ஆதவன் சரவணபவன்
தொழில் நிமிர்த்தம் ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளர் ரா.செந்தில்குமார் பல கதைகளில் தான் பணிபுரியும் நாட்டைக் களமாக வைத்துப் புனைந்துள்ளார். பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பில் எட்டுக்கதைகள் ஜப்பானைக் களமாகக் கொண்டிருக்க மீதி நான்கும் இந்தியா, தமிழ்நாட்டுச் சூழலில் நிகழ்கின்றன.
புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் தனிமை சில கதைகளில் மைய இழையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் நிகழும் இரண்டு கதைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் துயரச் சித்திரமாக இருக்கின்றன. அலட்டலில்லாத மொழி என்பது கச்சிதமான விவரணைகளும் உவமைகளும் தான். தொகுப்பின் அனைத்துக் கதைகளும் வாசகனுக்குச் சோர்வைத்தராத வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.
மலரிலும் மெல்லிது
குணாவின் இரட்டை முகங்களைக் காட்டும் முயற்சியில் கதை பொதுவான மனிதனின் வெளிப்பாட்டுக்கும் உள்ளார்ந்த அகவுணர்ச்சிக்கும் உள்ள முரணைச் சொல்கிறது. அவன் ஷோபா என்ற பெண்ணை விரும்பியிருந்தான். இருவருக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் பரஸ்பரம் பிரிந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் வெறுக்கவில்லை என்பது சில நண்பர்களைத் தவிர மூன்றாவது மனிதருக்கு உணர்த்தும் செய்தி. குணா தன்னிலையில் வெளிப்படுத்திக் கொள்ளாத வெறுப்பும் மலினமான பழிவாங்கும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டவனாக இருக்கிறான். அவளின் மனதைப் பாதிக்கும் வகையில் என்னென்ன செய்யலாம் என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறான். வெளிப்படுத்தாத வெறுப்பு அவனுள் எரித்துக்கொண்டிருக்கிறது. குணாவின் பார்வையில் தன்னிலையில் கதை நகர்வதால் அவளின் எண்ணங்களை வாசகன் கதை சொல்லியின் மூலமே அறிகிறான். குணாவும் பழக்கடைக் குட்டியும் சைமன் என்ற இன்னொரு அறிமுகமில்லாத நபரைச் சந்திக்கிறார்கள். சைமன் போதையில் வந்திருக்கும் அவர்களின் வெருட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். தெரியாத மனிதனின் மேல் ஏன் பயம் ஏற்படவேண்டும் என்ற வார்த்தைகளால் தன்னை ஆசுவாசப்படுத்துகிறான். சைமன் தனது கடந்த காலத்தை விபரிக்கும் போது குணாவின் மனநிலையை வாசகனுக்கு உய்த்தறிய விடப்பட்டிருக்கிறது. மனைவியின் இன்னொருவர் மீதான ஈர்ப்பை இலகுவாக எடுத்துக்கொள்கிறான். சைமனின் பாத்திரம் மிகவும் வலிமையான மனநிலையுடையவனாகவும் நம்பமுடியாத அளவுக்கு நல்லவனாகவும் படைக்கப்பட்டிருப்பதை ஒருவிதமான சந்தேகத்துடன் பார்க்கமுடிகிறது. குணாவும் குட்டியும் அவன் சொல்வதை நம்பினார்களா இல்லையா என்று தெரியவில்லை.
“தெரியாத மனிதன் என்ன பெரிய தீமையை செய்திட முடியும்” என்ற வசனத்தை இரண்டு முறை சைமன் சொல்கிறான். தெரிந்த மனிதர்களால் தாம் படும் வேதனையின் கனதியை விட குறைவாகவே இருக்கும் என்றும் கருத்தாக இன்னொரு பார்வையை இதன் மேல் வைக்கலாம். குணாவின் காதலின் இழப்பை திருமணமாகி குழந்தையுடன் மனைவியை இழக்கும் சைமனின் இழப்பை ஒப்பிடுகிறது. எல்லாமே இழப்பின் வடிவங்கள். இருவரின் எதிர்வினைகளில் தனிமனித புரிதல் வேறுபாடும் இடத்தை அதற்கான சூழலை கணிப்பிட முடிகிறது. வாசிப்பில் அவதானித்த சில நெருடல்களாக, இங்கே இரண்டு பெண்களும் ஏமாற்றுபவர்களாக அல்லது கைவிட்டுப் விலகிச் செல்பவர்களாக இருக்கும் போது தொடர்புடைய இரண்டு ஆண்களும் நல்லவர்களாக, தியாகிகளாக, பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கப்படுவது ஒரு பக்கப் பார்வையாகத் தோன்றுகிறது. காதலியுடனான குணாவின் பிரிவுக்கான காரணத்தை கதையில் கண்டடைய முடியவில்லை.
தானிவத்தாரி
ஜப்பானில் ஆண் உகியுசு குருவி தனது இணையை அழைக்கப்பாடும் பாடல் தானிவத்தாரி. இந்தவிபரத்தை அந்தநாட்டுப் பெண் கஷ்மி, தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலைபார்க்கும் பிரகாஷ்க்கு கூறுகிறாள். இருவரும் நெருக்கமான நண்பர்கள். திருமணம் கடந்த உறவு குறித்து எழும் உரையாடல் அவளின் கடந்த காலத்தை வெளிக் கொண்டு வருகிறது.
ஐந்து வயது மகனையும் கணவனையும் விட்டுப்பிரிந்து சிமுரா என்பவனுடன் பத்து நாட்கள் வாழ்கிறாள். தவறை உணர்ந்து மகனைத் தேடிவந்து விடுகிறாள். ஆனால் இன்னும் சிமுரா அவனின் இனிமையான பாடல்களின் வழி அவளுள் நிறைந்திருக்கிறான். குறியீட்டு உத்தியில் சிமுராவுக்கு ஆண் உகியுசு உருவகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிமுராவின் மனதை ஈர்த்த இசை இன்னும் அவளின் நினைவில் நிற்கிறது. முடிவில் அவள் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்வதை தவித்திருக்கலாம். ஆனால் சிமுரா பாடுவான் என்பதே இறுதியில் அவள் மூலமாகத் திடீரென்று அறிவது எதிர்பார்க்காத திருப்பமாகத் தோன்றுகிறது.
சமூக ஒழுங்கு, புனிதம், பாசம் என்ற கருதுகோள்களைப் புறந்தள்ள முடியாமல் தனது ஆசையை தியாகம் செய்து திரும்பும் கஷ்மி சுற்றியிருப்பவர்களின் பார்வையில் மனம் திருந்தி வந்தவள். ஆனால் அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்திய சிமுராவின் பாடலை இன்னும் துறக்க முடியாது இருக்கிறாள்.
மனதின் நிலைகுலைவும் ஆழமான ஈர்ப்பும் ஏன் கவலையும் கூட இலகுவில் ஒதுக்கித்தள்ள முடியாத உணர்வுகள்.
செர்ரி ஃப்பிளாசம்
வலிந்து திணிக்கப்படடத் தனிமையை அனுபவிக்கும் பெண் சம்யுக்தா. திருமணமாகி அமெரிக்காவில் IT துறையில் வேலை செய்யும் கணவன் வினோத்துடன் வாழ்கிறாள். சம்யுக்தாவுக்கு எதேச்சையாக ஜப்பான் என்ற நாட்டின் மீது ஈர்ப்பு இளமையில் ஏற்பட்டு வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கணவனுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குப் பயணப்படும் போது மூன்று நாட்கள் ஜப்பானில் தங்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
கணவன் வினோத் தனது குடிப் பழக்கத்தால் ஏற்பட்ட உடல்நிலைக் கோளாறை மறைத்ததால் அவள் உடைந்து போகும் நிலை ஜப்பானில் ஏற்படுகிறது.
எதிர்பாராத விளைவை விருப்பத்துடன் பார்த்து அனுபவிக்கக் சென்ற நாட்டில் ஏற்படுவது அவளை நிலைகுலையச் செய்கிறது. கதையின் இந்த எதிர்பார்க்காத திருப்பம் வாசகமனதில் அதிர்ச்சியைக் கொடுக்கும். தனிமை கொடுக்கும் உளவியல் பாதிப்பு ஒன்றில் அதீதமான ஆசையை அல்லது பற்றை வைத்திருக்கும் போது அது கைகளில் கிடைக்கையில் நிகழும் இன்னொரு பேரிழப்பு அதை இரசிக்க முடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்துகிறது. கிடைத்ததற்கும் இழந்ததற்கும் இடையில் ஏற்படும் சமநிலை வழுவல்.
அனுபவ பாத்தியம்
ஆண்டாண்டு காலமாகப் பெரும் நிலப்பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் குடும்பம். நிகழ்காலத்தில் அவற்றை விற்று தமது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல நிலங்கள் பராமரிப்பவர்கள் வசம் சென்று விடுகின்றன. அவர்களும் குத்தகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். மறுபடியும் நிலங்களை கையகப்படுத்தும் எத்தனத்தில் உரிமையாளர்கள். மூன்று சகோதரர்களும் தமக்கான பங்கை எடுத்துக்கொள்ள தற்போதைய நிலங்களை வைத்திருப்போருடன் பேசிப்பார்க்கும் களம். கடந்தகாலத்தின் முன்னைய தலைமுறையின் செழுமையான பக்கங்களை மீட்பதுடன், நிகழ்காலத் துயரங்கள் கையாலாகாத்தனங்களையும் கதை வெளிப்படுத்துகிறது. பழைய பெருமைகளை நினைத்து ஏங்கும் சகோதரர்கள் அவற்றைப்பற்றி பெருமை பேசுவதை தவிர வேறொன்றும் ஆகப்போவதில்லை என்ற கட்டத்தில் இருக்கிறார்கள். இன்றைய தமிழர்களின் கடந்தகாலப் பெருமை பேசும் குணத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிஜத்தில் அவை ஆவணமாகலாமே தவிர பயனற்ற ஒன்று என்ற தெளிவைக் கொடுக்கும். இலக்கியம், கட்டுமானம், தொழில்நுட்பம், கலை, மொழி போல எந்தத் துறையிலும் புத்தாக்கம் இல்லாத மனிதர்கள், சமூகம் பின்னோக்கி நகர்கிறது. நவீன உலகில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கப் பழமையை பற்றிக்கொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை உதறியெறிய வேண்டியது காலத்தின் தேவை. நகரமயமாக்கலில் இழந்த இயற்கையோடிணைந்த வாழ்க்கையின் ஏக்கங்கள் அகலாமல் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தற்காலச் சூழல் இருத்தலின் தேவையை மறுதலிப்பதை அவ்வளவு இலகுவில் பொதுவான மனித மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இசுமியின் நறுமணம்
தொகுப்பின் தலைப்புக் கதை. ஒரு இந்தியனுடன் சகஜமாக மது அருந்திக் கொண்டிருக்கும் ஜப்பானியர்களின் உரையாடல். அவனுடைய அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஜப்பானின் சில கலாச்சாரக் கூறுகள் வருகின்றன. சற்று விரசமான நகைச்சுவை உரையாடலாக ஆரம்பம் முதல் இறுதிவரை தொடரும். ஆண்களின் உலகில் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் தன்மையும் பெண்கள் பற்றிய தாம்பத்திய உறவு பற்றிய உரையாடல் கிளர்ச்சியூட்டுவதாக நிகழ்கிறது.
அவர்களில் வயசான கோபயாஷி உரையாடலின் தொடக்கம் முதல் கலகலப்பாக இருந்தார். போதை அதிகமாக அவரின் ஆள் மனத்தில் இருந்து கேள்வியொன்றை எழுப்புகிறார். இசுமி என்ற கவர்ச்சியான பெண் அவர்களுடன் வேலை செய்பவள். அவளில் இருந்து வெளிவரும் நறுமணம் எப்படியானது என்று ஆராய முற்படுகிறார்.
தனது அனுபவத்தில் அந்த நறுமணம் வெளிப்படும் சந்தர்ப்பங்களை நினைவுபடுத்துகிறார். தன்னைக் கேலிசெய்யும் நண்பர்களை பொருட்படுத்தவில்லை. தாயின் அன்பையும் மகளின் மேலான பாசத்தையும் தந்த நறுமணம் என்று மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் இறுதிப் பந்தி உச்சத்தை தொடுகிறது. கதையோட்டம் அருமையாக இருந்தாலும் கதையில் ஆழமான பார்வையென்று ஒரு தரிசனத்தை எழுத்தாளர் காட்டவில்லையென்று தோன்றுகிறது.
தங்களுடன் பணிபுரியும் இந்திய ஊழியருடன் ஜப்பானியர் மிகவும் அன்னியோன்னியமாக இருப்பதாகக் காட்டுவது செயற்கையாக தெரிகிறது. பொதுவில் ஜப்பானியர்கள் பண்பாகப் பழகுவார்கள். ஆனால் விதிவிலக்குகள் இருக்கும். அதை வெளிப்படுத்தாத போது இயல்பாக ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டில் வேலை செய்பவர்கள் வெளிப்படையாக அந்த நாட்டில் தமக்கு நிகழும் விரும்பத்தகாத வெறுப்பை ஏற்படுத்தும் சம்பவங்களை பாதுகாப்பாக மறைத்துக் கொள்வது ஒரு உத்தியாக வைத்திருப்பார்கள். பொதுவாக இறுக்கமான சட்டங்கள் இருக்கும் நாட்டில் தொல்லைகளைத் தவிர்க்க இந்தவழி உதவலாம்.
அன்பும் அறனும் உடைத்தாயின்
இது தொகுப்பில் உள்ள பக்க அளவில் குறைவான கதை. எதேச்சையாகச் சந்தித்த சிவா என்ற மனிதன் கதைசொல்லிக்கு நண்பனாகிறான். அந்தச் சந்திப்பு ஒரு தற்கொலையால் நிகழ்கிறது. தொடருந்துக்கு முன் பாய்ந்து ஒருவன் இறந்ததால் பயணம் தாமதமாகும் போது இருவரும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது.
வேலை நிமிர்த்தமான பிரச்சினைகள் மனவழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். ஆன்மீக நம்பிக்கை இந்த மாதிரி மனநிலையை குறைக்க உதவும். என்று நேர்மறையான கலந்துரையாடல் மூலம் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். இருந்தும் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி சிவாவுக்கு இருப்பதை அவனின் பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது. சிவாவின் முடிவுக்கான காரணம் என்னவென்று வெளிப்படுத்தாமல் வாசகத்திறப்புடன் முடிகிறது கதை. சில குறியீடுகள் அன்பின் ஏக்கத்தைக் காட்டுகின்றன.
மனிதமனம் பணத்தை துரத்தும் நிலையிலும் அடிப்படையில் அன்பின் தவிப்பில், ஏக்கத்தில் இருக்கும். பிரிவுத்துயர் அவனாக ஏற்படுத்தியதே. அதைச் சரிசெய்ய முடியாத கோழையா என்ற சந்தேகம் எழுகிறது. நாகரீக உலகம் இன்னொரு நாட்டுக்குப் போய் வேலைசெய்து பிழைக்கும் கட்டாயத்தைத் திணித்திருக்கிறது. திருமணத்தை வெறுத்து தனக்கான வெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கதைசொல்லியின் முடிவை நியாயப்படுத்தும் பிரதியாக வாசிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் குடும்பமாக இருப்பவர்கள் எல்லோரும் அதை சுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தக் கோணத்தில் கதையின் முடிவில் வரும் வயோதிக இணையர்கள் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
கனவுகளில் தொடர்பவள்
இசுமி என்ற பெண் அவளின் கோலே பிராண்ட் வாசம் இவை இரண்டையும் ஏற்கனவே இசுமியின் நறுமணம் என்ற தலைப்புக் கதையின் சாயலுடன் உள்வாங்கியிருந்த ஆசிரியர் இந்தக் கதையிலும் அதேபெயரில் ஒரு பெண் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.
அவளின் வாழ்க்கை விசித்திரமானதும் சீரற்றும் இருக்கிறது. அடுத்தடுத்து பல ஆண் நண்பர்களை காதலித்தும் பிரிந்தும் கலங்குபவள். அதற்கான காரணங்களை வைத்திருக்கிறாள். தனக்கான சுதந்திரம் மறுக்கப்படும்போது அந்த உறவை உதறித் தள்ளிவிடும் ஒருத்தி. திகில் தன்மையை கதையில் புகுத்தி கடைசியில் எதிர்பார்க்காத திருப்பம் வருகிறது. ஆவலுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் பின் மூன்று மாதங்கள் தொடர்பில்லாமல் இருக்கிறான் கதைசொல்லி. மது அருந்தும் பாரில் அவளின் துயரமான முடிவை அறிகிறான். கதைசொல்லியின் பார்வையில் அவளை சந்திக்கவேண்டும் என்ற ஏக்கத்தில் அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கொண்டு திரியும் சற்று பிறழ்வான மனநிலையை மறைமுகமாக உணர்த்த முனைகிறது. அவளைப்பற்றிய மர்மத்தை கதையில் வெளிப்படையாக சொல்லாமல் விட்டிருப்பது வாசகருக்கான இடைவெளியாகத் தெரிகிறது.
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
அறமெனப்படுவது மாசில்லாத மனம் என்று திருக்குறள் வரையறுக்கிறது. இங்கே வாழ்ந்து கெட்ட நவநீதம்பிள்ளை குடும்பம் கடைசி ஆதாரமான பூர்வீக வீட்டை இழக்கிறது. தொடக்கத்தில் தருகின்ற சிதிலமான வீட்டின் விவரணை அதன் பழமையையும் செழிப்பான கடந்த காலத்தையும் நினைவுபடுத்தத் தவறவில்லை. அவரது பணத்தை காரோட்டி திருடிவிடுகிறான். பணத்தை திருடிய சாமிநாதனை ஏன் நவநீதம் பிள்ளை சட்டத்தின் முன் நிறுத்த முனையவில்லை? அவருக்கு அதற்கான வலிமையில்லையா? திருடியதற்கான ஆதாரம் இல்லையா? என்ற கேள்விகள் பணத்தைக் கேட்டு சென்ற நவநீதம்பிள்ளை கலங்கிய போது ஏற்பட்டது. அந்தப்பணத்தை வைத்து கடனை அடைக்க முடியும் என்று நம்பிய நவநீதம்பிள்ளை அது நிறைவேறாமல் இருப்பவற்றை இழக்க வேண்டிவருகிறது. பணிவான வேலைக்காரனாக இருந்த சாமிநாதன் குணம் மாறுகிறது. விரைவில் பெரும் பணக்காரனாக அந்த ஊரில் பல வீடுகளை வாங்கி விட்டான். வேலையாளிகளுக்கு முதலாளியின் மேல் இருக்கும் அன்பும் பணிவும் முற்றுமுழுதான இயல்பல்ல. சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருடவும் துணியும் பேராசைக்காரராக மாறுவது மனித இயல்பு. அறமின்றி சேர்த்த பொருளால் சாமிநாதன் குடும்பத்தில் நிகழும் இழப்புகள் அவனைப் படுக்கையில் போடுகிறது என்ற பார்வையில் கதை சென்று முடியும். இருந்தும் சாமிநாதன் மாறவில்லை. அவன் அறமற்றவன் என்ற தீர்க்கமான முடிவை ஆசிரியர் எடுத்திருக்கிறார். இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால் நவநீதம்பிள்ளையின் தந்தை நியாயமாக வாழ்ந்த மனிதர். அவர் அறவழியில் வாழ்ந்து சேர்த்த சொத்துக்களை மகன் ஊதாரித்தனமாக செலவு செய்து இழக்கிறான். கடைசியில் ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு அவனின் திட்டமிடல் இன்மையை சொல்வது ஒரு பார்வை. ஆனால் சாமிநாதனின் இழப்புகளுக்கு அவனின் அறமற்ற குணம் என்று சொல்வது இன்னொரு பார்வை. இங்கே இரட்டை நிலைப்பாட்டை வாசகன் புரிந்து கொள்ளும் போது குழப்பம் வருகிறது. அறமுடன் வாழ்ந்தாலும் இழப்பு வரும். அறமற்று வாழ்ந்தாலும் இழப்பு வரும் என்றால் எது உண்மை? நல்லவர்களைத்தான் இறைவன் சோதிப்பான் என்று எடுத்துக்கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை.
நவநீதம் பிள்ளையின் அறமற்ற வாழ்க்கையை கதை வெளிப்படுத்தத் தவறிவிட்டதோ என்ற சந்தேகம் பிரதிமீதான ஒற்றைப்படைத் தன்மையை ஏற்படுத்துகிறது.
மயக்குறு மக்கள்
தொகுப்பிலுள்ள மற்ற இரண்டு தமிழ்நாட்டுக் களங்கள் போலவே வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மாந்தர்களின் கதை. ஆனால் இழந்தவைகளை விட்டு படித்து ஜப்பானில் வேலை பார்க்கும் ராஜா என்ற கதை சொல்லி தனது தாயைத் தேடுவதில் தொடங்குகிறது. தாய் ஊரிலிருந்து மூன்று மாதம் தற்காலிக விசாவில் அங்கே அவனுடன் தங்கியிருக்கிறார். அவரைத்தேடி காவல்துறைக்கும் தகவலைத் தெரிவித்து விடுகிறான். அடுத்த நாள் தாயார் தலைமைக் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. தாயை காவல் துறை கைது செய்ததற்கான காரணம் புரிந்து கொள்ளமுடியாதது. அது அவரை அறியாமல் செய்த தவறு. இயல்பாகவே தாயாருக்கு குழந்தைகள் மேல் இருக்கும் பிரியத்தின் வெளிப்பாடாக கதை முடிகிறது. கணவனைப் பிரிந்த இழப்பும் மகனின் விவாகரத்தும் வெகுவாகப் பாதித்தால் ஏற்படும் பிறழ்வில் தன்னை மறந்து ஆழ்மனத்தின் ஆசையை தீர்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் மேல் தாயின் அதீதமான அன்பை எடுத்துக்காட்டும் கதை. அடிக்கடி பூசையறையில் அமர்ந்து அழுது தன்னை ஆற்றுப்படுத்தும் தாயை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் மகன் இறுதியில் என்ன செய்யப்போகிறான் என்ற கேள்வியைத் கேட்க வைத்திருக்கிறது.
மடத்து வீடு
ஆற்றங் கரையோரம் அமைந்த பழைய காலத்து வீடு. அதன் சிதிலமான வடிவத்தை விவரித்துத் தொடங்கும் கதை தற்போது அங்கே வசிக்கும் சீனிவாசராவ் என்ற மனிதரையும் அவரின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் தெளிவாக்குகிறது. பரம்பரையாக வந்து இப்போது இருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் இந்த வீட்டை தர்மத்துக்கு எழுதிவைத்திருந்தாலும் தமது காரியதரிசியாக வேலை பார்த்த சீனிவாசராவுக்கு அவரின் வறுமை கருதி குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.
அவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. மனைவி இறந்து விட்டார். மூன்று மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கதைசொல்லி அந்த ஊரைச் சேர்ந்தவன். அந்த வீட்டுக்கு தனது நண்பன் அருணுடன் செல்கிறான். அருணின் நண்பனும் கூடச்சென்று சீனிவாசராவின் இளைய மகள்கள் இருவருடனும் பேசுவதாக வரும். பெண்களுடன் பேசும் இரட்டை அர்த்த வார்த்தைகளை அவர்களும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் தான் பெண்கள் அதை எவ்வாறான மனநிலையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற மர்மம் துலங்குகிறது. நடத்தையின் விளைவு யாரால் யாருக்கு நிகழ்கிறது என்பதைப் பொறுத்து நல்லதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் அமையும். பெண்கள் என்றாலே அலைபாயும் மனதுடன் தான் சராசரி ஆண்கள் இருப்பார்கள் என்று ஒருபார்வையை வைத்தாலும் சிலர் சுதாரித்துக் கொள்கிறார்கள். அலைபாயும் மனதுக்கு வயது வேறுபாடு கிடையாது.
சிபுயா கிராஸிங்
சிபுயா கிராஸிங் என்ற சந்தியில் தொடங்கும் கதையில் அடிக்கடி பூட்டிய கதவைச் சரிபார்க்கும் பெண்ணை ரிக்கு முன்வீட்டில் காண்கிறான்.
சிபுயா கிராஸிங் சந்தி ஜப்பானில் பிரபலமானது. நாளாந்தம் பல மனிதர்கள் அந்த வீதிக்கடவைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் பார்வை தன்மேல் படுவதாக கற்பனை செய்கிறான் ரிக்கு. மனிதர்கள் தம்மைச் சுற்றி வைத்திருக்கும் வட்டத்தைப் பார்த்ததும் வெறுப்பும் கவலையும் அவனை ஆட்கொள்கிறது. இன்னொரு புறம் யுகிகோ தனது அழகில் பெருமைப்பட்டாலும் சூழ்நிலை உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். அதுவே அவளின் அடையாளமாக மாறும் போது அவள் தனது உடலை மூடி மறைந்து வாழத் தலைப்பட்டாள். இரண்டு வெவ்வேறு மனவோட்டங்களும் சேவை என்ற புள்ளியில் சந்திக்கும் இடம் சுயத்தை விலக்கிய மனிதநேயத்தின் உன்னதத்தை அடைகிறது. தொகுப்பில் என்னை மிகவும் சிந்திக்கத்தூண்டிய கதை. பல குறியீடுகளாக வாசக அனுபவத்தை விசாலப்படுத்தும் நுட்பங்கள் நிறைந்த படைப்பு.
நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்
சியாம் ரயில் பாதையில் இறந்த மனிதர்களை நினைவுபடுத்தும் பழைய கதை ஜீவனந்தத்தின் தந்தையுடையது. கதை சொல்லி ராம் இந்தப் பின்புலத்தை அறிவதுடன் ஜீவானந்தம் ஏன் கூட்டத்தில் சட்டென்று கோபமடைந்தார் என்ற காரணம் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
உண்மையில் வெளிப்பார்வையில் அன்பான மனிதர்கள் என்றோ நிகழ்ந்த கொடுமையை நினைத்து வன்மத்தைக் காவுபவர்களாகவும் அவ்வப்போது அவர்களை அறியாமலே அது வெளிப்படும். இரண்டாம் உலகப்போர்க் காலத்துத் தகவல்கள் பலவற்றை தந்தையின் கடந்த காலத் துயர் நிறைந்த வாழ்க்கையினூடு சொல்கிறார் ஜீவானந்தம்.
வாசிப்பில் சில மயக்கங்கள் எழுந்தன. ராமின் ஜப்பானிய அதிகாரி திக்குவாயாக பேசியது ஏன் ஜீவானந்தத்தின் தந்தையை அவருக்கு நினைவுபடுத்தியது என்ற காரணத்தை கண்டடைய முடியவில்லை. ஜப்பானியர்களின் மேலான வெறுப்பில் ஜீவானந்தம் அப்படி நடந்து கொண்டிருப்பதற்கான காரணமாக திக்கி பேசியது அமைந்தது என்ற முடிவு குழப்பத்தைத் தரலாம். ஜீவானந்தம் தந்தையின் மூலம் அவரின் வலியை உணர்ந்தது என்ற பகுதி ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக சொல்லியிருப்பது ஜீவானந்தத்தின் உணர்வுகளுடன் வாசகனை நெருக்கமாக அழைத்துச் செல்லவில்லை.
***
ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com


