Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்இலங்கைத்தீவின் நெருக்கடி: ரணிலின் பதவியேற்பும் மக்கள் போராட்டத்தின் எதிர்காலமும்

இலங்கைத்தீவின் நெருக்கடி: ரணிலின் பதவியேற்பும் மக்கள் போராட்டத்தின் எதிர்காலமும்

ரூபன் சிவராஜா

லங்கைத் தீவின் அரசியலில் புதிய களம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்டது. அந்தக் களம் அரசியல் மாற்றத்திற்கான களம் அல்ல. ஆட்சி மாற்றத்தைக் கோரிக்கையாக முன்வைத்த களம் என்பது அறியப்பட்ட ஒன்றே. ஈற்றில் அது வெறும் காட்சி மாற்றமாக மட்டுமே ஆகியிருக்கிறது. அந்தக் காட்சியில் புதிய நடிகர்கள்கூட இல்லை. களம்புதிது எனினும் பழைய நடிகர்கள்கதான்.

மார்ச் மாதத்திலிருந்து காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவந்த ‘Gotta Og Home’ போராட்டம் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சிக்கும் அவர்களது அரசியல் எதிர்காலத்திற்கும் சேர்த்துச் சாவுமணி அடிக்கப் போகின்றது என்பதாகச் சில மட்டங்களில் நம்பப்பட்டது. மே 9 அன்று மகிந்த பதவி விலக நிரப்பந்திக்கப்பட்டமை மற்றும் மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட வன்முறை முறியடிக்கப்பட்டமையும் அந்த நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தது. அது மட்டுமல்லாது மக்கள் எழுச்சியும் அது தொடர்பான ஊடகச் சித்தரிப்புகளும் அத்தகைய பிம்பத்தையே கொடுத்திருந்தன. ஆனால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆக்கப்பட்டுள்ளமை களநிலவரங்களின் நகர்வையும் விளைவுகளையும் வேறுதிசைக்கு மாற்றியுள்ளது. மறுவளமாகச் சொல்வதானால் மக்கள் போராட்டத்தினை மந்தமாக்கியுள்ளது.

ரணில் ஒரு தோற்றுப்போன தலைவர்

ரணில் வரவு எந்தவகையிலும் மாற்றம் அல்ல. அதனை ஆட்சிமாற்றம் என்றுகூடக் கூறமுடியாது. ஏற்கனவே 5 தடவைகள் ஆட்சி செய்தவர்தான் அவர். ஆனால் ரணில் அடிப்படையில் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் தலைவர், கட்சித்தலைவர், ஜனவசீகரமற்ற தலைவரும்கூட. கடந்த 2020-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு இடத்தினை அதுவும் தேசியப் பட்டியல் நியமனத்தின் மூலம் பெற்றது அவருடைய ஐக்கிய தேசியக்கட்சி. நாட்டின் பிரதான கட்சி – பலமுறை ஆட்சியிலிருந்த கட்சி – பிரதான எதிர்க்கட்சி என்ற பல்வேறு நிலைகளிலிருந்து சிதைவடைந்து மக்கள் ஆதரவை முற்றிலும் இழந்த ஒரு தோற்றுப்போன கட்சியின் தலைவரான ரணில் இன்றைய நெருக்கடிச் சூழலில் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அது கோத்தபாய ராஜபக்சேவுடனான ஏதோவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிகழ்ந்தேறியிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ராஜபக்சேக்களைப் பாதுகாப்பது என்பதில் சந்தேகங்கள் இருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பது என்பது சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது என்ற நேரடியான அர்த்தத்தைக் குறிக்கின்றது. அத்தோடு மேற்குலகுடன் உரையாடாமல், மேற்கின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாமல் ரணில் இம்முடிவுக்கு வந்திருக்கவும் வாய்ப்பில்லை. ராஜபக்சேக்கள் தமக்கான கால அவகாசத்துடன் மீண்டும் அரசியலுக்குள் மறுபிரவேசம் செய்வது, குறிப்பாக நாமல் ராஜபக்சவின் நாடாளுமன்றத்திற்கும் அரசியலுக்குமான மீள்வருகை சாத்தியமற்றதாகிவிடவில்லை.

அரசியல் மாற்றத்திற்கான சாத்தியம்?

ரணிலின் வருகை மூலம் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தைச் மீளச்சரிப்படுத்தும் நகர்வுகள் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றனவற்றின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுபவராக அல்லது அவற்றுக்கான உத்தரவாதத்தை வழங்குபவராக ரணில் இயங்குவார். உலக நாடுகளும் நிதிநிறுவனங்களும் கடன் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரக்கூடும். ரணில் அடிப்படையில் மேற்கின் செல்வாக்குடையவர். இன்னும் சொல்லப்போனால் மேற்கின் செல்லப்பிள்ளை. பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்குரிய நிதியுதவிகள், கடனுதவிகளைத் துரிதப்படுத்திப் பெறுவதற்கு ரணில் பிரதமராக இருப்பது பயனளிக்கும் என்பதைத் தவிர வேறெந்த அரசியல் மாற்றங்களையும் எதிர்பாக்க முடியாது.

மகிந்தவைப் பதவி விலக வைத்தமை போராட்டத்தின் வெற்றி. மக்கள் போராட்டத்தின் அடிப்படையான சிக்கல் என்பது கோத்தபாயவை பதிவியிலிருந்து அகற்றுவதை அவர்களுடைய முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்தமைதான். ஒரு எடுகோளாக கோத்தாபாய பதவி விலகும்நிலை ஏற்படுவதாக வைத்துக்கொண்டால், ரணில் ஜனாதிபதியாகவும் ஆகின்ற வாய்ப்பும் உள்ளது. அப்படி நேரும்போது போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும். போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துவிடும். ஒட்டுமொத்தத்தில் ரணில் பிரதமராக ஆக்கப்பட்டமையின் மூலம் போராட்டக்காரர்களின் கோரிக்கையும் இலங்கைத்தீவின் நிலவரம் தொடர்பான கவனக்குவிப்பும் திசைதிருப்பப்பட்டுள்ளது. இனி ரணில் தலைமையிலான அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதன் மீதே கவனம் மையம் கொள்ளும்.

‘Gotta Go Home’ கோரிக்கையின் பலவீனம்

‘கோத்தா வீட்டுக்குப் போ’, ‘எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு’ என்பவையே போராட்டத்தின் முக்கிய பதாகைகள், கோஷங்களாக வெளிப்படுத்தப்பட்டன. இது தமது அன்றாட வாழ்வில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் மீதான கூட்டுக்கோபம். ரணிலின் பதவியேற்பும் அதன் விளைவாக குறுகிய கால அடிப்படையில் ஏற்படக்கூடிய புதிய அமைச்சரவைகள், நாடாளுமன்றத் தீர்மானங்கள், பொருளாதார முன்னேற்றங்களாலும் தணித்துவிடக் கூடிய கோபம். தமது பொருளாதார வளங்களைச் சூறையாடிய ஒரு குடும்பத்தின் மீதான எதிர்ப்பு என்பதைத் தாண்டிய அரசியல் கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை அல்லது முன்னுரிமை பெறவில்லை. அடிப்படையான யாப்பு மறுசீரமைப்பு, ஜனநாயக, இனத்துவ பன்மைத்துவம், அதிகாரப் பரவலாக்கல் போன்ற அடிப்படையான அரசியல் மாற்றங்களைக் கோரிக்கைகளாக முன்வைத்திருப்பதாகத் தெரியவில்லை. போராட்டம் ஒரு இனத்துவ, மொழித்துவ பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவில்லை. பெரும்பான்மையாகச் சிங்கள மக்களே இப்போராட்டத்தில் திரண்டிருக்கின்றனர். தமிழ், முஸ்லீம் மக்கள் தூர நின்று அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் ஆங்காங்கே உதிரிகளாகச் சில மட்டங்களில் பங்கேற்றிருந்தாலும் முஸ்லீம் மக்கள் காலிமுகத்திடலில் இணைந்து கொள்ளவில்லை.

மகிந்த ஆதரவாளர்களின் வன்முறைகள்

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் மீது 09.05.2022 அன்று வன்முறையைத் தூண்டிவிட்டிருந்தனர் ராஜபக்சேக்கள். அதன் மூலம் இராணுவ ஆட்சிக்கு தூபமிடப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுந்தன. ‘வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாட்டின் பாதுகாப்பினை நிலைநாட்டவும்’ என்ற போர்வைகளில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவருவதற்கான திட்டம் கோத்தாவிடம் இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அப்படி ஏதும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை. 2009 போரை முடிவுக்குக் கொண்டுவந்த போதான சிறிலங்கா இராணுவத்தின் மோசமான போர்மீறல்கள், மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள், மனிதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தமிழ் மக்களினது மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலான குற்றச்சாட்டுகளுமாகும். இவற்றுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகள் இன்னும் நீர்த்துப் போய்விடவில்லை.

2008-2009 சர்வதேசத்தின் பிரசன்னத்தை முற்றிலும் அகற்றிவிட்டு தமிழர்களுக்கெதிரான போரை நடாத்தி முடித்தது பௌத்த சிங்கள பேரினவாத அரசு. அன்றைய நாட்களில் வன்னியில் போர் முற்றுகைக்குள் இருந்த மக்களிடம் வெளியுலகோடு தொடர்புகொள்ள தொலைபேசியோ, சமூக ஊடக வசதிகளோ இருக்கவில்லை. தற்பொழுது நேரடி ஒளிபரப்புச் செய்யுமளவிற்கு எல்லோர் கைகளிலும் தொழில்நுட்பம் உள்ளது. போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளேயே எத்தனையோ வன்முறைகளின் வீடியோப் பதிவுகளும் நேரடி ஒளிபரப்புகளும் வெளிவந்தன. எனவே இராணுவ இயந்திரம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மக்கள் மீது வன்முறைகளை நடாத்துமாயின், அதன் வன்முறைகளும் அத்துமீறல்களும் உடனுக்குடன் வெளிவரும் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமலிருக்க வாய்ப்பில்லை.

ஆளும் கட்சிப் பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள், சொத்துகள் எரிப்பு

வன்முறைகளைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களால் மகிந்த உட்பட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடைய வீடுகள், வாகனங்கள், சொத்துகள் எரியூட்டப்பட்டன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மகிந்தவின் ஆதரவாளர்களைப் பேருந்துகள் மூலம் கொழும்பிற்கு இறக்கி காலிமுகத்திடலில் அமைதிவியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் சிதைக்கப்பட்டு எரியூட்டவும்பட்டன. 7 பேர் வரையில் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தனர்.

இரண்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். அதில் போராட்டக்கார இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுமுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அமர்கீர்த்தி அத்துக்கொரல. போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட அவர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிகழ்வுகளின் பின்னணியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தினரும் தெருக்களில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர்.

மகிந்த போர்வெற்றியின் முதன்மைக் கதாநாயகன். ஆட்சியின் அதிகாரத் தலைமை. அப்பேர்ப்பட்ட நிலையிலிருந்தவர் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாமல், சொந்த வீடும் சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உயிருக்கு அஞ்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலைக் கடற்படைத்தளத்திற்கு இராணுவத்தின் உயர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

ரணில் அரசாங்கம்

ரணிலின் முடிவுகளுக்குரிய நாடாளுமன்ற அங்கீகாரத்தை வழங்கப் போகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்சே கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களே. அக்கட்சி ரணிலை முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதோடு அமைச்சுப் பொறுப்புகளையும் பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் (UPP) வெளியில் இருந்து நல்ல விடயங்களுக்கு ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆதரவளிப்பதாக கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது. இப்படியாகக் கிட்டத்தட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிகளும், சுயாதீன நாடாளுமன்றக் குழுக்களும், உறுப்பினர்களும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் சரிசெய்யப்படும் போது ரணில் தனது இழந்த செல்வாக்கினை மீண்டும் கட்டியமைக்கின்ற புறநிலை ஏற்படவாய்ப்புண்டு. சாதாரண பொதுமக்கள் பொருளாதார மீட்சியை உணரும் போது திருப்தியடைவர்.

போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்ற போதிலும் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கான கால அவகாசம் என்ற அளவிலும் போராட்டக்காரர்கள் அமைதிகாக்க நேரிடும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் போராட்டத்தின் தீவிரம் குறைந்து போகின்ற புறநிலைகளே ரணில் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் அரசியல் யதார்த்தத்திலும் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள, பௌத்த மனநிலையின் அனுபவங்களிலிருந்தும் பார்க்கும்போது, பொருளாதாரத்தை நிமிர்த்துவது, மீட்பது என்பதைத் தாண்டிய மாற்றங்களுக்கான புறநிலைகள் தென்படவில்லை. அதுகூட எத்தனைதூரம் நிலைகொள் பொருளாதார மீட்பாக அமையுமென்பதுவும் கேள்விக்குரியதே.

மட்டுமல்லாது இந்த நகர்வுகளுக்குப் பின்னால் குறுகிய நோக்குள்ள உட்சக்திகளும் சீனாவின் செல்வாக்கினைத் தீவிலிருந்து அகற்றுகின்ற நோக்குள்ள இந்தியா, அமெரிக்கா போன்ற பிராந்திய மற்றும் சர்வதேச கைகளும் இயங்குகின்றன என்பதையும் நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. போராட்டம் தன்னியல்பாக மக்களால் தொடங்கப்பட்டிருக்கின்ற போதும், குடும்ப ஆட்சி மீதான வெறுப்பு, பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் போன்ற மக்களின் கூட்டுக்கோபம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது. நீதி நியாயம் என்பவற்றைத் தாண்டிய நலன்கள் என்ற நிரந்தர அச்சிலேயே அரசியல் நகர்வுகள் அரங்கேற்றப்படுகின்றன. தத்தமது நலன்களுக்காக போர்களையும் கலவரங்களையும் தூண்டிவிடுகின்ற, தணிக்கின்ற இழிவரசியலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது

பொருளாதார நெருக்கடியின் நதிமூலம்

இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது திடீரென கொரோனா பெருந்தொற்றாலும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட சரிவினாலும், உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் விளைவாலும் மட்டும் ஏற்பட்டதல்ல. மிகச்சொற்ப காலங்களில் நெருக்கடி தீவிரமாகியமைக்கு மேற்சொன்ன அடுத்தடுத்த தொடர்நிகழ்வுகள் காரணிகளாகியுள்ளன. ஆனால் போருக்குச் செலவிடப்பட்ட பெருநிதி போர் முடிவுக்கு வந்த பின்னரும் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, ஆளணியைப் பெருக்கி வந்தமை, அதிகரித்த கடன், உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சி என நீண்டகாலச் சூழல்களின் விளைவுகள் இவை. போரை இத்தனை காலம் மூர்க்கமாக நடாத்தியபோது அது ஒட்டுமொத்த தேசத்தினதும் பொருளாதாரத்தை நீண்டகால அடிப்படையில் சிதைக்கக்கூடியது என்பது எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

போருக்குப் பின் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகை கடன்களை வாங்கியது. சீனாவின் கடனுதவிகளில் பாரிய நெடுஞ்சாலை அமைப்பு உட்பட்ட உட்கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுத்திற்கான ஆளணிச் சேர்ப்பு சிங்கள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கும் தந்திரோபாயமாகக் கைக்கொள்ளப்பட்டது. இது ராஜபக்சேக்களின் ஆதரவுத்தளத்தைத் தக்கவைக்கவும் உதவியது.

குடும்ப ஆட்சியும் ஊழல்களும்

பிரித்தானிய கொலனியாதிக்கத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இருபெரும் குடும்ப ஆட்சிகள் நீடித்த ஆயுளைக் கொண்டிருந்தன. ஒன்று பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சி. அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் கடந்த இரண்டு தசாப்த காலங்கள் ராஜபக்சேக்களின் அதிகாரம் உச்சத்திலிருந்தது. 2005-லிருந்து இன்றுவரை இடையில் ஒரு நான்காண்டுகளைத் தவிர இந்தக் குடும்ப ஆட்சி தனது அதிகாரத்தை விரிவுபடுத்தி நிலைநாட்டி வந்துள்ளது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுடியாது என்ற திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டமையால் 3-வது முறையாக மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவில்லை. கோத்தா நிறுத்தப்பட்டார். கோத்தபாய ஜனாதிபதியாகவிருந்த போதும் மகிந்தவே தீர்மானமெடுக்கும் சக்தியாக இருந்தார். இவர்கள் இருவரைத் தவிர இவர்களின் இன்னுமிரு சதோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் சாமல் ராஜபக்ச ஆகிய இருவரும் முறையே நிதி மற்றும் விவசாயத்துறை அமைச்சர்களாகவும் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராகவும் கடந்த அரசாங்கத்தில் பதவிகளில் இருந்தனர்.

ராஜக்சேக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. 2004-ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அழிவுக்குப் பின்னரான புனர்வாழ்வுக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகளில் ஊழல், 2009-ல் போர்த்தளவாடக் கொள்வனவில் ஊழல், 2016-ஆம் ஆண்டு 75 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிற்குக் (Avant Garde Security Services) கைமாற்றப்பட்டதான குற்றச்சாட்டுகள் போன்றவை கோத்தபாய மீது உள்ளது. அதேவேளை அவருடைய ஏனைய சகோதரர்கள் மீது கறுப்புப் பணத்தினை வெள்ளையாக மாற்றிய மை உட்பட்ட வேறு பல பொருளாதார கிரிமினல் மோசடிகளுக்கான வழக்குகள் உள்ளன.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான முதலீடு

2015-ல் தேர்தலில் மகிந்த தோல்வியுற, மைத்திரி பதவிக்கு வந்தமையும் அதன் பின்னணிகளும் பலரும் அறிந்ததே. போருக்குப் பின்னரான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கொண்டுவரப் போகின்ற அரசாங்கம் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்பப்பட்டது. 2019 ஏப்ரலில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தினை (ஈஸ்ரர் குண்டுவெடிப்பு) முதலீடாக ஆக்கியே மீண்டும் ராஜபக்சே குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சிங்கள மக்களிடமும் உலகிடமும் சித்தரித்து, அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழித்த புறநிலையில் ராஜபக்சேக்கள் போர் வெற்றியின் நாயகர்களாக, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்களாகச் சிங்கள மக்களாலும் இனவாத சக்திகளாலும் கொண்டாடப்பட்டனர். ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பு இருப்பதாக அந்த அமைப்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தது. இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தீவிரவாதக் குழுவை வைத்தே ஐ.எஸ் இந்தத் தாக்குதல்களை நடாத்தியிருந்தது. புலிகள் இல்லாத பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிபீடம் ஏற ராஜபக்சேக்களுக்கு இஸ்லாமியப் பயங்கரவாதம் முதலீடாகியது. இத்தாக்குதல்களுக்கும் கோத்தபாயவிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. அந்த இஸ்லாமியக் குழுவானது நாட்டின் இராணுவத்துடனும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னாள் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்த குழுவிற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ச இரகசியமாக நிதியுதவி செய்ததாக மைத்திரிபால அரசாங்கத்தின் அறிக்கைகள் கூறின.

காலிமுகத்திடல் சாத்தியப்பாடுகள்

கோத்தா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைப் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றனர். அத்தோடு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தினை வழங்கியுள்ள 20-வது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் 13.05.22 ரணில் பதவியேற்ற பின்னர் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் சார்ந்த மூன்று வெவ்வேறு விளைவுகளுக்கான சாத்தியப்பாடுகளை எதிர்வுகூறலாம். ஒன்று கோத்தாவை கற்றும் மக்கள் போராட்டம் நீடிக்கலாம். ஆனால் கடந்த ஒன்றரை மாதத்தின் தீவிரம் தொடர்ந்து நிலவுமா என்பது கேள்விக்குரியது. இரண்டாவது, போராட்டம் வலுவிழந்து படிப்படியாகக் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். மூன்றாவது, புதிய அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுத்து விளைவுகளை அவதானித்து மீண்டும் தொடரலாம். இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்திலும் ரணில் பதவியேற்பின் பின்னணியிலும் முதலாவதற்கும் மூன்றாவதற்குமான சாத்தியப்பாடுகள் குறைவு.

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களும் நெறிப்படுத்தி வழிநடத்தப்பட வேண்டியவை. அதிலும் குறிப்பாக அரசியல் மாற்றங்களைக் கோருகின்ற பெருமெடுப்பிலான இத்தகைய போராட்டங்கள் தொலைநோக்குச் சிந்தனையும் அரசியல் செயல்திட்டமுமுடைய வழிநடத்தலைக் கோரி நிற்பவை. போராட்டக்காரர்களிடம் வெளித்தெரியும் தலைமை எதுவும் இல்லை என்பது இப்போராட்டத்தின் பெரிய குறைபாடுகளில் ஒன்று. ஆட்சி மாற்றம் போருகின்ற மக்கள் போராட்டம் என்பது மாற்றுத் தலைமையை அல்லது புதிய தலைமையை உருவாக்க வேண்டும். அதுவே நாட்டின் உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார, இனத்துவ பன்மைத்துவம் கோருகின்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போதைய போராட்டங்களின் ஆகக்கூடிய விளைவாக மகிந்தவின் பதவிவிலகல் நிகழ்ந்திருக்கிறது. அதன் அடுத்தகட்டமாக ரணில் பிரதமராக ஆக்கப்பட்டிருக்கின்றார். போராட்டக்காரர்களின் அடிப்படைக் கோரிக்கையான ‘கோத்தா வீட்டுக்குப் போ’ இன்னும் சாத்தியப்படவில்லை. எனவே ராஜபக்சேக்களின் வம்ச ஆட்சியை அகற்றுவதென்பது இன்னும் சாத்தியப்படாத ஒன்று. அதற்கான சாத்தியங்கள் இனி உள்ளனவா என்ற கேள்வியும் நிலவுகின்றது. உண்மையில் ரணில் பிரதமராக்கப்பட்டமை ஒரு தீயணைப்பு நடவடிக்கையை ஒத்த நிகழ்வே. அது நிலையான தீர்வுகளுக்கோ, நிலைகொள் மாற்றங்களுக்கோ வழிகோலப் போவதில்லை.


ரூபன் சிவராஜா

நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.

மின்னஞ்சல்: svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular