Thursday, January 23, 2025
Homeஇதழ்கள்2023 இதழ்கள்நெஞ்சொடு புலத்தல்

நெஞ்சொடு புலத்தல்

மயிலன் ஜி சின்னப்பன்

ஓவியம்: சீராளன் ஜெயந்தன்

நாம இதப் பத்தி பேசணும்” – ஒவ்வொரு முறையும் இந்த நான்கு வார்த்தைகள் இட்டுச்செல்லும் திசையில் சிக்கலாக்கப்படப்போகும் ஏதோவொரு புதிருக்கு ஆயத்தமாகவேண்டும். “எப்படி ஒங்களால ரெண்டு பேர கேரி பண்ண முடியுது.. இதுல எதாச்சும் ஒன்னு பொய்யாதான இருக்கமுடியும்..” என்பதிலோ, “இவ்வளோ டிஸர்விங் பர்ஸனா நா.. சீரியஸ்லி எனக்கே தெரியல.. அதுவும் இந்த வாரம்.. எதோ ரொம்ப ஐ ஃபீல் லைக்.. என்ன யாராலயும் இந்த அளவுக்கு லவ் பண்ணமுடியுமாங்குற மாரி.. (சற்று நிறுத்தி..) பட் அவங்ககூட இந்த வாரத்துல ஹாவ் யு பீன் இண்ட்டிமேட்.. ஹோப் யு கெட் இட்.. செக்ஸ் ஐ மீன்..” என்பதிலோ, “லவ் மேரேஜ் பண்ணியும் மென் வுட் சீக் சம்திங் அவுட்சைட் ல்ல.. எனக்கு இந்த மேரேஜ் சிஸ்டம் மேல இருக்க பிலீஃபே போயிடும் போல..” என்பதிலோ ஆண்களின் பொது மனவோட்டத்தைக் குழப்பத்துடன் பார்ப்பாளேயொழிய என்னைக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டும் சுவடே இருக்காது.

என்னுடைய இயல்பிற்கு சிறு காயங்கள்கூட உகந்தவையல்ல; அசலைப் பெருக்கியுணர்ந்து வேறெங்கோ கொண்டுபோய் நிறுத்தி எந்தவொரு தருணத்தையும் பாழ்செய்யக்கூடியவன். கூடுமானவரை மிக லேசான மனிதனாக முன்னிறுத்துவதே மென்மையாகக் கோபப்பட வராதவன் என்பதால்தான் – முரண்போக்கு தலையெடுத்துவிட்டால் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு தணியவே முடியாத முசுட்டுகுணம்; காயப்படுத்தியவரை அக்கணத்தில் எழவே முடியாத அளவுக்கு வீழ்த்தவேண்டும். பட்டுக் கருகியிருக்கும் புதர்ச்செடியை தீக்குச்சியால் அவள் நிமிண்டிப்பார்க்கும் ஒவ்வொரு முறையும் இயன்றவரை எச்சிலை விழுங்கிக்கொண்டு, அவளால் தாங்கவே முடியாத தணலை மிகுந்த உளைச்சலுடன் மறைத்து வைக்கவே முயன்றிருக்கிறேன். மீறி வெடித்து சின்னாபின்னமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கை இந்த திசையில் ஏன் திரும்பியதென யோசிக்காமலிருந்ததில்லை.             

வெளுத்த எண்ணெய் பிசுக்கான சருமத்தையும் செம்பருக்கள் அடர்ந்த ஒடுங்கிய கன்னத்தையும் ஆபரணமற்ற ஒப்பனையையும் இறுக்கி இழுத்துப்போடப்பட்ட குதிரைவாலால் ஏறிய நெற்றியையும் தாண்டி ஈர்க்கப் போதுமான ஏதோவொன்று அந்த முகத்தில் மிச்சமிருந்திருக்கிறது. துறைரீதியில் மட்டுமல்லாது பொது விஷயங்களிலும் கெட்டிக்காரியாகத் தெரிந்ததும் ஒரு காரணம். முகக்கவர்ச்சி குறித்த தற்செருக்கும் நிறையவே உண்டென பேச ஆரம்பித்த நாட்களில் தெரிந்தது. ஆண்களை பலவீனமானவர்களென வரையறுக்கும் எண்ணங்களுக்கு இடமளிக்கக்கூடாதென்ற விழிப்போ என்னவோ.. அவளுடைய சாதாரண உரையாடல்களைக்கூட நீளவிடாமல் வெட்டிக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும், பயிற்சிக்காக வருபவர்களின் தயக்கத்தைக் களைந்து சகஜமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவனென்ற முகவரி கொண்டவன். இப்படி சமநிலை சலனப்படுவதைப் பொறுக்கமாட்டாமல் அவளை ஒரு சராசரி என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவும் அதை அப்படியே நம்பவும் அதிகம் விரும்பினேன். வரையறுத்துச் சொன்னால், பலவீனப்பட்டுவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

“ஸ்டில் என்னால நம்பமுடியாத விஷயம் எதுன்னா.. நீங்க என் பெர்டேக்கு விஷ் பண்ணதுதான்.. நியூ யூனிட்னு யாருக்குமே சொல்லல.. ஈவன் புது சல்வார் கூட இல்ல.. எப்டி தெரிஞ்சுது ஒங்களுக்கு?”, நிறுத்தமாட்டாள். “அண்ட் மோரோவர், நீங்க இதையெல்லாம் மைண்ட் பண்ற பெர்ஸன்னு நெனைச்சதேயில்ல..” இம்மாதிரியான பின்னொட்டுகளில் ‘என்னை’ அடிக்கோடிட்டபடியே இருப்பாள். நெருக்கமான பின்னர் இப்படியான ஏதோவொரு கேள்வியில் மீளும் முந்தைய அலைவு எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அன்றிரவு ஓர் உணவுக்கூடுகை ஏற்பாடாகியிருந்தது – அணியின் இறுக்கம் தளரும் இடங்களில் முக்கியமானது. அணித்தலைவர் அவளுடைய இடது மணிக்கட்டில் பதியப்பட்டிருந்த R என்ற பச்சைக்குத்தலை விசாரித்தார். தன்னுடைய தந்தை பெயரென்று சொன்னவளிடம் அதுவரையிலிருந்த பொலிவு ஒரு மாற்று இருண்டதை நான் குறிப்பிட்டுக் கவனித்தவரை சரி. நிறுத்தாமல், அப்பெயரை அறிய அலுவலக அறையிலிருந்து அவளுடைய விண்ணப்ப படிவத்தை ஏன் தேடியெடுத்தேன் என்பதோ அதில் கண்ணில்பட்ட பிறந்ததினத்தை ஏன் நினைவில் நிறுத்தினேன் என்பதோ பணியிடத்தில் வாழ்த்துச் சொல்லாமல் ஏன் மாலை அலைபேசியில் சொன்னேன் என்பதோ அந்நாளின் புரிதலுக்கு மிக தொலைவிலிருந்தன.

இருபத்திநான்கு வயதிலிருந்தவளுக்கு தன்னைவிட பதினோரு வயது முதிர்ந்தவனிடம் உண்டானது எதிர்பாலினக் கவர்ச்சியென சொல்வதைவிட முட்டாள்தனம் ஏதுமிருக்க முடியாது. வயதுக்கு மீறிய பக்குவம் நிறைந்தவள் என்பதால்தான் என்னோடு அவளுக்கு அலைவரிசை பொருந்திப்போயிருக்க வேண்டும். அரும்புக்காலத்தில் நிகழக்கூடிய பட்டாம்பூச்சித் தருணங்கள்கூட என்னிடமிருந்து சாத்தியப்பட்டிருக்காது. என் இருபதுகளில்கூட அப்பருவத்திற்கான கொண்டாட்டங்களுடன் இருந்தவனில்லை. இவளுக்காகவும் பிரத்யேகப் பிரயத்தனங்கள் எதுவும் செய்யவில்லை; செய்யவரவில்லை என்று சொல்வதே சரி. இரண்டாண்டுகளுக்குப் பிறகும் இந்த உறுத்தல் வெவ்வேறு விஷயங்களில் வெளிப்படும். என்னுடைய இயல்பே அவளுக்குப் போதுமானதாக இருந்தாலும் ‘தனக்காக’ என்ற எளிய எதிர்பார்ப்பு பொய்ப்பதை அவ்வப்போது கொட்டித்தீர்த்துவிடுவாள்.  “ஒங்களோட ருட்டீன்ல நா அப்படியே வந்து அட்டாச் ஆயிருக்கேன்.. ஜஸ்ட் அவ்ளதான்.. எனக்குன்னு நீங்க எதுமே மாத்திக்கிட்டதில்ல.. நாட் ஈவன் ய பிட்.. எல்லாமே ஒங்க கம்ஃபட்ட பேஸ் பண்ணிதான்..”. வினாடிகளுக்கேனும் சுள்ளென்றிருக்கும்.

ஆனால் எனக்காக தன்னை நிறையவே மாற்றிக்கொண்டிருக்கிறாள் என்றுதான் நம்புகிறேன். முக்கியமாக தன்மதிப்பை விட்டுக்கொடுத்திருக்கிறாள். “அஜய்கூட எனக்கு பிரேக்கப் ஆனதே அவனுக்கு இன்னொரு பொண்ணுமேல இண்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னுதான்.. பட் இப்போ.. ரியலி ஐ டோன்னோ வாட் ஐயம் டூயிங்.. ஆல்ரெடி கல்யாணம் ஆன ஒருத்தர்கூட.. ஜீஸஸ்..” ஒவ்வொரு முறையும் வார்த்தைகள் இவ்விடத்தில் தழுதழுக்கும். அமைதியாக இருப்பதைத் தாண்டி, தேற்ற ஏதுமற்று நிற்பேன். முந்தைய உறவின் மிச்சமாக கடுமையான உளச்சிதைவைக் கடந்து வந்திருக்கிறாள். “நவ் ஐ ஃபீல் லைக் ய பிட்ச்..” குரல் முழுமையாக உடைந்துவிடும். ‘சாரி’ எனச் சொல்லவேண்டுமாவென இவ்விடத்தில் நிறைய முறை யோசித்திருக்கிறேன்; நா எழாது. மறுமுனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்கும், “பட் ஒங்களுக்காக செய்யலாம்.. யு ஆர் ஸ்வீட்..” என்னை சமனப்படுத்துகிறாளா அல்லது தனக்குத்தானே நியாயம் சொல்லிக்கொள்கிறாளா?  

ஒன்றரை மாத பயிற்சி முடித்து பெங்களூருக்கு திரும்பிய பிறகு அனுப்பியிருந்த “தேங்க் யு சர்.. வில் மிஸ் த டீம் மச்..” என்ற குறுஞ்செய்தி சம்பிரதாயத்திற்கானதல்ல என்றும் ஏனையருக்கு அப்படியெதுவும் அனுப்பவில்லையென்றும் பின்னொரு நாள் – அவளுக்கும் என் மீது ஈர்ப்பு இருந்ததா என்று கேட்டதற்கு – சொன்னாள்; பதில் இதுதான்; இவ்வளவுதான். ‘ஏன் பிடித்தது’ என மேற்கொண்டு நீட்டிக் கேட்கவே அச்சமாக இருந்தது. தோற்றமாக இருக்க வாய்ப்பில்லை – எனக்கே தெரியும். அவளுக்குப் பிடித்த ஆங்கில வலைதொடர் நாயகனைப் போன்றே அணியின் ரவீந்தர் தெரிவதாக ஓரிரு முறை சொல்லியிருக்கிறாள் – தோற்றத்தில் வீழும் சிறியவளில்லை என காட்டிக்கொள்ளக்கூட சொல்லியிருக்கலாம். சந்திப்பொன்றில் இப்படிச் சொன்னாள், “யு எம்பத்தைஸ் வித் பீப்பிள்.. அதுதான் ஒங்கள ஸ்பெஷல் ஆக்குது..” குறுக்கிட்டு “அதுதான் ஒனக்கு புடிச்சுதா என்கிட்ட?” என்றதற்கு, “சொல்லமாட்டேன்..” – வேறெங்கோ பார்த்துக்கொண்டிருப்பவளின் உதட்டில் முறுவல் இருக்கும்.

இப்படித்தான்.. எதையுமே கேட்டு வாங்கிட முடியாது; சின்ன விஷயத்திலும்கூட. ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் ‘லவ் யு’ என்று சொல்லும்போது பதிலுக்கு, “யா.. பை” என்பாள். “நீயும் சொன்னா எதாச்சும் கொறஞ்சு போயிடுமா?” என்றால், “சொல்லிட்டே இருந்தா அதுல ஒன்னுமே இல்லேல்ல..” என நிறுத்துவாள். ஆனால் அதே தருக்கம் பதிலீட்டில் செல்லுபடியாகாது. என்றேனும் நான் அப்படி அழைப்பைத் துண்டித்தால், “இப்ப என்ன ப்ரச்சன ஒங்களுக்கு.. எதுக்கு மொட்டையா கட் பண்றீங்க?” – உடனே மீண்டும் அழைத்து கத்துவாள். “என்ன இப்படி ச்சைல்டிஷா போட்டிக்கு போட்டி பண்றீங்க.. எனக்கு நீங்க அத மாத்த வேணாம்.. ஒருமாரி ஃபிக்ஸ் ஆயிடுச்சு அது.. ப்ளீஸ்..” ஏறிய வேகத்திற்கு சட்டென குரல் பணியும்.

நிஜம் அதுதான். எதையும் நான் திருப்பிச் செய்யும்போது அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. “என்ன ட்ரை பண்றீங்க இப்ப?.. என்ன மாரி ஒரு பர்ஸன் ரிலேஷன்ஷிப்க்கெல்லாம் லாயக்கில்லன்னு ப்ரொஜக்ட் பண்ணனுமா?” அவளுடைய புரிதலின் அர்த்தத்தில் விமரிசிக்க ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அற்பங்களைப் பெரிதுப்படுத்தாமலிருக்க மெனக்கெடும் என் எத்தனங்களை உயர்த்திக்காட்டவே விளையாட்டாக முயன்றிருப்பேன். “நத்திங் நியூ.. வீட்லயுமே நா அவ்ட்காஸ்ட் தான்.. யாராலுமே என்ன ட்டாலரேட் பண்ணிக்கமுடியாது..” எனும்போது, ‘இல்லை’யென மறுப்பதற்குள், “பட் ப்ளீஸ்.. யு ஆர் நாட் தெம்.. அப்படிதான் நம்புறேன்.. ப்ளீஸ்..” கெஞ்சலும் ததும்பலுமாக பிரச்சனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுபோயிருப்பாள். “நா ஸில்லியா நடந்துக்கிட்டாலும் ப்ளீஸ் புட் அப் வித் மீ..” ஏன் இது இந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என யோசிப்பதற்குள், “வித்தவுட் எனி ஷேம் ஐயம் பெக்கிங் யு.. என்கூட இருங்க.. ப்ளீஸ்.. என்ன வெறுத்துடாதீங்க..” என்று முடித்திருப்பாள்.

இத்தனை அப்பட்டமாக சார்பை வெளிப்படுத்துமளவிற்கு பலவீனமாவளும் இல்லை. நெருங்கிய உறவிற்குள்ளும் சார்பற்றிருப்பதை அடிப்படைக் கண்ணியமாக நம்புபவள். கணவனின் பணத்தில் இதே பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கும் சக பெண்ணொருத்தியை வியப்புடனே அவளால் அணுக முடிந்திருக்கிறது. “எப்படி முடியுதுன்னே தெரியல சீரியஸ்லி.. அவரு அவள எவ்வளோ ச்சீப்பா பாப்பாரு.. இப்படி விமன்தான் அவங்க மரியாதைய கெடுத்துக்கிறாங்க..”, அவள் சொல்லுவதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டிருக்கிறேன். அவளுடைய பெண்ணியக் கோணங்களை அறிவதில் எனக்கு விருப்பம் இருந்திருக்கிறது. பெண்களின் கற்புக்கட்டுப்பெட்டித்தனங்களுக்கு எதிராக புரட்சிப் பேசும் ஆண்களை “இவனுக காஜி அட்வாண்டேஜுக்காகத்தான் இதெல்லாம் பேசுறானுக..” என்பாள், “கவனிச்சு பாருங்க விமன லிபரேட் பண்ற விஷயமெல்லாம் மென்னுக்குதான் நெறைய சாதகமா இருக்கும்.. ப்ரீ மரைட்டல், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ், பொண்ணுங்க குடிச்சா தப்பான்னு கேக்குறது.. எல்லாமே.. ஈவன் இந்த ட்ரெஸ் விஷயம்கூட.. அவனுக்கு வேணும்.. ஆம்பளயால ஆம்பளயா மட்டுந்தான் யோசிக்கமுடியும்..” கேட்டபடி கூசி நெளிந்துகொண்டிருப்பேன். “நாம எதும் தப்பு பண்றோமா?” என ஒவ்வொரு முறை அவள் தடுமாறும்போதும், இல்லையென தேற்றிய தருணங்கள் மனத்தில் குறுக்கிடும்.

“இந்த ரிலேஷன்ஷிப்புக்கு எந்த ஃபியூச்சருமில்லன்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.. இத ரொம்ப ஹெவியாக்கிக்க வேணாம்ன்னு நெனைக்கிறேன்.. எண்ட் ஆஃப் த டே ஒங்களுக்கு வீட்ல ஒருத்தவங்க இருக்காங்க.. இது இல்லேன்னாலும் யு ஆர் கண்ட்டெண்டட் தான்ல..” எந்த உணர்ச்சியுமில்லாமல் வெறுமையாக இதை அவளால் சொல்லமுடியும்,  “பட் என் விஷயத்துல அப்படியில்ல.. எப்போவாச்சும் இதுலேந்து நா வெளிய போனா, என்னால அத தாங்க முடியணும்.. ஐ ஷுட் சர்வைவ் தட்.. ஒங்களுக்கு இது புரியுதா தெரியல..” உடல்ரீதியான உறவாக அது நீளாததற்கு அவளுடைய இந்த மனநிலைதான் காரணமென்று நினைத்ததுண்டு. இருவருக்கும் அதிலிருந்த விருப்பம் அவ்வப்போது எட்டிப்பார்த்திடாமலில்லை. பின்னிரவு பேச்சுகள் அந்த விளிம்பைத் தொட்டுத் திரும்பும். ஒவ்வொரு முறையும் அடுத்தநாள் காலையில் தவறாமல் ‘சாரி’ என்று அனுப்பியிருப்பாள்.

இந்த விஷயத்தில் அவளுடைய அந்தந்த சமயத்து மனப்போக்கை ஒத்திசையும் விதத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறேன்; ‘ஒங்க லைஃப்ல எதுக்கு நான்? யு ஹாவ் எவ்ரிதிங்..’ பலமுறை இதைக் கேட்டிருக்கிறாள். அது உடற்தேவைக்காக அல்ல என்ற பதில் கொடுக்கக்கூடிய தன்மானம் அவளுக்கு ரொம்பவே அவசியம். அதற்காகவோ என்னவோ, எப்போதுமே நானாக நெருக்கமான உரையாடல்களை முன்னெடுக்க முனைந்ததில்லை. சந்திப்பொன்றில் நிகழ்ந்த முத்தத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல அத்தனை சாத்தியங்களும் இருந்தன; செய்யவில்லை. ‘நாம இதப் பத்தி பேசணும்’ என்பதில் இந்த விஷயம் ஒரு நாள் விவாதிக்கப்பட்டது. “ஒங்களுக்கு எல்லாவாட்டியும் நானே கேக்கணும்ல.. ஏன் என்ன இப்படி ப்ரிமிட்டிவா ஃபீல் பண்ண வைக்கிறீங்க?” என்றாள். “இல்ல.. ஒனக்கு இது ரொம்ப ஊண்டிங்கான விஷயமா இருக்கக்கூடாது.. அதுக்காகத்தான்..” என்றதற்கு, “நீங்க கேட்டு நா வேணாம்ன்னு சொன்னா என்ன இப்ப ஒங்களுக்கு.. எங்கிட்ட ஏன் இவ்வளோ ஈகோ பாக்குறீங்க..” என்றாள். “ஸீ.. ஒனக்காக யோசிச்சுதான்..” என்று என் தூய்மைக்கு சவுக்காரம் போடுவதற்குள், “மைரு.. எனக்கான டெஸிஷன நீங்க எடுக்காதீங்க.. என்னோட பிரச்சனய நா யோசிச்சுக்கிறேன்..”  பொரிய ஆரம்பித்துவிட்டாள்.

எப்போதேனும் கசப்பு வலுத்து என்னுடைய மறைகுணம் வெளிப்பட்டு ‘பிரேக்கப் பண்ணிக்கலாம்’ என நிறுத்தும்போது இதே வார்த்தையை சொல்லுவாள். “அந்த டெஸிஷன நாதான் எடுக்கணும்.. யு காண்ட்..”. அதன் அர்த்தம் புரிந்ததில்லை; எனக்கு வேண்டாமென்ற முடிவையெடுக்க இவளென்ன தடை சொல்லுவது என்றிருக்கும். “இந்த செப்பரேஷன் என்ன ஒரு டார்க்னஸ்ல விட்டுடும்.. வெளிய வரவே முடியாது.. அதெல்லாம் யோசிக்கவே மாட்டீங்கள்ல.. என்னோட ஒவ்வொரு மூவ்லயும் கொஞ்சமாச்சும் ஒங்களோட ப்ரெஸன்ஸ் இருக்கு..” – நாடக வார்த்தைகளெனப் புறந்தள்ள முடியாதவை; இன்றைய நிலையிலிருந்து யோசித்தாலும் அத்தனை சத்தியமானவை. அவளுடைய சராசரி இயக்கங்களில் மிகச்சிறிய வடிவிலேனும் நான் இருக்கத்தான் செய்தேன். எத்தனை வெறுப்பிலும் விட்டுவிடமுடியாத நேசம் நிச்சயம் மிச்சமிருக்கவே செய்தது.

அவளுக்குத் தன் அன்றாடத்தின் சின்னச்சின்ன நகர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் அதிக விருப்பமிருந்தது. பொறுத்துக் கவனிக்கும் வழக்கம் அதிகம் இல்லாததாலோ என்னவோ, கேட்கும் எந்தவொரு விஷயத்திற்கும் இடையிடையே அதே விஷயத்தையொட்டிய என் நினைவிலிருந்து கடந்தகாலத்தை முன்வைக்க தவிர்க்கவே முடிந்ததில்லை “நடுநடுவுல எதாச்சும் ஒங்க சைட்லேந்து சொல்லிட்டே இருக்கணும்.. ஆல்வேஸ் டாமினண்ட்..” என்று கேலி செய்வாள். இப்படி சொன்ன அடுத்தநாள் எதுவும் குறுக்கிடாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால், “மை காட்.. நா சொன்னதுக்காகவா? ஹவ் சில்லி ஆர் யூ..” நிறுத்தவே முடியாமல் கலகலவென சிரிப்பாள். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சமயங்களில் முதிர்ச்சியற்றவனாகத்தான் நடந்துகொண்டிருக்கிறேன். பதினோரு ஆண்டு இடைவெளிக்கான பக்குவத்தை – தவறுகளையும் குறைகளையும் ஏற்கக்கூடியவன் – எப்போதுமே எதிர்பார்ப்பவளாகத்தான் இருந்திருக்கிறாள். நானோ சமவயதினனாக நடந்துகொள்ளவே முயன்றபடி இருந்திருக்கிறேன். வயது வித்தியாசத்தை அருகச்செய்வது என்னை சற்று இலகுவாக்குமென நம்பியிருக்கிறேன். வயதுப் பேதம்தான் தனக்கு விவரிக்கமுடியாதொரு பாதுகாப்புணர்வு கொடுப்பதாக அவள் சொல்லும்போதெல்லாம் துளியேனும் கலவரப்படாமல்  இருந்ததில்லை.

சொல்லப்போனால், தேக்கிவைத்து வெடிப்பதை மட்டும்தான் என்னுடைய ஒரே குறையாக பல முறை சொல்லியிருக்கிறாள். “ஆஸ் ய பெர்ஸன், யு ஹாவ் நோ அதர் ஃப்லாஸ்” இந்த உறவிற்குள் இப்படியொரு வார்த்தையா எனப் பார்ப்பேன். “இந்த ரிலேஷன்ஷிப்ப வெச்சு ஒங்கள தப்பு சரின்னு ஜட்ஜ்மெண்ட்டலா சொல்ல எனக்குமே எந்த தகுதியுமில்ல.. பட் அதுலயுமே, வேற யாருமா இருந்தா எதாவது ஒரு பக்கம் நிச்யமா காம்ப்ரமைஸ் பண்ணிருப்பாங்க.. யு ரெஸ்பெக்ட் யுவர் பீப்பிள்.. அண்ட் யு டேக் பெய்ன் ஃபார் தட்.. நானா இருந்தாகூட இப்படி இருந்திருப்பேனான்னு தெரியாது” என்பாள். தன்னுடைய மனிதர்களை மதிப்பவன் என்ற உயரத்தில் வைக்கப்பட்டிருப்பவனால் அந்த நம்பிக்கைக்கு எதிர்முனையில் நிற்கமுடிவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. என்னுடைய கோவம் அத்தனை மோசமான முகத்தை எனக்கு அளித்திருக்கும். “நெஜமாவே நீங்க என்ன லவ் பண்றீங்களா?” என்னால் பதிலே சொல்லமுடியாது. அக்கணத்தில் இல்லையென்று சொல்வதுகூட என் புத்திக்கு சாத்தியம். “இல்ல இப்படியொரு பர்ஸனதான் நா லவ் பண்றனா.. சத்யமா ரொம்ப அசிங்கமா இருக்கு..” உடைவுக்கு நடுவேதான் இந்த வார்த்தைகளைக் கேட்கமுடியும். விளக்குவதாக நினைத்து, “நா ரொம்பவே நார்மலா எல்லா விஷயத்தையும் எடுத்துக்குறேங்கறதுக்காக.. வென் இட் கோஸ் பியாண்ட் ய பாயிண்ட்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, “நோ.. ஹெல் நோ..” அழுகையோடே குரலை உயர்த்துவாள், “நீங்க நார்மலா எடுத்துக்கல.. அடக்கி மனசுல வெச்சுக்குறீங்க.. நார்மலா எடுத்துக்கிட்டா சேத்து வெச்சு கத்தமாட்டீங்க..” இத்தனை அழுகையிலும் எப்படி இந்த அலுப்பூட்டும் தர்க்கத்துடன் பேசமுடிகிறது என்று மேலும் கோவம்தான் வரும். “ஆமா.. சரி அப்டியே இருக்கட்டும்.. அதுக்காக ஒன்ன மாத்திக்கப் போறியா..? இல்லேல்ல..” குத்திக் கிழிக்கவேண்டும் என்ற மூர்க்கம் எங்கிருந்தோ வந்துவிடும்.

“ஒங்களால நா அழும்போதுகூட கத்திட்டே இருக்கமுடியும்ல..” ஓரிரு நாட்கள் கழித்து சாவதானமாக கேட்பாள். பதிவுசெய்து வைத்திருக்கும் அழைப்பை அனுப்பி கேட்கச் சொல்லுவாள். கொதிப்பு அடங்கியிருக்கும்போது ஒருவன் இக்கேள்விக்கு சரணடையத்தான் வேண்டும். “கொஞ்சம் ஷாட் டெம்பர்ட்.. மாத்திக்க முடியல..” மாறவேண்டியது நான்தானென ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. உடனே மறுமுனையில் நிறம் மாறும். “ஷாட் டெம்பர்ட் இல்ல.. இல்-டெம்பர்ட்.. வீட்ல அவங்ககிட்டயும் இப்படிதான் பிஹேவ் பண்ணுவீங்களா?” கூண்டிலேயே நிறுத்திவிடுவாள். ஆமாம் / இல்லை என்ற பதிலே சொல்லமுடியாத இப்படியான அநேக கேள்விகள் உண்டு.

அவளுடைய எண்ணங்களை ஒத்திசைத்துத்தான் நான் பேசவேண்டும் என எப்போதுமே எதிர்பார்த்திருக்கிறாள். பிசிறி விலகும் வெளியிருந்தும் நானும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவே விரும்பியிருக்கிறேன். அதற்கான சிறிய விலையாகவே என் நிறுவைகளைப் பிழையாக்கிக்கொண்டிருக்கிறேன். அவள் சரியென்றும் பிழையென்றும் அளவிடுவனவற்றை ஆமோதிக்க கூச்சமேயில்லாமல் அபத்த விளக்கங்களைத் தயாரிப்பது ஒருவிதத்தில் தன்வதைதான். ஏன் அப்படி செய்தேனென விளக்கமுடியவில்லை. அவளால் விரும்பப்படுவனாக இருப்பது எனக்குப் பிடித்திருந்தது, அவ்வளவுதான்; மனத்தளவில் அது எனை உயர நிறுத்தியது.

பெங்களூரில் ஆய்வுக்காக இணைந்த புதிய அணியைப் பற்றி நிறையவே சொல்லுவாள். அவர்கள் எத்தனை சிறந்தவர்கள் என அவள் சொல்லும்போது ஏற்கனவே பரிச்சயமானவர்களைப் பற்றி பேசுவதைப்போல ஆமாம் ஆமாம் என்பேன். அவர்களின் வார்த்தைகளுக்கு மேன்மையான அர்த்தத்தை தருவித்துச் சொல்லி மேலும் மெருகூட்டுவேன். இவையெல்லாம் ஆரம்பத்தில் எல்லோருடனும் அவளுக்கு இணக்கமான போக்கு இருந்த நேரத்தில் நடந்தவை. பின்னாளில் ஒவ்வொருவராக அவள் பார்வைக்கு வெளுக்க ஆரம்பித்தார்கள். அசூயையின்றி அவர்களைச் சபிக்க ஆரம்பித்தேன்; அவர்களின் சராசரி சுயநலப்போக்குகளைக்கூட பூதாகரப்படுத்தி வன்மையாக நான் விமர்சிப்பது அவளுக்கு ஆறுதலளித்தது.

மட்டுமின்றி, ஆய்வறிக்கை தயார் செய்ய வழிகாட்டியாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை நிர்ணயித்திருந்தார்கள். அறவே பொருந்திப்போகவில்லை. “காலாகாலத்துல கல்யாணத்த பண்ணாம அவளோட டிப்பெல்லாம் வந்து எம்மேல எறக்குறா.. எது கேட்டாலும் வெட்டி வெட்டிதா பதில் சொல்றா..“ நாளுக்கு நாள் இருவருக்குமான இறுக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. “அவளுக்கு எப்டியோ நாவொரு கேரிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு தெரிஞ்சிருக்கு.. அந்த காண்டு தெரியுது நல்லா.. நா ஃபோன் யூஸ் பண்ணாலே எரிச்சலாவுறா..” சின்னச்சின்ன சீண்டல்களுக்கும் இவளிடமிருந்து அளவிற்கதிகமான எதிரீடுகள் முளைத்தன. பாராத அப்பெண்ணிடமிருந்து தினந்தோறும் புதிய குறைகளையும் குற்றங்களையும் நான் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அடுத்த ஆறு மாதம் எப்படி அப்பெண்ணை சமாளித்து அறிக்கையைச் சமர்ப்பிப்பது என்பதைத் தாண்டி எங்களுக்கு பேச எதுவுமே இல்லை என்றளவில்தான் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் உறைந்திருந்தன. என்னையொரு ஆய்வு மாணவனுக்கான பதற்றத்திலேயே அந்நாளில் வைத்திருந்தேன்.

எப்போதேனும் கொஞ்சம் விடுபடல் வேண்டி, இதைவிட மோசமான சூழலில் மோசமான மனிதனுக்குக் கீழிருந்துதான் என்னுடைய ஆய்வறிக்கையை நிறைவு செய்தேன் என்று அவளைத் தேற்றுவதற்காக சொல்லப்போனால், “ஐயோ.. ஒங்க பழய கதெயெல்லாம் வேணாம்.. இட் டஸின்ட் ஹெல்ப் மீ..” என கத்துவாள். நான் அணுக விரும்பாத விதத்தில் அவள் அப்பிரச்சனையை அணுகினாலும் அதை மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமலிருப்பதோடு அல்லாமல், அவளை அத்திசையிலேயே உத்வேகப்படுத்த வேண்டியிருந்தது. “ஒனக்கு எதுதாம்ப்பா ஹெல்ப் பண்ணும்?” என விரக்தியுடன் கேட்டால் தயக்கமேயில்லாமல் “அத நீங்கதான் யோசிக்கணும்” என்பாள். சுர்ரென்றிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாத எல்லையை கிட்டத்தட்ட கடந்திருந்தேன். மாதக் கணக்கில் ஒரே விஷயத்தில் ஏற்படும் ஒரே மாதிரியான பிரச்சனைக்கு – அதையெல்லாம் முழுமையாகக் கடந்து வந்து வாழ்வின் வேறொரு கட்டத்திலிருக்கும் – என்னிடமிருந்து வெவ்வேறு தீர்வுகளையும் ஆறுதலையும் எப்படி எதிர்பார்க்கிறாளென எரிச்சல் மண்டும். தனிப்பட்ட முறையில் தீவிர உளநெருக்கடி. பணியிடத்திலும் அக்கறைக் கோளாறு. சொன்னதற்கு, ‘கொஞ்சம் எனக்கு இதெல்லாம் செட்டில் ஆகுற வரைக்கும் டூ வீக்ஸ் லீவ் எடுங்க’ என்றாள். இந்த உறவிலிருந்து விலகிக்கொள்ளலாமாவென ஒவ்வொரு சிகரெட்டிலும் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வினாடி அழுத்தி யோசித்தாலும் அத்தனையும் பூஜ்ஜியமாக தெரிந்தது.

“இதுல எதுமே இல்ல எனக்கு.. ஏதோ ஒனக்காக மட்டும்தான் இத கேரி பண்ணிட்டிருக்கேன்னு தோனுது..” எப்படி இதைச் சொன்னேனெனத் தெரியவில்லை. அவள் வழக்கத்திற்கு மாறாக மெளனித்திருக்க, நிறுத்தாமல் தொடர்ந்தேன், “சுத்தமா ரெஸிப்ரோக்கேஷனே இல்ல இதுல.. எதோ நா மட்டும் கொடுத்துட்டேயிருக்கமாரி இருக்கு.. இவ்வளோ எஃப்பர்ட்ஸ்லாம் எதுக்குன்னு இருக்கு இப்போ..” அவள் விடும் எந்த வார்த்தையையும் பற்றிக்கொண்டு ஏறி நசுக்க தவித்துக்கொண்டிருந்தேன். மாறாக நிலவிய அமைதியில், இங்குமங்குமாக உள்ளிருப்பவற்றைக் கொட்ட ஆரம்பித்தேன். “நடுவுல ரெண்டு நாள் ரொம்ப தலவலின்னு சொன்னேன்.. லீவ் போட முடியாம அத்தன ஸ்ட்ரெஸ்லயும் வேலைக்கு போயிட்டிருந்தேன்.. அதப் பத்தி அக்கறப்பட்டு விசாரிக்கவேணாம்.. ஒனக்கு அது ஈஸியா வராது (நானே ஏன் இன்னும் அவளுக்காகவும் வாதாடுகிறேன் என உள்ளுக்குள் கொந்தளிப்பாக இருந்தது) அட்லீஸ்ட் அன்னிக்காச்சும் ரெண்டு வார்த்த ஸூதிங்கா.. போன எடுத்தா அதே சேம் தீஸிஸ் தீஸிஸ் தீஸிஸ்.. பொலம்பல்.. அதர் எண்ட பத்தி எதுமே யோசிக்கமுடியாதுல்ல ஒன்னால..” என தொடர்ந்தபோது இடைமறித்து, “ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?” என்று அவள் கேட்டதும் பளாரென அறையவேண்டும் போலிருந்தது. வாய்ப்பை விடக்கூடாதென, “ஐ டோண்ட் ஃபீல் பீயிங் லவ்ட்.. ஒரு எழவும் இல்ல அங்கேந்து..” முடிந்தளவிற்கு கசப்புடன் திடமாகவே சொன்னேன். நெடுநேரம் மறுமுனை நிசப்தித்திருந்தது. வாயைப் பொத்திக்கொண்டு அழுவதின் தேம்பலொலி மட்டும் இடையிடையே கேட்டது. பலவீனப்பட விருப்பமின்றி இணைப்பைத் துண்டித்தேன். துண்டிக்க துண்டிக்க மீண்டும் மீண்டும் அழைத்தபடியிருந்தாள். எடுத்தால் அதே அமைதி.. அதே அழுகை..

‘நாம இத பத்தி பேசணும்’ என ஓரிரு நாளில் வந்து நிற்பாளென நினைத்ததற்கு மாறாக அன்றிரவே சற்றே நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள் – ‘ஒங்க ஒருத்தரால மட்டுந்தான் எப்போமே என்ன வெறுக்கமுடியாதுன்னு நெனச்சிட்டிருந்தேன்.. ஃபைனலி அதுமே பொய்யாயிடுச்சு.. ஒங்கள ப்ளேம் பண்ணல.. எதோ ஓவர்கான்ஃபிடன்ஸ்.. நம்ம ரிலேஷன்ஷிப் அப்டியில்லன்னு நெனச்சேன்.. ரொம்ப டேக்கன் ஃபார் க்ராண்டட் மாதிரி பண்ணிட்டேன்.. உள்ளுக்குள்ள இருக்கறத இன்னொருத்தரால ஃபீலே பண்ணமுடியாத அளவுக்குதான் நா பிஹேவ் பண்றேன்.. நீங்க எனக்கு எவ்வளோ இம்ப்பார்ட்டண்ட்ன்னோ ஹவ் மச் ஐ வேல்யூ யுன்னோ சொல்லிப் புரிய வைக்கிறது அசிங்கம்.. ஒங்கள நா ஃபோர்ஸ் பண்ணல.. ஒங்க நெலமைல நா இருந்தா இவ்ளோல்லாம் பொறுத்துப்போக மாட்டேன்தான்.. வேணாம்ன்னு ஒங்களுக்கு தோனுச்சுன்னா கஷ்டப்பட்டெல்லாம் இதுல இருக்கவேணாம்..’ மூன்று நான்கு முறை வாசித்தேன். வாக்குவாதமாக இருந்தால் ‘இப்போதுமே உனக்கு நான் தேவை என்ற புள்ளியில்தான் நீ இதை யோசிக்கிறாய். எனக்கு நீ தேவையானவளாக இருக்கும்படி உன்னை உயர்த்திக்கொள்ள நீ யோசிக்கவேயில்லை’ என்று பேசலாம். சொல்லவில்லையே தவிர மனதிற்குள் அத்தனை வறட்டுத்தனத்துடன் இருந்தேன். பதிலே அனுப்பாமல் விலகிவிடலாமாவென யோசித்தேன். இன்னொரு செய்தி வந்தது, “ஓகேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருக்கு.. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ.. ப்ளீஸ்.. கொஞ்ச நாள் இதேல்லாம் பொறுத்துக்கோங்க.. எனக்கே தெரியிது நா நார்மலா இல்ல.. ஒருமாதிரி இந்த தீஸிஸ் விஷயத்துல ரொம்ப ப்ரீஆக்குப்பைடா இருக்கேன்.. இத முடிச்சடுறேன்.. அதுக்கப்பறம் நா புதுசா எதும் மாத்திக்கிறேன்னு பொய் சொல்லல.. அட்லீஸ்ட் நீங்க எதிர்பாக்குற அந்த மியூச்சுவாலிட்டி வந்துரும்.. ப்ளீஸ் இருங்க..” கனிந்துவிடவில்லையெனினும் ஈரமேயில்லாதவனாக நடந்துகொள்ளமுடியவில்லை.

சுமூகமான பின்னர் ஒரு நாள், “ஒங்களுக்கு அன்னிக்கு அனுப்புன டெக்ஸ்ட்ட திரும்ப வாசிச்சுப் பாத்தேன்.. ச்சும்மா அந்த நேரத்து எமோஷன்லல்லாம் அனுப்பல அத.. தட் இஸ் சோ ட்ரூ.. ஒன்னுமே பண்ணமுடியாது நீங்க இல்லாம என்னால..” என்றாள். இயல்பு நிலையிலிருக்கும்போது இப்படிச் சொன்னது நிறையவே கனத்தது. “நாளிக்கு இன்னொரு பெர்ஸன் என் லைஃப்ல வந்தா.. எனக்கெல்லாம் அது அமையாது.. பட் வந்தா சொல்றேன்.. அவன ஒங்களோட கம்பேர் பண்ணியே ஒட்ட முடியாம போகப்போது.. ஒங்கள கொஞ்சமா வெறுக்க கத்துக்கனும் இனிமே..” சிரித்தாள். “இல்லேன்னா.. அந்த நாயி அஜயவே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ரெடியாதான் இருப்பான்.. அப்பப்ப டெக்ஸ்ட் போட்டு ஆழம் பாப்பான் இப்பவும்.. அவன்கூடன்னா ஐ கேன் கண்ட்டினியு திஸ் வித் யூ ஆல்வேஸ்.. எந்த கில்ட்டும் இல்லாம.. சம்ஹவ் நீங்க எப்போமே இருக்கணும் எனக்கு..” ஐந்தாரு வினாடிகள் பிடித்தன எனக்கு. மெல்ல நிதானித்து, “பைத்தியம்” என்றேன்.

மீண்டும் இதையே வேறோரு முறையும் சொல்லியபோது, “நீ ஏன் அப்படி சொல்ற.. என்னோட லைஃப்க்குள்ள வரணும்ன்னு சொல்ல வரல ஒனக்கு?” வயதின் தாழ்வெண்ணத்தில்தான் இதைக் கேட்டிருக்கவேண்டும். “கேட்டா நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. ஐ நோ யுவர் ப்ரையாரிட்டீஸ்..” நிச்சயம் குற்றமாகச் சொல்லவில்லை. “எனக்கு ஆச இல்லாமல்லாம் இல்ல.. ரொம்ப சாதாரண பொண்ணுதான் நா அந்த விஷயத்துல.. பட் எனக்கு எதையும் டெஸ்ட்ராய் பண்ணவேணாம்..”. என்றாவது ஒரு நாள் விலகிச்செல்லப் போகிறவள் என்ற நினைவுக்கு மாறாக, எப்போதுமே அவள் உடனிருக்கவேண்டுமென எனக்குமே அக்கணத்தில் தோன்றியது.

ஆய்வறிக்கை சமர்ப்பித்து எல்லாம் சாதகமாக, திருவனந்தபுரத்தில் பணி கிடைத்தது. புது இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் அழுத்தத்தை சீக்கிரமே கடந்துவிட்டாள். “திரும்ப பொலம்ப ஆரம்பிக்கப்போறான்னு பயந்துட்டீங்களா? பொலம்பறதுக்கு இங்க எவனாச்சும் மல்லுவ புடிச்சுக்கிறேன்.. பயப்படாதீங்க..” என்றதற்கு, “அதச்செய் மொதல்ல.. சத்யமா இன்னொருவட்டில்லாம் முடியாது..” என்றேன். “ச்ச.. கொஞ்சம்கூட பொஸஸ்ஸிவா பேச மாட்டீங்க.. அப்பாடான்னு சொல்றீங்க..” கோவிப்பதைப் போல சொன்னாள். “நீ என்ன பொலம்பதானப் போற.. அதத்தாண்டி போமாட்ட.. தெரியும் எனக்கு..” என்றேன். “ஓவர் கான்ஃபிடன்ஸ் இதெல்லாம்.. இதுக்குன்னே சீக்கிரம் ஒரு பையன புடிக்கிறேன் இருங்க.. ஒரு தமிழ் பையன் இருக்கான்.. பாத்துட்டே இருங்க”

விளையாட்டாக குறிப்பிட்ட அந்த தமிழ்ப் பையனைப் பற்றித்தான் பின்னாட்களில் அதிகம் பேச ஆரம்பித்தாள். சில நாட்களில் அவனைப் பற்றி பேசுவதை அப்பட்டமாக நிறுத்தினாள் – அதுதான் விநோதமாக இருந்தது. மனத்தொந்தரவில் சிறிய பிசிறுகளும்கூட தனித்துத் தெரிய ஆரம்பித்தன. இயல்பாக இருக்க சிரமப்படுவளாகத் தெரிந்தாள். நிறுத்தி யோசித்தால், விலகிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதோவெனத் தோன்றியது. தடுமாறுவதைப் பார்க்க பரிதாபமாகக்கூட இருந்தது. “நீ எதாச்சும் என்கிட்ட சொல்லனுமா?” கேட்டுவிட்டேன். “என்ன சொல்லனும்.. ஒன்னு இல்லயே பேபி..” அந்த பேபி ரொம்பவே செயற்கையாகப்பட்டது. சந்தேகப்பட்டு விசாரிக்கும் தோற்றத்தையெடுத்துக்கொள்ள தயாராக இருக்கவில்லை; ஏதோ மழுப்பி பேச்சை முடித்துக்கொண்டேன். அதேநேரம், அன்றாடப் பேச்சை நானாக தொடங்குவதை நிறுத்தவேண்டுமென முடிவு செய்துகொண்டதோடு, நிறைவேற்றவும் செய்தேன். இரு வாரங்களாகியும் அவளுக்கு அது அந்நியமாகப்படவில்லை என்பதே போதிய பதிலைச் சொல்லுவதாகத் தெரிந்தது.

“எக்ஸ்ப்ளைன் பண்ற கஷ்டமெல்லாம் ஒனக்கு வேணாம்.. எனக்கே புரியுது.. ஐ வில் மூவ் ஸ்லோலி.. அண்ட் இதுல ஒன்ன எதுமே ஜட்ஜ் பண்ணமாட்டேன்.. ஃபீல் ஃப்ரீ..” என்று அனுப்பினேன். பின்னிரவு இரண்டரை மணி. குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டாள். ஏதோ தட்டச்சு ஆகி மீண்டும் அழிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. சட்டென எதுவுமே பதில் வராமல் ஓய்ந்தும்விட்டது. ‘என்ன?’ என்று நான் அனுப்பிய செய்தி ஒற்றை டிக்குடன் நின்றது. இம்மியும் தூக்கம் வரவில்லை.

“எனக்கே என்ன பத்தி ஒங்க அளவுக்கு தெரியாது.. எப்டியும் நீங்க கேட்ருவீங்கன்னு ஐ வாஸ் ஃபியரிங் த மொமண்ட்.. ஸ்டில்.. நீங்களே கேட்டுட்டா பெட்டர்ன்னுதான் வேண்டிட்டு இருந்தேன்.. பட் சத்யமா நீங்க கேக்குற மாதிரி இல்ல.. ப்ளீஸ் மூவ் பண்றேன்னுல்லாம் எப்பயுமே சொல்லாதீங்க.. கண்டிப்பா இந்த ஃபியூ வீக்ஸ் நா முன்ன மாதிரி ஒங்கக்கிட்ட இல்ல.. பட் இதெல்லாம் புரியாத ஆள் கெடையாது நீங்க.. புது ரிலேஷன்ஷிப்போட யர்லி டேஸ்ல இருக்க ச்சின்ன ஹை தான்.. சீக்கிரமே அதெல்லாம் போயிடும்.. நாம எப்பவும்போலத்தான் இருப்போம்..” மறுநாள் காலை பேசும்போது படபடவென ஆரம்பித்தாள். எங்கோவொரு மூலையில் என் அனுமானத்தை மறுப்பாளென அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும் – ‘நாம் பிரியப்போவதில்லை’ என்ற தேற்றலையுமேகூட தோற்றுப்போன மனநிலையில்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களுக்குள் இருப்பதாகச் சொல்லும் அந்த ‘ச்சின்ன ஹை’ முன்பு எங்களுக்குள் இருந்ததாவென யோசித்தேன். இனி அவர்களோடும் அவனோடும் எங்களையும் என்னையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கப்போகிறேனென நினைத்துக்கொண்டிருக்கும்போதே, “அண்ட் என்னால ஒவ்வொரு மொமண்ட்லயும் அவன ஒங்களோட ரிலேட் பண்ணாம இருக்கமுடியல.. யு ஹாவ் செட் சம் ஸ்டாண்டட்..” அழுகையும் சிரிப்புமாகச் சொன்னாள். “ஹீ இஸ் ய வெரி ஆடினரி கை.. அவனால..” என்று அவள் தொடர நினைத்த இடத்தில் வெட்டினேன். “வேணாம்.. ஃபார் காட் சேக்..” அவள் அமைதியானாள். “மத்தவங்க எல்லார பத்தியும் சொல்ற மாதிரி அந்தப் பையன பத்தியும் என்கிட்ட ஷேர் பண்ணவேணாம்..  நா எதாச்சும் சொன்னா நிச்சயமா அதுல பயஸ் இருக்கும்.. சோ ப்ளீஸ்..” புரிந்துகொண்டாள். “இட் மஸ்ட் பீ ய ஹெல் ஃபார் யூ..” தவிப்பவளை நான்தான் இதற்கும் தேற்றவேண்டும். “பட் ப்ளீஸ் ஸ்டே.. வீ வில் பீ ஓகே சூனர்..” தீர்க்கமாகச் சொன்னாள்.

பின்னாளில் அன்றாடங்களைப் பகிர்வது அவளுக்குச் சுலபமாக இல்லை. முன்புபோல அத்தனையையும் கொட்டமுடியவில்லை. எதை விடுத்துப் பேசுவது என்பதில் வெளிப்படையாகத் தடுமாறினாள். “ஒங்களால எப்படி அது முடிஞ்சுது.. அவங்கள பத்தி எதுமே கொண்டுவரமாட்டீங்க என்கிட்ட.. நானே எதாச்சும் கிளறிதான் ஹர்ட் ஆயிப்பேன் அப்பப்போ.. பட் நீங்களா ஒரு ச்சின்ன இது கூட சொல்லமாட்டீங்க.. ரியலி ஐ யம் ஸ்ட்ரக்லிங் ஆன் தட்..” இதற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. “மே பீ கொஞ்ச நாள்ல என்னாலயும் இத ஹாண்டில் பண்ண முடியும்ன்னு நெனைக்கிறேன்..” அவளே முடித்துவிட்டாள்.

அவள் நம்பியதற்கு மாறாக நாளுக்கு நாள் தணிக்கைகள் அதிகம் அவசியப்பட்டபடி இருந்ததாலோ என்னவோ.. என்னோடு அவளால் ஐந்து நிமிடங்களுக்குமேல் பேசவே முடியவில்லை. தேய்வை அதன் போக்கிலேயே அனுசரிக்க முயன்றேன். இட்டு நிரப்ப அவளும் முயன்றபடி இருந்தாள். நமக்குள் எதுவும் மாறப்போவதில்லை என அடிக்கடி உறுதி சொன்னாள். அவளுக்கே நினைவூட்டிக்கொள்ளத்தான் அப்படிச் சொல்கிறாளெனப் பட்டது.

எப்போதேனும் பொதுவான விஷயங்களைக் கொண்டு உரையாடலை நீட்டிக்கவும் முடிந்தது. அப்படி நீளும் நாட்களில் எதையோ நிகழ்த்திவிட்ட திருப்தி அவளிடம் தெரிந்தது. ஏன் இத்தனை போராடுகிறாள் என்றிருக்கும். துயர நாட்களில் பயன்படுத்திக்கொண்டு இப்போது விலகிவிட்டாளென நினைத்துவிடுவேனென அஞ்சுகிறாளா? அப்படி நினைத்தாலும்தான் என்ன.. விட்டொழித்துவிட்டு குழப்பமின்றி வாழலாம்தானே.. கொஞ்சம் குற்றவுணர்ச்சியுடன் இருந்தால்தான் என்ன கெட்டுவிடப் போகிறது? இக்கேள்விகளையெல்லாம் கொண்டு அவளை அதிகமாகத்தான் நேசிக்க முடிந்தது.

ஓரிரவு பேச்சு எங்களின் தொடக்கநாட்களை மையமிட்டது. அம்முகம் அப்போது எப்படியிருந்தது என்பதையே நான் மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளில் எப்படியெப்படியோ மாறிவிட்டாள் – தாடை சற்று அகண்டு.. வேறு மாதிரி. அணியில் எல்லாருமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பினாள் – முன்பு பார்த்திடாத படம். சிவப்புநிற மேக்ஸியில் அப்புகைப்படத்தில் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நிற்கிறாள். அந்தக் கண்களில் வாஞ்சை தெரிவதைக் குறிப்பிட்டேன். அதற்காகத்தான் இத்தனை நாளும் காட்டியதில்லையெனச் சிரித்தாள். அவளைப் பார்க்கவில்லையேயொழிய அதே பூரிப்புடன்தான் நானும் அப்படத்தில் நிற்கிறேன். அங்கிருந்து எங்கெங்கோ வந்துவிட்டோம் என்றேன். “என்ன உயிரோட புடிச்சு வெச்சிருக்கீங்க..” என்றாள். அவள் அடிக்கடி சொல்லுவதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் பொருட்படுத்திச் சொல்லுவதைப் போலத்தான் இருக்கும். “கிஸ்ஸஸ்” என்று அனுப்பினேன். முறுவலைப் பதிலாக அனுப்பினாள். பேச்சை இன்னும் நெருக்கினேன். இப்போதைய புதிய சூழலில் அவளே ஆரம்பிப்பது சிரமம். நானே தொடர்ந்தேன். மறுத்தாலும் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்று நினைப்பதற்குள், “வேணாம்..” என்று அனுப்பியிருந்தாள். தயாராக இருந்தாலுமே உள்ளுக்குள் அடைத்தது. “பரவால்ல..” என தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே, “எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..” என்ற செய்தி வந்தது. மேற்கொண்டு எதுவுமே அவ்விரவு பேசிக்கொள்ளவில்லை.  

“ஐ நோ தட் வாஸ் ஹார்ஷ்.. பட் எனக்கு வேற என்ன சொல்றதுன்னு..”என ஆரம்பித்து அவள் அனுப்பியிருந்த நீண்ட செய்தியை வாசிக்காமல் உடனடியாக அழித்தேன். “நீ எதும்மே எக்ஸ்ப்ளைன் பண்ணவேணாம்.. ஒரு மாசத்துக்கு முன்னவே நா விலகிக்கிறேன்னு சொன்னேன்ல.. ஒனக்கு அவன் ஓகேவான்னு அஸஸ் பண்ற டைம் வரைக்கும் இத கண்டினியூ பண்ணனும்ன்னு தோனுச்சா?” அனுப்பிவிட்டு பார்க்கும் அவகாசம்வரை பொறுத்திருந்து நானே அழித்தேன். “ப்ளீஸ்.. என்ன ஆச்சு இப்ப..” மன்றாடும் குரலில் இச்செய்தியை யூகிக்கமுடியவில்லை. அலட்சியக் குரலே பொருந்தியது. “இப்ப பேசும்போதெல்லாம் அவன ச்சீட் பண்ற மாதிரி இல்லயா ஒனக்கு? நா க்ளோஸா வந்தா மட்டும் ஆக்வடா இருக்குன்னா.. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுதா? யு ஜஸ்ட் வாண்ட் மீ பை யுவர் சைட்.. பக்கத்துல இருக்கனும்.. கொட்றதுக்கு ஒரு வெண்ட்.. அவ்வளோதான்.. புரியுதா ரெஸிப்ரகேஷனே இல்லன்னு ஏன் சொன்னேன்னு.. இதுல என்னத்த நா ஃபீல் பண்ணமுடியும்.. மியர் சப்போர்ட்.. இந்த ஏஜ் டிஃபரன்ஸ்ல யு காண்ட் ஃபைண்ட் எனித்திங் பெட்டர் வித் மீ..” பொரிந்து அனுப்பினேன். துண்டிக்க துண்டிக்க விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தாள். “ஒங்கள நா யூஸ் பண்ணிக்கிட்ட பிக்ச்சர மட்டும் எனக்கு கொடுக்காதீங்க ப்ளீஸ்” உடைந்து அழும் குரலை பதிவு செய்து அனுப்பியிருந்தாள். என்னைத் தொடர்புகொள்ள முடியாதபடி அத்தனை வழிகளையும் அடைத்தேன்.

ஏக்கத்தோடு அல்லாமல் வெறுப்புடன் விலகியதாக என்னை நம்பவைப்பதுதான் அதிலிருந்து அதிக காயமின்றி வெளிவர உதவுமென நம்பினேன். அவ்வுறவில் ஒரு முட்டாளாகவே இருந்திருக்கிறேன் என – அவமானமாகவே இருந்தாலும் – மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். என் பணி முன்னேற்றங்களை இத்தனை நாளும் காவு கொடுத்திருப்பதாகவே தோன்றியது. பண முதலீடுகளில் அக்கறையில்லாமல் இருந்திருப்பதாகப்பட்டதும் நிறையவே குறுகினேன். கீர்த்தி கேட்டுக்கொண்டேயிருந்த டிரைவிங்கை சனி ஞாயிறுகளில் சொல்லிக்கொடுத்தேன். பையனை மாலைகளில் ஷட்டில் வகுப்பிற்கு அழைத்துப்போனேன். தன்முன்னேற்ற/மனநெறி நூல்களை வாசிக்கவேண்டுமென ஏனோ தோன்றியது. தவறவிட்ட தருணங்களை நினைத்தால் அதீதச் சோர்வு மண்டியது. நண்பர்களுடன் சரிசெய்ய முடியாத அளவிற்கு மனத்தொலைவு அதிகமாகியிருந்தது. எல்லாவற்றையும் களைத்துப்போட்டுவிட்டு செல்லும் கொடுங்காற்றைப் போல தெரிந்த இரண்டு வருடங்களைப் புழுங்கி நொந்துகொண்டேன். தோற்றுப்போனவனாக என்னை நினைக்கக்கூடாதென அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது.

நான்கு வாரங்களுக்குள் புதிய வாழ்முறையை வகுத்துக்கொண்டதாக நம்பி முன்நகர ஆரம்பித்தேன். உடனிருப்பவர்கள் என் உற்சாகத்தில் குழம்பினாலும் மனப்பூர்வமாக மகிழ்கிறவர்களாகவே தெரிந்தார்கள். என்னுடன் நேரம் ஒதுக்கிப் பேச அணித்தலைவரும் அதிகம் விரும்பினார். விநோதமாக சிலர் எங்காவது பயணம் போய்வரச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இவையளித்த உத்வேகத்தின் அளவிற்கே என் பலவீனத்தின் வெளிப்படைத்தன்மையும் சுற்றியிருப்பவர்களின் தாட்சண்யமும் அச்சமளிக்க ஆரம்பித்தன. அத்திசையிலேயே யோசனை நீள, சட்டென எங்கிருந்தோ புதிய இருள் கவிந்ததைப் போலிருந்தது. அன்று மதியம் முழுக்க அறைக்கதவைச் சாத்திக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன். கீர்த்தியை அழைத்துப் பேச முயன்று, ஏதோ சமாளித்து வைத்துவிட்டேன். அணித்தலைவரின் அறையில் பார்த்தால், அவர் புறப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். மொட்டைமாடிக்குப் போனவனை காலி கிங்ஸ் பெட்டி பரிகாசம் செய்தது. அந்த மாலையைக் கடந்துவிட்டால் போதுமென்றிருந்தது. அடுத்த நாள் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது. மீட்சியின் ரேகைகள் மெல்ல அழிய ஆரம்பித்திருப்பது தூலமாகத் தெரிந்தது.  

மீண்டும் அறைக்கு வந்ததும் அவசரமாக அலைபேசியிலிருந்து அவளுக்கான தடைகள் அத்தனையையும் களைந்தேன். இனம்புரியாத ஆசுவாசம். அவளை மேலும் வெறுக்க ஏதேனும் கிட்டினால் தேவலாமென்றிருந்தது. முகப்புப் படத்தின் இடம் காலியாக இருந்தது – அவளுமே என் இணைப்பை தடை செய்திருக்கலாம். அழைத்துப் பேசலாமாவென ஒரு கணம் யோசித்தேன். மன்னிப்பேதும் கோராமல் தன் தினசரி அல்லல்களை அவள் சொல்ல ஆரம்பித்தால் விலக்கத்தை என்னால் சுலபப்படுத்த முடியும். நிச்சயம் அப்படி பேசமாட்டாள். அசிரத்தையுடன் யதார்த்தத்தை அவள் முன்வைத்தால் என் மனநிலையை மிக மூர்க்கமாக அது சிதைக்கக்கூடும். வட்டத்திற்குள்ளிருக்கும் சாம்பல்நிற பெண் வடிவத்தைப் பார்த்தபடி நின்றேன். என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் முகப்புப் படம் என்னவாக இருக்கமுடியும்? அவனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி எதுவுமா? நெருக்கமாக ஒட்டி நின்று.. கன்னங்களை உரசிக்கொண்டு.. அப்படித்தான் இருக்கமுடியும்.

அலுவலக அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியில் நரைக்கத் தொடங்கியிருக்கும் கிரிதா மயிரைப் பார்த்தபடி நின்றேன். நிகழ்ந்த அந்த முத்தத்தை அன்று நீட்டியிருக்கவேண்டுமென திடீரென தோன்றியது. ‘பெரிய கண்ணியவான் மயிரு’. டையைத் தளர்த்திக்கொண்டேன். அந்த கடைசிக் குறுஞ்செய்தியை மீண்டும் எடுத்துப் பார்த்தேன் -‘எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..’ அடிநெஞ்சின் நமைச்சல் தொண்டைவரை ஏறியிறங்கியது. காணாத அந்த தற்படத்தை வண்ணங்களால் விரிவாக்கிக்கொண்டே இருந்தேன். அவர்களுடைய முத்தங்களுக்கு தடையின்றி அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் உரிமம் உண்டென ஆமோதித்துத் தலையசைத்துக்கொண்டேன். மறுக்க நினைத்தும் மனக்கண்ணில் மின்னலாக அக்காட்சிகள் வெட்டியபடி இருந்தன. பின்கழுத்துப்பட்டையில் வியர்வை இறங்கியது. வஞ்சிக்கப்பட்ட பாத்திரத்தை ஏன் தூக்கி அலைகிறேன் என்ற கேள்வியின் புகைத்திரை மெல்ல விலகுவதைப் போலிருந்தது. பாவனைகளைத் துறந்திருக்கும் புதியதொரு முகம் கண்ணாடியில் தெரிந்தது. ‘ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?’ என்ற அழுகுரல் எங்கிருந்தோ காதுக்குள் ஒலித்தது.  

***

மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர். இதுவரை வெளிவந்துள்ள படைப்புகள் – நாவல் – பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் – 2019;
சிறுகதைத்தொகுதிகள் – நூறு ரூபிள்கள் – 2020, அநாமதேயக் கதைகள் – 2021, சிருங்காரம் – 2022. தொடர்புக்கு : premamayilan@gmail.com

RELATED ARTICLES

6 COMMENTS

  1. Wow wow wow.. what a writing… மனச சுண்டி இழுக்கும் எழுத்து….

  2. மிக மிக ஆழமான உளவியல் சார்ந்த கதை.ஒவ்வொரு வாக்கியத்தையும் வார்த்தை வார்த்தையாகத்தான் உள்வாங்க வேண்டியிருந்தது. (நடுவில் எழுந்து போய் ஒரு காபி குடித்துவிட்டு வர வேண்டிய அளவிற்கு)அவ்வளவு ஆழமான உரையாடல்கள்.கதையின் போக்கை பாதி கடந்த உடனேயே மூத்த மருத்துவரின் உள்ளக் கிடக்கை புரிந்து விட்டது.மோக முள் யமுனாவின் ’இதற்குத்தானா’என்ற கேள்வியை அவரைப் பார்த்து கேட்க வேண்டும் போல் இருந்தது.எழுத்தாளருக்குப் பாராட்டுகள் அற்புதமானதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்ததற்கு.

  3. காணாத தற்படத்தை வண்ணங்களால் விரிவாக்கிக் கொள்வது போல் படிக்கும் கதைகளின் வார்த்தைகளை வைத்து நமக்கான வண்ணத்தைப் பூசிக் கொள்ளலாம்.

    ஒரு 30+ டாக்டரின் பெண் தோழமை ஆரம்ப கால ‘சின்ன ஹை’ பாதியில் வரும் சண்டை, சமாதானம் இறுதியில் எரிச்சல் மிகு வலி மிகு பிரிதலைச் சொல்லும் கதை.
    அன்றாட அல்லல்களைக் கொட்டும் வெண்ட்டாகத்தான் தன்னை வைத்திருக்கிறாள் என்பது தெரிந்தும் உறவை வெட்டிவிட முடியவில்லை.
    இன்னொரு மனிதன் அவளின் அந்தரந்துக்குள் நுழைந்ததும் உறவு ஒரு முடிவுக்கு வருகிறது.
    முடிந்தவரையில் அவளைக் காயப்படுத்திவிட்டு வார்த்தைகளால் குதறிவிட்டு தன்னை அணுகும் வழிகள் அத்தனையிலிருந்தும் அவளைத் துண்டிக்கிறான்.
    இரண்டு வருடங்கள் அவளுடன் கொண்ட உறவினால் காற்றாய் கரைந்து போய் கவனிக்காமல் விட்ட பணியையும் குடும்பத்தையும் மீட்க முயற்சிக்கிறான். காயம் ஆறிப் பொருக்கு தட்டிவிட்டதாக நம்பும்போது எங்கோ இடித்துக் கிழித்து ரணமாவது போல பிரிந்த உறவின் கசப்பை மனம் அவ்வப்போதுமேலே கொண்டு வரும்.

    ஒரு வாழ்க்கையை, எந்த அலங்காரங்களுமின்றி உணர்வுப்பூர்வமாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தைத் தருகிறது.

    நிரபராதம், ஊழ்த்துணை வரிசையில் நல்லதொரு வாசிப்பனுபவம் தந்த கதையைப் படைத்த மயிலன் சின்னப்பனுக்கு வாழ்த்துகள்.

  4. இதற்கு முன் இப்படியொரு கதையை‌ வாசித்தது இல்லை. இனி உங்களை தொடர்ந்து வாசிக்க ஆவல் கொள்கிறேன். வாசிக்கையில் பல கொந்தளிப்பை தந்தது முடித்த விதமும் அருமை எப்பொழுதும் மறக்க முடியா மீண்டும் மீண்டும் வாசிப்பை கோருகிறது. நன்றி வாழ்த்துக்கள் ????????????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular