கணேஷ் பாபு
நகரங்களில் வாழும் மனிதர்கள், இந்த நவீன காலத்தில், அவரவர்களுக்கேயுரிய வாழ்வின் துயரங்களுடனும், அலைக்கழிப்புகளுடனும் தனித்தனி தீவுகளாக, திணைகளாக மிதந்தலைகிறார்கள். துயரங்களுக்குத் தீர்வு காண முயலுந்தோறும் அவை தீர்ந்தபாடில்லை, மாறாக பெருகியபடிதான் இருக்கிறது. சலித்துப் போய் யாவரும் அவரவர் திசையில் தனித்தனித் தீவுகளாகச் சுருங்கிப் போய் நின்றுவிடுகிறார்கள். இந்த மாறாத துயரத்தையும் தனிமையையும் ஆற்றுப்பட ஏதுமில்லாத விரக்தியும் மனிதர்களைத் துரத்தியபடியிருப்பதன் கதையைச் சொல்வதே ஜெயந்தி சங்கரின் இந்த “திரிந்தலையும் திணைகள்” நாவல்.
இந்த நாவல் ஒன்றுக்கும் மேற்பட்ட பல கதாபாத்திரங்களின் கதையைச் சொன்னாலும், பிரதானமாக, பத்மா மற்றும் ரேணு இருவரின் கதையை விரிவாகச் சொல்கிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் புது மணப்பெண்ணாக பத்மா வருகிறாள். புதிய குடும்பம், புதிய நாடு, புதிய சூழல், புதிய மனிதர்கள் என எல்லாம் புதியதாக இருக்கும் சிங்கப்பூரில் பத்மா தன்னை மெதுவாகப் பொருத்திக் கொள்கிறாள். கால மாற்றத்தில் அவள் வாழ்க்கை மாறுவதையும், சிங்கப்பூர் என்ற இந்த நிலம் கொள்ளும் மாறுதலையும் காட்சிப்படுத்துகிறது ஒரு சரடு. மற்றொரு சரடு, அவளது தோழியான ரேணுவின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. தைரியமான ஆளுமையான ரேணுவின் வாழ்வில் ஏற்படும் துயரங்கள் வழியே அவளது வாழ்வும் அவளைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்களையும் சொல்லிச் செல்கிறது. அதன்பின் துணைப் பாத்திரங்களான கவிதா, பாலா, கதிர், செந்தில், தர்ஷினி ஆகியவர்களின் கதையையும் சொல்கிறது இந்த நாவல். இதில் பத்மாவின் வாழ்வு மட்டும் அதிகம் துயரத்தில் சிக்கவில்லை. மற்ற எல்லா மனிதர்களையும் துயர் ஆட்டுவிக்கிறது. அதில் சிக்கி, திசைக்கொருவராக யாவரும் சிதறிப்போய் இறுதியில் ஏதோ ஒரு இடத்தில் தகைவு கொள்கிறார்கள். தனித்தனித் திணைகளாக திரிந்து அலைகிறார்கள்.
நாவல் காட்டும் காலம் என்பது தொண்ணூறுகளின் துவக்கம் துவங்கி 2010 வரையிலானது என்று தோராயமாகச் சொல்லலாம். சிங்கப்பூரில் பேருந்துகளில் சில்லறைப் போட்டு உள்நுழையும் காலத்தில் துவங்கி மின் அட்டைகளை மெஷினில் காட்டி உள்நுழையும் காலம் வரை. அல்லது சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாய் 9 ரூபாய்களாக இருந்த காலத்தில் இருந்து 39 ரூபாய் வரை மாறியிருந்த காலம் வரை. பேஜர் வைத்திருந்த காலத்தில் இருந்து செல்போன் வந்த காலம் வரை. சிங்கப்பூரில் ஓர் இருபதாண்டு காலமாற்றத்தை, மாறி வரும் மனிதர்களின் வாழ்வினூடாக யதார்த்தமாகக் காட்டிச் செல்கிறது இந்த நாவல்.
பத்மாவின் மணவாழ்வு மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. அவளது கணவன் சரவணன் அவளை நேசித்தும், புரிந்துகொண்டும், அவளுக்கான வெளியை அளிப்பதுமான அன்பான கணவன். அவளது மாமனார் சுப்பையாவும் அவளைத் தன் மகள் போல நடத்துகிறார். சரவணின் சித்தி திலகா, அவளது மகள் தீபா, சரவணனின் அத்தை மகளான கவிதா, அண்டை வீட்டுக்காரரான லீலிங், பணிப்பெண்ணாக வேலை செய்யும் தர்ஷினி ஆகியவர்களின் கதைகள் சிங்கப்பூர் பின்புலத்தில் சொல்லப்படுகின்றன. அதற்கிணையாக, ரேணுவின் கதை இந்தியப் பின்புலத்தில் வைத்துச் சொல்லப்படுகிறது. இவை யாவும் மாறிமாறி அடுக்கடுக்காக வாசகன் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ரேணுவின் வாழ்வோ அவலம் நிறைந்ததாக இருக்கிறது. மிகத் துணிவான ஆளுமையாக அறிமுகமாகும் அவள், திருமணத்திற்குப் பின் தோல்விகளையே சந்திக்கிறாள். வக்கிரம் பிடித்த மனநோயாளிக் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுத் தப்புகிறாள். மகன் நவீனை நல்ல முறையில் வளர்ப்பதே அவளது வாழ்வின் குறிக்கோளாகிறது. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் அவளது வாழ்வில் இன்னொரு ஆண் நுழைகிறான். மருத்துவர் மாதவன் அவளைக் காதலிக்கிறான். அவளது குடும்பத்தினரிடம் நெருங்கிப் பழகுகிறான். ரேணுவின் மகன் நவீனிடமும் நெருங்கிப் பழகுகிறான். முடிவில், ரேணுவையும் திருமணத்திற்கு சம்மதிக்கவைக்கிறான். இந்த இரண்டாவது திருமண வாழ்வில் தயக்கத்துடன் நுழைகிறாள் ரேணு. ஆனால், இந்த வாழ்வு துவக்கத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்தாலும், ஒருகட்டத்தில், இதுவும் பிரிவில் முடிகிறது. துயரின் உச்சகட்டமாக, மகன் நவீனும் அவளிடம் இருந்து பிரிந்து, தவறான பாதையில் செல்லத் துவங்குகிறான்.
பணிப்பெண் தர்ஷினியோ இலங்கையில் உள்ள மகனின் செயல்பாடுகளால் துயருறுகிறாள். முடிவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறாள். தன் மகனது நண்பனை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் லீலிங், முடிவில் அவனாலேயே கொல்லப்படுகிறாள். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அழிந்துபோயின என்ற தகவலால் அதிர்ச்சியடையும் கவிதா மனநோயாளியாக மாறுகிறாள். அவளை மணக்கும் பாலாவும் தனது மகிழ்ச்சியைப் பலிகொடுக்கிறான்.
பத்மாவின் தம்பி கதிரை மணக்கும் மீனா, திருமணத்திற்கு முன்பு அவள் காதலித்தவனின் வக்கிரத்தனமான மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்த வெவ்வேறு மனிதர்களின் கதைகளால் பின்னப்பட்டிருக்கும் நாவலை வாசிக்கையில் வாசகன் வாழ்வின் துயரங்களையும் அலைக்கழிப்புகளையும் விந்தையான கதிமாற்றங்களையும் தானும் அனுபவிக்கிறான். அந்த வகையில், யதார்த்தவாத நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தனது நோக்கத்தைப் பூர்த்திசெய்கிறது.
மனிதர்களின் கதைக்கு இணையாகவே நிலத்தின் கதையும் இந்த நாவலில் பேசப்படுகிறது. காலமாற்றத்தில் சிங்கப்பூர் படிப்படியாக மாறுவதன் சித்திரம் இந்த நாவலில் உள்ளது. குறிப்பாக, பத்மா வாழும் யிசூன் பகுதி அடைந்து வந்த மாற்றங்களை நாவலில் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. புனித மரம் சுப்பிரமணியர் கோயில் ஒரு கதாபாத்திரமாகவே இந்த நாவலில் மாறி நிற்பதை அறியலாம். அந்தக் கோயில் உருவான வரலாற்றையும், கேன்பரா ரோட்டில் இருந்து, யிஷூன் விரைவுரயில் நிலையம் கட்டுவதற்காக அந்தக் கோயில் யிஷூன் தொழிற்பேட்டைக்கு மாறியதுவரையிலான கோயிலின் வரலாற்றையும், அதன் கட்டுமானம் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் என கோயில் முழுக்க இந்த நாவலில் பதிவாகியிருக்கிறது.
இந்த நாவலில் விநோதமான மனிதர்களாக மாதவன், கவிதா மற்றும் மீனா ஆகியோரைச் சொல்லலாம். தனக்கான வாரிசை பெற்றுக்கொடுக்க மறுக்கும் அல்லது தயங்கும் ரேணுவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகும் மாதவனின் நடவடிக்கைகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. பிறகு ஏன் அவன் ரேணுவை விரட்டி விரட்டி காதலிக்கத் துவங்கினான்? காதலனின் மிரட்டலால் மீனா ஏன் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குச் செல்கிறாள். அவளது கணவன் கதிர் ஏன் அவளைத் தனிமையில் விட்டுச் சென்றான். மும்பையில் வீடு கிடைக்காததால் மனைவியைத் தனியே விட்டுச் சென்றான் என்பது நம்பும்படியாக இல்லை. தன்னுடைய திருமணப் புகைப்படங்கள் அழிந்துபோனதால் மனநோயாளியாக மாறும் கவிதாவின் கதாபாத்திரமும் குழப்பம் தருவதாக இருக்கிறது. கல்யாணப் புகைப்படங்கள் கிடைக்காதலால் எவராவது மனநோயாளி ஆவாரா? ஆம். ஆகக்கூடும். வாழ்வு விந்தையானது.
ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வை பல்வேறு சரடுகளிலாகச் சொன்ன விதத்தில் நாவலின் வடிவம் முழுமையடைந்திருக்கிறது. விவாத அம்சமோ, வாழ்வின் மீது நாவல் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளின் விரிவாக்கமோ இடம்பெறாமல், கதைகளைச் சொல்வது என்ற அளவில் மட்டும் நின்றுவிடுகிறது இந்நாவல். நாவல் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளான தனிமை, பிரிவு, மன அழுத்தம், சிக்கல்கள் என இவையாவற்றையும் அந்தந்த கதாபாத்திரங்களை முன்வைத்து தீவிரமான தளத்தில் கேள்விகளை எழுப்பிக்கொள்ளாமல், கதாபாத்திரங்களின் சிக்கல்களை மட்டும் சொல்லி நின்றுவிட்டது நாவல். மேலும், பல இடங்களில், நாவலாசிரியர் நிகழ்வுகளை விரிவாக்கிக் காட்டாமல், அவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். விளைவாக, வாசகனால் கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்குள் கற்பனை மூலம் நுழைய முடியவில்லை. அதனுள் வாழ முடியவில்லை. மாறாக, ஒரு கதைசொல்லியிடம் அமர்ந்து அவர் சொன்ன கதையைக் கேட்ட அனுபவம் மட்டுமே வாய்க்கிறது. மேலும், சில கதாபாத்திரங்களின் (மீனா, லீலிங், சரவணனின் உண்மையான தந்தையாகச் சொல்லப்படும் அந்த தாடிக்காரர்) நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டப்படவில்லை. தத்தமது வாழ்க்கைப்பாடுகளைப் பற்றி அவர்கள் என்ன எண்ணினார்கள், அவர்களின் அகப் போராட்டம் என்ன என்பதையெல்லாம் மேலும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். சில இடங்களில் காலக்குழப்பத்தினைக் காண முடிகிறது. ஒரு அத்தியாயத்தில், சரவணனும், பத்மாவும் வருஷம் 16 திரைப்படத்தைப் பார்த்து வருகிறார்கள். ஆனால், அதே அத்தியாயத்தில் சரவணனின் இடுப்பு வாரில் இருந்து செல்பேசி கனமாக இருந்தது என்று வருகிறது, வருஷம் 16 திரைப்படம் வெளியான காலகட்டத்தில் செல்பேசி கண்டுபிடிக்கப்படவேயில்லை.
மொத்தத்தில், வடிவ ரீதியில் நவீன நாவலின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கும் இந்த நாவல், அதன் உள்ளடக்கத்திலும் நவீன மனம் எதிர்கொள்ளும் அகநெருக்கடிகளைப் பதிவு செய்வதிலும் கணிசமான வெற்றியை அடைந்திருக்கிறது எனலாம். நாவல் வெளியான காலகட்டத்தை வைத்துப் பார்க்கையில், இந்த நாவல் சிங்கப்பூரின் நவீன நாவல்களின் பாதையை துவக்கிவைத்த நாவல் எனலாம். சிங்கையில் அதுவரை மரபான கதைசொல்லல் முறையிலும், பத்திரிகை தொடர்கதை வடிவத்திலும் எழுதப்பட்ட நாவல்களுக்கு மாற்றாக, ஒரு நவீன நாவல் எப்படியிருக்க வேண்டும் என்று காட்டும் விதத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இதன் கலைக்குறைப்பாடுகள் ஒருபக்கத்தில் இருந்தாலும், நாம் கவனிக்க வேண்டியது, இந்த அம்சத்தையே என்பேன்.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com


