1.
பகலாகி மிதக்கும் கானல்
முற்றுபெற்றுவிட்ட ஓர் உரையாடல் கரைக்கு
வந்து சேர்ந்திருக்கிறது
என் கடல்
மோதி மோதி
திமிறும் மனம்
அனலாக்கும் அவ்வெப்பத்தை
அறிந்து வைத்தே கிளிஞ்சல் பொறுக்குகிறது
கானல்
கரை தட்ட
எப்படியும் வந்து சேரும் ஒரு படகில்
பிடித்துவைப்பேன்
விளங்கா அவ்வொற்றைப் பகலை
2.
வளரும் திரை
பிடித்தங்கள் தான் முதல் பிரதானம் என்றாய்
மேம்போக்காய்
ஒரு திரைச்சீலை அசைவை
ஆளுக்கான வரவென அறிந்துவைத்திருந்த
நிழல்
கனல் கொண்டு அளக்கும் அச்சிறு தவறால்
இனி
மீள
மீள மிதக்கிறது
திரை நழுவும் பருவம்
கண்டதைக் கடலாக்கி
3.
நிழல் தேடும் முனை
சலிப்புகள் மித மிஞ்சிக் கிடக்கிறது
காரணங்களோடு
அதில்
சலித்தெடுத்த ஒரு பொய்க்கான
ஆம்- ஐ
நான் ஏன் பிச்சையிட வேண்டும்
வாய்ப்புகள் பிரதானமெனில்
தந்த சொல்
நின்ற கோலம்
எடுத்தாண்ட உரிமை
இதை எந்த கழுவில் ஏற்ற?..
இல்லை எந்த சில்லறைக்கு செல்லுபடியாக்க?
சொல்
சொல் என துடிப்பேற்கிறது
மறந்த நொடியின் ஏமாற்றம்
எதை விட
எதை எடுக்க
அணுக்கம் தேவையென
நிழலுக்கு தகிக்கிறது என் குடை உச்சி
வந்து விழும் மழைத்துளி
போதுமாய் இல்லை
ஒரு சில்லிடல் சிக்கிக்கிடக்கும்
மனதிற்குள் முடிச்சிட்டுக் கிடக்கிறது
பழைய நிழல்
பழகிய சலிப்போடு
4.
இருள் நிரப்பும் கணம்
தீரா வட்டங்கள் தீர்ந்தழிக்கும்
வாழ்வில்
வசதிப்பட வந்து நிற்கிறது
வியாக்கியானங்களின் வருகை
நுழையத் தெரிவது
தெரிந்ததை நுழைக்க
அறிந்தது
அதுவரைக்குமென்ற அந்தகாரத்தை இழக்கிறது
ஓர் உணர்தல் உருவாக்கும்
வடிவத்திற்கு மொழிகள் இல்லை
அது
அழிய அழிய
பிறப்பிக்கும் எத்தனையோ நானில்
எந்த நான்
என் சமன் அற்ற நானோ
அந்த நானை பரிசளிக்கும் சூழலுக்குள்
இழுத்து வரத் தெரிந்த
என் பிரியக் காற்றே
மோதிச் சிதற
சிதறிப் பெருக
பெருகி குவிய
குவிந்து பின் ஓர் உயிர்க் கொள்ள
இப்பாத்திரம் சுமக்கும் பழிக்கு
நீ
நான் அறிந்துவிட்ட பிச்சை
சத்தம் சில்லறைகள்
மௌனம் செல்லுபடிகள்
எண்ண எண்ண
எதிலும் புள்ளி
இணைக்க
இணைக்க வடிவம் கொள்கிறது
பாத்திரம்
ரேவா, மதுரையைச் சேர்ந்த இவர் வசிப்பது சென்னையில். இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்..