Thursday, December 5, 2024

பொம்மை

தென்றல் சிவக்குமார்

ன்னும் ஒலிபெருக்கி இயக்கப்படவில்லை. தன் மக்கள் புடைசூழ தன் அமைதியில் ஆழ்ந்து செந்நிறப் பருத்திச் சேலையில், படியேறி வருவோரை வரவேற்கிற தோரணையில் பாந்தமாக அமர்ந்திருந்தாள் அருள்மிகு முப்பாத்தம்மன். மூக்குத்தியும் நெற்றிப் பொட்டும் கச்சிதம் அவளுக்கு. இன்றைய அமைதியில் இன்னும் ரசிக்கக் கூடி வந்தது. ஆனால் சலசலப்புக்குப் பழகிய புலன்களுக்கு அமைதி கொஞ்சம் தடுமாற்றம் தந்ததும் உண்மைதான். சுற்றி வருகையில் புற்றினருகில், பொங்கலிடும் மேடையில் என்று எங்குமே கூட்டம் இல்லாதது, இத்தனை உபதெய்வங்கள் சூழ வீற்றிருந்தபோதும், பூசாரிகள் இருவர் இருந்தபோதும், என்னவோ அவளும் நானும் மட்டுமே அங்கிருக்கிறாற் போன்ற உணர்வு. அது பெருமிதமாகவும் இருந்தது, சங்கடமாகவும் இருந்தது. இந்த முரண் கொண்டுவந்த சிரிப்புடன் தெருவுக்குள் இறங்கினேன்.

பனகல் பார்க் சென்று பாரிமுனைக்குப் பேருந்து ஏறுவதாகத் திட்டம். வண்டிப்பாதைச் சாலையின் வலப்புற மத்தியிலிருந்து ஒரு பெண் இரண்டு மூன்று வீடுகள் தாண்டிச் சென்று எதிர்ப்பக்கம் பார்த்து சற்று நின்றுவிட்டு, சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி வருவது தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது அவள் கையில் வைத்திருந்த அலைபேசியைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது, எனில் ஏதோ படம் எடுத்திருக்கிறாள். இவ்வளவு காலையில், உடுத்திய நைட்டியுடன் அப்படி என்ன சுவாரசியமான படமாக அது இருக்கும் என்ற ஆர்வம் உப்பத் தொடங்கியது. ‘க்யூரியாஸிட்டி கில்ட் த கேட்’ என்பாள் ஹேமா. வழக்கம் போல ‘ஹூ கேர்ஸ்’ என்றபடி மனம் உந்தித் தள்ளியது.

நான் அவள் வீட்டை நெருங்கும் முன்பே அந்தப் பெண் உள்ளே சென்றுவிட்டாள். அவள் நின்ற இடத்தில் நின்று, திரும்பிப் பார்த்தேன். க்யூரியாஸிட்டி. எதிர்திசையிலிருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் அலையலையாகப் பசலைக்கொடி இறங்கியிருந்தது, நான் பார்த்த கோணத்தில் அந்தப் பசலைக்கொடிகள் அலை அலையாகச் சுவரேறிக் கொண்டிருந்தன. இந்தப் பசுங்கொடிகள் வளையும் இடத்தில் மெத்தென்று இருத்தியிருந்தார்கள் ஒரு கண்ணன் சிலையை. இடுப்பில் கை வைத்த வாக்கில் கம்பீரமாகத்தான் நின்றிருந்தான். ஆனால் சட்டென்று ஓர் உறுத்தல் புறப்பட்டது. கண்ணனை நிறுத்தும் இடமல்ல அது. எனில், ஏன் அங்கே வைத்திருப்பார்கள்? இது கிட்டத்தட்ட கைவிடல் இல்லையா? சிலைக்கு ஏதும் நேர்ந்திருக்குமோ என்று யோசித்த மாத்திரத்தில் கண்களைத் திருப்பிக்கொண்டு யோசனையையும் வலிந்து திருப்ப முயன்றேன். ப்ளடி க்யூரியாஸிட்டி. ஹேமாவை அழைத்துப் பேசலாமா? இப்போதுதான் காலைப் பரபரப்புக்குள் புகுந்திருப்பாள். வேண்டாம்.

‘கண்ணா’ என்ற குரல் கேட்டது. மண்டைக்குள் இல்லை, வெளியில்தான் கேட்டது. மண்டைக்குள் குரல் கேட்கும் சிக்கல் இருப்பவர்களுக்கெல்லாம் அது உள்ளிருந்து ஒலிக்கிறாற் போலத் தோன்றுமா என்ன? தெரியவில்லையே. இந்தப் புதுக்கவலைக்கு இன்னும் எத்தனை நேரத்தைத் தின்னக் கொடுக்க வேண்டுமோ? ‘கண்ணா’ என்ற குரல், கேஷியர் மாமாவின் குரல். அப்பாவின் நண்பர் வங்கியில் கேஷியர் பணியில் தொடங்கி மேனேஜராக ஓய்வு பெற்றவர். இடையில் அப்பாவுடன் ஏதோ ஊடல், ஆனாலும் வீட்டுக்கு வந்து அவரைத் தவிர்த்துவிட்டு எங்களுடன் பேசிச்செல்வார். வரவுக்கான காரணம் அப்பாவைத் தவிர்ப்பது கிடையவே கிடையாது, எங்களைப் பார்ப்பதுதான். சுத்தமான கோபம், சுத்தமான அன்பு. அவர் போய் ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அவரைப் பற்றிக் கடைசியாக எப்போது யோசித்தேன் என்றே ஞாபகம் இல்லை. திடீரென்று எப்படி அவர் குரல்?

‘எதாவது பாட்டு, எதாவது பாட்டு’ என்று கூக்குரலிட்டது வெளி மனம். உள் மனம் ‘கண்ணன் முகம் காண காத்திருந்தாள்’ என்று எள்ளியது. வேகவேகமாக நடந்ததில் கோவிலை மீண்டும் அடைந்திருந்தேன். ஒலிபெருக்கியை இயக்கியிருந்தார்கள். ‘கற்பூர நாயகியே’ என்று எல்.ஆர்.ஈஸ்வரி நல்லோசை அருளினார். கூடவே முணுமுணுத்தபடி வேகவேகமாக நடக்கத் தொடங்கினேன். பாட்டுச் சத்தம் கேட்கவில்லை என்பதை உணர்ந்து நின்றபோது, ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாய்’ என்று உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. நடக்க வேண்டிய திசையில் அல்லாமல் வேறு திசையில் நடந்து வந்திருந்தது புரிந்தது. துரைசாமி சப்வேயின் முனையில் நின்றிருந்தேன். கால்கள் திடீரென்று கனத்துக் கெஞ்சின. இங்கிருந்து பனகல் பார்க் போவதற்கு ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ ஏற வேண்டுமா? என்ன அபத்தம்.

எதிர்ப்பட்ட ஆட்டோவை அணுகி, “ஸ்டேஷன் போகணும்” என்றேன். அவர் நிதானமாக, “கோடம்பாக்கமா, மாம்பலமாம்மா?” என்று கேட்டார். புன்னகைத்தபடி, “கோடம்பாக்கம்” என்றேன். ஆட்டோ ஓடத் தொடங்கியதும் ஹேமாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவளுடைய அன்றாட வழித்தடத்தில் இன்றைக்கு நான் அவளுக்கு முன்பாகப் பயணிக்கிறேன். அவள் வீடு, கல்லூரி, அலுவலகம் என்று எல்லாமே ரயில் நிலையங்களின் அண்டையில் இருப்பதால் ரயிலுக்குப் பழகியவள். அவளோடு ஐந்தாறு முறை இதே அந்தோணியார் கோவிலுக்கு ரயிலில் வந்திருக்கிறேன். பேருந்து பழக்கத்தில் ஃபோர்ட் ஸ்டேஷன் தாண்டிய உடனேயே எழுந்து வாசலுக்குப் போக எத்தனிப்பேன். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைப்பாள். என் பதட்டத்தை அவ்வளவு ரசிப்பாள். இப்போது இந்தப் பதட்டத்தைப் பார்த்தால் இரண்டே வார்த்தைகளால் அதனை அடக்குவாள். நீண்ட நீண்ட வசனங்களில் நம்பிக்கை இல்லாதவள், என்னைப் போலில்லை.

கோடம்பாக்கத்தில் ரயில் ஏறி, வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, பாட்டுக் கேட்கத் தொடங்கினேன். ஏழாவது பாடலின் மத்தியில்,
‘பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்’
என்று யேசுதாஸ் உறுதி சொன்னபோது ஃபோர்ட் ஸ்டேஷன் வந்துவிட்டது. பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனாலும் பாட்டை முழுக்கக் கேட்டுவிட்டு, மெல்ல இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து வாசல் அருகில் சென்று நின்றுகொண்டேன். பீச் ஸ்டேஷனில் இறங்கி இருபுறமும் பார்த்தேன். எந்தப் பக்கம் நடக்க வேண்டும் என்று திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. இப்போதுதான் படிகளிலும் நடைமேடைகளிலும் மெல்ல கூட்டம் சேரத்தொடங்கியிருந்தது. ஒரு மாதிரியாக இந்தப் பக்கம்தான் என்று முடிவு செய்து நடந்தேன். தண்டவாளங்களுக்கு மறுபுறம் நின்றிருந்த ரயிலில் இரண்டு புறாக்கள் தத்திக்கொண்டிருந்தன. நகரும் ரயிலில் புறாக்களைப் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். நடக்கும் போதே அந்த ரயில் புறப்பட்டது, புறாக்கள் இரண்டும் பறந்து நடைமேடை நிழற்கூரைக்குப் போய்விட்டன.

சரியாகத்தான் வந்திருந்தேன். பிரதான வாசல் வரை போகாமல் பக்கவாட்டில் இருக்கும் சிறிய இடைவெளியின் வழியாகவே வெளியேறினேன். சாலையைக் கடந்து சென்று இடப்புறம் திரும்ப வேண்டும். எத்தனாவது வளைவு என்பது மறந்துவிட்டது. கால்கள் பின்னிப்பின்னி சதி செய்தன. சிற்றுண்டி கடைகளின் காலை நேரப் பெருங்காய, துவரம்பருப்பு வாசனை எல்லாப் புலன்களையும் நிறைத்தது. பசிக்கிறதோ என்று உடலிடம் கேட்டுப் பார்த்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாக பெயர்ப்பலகையைப் பார்த்தபடி கடந்து ஆர்மீனியன் தெருவுக்குள் திரும்பினேன். உடனடியாக அலைபேசியை எடுத்து அதன் ஒலியை அமர்த்தி வைத்துக்கொண்டேன்.

எப்போதும் மெழுகுவத்தி வாங்கும் கடையில் வாங்கியபோது அவர் வழக்கம்போல ஒரு ரோஜாப்பூவைக் கொடுத்தார். எப்போதும் அங்கேயே போவது அந்தப் புன்னகைக்காகவா பூவிற்க்காகவா தெரியவில்லை, ஆனால் உள்ளே செல்வதற்குண்டான அமைதியை அலைபாயும் மனத்தின் மேல் பன்னீரைப் போல அவர் தெளித்து வைப்பார். வரிசை நீண்டு இருந்தது, நேரம் செல்லச்செல்ல இன்னும் நீளும், சீக்கிரம்தான் வந்துவிட்டிருக்கிறேன். வரிசையில் இணைந்துகொண்டு, உள்ளங்கைகளுக்குள் மெழுகுவத்திகளையும் ரோஜாப்பூவையும் வைத்தபடி நகரத் தொடங்கினேன். எதிரே குறுவிளக்குகளின் ஒளியோட்டத்தில் காணக்கிடைத்த பைபிள் வாசகங்களை மனத்துக்குள் வாசித்தேன், எப்போதும் எனக்குப் பிடித்தது அது. எல்லா ஆசீர்வாதச் சொற்களும் என் ஒருத்திக்காகவே பளிச்சிடுவதாக ஓர் உற்சாகம்.

வரிசை திரும்பியவுடன் உடன் நகர்பவர்களை கவனிக்கத் தொடங்கினேன். வெகு சிலர் அலைபேசியில் கவனமாக இருந்தார்கள். பலரும் ரோஸரி மணிகளை விரல்களால் திருப்பியபடி பிரார்த்தனை மனனத்தை சத்தமின்றி உச்சரித்துக் கொண்டிருந்தனர், ஒரே மாதிரி மஞ்சள் கவுனும் வெள்ளை பாசி மணியும் அணிந்த இரண்டு சிறுமிகளை அவ்வப்போது வரிசைக்குள் இழுத்துக்கொண்டபடி, நீலச்சேலையில் முக்காடணிந்த பெண் முழங்காலிட்டு நகர்ந்து கொண்டிருந்தாள், அவளுக்கும் சிறுமிகளுக்கும் முன்பாக ஒரு மனிதன். அவள் கணவனாக இருக்க வேண்டும், இவர்களைத் திரும்பியே பார்க்காமல் நகர்ந்து கொண்டிருந்தான், அவனது ஒரு கரம் மட்டும் அவ்வப்போது பின்னகர்ந்து பிள்ளைகளின் தலையை வருடியது.

