Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்உலகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது?

உலகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது?

பாரதீ


லகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது என்பது பற்றி இந்தியாவுக்குள் குறிப்பாக வாட்சப் பல்கலைக்கழகத்தில் பலவிதமான புல்லரிப்புக் கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. உலகமே நம்மைப் பார்த்து நடுங்குவதாகவும் உலகத் தலைவர்கள் எல்லோரும் நம் தலைவரைப் பார்த்து வியந்து போற்றுவதாகவும் வண்ண வண்ணக் கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு நேர்ந்த மிகப்பெரும் சாபக்கேடு இதுதான். மூடர்களால் மூடர்களுக்காக மூடர்களாலேயே நிகழ்த்தப்படும் சமூக ஊடகக் கோமாளித்தனங்கள் உலகத்துக்கே பெரும் சாபக்கேடாகி இருக்கின்றன என்றாலும் இந்தியாவுக்குக் கூடுதல் சாபக்கேடாக இருக்கின்றன. முன்பு மரபான ஊடகத்தினர் மட்டும் பொய் சொன்னார்கள். அரசாங்கம் கொடுக்கும் விளம்பர வருமானத்துக்காக அரசைக் கேள்வி கேட்பதற்கு அஞ்சினார்கள் – ஒத்து ஓதினார்கள். இப்போது ஊடகங்களுக்கு மாற்றாக வந்திருக்கும் சமூக ஊடகங்களும் அதே வேலையைத்தான் செய்கின்றன.

விளம்பர வருமானத்துக்காக என்றில்லாமல், முழு வருமானத்துக்கும் அரசையோ ஆளுங்கட்சியையோ நம்பி இருக்கும் சமூக ஊடகக் குழுக்கள் பெருகிவிட்டன. அவர்களுக்குப் போட்டியாக இப்போது மரபான ஊடகங்களுமே பல மடங்கு கூடுதலாக ஊழல் மயப்பட்டு இருக்கின்றன. முன்பு விளம்பர வருமானத்துக்காக மட்டும் மாரடித்தவர்கள் இப்போது தனிப்பட்ட முறையிலும் கொட்டிக் கொடுக்கப்படுவதால் குரலை உயர்த்தி அரசுக்கு விளம்பரம் செய்கிறார்கள். இல்லாதவற்றையெல்லாம் சொல்ல வைக்கப்படுகிறார்கள். நடந்ததைப் பல மடங்கு ஊதிப் பெரிதாக்கி மிகைப்படுத்திச் சொல்ல வைக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள விரும்பும் எளிய மனிதர்களுக்குத்தான் அது கிடைப்பதேயில்லை. எதுவுமே உண்மை இல்லை – எல்லாமே உண்மைதான் என்று எளிய மனிதர்களைக் குழப்பும் இந்தப் பின்-மெய்யுகத்தில் (post-truth era), இந்தியா எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தியாவில் நடக்கும் கொடுமைகளையும் கோமாளித்தனங்களையும் கண்டு உலகம் கொதிக்கிறதா கைகொட்டிச் சிரிக்கிறதா அல்லது நாம் வல்லரசாகிவிட்டதைக் கண்டு உண்மையிலேயே பொறாமையில் துடிக்கிறதா என்பதை அறிய முற்படும் மற்றுமோர் உண்மை முயற்சிதான் இந்தக் கட்டுரை.

உலகத் தலைவர்களுக்கு நடுவில் மன்மோகன் சிங்குக்கு இருந்த மரியாதை மோடிக்கு இருக்கிறதா? மன்மோகன் சிங்குக்கு மரியாதையே இருக்கவில்லை, அவர் ஓர் ஊழல் மலிந்த அரசாங்கத்தை நடத்திய பலவீனமான பிரதமர் என்று செய்யப்பட்ட பரப்புரை இந்தியாவுக்கு வெளியேயும் சென்றதா? 2014-இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, அதுவரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த நாம், திடீரென்று இலக்கு தென்பட்டுவிட்டது போலவும் அதை நோக்கிய பாதைக்குள் சரியாக வந்து இணைந்து விட்டது போலவும் இந்தியாவுக்குள் உணர்ந்தது உண்மைதான். அதை வெளிநாடுகளிலும் நம்பினார்கள் என்பதும் உண்மைதான். அந்த மரியாதை அதன் பிறகு கூடிக் கொண்டே வந்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா?

இதற்கு முன்பு எந்த அரசாங்கத்துக்கும் இருந்திராத ஒரு பெரும் பலம் இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி யாரேனும் பெருமையாகப் பேசினால், அந்த இடத்தில் நாமும் பெருமைப்பட்டுக் கொள்வதோடு, பெருமையை இன்னும் சிறிது கூட்டிக் கொள்வது போல நான்கு வார்த்தைகள் சொல்வோம். அவ்வளவுதான். இப்போது அப்படி இல்லை. இந்தியா உண்மையாகவே வல்லரசு ஆகிவிட்டது என்று நம்புகிற ஒரு கூட்டம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. அவர்களை, “அப்புறம் ஏன் இன்னொரு நாட்டில் போய் உங்கள் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதானே!” என்று கேட்டால் தலைதெறிக்கத் தப்பி ஓடிவிடுவார்கள் என்பது வேறொரு கதை. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று தனிப்பட்ட முறையில் தான் நம்பாவிட்டாலும் கூட, வேலையைப் போட்டுவிட்டு அப்படி ஒரு கருத்தைப் பரப்புவதையே தன் முழு நேர வேலையாகக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. நாடும் அரசும் ஆளுங்கட்சியும் ஒன்றுதான் என்று இந்தியாவில் நடக்கும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் வேலையைச் செய்கிறார்கள். என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்தான் தங்கள் தலைவர் என்று ஒரு தலைவனைக் கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றுகிற ஒரு கூட்டம் – அதுவும் படித்த கூட்டம் – கிடைப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? இது எப்படிச் சாத்தியப்பட்டது?

இன்னொரு நாட்டுக்குள் போய், தன் நாட்டிலிருந்து சென்று குடியேறிய மக்களை ஒன்று திரட்டி, ஓரிடத்தில் கூட்டி, அந்த நாட்டுத் தலைவனோடு ஒரே மேடையில் தோன்றி, கைகோத்து, அந்த நாட்டில் நடக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஒரு தலைவனை இதுவரை இந்தியாவும் கண்டதில்லை உலகமும் கண்டதில்லை. கண்டாலே மிரண்டு ஓடுகிற அளவுக்கு உலகத் தலைவர்களைக் கட்டிப்பிடித்துப் படம் எடுத்து வெளியிடுவதன் மூலம் அவர்களின் மரியாதையைப் பெற்று விட்டதாக வாட்சப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தன் பக்த கோடிகளை நம்ப வைக்கும் வேலையை வேறு எவர் செய்திருந்தாலும் இந்நேரம் கோமாளியாக்கப்பட்டிருப்பார்.

இப்போதைக்கு உலகம் இந்தியாவை விரும்புவதற்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வாழும் மேற்குலகத்தில் சீனா மீது – சீனர்கள் மீது பெரும் மரியாதை இல்லை. அதுவே இந்தியர்களுக்குப் பெரும் சாதகமாக இருக்கிறது. இது அடிமட்டத்தில். அரசுகள் அளவிலும் அதே கதைதான். சீனாவை எதிர்க்க இந்தியா வேண்டும். அதனால் இந்தியா நட்பு நாடு. அது போலவே இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பான உலகத்தில், முஸ்லிம் நாடுகள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் கூடி வந்தன. அதை இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாகப் பயன்படுத்தி இந்தியா மீதான உலகின் நல்லெண்ணத்தைக் கூட்டிக்கொண்டது. “நீங்கள் இப்போது படுவதைத்தான் நாங்கள் காலங்காலமாகப் பட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கள் புதிய எதிரி, எங்கள் பரம்பரை எதிரி” என்று சொல்லி, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல்படும் தோழனாக மேற்குலகோடு மேலும் நெருங்கிக்கொண்டது.

உலகமெங்கும் வலதுசாரி அரசியல் தலை தூக்கிய போது, அதன் தலைவர்கள் எல்லைகளைக் கடந்து தம் புகழைப் பரப்பிக் கொண்டார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளில் வலதுசாரி அரசியல் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இது இந்தியாவுக்கும் இந்தியாவில் நடக்கும் வலதுசாரி அரசியலுக்கும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சமீப காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகள் வெளிநாடுகளின் கண்களுக்கு நன்றாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் என்று அரசைக் கேள்வி கேட்கும் அனைவரின் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அரசை விமர்சிக்கும் ஒவ்வொரு பதிவையும் வேலையில்லாமல் உட்கார்ந்து தணிக்கை செய்து அதை நீக்குமாறு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் வணிக நோக்கில் இப்போதைக்கு இதைப் பெரிது படுத்தாமல் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அது இந்த அரசாங்கத்துக்குச் சிக்கலாகத்தானே முடியும்?

