருந்து சாப்பாடு வந்தது. ஆனால், சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. மூச்சு மூட்டியது. கஷ்டப்பட்டு சாப்பிட்ட போது நாவில் எதுவும் ஏறவில்லை. ரப்பர் துண்டுகளைக் கடித்து விழுங்குவதைப் போலிருந்தது. நோயின் தாக்கம் என இருந்தவனுக்கு அடுத்தடுத்த வேளைகளிலும் அதே சப்பென்ற சாப்பாட்டைக் கண்டு மனம் நடுங்கியது. சாப்பாட்டுத் தட்டின் அருகே கிடந்து கனவுக்குள் மூழ்கினான். கனவில் வரும் வாசமும் ருசியும் ஆறுதலாக இருந்தது. பசி கூடிக் கூடி அவனை மெல்ல அரிக்க ஆரம்பித்தது. வலிந்து ஒவ்வொன்றாய் எடுத்து வெறி கொண்டதைப் போல தின்றான். ஒரு சொட்டு ருசி கூட இல்லை.
வாழ்வின் ருசி எல்லாமும் வடிந்து போய்விட்டதா, இனி அப்பாவுடன் சாப்பிட்ட கல்யாணச் சாப்பாடு கிடைக்கவே கிடைக்காதா? என் நரம்புகளிலெல்லாம் பாவம் குடியேறி விட்டதா? அம்மாவைப் பழித்த பாவமா? அவள் மட்டும் என்ன யோக்கியமா? எரிசேரி, அவியலெல்லாம் எங்கே? மாம்பழப் புளிசேரி, நார்த்தங்காய்ப் பச்சடி, போளி, பால் பாயாசம் எல்லாம் எங்கே?
படுத்தால் தூக்கம் இல்லை. தூங்கினாலும் எழுந்துகொள்ளப் பிடிக்கவில்லை. அறைக்குள்ளேயே அந்த முடை நாற்றத்திற்குப் பழகி படுக்கையிலேயே கிடந்தான். மெலிந்தான். கண்களைச் சுற்றி கருமை. இதென்ன இளநரையும் வந்துவிட்டதா? ஒருவேளை இதெல்லாமே கனவுதானோ? எப்படி இந்தக் கனவிலிருந்து வெளிவருவது? மாஸ்டர் வந்து பார்த்தாரா? குட்டி மணி? முதலாளி?
உத்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட இரண்டு வேட்டிகளின் முடிவில் ஒரு தலை கொள்ளுமளவு சுருக்கு கிடந்தது. நிதானமாக எழுந்து நின்றவன் அருகே குவிந்து கிடந்த தங்கத் தட்டுகளின் மீது ஏறி நின்றான். இன்னும் சிறிது எம்பினால் சுருக்கில் மாட்ட சரியாக இருக்கும். இன்னும் சில தட்டுகள்! தொங்கும்போது கால்கள் கிடந்து அடிக்குமா? நாக்கை கடித்துத் துண்டாக்கி விடுவேனா? இரத்தம் தெறிக்குமே? இரத்தத்தின் ருசி எப்படி இருக்கும்? அப்பா பொதப்பிலேறி தான் செத்துப் போனாரா? அப்போது என்ன ருசி தெரிந்திருக்கும்? இன்னும் சில தட்டுகள்! இதோ, இப்போது ஏறி விடுவேன். இதென்ன, இந்தச் சுருக்கு எட்டாமலேயே இருக்கிறது? கடைசியாக ஒருமுறை கூட ருசியாகச் சாப்பிட முடியாதா?
ஒவ்வொரு நாடியிலும் இதயத் துடிப்பு தடித்துக் கேட்ட, ஒவ்வொரு மூச்சும் நீண்டு விழுந்த அந்த கணத்தில் அவன் படுக்கையருகே வந்து நின்றது ஒரு உருவம். இருக்காது, இருக்கவே இருக்காது? அம்மாவா? சீ, சீ! ஒரு கணம் பல்லைக் கடித்தவன் அடுத்த நொடி ஓவெனக் கதறி அழ ஆரம்பித்தான். உடன் அந்த உருவமும் அழ ஆரம்பித்தது. அம்மா வந்திருப்பது நிஜம் தானா? எப்படி வந்தாள்? அவள் வீம்பை விடுத்து வந்திருக்க வாய்ப்பேயில்லையே? அவள் என்ன வீம்பு காட்டுவது, நானல்லவா காட்ட வேண்டும்? அவள் முகத்திலேயே முழிக்கக்கூடாது என்றிருந்தேனே! இப்போது எதற்கு வந்திருக்கிறாள்? ஒரு வேளை குட்டி மணி சொல்லியிருப்பானோ? மாஸ்டரே நேரில் போய் கூட்டி வந்திருப்பாரோ? என் தலையில் கைவைத்திருக்கிறாளே, இதெல்லாம் சாத்தியமேயில்லையே? அப்பாவின் சாவு, அடியந்திரம். எரிசேரி….
பசிக்கிறதே! பசி, வெறி கொண்ட பசி.. செத்துப் போன நாக்கு. கை கால்கள் தூக்கித் தூக்கி படுக்கையில் அடித்தன. வெறியில் கூச்சலிட்டான். அலறினான். ஓங்கி அழுதான். அப்போது, அருகேயிருந்த உருவத்தின் அந்த நடுங்கிய மென் கைகள் அவனை நோக்கி நீண்டன. கழுத்தோடு அவனைத் தாங்கி, எழுந்து உட்காரச் செய்தன. அருகேயிருந்த கிண்ணத்தை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றன. தாவிச் சென்று அந்தக் கிண்ணத்தில் வாய் வைத்து உறிஞ்சினான். உயிர், உயிர், உடலின் மொத்த நோயையும் தீர்க்கும் உயிர்.. ஒரே உறிஞ்சலில் மொத்தக் கிண்ணத்தையும் முடித்து எழுந்து கண் திறந்தவன் உதட்டோரம் இருந்த ஒற்றைப் பருக்கையை நாவால் உள்ளிழுத்த போது துள்ளி எழுந்தான்.
“ஆஹா, என்ன ருசி. அற்புதம்.. அற்புதம்…” என்று கத்திக் கொண்டே ஆட ஆரம்பித்தான்.
***
சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”… மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com