என் வரிசை வளைந்து எனக்கு முன் நின்றவர்கள் திரும்பி என்னருகே வருகையில் அவளைப் பார்த்தேன். முழங்கால் வரையில் ஜீன்ஸ், சௌகர்யமான டி-ஷர்ட், தலையைச் சுற்றி சாம்பல் நிற ஸ்டோல், அவள் கையில் ஒரு சிறிய வேண்டுதல் தொட்டில் இருந்தது. நிஜப் பிள்ளையை ஏந்தும் ஜாக்கிரதையுடன் அதைப் பற்றியிருந்தாள். என் கைகளில் ஏந்தியிருந்த மெழுகுவத்திகளையும் ரோஜாப்பூவையும் பார்த்தேன். நானும் அவளைப் போலவேதான் ஏந்தியிருந்தேன். தானே கொதித்து தானே பொங்கும் மனத்தை என்ன செய்ய. என் உள்ளங்கைத் தொட்டிலுக்குள் இளஞ்சிவப்பு மெழுகின் மீது சொட்டிய என் கண்ணீர்த் துளிகள் வழுக்கிக்கொண்டு ரோஜாக்காம்பை நோக்கி இறங்கின.

இதற்குள் நானும் பழைய வரிசைக்குள்ளாகவே திரும்பியிருக்க அவள் தென்படவில்லை. நிமிர்ந்து கலங்கிய கண்களினூடாக விவிலிய வசனம் என்ன ஒளிர்கிறதென்று பார்த்தேன். “உன் பேர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்.” மனம் மேலும் பொங்க, கையிலிருக்கும் ரோஜாப்பூவில் ஒரு துளி கண்ணீர் சொட்டியது. மறுகையால் அதை மூடிக்கொண்டேன். லேசாக இடைவெளி விட்டு எரியும் தீபத்தைப் பாதுகாக்கிறாற் போல. என்னென்னவோ மனத்தில் மோத தோட்டத்து நத்தை நீர்க்கோட்டுடன் நகர்வதைப் போல நெடுந்தூரம் நகர்ந்து கொண்டிருந்தேன். அப்படியே கைகளை உயர்த்தி முழங்கையால் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது மீண்டும் அவள் எதிர்ப்பட்டாள். இப்போதும் அவள் முகத்தைப் பார்க்கவே இல்லை. தொட்டிலுக்குள் பார்த்தேன். பச்சை மயிலிறகுடன் நீலவண்ணக் கண்ணன்.

வரிசை சுழலத் தொடங்கியது. என் உடை காற்றில் குடையைப் போல விரிந்து சுழன்றது. தேவாலயம் மொத்தமும் சுழன்றது. எல்லாம் நின்றபோது அவளும் அவள் கண்ணனும் நானும் என் ரோஜாவும் மட்டுமே எஞ்சியிருந்தோம். நாங்கள் மட்டுமே அந்தோணியாரின் சந்நதிக்குள் நுழைந்தோம். அவர் காலடியைத் தொட்டு வணங்கி அவளை நோக்கி விரைந்தேன். தடுக்கத்தான் யாருமே இல்லையே. கிட்டத்தட்ட ஓடிச்சென்று அவள் கண்ணனின் சிகையில் என் ரோஜாவைச் சூட்டினேன். சட்டென்று ஓசைகள் திரும்பின. ஒரு பயம் வந்து தொண்டையைக் கவ்விற்று. என்ன நினைப்பாளோ தெரியவில்லையே. முகத்தை நிமிர்த்தி, முக்காட்டை லேசாகப் பின்னுக்குத் தள்ளி, கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள், அடைத்த குரலில் சொன்னாள், “தேங்க்யூ.”

அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் வெறுமனே பார்த்துப் புன்னகைத்தேன். அந்தக் கணத்தில் என் கண்களை, அவற்றின் கனிவை நானே பார்க்க விரும்பினேன். தேவாலயத்தின் மறுமுனையிலிருந்த தூய இருதயரை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னுள்ளிருந்து ‘கண்ணா’ என்று மகிழ்ந்து கூவியது கேஷியர் மாமாவின் குரல் இல்லை. சிறிய பனிக்கட்டியின் மீது மெழுகுச் சுடரால் நிரடினாற் போல அந்தக் குரல் என் மௌனத்தின் மீது விழுந்தது. பர்ஸுக்குள்ளிருந்த அலைபேசி உள்ளங்கையில் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

***

தென்றல் சிவக்குமார் – – கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு “எனில்” வெளியானது. தாமரைச்செல்வி எனும் பெயரில் இவர் மொழிபெயர்த்த “முகமூடிகளின் பள்ளத்தாக்கு” நாவல் நல்ல கவனம் பெற்ற ஒன்று. அண்மையில் “ஆவியின் வாதை” எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியானது.

மின்னஞ்சல்: thendralsivakumar@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular