Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்

மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்

தூயன்

(அறிவியல் புனைகதை)

மூன்று பள்ளித் தோழிகளும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிற அன்று, ஏலாம்பூரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு முதன் முதலாக ஒரே சமயத்தில் வந்து சேர்ந்த அனுபவத்தை, அவர்கள் அடிக்கடி அமர்கிற பன்னீர் மரத்தடிக்குக் கீழே நினைவுகூர்ந்தார்கள். பள்ளியின் வாயிலுக்கு வேறு வேறு இடங்களிலிருந்து அவசரமும் நிதானமும் தாமதமாகவுமாய் மூவரும் பத்து வருடங்களுக்கு முன்பு வந்து நின்றபோது சரியாக மணி ஒன்பது பதினைந்து. அந்தக் கணம் இத்தனை வருடத்தில் அவர்களுக்குள் காலப்பிரக்ஞையை அன்றாடத்திலிருந்து அழித்துவிட்டிருப்பது பிரமிப்பாக இருந்தது. தோழிகள் எப்போதெல்லாம் தங்கள் நட்பை நினைவுகூர்கிறார்களோ அப்போதெல்லாம் அந்த ஒன்பது பதினைந்து மணித் துளியில் நடந்த அற்புதம் அவர்களுக்கு ஞாபகத்தில் உதிக்கும். உனக்கு அந்த மஞ்சள் கவுன் பொருத்தமாகவே இல்ல என்றும் ஏன் நீ அன்றைக்கு அப்படி பச்சைக்குப் பச்சைனு வந்த என்றும் ஒருத்தரையொருத்தர் சீண்டிக்கொள்வது வழக்கம். அந்தச் சந்திப்பை நினைவுகூறும்போதெல்லாம் எப்போதுமே அது சண்டையில்தான் முடியும். ஆனால் அந்தச் சண்டைதான் ஒருத்தரையொருத்தர் அதிக அன்யோன்யத்திற்குள் ஈர்க்கிறது என்கிற உண்மையை ஒவ்வொரு முறை அந்த ஒன்பது பதினைந்தைப் பேசி முடிக்கிறபோது அவதானித்தார்கள். அந்த மணித்துளிபோல எத்தனையோ தருணங்களை வேறு வேறு சந்தரப்பங்கள் அமைத்துக்கொடுத்தாலும் அந்தக் கணத்தைப் போன்று எதுவும் மந்திரம்போல உள்ளுக்குள் உருளவில்லை. உண்மையில் சந்திக்கிற கணம் யாரோ உருட்டுகிற பகடையில் விழுகிற புள்ளிகள்தானெனத் தோன்றும். 

இப்போது மூவரையும் அதே போன்ற இன்னொரு கணம் தனித்தனியாக அவரவர் இடத்திற்கு அனுப்பத் தயாராக இருக்கிறது. பிரிவை எதிர்கொள்ள மூவருக்கும் தைரியம் போதவில்லை. நாளை, நாளை மறுநாள், அதற்கடுத்தநாள் என்று பள்ளிநாள் முடிந்ததிலிருந்து அந்தக் கணத்தைத் தள்ளிப் போட்டு வந்தார்கள். ஒருகட்டத்தில் இப்படி ஓடியொளிவது ஏமாற்றுத்தனம், இத்துடன் இதை நிறுத்திவிடலாமென முடிவெடுத்தார்கள். நாளைக் காலை ஒன்பது பதினைந்துக்கு மூவரும் கிளம்பலாம் என்று ஒருத்தி யோசனைச் சொன்னாள். அதை மற்றொருத்தி சம்மதித்தாள். ஆனால் இன்னொருத்தி வேண்டாம் அது நம்முடைய மந்திரக் கணமான பத்து வருடத்துக்கு முந்தைய ஒன்பது பதினைந்தை அழித்துவிடப் போகிறது, அதனால் வேறொரு நேரத்தைக் குறிக்கலாம் என்றாள். அதுவும் சரிதான். மூவரும் அன்று மாலை ஐந்து மணியை அதற்கான தருணமாகத் தேர்வு செய்தார்கள். 

நேரத்தை முடிவு செய்து அடுத்தக் கணத்திலிருந்து அது அதற்காகவே தயாராக இருப்பதுபோல பொழுது அவ்வளவு சீக்கிரம் ஓடத் தொடங்கியது. காலை விறுவிறுவென விடைப் பெற்றது. பின்மதியத்தில் அழகானத் தூறல் சற்று நிம்மதியளித்தது. இரவுக்காக பவளமல்லிகள் மொட்டவிழத் தயாராகின. இன்னும் சில கணங்களில் அவர்கள் விடைபெறப்போவது நிச்சயம். அதற்கான மணித்துளி அவர்களை நோக்கி ஓடி வருகிறது. அது மூவரையும் பிரித்துவிட்டுக் கண்ணிலிருந்து மறைந்துவிடும். அப்படி நினைக்கையில் மூவருக்கும் சட்டென கண்ணில் நீர் தட்டிற்று. பள்ளித் தோழிகள் இப்படி சவக்களையுடன் வளாகத்தில் திரிவதைக் காணச் சகிக்கவில்லை. ஒருத்தி இன்னொருத்தியை உப்பு மூட்டையாகச் சுமந்தாள். பிறகு மடியில் படுத்தவாறு ஆசிரியர்களைப் பற்றிய அந்தரங்கக் கதைகளை அளந்தாள். தாங்கள் நடத்த நினைத்தப் பாடப்பகுதிகளைச் சொல்லிச் சிரித்தார்கள். பிறகு எதுவும் பேச வேண்டாம் பேச்சும் சத்தமும் சீக்கிரமாக காலத்தைக் கடத்தும் மௌனமாக இருப்போம் என்றாள் ஒருத்தி. அப்போது ஒருத்தி கேட்டாள், எல்லோருக்கும் நடக்கிறதைப்போல இந்தப் பிரிவுக் கணம் காணாமல் போய் ஏங்குவதாக இருக்க வேண்டாம். மறுபடியும் நாம் ஒன்றாக இருக்க வழியைக் கண்டுபிடிக்கலாமா?”

”பிரிவைத் தவிர்க்க முடியாது. நம்முடைய புதிய வாழ்க்கைக்கு நுழையத்தான் வேண்டும். மூன்றுபேரும் வெவ்வேறு இடங்களுக்குப் போகப் போகிறோம், இவ்வளவு பெரிய நகரத்தின் ஜனநெருக்கடிக்குள் தொலைவது தவிர்க்க முடியாதது” என்றாள் ஒருத்தி. அதற்கு அவள், “நம்முடைய முதல் சந்திப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிர்பாராத திட்டமிடலுடன் நடந்ததோ, அதுபோல இன்னொரு தருணம் அமைகிறதா என்று பார்க்கலாமா?” அவள் அப்படிச் சொன்னதும் மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். 

”அதாவது, நம் சந்திப்பைக் காலத்திடம் கையளிக்கலாம். ஒப்பந்தம் ஒன்று போட்டுக்கலாம். எப்படியென்றால், மூவரும் மூன்று வெவ்வேறு இரயில்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். நகரத்தின் இந்த மத்தியப் பகுதிக்கு வருவதற்கு இரயிலை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் இல்லையா? மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறவள் பறக்கும் இரயிலிலும், இன்னொருத்தி நிலத்தில் ஓடும் மின்சார இரயிலும், நிலத்தடி நகரத்தைச் சேர்ந்த மூன்றாமவளான நான் ஹாலோ இரயிலிலும் புறப்படுவதுதான் அந்தத் திட்டம். எப்படி இருக்கிறது?” என்று மற்றவர்களைப் பார்த்து ஆர்வமாகக் கேட்டாள். இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. முகம் வேறு சோர்ந்துவிட்டது. புரிந்துகொள்கிற மனநிலையும் அப்போது இல்லை. திட்டத்தைச் சொன்னவள் தொடர்ந்தாள். ”மூன்று பேரும் ஒரு ஆல்ஃபா கடிகாரத்தை வாங்கிக்கொள்வோம். அதை எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். ஆல்ஃபாவின் இயக்கம் தெரியுமில்லையா. அது ஜிபிஎஸ் மாதிரி, எந்த இடத்தில் அதன் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்கள் முடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறதோ மறுபடியும் அதே இடத்துக்கு வரும்போதுதான் அது இயங்கும். அதாவது, அந்த மூன்று அணுக்களையும் மூன்று பேரும் அவரவர் கடிகாரங்களில் குலைக்கப் போகிறோம். செயற்கையானக் கதிரியக்கப் பிளவு மாதிரி. உன்னுடையதில் எலக்ட்ரானை நிறுத்தினால் அவளுடையதில் புரோட்டான் என்னுடையதில் நியூட்ரான் தடங்கள். என்ன சரியா?”. இருவரும் தெரியும் தெரியும் வகுப்பெடுக்காதே என அவளை நிறுத்தினார்கள். அவள் சிரித்தவாறே பேசத் தொடங்கினாள். ”நாம் மூவரும் கிளம்பும்போது கடிகாரத்திலுள்ள முடுக்கத்தை நிறுத்திவிடுவோம். அதற்கு அது ஒரு சமிக்ஞையை அறிவிக்கும். அதாவது கடிகாரம் ஓடாமல் நின்றுவிடும். பிறகு நம்முடைய இந்த மூன்று இரயில் பயணங்களும் எப்போது ஒரே சமயத்தில் ஒரே புள்ளியில் கடக்குதோ அதாவது நாம் நகரத்தின் இந்த மத்தியப் பகுதிக்கோ அல்லது நகரத்தின் வேறு எங்கு பயணிக்கும்போது ஆல்ஃபா கடிகாரம் மறுபடியும் இயங்கும். அப்போது அது நமக்கு மறுசமீக்ஞையை காட்டும். அந்தக் கணத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இரயிலை நிறுத்த வேண்டும். அந்த இடம்தான் காலம் நம் சந்திப்பைத் திருப்பியளிக்கிற சந்தர்ப்பம்.”

”இது எப்படி பத்து வருடங்களுக்கு முன்பு இயல்பாக அமைந்த நம்முடைய சந்திப்புத் தருணம் போல இருக்கும்?”

”நல்ல கேள்விதான். உண்மையில் பத்து வருடங்களுக்கு முன்பு நாம் இந்த பள்ளிக்கு வரும்போது யாரையோ சந்திக்கப் போகிறோம், அதாவது பள்ளி என்கிற அனுபவத்தைத் தொடப் போகிற எதிர்பார்ப்புடன்தானே வந்தோம். அப்போது நமக்கு இந்த நுழைவாயில் ஒரு கடிகாரத்தின் அலாரம் மாதிரி செயல்பட்டதை நாம்தான் கவனிக்கவில்லை. இந்த இடம் நமது தனித்தனிப் பயணத்தின் திட்டமிடப்படாத சென்றடைகிற இடமாக இருந்திருக்க வேண்டும். நாம்தான் காலத்தின் இயக்கத்தை அறிந்திருக்கவில்லை. அப்போது நமக்கு அதுபற்றிய அறிவும் இருந்திருக்காது”

நிலத்தடி நகரத்தைச் சேர்ந்தவள் கேட்டாள், ”அப்படியானால் இப்போது நீ சொன்ன திட்டப்படி, காலத்தை நாம் வளைக்கிறோமா?”. அதற்கு மலைவாசலைச் சேர்ந்தவள் சொன்னாள் “இல்லை. காலத்தைக் கவனிக்கப் போகிறோம்.”. மூன்றாமவள் இரண்டையும் மறுத்து, “இல்லை காலத்திடம்தான் நாம் கையளிக்கிறோம். அதாவது, கண்ணுக்குப் புலனாகாத அதன் இயக்க வரிசைக்குள் ஒரு சிறு பிழையை நாமாக ஏற்படுத்தி மறுபடியும் அது சரியாகிற சந்தர்ப்பத்திற்குத் திரும்புகிறோம். அதாவது, மின்னல் மோதி அது இன்னொரு பொருளைத் தாக்குவதற்குள் அந்தப் பொருள் இன்னொரு மின்னல் விசையால் தள்ளிப் போவது மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது சூத்திரம் மாதிரி. நாம ஏன் இந்தச் சூத்திர விளக்கத்துக்குள் போக வேண்டும்?. இப்படி சொல்லாமல் வேறுமாதிரி இதைப் புரிந்துகொள்ளலாம். தவறவிடக் கூடாத தருணம் ஒன்று நம் மூவருக்குமிடையே இருக்கும். அதைப் பிடித்துவிடுவதற்குத்தான் இந்த வழி.”

