சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தல்
ரூபன் சிவராஜா
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) நெருக்கடிகால மீட்புப்பொதி ஒன்றினைப் பெறுவதற்காக அதனிடம் இலங்கை அரசு கையேந்தி நிற்கிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிதிநிறுவனங்கள் மீது அமெரிக்கா செலுத்துகின்ற செல்வாக்கு பெரியது. எனவே மீட்புப்பொதிக்கான நிபந்தனையாக சீனாவுக்கு எதிரான மூலோபாய நகர்வில் இலங்கையை இணைப்பதற்குரிய அழுத்தத்தினைப் பிரயோகிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அரசக் கருவூலம் வெறுமையின் விளிம்பில் நிற்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலை. எண்ணெய், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குச் செலுத்துவதற்குரிய நிதிவளம் தீர்ந்துவிட்டது. பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2020-இல் கொரோனாப் பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து தீவின் முக்கிய வருமானங்களில் ஒன்றான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணத்துறை மிக மோசமான வீழ்ச்சியைக் காணத் தொடங்கியது. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையுயர்வு, தட்டுப்பாடு, நாளின் பெரும்பகுதி மின்சார வெட்டு, போக்குவரத்துப் பாதிப்பு, வேலைவாய்ப்பு இழப்பு என்பதாகப் பொருளாதார நெருக்கடி நாட்டுமக்களின் நாளாந்த வாழ்வைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டுக் கடன்கள் மூலம் அந்நியச் செலாவணி தக்கவைக்கப்பட்டதே தவிர, நாட்டின் ஏற்றுமதி வருமானத்திலோ அன்றி சேவை விநியோகங்களின் மூலமோ அல்ல. விலைவாசி அதிகரிப்பிற்கு இட்டுச்சென்றமைக்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று அரச நிதியிருப்பும், அந்நியச் செலவாணிக் கையிருப்பும் இல்லாமற் போனமை, மற்றையது பணவீக்கம் உச்சமடைந்தமை. வெளிநாடுகளுக்கான கடனைச் செலுத்துவதற்கு இலங்கை தனது அந்நியச் செலாவணியின் கையிருப்பில் கைவைக்க வேண்டியிருந்தது, இதனால் 2018-இல் 6.9 பில்லியன் டொலராக இருந்த கையிருப்பு இந்த ஆண்டு 2.2 பில்லியனாகச் சுருங்கியிருக்கிறது.
நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 10 வீதம் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்படுகின்றது. தவிர சுற்றுலாத்துறை வீழ்ச்சியினால் அத்துறை சார்ந்த இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாகவும் உலக பயண மற்றும் சுற்றுலா பேரவை (World travel and tourism council) தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியும் அந்நியச்செலாவணி இழப்பிற்குரிய காரணிகளில் ஒன்று.
இரசாயன உரப்பாவனை மீதான திடீர் தடை விவசாயிகள் மத்தியில் பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருந்தது. உணவு உற்பத்தியிலும் பயிர் விளைச்சலிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு கட்டாயப்படுத்தும் சட்டத்தினை 2021 மே மாதம் திடீர் அமுலுக்குக் கொண்டுவந்தது ராஜபக்சே அரசாங்கம். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு திடீரென்று பயிர்களைச் செழிக்க வைக்கவும், களைகள் மற்றும் பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமற் போயின. இழப்புக்கு அஞ்சிய பலர் எதையும் விதைப்பதில்லை என்று முடிவு செய்தனர். இது உற்பத்தி வீழ்ச்சிக்கும் உணவுப் பற்றாக்குறைக்கு மேலும் வழிகோலியது. உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சி, இறக்குமதிக்குரிய நிதிவளமின்மை என்பன நாட்டின் உணவுப் பாதுகாப்பினைச் சவாலுக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் போது, அது பெரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லக் கூடிய அபாயம் உள்ளது.
ஏப்ரல் 3-ம் திகதி அரசாங்கம் பெயரளவிலும் செயலளவில் கலைந்தது. ஜனாதிபதியும் பிரதமரும் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். நடைமுறையில் அரசாங்கம் அற்ற நாடாகவே இலங்கைத்தீவு உள்ளது. ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து, புதிய கூட்டு அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ச சகோதரர்கள் அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை.
2019 ஈஸ்ரர் குண்டுவெடிப்பினை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு ராஜபக்சேக்களால் தான் முடியுமென்ற சிங்களப் பொதுப்புத்தி அவர்களின் மீள் வெற்றிக்கு வழிகோலியது. ஈழப்போரின் இறுதிக்காலங்களிலும் அது முடிவுக்கு வந்த 2009-லும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் கோத்தபாய. போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் சர்வதேச மட்டத்தில் அறியப்பட்டவை. அப்படியிருந்த போதும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவை வெற்றியீட்டச் செய்தார்கள் சிங்கள வாக்காளர்கள்.
இலங்கையை அதிகம் அழுத்துகின்ற பிரச்சனை வெளிநாட்டுக் கடன். அதிலும் குறிப்பாக சீனாவிற்குச் செலுத்த வேண்டிய மொத்தத்கடன் 5 பில்லியன் டொலர். கடந்த ஆண்டு மட்டும் சீனாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது இலங்கை.
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) நெருக்கடிகால மீட்புப்பொதி ஒன்றினைப் பெறுவதற்காக அதனிடம் இலங்கை அரசு கையேந்தி நிற்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சமூக பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கும் தற்போதைய நெருக்கடியின் போது வறிய மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் சிறிலங்கா “நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை” நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் 500 மில்லியன் டொலர்களை நெருக்கடி கால உதவியாக வழங்க ஆலோசித்து வருவதாகச் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்த வாரம் அவர் வோசிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கியிடம் நெருக்கடிகால உதவிகளுக்கான சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார். மருந்துப் பொருட்கள், வறிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உணவு போன்ற செலவுகளுக்காக 10 மில்லியன் டொலர்களை நெருக்கடி கால உதவியாக வழங்குவதற்கு உலக வங்கி தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுடனும் உதவிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது.
கடன் மற்றும் நிதியுதவிகளுக்கான சர்வதே நாணய நிதியத்தின் முதன்மை நிபந்தனை உதவிகோரும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவேண்டுமென்பதாகும். இலங்கையின் தற்போதைய கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாதது. நெருக்கடி காலப் பொதியினை வழங்குதவற்கு அடிப்படையாக அக்கடன்கள் தொடர்பான மறுவரைபு / மீள்நிர்யணம் அவசியமென IMF வலியுறுத்தியுள்ளது. மறுவரைபு நோக்கிய நகர்வு நீண்ட செயல்முறையைக் கோருகின்ற அம்சம். அதிக கடனை வழங்கியிருக்கும் சீனா மற்றும் ஏனைய சர்வதேச நிதிவழங்குனர்களுடன் கோத்தபாய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்தியே அத்தகைய கடன் மறுவரைபை அடைய முடியும்.
பெயரளவில் என்றாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த தரநிர்ணயங்களையும் வலியுறுத்தல்களையும் கடனுதவிகளுக்கான முன்நிபந்தனைகளாக மேற்கு கொண்டுள்ளது. சீனா அத்தகைய நிபந்தனைகள் ஏதுமற்று கடன்களை வழங்கி வருகின்ற நாடு. தான் கடன் வழங்குகின்ற நாடுகளின் வளங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தித்திட்டங்களைத் தன்வசப்படுத்திக் கொள்வது சீனாவின் வழக்கம். வறிய மற்றும் வளர்முக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி எனும் பேரில் சீனா இதனைத்தான் செய்துவருகின்றது.
ராஜபக்சே அரசாங்கங்கள் நாட்டின் உட்கட்டுமானத் திட்டங்களையும் ஹம்பாந்தோட்ட உட்பட்ட முக்கிய துறைமுகங்களையும் சீனாவுக்குத் தாரைவார்த்தமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் தரவின்படி, 2019-ல் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 17, 2 வீதம் சீனாவிடமிருந்து பெற்ற கடனாகும். தற்போதைய சூழலில் கடன் விகிதம் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, ஆட்சியாளர்களுக்கெதிராக மக்கள் தெருவில் இறங்கியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிதி நிறுவனங்கள் மீது அமெரிக்கா செலுத்துகின்ற செல்வாக்கு பெரியது. எனவே மீட்புப்பொதிக்கான நிபந்தனையாக சீனாவுக்கு எதிரான மூலோபாய நகர்வில் இலங்கையை இணைப்பதற்குரிய அழுத்தத்தினைப் பிரயோகிக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
ரூபன் சிவராஜா –
நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.
மின்னஞ்சல்: svrooban@gmail.com