ப்ரிம்யா கிராஸ்வின்
ஒரு பொதி பஞ்சு மிட்டாயைக்கொட்டி வைத்தது போல, இளஞ்சிவப்பு நிறத்தில் போகன்வில்லாக்கள் அந்த வீட்டின் மேற்கு பக்கத்திலிருக்கும் மதில் மீது சரிந்து கிடந்தன. அந்த திசையில் பார்க்கக் கூடாதென்று நான் நினைக்கும் போதே என் கண்கள் அத்திசையை நோக்கி திரும்பி விட்டிருந்தன. தந்த நிறத்தில் வர்ணமடிக்கப்பட்டிருந்த அவ்வீடு, போகன்வில்லா மலர்களின் பிரகாசமான வண்ணத்தை மேலும் எடுப்பாகக் காண்பித்தது. மலர்களின் புதரிலிருந்து யாரோ என்னை உற்றுப்பார்ப்பதாய் உணர்கிறேன். கண்களைச் சுண்டி இழுத்த பூக்களிடமிருந்து தலையை வலுவில் திருப்பிக்கொண்டு அழைப்பு மணி இருக்கும் திசையை நோக்கி நகரலானேன்.
வீட்டின் மேற்குதிசையிலுள்ள மேல்தளத்தில் தான் டாரத்தியின் அறை இருக்கிறது. கீழ்தளத்தில் கிட்டத்தட்ட எல்லா அறைகளின் ஜன்னலிலும் போகன்வில்லாக்கள் படர்ந்து நிறைந்திருந்தன. கீழ் தளத்தை விட்டு வெளியில் தனியே துருத்திக் கொண்டிருந்த அவ்வறையின் மாடத்தையும் விட்டுவைக்காமல் போகன்வில்லாக்கள் பற்றிப் படர்ந்திருந்தன. டாரத்தி அவ்வறையில் தான் தற்கொலை செய்துகொண்டாள் என்று அனூப் என்னிடம் தெரிவித்திருந்தான். குப்பியிலிருந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்கி, குப்பி பாதி காலியாகும் முன்பே பிரக்ஞை இழந்திருக்கிறாள். முழுதாக தன் நினைவை இழக்கும் முன்பாக அருகிலிருந்த அவளது அறையின் தொலைபேசியில் எனது அலைபேசி எண்ணைச் சுழற்றியிருக்கிறாள்… அதன்பின், டாரத்தி என்று ஒருத்தி இவ்வுலகில் இருந்திருக்கிறாள் என்பதை நான் அறியும் முன்பாகவே டாரத்தி இறந்திருக்கிறாள்.
அது நிசியாக இருந்திருக்காவிட்டால், அன்று சனிக்கிழமையாக இல்லாமல் இருந்திருந்தால், நான் மது அருந்தியிருக்காவிட்டால், என் அலைபேசி எனது உறக்கத்தை தொந்தரவு செய்யாது இருக்கும்படி அதனை நான் மௌனப்படுத்தி வைக்காமல் இருந்திருந்தால், வெகு நாள்களுக்குப் பிறகு நான் ஆழ்ந்து உறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நான் டாரத்தியின் அழைப்பை ஏற்றுப் பேசியிருந்திருப்பேன். ஆனால், இதில் ஒன்று கூட நடக்கவில்லை. அவள் இறந்து போனாள். அவள் தனது இறப்பு நாடகத்தின் இடையில், தனது மேடையிலிருந்து வெளியே வந்து என் அலைபேசி ஒலித்தடங்கிய முப்பது நொடிகளுக்கு என் அறையில் உலவியிருக்கிறாள். ஒருவேளை நான் அவளது அழைப்பை ஏற்றுப் பேசியிருந்தால், இன்று அவள் இருந்திருப்பாளோ!
ஓ. . . டாரத்தி!
அவள் இறந்த மறுதினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. காவல் துறை அதிகாரி என் அறைக் கதவைத் தட்டும் போது நான் அறையில் தான் இருந்தேன். அது பின் மதியம்… ஆனால் நான் அப்போது நல்ல உறக்கத்தில் இருந்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன். யாரோ என்னைத் துரத்துவது போலவும், எதையோ பிடிக்க முனைவது போலவும் தறிகெட்டு ஓடிக் கொண்டே இருப்பேன். சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சென்றாலும், பிறகு வந்து உறக்கத்தை தொடரும்போது, விட்ட இடத்திலிருந்து ஓட ஆரம்பிப்பேன். அந்த ஞாயிறு என் அறைக்கதவு தட்டப்பட்ட போது நான் கனவில் ஓடிக் கொண்டிருந்தேன். உறக்கத்திலிருந்து எழுந்த பிறகு, என்னால் சமநிலையில் நிற்க முடியாதபடி மது என்னை நிலையிழக்கச் செய்திருந்தது. அவர் என்னிடம் டாரத்தியைப் பற்றிக் கேட்டார். . . அவளின் புகைப் படத்தைக் காண்பித்தார். அத்தனை அழகான ஒரு பெண்ணை நான் பார்த்ததாய் என் நினைவில் மட்டுமல்ல, கனவில் கூட எனக்கு ஞாபகம் இல்லை என்றேன். அவள் இப்போது உயிருடன் இல்லை என்று அவர் சொன்னபோது என் இருதயம் கவலையால் பீடிக்கப்பட்டது. அவளது கடைசி அழைப்பு தவறிய அழைப்பாக இருந்ததையும், அது என் எண்ணாக இருந்ததையும் பற்றிச் சொன்னார். வாழ்வின் கடைசி தருணத்தில் ஒரு பேரழகான பெண்ணுக்கு ஒரு எழுத்தாளனிடம் பகிர்வதற்கான ரகசியம் என்ன இருந்திருக்க முடியும் என்று நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அதன் பிறகு, பல நாள்கள் டாரத்தியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு நான் காவல் நிலையத்துக்கு அழைக்கப் பெற்றேன். எனது அலைபேசி ஆதாரத்துக்கு உட்பட்டதாக கருதி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லையென நிரூபிக்கப்பட்டு நான் விசாரணைகளில் இருந்து விடுபட்டேன். அலைபேசி என் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அலைபேசி என்னிடம் திரும்பி வந்தபோது அதிலிருந்த அழைப்பு விபரங்கள், படங்கள், அதன் குறிப்பேட்டில் பல வருடங்களாய் நான் சேமித்து வைத்திருந்த எனது சிறுகதைகள், கதைக் கருக்கள் என்று ஒரு புள்ளி மச்சம் கூட மீதமில்லாமல் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், நான் எல்லாவற்றுக்கும் என் கைபேசியை முற்றிலும் சார்ந்து இருந்தமைக்காக என்னை மிகவும் நொந்து கொண்டேன்.
என் குறிப்பேட்டில் சேமித்து வைத்திருந்த ஐந்தாறு கதைகள் இன்னும் பிரசுரமாகாதவை. அவற்றில் இரண்டு, பிரபல மாத இதழ்களுக்கு நான் தருவதாக ஒப்புக்கொண்டவை. பல நாள்கள் அல்லும் பகலும் என் மூளையைத் துன்புறுத்தி, ஒரு தேனியைப் போல நான் சேகரித்து வைத்திருந்த என் உழைப்பனைத்தும் முற்றாக வீணாகியிருந்ததை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. அந்தக் கதைகளில் பலவற்றின் கைப்பிரதி என்னிடம் இல்லை. அவற்றை நான் தான் எழுதினேன் என்றாலும், எவ்வளவு முயன்றாலும் என்னால் அவற்றை முன்பு போல மீளுருவாக்கம் செய்து விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத ஒருத்தியால் நான் இத்தனை நிஷ்டூரப் பட்டிருக்கவேண்டாம். அப்போதுதான், எனக்கு இதுவரை பார்த்தறியாத அந்த பெண்ணின் பேரில் கொலை செய்யுமளவு ஆத்திரம் வந்தது. ஆனால் நானும்தான் என்ன செய்வது? அவள் தான் ஏற்கனவே இறந்து விட்டாளே!
அத்துடன் நான் அந்த அழகி டாரத்தியை மறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், என் எழுத்தாள மூளை டாரத்தியின் மரணத்தை எண் திசைகளிலிருந்தும் அணுகிக் கொண்டே இருந்தது. நல்ல மது உறக்கத்தில், ஓடிக் கொண்டே இருக்கும் கனவுகளில் கூட எனக்கு டாரத்தியின் நினைவு வந்தது. டாரத்தி என்னை எதற்காக அழைத்தாள் என்பது தெரியாமல் என்னால் வேறு கதைகளுக்கு எனது பேனாவைத் திறக்க முடியாது என்று தெரிந்ததும், நான் டாரத்தியின் விபரங்களை பெறுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தேன். நான் யுகங்களாக எழுத்தாளனாக இருப்பதன் அனுகூலமாக, காவல்துறையிலும் எனக்கு சொற்ப நண்பர்கள் உண்டு.
அனூப்!
இந்த விசாரணைகளிலிருந்து நான் இலகுவில் விடுபடுவதற்கு அனூப் ஒரு காரணமாக இருந்தான். அனூப் எனது வாசகனாக இருந்தது எனது பெரும் பாக்கியம். அவனே எனக்கு டாரத்தியைப் பற்றிய விவரங்களையும் தந்தான்.
“நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும் ஆரா சார்!”
“டாரத்தியோட வீடு எங்க இருக்கு அனூப்?
“பெரைரா காட்டேஜ்!”
“அது எங்க இருக்கு?”
“செயின்ட் தாமஸ் மௌண்ட் கிட்டக்க. . . !”
“ஓ!”
“அந்த வீட்டில் இது போல துர்மரணம் நடக்கறது இது முதல் தடவை இல்ல ரைட்டர் சார். !”
“சில வருடங்களுக்கு முன்னால, டாரத்தியோட மூத்த அக்கா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த போது தனது இருபத்து ஒன்றாவது வயதில் சர்ப்பம் தீண்டி உயிரை விட்டாள். அதற்கடுத்த மரணம் இளைய அக்கா டெபோராவினுடையது. அவள் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாள். அப்போது அவளுக்கும் வயது இருபத்து ஒன்று . இந்தத் தொடர் மரணங்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த முதல் மரணம் வில்மா பெரைராவினுடையது. அது நிகழ்ந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. வில்மா, இறந்து போன இந்த சகோதரிகளின் தந்தை ஜேக்கப் பெரைராவின் தங்கை ஆவார். தனது படிக்கும் அறையில் மெழுகுவர்த்தி சரிந்ததால் ஆடையில் நெருப்பு பற்றி உடல் முழுவதும் எரிந்து இறந்தாள் என்று காவல் துறையிடம் இருக்கும் இறப்பு அறிக்கையில் இருக்கு. !”
“நீ சொல்றதக் கேட்டா இது ஏதோ சாபக் கதை போலல்ல இருக்குது”
“கிட்டத்தட்ட சாபம் தான் ரைட்டர் சார். திருமணம் ஆகாத வில்மா பெரைரா இறக்கும்போது கர்ப்பவதியாக இருந்தார் எனவும், அவமானத்திற்கு அஞ்சி அவரது சகோதரர் ஜேக்கப் பெரைரா, வில்மாவை நெருப்பிட்டுக் கொன்றதாகவும் கதைகள் உண்டு. இதுல ஒரு இணைப்புப் புள்ளி என்னனா, வில்மா இறக்கும் போது அவருக்கு வயது இருபத்து ஒன்று”
“அப்போ டாரத்தி. . . “
“மற்ற மரணங்கள் தற்செயல்னு வெச்சுகிட்டாலும், டாரத்தியின் மரணம் அப்படியில்லை என்பதே இங்க சிக்கல். ஆனாலும், அவளுக்கு இருந்த புற்றுநோயின் காரணமாக, அவள் தனது உடல் உபாதைகளிலிருந்து விடுபட தற்கொலைக்கு முடிவு செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பின் இந்த வழக்கு மூடப்பட்டது. இதில நீங்க எப்படி உள்ளே வந்தீங்க என்பது தான் எங்களுக்கு புதிரா இருந்தது. காவல்துறை பல கோணங்களில் இந்த வழக்கை விசாரிச்சு பார்த்தது, முதல்ல உங்களுக்கும் டாரத்திக்கும் சம்மந்தமே இல்லை என்கிறது ஊர்ஜிதம் ஆனதும், வேறு சாத்தியங்களை ஆராய்ந்தோம். டாரத்தியின் உடன் படித்தவர்கள், உறவினர் என்று அனைவரின் அலைபேசி எண்ணையும், உங்க எண்ணையும் ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தோம். உங்க அலைபேசி எண்ணிலிருந்து ஓரிரு இலக்கங்கள் மாறி இருக்கிற சாத்தியங்கள் இருக்கிற எண்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதில்லையா? தூக்க மாத்திரையின் வீரியத்தில் டாரத்தி கடைசி ஒன்றிரண்டு இலக்கத்தை மாற்றி சுழற்றி இருக்க வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் விசாரணை நடந்தது”
“நீங்க எதிர்பார்த்தபடி விசாரணையில் துப்பு ஏதாவது கிடைச்சதா?”
“இல்லை, ரைட்டரே! டாரத்தி சர்வநிச்சயமாய் உங்களுக்குத் தான் கால் செஞ்சுருக்கா!”
நான் தலையைப் பிடித்துக் கொண்டேன்.
“நீ சொல்வது போல இது ஒரு சாபத்தோட நீட்சியா இருந்தா, டாரத்தி தான் இதுக்கு கடைசி பலி இல்லையா?”
“இல்ல ரைட்டரே!”
“என்ன!”
“அவளோட தங்கை ஜெசிக்கா இன்னும் உயிரோட தான் இருக்கா”
“பெரைரா காட்டேஜ்லயா!”
“ஆமா. . . ரைட்டரே!”
“அனூப். . . எனக்கு அந்த விலாசம் வேணுமே!”
“என் வேலை போயிரும் ஆரா சார்!”
“நான் சோறு போடுறேன். . . “
“சரிதான். . . வில்லங்கம் வராம பாத்துக்குங்க ரைட்டர் சார்!”
ஜெசிக்கா டாரத்தியை விடவும் அழகாக இருந்தாள். படத்தில் பார்த்த டாரத்தியின் சருமத்தில் நோய்மையின் வெளுப்புடன் கூடிய ஒரு சாம்பல் நிறம் இருந்தது. எனக்காக கதவைத் திறந்த போது வாசலில் இருந்த போகன்வில்லாமலர்களின் இளஞ்சிவப்பு நிறம் பட்டு எதிரொளித்த இந்த ஜெசிக்காவின் ஜீவனுள்ள தங்க நிறம் அவளைத்தான் எத்தனைப் பதுமையாக காட்டுகிறது.
“வணக்கம். . . நான் ஆராவமுதன்”
“வாங்க ஆரா சார்!”
“ஆஹா. . . உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கே!’
“நான் டாரத்தியின் கண்களின் வழி உங்களத் தெரிஞ்சுகிட்டேன், ஆரா சார்!
“மொதல்ல டாரத்திக்காக என் வருத்தத்தை தெரிவிச்சுக்கறேன், ஜெசிக்கா!”
எங்களின் ஆரம்பகட்ட சம்பிரதாயப் பேச்சுக்களின் பின் ஜெசிக்கா தானாகவே டாரத்தியைப் பற்றின உண்மைகளை என்னிடம் பகிர ஆரம்பித்தாள்.
“டாரத்தி ஒரு புற்றுநோயாளியா தன்னோட இறுதி நாள்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது, அவளோட வியாதியின் தீவிரம் அவளை நிலைகுலையச் செய்திருந்தது ஆரா சார். இருந்தும், அவ வாழ ஆசைப்பட்டா. . . எதோடையாவது தன் உயிரைப் பிணைச்சுக்க விரும்பினா. அப்பத்தான், நீங்க உங்க ‘மாயமான்’ தொடர்கதைய விட்டில் பத்திரிக்கைல எழுத ஆரம்பிச்சீங்க. டாரத்தி வாரம் ஒருமுறை வரும் விட்டிலுக்காக தவம் கிடந்தா! சொல்லப் போனா, அதை வாசிக்கறதுக்காகவே, டாரத்தி உயிரோட இருந்தா!”
“சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. டாக்டருங்க அவளுக்கு கொடுத்த கெடுவைத் தாண்டியும் அவ பிழைத்துக் கிடந்தா, உங்க கதைய படிக்கிறதுக்காகவே!”
“அப்பத்தான் விட்டில் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் தொடர் முடிவுக்கு வருமென்று. . . “
“டாரத்தி மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிட்டா. . . தன் முடிவு நெருங்கிட்டதா அவ உணர ஆரம்பிச்சா. தொடர்கதையின் கடைசி அத்தியாயத்தை படிக்கும்போது தான் இறந்து விடுவோம் என்று தீவிரமா நம்பினா. அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கு இருபத்து ஒன்றாவது பிறந்தநாள் வரவிருந்ததும் அதற்கொரு காரணம். பெரைராவின் பெண் வாரிசுகள் யாரும் இருபத்து ஒன்றைத்தாண்டி பிழைத்ததில்லையே. ஒவ்வொரு நாளும் அவ தன் மரணத்தை நோக்கி விரிந்த கரங்களோட போய் கிட்டே இருந்தா!”
ஜெசிக்கா கண்களை மூடிக் கொண்டாள். . . ஜெசிக்காவின் பக்கவாட்டிலிருக்கும் ஆளுயர நிலைக் கண்ணாடியில் அவளது பிரதிமை தெரிகிறது. எத்தனை வியாகுல அழகு!
பிரியத்துக்குரிய ஒருவரின் மரணத்தை மீண்டும் நினைவு கூறச் சொல்லி ஒருவரை இம்சிப்பது தான் எவ்வளவு அடாத செயல்! ஜெசிக்கா இந்த இடத்தில் அழுதிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நான் ஏன் நினைக்கிறேன். ஆண் எவ்வளவு எளிதில் பெண்ணைத் தேற்றத் தயாராக இருக்கிறான். பெண்தான் அவ்வளவு சீக்கிரம் தன்னை ஆணிடம் ஒப்புக் கொடுப்பதில்லை. . திடுமென என் அலைபேசியில் அழிந்து போன கதைகளை நினைத்துக் கொண்டேன். என் இதழ்க்கடையில் ஒரு அவஸ்தையான முறுவல் தோன்றி மறைந்தது.
“தொடர்கதையின் கடைசி அத்தியாயம் வெளியான முதல் நாளை என்னால் மறக்கவே முடியாது ரைட்டர் சார். அன்று டாரத்தி தன்னை முடிந்தளவு நல்லா அலங்கரித்துக் கொண்டிருந்தாள். என்னை அவளது அறைக்கு அழைச்சிட்டுப் போனா. அவளது கைகளில் விட்டில் இருந்தது. “
“அவ இறந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன் ஆரா சார்! என் கைகளைப் பற்றின டாரத்தியின் கைகள் ஏற்கனவே சில்லிட்டிருந்தன.”
“ஜெசிக்கா. . . எனக்காக நீ இந்த ‘ மாயமான்’ கதையின் இந்த இறுதி அத்தியாயத்தைப் படிச்சு சொல்றயா?”
” இல்ல டாரத்தி! நான் படிக்க மாட்டேன். தொடர் முடிவடைந்தா, நீ செத்து போயிருவ!”
“தயவு செஞ்சு எனக்காக படி ஜெசிக்கா!”
ஜெசிக்கா வலியுடன் கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள். அன்றைய நாளை மனதில் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறாள்.
“நான் படித்தேன், ஆரா சார். படித்துக் கொண்டிருக்கும்போதே, என் டாரத்தியின் கண்கள் செருக ஆரம்பிச்சது. அந்த முட்டாள் தூக்க மாத்திரைகளை விழுங்கியிருந்திருக்கிறாள் என்பது எனக்கு அப்போது தெரியாது. என் அன்புக்குரிய தமக்கை என் கண் எதிரில் சாவதை என்னால் வெறுமனே பார்த்துக்கிட்டிருக்க முடியல. உங்க அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடரை இன்னும் சில மாதங்கள் நீடிக்க செய்யலாம்னு ஒரு நப்பாசை தோணுச்சு. அதை அவ கிட்ட சொன்னேன் . அப்போ, அவள் கண்களில் ரொம்ப சின்னதா ஒரு ஒளி வந்தது. அது இருளுக்கு முன்பானது!”
“அதுக்கு பிறகு தான் நீ என் ஃபோன்க்கு கூப்ட்டியா, ஜெசிக்கா?”
“ஆமாம் ஆரா சார்! துரதிஷ்டவசமா நீங்க அன்னிக்கி ஃபோன எடுக்கல. அதுக்கப்புறம், என் டாரத்தி இறந்துட்டா”
“என்னை மன்னிச்சிடு ஜெசிக்கா!”
“இதில் உங்க தப்பு எதுவும் இல்ல ரைட்டர் சார்!”
“இவையெல்லாவற்றையும் நீ காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னாயா?”
“இல்ல. அவ இறந்ததப்பறம் தான் நான் அவ படுக்கைல தூக்க மாத்திரைகளைப் பார்த்தேன். அவ மாத்திரை விழுங்கியிருக்கான்னு தெரியாம சாபத்தால இறக்குறான்னு நெனச்சு நானும், அவளது தற்கொலைக்கு மௌன சாட்சியாக நின்னேன் என்பதைப் பகிர்ந்தால் தண்டனை எனக்கும் கிடைக்கலாம் என்பதால் இதை வேறு யாரிடமும் சொல்லாம மறச்சுட்டேன். அவளும் நானுமா படித்த உங்க கதைகள் இருந்த புத்தகங்களை எல்லாம் கூட நெருப்பிலிட்டு எரிச்சுட்டேன். ஆனா, உங்க அலைபேசி எண்ணை மட்டும் என்னால எதுவும் செய்ய முடியல”
“என் ஆழ்ந்த வருத்தங்கள் ஜெசிக்கா! எப்படியோ டாரத்தியும் உன் அத்தையின் சாபத்துக்கு பலியாகிட்டால்ல. இந்த சாபக்கதைய நீயும் நம்புறியா?”
“என் அப்பாவோட டைரிய படிக்கறவரை நானும் நம்பல, ஆரா சார். என் அத்தை வில்மா பெரைராவுக்கு மலர்கள் என்றால் உயிர். அதுவும் போகன்வில்லா மலர்களின் மீது அவளுக்கு கொள்ளை பிரியம். வீட்டைச் சுற்றிலும் அவற்றை நட்டு வைத்து பராமரித்து வந்தார். எங்கள் மொத்த வீட்டைச் சுற்றிலும் இளஞ்சிவப்பு நிற மேகங்கள் படர்ந்தது போல போகன்வில்லா மலர்கள் கவிந்து பொலிந்தன. எங்கள் அத்தை வில்மா அம்மரங்களை மிகவும் நேசித்தாள். அவள் தனது காதோரத்தில் ஒரு கற்றை போகன்வில்லா மலர்களைச் செருகியபடி நாளெல்லாம் தோட்டத்தை வளைய வருவாளாம். அவள் போகன்வில்லாக்களுடன் தனியே பேசுவதை பலமுறை பாரத்ததாக என் அப்பா தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார். அச்சமயம் எங்கள் தோட்டத்தை பராமரித்து வந்த வேலையாள் கருப்பனுடன் எங்கள் அத்தை காதல் கொண்டுவிட்டார். இதையறிந்த என் தந்தை ஜேக்கப் பெரைரா என் அத்தையை கண்டித்திருக்கிறார். அதற்குள்,
அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக என் அத்தை வில்மா கருக்கொண்டு விட்டிருந்தாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அவள் தனது காதலில் உறுதியாக இருக்கவே, கருப்பனை அடித்து குற்றுயிராய் விரட்டிய என் அப்பா, ஆத்திரம் தாளாமல் அத்தையை நெருப்பிட்டு கொளுத்தியிருக்கிறார். “
“சாகும் தருவாயில் அவள் எங்களுக்கு தந்து சென்ற இளஞ்சிவப்பு நிற சாபத்தை எங்கள் அக்காள்கள் இறந்த பிறகே நாங்க தெரிஞ்சுகிட்டோம். காலம் சென்ற எங்கள் அப்பாவின் படிக்கும் அறையை சுத்தப் படுத்தும்போது அவரது குறிப்பேட்டை கண்டுபிடித்து, டாரத்தி தான் என் அத்தையின் சாபத்தினைப் பற்றி எங்கள் இருவரில் முதலில் அறிந்துகொண்டாள். “
“நெருப்பில் கருகிக் கிடந்த அத்தை வெற்றுடலுடன் வாழை இலை மீது படுக்க வைக்கப் பட்டிருந்தாராம். அறை ஜன்னலில் எப்போதும் நிறைந்திருக்கும் அவளது பிரியத்துக்குரிய போகன்வில்லா மலர்கள் இந்த காட்சியைக் கண்டு இறுகி நின்றிருந்தனவாம். அப்போது எமது அத்தை தமது இறுதி வார்த்தைகளை என் தகப்பன் காதில் சொன்னாராம். “
“உனது பெண்கள் தமது பிராயம் வரைக்கும் இந்த போகன்வில்லாவின் மலர்களைப் போல மலர்ந்து பொலிவர். பின்பு ஒருநாள் அவர்களின் மீது இம்மலர்களின் இளஞ்சிவப்பு வண்ண நிழல் விழும். அப்போது, மரணம் அவர்களை கைக்கொள்ளும்”
“கர்ப்பவதியாக பெரைரா காட்டேஜுக்கு வந்த என் அக்கா வியானி சர்ப்பம் தீண்டி மரித்துப் போனாள். அவளது நீலம் பாரித்த உடல் தோட்டத்தில் கவிந்திருக்கும் போகன் வில்லாக்களின் இளஞ்சிவப்பு நிற மலர்களின் அடியில் கிடந்தது. எங்கள் அப்பா, வியானி இறந்ததை தற்செயல் என்றுதான் முதலில் நினைத்திருக்கிறார்.
பின்பு, இளைய அக்கா டெபோராவும் தனது இருபத்து ஒன்றில் இறந்தபோதுதான், சாபத்தின் வீரியத்தை உணர்ந்துள்ளார். டெபோரா மாடிப் படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்த போது சாட்சியாய் நின்று கொண்டிருந்தவையும் இந்த போகன்வில்லா மலர்கள் தான். “
“பிள்ளைப் பிறப்பின் பிறகு, அதீத இரத்தப் போக்கில் இறந்திருந்த எங்கள் தாயாருக்குப் பின் எங்களை வளர்த்த எங்கள் இரண்டு அக்காள்களும் மரித்துபோகவே, நாங்கள் திக்கு தெரியாதவர்கள் ஆனோம். அதிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த டாரத்தி மனம் தொய்ந்து போனவளாய் இருந்தபடியால் தானும் இருபத்து ஒன்றாவது வயதில் மடிவேன் என்று சர்வநிச்சயமாய் நம்பத் தொடங்கினாள். “
“நாங்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் இருந்த போகன்வில்லாக்களை அடியோடு களைந்தோம், என்றாலும் அவை தூரிலிருந்து கிளைத்து வந்தன. எத்தனைத் தீவிரமாக அவற்றை அழிக்க பார்த்தோமோ, அத்தனைத் தீவிரமாய் போகன்வில்லாக்கள் யார் மூலமாவது எங்கள் பெரைரா காட்டேஜுக்கு வந்தன. ஒரு கட்டத்தில், அவற்றை அகற்ற முடியாமல் நாங்கள் சலித்து சோர்ந்து போனோம். . போகன்வில்லாக்கள் எங்களைச் சுற்றிலும் தண்ணீர் விடாமலும் செழித்து வளர்ந்தன. “
“இதோ, டாரத்தியின் படுக்கையறை மாடத்தைப் பாருங்கள்.. வில்மாவின் இளஞ்சிவப்பு சாபத்தை அவளுக்கு வழங்கவென்று போகன்வில்லா மலர்கள் எவ்வளவு வேகமாய் சுவரைப் பற்றி வளர்ந்து மேல்தளத்தை அடைந்திருக்கின்றன. “
அவள் காண்பித்த திசையில் பார்த்தேன். டாரத்தியின் அறையின் மாடத்தின் தந்த வண்ணத் தூண்களை பற்றிப் படர்ந்திருந்த போகன்வில்லாவின் முள் நிறைந்த கிளைகளில் கொத்துக் கொத்தாய் செழித்து மலர்ந்திருந்த பிரகாசமான மலர்கள் வேகமாய் காற்றில் அசைந்தன.
இத்தனை பெரிய வீட்டில் தன்னந்தனியாய் நிற்கிற அந்த சிறிய பெண்ணின் மீது எனக்கு இரக்கம் பிறந்தது. நான் அவளது கைகளைப் பற்றினேன்.
“உனக்கு இம்மலர்களைக் கண்டு பயமில்லையா ஜெசிக்கா?”
“நான் எனது இருபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தைத் தாண்டி விட்டேன் ஆரா சார்!”
“என்ன சொல்ற ஜெசிக்கா. . . “
“டாரத்தியும் நானும் ரெட்டைகள்!”
“அப்படியென்றால். . . “
“நான் பிறவியிலே நிறக்குருடு, ஆரா சார்!போகன்வில்லாக்களின் நிறம் இன்னதென்றே எனக்குத் தெரியாது!”
***
ப்ரிம்யா கிராஸ்வின் – ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ப்ரிம்யா கிராஸ்வின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியன் பட்டணம் என்கிற கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர். தப்பரும்பு எனும் கவிதைத் தொகுப்பும், கெத்சமனி எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். எஸ்.ஏ.ஆர் நினைவு இலக்கிய விருது மற்றும் சௌமா இலக்கிய விருது வென்றவர். தொடர்ந்து அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதி இயங்கி வருகிறார். மின்னஞ்சல் – primyacrosswin@gmail.com



துப்பறியும் நாவல் படித்த உணர்வு.
எத்தனை வகைகளில் எழுதினாலும் சுவாரஸ்யம் குறையாத உங்களின் நடைக்கு பாராட்டுகள்.