Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்முன்னோக்கி சென்ற கலைஞனின் கால்தடம்

முன்னோக்கி சென்ற கலைஞனின் கால்தடம்

ஜீவ கரிகாலன்

ரு கலைஞன் அவனிடம் இருக்கும் கலை உபகரணங்களைக் கொண்டு மட்டும் கலைப் படைப்பு உருவாகிவிடுகிறது என்று சொல்லி விட முடியாது. அதன் பின்னாலிருந்தோ இல்லை அதனைத் தாங்கியோ ஒரு சமூக நிகழ்வு, இயக்கம், அசைவு என்ற ஏதோ ஒரு சில செயல்பாடுகளின் தாக்கங்கள், புறக்காரணிகளால் நேரிடையாகவும் எதிர்மறையாகவும் கலைப் படைப்புடன் தொடர்பு கொண்டிருக்கும்.

அதை ரசிப்பவர்கள் அப்படைப்பில் இருக்கும் தடங்கள் வழியே பயணப்பட தெரிந்தால் மட்டுமே ஒரு பெருவெளியின் திட்டிவாசலென அப்படைப்பை உணர வைக்கும்.
*
1960களில் இந்தியக் கலை வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கண்டது. இந்திய நவீனக் கலையின் தொடக்கம் பிரித்தானிய ஆட்சிகாலத்தின் தொடர்ச்சியாகவே பாவிக்கப்பட்ட சிந்தனைப்பள்ளிகளின் பங்களிப்பு இருந்தது. இந்த விவாதங்கள் எழ ஆரம்பித்த காலத்தில், “Group 1890” என்கிற குழு ஒன்று உருவெடுத்தது. இந்தக் குழுவை 12 படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கினர். இந்திய சுதந்திரத்திற்கு பின்பான 1950களில் தீவிரமாக உருவாகி ஓவியப் படைப்புகள் மீதிருந்த ஐரோப்பிய சிந்தனை மற்றும் மாற்றங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர முனைப்போடு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் கொள்கையென முன்னெடுத்துச் சென்றவற்றில் முக்கியமானதாக ஐரோப்பிய கலை இயக்கங்களின் நீட்சியாக தன் படைப்புகளை முன் வைத்து வந்த அத்தனை பேரின் படைப்புகளும் இந்தக் குழுவால் நிராகரிக்கப்பட்டது (hybrid mannerisms resulting from the imposition of concepts evolved by successive movements in modern European art’ ). மாற்றங்களை தனது படைப்பாக்கத்தின் அனுபவத்தில் இருந்து ஒவ்வொரு படைப்பாளியையும் அனுகுவதற்கு போதித்தது. அதே நேரம் இந்த இயக்கம் எந்தவொரு குறிப்பிட்ட முறைகளையும், பாணிகளையும் தன் குறிக்கோளாக போதிக்கவில்லை.

ஓவியர் J.ஸ்வாமினாதன் அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த குழு- ரெட்டப்ப நாயுடு, ஜீ.எம்.ஷேக் உள்ளிட்ட முக்கிய படைப்பாளர்கள் அடங்கிய இந்தக் குழு தன்னைத் தொடர்ந்து தக்க வைக்கத்தவறியது. இக்குழுவின் முதல் கண்காட்சியே இதன் கடைசிக் கண்காட்சியாக இருந்தது. அதற்குப் பின் இக்குழுவைக் காப்பாற்ற முனைந்த அடுத்தடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுப் போனது. 1967ல் இரண்டாவது கண்காட்சிக்காக நிகழ்ந்த ஒரு சந்திப்பில் இந்தியாவின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவரான கீதா கபூர் அவர்களும் இருந்தார்.

courtesy : asia-art-archieve / group 1890

க்ரூப்1890 தனது இரண்டாவது கண்காட்சியை நடத்தமுடியாத போனதற்கு கலை குறித்த தர்கங்கள் உண்டாக்கியப் பிளவு என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த முடிவிலிருந்து இந்தியச் சமகால கலை இருவேறு முனைகளில் இருந்து செயல்பட ஆரம்பித்தது. ஒரு பக்கம் இதை முன்னெடுத்த ஜே.ஸ்வாமிநாதன் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக உருவாகும் அரசின் உதவியோடு ஒரு கலை அமைப்பை பெரும் கட்டுமானத்தில் கொண்டு வந்தார். அது 1982ல் மத்தியபிரதேசத்தின் போபாலில் வைத்து திறந்துவைக்கப்பட்ட ‘பாரத் பவன்’. மறுமுனையில் க்ரூப் 1890 படைப்பாளர்களோடு செயல்பட்ட கலைவிமர்சகர் கீதா கபூரின் முயற்சியில் அவரது கணவரும் புகழ்பெற்ற ஓவியர் ஷெர்கிலின் தங்கையின் மைந்தருமான விவான் சுந்தரம், பூபன் காகர், க்ரூப்1890ல் இருந்து பிரிந்து வந்த ஜீ.எம்.ஷேக் ஆகியோருடன் இணைந்து உருவான PLACE FOR PEOPLE (1981) என்கிற குழுவாக நடத்திய கண்காட்சி. இது வெற்றிகரமான முக்கிய நிகழ்வாக இந்திய கலை வரலாற்றில் இடம் பிடிக்கிறது. இந்தக் குழுவானது மொத்தமாக ஆறு ஓவியர்களும் ஒரு கலை விமர்சகரும் அடங்கிய குழு. இந்த அமைப்பை முன்னெடுத்துச் சென்றவர்கள் தான் விவான் சுந்தரம் மற்றும் கீதா கபூர் என்ற தம்பதியினர். இவர்கள் சேர்ந்து ஆற்றிய பங்களிப்பு ஒவ்வொன்றுமே சமகாலத்தின் கலை படைப்புகள் மற்றும் செயல்பாடுகளில் முன்னோடியானவை.

தோல்வி வெற்றிகரமானது

ஒரு வெற்றிகரமான கண்காட்சிக்கு முன் நடந்த ஏற்பாடுகளாக, சமகாலத்தில் கையாளப்படவேண்டிய சமூகக், கலாச்சார, அரசியல் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த பிரக்ஞை மற்றும் கலைப் படைப்புகள் வழியே அவற்றை அனுகும் யுக்திகள் என்று கலந்தாய்வு செய்ததன் விளைவாகவே வெற்றி கண்டதாக என்று தன் அனுபவங்களிலிருந்து பகிர்ந்தவர் மேற்சொன்ன இரு குழுவிலும் அங்கம் வகித்த G.M. ஷேக்.

PLACE FOR PEOPLE பிரித்தானிய CURATOR மற்றும் விமர்சகரான திமோத்தி ஹைமேனின் வழிகாட்டுதலில், ஏற்கனவே நாட்டின் முக்கிய நவீன படைப்பாளர்களாக இருந்த விவான் சுந்தரம், GM ஷேக், பூபன் காக்கர், சுதிர் பட்டவரதன், நளினி மாலினி ஆகிய அறுவர்களும் உரையாடும் தன்மையுள்ள ( Narrartive ) படைப்புகளை உருவாக்கத் தூண்டியது. இந்த பாணி இன்னும் அகண்ட வெளியில் விவாதிக்கப் பட்டது. அப்படி விவாதிக்கப்பட்டவையே கண்காட்சிகளின் படைப்புகளாகவும், கீதாவின் கட்டுரைகளாகவும் வெளி வந்த்து. கீதா கபூர் இந்தியாவின் முன்னோடி விமர்சகராக வலம் வர இந்த அமைப்புடன் சேர்ந்து உருவாக்கிய கட்டுரைகள் முக்கியமானக் காரணமாக அமைந்தன.

விவான் சுந்தரம் சமகாலத்தின் முக்கியக் கலைஞரான இவர், ஓவியம், சிற்பம், பதிப்போவியம், நிழற்படக்கலை, காணொளி, என்று பல தளங்களில் முன்னோடியாக செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு GAGA WAKA எனும் கண்காட்சியில் ஆடைகள் வடிவமைப்பை முன்வைத்து ஒரு Cross over exhibitionஆக நாகரிகம் அதன் நடப்பு வழக்கு மற்றும் கலை ஆகியவற்றை இணைக்கும் வாய்ப்புகளை mannequin எனப்படும் மாதிரிகளில் கையண்டார். அரசியலிலும் தனது கருத்துக்களை படைப்புகள் வாயிலாகவும், நேரடியாகவும் செயல்பட்டு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
கீதாகபூர் இந்தியாவின் மிக முக்கியமான கலை விமர்சகர்களில் ஒருவர், கலை விமர்சனம், கலை வரலாறு, அரங்க நிர்வாகம்(curator) ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறார். தனது கணவருடன் இணைந்து தனியாகவும், குழுவாகவும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என பல்வேறு கண்காட்சிகள் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். சமகாலத்தின் கலை தத்துவங்கள், கோட்பாடுகளென முப்பது ஆண்டுகளுக்கும் மேலே இவரது செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.

விவான் சுந்தரம் முயற்சித்த ஒவ்வொரு சோதனைகளுமே பெரிய வெற்றிகள் பெற்றன. விவான் சுந்தரத்தின் படைப்புகளை மட்டும் தனியாக ஆராய்வது அல்லது ரசிப்பது என்பதே புதிய பல தளங்களை ஒருவரிடமிருந்தே அறிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமன்று, இவர் கலை குறித்து ஆராய்பவனுக்கும் மிகப் பொருத்தமான தேர்வாக இருப்பார். இவரது தாயின் சகோதரியான புகழ்பெற்ற ஓவியர் அம்ரிதா ஷெர்கில் மேல் கொண்ட ஈர்ப்பில் வெளி வந்த RE-TAKE of AMRITA அவரின் நினைவு போற்றும் தொகுப்புகளில் ஒன்று.

vivan sundaram collections

ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளோடும், புதிய முயற்சிகளோடும் புதுப்புது வடிவங்களை அனுபவங்களைத் தேடும் சுந்தரம், தனது சித்தியான அம்ரிதாவின் வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நிழற்படங்களைத் தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள அநேகப் படங்கள் அம்ரிதாவின் தந்தையான உம்ராவ் சிங் எடுத்தவை. மொத்தமாக வெவ்வேறு காலங்களில் சேமித்த நிழற்படங்களை டிஜிட்டலில் ஒரே காலத்திற்குள் ஒட்டியமைத்த வேலைப்பாடுகள் அவரது பிற படைப்புகளிடமிருந்து அழகியல் பூர்வமாகவும் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு தொகுப்பாகவும் அமைந்த இந்த கண்காட்சியைத் தவிர சமூகத்தின் பங்கை தன் கலைபடைப்புகளில் வெளிப்படுத்தாத வேறு எந்த கண்காட்சியும் நடைபெறவில்லை.

போஸ்ட் மார்டம் என்ற கண்காட்சியில் அவரது முயற்சிகள் மனித மாதிரிகளில் உருவாக்கிய சிற்பங்கள், உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் அரங்கேறிய LADY GAGAவின் தாக்கத்தில், நவநாகரிக ஆடை அலங்காரத்தின் தாக்கங்களை முன்வைத்து அவர் உருவாக்கிய GAGA WALK ஆகியனவும் முக்கியமானவைகளாக பேசப்பட்டன.

விவான் சுந்தரத்தினை இந்தியாவின் முதன்மையான மற்றும் தலை சிறந்த INSTALATION ARTIST ஆகக் கருதுவதும் தவிர்க்க முடியாதது. Installation art என்பது ஓவியங்கள், சிற்பங்களைக் காட்டிலும் அதிக அனுபவத்தை நேரடியாக மக்களுக்குத் தருபவை, அரங்குகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பல்வேறு நோக்கங்களோடும் உருவாக்கப்படும் பொதுவாக முப்பரிமாணத்தோடும், ஒலி, ஒளி, வாசனை என பல பரிமாணங்களோடும் பார்வையாளனுக்கு அனுபவம் தருவது ஆகும். இதன் காரணமாக ஐரோப்பியத் தாக்கம் மிக்கவர் என்றும் இந்தியக் கலை மரபிற்கு எதிரானவர் என்கிற விமர்சனமும் அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர் இந்தியத்தன்மை என்கிற மரபை விமர்சன பூர்வமாகவும் அரசியல் பூர்வமாகவும் எதிர்கொண்டார்.

அவரை கலைஞர் என்று அழைத்ததற்கு இணையாக செயற்பாட்டாளர் என்று அழைக்கும் அளவிற்கே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக மதரீதியான பிரச்சினைகளில், பாசிச ஒடுக்குமுறைகளை மிகக்காத்திரமாக எதிர்த்தவர். அத்தோடு தன் சகாக்களின் குரல்களையும் பதிவு செய்யத் தூண்டியவர். சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை,கொடுமைகளை எதிர்த்தவர் தமது படைப்புகளில் வெளிப்படுத்தியவர். 1960களின் பிற்பகுதியில் குஜராத் கலவரங்களைக் கண்டித்த இவர், வளைகுடா போர், பாபர் மஸ்ஜீத் இடிப்பு என சில ஆண்டுகளுக்கு முன் நடந்த குஜராத் மதக் கலவரங்கள் வரை எல்லா அநீதிகளுக்கும் எதிராக அவர் தமது படைப்புகளிலும் வினையாற்றியுள்ளார்.

*
எல்லா காலங்களிலும் சுந்தரத்தின் மனைவி கீதா கபூரின் இணையான பங்களிப்பை ஒதுக்கிவிட்டு இவரைப் பற்றி மட்டும் பேசிவிட முடியாது. இந்த தம்பதியரின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள், படைப்புகளில் வலம் வருவது, இந்திய நவீன ஓவியங்கள் குறித்த ஆய்வுக்கும் பயன்படும். கொள்கைகள், பாணிகள், தொழில்நுட்பங்களினால் மட்டுமே வெற்றி கிட்டுவதில்லை, ஒரு கலைப் படைப்பு வெற்றிகரமாக மக்களிடம் போய்ச்சேர்வதற்கு இத்துறையில் பக்கபலமாய் பல செயல்பாடுகள் இருக்க வேண்டும். அது தான் ஒரு சிறந்த கலைச் சமூகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க முடியும். புதிய பரிசோதனைகள், கலை விமர்சனம், கலை வரலாறு, ஊடகம், அரங்கு ஏற்பாடு, கருத்தரங்கம் போன்றவை அவசியம் வேண்டும்.

கீதா கபூர் மற்றும் விவான் சுந்தரம், இவ்விருவரும் அப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்பியவர்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே கலைத் துறையில் நமக்கு பல கண்ணோட்டங்களை உருவாக்கவும், சில கருத்துகளை, முடிவுகளைத் தகர்த்தெரியவும் உதவும். ஏனெனில் கலை வரலாறு இல்லாத சமூகத்தின் கால்தடங்கள் கண்டிப்பாக அழிக்கப்படும். விடுதலைக்குப் பின்னர் 1980களில் வெவ்வேறு திசைகளில் பயணித்த இந்தியக் கலையின் முற்போக்குத் தடம் விவான் சுந்தரத்தின் மிகப்பெரிய பங்களிப்பில் இருந்தே தொடங்குகிறது.

(2014ல் கணையாழியில் வந்த கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்)

***

ஜீவ கரிகாலன் – ட்ரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. கணையாழியில் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில இதழ்களில், பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகள் எழுதுவது என இயங்கி வருகிறார்.மின்னஞ்சல்: kaalidossan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular