Wednesday, April 17, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்Persepolis - சத்ரபியின் வாழ்க்கைக் குறுக்குவெட்டுத் தோற்றம்

Persepolis – சத்ரபியின் வாழ்க்கைக் குறுக்குவெட்டுத் தோற்றம்

தூயன்

ர்ஜான் சத்ரபி 1969 ல் ஈரானில் பிறந்தவர், 1979 ல் வெடித்த ஈரானின் இஸலாமியப் புரட்சியினால் புலம் பெயர்ந்தவர்களில் சத்ரபியும் ஒருவர். தற்போது பாரிஸில் வசிக்கிறார். இவர் குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள், காமிக்ஸ்கள் எழுதியுள்ளார். இவரது காமிக்ஸ்கள் பல தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க்கர் உட்பட உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. பெர்செபோலிஸ் 1, பெர்செபோலிஸ் 2 இரண்டும் சுயசரிதை வடிவில் எழுதப்பட்ட, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான காமிக்ஸ். அதன் பிறகு எம்ப்ராய்டரிஸ் என்கிற புத்தகத்தை 2005 ல் எழுதினார். தொடர்ந்து அரசதிகாரத்திற்கு எதிராகவும் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இஸ்லாமியப் பெண் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற பெண்களில் சத்ரபியும் முக்கியமானவர்.

“இரண்டாம் உலகப் போர் மேற்கில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது, அது முழு உலகிற்கும் ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அது அல்ல. இரண்டாம் உலகப் போர் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. எங்களுக்கு ஒரு போர் இருந்தது. கொரியாவின் போருக்குப் பிறகு, ஈரான்-ஈராக் போர் மிகப்பெரிய போர், ஆனால் அதைப் பற்றி யாருக்குத் தெரியும்? இந்த போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையிலான இந்த வெள்ளையர்கள் அனைவரும் சுமார் அறுநூறு மில்லியன், அதாவது உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதம். உலகம் முழுவதிலும் உள்ள பத்து சதவிகித மக்களின் பிரச்சனை நூறு சதவிகிதப் பிரச்சனை என்று நம்மீது முன்னிறுத்துகிறார்கள் அதுதான் வெள்ளை நாசிசம்.”

பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல்

‘மெய்யான உலகமானது மானுட உடலின் விரிவாக்கமாகிறது. மானுட உடல் எப்படி அங்ககமான உறுப்புகளைக் கொண்டிருக்கிறதோ அதுபோல மெய்யான உலகம் மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்புகளாகிறது. இதனால்தான் மானுடர்களின் பௌதிக இருப்பும், மனம் சார்ந்த இருப்பும் இயற்கையோடு இணைந்திருப்பது என்பது, இயற்கை இயற்கையோடு இணைந்திருப்பது என்றே அர்த்தமாகிறது. ஏனெனில் மானுடர்கள் இயற்கையின் பகுதியாகிறார்கள் என்கிறார் மார்க்ஸ். இயற்கை என்றழைக்கப்படும் பௌதிக உலகமே மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்பு. இந்த மேற்கோளை உள்முகமாக விரித்துப் புரிந்துகொண்டே போகலாம். இன்றைக்கு ‘உலகம்’ என்பதற்கு அர்த்தம் என்ன? உலகம் / மெய்யான உலகம் / மெய்நிகர் உலகம் என நவீன அறிவியல் உலகத்தை அர்த்தப்படுத்துகிறது. மார்க்ஸ் குறிப்பிட்ட அங்ககமல்லாத மானுட உறுப்புகளான பௌதிக உலகத்திற்கு இந்த நவீன அறிவியல் இன்று என்னவாக இருக்கிறது?

இதற்கு முதலில் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஒன்று நவீன அறிவியல் மற்றொன்று கலாச்சார மாற்றம். முதலில் நவீன அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நவீன அறிவியல் கிரேக்க அறிவின் தாக்கத்தைக் கொண்டே உருவானது என்பது நாம் அறிந்தது. கிரேக்கப் பார்வை இந்திய, அரேபிய பண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய கணிதவியலை இஸ்லாமிய இறையியலிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவொன்றாக நவீன அறிவியல் அதை அப்புறப்படுத்துகிறது. சுந்தர் சருக்கை சொல்வதை இங்கு மையப்படுத்த வேண்டும். காலனியத்தின், ஏகாதிபத்தியத்தின் விளைவாக இயற்கையை (பௌதிக உலகை எனப் புரிந்துகொள்ளலாம்) ஒருவிதமாக அர்த்தப்படுத்தும் நவீன அறிவியல் முறைமை உலகளாவியத் தன்மை கொண்டதாகி விட்டது. இதுவே புறவயத் தன்மை கொண்டதாகவும், நவீனத்துக்கு முந்தைய சமூகங்கள் உருவாக்கிய மற்ற வரையறைகள் அகவயமான கதையாடல்களாகவும் முன்வைக்கப்பட்டன. இதே கருத்தைத்தான் சையித் ஹூசைன் மேற்கத்திய நவீனத்தின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக மாபெரும் இஸ்லாமிய அறிவியலாளர்கள் எல்லோரும் இஸ்லாமிய மறைஞானத்துக்கு உட்பட்டுத்தான் இயங்கினார்கள் என்கிறார். நவீன மேற்கத்திய அறிவியல் மதத்தையும் அறிவியலையும் எதிரெதிராக வைப்பதை நாம் நினைவில் கொள்வோம். இங்கு இஸ்லாமிய மறைஞானம் என்ற சொல்லை, நான் மேலே குறிப்பிட்ட நவீன அறிவியலால் விலக்கப்பட்ட கீழைத்தேய கணிதவியல் என்றே புரிந்துகொள்கிறேன்.

இரண்டாவது, கலாச்சார மாற்றம். கலாச்சார மாற்றம் எப்போதும் ஒருவித நவீன உலகப் பார்வையை முன்வைப்பதாக நாம் தவிர்க்க முடியாமல் நம்புகிறோம். எப்படி நவீன அறிவியலை மறுக்க முடியாதோ அதேபோல கலாச்சார பிம்பத்திலிருந்து நம்மால் விலக்கவும் முடியாது. உலகளாவியப் பார்வை என்கின்ற பதமே கலாச்சார இறக்குமதியின் இன்னொரு அர்த்தம். அப்படியென்றால் நவீனம் , பழமையை முற்றிலுமாக நிராகரிக்கிறதா? அல்லது இணைத்து விலகுகிறதா? என்றால் இரண்டும் நடந்திருக்கலாம் என்கிறார்கள். காலனிய நவீனத்துவம் அறிமுகப்படுத்திய மேற்கத்திய நவீனத்துவம்தான் இருபதாம் நூற்றாண்டின் உலகம் முழுக்க வேர் ஊன்றியதென்பது மறுக்க முடியாத உண்மை.

நவீனத்துவம் எப்படி பொருளாதார அதிகாரத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதோ அப்படியேதான் பொருளாதார அதிகாரம் நவீனத்துவத்தை உள்ளடக்கமாகக் கொள்கிறது. அப்படியென்றால் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயிப்பதில் பொருளாதாரத்திற்கும் அடிப்படை மதவாத அனுகுமுறைக்குமான உறவு என்ன?

இந்தக் கேள்விகளை மர்ஜான் சத்ரபி எழுதிய பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல் வழியே நாம் எதிர்கொள்ள முடியும். 1979 வரை ஷா முகம்மது ரீஷா பக்லவியின் ஆட்சி நடக்கிறது. ஈரானை நவீனமயமான நாடாக, வெளியே செல்வது, ஹிஜாப் அணிவது என பெண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், மேற்கத்தியக் கலாச்சாரத்தின் போக்கில் சுதந்திர நாடாக வைத்திருக்கிறார். அப்போது ஈரானின் அரசதிகாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் (ஈரானின் எண்ணெய் வளங்களுக்காக) இருக்கிறது. ஷாவை ஆட்சியிலிருந்து இறக்கி அவரது மகனைத் தூண்டிவிட்டு பிரிட்டனும் ரஷ்யாவும் செல்வாக்கைப் பிடிக்கின்றன. ஆனால் ஷா தனது தந்தையைப் போன்றே நவீனமயமான நாடாகத்தான் ஆட்சியை நடத்துகிறார் (அப்போது உருவானதுதான் கலாச்சார வெண்மை புரட்சி) , ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து ஆட்சி செய்து வந்த பிரிட்டனின் கொள்கையைத் துறக்கும் முடிவில்-எண்ணெய் நிறுவனங்களை தாங்களே நிறுவகித்துக் கொள்கின்ற நிலை-பிரிட்டன் ஈரானின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, தங்களுடைய முதலீட்டியத்திற்குச் சிக்கல் ஏற்படுகிறபோது , இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை உருவாகிறது. ஈரானுக்கு முன்பாக இப்போது இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று, தனது சொந்தப் பொருளாதாரத் தேவைகளை நிர்வகிக்க வேண்டும், இரண்டாவது, உள்ளூர் மதகுருமார்கள் அலி கமேனி போன்றவர்களால் இஸ்லாமிய அடிப்படை வாத வழக்கங்களை மீளப் பற்றும் முடிவு.

இந்தச் சூழலில்தான் அங்கு இஸ்லாமியப் புரட்சி வெடிக்கிறது. நாவலின் மையப் பாத்திரமான மர்ஜான் சத்ரபி ஆறுவயதுச் சிறுமியாக இந்தப் புரட்சியை என்னவென்றே தெரியாமல் எதிர்கொள்வதிலிருந்து தொடங்குகிறது பெர்சேபோலிஸ் நாவல் . நவீன பழக்கவழக்கங்களால் (பர்தா அணியாத) வளரும் சத்ரபிக்கு திடீரென ஒருநாள் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளின் நெருக்கம் குழப்படையச் செய்கின்றன. இருபாலர் பள்ளியாக பாட முறைகள் மாறுகின்றன. எங்கு பார்த்தாலும் பெண்கள் கலாச்சார அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதாவது, ஈரானிய அரசு மேற்கத்திய நவீன கலாச்சாரத்திற்கு எதிராக (Counter to Western Modernity) தனது அதிகாரத்தை நிறுவ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரப் பண்பை கையில் எடுக்கிறது. பிரிட்டிஷின் ஏதேச்சதிகாரப் போக்கிலிருந்து புரட்சி மூலம் விடுதலை பெறுவதா? அல்லது அடிப்படை இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்வதா? என்கின்ற இரட்டைக் குழப்பத்தில் அன்றைய ஈரானின் முகம் புரட்டிப் போடப்படுகிறது. (இதை இன்று ஓரளவுக்கு நம்மால் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் சீன அரசின் மறைமுக அதிகாரத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.)

பெர்சேபோலிஸ் நாவலின் தொனி எள்ளல் தன்மையுடையது. சிறுமியான சத்ரபி அடிப்படைவாதக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் விதம் நாவல் முழுக்க அதை நையாண்டிப் போக்கில் சொல்லப்படுகிறது. அதாவது, பிரக்ஞை பூர்வமாகப் பகடி செய்யாமல் ஒருவித Black Humour போல். சத்ரபி சிறுவயதில் அத்தனைப் பிரச்சனையையும் கடவுளிடம் (கற்பனையில் உரையாடுவது) சொல்கிறாள் (முறையிடுவதில்லை). கடவுள் நீண்ட வெள்ளை முடியும் தாடியுமாக மார்க்ஸைப் போல தோற்றமளிக்கிறார் என்கிறாள். கடவுள் அவளிடம், “நீ டாக்டராகப் போகிறாயா?” என்று கேட்பதற்கு இல்லை “நான் தீர்க்கதரிசியாகப் போகிறேன்”என்று, ”ஏன் இந்த உலகை சகிப்புத் தன்மை கொண்டதாக மாற்ற முடியவில்லை?” எனக் கேள்வி கேட்கிறாள். அவளது அப்பா மூலம் அறிமுகப்படுத்தப்படும் உலகத் தலைவர்கள் காந்தி, சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ மற்றும் தத்துவவாதிகள் மார்க்ஸ், தெகார்த்தே என அனைவரையும்போல தன்னை ஒப்பனை செய்துகொண்டு புரட்சி செய்யப் போராட்டத்திற்கு கிளம்புவதாக விளையாடுகிறாள். ஒரு சமயம், மார்க்ஸ் அவளுக்கு கனவில் வரும் வெள்ளைத் தாடியும் சுருட்டை முடியுடன் இருக்கும் கடவுள் போல இருக்கிறார்.