ஸ்வீடன் நாட்டின் வீ-டெம் நிறுவனம் (V-Dem Institute) ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகளில் மக்களாட்சியின் நிலையை ஆராய்ந்து மக்களாட்சி அறிக்கை (Democracy Report) என்று ஒன்றை வெளியிடுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலகெங்கும் மக்களாட்சியில் நிகழ்த்தப்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளின் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன; 72% உலக மக்கள் தொகை வல்லாட்சி முறைக்கு அடியில் வாழ்கிறது; இதற்கு முக்கியப் பங்களிப்பாளர் இந்தியா என்கிறது. 44% உலக மக்கள் தொகை தேர்தல் வல்லாட்சியில் (Electoral Democracy) வாழ்வதாகச் சொல்கிறது. அதாவது தேர்தல் நடத்துவதால் மட்டுமே ஒரு நாடு மக்களாட்சி நாடு என்று ஆகிவிடாது. தேர்தல் மூலமாகவும் ஒரு வல்லாட்சியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதே அவர்கள் சொல்வது. இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படுகின்றன. சீனா, ஈரான், மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகள் மூடிய வல்லாட்சி (Closed Democracy) நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதிலிருந்துதானே அதற்குப் போக முடியும்! ஹிட்லர் அப்படியான ஒரு தலைவன்தானே! தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லாட்சியாளன். வாட்சப் பல்கலைக்கழகத்தில் போய்க் கேட்டால், இது இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத மேற்கு உலக நாடுகளின் சதி என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார்கள். உலகின் ஆகப் புகழ் பெற்ற தலைவர் நரேந்திர மோடி என்று ஓர் அறிக்கை சொல்கிறது என்றால் அந்த அறிக்கையை மட்டும் மேற்கு நாடுகளிடமிருந்து எந்த வெட்கமும் இல்லாமல் எடுத்துக் கொள்வார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களாட்சி நொறுங்கி விழுந்த ஏழு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சொல்லப்படுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இந்தியாவில் சமய உரிமை (Religious Freedom) நசுக்கப்படுவதாக இந்த அறிக்கை சொல்கிறது. தேர்தல் மக்களாட்சிக் குறியீட்டெண் (Electoral Democracy Index) என்ற தரவரிசையில் 179 நாடுகளில் 108-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

“ஒரு காலத்தில் இந்தியா செய்தியாளர்களின் கனவு பூமியாக இருக்கும். எங்கும் ஆணித்தரமான கருத்துக்களின் ஒலியும் ஆவேசமும் நிறைந்திருக்கும். இப்போது மோடி பற்றிக் கேட்டால் அஞ்சி ஒடுங்கி விடுகிறார்கள்” என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் நிக்கோலஸ் கிரிஸ்டாஃப் எனும் அமெரிக்க இதழியலாளர் ஒருவர் எழுதுகிறார். “வல்லாட்சியின் கீழ் இருக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதுண்டு. ஆனால் மதத்தீவிரவாதம் ஒரு நாட்டைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சீரழிக்காமல் விடவே விடாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான்” என்றும் அக்கட்டுரையில் கூறுகிறார். பாகிஸ்தான் வெறுப்பையே தன் எரிபொருளாகக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இன்னொரு பெரிய பாகிஸ்தானை உருவாக்கிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அவலம். விரும்புகிறவர்கள் எதை விரும்புகிறார்களோ அதுவாக மாறுவார்கள். வெறுப்பவர்கள் எதை வெறுக்கிறார்களோ அதுவாகவே மாறுகிறார்கள். எது நம் உள்ளத்தை நிரப்பி இருக்கிறதோ அதுவாக மாறுகிறோம்.

எல்லைகளிலாச் செய்தியாளர்கள் (Reporters Without Borders) எனும் நிறுவனம், இந்தியா இதழியல் உரிமையில் (Freedom of Press) 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இது பாகிஸ்தானை விட மோசமான நிலை. இதை இந்தியா எப்படிச் சரி செய்யப் போகிறது தெரியுமா? இது போன்ற தரவரிசைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் சூத்திரத்தை மாற்ற வேண்டும் என்று ஐ.நா. சபையில் முறையிடப் போகிறதாம்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் இந்தியர்களை ஒன்று திரட்டி, பேரணி நடத்தி, அவர்கள் முன் ஒரு பேருரை நிகழ்த்தி, தன்னை ஒரு பெரும் தலைவனாகக் காட்டிக் கொள்வது, பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவை எந்த அளவுக்கு வலுப்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனாலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் இந்தியர்களுக்கு நடுவில் தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும். அவர்களது நாடுகளில் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். இதை ஏன் இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் செய்யவில்லை? இனி வரும் தலைவர்களும் இதைச் செய்வார்களா? இதற்கு முன்பு இருந்தவர்கள் இது போன்ற செயல்பாடுகள் தன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை வெற்றிக்கு உதவும் என்று நம்பவில்லை. அதனால் செய்யவில்லை. இனி வருபவர்களும் அப்படியே நம்பாவிட்டால் இனியும் இதைச் செய்ய மாட்டார்கள். எந்த உலகத் தலைவருமே இதை ஒரு வேலையாகக் கொண்டு செய்வாரா என்று தெரியவில்லை. ஆனால் இவர் செய்கிறார். இதில் அவருக்குப் பெரும் வெற்றியும் கிடைக்கிறது. மற்றவர்கள் செய்ய விரும்பினாலும் இதைச் செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் அதற்குப் பின் பெரிதும் பேசப்படாத பேருண்மை ஒன்று இருக்கிறது. முன்பு இருந்தவர்கள் வெளிநாடு சென்று வாழும் அளவிற்கு இருக்கிற இந்தியர்களின் மனதை வென்றவர்கள் அல்லர். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்; சிறுபான்மையினரை ஆதரிப்பவர்கள்; உயர் சாதி வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படாதவர்கள். இவரோ மதம் என்ற பதாகைக்குப் பின் ஒளிந்திருக்கும் உயர் சாதிக் கூட்டத்தின் நீண்ட நாள் கனவுகளுக்குத் தீனி போடுபவர்; என்றேனும் ஒரு நாள் இந்தியாவில் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லாமல் செய்வார் என்ற நம்பிக்கை கொடுப்பவர்; அவர்களைப் போலவே பிற மதத்தினரை – குறிப்பாக முஸ்லிம்களை – வெறுப்பவர் – அவர்களைத் துன்புறுத்துவதை விரும்பிச் செய்பவர்.

உலக அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace) எனும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அமெரிக்கா தன் கொள்கை முடிவுகளில் தாராளமாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிற தாராளவாதிகளாகவும், ஆனால் அதே போன்ற – அதற்கு இணையான பிரச்சனைகளில் இந்தியா தன் கொள்கை முடிவுகளில் பழமைவாத நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிற பழமைவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்கிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! என் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை நான் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவேன் – அப்படி நடத்துவதைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பேன் அல்லது கைதட்டிக் குதூகலிப்பேன். ஆனால் என்னை இந்த நாடு மண்ணின் மைந்தனைப் போல எல்லா உரிமைகளையும் கொடுத்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். என் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. அதை எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ அப்படிப் பேசி அவர்களின் உளவியலையே நொறுக்குவேன். ஆனால் அந்த நாட்டின் மேல் தட்டில் இருந்து வரும் எனக்கு இந்த நாடு இன அடிப்படையில் கொடுக்கும் இட ஒதுக்கீடு (Affirmative Action) வேண்டும். நாங்கள் ஏதோ தகிடுதத்தம் செய்து சட்டவிரோதமாக இந்த நாட்டுக்குள் குடியேறி வாழ்வோம்; எங்களை இந்நாடு இரு கரங்களாலும் வாரி அணைத்துக்கொண்டு தங்களில் ஒருவராக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில், பக்கத்து நாட்டவர்கள் பாதுகாப்புக்காகவோ மேம்பாட்ட வாழ்க்கைக்காகவோ அப்படிக் குடியேறி வருவதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் நாட்டில் பிறந்த மற்ற மதத்தவர்களைக் கூட மதத்தின் அடிப்படையில் பக்கத்து நாட்டுக்காரர் என்று முத்திரை குத்தி விரட்டி விடுவோம். அதற்கான சட்டம் இயற்றுவோம். வெள்ளையர் மேலாதிக்கம் அமெரிக்காவுக்குக் கேடு என்று வாதிடுவோம். ஆனால் இந்து தேசியமே இந்தியாவுக்கான பாதை என்றும் வாதிடுவோம். அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமக்களில் 80% பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்கிறார்கள். மேலே சொல்லப்பட்ட ஒவ்வோர் இரட்டை வேடத்தையும் அந்த அறிக்கை தோலுரித்துப் போடுகிறது.

இப்போதைக்கு இது பற்றி அமெரிக்கர்களோ மற்ற மேலை நாட்டினரோ பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. காரணம், அவர்களுக்கு இதை விட முக்கியமான – அவர்களை நேரடியாகப் பாதிக்கும் பிற பிரச்சனைகள் இருக்கின்றன. அது மட்டுமில்லை. வெளிநாடு சென்று வாழும் இந்தியர்கள் விவரமானவர்கள். எங்கே எதைப் பேச வேண்டும் – எப்போது எந்த வேடம் போட்டால் தன் பிழைப்புக்கு வசதியாக இருக்கும் என்று புரிந்து சுருதியைக் கூட்ட வேண்டிய இடத்தில் கூட்டி, குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்து, முன்னேறத் தெரிந்தவர்கள் – காரியமே கண்ணாய் இருப்பவர்கள். ஆனால் அது எப்போதும் அப்படியே இருந்து விடாது. முன்பு கண்ணை மூடிக்கொண்டு நாம் சொன்ன வளர்ச்சிக் கதைகளை நம்பியவர்கள், இப்போது வலதுசாரி வெறுப்பு அரசியலின் வளர்ச்சி பற்றியும் கேள்விப்படவும் கேள்வி கேட்கவும் தொடங்கி விட்டார்கள். அப்படி இந்த இரட்டை வேடங்களும் புரிந்துகொள்ளப்படும் வேளையில் நம்மவர்களுக்குச் சிக்கல் வரலாம். அதையுந்தான் பார்ப்போமே! அப்போது என்ன நிறத்துக்கு மாற வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள்தாமே நாம்!

மக்களாட்சியில் இருந்து வல்லாட்சிக்கு மாறுபவர்கள், மிக கவனமாகத்தான் மாற்றங்களைச் செய்வார்கள். முதலில் வளர்ச்சி பற்றிப் பேசுவார்கள். பின்னர் வளர்ச்சியின் பெயரைச் சொல்லி உரிமைகளைச் சிறிது சிறிதாகப் பறிப்பார்கள். எந்த இடத்தில் எதிர்ப்பு வலுக்கிறதோ அந்த இடத்தில் நிறுத்திக் கொள்வார்கள் அல்லது வேகத்தைக் குறைத்துக் கொள்வார்கள். அடுத்து தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக எவர் எவரின் உரிமைகளைப் பறிக்க வேண்டுமோ அவர்களின் உரிமைகளைச் சிறிது சிறிதாகப் பறிக்கத் தொடங்குவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்கும் வரை அல்லது அதற்குப் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடைக்கும் வரை பறித்தலின் வேகம் கூடிக் கொண்டே இருக்கும். எதிர்ப்பு வரும் போது – வலுக்கும் போது வேகம் குறைத்துக் கொள்ளப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும். இப்படித்தான் இந்தியா மக்களாட்சியிலிருந்து தேர்தல் வல்லாட்சிக்கு மாறியிருக்கிறது. பண மதிப்பிழப்பு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் ஊழல், ஊடகங்களின் பல்பிடுங்கல், நிறுவனங்களைச் சிதைத்தது, காஷ்மீரை உடைத்தது, குடியுரிமைச் சட்டம் ஆகிய ஒவ்வொன்றையும் இந்த ஆட்டநூலில் (playbook) பொருத்திப் பாருங்கள். அப்படியே பொருந்தும்.

இப்படி ஒவ்வொன்றாகக் கை வைத்த போது, உலக நாடுகள் கண்டுகொள்ளாமலேதானே இருந்தன. இப்போதென்ன திடீரென்று அக்கறை? அவர்களுக்கு எந்த வகையிலும் பிரச்சனையாகாது என்கிற விதமான உள்நாட்டுப் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அப்போதைக்கு அவற்றைக் கண்டுகொண்டால்தான் பிரச்சனை என்று கூட எண்ணியிருக்கக் கூடும். குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது முதன்முதலாக அவர்களுக்கு மணி அடித்தது. இது போகும் பாதையும் வேகமும் எங்கு போய் முடியப்போகிறதோ என்ற அச்சத்தை உண்டாக்கின. உள்நாட்டு ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்த போது கண்டுகொள்ளாதவர்கள், பிபிசியையே மிரட்டி உருட்டிய போது அச்சம் கொண்டார்கள். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் நுழையத் தடை விதித்த வேளையில் இது அங்குதான் போய் முடியும் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதுவும் எதற்காக? பல ஆண்டுகளுக்கு முன்பு இவரைத் ‘திருடன்’ என்று அழைத்ததற்காகத் தொடரப்பட்ட பழைய அவதூறு வழக்கில் தண்டனை கொடுத்து, அதன் அடிப்படையில் பதவி விலக்கம் செய்து… எவ்வளவு காலம் பதவி விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்? 2 ஆண்டுகள். அதாவது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை. இதைக் கண்டு முதலில் அதிர்ந்தவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள் அல்லர். அவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது! அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு எது முக்கியமோ அதுவே அவர்களுக்கும் முக்கியம். அப்படி இருக்கையில் இதற்காக முதலில் அவர்கள் பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்களின் கவனத்தைத் திருப்பும் வேலையைச் செய்பவர்கள் இரு குழுவினர். ஒன்று, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் – இதழியலாளர்கள். அவர்கள் தம் நாட்டு இதழ்களில் இதைப் பற்றிப் பெரிதாகப் பேசும் போது, அந்நாட்டுத் தலைவர்களின் கவனத்தை இது ஈர்க்கும். இன்னொன்று, பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள அரசியல் அறிவியல் பேராசிரியர்கள் – ஆய்வாளர்கள். இதில் இந்தியர்களும் நிறைய உண்டு. பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் அளவுக்குப் படித்த இந்தியக் குழந்தைகள் யாராக இருப்பார்கள்? சிறு வயது முதல் வீட்டிலேயே குலப்பெருமை கற்றுக்கொடுக்கப்பட்ட – இட ஒதுக்கீட்டை வெறுக்கிற – தம்மைத் தவிர எல்லோரும் இழி பிறவிகள் என்று எண்ணுகிற உயர்வகுப்பினரே அங்கும் இருப்பது. அவர்களிலும் நேர்மையானவர்கள் நிறைய இருப்பார்கள். குறைந்தபட்சம் உலகத்தின் கவனத்தைப் பெற்றுவிட்ட பிறகு நேர்மையான உரையாடலில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். இது போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டவுடன் இதழியலாளர்கள் முதலில் கருத்துக் கேட்க ஓடிச் செல்வது இவர்களிடம்தான். இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கேள்விகள் – வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாத கேள்விகள் எல்லாம் வெளியே வந்து விழும். அப்படித்தான் சமீப காலங்களில் உலகமெங்கும் இந்தியாவின் மக்களாட்சி முறை பேசுபொருளாகி இருக்கிறது.

லண்டன் கிங்’ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலட் சொல்கிறார்: “மனிஷ் சிசோடியா போன்ற ஒரு மாநிலத் தலைவரைக் குறி வைத்த போது, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இடத்தில் இருக்கும் ராகுல் காந்தி போன்ற ஒருவரைக் குறி வைக்கும் போது, நோக்கம் தெளிவாகி விடுகிறது. தன் இடத்துக்குப் போட்டி போடும் வாய்ப்பிருக்கிற ஒருவரைக் கட்டம் கட்டுவதன் மூலம், “இந்த இடம் எப்போதும் என்னுடையது. இதற்கு ஆசைப்படுபவர்கள் எவருக்கும் இதுதான் நேரும்” என்று தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. அங்குதான் மக்களாட்சிக்குப் பிரச்சனை தொடங்குகிறது. அந்த இடத்தில் மக்களாட்சி வல்லாட்சி ஆகிவிடுகிறது.”

அவர் இத்தோடு நிறுத்தவில்லை. “மோடியின் நிரந்தரப் பிரதமர் ஆசைக்கு இது மட்டும் போதாது. அரசியலமைப்பின் படி, இந்தியா மாநிலங்களுக்கு நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கும் கூட்டாட்சி நாடு. அவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்த்தால் ஒழிய அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் என்பதை மாநிலத் தலைவர்கள் எல்லோரும் பெரும்பாலும் உணர்ந்துவிட்டார்கள். அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கத்தான் செய்வார்கள். அடுத்து மோடியின் குறி அதையும் நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கும். அப்படியானால் மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் குறி வைக்கப் படுவார்கள். அதுதான் சமீப காலத்தில் இதே பாதையில் சென்ற துருக்கி, இஸ்ரேல், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடந்தது. அது இங்கேயும் நடக்கும்.”