மூவரும் உடனே ஏலாம்பூரின் பழமையான அருங்காட்சியகத்திற்கருகே உள்ள பௌதிக ஆய்கவத்திற்குச் சென்றார்கள். ஆல்ஃபா இயக்கம் உள்ள கடிகாரம் மூன்றை வாங்கினார்கள். ஒருத்தி இன்னொருத்திக்குப் பிடித்த நிறத்தை அவளுக்காக வாங்க வேண்டும் (எல்லா சின்னஞ்சிறிய விசயங்களிலும் இதுபோல விளையாட்டு நடக்கும்). மஞ்சள், நீலப்பச்சை, வெள்ளை. ஒவ்வொருத்தியும் தங்களுக்குப் பிடித்த நிறத்தை மற்றவர்களுக்குள் மாற்றிக்கொண்டார்கள். மணி ஐந்து முப்பது ஆவதற்கு பதினைந்து நிமிடங்கள் எனக் காட்டியது. இப்போது மூவரும் அழவில்லை. பதற்றமும் பயமுமாக நின்றார்கள். இந்த உலகம் அவர்களைச் சுற்றி அவ்வளவு வேகமாகச் சுழல்கிறது. அதன் வேகத்துக்குள் எப்படியும் ஓர் இயக்கம் நிலைகுலைந்து அவர்களுக்கானதைக் காட்டும் என்று நம்பினார்கள். ஒருத்தரையொருத்தர் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக்கொண்டு ஆல்ஃபா கடிகாரத்தின் இயக்கத்தை நிறுத்தவிட்டு, ஏலாம்பூரின் இரயில் நிலையம் நோக்கி ஓடினார்கள். 

நகரத்தில் இதுபோன்று மூன்று திசைக்குரிய இரயில்களுக்கான நடைமேடைகள் ஏலாம்பூர் இரயில் நிலையத்தில் மட்டும் உண்டு. தனித்தனியான வரிசை மூன்று வழித்தடங்களுக்கு. மூவரும் மூன்று தடங்களுக்கான வரிசையில் போய் நின்றதும் ஒருத்தி மற்றொருத்தி தெரிகிறாளா என்று எக்கினார்கள். ஒருத்திக்கு இன்னொருத்தி தெரிகிறாள் இன்னொருத்தி மறைகிறாள். ஆனால் மூவரும் கனிணித் திரையில் நிற்பது தோன்றுகிறது. இந்த உலகமே நம்மளைத்தான் கவனிக்கிறதென்று ஓவெனக் கூச்சலிட்டார்கள். பயணச் சீட்டுடன் ஐந்து மணிக்கான தொடர் வண்டிக்குக் காத்திருந்த சமயம், சொல்லி வைத்தாற்போல மூன்று பேரும் புறப்படுவதற்கான இரயில்கள் வந்து நின்றன. நகரும் படிக்கட்டுகள் வழியாக ஒருத்தி மேலேயும் இரண்டாமவள் கீழேயும் மூன்றாமவள் நேராகவும் இரயிலை அடைந்தார்கள். இரயில் மூன்று வெவ்வேறு திசைகளில் கிளம்பிற்று. அடுத்த கணமே ஆல்ஃபா கடிகாரத்தின் முற்களைக் கவனித்தார்கள். அது முன்னமே அதன் இயக்கப் புள்ளியிலிருந்து விலகி மூன்று கோணங்களில் அதன் முற்களை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டிருந்தது. 

கல்லூரிப் படிப்பு நல்லபடியாக மூவருக்கும் முடிந்தது. அங்கு அவர்களுக்கு புதுப் புது நட்புகள் அமைந்தன. ஆனாலும் பழைய நட்பை எல்லோரையும் போலவே அவர்களால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. ஆல்ஃபா கடிகாரம் காலத்தின் சாட்சியாய் தங்களுக்காக ஓடக் காத்திருக்கிறதென புதியத் தோழிகளிடம் பரிமாறிக்கொண்டார்கள். படிப்பு முடிந்த கையோடு மூவரும் வேலைத் தேட ஆரம்பிக்கையில் இரண்டொரு முறை ஏலாம்பூர் மத்திய நிலையத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிட்டியது. எந்த வேலையாக இருந்தாலும் அது ஏலாம்பூரை நோக்கி இருக்க வேண்டுமென விரும்பினார்கள். நகரத்தின் சமதளத்தில் வசிக்கிறவளுக்கு மின்சார இரயிலில் வேலை கிடைத்தது. சமீப காலமாக அரசாங்கம் மின்சார சேவையை நிறுத்துகிற முடிவை எடுத்திருந்தது. ஆனால் நகரத்தின் புராதனப் பற்றாளர்கள் அதை நிறுத்த வேண்டாம் நினைவோடையில் அதன் ஓட்டம் நிற்பதாக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. தயவு செய்து அது ஓடட்டும் விடுங்கள் என்றதும் மீண்டும் அதன் சேவை ஜனக்கூட்டமில்லாமல் தொடர்கிறது. உண்மையில் அவளுக்கும் இதில் வேலை செய்வது பிடித்திருக்கிறது. எப்படியாவது மூவரும் சந்திக்கிற புள்ளியைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்பதற்காகவே என்றைக்காவது நிற்கப் போகிற வேலையைக் கேட்டு வாங்கினாள். 

ஆனால், மலைவாசல் தளத்தில் வசிக்கிறவளுக்கு சமதளத்திற்குத் திரும்புகிற சந்தர்ப்பங்கள் காலப்போக்கில் குறைய ஆரம்பித்தது. அதாவது, நகரத்தின் அத்தனை தேவைகளும் மலைவாசலுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. இன்னும் புதிய மலைவாசல்களை அரசு தயார் பண்ணிக்கொண்டிருக்கின்றது. செயற்கை நீரூற்றுகள், செல்லப்பிராணிகள், நைட்ரஜன் மழை என அதன் கட்டுமானத் திறனுக்கு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நிறைய சவால்கள் காத்திருந்தன. நகரத்தின் மத்தியிலோ அல்லது வேறு எங்கு குடியிருப்பவர்களும் தங்களுடைய வாரயிறுதிக்கான வீட்டை மலைவாசலில் வாங்கிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் மலைவாசலில் குடியிருப்பு நெருக்கடி அதிகமாகிற்று. நகரத்தின் நான்கு திசைகளிலும் அழகான மலைவாசல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. நகரத்தின் எந்த மூலையிருந்தாலும் மெட்ரோவின் வேகம் அவர்களை மலைவாசலுக்கு அரைமணிக்குள் கொண்டு போய்விடும் என்பதால் மலைவாசலைவிட்டு கிளம்ப ஒருத்தருக்கும் மனம் வரவில்லை. அங்குக் குடியேறுவதை லட்சியமாக வைத்திருந்தனர். மலைவாசல்காரிக்கு சமதளத்திற்குத் திரும்புவது அபூர்வமாக மாறிற்று.

மக்கள் எல்லோரும் எதிர்பார்த்தபடி ஏலாம்பூர் நகரத்தின் மத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடிக்கு ஏற்கெனவே புதையவாரம்பித்துவிட்டிருந்தது. வாகனங்களின் பெருக்கம் கரும்புகை மேகங்களும் ஏலாம்பூர் நகரத்தை அச்சுறுத்தியது. வடக்கிலிருந்து பிழைப்புக்காக இடம்பெயர்ந்தவர்கள் பணியாற்றிய மெட்ரோ நிலத்தடி முழுக்க ஒரு கோலமெனச் சிக்கலான தடங்களை வரைந்துவிட்டது. ஆனால் நகரத்தின் அத்தனை கூலியாட்களின் அன்றாடப்பாடுகள் ஏலாம்பூரை விலக்கவில்லை (அவர்களின் பூர்வக்குடிகளே ஏலாம்பூரை உருவாக்கியவர்கள்). ஏலாம்பூர் அப்பெருநகரத்தின் மத்தியம் என்பதால் உயர் தகவல்தொழில் நுட்பங்கள் ஏலாம்பூரைவிடாது பிடித்திருந்தன. ஆனால் அவர்கள் பாழ்பட்ட நகரத்திற்குப் பதிலாக அதை நகலெடுப்பதுபோன்று இன்னொன்றை நிலத்தடிக்குள் உருவாக்க விரும்பினர். ஏலாம்பூரின் தங்கையெனப் புதிய மத்திமம் நிலத்தடிக்குள் உண்டானது. வாகனத் தயாரிப்பு, தோல்த் தொழிச்சாலை, குடியிருப்பு, மென்பொருள் நிறுவனம் என எல்லாம் நிலத்தடி ஏலாம்பூருக்குள் போனதும் பழைய ஏலாம்பூர் இராணுவத் தளவாடத் தொழிற்சாலையாக மாறிற்று. பழையப் பூர்வ ஏலாம்பூரார்களுக்கு அங்கு நாள் முழுக்க வேலை இருந்தது. நகரைச் சேர்ந்தவள் புதிய ஏலாம்பூரிலேயே இருந்துவிட்டாள் அவள் பிறந்ததே நிலத்தடி நகரத்திற்குள்தான்).

காலம் மூன்று தோழிகளும் நினைத்ததுமாதிரி அவ்வளவு கருணையானது கிடையாது. அது நகர நகர பின்னாலேயே தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. கடந்தக் காலத்தின் அனுபவங்களை அது ஸ்தூலமாக இருக்க விடுவதில்லை. எஞ்சுவது இழந்த உணர்வு மட்டும்தான். மூவரும் தங்களுடையப் பள்ளி இன்னும் அதே தோற்றத்தில் இருக்குமாவெனப் பயந்தார்கள். ஒவ்வொரு நாளின் ஒன்பது பதினைந்தும் மாலை ஐந்து முப்பதும் அவர்களை இரண்டு வெவ்வேறு காலச்சம்பத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டு அனுப்புகிறது. மூன்றில் யாரேனும் ஒருவர் அந்நினைவின்போது கண்ணீர் உதிப்பது வழக்கம். அருகில் இருக்கிற கணவனோ குழந்தையோ நண்பர்களோ அலுவலகப்பணியாளரோ ஆறுதல் படுத்துவார்கள்.

எப்போதாவது பணி நிமித்தமாக மத்திய நகரத்திற்கு வந்து போகிற வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் ஆல்ஃபா கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். பயணத்திலிருப்பவர்களின் கடிகார முள் நடுக்கத்தைக் காட்டும். அது மற்ற இரு முட்களின் அருகாமைக்கு வந்து போகத் துடிக்கும். ஆனால் ஒருநாளும் மற்ற இரண்டையும் தொடவில்லை. மாதங்கள் வருடங்கள் என கடிகார முட்களின் நகர்வு அப்படியே இருந்துவிடும்போது கடிகாரம் வேலை செய்கிறதா பழுதாகிவிட்டதா என்றுகூடத் தோன்றியிருக்கிறது. சமயத்தில் திடீரென்று அது வேகமாகச் சுற்றி நிற்கும். அப்போது சுற்றாத மற்ற இருவரும் பயணத்தில் இருக்கும் மூன்றாமவளை நினைத்துக்கொள்வார்கள். 

மூவரும் தங்கள் குழந்தைகளிடம் கடிகாரத்தின் கதையைச் சொன்னார்கள். யாராவது கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு பயணித்தார்களென்றால் அவர்களிடம் விசாரிக்கச் சொல்வார்கள். கடிகாரம் அணிவதையே குழந்தைகள் அதுவரைப் பார்த்ததில்லை. தோழிகளுக்கு நகரத்திற்கு வருகிற சந்தர்ப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டன. ஆனால் கடிகாரம் இன்னும் கைகளில்தானிருக்கிறது. நகரத்தின் சமதளத்திலிருக்கிறவளின் முள் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். 

ஒவ்வொரு பத்தாண்டு முடியும்போதும் அவர்களது ஆசை பத்தில் ஒரு பங்காகக் குறைய ஆரம்பித்தது. மூவரும் பல நாட்கள் கடிகாரத்தைக் கவனிப்பதை நிறுத்தியதும் உண்டு. ஐந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டபோது ஒருசமயம் இரயில் பயணத்திலிருக்கையில் ஆல்ஃபா கடிகாரத்தின் முட்கள் துடிப்பதை மூவரும் கண்டனர். அது இயங்குவதற்குத் தயாரானதன் அறிகுறி. மூன்றுபேரும் தாங்கள் பயணத்திலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர். மூவருக்கும் இதயம் வேகமாக அடித்தது. முகங்களில் கட்டற்ற மகிழ்ச்சி. உடனே மூன்று இரயில்களும் நிறுத்தப்பட்டன. நகரத்தின் மத்தியிலுள்ள பட்டாம்பூச்சி மியூசியப் பூங்காவுக்கு அருகில் மூன்று இரயில்களும் ஒன்று நிலத்தடியிலும் இன்னொன்று பூங்கா வாசலிலும் மூன்றாவது பூங்காவுக்கு மேலேயுமாக நின்றன. மூன்று தோழிகளும் கடிகார முள்ளைப் பார்த்துக்கொண்டே அவசரவசரமாகப் பட்டாம்பூச்சிப் பூங்காவுக்கு வந்து சேர்ந்தனர். அதன் வாசலில் மூன்று தோழிகளும் வெவ்வேறு வயதில், தோற்றத்தில், உருவ வேறுபாட்டுடன் யாருக்கோ காத்திருப்பதுபோல மூன்று திசைகளை நோக்கி அமர்ந்திருந்தனர்.

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here