ஈரான்-ஈராக் போர் துவங்கும்போது ஈராக்கிலிருந்து நிறைய பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்கள். சத்ரபியின் குடும்பமும் முயற்சிக்கிறது. ஆனால் கடைசியில் சத்ரபி மட்டும் ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்படுகிறாள். ஒருபுறம் கலாச்சார அடக்குமுறை, அடிப்படைவாத நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல் என அனைத்திலிருந்தும் வெளியாவதற்கு ஒரே தீர்வான நாட்டை விட்டு வெளியேறுவது நல்ல முடிவு என்றாலும் புலம்பெயரும் நாட்டின் கலாச்சாரம், அன்றாட நடைமுறைகள் அவளது உலகத்தை மேலும் சிக்கலாக்குகிறது. ஆஸ்த்திரியாவின் நவீன வாழ்க்கை முறை, மது விடுதி, களிப்பூட்டும் ஆடை ஒப்பனைகள், அதீத சுதந்திரம் எல்லாம் சத்ரபிக்கு உற்சாகத்தை அளிப்பதற்குப் பதிலாக மன அழுத்தத்தையும் புரியாதக் குழப்பத்தையும் தருகிறது. அங்கேயே படிப்பை முடிக்கின்ற சத்ரபி, பின் தாய்நாடுக்குத் திரும்பி வேலை செய்கிறாள், இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாள், திருமணம் செய்து கொள்கிறாள், பின் திரும்பவும் நாட்டை விட்டு வெளியேறுவதோடு நாவல் முடிகிறது. கிழக்குக்கும் மேற்குக்குமான சுதந்திரத் தன்மையையும் நிலையின்மையும் சத்ரபியின் இளமைக் காலம் முழுவதும் அலைகழிப்பை ஏற்படுத்துகிறது. சத்ரபி மட்டுமில்லை அன்றைய ஈரானின் பெண்கள் அனைவரின் சுயமும் நவீனத் தன்னிலையாலும் அடிப்படைவாதத் தன்னிலையாலும் கட்டப்படுகிறது.

ஆஷிஸ் நந்தி தனது The Uncolonized Mind கட்டுரையில் ருத்யார்ட் கிப்ளிங் என்கின்ற ‘ஆளுமை’ எப்படி காலனியப்பட்ட இந்திய நிலத்தின் பழக்கங்களைக் கொண்ட மேற்கத்திய மனிதனுக்குள் உருவானது என உரையாடுகிறார். அதவாது, கிப்ளிங் போன்று பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வளரும் குழந்தைகள் Indianized Westerner / Westernized Indian என்கிற பண்பாட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். கிப்ளிங்கால் பிரிட்டிஷ்காரர்களை வெறுக்கவும் முடியாமல் முழுமையான இந்திய மனோநிலையால் கவரப்பட்டு இந்தியர்களால் பிரிட்டிஷ்காரராகப் பார்க்கப்படுவதன் பிரதிபலிப்புதான் Kim கதாப்பாத்திரம். இத்தகைய சுயம் ஒருவகையான பிளவுபட்ட தன்னிலையால் உருவாகிறது. முழுமையானச் சுயமாக இல்லாமல் பிளவுபட்ட சுயமாக. கிப்ளிங்கின் படைப்பூக்க மனம் இந்தப் பிளவுபடுவதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறது என்பதாலே Kim இந்திய நிலத்தில் அநாதையாக அலைவதும் (ஈரானைவிட்டுத் தப்பிச் சென்றாலும் சத்ரபி இதே போன்று ஆஸ்திரியாவில் சுற்றிக் கொண்டிருப்பாள்), தி ஜங்கிள் புக் போன்ற அதீதக் கற்பனைகளும் வரக் காரணமாக அமைகிறது. மர்ஜான் சத்ரபியின் எழுத்தை முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கு கிப்ளிங்கின் படைப்பூக்க சுயத்துடன் ஒப்பிட முடியும். ஈரானிய எழுத்தாளர் முகமது மோக்தரி போன்றவர்கள் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகான ஈரான் இரட்டை கலாச்சாரத்தால் உருவானது என்கிறார்கள். புரட்சி மக்களுக்கு-முக்கியமாகப் பெண்களுக்கு-இரட்டைத் தன்மையான வாழ்வைக் கொடுத்துள்ளது.

நாவல் முழுக்க முழுக்க சத்ரபியின் வழியாகவே Autobiography வடிவில்தான் சொல்லப்படுகிறது. மனவோட்டங்களும் அவளைச் சுற்றியிருப்பவைக்கான எதிர்வினைகளும்தான் சித்திரங்களாக விரிகின்றன. கல்லூரி ஆசிரியர்களிடம் ஹிஜாப் அணிவதற்கு எதிராக, “ஆண்களைப் பார்த்து நாங்கள் சபலப்பட மாட்டோமா?” என்றும் பேருந்து பிடிக்க ஓடியதற்காகக் கண்டிக்கும் காவலனிடம் ”நீங்கள் எனது பின்பக்கத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே?” என்றும் திருப்பிக் கேட்கிறாள். நாவல் முழுக்க கலாச்சார காவல்களிடமிருந்து அவள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறாள்.

நாவலின் ஆசிரியர் மர்ஜான் சத்ரபி, இயல்பில் அவர் ஓவியர் என்பதால் காமிக்ஸ் வடிவத்தில் நாவலுக்கான சித்திரங்களையும் (அவரது உருவத்தை மிக அழகாக, நிஜத்தில் இருக்கின்ற அதே ஒற்றுமையுடன்-மூக்கின் மேல் இருக்கும் மச்சம் கூட) வரைந்திருக்கிறார். அதேசமயம் வழக்கமாக கிராஃபிக் நாவலின் தனித்துவமான வண்ணப்படங்களோ சாகஸ சித்திரங்களோ கிளர்ச்சியூட்டும் கட்டிட அமைப்புகளோ எதுவும் பெர்சேபோலிஸில் கிடையாது. பெர்சேபோலிஸின் சித்திரங்கள் கருப்பு-வெள்ளையில் இருக்கும். எந்தவித அதிக ரசனைத் தன்மையும் இல்லாமல் தட்டையாக, பரவலாக கிராஃபிக் நாவல்கள் அளிக்கும் வாசிப்பு இன்பத்தை வாசிப்பவர்களுக்குத் தராது. கிராஃபிக்கின் வண்ண உலகை ரசித்தவர்களுக்கு பெர்சேபோலிஸ் ஏமாற்றத்தையே தரும். இத்தனையும் தாண்டி பெர்சேபோலிஸ் வாசிக்கப்பட வேண்டுமென்றால் அதன் கதையும் அது பேசியிருக்கும் அரசியலும் அரசதிகாரமும் கலாச்சார மாற்றமும் மிகவும் முக்கியமானது. அன்றைய ஈரானின் பெண் அடக்குமுறைக்குக் காரணமான அடிப்படைவாதத்தைப் (இன்றைக்கும் கூட) பேசியுள்ளது.

ஆசிரியரே சித்திரங்களை வரைகிற போது கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், கற்பனைகள், வெளிப்படுகிற விதம் என அனைத்தும் துல்லியமாக வெளிப்படுகின்றன. மர்ஜான் சத்ரபியின் கலாச்சார அழுத்தம் ஏற்படுத்திய பிளவுபட்ட சுயத்தின் பாதிப்பு மொழியால் வெளிப்படுத்த முடிகின்ற இடங்களுக்கு சவாலான சித்திரப் பிரதிபலிப்பு தீட்டப்படுகிறது. உதாரணமாக, 1979 இஸ்லாமியப் புரட்சி ஏற்படுகின்ற இடங்கள் கரிய பரப்பில் எண்ணற்ற பேய்கள் பறப்பது போன்றும், ஹிஜாப் அணிந்தபின் இராட்சஸ உருவமாகவும் உலகம் இருண்டு போவது போலும், கடவுளும் மார்க்ஸும் அருகருகே நிற்கின்ற படங்கள், கலாச்சார அடக்குமுறைக்கு எதிராக ஸ்பைடர் மேன் போல் கட்டிடங்களில் தாவி ஓடுவது என பௌதிக உலகின் குரூரம் சத்ரபியின் கற்பனைக்குள் சிதறலான குணங்களை, கிப்ளிங்கின் மோக்லி மாதிரியான தப்பித்து ஓடும் வழிகளையும் கொண்டிருக்கிறது.

உதவிய நூல்கள்

  1. ராமாநுஜம் கட்டுரைகள் (எதிர் வெளியீடு)
  2. ஆஷிஸ் நந்தியின் The Uncolonized Mind கட்டுரை

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்; [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular