Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்திரை யுகத்தில் இலக்கியச் சூழல்

திரை யுகத்தில் இலக்கியச் சூழல்

ஜீவ கரிகாலன்

டுமையான முறையில் காகித விலையேற்றமும் வரியும் அச்சுத் தொழிலை ஸ்தம்பிக்க வைத்துள்ள காலத்தில்தான் ஒரு பதிப்பாளனாக இந்த கட்டுரையைப் பகிர்கிறேன். டிஜிட்டல் உலகில் பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு பிந்தைய பொருளாதார நசிவு பெருமளவு அச்சு ஊடகங்களைப் பாதித்தும், மின் ஊடகங்களுக்கு ஊட்டமளித்தும் என இரண்டு விதத்திலும் நெருக்கடிகளை உருவாக்கியது. இத்தகைய காலத்தில் திரையுகம் என்று இச்சூழலை விளிப்பதில் ஒரு பொருத்தம் இருக்கிறது.

இந்த தலைப்பைப் பற்றி என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களும் “திரையுகம் எனும் சொல்லாடலை இத்தனை தீவிரமான இலக்கிய மேடையில் ஏன் பயன்படுத்துகிறாய்” என்று கேட்டனர். இந்தச் சொற்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டவை என அவர்களுக்குத் தெரியும். 2000-களின் ஆரம்பத்திலேயே இந்தச் சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001-ல் வெளிவந்த ஒரு கிராஃபிக் நாவலில் நாம் வாழ்கின்ற இந்த காலத்தை இவ்வாறு குறிப்பிடும் ஒரு அருங்காட்சியகம் இருக்கும். அது பனியுகம், கற்காலம், உலோகக் காலம் என பரிணமித்த மனிதகுல வரலாற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியம்.

இணையம் வாயிலாக படைப்புகளை மின்னஞ்சல் செய்யும் வழக்கம் ஆரம்பித்த 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம், வலைப்பூவின் அறிமுகம், சமூக ஊடகங்களின் அறிமுகம், திறன்பேசிகளின் பயன்பாடு, இணைய அலைவரிசைகளின் வசதியால் பெருகிய இணைய இதழ்கள், மின்னணு புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள், காணொளிகள், அதற்கான செயலிகள் எனப் பல்கிப்பெருகி வாசிப்பை, எழுத்தை, இலக்கியச் சூழலை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை அலசிப் பார்ப்பதற்கு இந்தச் சொல் பொருத்தமானது தான் இல்லையா? தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இருபது வருடங்களில் ஒரு நூற்றாண்டுக்கான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதால் நுகர்வு / உற்பத்தி அல்லது வாசிப்பு / படைப்பு என்கிற தன்மைகளில் பாரிய வித்தியாசங்களை அடையாளம் காண முடியும். அதில் பிரதானமான ஒன்று, தீவிர இலக்கியத்திற்கான எல்லைகள் புதைந்து போனவையாகின்றன, ஏற்கனவே இருந்தவர்களுக்கு அது இருந்த தடம் தெரியும் என்பதால் இதில் வாதம் தேவையில்லை.

ஒரு ஊடகத்தின் தாக்கம் இத்தனை தூரம் பொருட்படுத்த வேண்டியதா என்பதை மொழியின் லிபிக்கள் அடைந்த பரிணாமம் குறித்து கவனிக்கையில் புரியும். அச்சு இயந்திரம் வரும்வரை கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்தவையே. அவையே பனையோலைகளில் எழுதப்படுகையில் வட்டெழுத்தாகவும் உருவெடுக்கிறது. அச்சு இயந்திரம் என்ற தொழில்நுட்பம் எழுத்து வடிவத்தை அதற்கு மேற்கொண்டு மாறுதலுக்குட்படுத்தாது நிலைப்படுத்திவிட்டது. அதற்கு பின்னர் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டாலும், சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டாலும் அடிப்படையான எந்த மாற்றங்களும் நிகழவில்லை.

அவ்வகையில் திரையுகம் எனப்படும் டிஜிட்டல் உலகம் ஒரு ஊடகமாக மாற ஆரம்பித்தவுடன் அது இலக்கியச் சூழலில் நிகழ்த்தியிருக்கும் மாற்றம், மாற்றத்தின் வேகம் இரண்டுமே மிகப்பெரியது. அதுவும் கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இதன் தாக்கம் மிகவும் பெருகிற்று. அதில் குறிப்பிடத்தக்க நன்மைகளும் உள்ளன.

டிஜிட்டல் ஊடகங்களின் பரிணாமமும் வளர்ச்சியும்

சமூக ஊடகங்களின் தாக்கம் பெருமளவு 2010-க்குப் பிறகுதான் வளர்ச்சியுற்றன. அதற்கு முன்னரே தமிழ் சூழலில் வலைப்பூக்களில், வலைதளங்களில் தீவிரமாக எழுத ஆரம்பித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வாசகர்களைப் (இணைய வசதி கொண்ட வாசகர்களை) பெற்றார்கள். சிற்றிதழ் பரப்பின் வாசக-இணையத்தை வைத்திருக்கும் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் விரிவுபடுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கான சந்தை, வாசக அமைப்புகளை இணையதளங்கள்தான் உண்டாக்கின என்பதை உணர முடியும். 2008-க்குப் பிறகான சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி, ஈழம், ஆஃப்கன், வளைகுடா நாடுகளின் நடந்தேறிய போர் ஆகியன பொழுதுபோக்கு ஊடகங்களை சமூக ஊடகமாக மாற்றின.

தமிழகத்திலும் இன அழிப்பு, சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களை முன்வைத்து சமூக ஊடகமாக உருமாற்றம் கொண்டது.. எந்த எழுத்து மரபிலும், சிந்தனைப் பள்ளியிலும் சேராதவர்கள் அரசியல்படுத்தப்பட்ட அமைப்புகளில் அல்லது சுயமாக வந்தப் புதியவர்கள் பரவலாக ஒரு எழுத்துக் களத்தைக் கண்டடைந்தார்கள்.

திரையுகத்தில் இலக்கியச் சந்தை

வலைப்பூக்களில் இருந்து நூல்கள் பதிப்பிக்கப்படும் காலத்தில்தான் பிரபல புத்தகக்கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வந்தன. சமூக ஊடகம் வளரும்பொழுது தொழில்நுட்பமும் அடுத்த கட்டத்திற்கு வருகையில் குறைந்த எண்ணிக்கையிலும் நூல்கள் அச்சிடும் சாத்தியம் உருவானது. 2010-க்குப் பின்னர் புதிய பதிப்பகங்கள், புதிய எழுத்தாளர்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தார்கள். காணொளி ஊடகங்கள், ஒலிப் புத்தகங்கள் போடும் நிறுவனங்கள் சந்தையை நிறுவ ஆரம்பித்தன.

வாசிப்புக்காக இயங்கும் சமூக ஊடகக் குழுக்களே வாசிப்பை விரிவாக்க ஆரம்பித்து, எழுத வைத்து, பதிப்பித்து, விருது அளிக்கும் வரை போஷிக்கவும் செய்ய ஆரம்பித்துவிட்டன. திருமணத்திற்கான ஒட்டுமொத்த ஒப்பந்த முகமை போல் ஒரு குழுவில் இணைந்தால் எல்லாவற்றுக்குமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்கிற அளவிற்கு.

சந்தையாதல் என்கிற விஷயத்தில் கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் புத்தகச் சந்தையில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மேற்சொன்ன இவ்வாக்கியம் இலக்கியத்தரம் அ மதிப்பீடுகள் எவற்றோடும் தொடர்புடையது அல்ல. ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு என்று பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் சந்தை விரிவடையும் ஆகிருதியோடுதான் இருக்கிறது.

புதிய யுகத்தின் வாசிப்பு

நல்ல விமர்சனங்களின் காரணத்தால் ஒரு நூல் வாசிக்கப்படுவது எப்போதும் ஆரோக்கியமானதுதான். ஆனால் வாசகர்களைக் கவரும் விதத்தில் அமையும் படைப்புகளே அதிகம் வாசிக்கப்படுகின்றன.

கவரும் விதம் எனச் சொல்வது சித்தாந்தத்தையோ, தத்துவத்தையோ, அரசியலையோ முன்னெடுக்கும் படைப்பிலக்கியங்கள் வாசிக்கப்படுவது. அவ்விதமே சமூக ஊடகப் பிரச்சாரங்கள், குழுக்களில் நிகழ்கின்ற பரிந்துரைகள், ட்ரெண்டிங் எனச் சொல்லப்படும் பரபரப்பை உருவாக்கும் படைப்புகள் அதிக அளவு வாசிக்கப்படுதல் ஆரோக்கியம் இல்லாமல் பேசப்பட்டாலும், தற்காலத்தில் வாசிப்பைத் தீர்மானிக்க விமர்சனக் கட்டுரை தவிர்த்து எண்ணற்ற சந்தைப்படுத்தும் காரணிகளே வலுவாக இருக்கின்றன. இது சந்தையின் ஆரோக்கியத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதது.

செய்திகளையே கேலிப்படங்கள் வழி தெரிந்து கொள்ளும் மீம் கல்ச்சர் காலத்தில், தற்காலத்தின் புதிய வாசகர்கள் வாசிப்பதைக் காட்டிலும் கதைகளாகக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். யூ-ட்யூப், ஃபேஸ்-புக் உள்ளிட்ட செயலிகள் வாயிலாகவும் வாட்ஸப் போன்ற பகிரிகள் வாயிலாகவும் வாசிப்பு குறித்த முடிவுகளை எடுக்கிறார்கள். பெரும்பாலான வாசிப்புக்கான தேர்வு இப்படி குழுவாதத்தாலும் ட்ரெண்டிங் மற்றும் அசட்டுப் பரிந்துரைகளின் காரணத்தால் நிகழும் என்றாலும், அதேசமயம் நல்ல நூல்களையும் இதழ்களையும் இவ்வகையான ஊடகத்தில் சரியாகக் கொண்டு சேர்த்ததால் வாசகப் பரப்பு கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகமானதும் கூட. உதாரணம் புதுமைப்பித்தன் முழு சிறுகதைத் தொகுதி தரமான பதிப்பிலும் மலிவு விலையிலும் என கவனம் பெறும்போது, கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் மட்டும் 25000-க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையாகி இருந்தன. அதில் பத்து சதவீத வாசகர்கள் புதிதாக வாசிப்பை தக்க வைத்துக்கொண்டாலே அது ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை என்று சொல்ல முடியும்.

தொலைக்காட்சியில் வந்த ஒரு ரியாலிட்டி தொடரில் வந்த நூல்களின் பரிந்துரைகள் பல ஆயிரக்கணக்கில் விற்பனை ஆனதும் இத்தகையதுதான். இதனால் வரும் பாதகங்களை சாதகங்களைக் கொண்டு மறக்கலாம்.

வாசகர்களைப் பொறுத்தமட்டில் வாசிப்பிற்கான வழிகள் பலவிதத்தில் அனுகூலமாகி விட்டன. கிண்டில் செயலி வந்த பின்னர் தூக்கிச் சுமக்கும் பளு குறைகிறது என மின் புத்தகமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். புதிய தலைமுறையைச் சார்ந்தவர்கள் நேரடியாகவே மின் புத்தகமாகப் படிப்பதில் சௌகரியம் கொள்கிறார்கள். ஆனால் இந்த யுகத்தில்தான் பைரசி என்று சொல்லப்படும் திருட்டு மின்னணு கோப்புகளின் எண்ணிக்கை இந்த துறைக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது எனலாம்.

புது யுகத்தின் தேடலும் படைப்பும்

“தேடல்” இது படைப்பின் மூலப்பொருட்களின் ஒன்று. 21-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை படைப்பிலக்கியத்தில் தேடலுக்கு இருந்த முக்கியத்துவம் முற்றிலுமாக மாறிவிட்டது. தொழில் நுட்பங்களற்ற காலத்தில் நவீன இலக்கியங்கள் செழிப்படைய ஒருபுறம் சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வு, நாட்டாரியல் பதிவு என்று வேலை செய்தவர்கள் ஒருபுறம். மேற்குலகின் தற்கால இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டு, தமது சிற்றிதழ்கள் வாயிலாக மொழிபெயர்ப்புகளைத் தருவித்து, அயல் இலக்கியங்களை வாசித்து அவை குறித்து அறிமுகம் செய்து மாற்றங்களைக் கொண்டு வருபவர்கள் ஒருபுறம் என தேடல்கள் வாயிலாகவே படைப்புகளைக் கொண்டு வந்தவர்கள் அவர்கள். தாம் தேடிச்செல்கின்ற ஒன்று கிடைக்காமல் போகலாம், அந்தத் தேடலில் கிடைத்தற்கரிய வேறு ஒன்று கிடைக்கலாம் – அதுவே வாசிக்க மொழிமாற்றம் செய்யப்பட்டோ, அறிமுகப்படுத்தப்பட்டோ இருக்கக்கூடும்.

இலக்கியத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்ற பின் ‘பாப் டிலன்’ குறித்து முதன்முதலாக அறிமுகம் செய்துகொள்ளும் இதழ்கள், படைப்பாளர்களுக்கு மத்தியில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு சிற்றிதழுக்கு “கடவுளின் குரல்” என்று இசை விமர்சனம் எழுதப்பட்டிருந்த வரலாறு, இலக்கற்ற அல்லது சுதந்திரமான தேடலின் விளைவு என்று பெயர் வைக்கலாம்.

அதே சமயம் புதுயுகத்தின் தேடல் மிக எளிமையாகச் சுருங்கிற்று என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட விசயமோ, தத்துவமோ, வரலாற்றுப் பின்னணியோ, செய்தியோ எதுவாக இருந்தாலும் இன்று அது குறித்த தேடலுக்கு வேண்டிய மெனக்கெடல் எல்லாம் ஒரு வார்த்தை தான் (keyword) அல்லது அதற்குத் தேவையான ஹாஷ் டாக். எது குறித்துத் தேடுகிறோமோ அது குறித்த ஒரு சரியான வார்த்தையைக் குறிப்பிட்டுத் தேடினாலே போதும். நாம் அடைய வேண்டியவற்றை எளிமையான முறையில் காலத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

வாசிப்பின் பரப்பு எப்படி விரிவடைந்து இருக்கிறதோ அவ்வாறே தேடலின் பரப்பும் விரிவடைந்த அதே நேரம் அதற்கு நேர்மாறாக தேடலின் ஆழம் மிகவும் குறைந்து போனதாக மாறிவிடுகிறது. ஒன்றைத் தேடுகையில் வேறு ஒன்று அதைவிட நெருக்காமானதாகவோ ஈர்ப்பதாகவோ தெரிகின்ற அற்புதங்கள் ஏதுமற்ற வாழ்வாக மாறுகிறது.

மாத இதழ்களிலோ, வார இதழ்களிலோ ஒரு புக்கரோ அல்லது நோபல் விருது பெற்ற படைப்பாளியின் படைப்புகளைக் குறித்த கட்டுரை எழுதவோ ஒரு கீ-வேர்ட் போதுமானதாக அமைந்துவிடுகிறது. அதற்கு மீறியும் புதிய நூற்றாண்டில் எழுத வந்த படைப்பாளர்கள், அவர்தம் வாசிப்பு, பொருளாதார ரீதியில் கிடைக்கின்ற வாய்ப்பு, பணி நிமித்தம் கிடைக்கின்ற பயண வாய்ப்பு போன்றவை மிகப்பெரிய வாய்ப்புகளையும் தந்து விடுகிறது.

ஒரு நூல் குறித்து மதிப்புரை எழுதுவது போலவே, அந்த ஆசிரியரோடு காணொளி வாயிலாக நேர்காணல் செய்து பதிப்பிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தச் சாத்தியங்கள் அனைத்தையும் உருவாக்கித் தந்தது இன்றைய டிஜிட்டல் யுகம்தான். உலகின் எந்த மூலையிலும் தயாராகும் இலக்கியப் படைப்புகளையும் கூட இன்று வாங்க இயலும். எந்த மூலைக்கும் படைப்பிலக்கியத்தைக் கொண்டு சேர்க்கவும் இயலும்.

முன்பு உரிமம் பெறுவதற்கு கூட யெர்மனி, பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று முகவர்களை வைத்துப் பேசி படைப்புகளுக்கான உரிமம் வாங்க வேண்டியிருந்தது. இப்போது வர்ச்சுவல் புத்தக்காட்சிகள் வாயிலாக ஊரில் இருந்தபடியே சரவதேச புத்தகக் காட்சிகளில் கலந்துகொள்ள முடியுகிறது.

திரையுகத்தில் பெருந்தொற்றின் பங்கு

பெருந்தொற்று காலத்தில் பல பதிப்புகளை நிறுவனங்களும் எதிர்பாராத அளவு நஷ்டங்களைச் சந்தித்தாலும், பெருந்தொற்று காலம் புதிய சந்தையை உருவாக்கித் தருமளவு நிறைய விஷயங்களை புதிதாகத் தருவித்தது. ஊரடங்கு காலம் என்பது பெரிய அளவிலான செலவழிக்க முடியாத ஓய்வுக் காலத்தை (Leisure) தந்தது. பெருந்தொற்று எனும் அலையால் ஸ்தம்பித்துப் போன பொருளாதார இயக்கம் மக்களைப் பெரிதும் அச்சமூட்டியதில் வியப்பில்லை. அச்சம் என்பது கேளிக்கைகளின் போதாமைகளை வாசிப்பின் பயனாக உணர வைத்தது. இந்த ஓய்வும் அச்சமும் அவர்களுக்கு வாசிப்பை பழக்கப்படுத்தின என்று சொல்ல முடியும்.

பழக்கமே சந்தையை மீண்டும் தக்க வைத்தது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலை முடிந்த காலத்தில் மிகப்பெரிய லாபத்தை புத்தகச் சந்தை ஈட்டுத் தந்தது. ஆனால் அது எல்லாருக்குமானது அல்ல, ஊரடங்கு காலத்தில் மின் ஊடகங்கள் வழி தங்களை, தங்களது படைப்புகளை, ஆசிரியர்களைக் கொண்டு சேர்த்த நிறுவனங்கள் மட்டுமே ஊரடங்கு காலம் ஏற்படுத்திக் கொடுத்த வணிக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

தங்களைத் தகவமைத்துக் கொள்ளாத ஏனைய பாரம்பரிய புத்தக நிறுவனங்கள் தம்மை நிலைநிறுத்த பெரும் போராட்டங்களை எதிர்கொண்டன. ஒருபுறம் மின் துகளி ஊடகங்களின் பெரும் வெற்றியைப் பேசிக் கொண்டிருக்கையில்தான் இடி விழுந்தாற்போல அமேசான் எனும் பெரும் ஆலமரம் தனது அச்சுத் தொழில் எனும் கிளைகளைத் தனக்குத்தானே வெட்டிக் கொண்டது.

திரையுகத்தில்: பதிப்பாளனும் – விற்பனையாளனும்

பதிப்புத்துறையில் இந்த ஆண்டில் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி என்றால் வெஸ்ட் லாண்ட் எனும் அறுபதாண்டு கால பதிப்புலக வணிக அடையாளம் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1962-ல் ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2008-ல் டாட்டா நிறுவனத்தால் கைக்கொள்ளப்பட்டது. பின்னர் 2016-ல் அமேசான் வாங்கியது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிப்புலகத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இத்தனைக்கும் வெஸ்ட்லாண்ட் அண்மையில் வெளியிட்ட சில நூல்கள் மிகவும் கவனிக்கப்பட்ட நூல்களே, அண்மைக்காலத்தில் அமீஷ் எழுதிய மூன்று நாவல்கள் வரிசை (ஷிவா ட்ரையாலஜி, ராம் சந்திர வரிசை) விற்பனையில் அசுர சாதனை படைத்தது. அவ்வகையில் சேத்தன் பகத், அமிஷ் ட்ரிபாதி உள்ளிட்ட பெஸ்ட் செல்லர்களை வைத்துக்கொண்டு ஒரு வணிக நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குள் தன் சேவையை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்? லாபமின்மை மட்டுமா?

அப்படியென்றால் தாக்குப் பிடிக்கின்ற ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் தொழில் மீது வைத்திருக்கின்ற மதிப்பீடுகளுக்கும் ஒரு பெரும் நிறுவனத்தின் மதிப்பீடுகளுக்கும் இருக்கின்ற வித்தியாசம் என்ன? விழுமியங்களின் அச்சில் சுழலும் துறை அல்லவா இது?

மின் புத்தகங்களின் வரவிற்கு பின்னரே பதிப்புலகம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் மின் புத்தகங்களால் வாசிப்பு பழக்கம் அதிகமானதே என்பதை இத்துறையைச் சார்ந்தவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்ட விசயம். கிண்டில் அறிமுகமானதும் திருட்டுப் புத்தகச் சந்தையும் அதற்கு நிகராக தன் எல்லையை விரிவுபடுத்தியது. வெஸ்ட் லாண்ட் போன்ற இந்திய அளவில் மிகப்பெரிய வணிக ப்ராண்ட் ஒன்றை அமேசான் கையகப்படுத்திய காலத்தில் புத்தகச் சந்தை பெருமளவு இணைய வர்த்தகத்திற்கு மாறியிருந்தது. கணிசமான அளவிற்கு Self Publishing portal-கள் (எழுத்தாளர்களிடம் கட்டணம் வசூலித்து புத்தகம் போடும் முறை) உருவாகியிருந்தன. ஒலிப்புத்தகங்கள் வர ஆரம்பித்தன, செட்டாப் பாக்ஸோடு, அகன்ற அலைவரிசை இணைய சேவை நிறுவனங்களோடு புத்தகப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் உருவாகின.

கோவிட் ஊரடங்கு காலம் வாசிப்பிற்கான இந்த வணிகத்தை இணைய வாசிப்பிற்கும் ஒலிப்புத்தக சந்தைக்கும் உள்ள வாய்ப்பைப் பெரிதுபடுத்தியது.

புத்தகக்கடை தவிர்த்து நேரடியாக வாசகர்களைச் சந்தித்து விற்பனை செய்ய இருக்கின்ற வாய்ப்பு புத்தகக் கண்காட்சி. கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடைபெற்று வந்ததும் அதன் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வந்ததும் நாம் அறிந்தது தான். இந்நிலையில் கோவிட் 19-க்கு பின்னான சூழலில் இணைய வழியில் விற்பனை என்பதே மற்ற துறைகளைப் போல பிரதானச் சந்தையாக மாறிவிட்டிருப்பதைக் காண முடியும். இணைய வழி வர்த்தகத்தின் அதிகபட்ச பங்கு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டிற்கு தான். அதிலும் மின்புத்தகங்களில் 90%-க்கும் அதிகமான பங்கு ‘கிண்டிலை’ச் சேர்ந்ததுதான்.

எல்லா பதிப்பகங்களும் தமது நூல்களை பதிவேற்றுவதுடன் சுயமாகப் பதிப்பிப்பவர்கள், குழுமமாகச் செயல்படுபவர்கள் என எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குமிடமாக இது இருப்பதால் சந்தையின் அதிபதியாகிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு நிறுவனமும் தன் சொந்த இணையதளத்துடன் அமேசான், ஃப்ளிப் கார்ட் இணைய தளங்களின் இணைப்பையும் கொடுக்க ஆரம்பித்து விட்டன.

அண்மையில் சில முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் புத்தகக் கடைக்கு பதிப்பகங்கள் கொடுக்கும் தள்ளுபடி விலையை விட மிக அதிகமான தள்ளுபடியில் ஃப்ளிப் கார்ட் (அல்லது இணையச்சேவை) வாயிலாக ஒரு புகழ்பெற்ற அச்சகமே நூல் விற்பனையை அறிவித்திருந்தது. இதன் பெயர் ஒன் புக் மாடல். இதன்படி வாசகர் ஒருவர் கோரும் ஒரேயொரு நூலை மட்டும் அச்சகம் அச்சிட்டு அவருக்கு அனுப்பி வைக்கும். அதற்கு மேற்பட்ட ஒரு பிரதியைக்கூட இருப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக அந்த அச்சகமே பதிப்பகங்களோடு ஒரு ஒப்பந்தத்தைப் போடுகிறது. தாங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலின் மின் கோப்புகளையும் இந்த அச்சகம் வாங்கிக்கொண்டு அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற Multivendor Platform-கள் வாயிலாக நூல் விற்பனை செய்து அதற்கான கமிஷனை பதிப்பகத்திற்கு அளிக்கிறது.

பல பதிப்பகங்களுக்கு இத்திட்டம் லாபகரமானதாகத் தெரியவில்லை என்றாலும், இது நஷ்டத்தை தவிர்க்கும் வாய்ப்பாகத் தெரிகிறது. அதாவது பெராடோ தத்துவம் போல ஒரு பதிப்பகத்தின் இருபது சதவீத புத்தகங்களைக் கொண்டுதான் அதன் எண்பது சதவீத வருமானம் இருக்கின்றது என்கிற உண்மையின் அடிப்படையில் மீதமிருக்கின்ற 80 சதவீத நூல்களை இதைப் போன்ற ஒன் புக் மாடல் எனும் புத்தக இருப்பு வைக்கத் தேவையற்ற வணிகமாக மாற்ற இது உதவுகிறது. அதே வேளையில் ஒரு புத்தகக்கடைக்கே கிடைக்காத விலையில் ஒரு வாசகனுக்கு புத்தகத்தைச் சேர்க்க முடிகிறது என்கிற அளவிலும் இதனை ஒரு நல்வாய்ப்பாக பார்க்க இயலும்.

பொருளாதாரமாக மொத்த வணிக நடவடிக்கைகளின் புள்ளி விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடுவதில் மட்டும் நலன் கிட்டுவதில்லை. மாறாக பல படிநிலைகளில் ஒரு துறையில் ஈடுபடுபவர்களின் பங்கையும் மதிப்பிட வேண்டியிருக்கிறது.

பதிப்புத் துறையைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளருக்கும் வாசகருக்கும் இடையில் விநியோகஸ்தர், விற்பனையாளர் என்கிற அடுக்குகள் உண்டு. ஒரு நூலின் விலையில் 25-40 சதவீதம் பதிப்பாளருக்கும், 10-15 எழுத்தாளருக்கும், 10 சதவீதம் விநியோகம் செய்பவருக்கும், 30-40 விற்பனையாளருக்கும் எனப் பங்கு இருக்கின்றது. ஒரு பதிப்பாளரின் பங்கிலிருந்து அச்சகம், வடிவமைப்பு, எழுத்தாளர், மார்க்கெடிங் என்கிற செலவுகள் இருக்கின்றன. இதில் நேரடியாக அச்சகமே புத்தக அச்சிலிருந்து மார்க்கெடிங், விற்பனை என எல்லா செலவுகளையும் கைகொள்கையில் இடைநிலையில் அங்கம் வகிப்போரின் நிலை கேள்விக்குறியாகிறது.

ஒரு புத்தகக்கடையோ அல்லது ஒரு விற்பனையாளனோ இந்தத் தொழிலை வெறும் லாபத்திற்காக மட்டுமே செய்வதில்லை. வேறு எந்தத் துறையைக் காட்டிலும் புத்தகம் என்கிற மதிப்பீடு காரணமாக, பெரிய லாப நோக்கை மையமாகக் கொள்ளாமலே பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தனிநபர் புத்தக விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான புத்தகக்கடைகள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் பெரிய இக்கட்டைத் தர இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு புத்தக விற்பனையாளன் அழிவதால் சமூகம் நேரடியாக எவ்விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்று தோன்றும். ஆனால் கதை அத்தோடு முடியாது என்கிற விஷயத்தைத்தான் மேற்சொன்ன வெஸ்ட் லாண்ட் நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூலக ஆணையே இல்லை என்ற போதும் எந்த நம்பிக்கையுடன் இத்தொழிலை நடத்தி வருகிறோம்? கடந்த சில ஆண்டுகளாய் விற்பனை சரிந்துவிட்டது என்று சொல்லி சென்னை புத்தகக்காட்சிக்கு அரங்கு கோராத பதிப்பகங்கள் உண்டா?

இந்தத் துறையை லாபத்தையும் தாண்டி ஓட வைக்கின்ற விசை ஒன்று இருக்கிறது. அந்த விசையின் காந்தப்புலத்தின் மதிப்பீடு தான். ஒரு அறிவியக்கமாக, ஒரு நாகரிகமடைந்த சமூகத்தின் முகமாக, அரசியல் எழுச்சியில் அங்கம் வகிக்கின்ற ஒரு துறை என்பது தான். ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. ஸ்வீகாரம் பண்ணப்பட்ட குழந்தைக்கு இனிஷியல் மாற்றும் வேலையாகத்தான் இப்படியான கை மாறுதல்கள் இருக்கும். நேரடியாக Multivendor Platform வழியாக பதிப்பிக்க முடியும் அல்லது Self Publishing Portal வாயிலாக பதிப்பித்து முதல் பிரதிக்கான செலவோடு குறைத்துக் கொள்வோம் என எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை நம்பியிருப்பதை கைவிடும் காலம் மிக அண்மையில் இருக்கிறது.

ஒரு விற்பனையாளனின் தரவு ஒரு பதிப்பாளனுக்கு எத்தனை முக்கியமானது. அதைக் காட்டிலும் ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளரின் படைப்பு ஒன்றை 180 ரூபாய்க்கும் அதே நூலின் செம்பதிப்பை அழகுற அச்சிட்டிருக்கிற நூல் ஒன்றை 500 ரூபாய்க்கும் விற்பனைக்கு எடுத்து வைக்கின்ற புத்தக விற்பனையாளன் இரண்டையும் யாருக்கு விற்க வேண்டும் என்று தெரிந்தே வைத்திருப்பான். இணைய தளத்தின் அல்காரிதம் வணிகத்திற்கானதே.

டெல்லியின் கான் மார்க்கெட் என்பது புத்தகக்கடைகளால் நிரம்பிய பகுதி. கடந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான கடைகள் மூடப்பட்டு விட்டன. மும்பையில், சென்னையில் புகழ்பெற்ற கடைகள் வணிக மால்களில் இருந்து காலி செய்யப்பட்டன. நிறைய தனிநபர் விற்பனையாளர்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். பெரு நிறுவனங்களின் இலக்கு இப்போது பதிப்பாளர்கள் பக்கம்.

திரையுகத்தின் எதிர்காலம்

அச்சுப் பிரதிகளின் விலையேற்றம் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றுகொண்டே இருப்பதால், முழுமையாக மின்னூடகம் எனும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ஐரோப்பாவில், அமெரிக்காவிலெல்லாம் அண்மையில் அச்சுப் புத்தக வாசிப்பின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எப்படியிருந்தாலும் அச்சுப் புத்தகங்களின் சந்தை மிகக் கடுமையானதாகவும் புத்தக விற்பனை செய்யும் செயலியே எழுத்தாளனிடம் நேரடியாக உரிமம் பெற்று அச்சிட்டு விநியோகம் செய்ய ஆரம்பிக்கையில் பதிப்புலகம் மிகவும் சுருங்கிப்போய்விடும்.

அதே சமயம் விழுமியங்களையும் இலக்கிய மதிப்பீடுகளையும் கொண்டிருக்கின்ற சிற்றிதழ் தன்மையுடைய பதிப்பு நிறுவனங்களை மட்டும் எந்த பொருளாதார மண்டலத்தாலும் போட்டிகளாலும் அழிக்க முடியாது என்பதே நிதர்சனம். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்திவரும் அற்புத ஜோதி. அதுவே எதிர்காலம்.


ஜீவ கரிகாலன்டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது.

மின்னஞ்சல்: kaalidossan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular