Monday, December 9, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்எரட்டப் பிலாவு

எரட்டப் பிலாவு

சிவசங்கர் எஸ்.ஜே

முற்றத்தில் நிற்கும் இரட்டைப்பிலாவில் ஒன்று கூழன் ஒன்று செங்கவருக்கை. அப்பா எங்கிருந்தோ வாங்கி வந்து கொளக்கட்டி பரத்தி கீழே ஓடையிலிருந்து தண்ணீர் கோரி ஊற்றி வளத்தெடுத்த விதைகள். நன்கு விளைந்த கூழன் சக்கை ஒன்று ஆளுயரம் இருக்கும். சுளை ஒவ்வொன்றும் வளர்ந்த ஆளின் கையளவு இருக்கும். செம்பருத்தி வருக்கை சிவப்பாய் தேன் சுவையில் தித்திக்கும். கூழன் சக்கையில் கூழனாயிருந்தாலும் பெரியளவு நார் இருக்காது. பூஞ்சியும் அவ்வளவாக இருக்காது. குடும்பமே சுற்றி உட்கார்ந்து தின்னும். ஆளுக்கொரு பெரிய துண்டு. சின்னவனுக்கு மட்டும் சுளைகளைப் பிய்த்து கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இந்த இரட்டைப் பலா சற்றே பிரசித்தம்.

கல்லூரி முதல் வருடம் ஒரு மூன்று மாதம் இருக்கும். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து இரவு தூங்கப்போகும்போது இடது கண்ணோரம் ஒரு மின்னல். அன்று தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததும் வலது கண்ணோரம் ஒரு மின்னல். அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அறைக்குள் சென்றுவிட்டேன். அறை என்றால் பெண்மக்கள் எங்கள் நால்வருக்கான அரங்கு. அரங்கின் மூலையில் விளக்கைப் போடாமல் அசைவின்றி அமர்ந்திருந்தேன். நடுவில் உள்ளவன் இடையில் வந்து பார்த்தான். சற்றைக்கெல்லாம் யாரையோ அழைத்து வரும் சத்தம் கேட்டது. எனக்கு நேர் இளைய தங்கை. அம்மா இன்னும் வரவில்லை. இருவரும் ஏதோ கேட்டார்கள் நான் பதில் சொல்லவில்லை. மூணாவது தம்பியும் ஐந்தாவது தங்கையும் இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லை. சின்னவனும் கடைசித் தங்கையும் விளையாடி முடித்து வந்துவிட்டார்கள். யாரும் என் அறைப் பக்கம் வரவில்லை. கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். ஐந்து வருடத்துக்கு முன் அப்பா சண்டை போட்டுப் போனவர் தனியே இருபது மைல் தள்ளி வீடெடுத்து வசிக்கிறார். பிள்ளைகளிடம் விரோதம் ஏதுமில்லை. நாங்கள் விருப்பப்பட்டால் அங்கு போய் வருவோம். குழந்தைகள் நாங்கள் ஏழு பேர் . மூன்று ஆண் நான்கு பெண். நான்தான் மூத்தவள். அப்பா ஆசையாய் வைத்த பெயர் ஸ்டாரி.

*

உடலெங்கும் ஒரு எரிச்சல். உறுத்தல். உடைகள் என் உடலை எரிக்கத் தொடங்கின. நான் அவற்றை அவிழ்த்து தூரமாய் எறிந்தேன். தண்ணீர் தண்ணீர். உடல் எரிந்தது. பின்புற கிணற்றடிக்கு ஓடினேன். உடலின் ஜ்வாலைகள் கண்ணுக்குள் எதிரொளித்தன. தண்ணீர் தண்ணீர். வாளி நிரம்பி காலியானது. இப்போது தாகம். தண்ணீர் தண்ணீர். மீண்டும் வாளி நிரம்பி காலியானது. கிணத்தடியில் அப்படியே உட்கார்ந்தேன். நடு உச்சை. அக்கம்பக்கத்து வீடுகளில் யாரும் இல்லை. என் காதில் அந்த குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

‘’சூடு வேவுதே எரியுவே பொள்ளுதே அய்யோ அம்மோவ். ‘’

*

மீண்டும் தண்ணீர் தண்ணீர். என்னைச் சுற்றி எல்லாம் புகை போலத் தெரிந்தது. நான் வீட்டுக்குள் ஓடினேன். தங்கைகள் சேலையை எடுத்துக் கொண்டு பதறிப்போய் ஓடி வந்தார்கள். தம்பிகள் தூரமாய் நின்றார்கள். எனக்கு எல்லாம் மங்கலாய்த் தெரிய ஆரம்பித்தது. திடீரென அழுதேன். எதையோ நினைத்து சிரித்தேன். என்ன செய்தும் தூக்கம் மட்டும் வரவில்லை. எல்லாம் மங்கலாய். புகை… கண்ணைச் சுற்றியும் என்னைச் சுற்றியும் புகை.

*

நான் நிர்வாணமாய் ஓடத்தொடங்கிய காலங்களில் அந்த இரட்டைப்பலா மரத்தடியில்தான் சங்கிலியில் பிணைத்திருந்தார்கள். அந்த சங்கிலி ஐந்து வருட நீளமாயிருந்ததை நான் கண்ணிமைக்குள் அறிந்தேன்.

அதன்பிறகு நடந்த சம்பவங்கள் எல்லாம் வேறொரு தளத்தில் வேறொரு உலகத்தில் நடந்தவை. மங்கலானவை. வேறொருவர் அறியாதவை. நானே எனக்கு சாட்சியாய் நின்றவை.

*

“கட்டமண்ணாப் போவும்”

கூன் விழுந்த கிழவி ஒருத்தி சாபமிட்டுக் கொண்டிருந்தாள். நான் ஒரு மைதானத்தில் தனியே நின்றிருந்தேன். என்னைச் சுற்றிலும் தவளைகள் தாவிக் கொண்டிருந்தன. ஒன்றல்ல ஒரு நூறு இருக்கும். கிழவி தவளைகளை வாரி வாரித் தின்றாள்.

“மாக்கான் நல்ல ருசிட்டி தின்னுதியா?’’

நான் தலையசைத்து மறுக்க யத்தனித்தேன் இயலவில்லை.

“இஞ்ச பாருட்டி கொடலு
இஞ்ச பாருட்டி ஈரலு
நல்ல ருசி தின்னுதியா?’

இப்போது அவள் கைகளில் வேறு எதோ மிருகத்தின் மாமிசம். நான் மீண்டும் தலையசைத்தேன். அந்த இடத்திலிருந்து பறந்து போக முயன்றேன். கால்கள் சற்று உயர எழும்பின. நான் பறந்தேன். கொஞ்ச உயரம். பறக்க முடியவில்லை. கைகளை வேக வேகமாக அடித்துக் கொண்டேன். அவ்வளவுதான். கிழவி சிரிக்கும் சத்தம் கேட்டது.

“பாட்டியே சிரிச்சாதிங்க”

நான் கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். கிழவி வசைகளை ஆரம்பித்தாள். நான் மௌனமானேன்.

என்னைச்சுற்றி கயிறுகள் நடனமாடத் தொடங்கின. பல நிறக் கயிறுகள். ஒவ்வொரு கயிறும் என் முகத்தருகே வந்து யாசிப்பது போல் ஒரு நொடி நின்று நின்று நடனமாடின. திடீரென அந்த கயிறுகளுக்கு முகம் முளைத்தது. கூர்ந்து பார்த்தேன் அது என் முகம். எல்லாக் கயிறும் நானே.

கிழவியைக் காணவில்லை.

நூறு அறைகள் கொண்ட பழைய வீடு. நான் ஒவ்வொரு அறையாய் ஓடுகிறேன். என்னைச் சுற்றிலும் கூந்தல்கள் பறந்துகொண்டிருந்தன. கயிறுகள் போலவே பல வண்ணங்களில் பல வடிவங்களில். என் நிர்வாணத்தை கூந்தல்களைக் கொண்டு மறைக்க முனைந்தபோதெல்லாம் ஓர் அசரீரி தடுத்தது.

கிழவி மீண்டும் வந்தாள். சிரித்தாள். இந்தமுறை சத்தமாக இடியோசை போல். சிரிப்பினூடேக் கேட்டாள், “மொட்டச்சி மொட்டச்சி மொளவு அரைப்பமா?’’

திரவமும் இல்லாத திடப்பொருளும் இல்லாத நீர்ம வடிவில் அந்த சூடடிக்கும் களத்தில் நான் ஒரு உருண்டையாகக் கிடந்தேன். வெயில் கொதித்துக் கொண்டிருந்தது. நான் நல்ல வெள்ளி நிறத்தில் மினுங்கிக்கொண்டிருந்தேன். சற்றைக்கெல்லாம் எங்கிருந்தோ வந்த ஒரு சிறுமி என்னை உருட்டி விளையாடினாள். களத்தின் நடுவே வந்ததும் நான் திடீரென இரண்டாகப் பிளந்தேன். அவள் விடவில்லை இப்போது அவளுக்கு விளையாட இரண்டு பந்துகள். மறுபடியும் உருட்டினாள். நான் நான்காகப் பிளந்தேன். அந்தி சாயும் நேரத்தில் களம் முழுதும் நான் ஆயிரம் உருண்டைகளாக சிதறிக் கிடந்தேன். சிறுமி என்னைக் கைவிட்டு தூரமாய் நகர்ந்தாள்.

“பிள்ளா என்னப் பிடிச்சி உருட்டி வச்சிட்டு போ”

நான் கத்திக்கொண்டேயிருந்தேன்.

வெள்ளை நிறக் கட்டடம் பிணமும் நிணமும் கலந்தொரு நாற்றம். மோட்டுவளையைப் பார்த்தபடி என்னைக் கிடத்தியிருந்தார்கள். நான் அங்கிருந்த நாட்களிலெல்லாம் கூரையைப் பார்த்தபடியே நாட்கள் கழிந்தன. முதலில் மஞ்சள் நிறத்தில் ஒரு பொத்தானைக் கொடுத்தார்கள். கூட அருந்த கொஞ்சம் நீரும். பொத்தான் வயிற்றுக்குள் போனதும் என் கண்கள் மூடிக்கொண்டன.

கன்னத்தை தட்டி ரத்தக்கறை நிறத்திலொரு பொத்தானைக் கொடுத்தார்கள் அது வயிற்றுக்குள் போவதை கண்ணாடிபோல் என்னால் காண முடிந்தது. பொத்தான் வயிற்றுக்குள் போனதும் பேசத் தொடங்கியது. ஆச்சரியமாக அதன் குரல் என் அப்பாவின் குரலை ஒத்திருந்தது.

“குட்டே மக்கா நல்லா ஒறங்கு”

நான் என்னை அறியாமல் தூங்கிப் போனேன்.

வெள்ளைக் கட்டடம் எனக்கென ஓர் அறையை ஒதுக்கியிருந்தது, நான்கு பக்கமும் வளைவான அறை. நான் ஒரு வட்டத்துக்குள் இருந்தேன். எனக்கான படுக்கையில் ஆணிகளைப் பரத்தி இருந்தார்கள். அதன் மேல் சில நேரம் தீக்கங்குகளைத் தூவிச் செல்வார்கள் சிப்பந்திகள். ஒரு மாதம் சென்றிருக்கும் என் பின்புறம் ஒரு குழி தோன்றியிருந்தது. படுக்கைப் புண் என்றார்கள். என் ஒருபக்க எடை குறைந்திருந்தது. நான் நடக்கையில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நடந்தேன்.

“நோவுதுடியே அம்மோவ்”

நான் தீனமாய் அழுதேன். நோய்மையின் மஞ்சள் நிற நாய் ஒன்று என் மேல் மூத்திரம் பெய்துவிட்டுப் போனது.

தேவதைகள் உலகில் அடுத்த மாதம் கழிந்தது. என் கையின் மறுபக்கம் ஒரு திரவ போத்தல் சொருகப்பட்டிருந்தது. புகைமண்டலம். தேவலோகம். பெண் தெய்வங்கள். நீலம் தோய்ந்த வெள்ளை தொங்கு சீலைகள். யாரேனும் அந்த தேவலோகத்தில் நடமாடிக்கொண்டேயிருந்தார்கள். போத்தலில் பல வண்ணத்தில் திரவங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. நான் மிதந்து மிதந்து அமிழ்ந்துகொண்டேயிருந்தேன். ஒருநாள் என்னைச் சுற்றி என் உடன்பிறப்புகள் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சின்னவன் குரல் உயர்த்திப் பாடினான்.

“தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்”.

எல்லோரும் உடன் பாடினர். நெடு நாட்களுக்குப் பிறகு நான் மலர்ச்சியாய்த் தூங்கினேன்.

ஒரு இருட்டுத்திரி எரிந்துகொண்டிருந்த விளக்கைக் கண்டேன். இருள் சுடர். அதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். கருத்த சுடரின் ஓரங்களில் மினுமினுப்பு. கருத்த வெளிச்சம் அந்த இடத்தை நிரப்பியிருந்தது. ஓடுதளம் ஒன்று அந்த வெளிச்சத்தில் இருந்தது. நான் அதில் ஏறி நின்றேன். ஒரு கீச்சொலி கேட்டது. என் கால்கள் ஓடத்தொடங்கின. பிறகு தொடர்ந்து கீச்சொலிகள். அந்த ஓடுதளம் நின்ற இடத்தில நின்றது போலிருந்தது. ஆனால் சுற்றியிருந்த காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. எல்லாம் தலைகீழாக.

மரங்களின் வேர்கள் மேல்நோக்கி நின்றன. பறவைகள் மல்லாக்கப் பறந்தன. விலங்குகள் முதுகுகொண்டு நடந்தன. அந்த காட்சிகளில் மானுடப் படைப்புகள் எதுவும் இல்லை. கீச்சொலி நின்றது. காட்சிகள் மறைந்தன. நான் மெல்லிய குரலில் முனங்கினேன்.

“சர்த்தல் வார மாரி இருக்குவு. இத்துபோல வெள்ளம் கிட்டுமா?”
நூற்றுக்கணக்கான ஊசிகளும் பல நிறத்து நூல்களும் வெள்ளை திரைச்சீலை ஒன்றின் மீது தன்னிச்சையாக தைத்துக்கொண்டிருந்தன. யாரோ அவற்றிற்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். பெரும் முரசொலி கேட்க ஆரம்பித்தது. ஊசிகள் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தைக்கத் தொடங்கின. இப்போது முரசின் அடிக்கு ஏற்ற தாளத்தில். சற்று நேரத்தில் எண்ணிக்கையிலடங்கா பேரிகைகள் முழங்கி பெரும் ஓசை எழலாயிற்று. ஊசிகளின் வேகம் அதிகரித்தது. திரைச்சீலையில் சிலந்திக் கூடொன்றின் வண்ண நூல் உருவம் தோன்றியது.

நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் வாய் மெல்ல முணுமுணுத்தது. “வவுறு பவிச்சுவு கொஞ்சோல சக்க தருவியளா?”
அந்த குறுமணல் பரப்பில் ஓடிக்கொண்டிருக்கையில் கால்கள் அனிச்சையாய் நின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூட்டுகள் சிதறி மணற்பரப்பெங்கும் வாய்பிளந்து கிடந்தன. அதன் சாவிகள் எங்கெங்கோ கலைந்து கிடந்தன. நான் ஒரு பூட்டைக் கையில் எடுத்தேன். அது திறந்து இருந்தது. அதன் சாவி பறந்து என் கையில் குதித்தது. நான் அதைப் பூட்டினேன். மற்றொரு பூட்டை எடுத்தேன் அது பூட்டியிருந்தது. அதன் சாவி பறந்து வந்தது. அதைத் திறந்தேன். இப்படியாக நூற்றியெட்டு பூட்டுகள், திறந்து பூட்டி மணற்பரப்பைக் கடந்தேன். ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது.

“எங்கயோ சக்க மணம் வருதே எம்மோவ்”

சோவென ஒரு சத்தம். வயலின் தந்தி ஒன்று இழுபட்டதைப் போல் மற்றொரு சத்தம். மழை. வண்ண மழை. மழையின் வாசனை நாசியை நிரப்பியது. நான் மழையில் இறங்கினேன். ஒரு துளி என் உடலில் பட்டது. எரிந்தது. அமிலம். அமில மழை. உடல் பொத்தலாகாமல் தடுத்தபடி குடைகள் ஆடி மிதந்து வந்தன. நான் குடைக்குள் மறைந்துகொண்டேன். அப்போதுதான் மழைத்துளிகளைப் பார்த்தேன். அவை ரத்த நிறத்தில் தரையில் ஒழுகி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். வானத்தின் கடவுள்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் சாத்தான் காதருகில் சொல்லிப் போனான்.

“சக்க மரத்துக்கு என்னாச்சு?”

காதருகில் ஒரு பிரார்த்தனைக் குரல். ஆலய மணியோசை. அந்த பிரார்த்தனை ஓசைகள் பெருகின. மொத்த உலகமும் பிரார்த்தித்துக்கொண்டிருந்தது. கூடவே சலங்கையொலி போல சிறு மணியோசை. ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. சிவப்பு உடை உடுத்த வயோதிகர் பின்பக்க பாரங்களை இறக்கினார். பரிசுப் பொட்டலங்கள். பல வண்ணங்களில் பல வடிவங்களில் பல அளவுகளில். எங்கும் பனிக்குளுமை நான் போர்வைக்குள் என்னைப் பொதிந்துகொண்டேன். குறுக்கும் நெடுக்குமாக ரிப்பன்கள் கட்டப்பட்ட பொட்டலங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.

வயோதிகர் சிநேகமாய்ச் சிரித்தார். உனக்குப் பிடித்ததை எடுத்துக்கொள். பனி மான்கள் ஆதரவாய் சொல்லின. என் உடல் சிலிர்த்தது. ஜிங்கில் பெல்ஸ் பாடல் ஒலித்தது.

நான் உறக்கத்தில் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.

இரவு இடக்கண்ணில் ஒரு மின்னல்.

“ஒரு சக்கச் சொள தருவியளா?’’

இரட்டைப் பலா நின்றிருந்த இடம் மொட்டையாக இருந்தது.
அதிகாலையில் மீண்டும் இடது கண்ணில் ஒரு மின்னல் வெட்டு அந்தியில் வலது கண்ணில் ஒரு மின்னல். அனிச்சையாய் நான் தலையைத் தடவினேன். பிறகு உரத்துக் கத்தினேன்.

“ம்மோ இஞ்ச வா! எனக்க முடிய எங்கட்டி?
எதுக்குட்டி எனக்கு மொட்டை அடிச்சிய?
எடியே எம்மோ இஞ்ச இருந்த எரட்டப்பிலாவுவள எங்கட்டி?
எதுக்குட்டி முறிச்சிய?’’

***

சிவசங்கர் எஸ்.ஜே – புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார். யாவரும் பதிப்பகம் வாயிலாக யா-ஓ மறைக்கப்பட்ட மார்க்கம் 1&2 வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: prismshiva@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular