Monday, December 9, 2024
Homeslider-- THUS SPAKE பின்நவீனத்துவப் பன்றி

— THUS SPAKE பின்நவீனத்துவப் பன்றி

ரமேஷ் பிரேதன்

விதை என்ற சொல்லிலிருந்து கவிதை என்ற சொல் உருவானது. தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் வாழ்ந்த பாணன் – பாடினி மரபினரிடையே அச்சொல்லுக்கான பொருள் புழக்கத்திற்கு வந்தது. ஐந்திணைகளிலும் திரிந்த இவர்கள் பசிக்குப் பாக்களைத் தின்று யாழினைப் பருகி உயிர் வளர்த்தனர். சங்கம் என்பதை கனவிலும் அறியாத நாடோடிகளான இவர்கள் வரலாற்றில் பாணர், பறையர், பரதவர், பள்ளர், பாண்டியர் எனப் பல்வேறான பகரச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர். பா என்ற ஓரசைச் சொல்லால் அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் இன்று எழுத்து வழக்கில் தமிழர் என்றும் பேச்சு வழக்கில் தமிலர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இந்தத் தமிழர்களின் நவீன காலம் என்பது ஈராயிரமாண்டுகளிலிருந்து வரையறை செய்யப்படுகிறது. பின்நவீனக் காலம் என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து – மன்னிக்கவும்; பிரெஞ்சு மாணவர் புரட்சியிலிருந்து உலக அளவில் கணிக்கப்படுகிறது. அப்புரட்சி நடந்தது 1968. ழாக் தெரிதா என்பாரின் முதல் நூல் பாரிஸ் கம்யூனில் வெளிவந்த காலமும் அதுவே. நான் பிரெஞ்சிந்தியா என்றழைக்கப்பட்ட பாண்டிச்சேரி என்னும் இடைக்காரி நாட்டு வேளிர்க்குடியில் தோன்றிய காலப்பகுதியும் அதுவே. பிறக்கும்போதே நான் போஸ்ட்மார்டனிஸ்டாகப் பிறந்தேன். பிறக்கும்போதே செத்துப் பிறந்ததால் நான் பிரேதன் என அழைக்கப்பட்டேன். கவிதை எழுதிய காலப்பகுதியில் ரமேஷ் என்ற புனைப்பெயரையும் சேர்த்து ரமேஷ் பிரேதன் என ஆளானேன். தமிழ்ப் பின்நவீன / பின்நவீனத்துவக் காலம் என்பதை எனது பிறப்பிலிருந்து நான் கணக்கிடுகிறேன். மிஷேல் ஃபூக்கோ என்பார் அன்றுவரை பெயரிடப்படாத; பிற்காலத்தில் எய்ட்ஸ் எனப் பெயரிடப்பட்ட பால்வினை நோயால் செத்த அன்று நான் கன்னிகழிந்தேன். என் தோழிகளில் ஒருத்தி செய்த பொருளுதவியால் என் முதல் நாவல் வெளிவந்ததைக் கொண்டாடும் முகமாகத்தான் அத்தோழியால் நான் கன்னிகழிந்தேன். அதுநாள்வரை கையே கதியென்றிருந்த நான் அதற்குப் பிறகு கவிஞன் என்ற மனிதக்குரங்கு நிலையிலிருந்து கதைஞன் என்ற நிலைக்குத் தண்டுவடம் நிமிர்த்தப்பட்டு தன்னிலை உயர்ந்தேன்.

வரலாற்றால் ஆன எல்லாமே புனைவுதான். பிரதி என்பது புனைவு. TEXT IS FICTION. பிரதிகள் எல்லாமே புனைவுதான். ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது. பொருள், அதாவது அர்த்தம் என்பதும் புனைவே. சொற்களாலான எல்லாமே புனைவு என்றான பிறகு கவிதை, கதை என்ற பிரிவுகள் இல்லை. எல்லாவற்றையும் பின்நவீனத்துவம் பிரதியென அறுதியிடுகிறது. பிரதியே பிரம்மம். பிரம்மம் என்பது புனைவு. சூன்யம் என்பது பிரதி. மனிதக்குரங்கு என்பது பிரதி; மனிதன் என்பது புனைவு. கவிதையும் புதினமும் வேறுவேறு இல்லை; இரண்டும் புனைவு. அதாவது, இருபொருள் ஒருமொழி.

நான் கன்னிகழிந்த நாள்வரை எனது உடம்பை ஒரு உயிரியல் பொருள் (biological meterial) என்றுதான் கருதிவந்தேன்; கன்னிகழிந்த பிறகுதான் அதை ஓர் உயிரியல் பிரதி (biological text) என்று உய்த்துணர்ந்தேன். எனது உடம்பை ஒரு பிரதியாகக் கண்டறிந்த அக்கணம் ‘மரணமற்ற பெருவாழ்வு’ என்பதன் பொருள் யாது என்பதை அறிந்தேன். உடம்பை ஒரு பிரதியாக உணரும்போது மரணம் இல்லை, பொருளற்ற போர் இல்லை. பிரதி தரும் இன்பம் (plessure of the text) என்பது ஓர் இலக்கியச் சொல்லாடல் மட்டும் அன்று; அது உயிரியல் செயல்பாடுமாகும்.

பின்நவீனத்துவப் பிள்ளையார் என்ற பெயரில் ஏதேனும் ஒரு கோயில் உருவாகலாம்; ஆனால் பின்நவீனத்துவப் பிரதியை திட்டமிட்டு யாரும் உருவாக்குவதில்லை. பின்நவீனத்துவம் என்பது ஒரு கருத்துரு. அதற்குச் சட்டகம் இல்லை. அது அமீபா போன்ற வடிவிலி. கெட்டிதட்டிய எந்தவொரு தத்துவச் சட்டகமும் அதிகார மையமாகச் செயல்படுவது வரலாற்றில் காலந்தோறும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. பின்நவீனப் பிரதி என்றவொன்று கட்டமைக்கப்படுமானால் அது முரண் இயங்கியல் நிலைகொண்டு பின்நவீனத்துவக் கருத்தியலுக்கு எதிரான திசையில் இயங்கும். ஆக, பின்நவீனத்துவப் பிரதி என்ற ஒன்று இல்லை. பின்நவீனத்துவ வாசிப்புத்தான் சாத்தியம். அதிகபட்ச சனநாயகவாதியால் மட்டுமே ஒரு பிரதியை பின்நவீனத்துவ வாசிப்பிற்கு உட்படுத்த முடியும்.

ஒரு பிரதிக்கு நவீன/பின்நவீன என்ற அடைமொழிகள் தேவையில்லை. அது அடைமொழி இல்லாத ரெளடி. பிரெஞ்சுப் பின்காலனிய நிலமான பாண்டிச்சேரியில் அடைகாக்கத் தெரியாத பின்நவீனத்துவப் பன்றி ஒன்று உயிர்வாழ்கிறது; அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். திருக்குறள், பகவத்கீதை, பைபிள், திருக்குரான் எனும் நான்கு பெருங்கதையாடல் பேரிலக்கியங்களையும் பின்நவீனத்துவ வசிப்புக்கு உட்படுத்தப்போகிறேன். இது என் வாழ்நாள் பணியாக இருக்கும். இதற்கான உடற்பலம், மனபலம், பணபலம் இவை மூன்றையும் அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை தரும்.

தமிழில் பின்நவீன அறிவாளிகள் இருக்கிறார்கள், ஆனால் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் இல்லை. நான் முப்பது ஆண்டுகளாக இங்கு இயங்கி வருகிறேன்; இதுவரை ஃபாஸிசம் படியாத அறிவை நான் நுகர்ந்ததில்லை.
சாதியமும் பெண்ணியமும் கவிதையியல் சார்ந்த சொல்லாடல்களில்லை; இவை சமூகவியல் சார்ந்தவை. இந்த அரசியல் சொல்லாடல்களால் பின்நவீனத்துவ வசிப்பிற்கு இணக்கமான குறுங்கதையாடல்களை உருவாக்க முடியாது. திருக்குறள் போன்ற நீதியிலக்கியம் என்னும் பெருங்கதையாடல்களைத்தான் உருவாக்க முடியும். நாம் நீதிபோதகர்களை தத்துவவாதிகள், இலக்கியவாதிகள் என நம்பி ஏமாந்துவிடுகிறோம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தனது முலையைப் பிய்த்தெறிந்து மதுரையை எரிக்கிறாள். இந்த இடத்தில் முலை என்பது ஓர் உடலுறுப்பு என்ற நிலையிலிருந்து ஒரு குறியீடாக/ பிரதியாக பரிணமிக்கிறது. ஒரு பெருங்கதையாடலாக முடிந்துபோகவிருந்த சிலப்பதிகாரம் ஒரு மாயயெதார்த்தத் தாவலில் குறுங்கதையாடலை முன்னெடுக்கும் ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட மனிதரின் வாதையைப் பேசும் உலக இலக்கியமாகிவிடுகிறது. பின்நவீனத்துவ வாசிப்பில் கம்பராமாயணத்திற்கு நேரும் அதோகதி சிலப்பதிகாரத்திற்கு நேர்வதில்லை. வாசிப்பின் அரசியலை கோரிநிற்கும் பின்நவீனத்துவம் பிரதியாக்கத்தின் போது அரசியலைத் திணிப்பதில்லை. கம்பராமாயணம் மேலாதிக்க ஃபாசிச அரசியல் பிரதி. கண்ணகியின் வாதையை ஏற்கும் கவிதையியல் சீதையின் வாதையை நம்புவதில்லை. இங்கு குறுங்கதையாடலுக்கும் பெருங்கதையாடலுக்குமான வாசிப்புக்கான உதாரணங்களாகத்தான் சிலப்பதிகாரம், ராமாயணம் என்ற பிரதிகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் இலக்கிய மேன்மையை மதிப்பிடுவதற்காக இல்லை.

கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றும் மூன்று பிரிவுகளாக இயங்காமல், மூன்றும் ஒன்றுடனொன்று கலந்த நிலையில் புதிய பிரதி என்றவொன்று உருவாகும். ஓவியன், மருத்துவன், பொறியாளன் என பல தளங்களில் இயங்கிய ஒற்றை மூளை லியார்னாடோ டாவின்சி காலத்தில் இருந்தது. அது தொழிற் புரட்சிக்குப் பிறகு தனித்தனி மூளைச் செயல்களாகப் பிரிந்து இயங்கின. இலக்கியத்தில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என்ற நான்கு பெரும் பிரிவுகள் தனித்தனியாக இயங்க மறுத்து ஒருவகையான கூட்டுப் படைப்பாக உருத்திரியும். மூளை என்பதும் மனிதர் என்பதும் ஒரு பிரதி. கோயில் பூசாரி ஒரு பாடலை காதில் சொல்லி உச்சந்தலையில் வேப்பிலையால் அடித்து நெற்றியில் மஞ்சள், குங்குமம், திருநீறு கலவையைப் பூசி சாவிலிருந்து ஒரு நோயாளியை மீட்டெடுப்பதைப் போல அப்பிரதி இருக்கும். இனப்பெருக்கத்தை மறுத்த பாலியல் செயல்பாடு ஊக்குவிக்கப்படும்போது பெண்ணியம் என்பது பொருளற்றுப் போவதுபோல; மேலாதிக்கம் என்பது அடிப்படையான உயிரியல் விதி என்பதை ஏற்றுக்கொள்ளும்போது பொதுவுடமை என்ற கருத்தாக்கம் பொருளற்றதாகிவிடும்.

பொதுவுடைமை, பெண்ணியம் என்ற இரண்டு கற்பிதங்களே மானுட அறம்சார் சொல்லாடல்களை அனைத்து அறிவுத்தளங்களிலும் தொடர்ந்து எழுப்புகின்றன. தன்னிலை ஒவ்வொன்றையும் குற்றவுணர்வில் நிறுத்தி வைப்பதன் மூலம் பொதுவுடமை, பெண்ணியச் சித்தாந்தங்கள் மேலாதிக்க அதிகார மையங்களாக தம்மை ஏகபோகமாக நிறுவிக்கொண்டன. இது இருபதாம் நூற்றாண்டில் நடந்தது. இந்த நூற்றாண்டு அமெரிக்க மைய குடியரசுச் சொல்லாடல்களாலும் இவற்றைத் தவிர்த்த பிற, மத அடிப்படைவாதச் சொல்லாடல்களாலும் நிறுவப்படும். இந்த நூற்றாண்டின் பேரழிவுச் சொல்லாடல்கள் கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படும். அமெரிக்க ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் என்ற இரட்டை எதிரிடைகளால் நமது பேச்சும் எழுத்தும் வடிவமைக்கப்படும். வரலாற்றில் முன்னெப்பொழுதுமில்லாத படுகொலைகள் அரங்கேறும். போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் நடுப்பகுதியில் நிகழ்த்திப்பார்க்கப்பட்ட அணு ஆயுத நடனம் இந்த நூற்றாண்டில் பரவலாக அரங்கேறும். போன நூற்றாண்டில் ஈரோஷிமா, நாகசாகிச் சொல்லாடல்களிலிருந்தே பின்நவீனத்துவ அறம் முன்னெடுக்கப்படுகிறது. பின்நவீனத்துவ அறத்தைப் பேசும் பிரதிகளை எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இனி BINARY OPOSITION என்ற இரட்டை எதிரிடைகளுக்குள் மட்டுமே அடங்கிவிடாது.

கணினி தொழில் நுட்பவளர்ச்சி மனித கற்பனைக்குச் சாத்தியமான அனைத்தையும் காட்சிப்படுத்திவிடுகிறது. மிகையதார்த்த ஓவியங்கள் செல்வாக்கிழந்துவிட்டன. ஸல்வதோர் தலி பித்தநிலையில் படைத்தவை இன்று கணினி வரைகலை மூலம் அதன் பிரம்மாண்ட கலைச் சாதனையின் திகைப்பை ஒன்றுமில்லை என்றாக்கிவிட்டது. ஆனால், ஒன்றுமட்டும் தொழில்நுட்ப அறிவால் தீண்டமுடியாத நிலையில் காலத்தை விஞ்சி நிற்கிறது. ஆம், தத்துவம், கருத்தியல் என்பவை கலைப்படைப்பில் மூலாதாரமாக நின்று செயல்படும்போது வெற்று தொழில்நுட்பக் கலைநேர்த்தி என்பது காலாவதியாகிவிடும். தத்துவச் சொல்லாடல்களின் செறிவே இசை, ஓவியம், எழுத்து மற்றும் நிகழ்த்துக் கலைகளை மனிதார்த்த பொருண்மை மதிப்பீட்டில் முன்நிறுத்தும்.

இலக்கியம் என்பது ஒற்றைத் தன்மையது இல்லை; அது பல்வேறு பண்பாட்டின் சந்திப்பு மையமாக விளங்குகிறது. இரண்டாயிரம் வயது கொண்ட திருக்குறளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அப்பிரதியும் சமண பெளத்த ஆசீவகச் சொல்லாடல்களின் தொகுப்பறிவுதானே தவிர சுயம்புவான தமிழ் அறிவிலிருந்து (epistamalogy of tamil) உருவானது இல்லை. எந்தவொரு பிரதியும் ஓர் இனத்தின் மூல அறிவிலிருந்து மாத்திரமே தோன்றியது இல்லை. ‘கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்ற வேண்டுதல் இருக்கு வேதத்திலேயே பதிவாகி இருக்கிறது. தூய தமிழறிவோ சமஸ்கிருத அறிவோ இல்லை. Epistamalogy of knowledge என்பது ஒரு சமூகத்தின் கூட்டு அறிவு என்பதையே குறிக்கிறது. ஓர் இனத்தின் அறிவு என்பது பொதுவானதாகவும் வழக்காறு என்பது தனித்துவமானதாகவும் இருக்கிறது. அறிவு என்பது சனநாயகத் தன்மை கொண்டது. ஓர் இனத்திற்கு மட்டுமேயான அறிவு ஃபாசிசத் தன்மையது. ஈயத்தை இனி யார் காதிலும் ஊற்றமுடியாது. சர்வதேச கலை இலக்கிய அறிவை முன்னெடுக்கும் அதேவேளையில் இனக்குழு மரபு சார்ந்த அறிவையும் அடையாளப்படுத்துகிறது பின்நவீனத்துவம். மேற்கிலிருந்து knowledge is power என்னும்போது நம்மிடமிருந்து ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ ஆகிறது.

ஒவ்வொரு சொல்லும் பொருள் உடையது மட்டுமில்லை; ஒவ்வொரு சொல்லும் தன்னுள் புனைவைக் கொண்டுள்ளது. சொற்களின் கூட்டியக்கம் இலக்கியம் என்னும் மாபெரும் புனைவைக் கட்டமைக்கிறது. என்னுள் மரணத்தை ஏற்படுத்தாத எந்தவொன்றும் புனைவே. கடவுள் புனைவு, அணு ஆயுதம் அல்புனைவு. புனைவு என்பது போருக்கு எதிரான மனநிலையை தக்கவைக்க உதவும். புனைவு மரணமற்ற பெருவாழ்வை சாத்தியமாக்கும். மாணிக்கவாசகப் பெருமானால் கவிதைக்குள் கடவுளை சிக்கெனப் பிடிக்க முடியும். பின்நவீனத்துவம் மேலதிகப் புனைவுகளை வேண்டிநிற்கிறது. அரசியலைவிட துரிதமாக இலக்கியம் நம்மை விடுதலை செய்யும். பின்நவீனத்துவ அரசியலும் இலக்கியமும் நம்மை எதற்குள்ளும் தேங்கி நிற்கவோ அடைபடவோ விடுவதில்லை. அதிகாரத்திற்கு எதிராக செயல்படும் எந்தவொரு கலைஞரும் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார். எழுதப்படும் இலக்கியம் என்பது எதிர் வரலாறு. அதற்குள்ளிருந்து கிளைக்கும் சொல்லாடல்கள் புதிய விடுதலையைப் பேசும். இனிவரும் காலங்களில் எழுதப்படும் கவிதைகளும் கதைகளும் எதிர் வரலாறாய் அமையும். யாரும் எதிர் வரலாற்றிலிருந்துத் தப்பிக்க முடியாது.

***

ரமேஷ் பிரேதன்

சொல் என்றொரு சொல், மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன், காந்தியைக் கொன்றது தவறு தான், கட்டுரையும் கட்டுக்கதையும், ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து, ஐந்தவித்தான், நல்ல பாம்பு(நீல அணங்கின் கதை), அவன் பெயர் சொல் நூல்களின் ஆசிரியர்.
rameshpredan@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular