ரூபன் சிவராஜா
தற்போது செய்திகள், தகவல்களை வெளியிடுவதற்கானதும், பெறுவதற்குமானதுமான ஊடகத்தளங்களும் அவற்றின் பரிமாணங்களும் மாறிவிட்டன. இணைய தளங்கள், இணைய தொலைக்காட்சிகள், யூரியூப் தளங்கள், பேஸ்புக், ரிவிற்றர் எனப் புதிய டிஜிற்றல் தளங்கள் உச்சமான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனாலும் பாரம்பரிய தொலைக்காட்சி சேவைகள் என்று சொல்லக்கூடிய சி.என்.என், பி.பி.சி உட்பட்ட இன்னும் பல சர்வதேச தொலைக்காட்சிகள் சமகாலத்திலும் செய்தி மற்றும் தகவற்பரம்பலுக்கான முக்கிய சர்வதேச ஊடகங்களாக உள்ளன.
இன்று நாம் தகவற் தொழில்நுட்பத்தின் உச்ச வளர்ச்சிக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். கருத்துருவாக்கங்கள் ஊடகங்கள் வாயிலாகவே அதிகமதிகம் நிகழ்கின்றன. இன்றைய உலகின் அரசியல்-சமூக-பொருளாதார நிகழ்ச்சிநிரலை தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் திகழ்கின்றன. குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கின்ற அபார வலிமை ஊடகங்களுக்குண்டு.
சி.என்.என் விளைவு (CNN effect)
ஊடக அதிகாரம் பற்றிப் பேசும் போது, சி.என்.என் விளைவு (CNN effect) குறித்துப் பேசுவது பொருத்தமான ஒன்று. சி.என்.என் விளைவு அல்லது தாக்கம் என்ற சொல்லாடல் உலகளாவிய ரீதியில் சமூகவியல், அரசறிவியல் மற்றும் ஊடகவியல் சார்ந்த கற்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருளாக உள்ளது. உலகில் முதன்முதலில் உருவான இந்த 24 மணிநேர தொலைக்காட்சி செய்திச்சேவையை அமெரிக்கா தனது அரசியல் மூலோபாய நலன்களுக்குச் சாதகமான கருவியாக கையாண்டது, கையாண்டு வருகின்றது. குறிப்பாக பனிப்போருக்குப் பிற்பட்ட காலங்களில் நாடுகள் மீதான ஆதிக்கம் செலுத்தலென்ற இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்கு ‘CNN effect’ அதிகமதிகம் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும்.
சி.என்.என் (CNN – Cable News Network) 1980இல் தொடங்கப்பட்ட 24 மணிநேர செய்திச் சேவை. அமெரிக்காவில் தேசிய அளவில் நேயர்களைக் கொண்டுள்ளதோடு உலக நாடுகளிலும் பரந்த பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறாகவே சி.என்.என் இன் உலகளாவிய முக்கியத்தும் கணிக்கப்படுகின்றது. 1990களில், குறிப்பாக வளைகுடா யுத்தத்தின் போது, 24 மணிநேர செய்திச் சேவையூடாக அது புதிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து தொடர்ச்சியாக அமெரிக்காவின் பல்வேறு சர்வதேச அணுகுமுறைகளை சி.என்.என் விளைவின் பின்னணியில் நோக்க முடியும்.
உதாரணங்கள்
1992 இல் சோமாலியாவிற்குள் அமெரிக்கப்படைகளை இறக்குவதற்கான பரப்புரைகளுக்கு சோமாலிய அகதிகளின் பட்டினிச்சாவுகளும் மனித அவலங்களும் ஊடகக் காட்சிப் பொருட்களாக்கப்பட்டன. அதேவேளை கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரன் ஒருவனின் உடல் கட்டப்பட்டு மொகடிசு (Mogadishu) வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகளே அடுத்த ஒரு அண்டுக்குள் (1993) அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா மீள அழைப்பதற்கும் வழிகோலியது.
1999 காலப்பகுதியில் கொசோவோவிற்குள் நேட்டோ (NATO) படைகள் இறக்கப்பட்ட போது கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மூலோபாய நகர்வுக்கு ஊடகபலம் கைக்கொள்ளப்பட்டது. பின்னர் ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களை நியாயப்படுத்தவும் உலக நாடுகளை அணிசேர்க்கவும் ”செப்ரெம்பர் 11” காட்சிகள் எத்துணை கச்சிதமாய் கைக்கொள்ளப்பட்டன என்பதை விளக்கிக்கூறத் தேவையில்லை.
வியட்னாம் போரில் அமெரிக்கா ஆதரவிழந்து தோல்வி கண்டு வெளியேறிய பின்னணியிலும் ஊடகத்தின் பங்கு குறிப்பிடும்படியாய் இருந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தினரின் பிடியிலிருந்து உயிர் பிழைப்பதற்காக வியட்னாமி வீதியொன்றில் மரண பீதியுடன் சிறுவர்கள் ஓடுகின்ற காட்சியின் ஒளிப்படத்தில், குறிப்பாக அதில் 9 அகவையுடைய புக் பான் தி (Phuc Phan Thi) என்ற வியட்ளனமியச் சிறுமி உடைகளில் தீ பற்றியதால்/பற்றவைக்கப்பட்டதால் வெறும்மேனியுடன் ஓடும் காட்சி அமெரிக்கப் படைகள் வியட்னாமிய மக்களுக்கு ஏற்படுத்திய அவலங்களின் குறியீடாக பார்க்கப்பட்டது. அந்த ஒளிப்படம் அசோசியட்ரெட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் Nick Ut இனால் எடுக்கப்பட்டதாகும்.
இவ்வாறாக அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தீர்மானிக்கும் சக்தி ஊடகங்களுக்கு உண்டென்பதற்கு உலக வரலாற்றிலிருந்து பல்வேறு எடுத்துக்காட்டுக்களைப் பட்டியலிட முடியும்.
விரைவான புள்ளிவிபரங்கள் – கறுப்பு வெள்ளைப் பார்வை
இன்னொரு வகையில் சி.என்.என் விளைவினை உலக மக்கள், சமூகம் மீதும் மற்றும் அரசியல் மட்டத்திலும் கருத்தியல் சார்ந்து ஊடகங்கள் கொண்டிருக்கும் அதிகாரம் என்பதை விவரிக்கும் சொல்லாகவும் புரிந்துகொள்ளலாம். தொடர்ச்சியாகவும் விரைவாகவும் இடைவெளியின்றிச் செய்திகளையும் தகவல்களையும் ஒளிபரப்புவது அதன் இயங்குமுறை. இன்னும் எளிமையாகச் சொல்வதானால் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் ஒரே விடயத்தை அல்லது தாம் கடத்த, பரப்ப விரும்பும் செய்தியை, நிகழ்வைப் புள்ளிவிபரங்களோடு தொடர்ச்சியாக ஒளிபரப்புவதாகும். கொரோனா காலத்திற்கூட சி.என்.என் விளைவின் மீள் தோற்றத்தைக் காணமுடிந்தது. இறப்பு எண்ணிக்கை, தொற்று எண்ணிக்கை, கொரோனா பரிசோதித்தோர் தொகை, தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை என ஊடகங்கள் உலக ரீதியாக, நாடுகள் ரீதியாக, மாநிலங்கள், நகரங்கள், மாவட்டங்கள் ரீதியான தகவல் அட்டவணைகளைப் பதிவேற்றி வந்தன. இது சி.என்.என் விளைவின் மூலத்தை நினைவூட்டக்கூடிய நிகழ்வு.
உலகளாவிய ரீதியிலும் நாடுகள் மட்டத்திலும் சமூகப் பரப்புகளிலும் பலமுனைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை வெறும் புள்ளிவிபரங்களாக மட்டும் முன்வைக்கப்படும் போது, அச்சூழ்நிலையின் யதார்த்தபூர்வமான விளைவுகளை உரிய முறையிற் கிரகித்துக்கொள்வது பொதுமக்களுக்கு சிரமமான காரியமாகிவிடுகிறது. தருணங்களில் இத்தகைய சித்தரிப்புகள் ஒரு கறுப்பு வெள்ளைப் புரிதலுக்கும் இட்டுச் செல்லக்கூடியது. அதாவது ஒன்றில் போர்கள், பெருந்தொற்றுக்கள் உள்ளிட்ட இடர்களின் விளைவுகளை மீளமுடியாத பேராபத்துகளாக உணர்த்துவது அல்லது அவை பொருட்படுத்த தேவையற்ற விவகாரங்கள் என்ற பார்வையை உருவாக்குவதற்கும் இட்டுச்செல்கின்றது. அவற்றின் பன்முகப்பட்ட பாதிப்புகளையும் விளைவுகளையும் கிரகித்துணர முடியாத நிலைக்குப் பொதுமக்களை தள்ளுகின்றது. அன்றேல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பெருநிகழ்வு மீது அதீத கவனத்தைக் குவிப்பதும், பின்னர் இன்னொரு நிகழ்வு மீது முழுக்கவனத்தினையும் மடைமாற்றித் திருப்புவது என்பதாகவும் பேரூடகங்களின் அணுகுமுறை அமைகின்றது.
கவனக்குவிப்புகளும் திசைதிருப்பல்களும்
கொரோனாப் பெருந்தொற்று மீதான கவனக்குவிப்பு திடீரென நிறுத்தப்பட்டு, உக்ரைன் மீதான ரஸ்யப் போரின் மீது கடந்த ஓராண்டுக்கு மேலான ஊடகக் கவனக்குவிப்புத் திசைதிருப்பப் பட்டுள்ளமையை சமகால எடுத்துக்காட்டாக முன்வைக்க முடியும். ரஸ்ய – உக்ரைன் போர் மீதான கவனக்குவிப்பு குறைக்கப்பட்டு இன்னொரு பிரச்சினை மீது கவனம் குவிக்கப்படுவதும் அடுத்து நிகழப்போகின்ற ஒன்றுதான். ரஸ்ய – உக்ரைன் நிலைமைகள் உரிய முறையில் நிலைகொள் தீர்வினை எட்டப்பட முன்னர் அத்தகைய கவனத்திசைதிருப்பல் நிகழப்போகின்றது. உக்ரைனின் அழிவுகளும் மக்களின் இழப்புகளும் மறக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டுவிடும். இவை சமகால உதாரணங்கள் மட்டுமே. அண்மைய வரலாற்றிலும் அதற்கு முன்னரும் பல்வேறு நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்.
பெரிய ஊடகங்கள் மற்றும் செய்திநிறுவனங்கள் மேற்குலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. அவை வெளிப்படுத்தும் பார்வைகளும்; தகவல்களும் மேற்குச் சார்பு நிலையுடையவை என்ற விமர்சனங்கள் பல மட்டங்களில் நிலவிவருகின்றன. மேற்கு அல்லாத உலகின் ஏனைய பிராந்திய மக்களின் பார்வைகளையும் கருத்துகளையும் கவனக்குவிப்புடன் மேற்கின் ஊடகங்கள் பிரதிபலிப்பது அரிது. ஆனால் மேற்கின் ஊடகங்கள் உலகளாவிய நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பதில் பெரும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றன.
‘போரின் முதற்பலி உண்மை’
‘போரின் முதற்பலி உண்மை’ என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு கூற்று. உலகின் கூர்மையான முரண்பாடுகள், போர்கள் சார்ந்து சுயாதீனமான தகவல்கள், செய்திகள் வெளிவருவதும் அரிது. பெரிய சர்வதேச ஊடகங்கள் உட்பட்ட பெரும்பாலான ஊடகங்கள் உத்தியோகபூர்வ ஊடக மாநாடுகளில் அதிகாரம்மிக்க அரசியல், அரசாங்க, இராணுவத்தரப்புகள் வெளியிடும் தகவல்கள், அறிக்கைகளை விமர்சனமின்றி வெளியிடுகின்றன என்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. உலகச் செய்திகளின் பெரும்பகுதிக்கான மூலாதாரமாக இன்னமும் AFP, Associated Press மற்றும் Reuters போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களே உள்ளன. பல ஊடகங்கள் ஒரே செய்தி நிறுவனத்திடம் இருந்து செய்திகளைக் கட்டணம் செலுத்தி வாங்குகின்றன. சி.என்.என் மற்றும் பிபிசியின் உலகளாவிய ஒளிபரப்புகளையே பெரும்பாலான அரசியல் தலைவர்களும் நாடுகளின் தலைவர்களும் தகவல் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அல் ஜசீரா தொலைக்காட்சி கணிசமான முக்கியத்தினைப் பெற்றுள்ளது. கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அல் ஜசீரா, அரேபிய நிலைப்பாட்டிலும் பார்வையிலுமிருந்து செய்திகளை வெளியிட்டுவருகின்றது. மேற்கிற்கு மாற்றான ஊடகப்பார்வையாக இது வளர்ந்து வருகின்றது.
புதிய தகவல் யுகம்
ஊடகத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. இணையமும் சமூக ஊடகங்களும் கோலோச்சும் காலத்தில் வாழ்கின்றோம். கூகுள், அப்பிள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை பாரிய இலாபமீட்டும் நிறுவனங்கள். இணையம் மற்றும் ஸ்மாட் தொலைபேசிகளை மையமாகக் கொண்ட புதிய ஊடகப் புரட்சியின் ஒரு பகுதியாக அவை வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. இவை தனிநபர் சுயவிபரங்கள் உட்பட்ட தகவல்களைக் கண்காணிக்கின்றதும் கட்டுப்படுத்துகின்றதுமான நிலையில் உள்ளன.
ஊடகங்களில் தமது நாடு மற்றும் ஆட்சியைப் பற்றிய நற்பெயருடனான பிம்பத்தினை உருவாக்குவதற்குப் பல நாடுகள் பெருந்தொகை நிதியைச் செலவுசெய்கின்றன. அரபு நாடுகளிற் தம்மைப் பற்றிய விளம்பரம் மற்றும் தகவற் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மக்கள்தொடர்பு நிறுவனங்களுடன் (PR Agencies) ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கின்றது. முன்னர் பனிப்போர்க் காலத்தில், கொம்யூனிச நாடுகளை நோக்கியதாக, அமெரிக்க அரசு அமெரிக்காவின் குரல் (Voice of America) வானொலி ஒலிபரப்பினை இயக்கியதான தகவல்கள் உள்ளன. தற்போது அரபு நாடுகளில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு ரேடியோ சாவா(Radio Sawa) என்ற வானொலிச் சேவையை முன்னெடுத்து வருகின்றது.
பின்-சி.என்.என் – Post-CNN – சமூக ஊடகங்கள்
‘பின்-சி.என்.என் – Post-CNN’ ஊடகச் சூழலில், தகவற்பரம்பலின் தொழில்நுட்ப மையச்சாதனமாக சமூக ஊடகங்கள் ஆகியிருக்கின்றன. தனிமனிதர்கள் தமது உணர்வுகளையும் மனப்பதிவுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான தளமாக அவை விளங்குகின்றன. மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் தகவல்களை அணுகுகின்ற மற்றும் பெறுகின்ற முறைகளிலும் சமூக ஊடகங்கள் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. இது அடிப்படையில் ஒரு புதிய திறவுகோல்.
பேஸ்புக், ரிவிற்றர் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் சார்ந்து மக்கள் திரளை ஒன்றுதிரட்டுகின்ற கருவிகளாகவும் பயன்படத் தொடங்கியுள்ளன. அதன் தொடக்கமாக அரபு வசந்தம் கணிப்பிடப்படுகின்றது. நிகழ்நேர வலையமைப்புத் தகவல்தொடர்பு மூலம் (Real-time Networked Communication) சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த முடுக்கியாகச் செயல்பட்டன. சர்வாதிகார ஆட்சிபீடங்களுக்கு எதிரான போராட்டங்களில் மக்களைத் திரட்டுவதற்கான தீர்க்கமான தகவற்பரம்பல்களுக்கு சமூக ஊடகங்கள் துணை புரியத் தொடங்கியுள்ளன. எதிர்ப்பரசியல், ஜனநாயக மக்கள் போராட்டங்களில் மக்களை ஒன்றுதிரட்டவும் ஒருங்கிணைக்கவும் பயன்படத்தொடங்கியுள்ளன. ஆனால் மக்கள் போராட்டங்களை ஒடுக்குகின்ற ஆட்சிபீடங்கள் இணைய இணைப்புகளையும் சமூக ஊடக இணைப்புகளையும் துண்டித்து போராட்டக்காரர்களின் தொடர்பாடல்களை முடக்குகின்ற நிலைமைகளும் உள்ளன.
மாறிவிட்ட ஊடகத்தளங்களும் பரிமாணங்களும்
தற்போது செய்திகள், தகவல்களை; வெளியிடுவதற்கானதும், பெறுவதற்குமானதுமான ஊடகத்தளங்களும் அவற்றின் பரிமாணங்களும் மாறிவிட்டன. இணையதளங்கள், இணைய தொலைக்காட்சிகள், யூரியூப் தளங்கள், பேஸ்புக், ரிவிற்றர் எனப் புதிய டிஜிற்றல் தளங்கள் உச்சமான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனாலும் பாரம்பரிய தொலைக்காட்சிச் சேவைகள் என்று சொல்லக்கூடிய சி.என்.என், பி.பி.சி உட்பட்ட இன்னும் பல சர்வதேச தொலைக்காட்சிகள் சமகாலத்திலும் செய்தி மற்றும் தகவற்பரம்பலுக்கான முக்கிய சர்வதேச ஊடகங்களாக உள்ளன. சர்வதேச விவகாரங்களில், முரண்பாடுகளில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது சமூக ஆய்வாளர்களின் பார்வை. முரண்பாடுகளையும் மோதல்களையும் கூர்மைப்படுத்துகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு கருத்துக்கு அல்லது அறிக்கைக்கு வேகமாக எதிர்வினை ஆற்றப்படுவதற்கு ஊடகங்கள் தூண்டுகின்றன. மௌனம் காப்பதை ஊடகங்கள் தொடர்புபட்ட தரப்புகளின் பலவீனம், செயல்வலுவின்மை என்பதாகச் சித்தரிக்கும் போக்கினைக் கொண்டுள்ளன. ரஸ்ய – உக்ரைன் போருக்கான புறத்தூண்டுதல்களை ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன, கையாண்டு வருகின்றன என்பது ஊடகங்களின் போக்கிற்கான அண்மைய உதாரணம். கருத்துக்கு எதிர்க்கருத்து, வாதத்திற்கு எதிர்வாதம், அறிக்கைக்கு எதிரறிக்கை எனவாக முரண்பாடுகள் வளர்க்கப்படத் தூண்டுதலாகவும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை நலிவடையச் செய்கின்ற அணுகுமுறையும் ஊடகங்கள் மட்டத்தில் நிலவிவருகின்றன.
அதிகாரத்தின் மூலசக்தி
அதிகாரத்தின் மூல சக்தியாக தகவல் உள்ளது. யார் அல்லது எந்த தரப்பு தகவல்களைக் கொண்டிருக்கின்றதோ அல்லது அவற்றைப் பரப்புவதற்குரிய ஊடகங்களைக் தம்வசம் வைத்திருக்கின்றதோ அதுவே அதிகாரமுடைய சக்தி. அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்களை நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவருகின்றதும் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கின்றதுமான சக்தி அது. இன்றைய தகவற்தொழில்நுட்ப யதார்த்தமென்பது, தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, அவற்றைக் கட்டுப்படுத்துவதையும் குறிக்கின்றது. வணிக ஆதாயத்தின் பொருட்டு தகவல்கள், தொழில்நுட்பப் பெருநிறுவனங்களாற் கையாளப்படுகின்றன.
அமெரிக்காவும் அதன் சார்பு நிலையுடைய மேற்குமே ஊடகபலம் மிக்க சக்திகளாக விளங்குகின்றன. உலக அரசியலை, பொருளாதாரத்தை, போர்களை, முரண்பாடுகளை நிர்ணயிக்கின்ற சக்திகளும் அவையே. உதாரணமாக அவர்கள் நடாத்துகின்ற போர்கள் சார்ந்து (அண்மைய உதாரணங்கள்: ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ரஸ்யா – உக்ரைன்) தமக்குச் சாதகமான கருத்துநிலைகள் மேலோங்கவும், பரவவும், நிலைபெறவும் ஏற்ற வகையில் தமது ஊடகங்களைக் கையாள்கின்றன. தவிர உலக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கவும், மாற்றவும், நிலைபெறச்செய்யவும் ஊடகங்கள் முதன்மை வகிபாகத்தைக் கொண்டுள்ளன.
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்.