அவர் மேலும் சில வலுவான கருத்துக்களை வைக்கிறார். ஒன்று, உலகின் மிகப் புகழ் பெற்ற தலைவர் மோடி என்பது ஒரு புறம் இருக்க, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்டவர்தான் மோடி என்பதையும் நினைவுபடுத்துகிறார். அதாவது, புகழ் என்பது வேறு, தேர்தல் வெற்றி என்பது வேறு. புகழை வளர்த்துக்கொள்வதற்காகவே கோடிகளைக் கொட்டும் ஒருவர் – அதுவும் வரலாற்றில் இதற்கு முன் எந்தத் தலைவரும் செய்யாத அளவுக்கு அதே வேலையாய் அலையும் ஒருவர் – இப்படியான புகழைப் பெற்றிருப்பது பெரிதில்லை என்கிறாரோ! அப்படிப் பார்த்தால், தேர்தல்களை – தேர்தல் முடிவுகளை எப்படித் தனக்கேற்றபடிப் பயன்படுத்திக்கொள்வது என்பதிலும் வரலாற்றில் இதற்கு முன் எந்தத் தலைவரும் இந்த அளவுக்குக் கைதேர்ந்தவர் இல்லை என்றே படுகிறது. அடுத்தது, பாஜக என்ற கட்சிக்கென்று இன்று இந்தியாவில் எதுவும் இல்லை. பாஜக என்பதே மோடி என்று ஆகிவிட்டது. மோடியை நம்பித்தான் மொத்த பாஜகவும். மோடிக்குப் பிந்தைய பாஜக பெரிதும் திணறும் என்கிறார்.

கடைசியாக, “அரசியலமைப்புக்கு ஒத்துவராத பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு மிதமிஞ்சிப் போய்விட்டது. இந்திய நீதித்துறையால் இதை முழுமையாக எதிர்த்து நிற்க முடியவில்லை. இதுவே பிரேசிலில் நடந்த போது, நீதித்துறை அதை அனுமதிக்கவே இல்லை. அந்த அளவுக்கு அந்த நாட்டின் நீதித்துறை வலுவாக இருந்தது. அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் இதைக் கடுமையாக எதிர்த்து வெற்றி கொண்டார். இது இஸ்ரேலில் நடந்த போது, அந்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடித் தடுத்தார்கள். அங்குள்ள மக்கள் அவ்வளவு அரசியல்படுத்தப்பட்டவர்கள். இந்த இரண்டுமே இந்தியாவில் நடக்காது. பிரேசிலில் இருப்பது போல, வலுவான நீதித்துறையோ தலைவர்களோ இல்லை. இஸ்ரேலில் இருப்பது போல, குடிமைச் சமூகமும் இல்லை. போலந்திலும் ஹங்கேரியிலும் நடந்தது போலத்தான் இந்தியாவிலும் நடக்கும். வல்லாட்சி வலுப்பெறும். மோடிக்குப் பின்தான் இந்தியா இதைவிட்டு வெளியேற முடியும்” என்கிறார். அதற்குள் மீள முடியாத தொலைவு பயணித்துவிட்டால் என்ன செய்வது!

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு இருக்கும் பிரச்சனை இதுதான். சீனா, ரஷ்யா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராகச் செய்யும் பரப்புரையில் அவர்கள் முன்னால் வைக்கும் பெரும் குற்றச்சாட்டே, அந்நாடுகளின் வல்லாட்சி முறைதான். இங்கெல்லாம் மக்களாட்சி இல்லாததால்தான் இவர்கள் மனித குலத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு எதிராக ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளை ஒன்றிணைக்கும் போது, தன்னுடன் இருக்கும் ஒரு நாடே வேகமாக மக்களாட்சியை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பது உலக அரங்கில் அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்கும். “எங்களோடு இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்லவும் வேண்டும். சொல்வதால் சங்கடங்கள் ஏற்பட்டுவிடவும் கூடாது. ‘நமக்கு அவர்கள் தேவைப்படுவது போலவே, அவர்களுக்கும் நாம் தேவைப்படுகிறோம்’ என்று நன்றாகப் புரிந்துவைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்கிறோம். இது இப்படியே தொடருமா – தொடர முடியுமா என்பதுதான் கேள்வி.

***

பாரதீ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular