Saturday, February 24, 2024

துணை

பரிவை சே.குமார்

முன்னெல்லாம் அடிக்கடி வீட்டுப் பக்கம் வரும் செண்பகம் இப்ப அதிகமா வர்றதில்லை. மூச்சுக்கு முன்னூறு தரம் அக்கா… அக்கான்னு வருவா. கொஞ்ச நாளா பாத்த பேசுறதோட நிறுத்திக்கிறா. இன்னக்கி அவகிட்ட ஏண்டி இங்கிட்டு வர மாட்டேங்கிறேன்னு கேக்கணும்’ என்று நினைத்தபடி மாட்டெருவையை சுமந்து வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பர்வதம்.

‘மழக் காலங்கிறதால பசும்புல்லத் தின்னுட்டு மாடு பூராம் கழிய ஆரம்பிச்சிருச்சு. கசாலயெல்லாம் தொறுத்தொறுன்னு கிடக்கு பாக்கச் சகிக்கல. மாடுக மேலெல்லாம் எருவும் மூத்தரமுமா கலரே மாறிப்போயி கெடக்குக. இந்த சரவணப்பயல மாட்டக் குளிப்பாட்டுடான்னா அசய மாட்டேங்கிறான். நாமதான் குளிப்பாட்டணும் போல. என்ன அந்த சனியங்கள இழுத்துக் கொண்டு போய் சேக்கிறதுதான் கஷ்டம். ஒண்ணு காட்டுக்கு இழுத்தா ஒண்ணு மேட்டுக்கு இழுக்கும். இன்னும் சொல்லப் போனா பில்லப்பசுவ தண்ணிக்குள்ள இறக்க போராடணும். தனி மூக்கனயில போட்டு தரத்தரன்னு இழுத்துக்கிட்டுப் போனாலும் தண்ணிக்கிட்ட போனோடனே தேருக்குக் கட்ட போட்டமாரி நின்னுக்கும். இல்லன்னா நம்மள இழுத்துப் போட்டுட்டு மாக்காலி எடுத்து ஒரே ஓட்டம்… அப்புறம் அந்தக் கயிர பீ பிருக்கெல்லாம் இழுத்துக்கிட்டு திரிஞ்சிட்டு சாந்தரம்தான் வரும். கயரத் தொடவே அருவெறுப்பா வரும்.’

‘அவரு இருந்தா செவ்வா வெள்ளி அவனயும் கூட்டிக்கிட்டு மாடுகளக் குளிப்பாட்டி பொட்டு வச்சு கொண்டாந்து கட்டிட்டு வேலக்கிப் போவாரு. போன வாரம் முதலாளிகூட நாமக்கல் போனவரு நாளக்கித்தான் வாராரு. இன்னக்கி எருக் கொட்டிட்டு வந்தோடன இந்தக் காளய கூட்டிக்கிட்டு போயி கழுவியாந்திரணும். மத்தியானத்துக்கு கீரத்தண்டு கிடக்கு அதோட கருவாட்டப் போட்டு வச்சமின்ன நாக்குக்கு ருசியா சாப்பிடலாம். நாச்சியக்கா மோரு ஊத்தப் போகயில வெங்காயம் தக்காளி வாங்காரச் சொல்லணும் ரெண்டோ மூனோதான் கிடக்குது.’

எதேதோ யோசனைகள் எழுந்த வண்ணம் இருக்க வரப்பில் போய்க்கொண்டிருந்தவளின் எதிரில் எருக்கொட்டிவிட்டு வெறுங்கூடையுடன் செண்பகம் வந்து கொண்டிருந்தாள்.

“என்னக்கா யோசன பலமாயிருக்கு எந்தக் கோட்டயப் பிடிக்க இம்புட்டு யோசன அதுவும் எருக்கூடயோட…” கேட்டுவிட்டுச் சிரித்தாள்.

“ஆமா… கோட்டயப் பிடிச்சி எந்தாலியப்போட்டு அறுத்தேனுல்ல… அது ஒண்ணுதான் எனக்கு இப்பக் கொறச்ச… மாட்டக் குளிப்பாட்டணுமின்னு நெனச்சிக்கிட்டு வந்தேன்.”

“அதான் சரவணன் இருக்கானுல்ல… அவனக் குளிப்பாட்ட சொல்ல வேண்டியதுதானே…”

“அது இருந்த எடத்த விட்டு எந்திரிச்சா என்னத்துக்கு ஆகுறது… சரி நில்லு மேட்டுச் செய்யில கொட்டிட்டு வந்துடுறேன்” என்றபடி நகர்ந்தாள்.

எருவக் கொட்டிட்டு ‘சை கழுஞ்சு வைக்கிதுக மேலெல்லாம் வழிஞ்சு சேல எல்லாம் போச்சு’ என்றபடி வந்தாள்.

“அப்புறம் மாடு சந்தனமாக்கும் போட்டு வக்கிம்”

“உனக்கு கிசும்பு அதிகம்டி… ஒரு வெசயத்த உங்கிட்ட கேக்கணுமின்னே நினச்சேன்டி… இப்பக்கூட அத நெனச்சிக்கிட்டுத்தான் வந்தேன். ஆமா நீ ஏன் இப்பல்லாம் எங்க வீட்டுப் பக்கம் அதிகமா வாறதில்ல என்னடியாச்சு உனக்கு..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா… வேல நெறயாயிருக்கு… அதான்”

“பொய் சொல்லாதடி… அப்படி என்னடி வேலயிருக்கு… ”

“அது…”

“என்னத்தயோ எங்கிட்ட மறக்கிறேன்னு தோணுது… எங்கூட்டுக்கு போவப்படாதுன்னு உங்காத்தா சொன்னுச்சா…”

“ஐய்யோ… அம்மா அதெல்லாம் சொல்லாது. அதுவே உங்கூட்டுப் பக்கம் வராம இருக்கவும் நோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டு இருக்கு… அதுகிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்னா… என்ன பிரச்சன உனக்கு…”

“ஒண்ணுமில்லேக்கா… வேலயிருந்துச்சு அதான்…”

“மறுபடியும் மறக்கிறேடி… எங்கிட்டசொல்லலாமின்னா சொல்லு… இல்லேன்னா பரவாயில்ல விடு”

“அப்பறம் வீட்டுக்கு வாரேங்க்க… இப்ப அம்மா பால் ஊத்தப் போயிருக்கு, தங்கச்சியும் தம்பியும் பரிச்சக்கிப் படிக்கிறாங்க… அப்பா வேலக்கிப் போறதுக்குள்ள அவருக்குச் சாப்பாடு செய்யணும்க்கா.. சரிக்கா நா அப்பறம் வாரேங்க்க” எனச் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டாள்.

‘ம்ம்… என்னத்தயோ மறக்கிறா… என்னான்னுதான் தெரியல… சரி அப்புறம் வரட்டும் என்ன ஏதுன்னு சொல்லாமயா போயிருவா’ என்று நினைத்தபடி சென்றவள் எதிரே நாச்சியக்கா வர, ‘அக்கா வெங்காயம் தக்காளி வாங்கிக்கிட்டு வா… வந்து காசு வாங்கிக்க’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போனாள்.

வாசலில் கிட்டிக்கம்பு செதுக்கிக் கொண்டிருந்த சரவணனை பாத்தவளுக்கு கோபம் தலைக்கேறியது. “தம்பிக்கி காலயில இது ரொம்ப முக்கியம்… இதுதான் உங்களுக்குச் சோறு போடப்போகுது… தூக்கிப் போட்டுட்டு எந்திரிக்கிறியா இல்ல எருக்கூடய தலயில போடவா..?” குங்குமகாளியாய் மாறிக் கத்தினாள்.

“போம்மா… கிட்டி வெளடா செதுக்கி மட்டும் வச்சிட்டு வாரேன்” முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு சொன்னான்.

“சீக்கிரம் வந்து தொல…. மாடுகளப் பாக்கச் சகிக்கல… அதுகளக் குளிப்பாட்டிட்டு நீ என்ன வேணாலும் வெளயாடு… எங்கிட்டு வேணுமின்னாலும் போய்த் தொல”

“மாடு குளியாட்டவா சித்தப்பா வந்தோடனோ அதுகிட்ட சொல்லலாமுல்ல… நா வரல போ” சொல்லிக்கிட்டே அவள் எட்டிக்கிட்டு அடிக்க முடியாதபடி தள்ளிப் போனான்.

“அவுக கலக்கிட்டரு உத்தியோகம் பாக்கிறாக காலயில போனா ராத்திரிக்குத்தான் வாராக. அப்புடி என்னதான் வேலயோ தெரியல. நீங்க கிட்டி வெளாடப் போங்க… எனக்குத்தானே எல்லாம் வந்து கிடக்கு. இன்னக்கி ஒரு பயலுக்கு சோறுயில்ல… பட்டினி கெடங்க அப்பவாச்சும் வீட்டு வேல பாக்கணுங்கிட புத்தி வருதான்னு பாப்போம்’ அவள் இன்னும் கோபத்துடன் பேசவும் “கம்மாயில சொறியிருக்கு… மேலெல்லாம் அரிக்கும்மா…” மெல்ல இறங்கி வந்தான் சரவணன்.

“அப்ப பைப்புல தண்ணி அடிச்சுக் கொடு… நா மாட்டக் கழுவுறேன்”

“தண்ணி அடிக்கிறதுக்கு கம்மாக்கே போகலாம்.”

“சரி அப்ப கம்மாய்க்கே போவோம் வா…”

அடுக்கடுக்கான வேலைகளில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. கீரத்தண்டையும் கருவாட்டையும் போட்டு கொழம்பை கூட்டிவிட அந்த ஏரியாவே மணத்தது. அவளது மாமியாவுக்கு அந்த வாசம் வயித்துப்பசியை கிள்ளி நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

“என்னத்தா… கீரத்தண்டும் கருவாடுமா வக்கிறே.” என்றவாறு நாக்கைச் சப்புக்கொட்டியபடி உள்ளே வந்தாள்.

“ஆமா அயித்த… வேற காயி ஒண்ணுமில்ல… வெங்காயந்தக்காளி மட்டும் நாச்சியக்காவ வாங்கிட்டு வரச்சொன்னேன். அவுக இருந்தா மார்க்கெட்டுல வாங்காந்து தருவாக. நாளைக்கி கிடக்க தட்டப்பயரப் போட்டு வச்சமின்னா நாளானக்கி சந்தயில காயிக வாங்கிக்கலாம்…”

“ம்… இந்த சரவணன் எங்கிட்டுப் போயித் தொலஞ்சான்..? லீவுன்னா வீடு தங்காது… போடுற வெயிலெல்லாம் அது தலயிலதான் விழுகணுமின்னு திரியும். அது வந்துச்சுன்னா ராமசாமியண்ண தோட்டத்துல போயி கத்திரிக்கா புடுங்கிக்கிட்டு வரச்சொல்லு… அங்க வதி அழியுது அத்தாச்சி வந்து புடுங்கிக்க்ச் சொல்லுன்னு அண்ணபொண்டி சொன்னுச்சு. நாம அங்க போறமாரியா பாதயிருக்கு… கல்லும் முள்ளுமாவுல்ல கிடக்கு. இவன விட்டா சைக்கிள்ல ஒரு நிமிசத்துல பொயிட்டு வந்திருவான்.”

“ஆமா… அது எந்தப் பொட்டல்ல கிட்டி வெளாடுதோ… லீவ் விட்டாத்தான் வீடு தங்குறதில்லயில்ல தெருத்தானே பொறக்கும். நாளக்கி நாம்போயி புடுங்கிக்கிட்டு வாறேன்”

“சரி… ராமசாமி அண்ண இந்தப்பக்கமாப் போகயில பாத்துச் சொன்னா அதுவே புடுங்கியாந்து கொடுத்துரும்…” என்றபடி பக்கத்து வீட்டுப்பக்கம் ஊர்க்கதை பேச போய்விட்டாள். இனித் திரும்பி வர ரெண்டு மணியோ, மூணு மணியோ ஆகலாம்.

அரிச்ச தலையைச் சொறிஞ்சிக்கிட்டே ‘பேனு கெடக்கு போல… இந்தப் புடுங்கு புடுங்குது… யாரயாச்சும் பாக்க்ச் சொல்லலாமுன்னா ஒருத்தி கூட இங்கிட்டு வரமாட்டேங்கிறாளுக. நாமளே உருவிப்பாப்போம்’ என முணுமுணுத்துக் கொண்டே ஈருவலிய எடுத்துக்கிட்டு திண்ணையில வந்து உட்கார்ந்தவள் செண்பகம் வருவதைப் பாத்ததும் ‘இவகிட்ட தலயக் சத்த தலயக் கொடுத்தாப் போதும் உருவி எடுத்திருவா… பேன் பாக்குறதுல கில்லாடியில்ல இவ’ என நினைத்துக் கொண்டாள்.

“என்னக்கா வேலயெல்லாம் முடிஞ்சிருச்சா..?”
“இப்பதான்டி முடிச்சேன். சத்தவடம் எந்தலயக் கொஞ்சம் பாரேன்… ஒரே அரிப்பா இருக்கு… நாத்துனா மக அர்ச்சனாப்புள்ள வந்திருந்தால்ல… அயித்த அயித்தன்னு தலயோட தலவச்சிப் படுத்துக் கெடந்தா… அவகிட்டயிருந்து இறங்கிருச்சு போல… புடுங்கி எடுக்குது… எங்க நின்னாலும் தலயச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறது வெக்கமாயிருக்குடி”

“சரி இந்தப்பக்கமாத் திரும்பி உக்காரு… வெளிச்சம் தெரியல. எங்க அத்தய காணோம்..?”

“அவங்க இந்த நேரமெல்லாம் வீட்டுல இருக்கதில்ல… பக்கத்து வீடுகளுக்கு கத பேசப் போயிருவாக…”

“அப்புறம் அவங்களுக்கும் பொழுது போகணுமில்ல…”

“ஆமா அவ அங்க போனா இவ இங்க போனான்னு உருப்புடாத பேச்சுத்தான் பேசப்போறாக… மொத்தத்துல ஊர்ப்பொரணி அம்புட்டுத்தான்”

செண்பகம் சிரித்தபடி அவள் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள்.

பர்வதம் நினைவு வந்தவளாய், “சரி நீ ஏன் இங்கிட்டு வரலங்கிறதுக்கு காரணத்த சொல்லு” என்றாள்.

“அதான் வந்துட்டேன்ல…”

“பேச்ச மாத்தாதடி… எனக்குத் தல வெடிச்சிடும் போல… ஒரு நாள்ல பாதி நேரத்த இங்கிட்டே போக்குறவ திடீர்ன்னு வரலயின்னா… நா எதுவும் திட்டிட்டேனான்னு என்ன நானே கேட்டுக் கொடஞ்சிக்கிட்டுக் கிடக்கேன்”

“அய்யே அதெல்லாம் ஒண்ணுமில்ல… இப்பச் சொல்லாம விடமாட்டே நீ… அப்படித்தானே… சரி முருக மாமா உள்ளயா..?”

“அவன எதுக்கு இப்பக் கேக்குறே..?”

“இல்ல வீட்டுக்குள்ள வேற் யாரும் இருந்தா சொல்ல வேண்டாமேன்னுதான்…” இழுத்தாள்.

“அவனில்ல… கலக்டெரு காலயிலயே வெளிய பொயிட்டாக… சரவணப்பய எங்க வீடு தங்குறான்…. இங்க நீயும் நானும் மட்டுந்தான்… அப்புடி என்னடி ரகசியம் சொல்லப்போறே… சொல்லு கேக்குறேன்”
“பேன் இல்லக்கா ஈறு நெறயயிருக்கு… ஈருவலியால உருவுறேன்… என்னத்தக்காச் சொல்ல… ஒண்ணுமில்லேக்கா… மனசுதான் சரியில்ல…”

பர்வதம் ஒண்ணும் பேசாமல் அவளைப் பார்த்தாள்.

“உங்களுக்கெல்லாம் தெரியாதுக்கா… நா முருக மாமா மேல உசுரயே வச்சிருந்தேன். ஆனா மாமா…”

இப்பத்தான் அவளுக்கு புரிந்தது. அவளது பெரும்பாலான நேரம் இங்கே கழிந்தாலும் அதில் முருகனுடன் அவள் அடிக்கும் லூட்டிதான் அதிகமிருக்கும். அவனை ஏதாவது சொல்லி வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். சின்ன வயதில் இருந்து ஒண்ணா வளர்ந்த பிள்ளைங்க… கேலி முறை வேறு என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

“அவனுமா…?”

“இல்லக்கா… நா மட்டும் சின்ன வயசுலயிருந்தே மாமா மேல ஆசய வளத்துக்கிட்டேன்… பொட்டச்சிதானே” கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“அவங்கிட்ட சொன்னியாடி…”

‘ப்ச்…ப்ச்’ என உதடு சுளித்தவள் “இல்லக்கா… படிப்பு முடிஞ்சதும் சொல்லலாமுன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள…”

“அதுக்குள்ள..?”

“அன்னக்கி உனக்கிட்ட மாமா என்ன சொன்னுச்சு… ஞாபகத்துல இருக்கா… யோசிக்கா…”

“என்ன சொன்னான்…?” எனக் கொஞ்ச நேரம் யோசித்தவளுக்கு அதற்கான விடை கிடைத்தது. கூடப் படிச்ச புள்ள கூடப் பழகுறதாவும் அவளையே கட்டிக்கப் போறேன்னும் முருகன் சொன்னது அவள் ஞாபகத்தில் ஆடியது.

“என்ன சொன்னாங்கன்னு இப்ப ஞாபகம் வந்திருச்சா..?” சுரத்தில்லாமல் கேட்டாள்.

“ம்…”

“நானும் அதக் கேட்டேங்க்கா.. அதுக்கப்புறம் மாமாவ பாக்க எனக்கு மனசுமில்ல தயிரியமும் இல்ல… அதான் இங்கிட்டு வரல… வர நெனக்கல” கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

“அடி கிறுக்கி இதுக்காகவா வராம இருந்தே… அவந்தான் சொல்லியிருக்கான்… இது கிராமமுடி… இங்க சாதி, சனமுன்னு எல்லாமிருக்கு. அவனோட நோக்கத்துக்கெலாம் எதுவும் நடக்காதுடி. இங்க யாரும் அதுக்கு ஒத்துக்கமாட்டோம். எல்லாரும் எதுத்தா மனசு மாறாமய போயிருவான். அப்படியே அவளத்தான் கட்டுவேன்னு கட்டினா உனக்கு அவனவிட நல்ல மாப்ள கெடக்காமயா போயிடுவான். போட கழுதன்னு சொல்லிட்டு வர்றவனுக்கு கழுத்த நீட்டிட்டு வாழ வேண்டியதுதானே….”

“கெடப்பாங்க்… கெடய்ப்பான்… முருக மாமாமாரி ஒருத்தங் கெடப்பானா..?” வார்த்தைகள் தவிப்பாய் வந்து விழுந்தது.

அதற்கு பர்வதத்தால் பதில் சொல்ல முடியலை.

“என்னால போன போகட்டுமின்னு விட்டுட்டுப் போக முடியலக்கா… மாமாவப் பாக்காமயிருக்க நெனச்சாலும் முடியலக்கா. ரோட்ல அது வர்றப்ப அதோட வண்டிச் சத்தம் கேட்டு என்னயறியாம எட்டிப் பாக்கச் சொல்லுதுக்கா… கேணச்சிறுக்கி மனசுக்குள்ள ரொம்பவே மாமாவச் சொமந்துட்டேன்” அழுதவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“சரி விடு… மாமாகிட்டயும் அயித்தக்கிட்டயும் பேசி உன்னய அவனுக்கு நா உன்னயக் கட்டி வக்கிறேன்… நம்மள மீறியாப் போகப் போறான்.”

“வேண்டாங்க்கா… கட்டாயப்படுத்தி வாழ்க்கயில சேந்தா ரெண்டு பேருக்குமே சந்தோசம் போயிடுமுக்கா. மாமாவோட சந்தோசத்தயும் பறிச்சிட்டு, அவர விரும்புன பொண்ணோட சந்தோசத்தயும் பறிச்சிட்டு நா மட்டும் எப்படிக்கா நல்லாயிருக்க முடியும்… நல்லா வாழ முடியும் சொல்லு. நா மட்டும்தானே விரும்புனேன்… மாமா இல்லயில்ல. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்காம ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. நம்மூருக்கு வர்ற பாதயில சுமதாங்கி ஒண்ணுயிருக்குல்ல… இன்னக்கி அது ஒரு காட்சிப் பொருளாட்டம் நிக்கலாம். பலருக்கு எதுக்கு ரெண்டு கல்ல ஊனி, அதுமேல ஒரு கல்லப் போட்டு வச்சிருக்காங்கன்னு தோணலாம். அதயெதுக்கு அந்தக் காலத்துல எல்லா ரோட்டுலயும் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒருக்கா வச்சிருக்காங்கன்னு இன்னக்கி யாரும் யோசிக்கிறதில்ல… அத ரோட்டுல நிக்கிற ஏதோ ஒரு கல்லுன்னு கடந்து போயிடுறோம். பல இடங்கள்ல அதை உடச்சிப் போட்டிருக்காங்க… சில இடங்கள்ல அந்தமாரிக் கல்லு வீட்டு வாசப்படிக்கு ஆகும்ன்னு தூக்கிட்டுப் போயிட்டாங்கதானே. ஆனா அது அந்தக்காலத்துல பல பேரோட சுமய சலிப்பிலாமச் சுமந்திருக்கும்ல்லக்கா. .தூரத்துலயிருந்து சுமயோட வர்றவங்க, ஆளுத் தொணயில்லாம தூக்கி வர்ற சுமய இறக்கி வச்சிட்டு கழுத்த நீவி, கால உதறி, தல வேதனயப் போக்கித் தங்களக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்க பயன்பட்டிருக்குல்ல… அதோட வேலயே அதுமேல வக்கிற சுமயயெல்லாம் சுமக்குறது மட்டுந்தானேக்கா… அதுல சந்தோசமான சும… துக்கமான சுமன்னு எல்லாமே கலந்துதான இருந்திருக்கும் இல்லயாக்கா. எனக்கென்னக்கா நா ஒரேயொரு சுமயத்தானே சுமக்கப்போறே… ஆமாக்கா முருக மாமா நெனப்பச் சுமந்துக்கிட்டு கிடக்கிறதும் ஒரு சுமதான்னாலும் அது சுகமான சுமதானேக்கா. அந்த சுகத்த நா இப்பவும் எப்பவும் அனுபவிக்கணும்ன்னு நெனக்கிறேங்க… அது மட்டும் எனக்குப் போதும். மாமா விரும்புன பொண்ணயே கட்டிக்கட்டும். அவரு விருப்பப்படி கட்டி வச்சிருங்கக்கா… யாரும் எதுக்காதீங்க… அவரு வாழ்க்கய வாழட்டும்… அது போதுமெனக்கு. இதப்பத்தி தயவுசெய்து வீட்டுல யார்கிட்ட பேசாதக்கா… நா கெளம்புறேங்க்கா” என்றபடி கண்ணீரை துடித்துக் கொண்டு எழுந்த செண்பகம், தன் பின்பக்கத்துத் தூசியைத் தட்டிவிட்டபடி அங்கிருந்து நகர,

சுமையை மட்டும் தூக்கிக் கொண்டு அவனைத் தட்டிவிட்டுப் போவதாக பர்வதத்துக்குத் தோன்ற,

கண்களில் நீர்க்கோர்க்க அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

பரிவை சே.குமார் – தற்பொழுது பணி நிமித்தம் அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை வெளியாகியது. இரண்டாவது தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இவரது சிறுகதை ஒன்று யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது. தொகுப்பின் பெயர் “கொரோனா காலம்”. இவரது படைப்புகளை வாங்க இங்கே சொடுக்கவும்

RELATED ARTICLES

1 COMMENT

  1. எனது கதைக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular