சுபி
1
எங்கள் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸில் இறங்கி அந்தக் கருத்த இரவின் நிசப்தத்தில் டார்ச் லைட்டை அடித்தவாறு பெரியசாமி அண்ணன் கடையில் மூன்று இட்டிலிகளைக் கட்டிக்கொண்டு கிராமத்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். பெரியசாமி அண்ணன் கடையும், இன்னொரு டீக்கடை மட்டுமே அந்த முடக்குச்சாலையில் பல வருடங்களாக இருந்தன. வீட்டில் இருந்து பார்த்தால் நீண்ட தார்ச்சாலை முடியும் இடத்தில் இரண்டு பரம்பரையாக எங்கள் வீட்டு நபர்களை வைத்த சுடுகாடு இருந்தது. அந்தச் சுடுகாடு இருந்த இடத்தில் எங்கள் வீட்டின் ஆட்கள் மட்டுமன்றி அப்பாவுடன் கூடப் பிறந்தவர்கள் அவர்கள் வாரிசுகள் என்று காலங்காலமாக அதே இடத்தில் சடங்குகளைச் செய்து கொண்டோம். நினைவு நாள், திவசம், பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் அவரவர் வீட்டுப்பிள்ளைகள் வந்து சூடம் ஏற்றி வழிபடுவதும் எங்கள் வழக்கமாக இருந்தது. குடும்பத்தில் யாராவது இறக்கும்போது வீட்டில் இருந்து பார்த்தால் அனல் மேலெழுந்து விண்ணோக்கி தகதகவென்று எரிவது நன்கு தெரியும். மறுநாள் காலை அங்கம்பறித்து காவிரி ஆற்றில் கொண்டுபோய்க் கரைத்துவிட்டு வரும்வரை மனம் சலனமற்று இருக்கும். இறந்தவர்கள் யாரோவல்ல, நேற்று மாலை வரை பேசிக்கொண்டிருந்த சித்தப்பா, பெரியப்பா, பாட்டா, அப்பா என எங்களோடு சிறுவயதில் இருந்தே ஒட்டி உறவாடியிருந்தவர்கள். தணல் எரிய எரிய அவர்கள் நினைவு ஒவ்வொன்றாக அந்தத் தணலில் இருந்து கிளம்பி வந்து அடையும். அதன் சூடு தாளாமல் நம்மை அது எரிக்க எரிக்க விடிவதற்குள் உடலானது அங்கே எரிந்து அடங்கியிருக்கும்.
ஒரு வகையில் எங்கள் வீட்டையொட்டிய காட்டில் அனைவரும் இருப்பது வணங்க சவுகரியமாக இருந்தாலும் நம் கண் முன்னே அவர்கள் எரிவது சொல்லிக் கொள்ள முடியாத துக்கமாக இருந்தது. பெரியசாமி அண்ணன் கடைக்கும், வீட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தில் அந்த முடக்குப் பகுதி அமைந்திருந்தது. யார் வீட்டுக்கு வந்தாலும், யார் வீட்டில் இருந்து வெளியே ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்த முடக்குப் பகுதியைத் தாண்டாமல் செல்ல முடியாது.
நாளை அப்பாவின் நினைவுநாள் என்பதால் அவருக்குப் பிடித்தத் திண்பண்டங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். வீட்டில் யாரும் இப்போது இல்லாததால் ஒட்டடைகள் தொங்கிக்கிடந்தன. அவற்றைக் கைகளால் பிடித்து விரல்களால் சுருட்டி மூலையில் வீசினேன். புழுதி படிந்து கால் தடங்கள் தெரிந்த மேல்திண்ணையினை ஒட்டியிருந்த இரண்டு அறைகளைத் திறந்து விளக்குகளை எரிய விட்டேன். மேல் திண்ணையில் இருந்து மூன்று படிகள் இறங்கினால் அகலமான பெரிய மண்வாசல் இருந்தது. அதில் இருந்த வெங்கச்சாங்கற்கள் ஆங்காங்கே முட்டி எழுந்து புடைத்துக் கிடந்தன. மேடு பள்ளமான வாசலில் கால் வைத்தால் கல் குத்தி தாவவிட்டது.
அந்தப்படிகளில் ஓரங்கள் முடியும் இடத்தில் சிமெண்ட்டால் ஆன சறுக்கல் இருக்கும். அந்தச் சறுக்கலில் விளையாடுவதுதான் எங்களுக்கு அன்று இருந்த ஒரே பொழுதுபோக்கு. பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பையை வீசிவிட்டு ஒருவர் சறுக்கி கீழே இறங்கி விட, ஒருவர் மேலிருந்து இறங்க ஆரம்பிக்க என்று தரை தேய்ந்து சூடாகும் வரை ஆடுவோம். ‘இருக்க ரெண்டு டவுசரையும் கிழிச்சுட்டா டவுசருக்கு எங்க போவீடா’ என அம்மா கத்துவாள். புது டவுசர் வாங்க வேண்டும் என்பதற்காகவே சூடு பறக்க வேகவேகமாக சறுக்கி டவுசரைக் கிழிக்க வைக்க முயற்சி செய்வேன். விளையாடி முடிந்தால் சந்தையில் வாங்கி வந்த பொரிப்பொட்டலத்தை உடைத்துப் பங்கிட்டு வைப்பாள். அதைச் சாப்பிட்டவுடன் நேராக ஆட்டுப்பட்டிக்குள் சென்று ஆடுகளை முடக்குச்சாலை வரை வீட்டில் இருந்து நீண்டு கிடந்த எங்கள் இடத்தில் ஓட்டிச்செல்ல வேண்டும். பொழுது சாய்வதற்குள் ஆடுகளை மேய்த்து விட்டு ரோட்டோரத்தில் கிடக்கும் புற்களைப் பிடுங்கிக்கட்டி எடுத்து வந்துவிட வேண்டும். வாசலுக்குப் பக்கவாட்டில் ஆடுகளைக் கட்டிவிட்டு வந்தால்தான் படிக்க முடியும். ஆளுக்கொரு ஆடு விட்டிருந்தாள் அம்மா. வருடம் முழுவதும் மேய்த்து அந்த ஆட்டை விற்று வரும் காசில் அடுத்த வருடத்திற்கான படிப்பு செலவுக்கு உபயோகப் படுத்திக்கொள்வோம்.
ஆட்டுவதற்கென ஆளுயர உரல் ஒன்று வாசல் ஓரத்தில் மழையிலும் வெயிலிலும் நனைந்து கிடந்தது. அதில் நாலுபடி அரிசியைப் போட்டுக்கொண்டு பார்வதி அத்தை ஆட்ட ஆட்ட நான் தள்ளிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் அரிசிச்சோறும் இட்டிலியும். அதனால் இட்டிலி என்பது எங்களுக்கு கொண்டாட்டமான உணவு. அதற்குச் சட்டினி என்றால் ஆட்டும் போதே நான் பாதியை சாப்பிட்டு விடுவேனென அம்மா சட்டினி ஆட்டவோ அதைத் தள்ளவோ விடமாட்டாள். அதை நினைத்தபடியே பெரியசாமி அண்ணன் கடையில் வாங்கி வந்த இட்டிலியைச் சாப்பிட்டு முடித்தேன்.
அறையின் மூலையில் இருந்த டிரங்குப்பெட்டிகளில் அம்மாவின் புடவைகள், அப்பாவின் துணிகள் இருந்தன. இரவென்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என அறையை மட்டும் படுக்கும் அளவிற்கு சுத்தம் செய்துவிட்டு மூலையில் கிடந்த பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். மூலையில் அடுக்கப்பட்டிருந்த பானைகளில் அம்மா மளிகை செலவு சாமான்களை பேளுக்குறிச்சி வருச சந்தையில் வாங்கிப் புடைத்து வைத்திருப்பாள். அந்தப்பானைகள்தான் அம்மாவின் பணம் சேமிக்கும் இடமும். ஐந்து பானைகள் இரண்டு மூலைகளில் கீழிருந்து மேலாக பெரியதில் இருந்து சிறியதாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
படுத்துச் சற்று நேரத்திற்கெல்லாம் களைப்பில் கண்கள் செருக உறங்கி விட்டேன். கொஞ்ச நேரத்தில் பானைகள் அடுக்கப்பட்ட மூலையில் இருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடன் மனம் கலவரமாக பாயில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். சத்தம் வந்த திசையை உற்றுப்பார்த்தேன். பல்லி, பூச்சிகள் ஏதும் உருட்டுகிற சத்தமாக இருக்கலாம் என்று தோன்றியது.
அமைதியாக சில நொடிகள் கவனித்தேன். சத்தம் வந்த சுவடே இல்லாதபடிக்கு அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது. மனதின் பிரமையோ என்று நினைத்துக்கொண்டே மீண்டும் தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை எழுந்தபோது சத்தம் வந்த நினைவின்றி வீட்டைச்சுத்தம் செய்து ஒட்டடை அடித்துக்கழுவி முடித்தேன். இன்னொரு அறையில் புழங்காத சாமான்களை அடுக்கி வைத்திருந்தோம். அதில் ஓரமாகக் கிடந்த திமுசுக்கட்டையை எடுத்து வந்து வாசலில் நீர் தெளித்து வாசலைச் சமன்படுத்தியபோது சூரியன் நடுவானத்திற்கு வந்திருந்தது.
அப்பாவிற்கெனப் புதிதாக வாங்கி வந்த வேட்டிசட்டை, வெள்ளைத்துண்டை எடுத்துக் கொண்டேன். டிரங்குப்பெட்டியில் இருந்தவற்றை எடுத்து உதறி, யாருக்காவது கொடுக்கலாம் என நினைத்து வெளியே எடுத்து வைத்தேன்.
பைகளில் இருந்த சூடம், பத்தி, சாம்பிராணி, அகல்விளக்கு, திண்பண்டங்கள், துணிகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு முடக்குச்சாலையில் இருந்த சுடுகாடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். சாலை வழியாக அல்லது வீட்டில் இருந்து ஆடு மேய்க்கும் காட்டின் வழியே உருவாக்கிய ஒற்றையடிப்பாதை வழியேவும் செல்ல முடியும். பாதை வழியே செல்லும் போது சாலையோரத்தில் சீத்தக்காடுகள் முளைத்துக் கிடந்தன. செருப்புகளை மீறி இரண்டொரு முட்கள் பாதங்களைப் பதம் பார்த்துவிட்டன. ஒற்றையடிப்பாதையின் இந்தப் புறத்திலும் வழியிலும் நெருஞ்சி முற்கள் அதன் செடியோடு பரவிக்கிடந்தன. மிகவும் கவனமாக நடந்து செல்ல வேண்டியிருந்தது. முனியப்பனை வரச்சொல்லி காட்டைச் சுத்தம் செய்து நிரவிவைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைத்து என்ன செய்வது? ஒவ்வொரு வருடமும் இப்படி நினைப்பதும் பின் வருவதற்குத் தோதில்லாமல் போவதும் அம்மா, அப்பாவை சாமி கும்பிட மட்டும் வருவதும் வழக்கமாகி இருந்தது.

உங்களை எல்லாம் ஒரே குழியிலா போடப்போவுது என்றால் ஆமாம், எங்கள் வீட்டு ஆட்களை எல்லாம் ஒரே குழியில்தான் போடுவோம் என்றாராம் ஒருமுறை எங்கள் பாட்டா. அதற்கு பின்னால் சூசகமாக ஒரு காரணம் இருந்திருக்கிறது. வாழையடி வாழையாக எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து முன்னோர்களையும் இங்கே வந்து சாமி கும்பிட வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.
சுடுகாட்டில் மூன்று அகல் விளக்குகள் வைக்கும் மண்மாடங்கள் மண்ணில் பாதி அளவு புதைந்து கிடந்தன. தாழக்குனிந்து அப்பாவை வைத்த இடத்தில் இருந்த மாடத்தை எடுத்துத் துடைத்து அதனுள் அகல் விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, பத்தி ஏற்றி சாம்பிராணி காண்பித்த பிறகு ஒரு ரூபாய் காசை வைத்து எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
நிமிர்ந்து மூன்று முறை சுற்றிவந்து வேண்டிக்கொண்டு கிளம்பியபோது கால்களை மண்தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அந்த இடத்திலும் நெருஞ்சி முட்கள் இருந்தபடியால், அதைக் கைகளால் பிடுங்கி விட்டுத்தானே விளக்கேற்றினோம் என நினைத்தேன். மழையும் இல்லை சேறும் இல்லை.. மழையின்றி வறண்டு கிடந்தது காடு. இடது காலை எடுத்து வைத்தால் அதுவும் நகரவில்லை.
எப்படியோ ஒரு வழியாக கால்களை அழுத்தமாக தரையை விட்டு நகர்த்தி அருகில் கிடந்த செருப்பைப் போட்டபோது மீண்டும் விசும்பல் சத்தம் கேட்டது. அது இரவு வீட்டில் கேட்டிருந்த அதே விசும்பல் சத்தம்.
2
நேற்று விடியற்காலை ஐந்து மணியளவில் இப்போதிருக்கும் ராஜபுரம் வீட்டு வாசலில் உடுக்கடிக்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் கதவை மட்டும் திறந்து யாரென்று பார்த்தபோது சாமக்கோடாங்கி மூன்று முறை உடுக்கடித்தான்.
‘ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு.
நெனச்ச காரியம் நடக்காது.
வெச்ச காரியம் வெளங்காது.
வீட்டுல இருளண்டி கெடக்கு.
பூர்வீக எடத்துல அழுகுரலொண்ணு
கேட்டுக்கிட்டேருக்கு. ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. அழுகுரலு நின்னாத்தே நல்ல காலம்பொறக்கு நல்லகாலம் பொறக்கு…நாஞ்சொல்லுறது அந்த ஜக்கம்மா மேல சத்திய சத்திய சத்திய…அழுகொரலு நின்னாத்தே நல்ல காலம் பொறக்கு’ எனச் சொல்லியபடியே நகர்ந்து சென்றான்.
ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடக்கும் சம்பவங்கள் என இதை நினைக்கவும் முடியவில்லை. நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மனம் அலைக்கழிப்பின் மடியில் புரண்டு தவழ்ந்தது. எதையெல்லாம் ஒரு காலத்தில் நம்பாமல் கேலி செய்தேனோ அதையெல்லாம் தானாகவே நம்பும்படி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. யாருக்கோ நடக்கையில் எங்கோ நடக்கையில் தர்க்க அறிவோடு பேசுகிற மனதிற்கு தனக்கு நடக்கும் போது ஏன் குழப்பம் நேரவேண்டும். இதைக்கண்டு மனம் ஏன் இவ்வளவு கலங்குகிறது. ரோட்டில் போகிற சாமக்கோடாங்கிக்கு எப்படி சொந்த ஊரில் கேட்ட அழுகுரல் தெரிந்தது.
அப்படியெனில் இவ்வளவு நாட்களும் இவர்கள்தான் என் வாழ்வைத் தீர்மானித்திருந்தார்களா? அந்த அழுகுரலுக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அந்த விசும்பல் சத்தம் கேட்டபோது ஏன் இதயம் அப்படிப் படபடவென துடித்தது? ஒருவேளை யாரும் புழங்காத வீடென்பதால் கோடாங்கி சொல்வது போல் ஏதேனும் பேய் பிசாசு இருக்குமா? ச்சே, இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத எனக்கு எப்படி இப்படி கிறுக்குத்தனமாக யோசிக்க முடிகிறது? சரி, ஒன்றுமே இல்லையெனில் கால்கள் ஏன் சமாதி இருந்த இடத்தில் எடுக்க முடியாது போனது. நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு உண்மையாகவே ஏதேனும் காரணம் இருக்கின்றதா? இல்லை, எல்லாவற்றையும் மிகச்சரியாக ஊசியில் பூ மொட்டுக்களை கோர்ப்பது போல நடந்தவற்றை அடுக்கடுக்காக நிறுத்தித் தானே கோர்த்துக் கொள்கிறதா மனம்.
நமக்கு அப்பாற்பட்டு சில விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் கடைசியில் புரிந்தது. நம்மால் உணரமுடிந்த கண்ணுக்கு புலப்படாத கண்டுணர முடியாத விஷயமாக அந்த அழுகுரல் இருந்ததால் அதன் மேல் ஓர் ஆர்வம் தானாகவே கிளம்பியது. ஆர்வம் மட்டுமல்லாமல் பயமும் கூட காரணமென வைத்துக் கொள்ளலாம். யாருக்கும் கேட்காத அந்த அழுகுரல் ஏன் எனக்கு மட்டும் கேட்டது.. அதன் பிண்ணனி என்ன? அதனால் எனக்குத் தீங்கு ஏதேனும் நேருமாயென புதுவித அச்சங்களைப் போர்த்தியது தொடர் எண்ணங்கள்.
இன்று காலை ஐந்து மணிக்கு சரியாக விழித்துக்கொண்டு மீண்டும் சாமக்கோடாங்கி வருவானோ என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் வருவானென உள்ளுணர்வு சொல்ல வீட்டின் கதவைத் திறந்து வெளியே திண்ணையில் வந்து அவனறியாமல் அமர்ந்து கொள்ள முடிவு செய்தேன். திண்ணையில் போட்டிருந்த திரைச்சீலைகளை விலக்காது ஓர் ஓரத்தில் போய் சேரைப் போட்டு உட்கார்ந்தேன். நினைத்தது போலவே இன்றும் சாமக்கோடாங்கி சரியாக வந்து நின்றான். அவன் என்ன சொல்வான் என்ற ஆவல் ஒருபுறமும் கலக்கம் ஒருபுறமும் மாறிமாறி மனதுக்குள் போராட்டம் நடத்த அவன் வந்து நின்றான். இரண்டு திரைச்சீலைகளின் இடுக்கில் அவன் உருவத்தைக் காண முடிந்தது.
தலையில் சும்மாடு போல சுற்றியிருந்தான். புருவ மத்தியில் இருந்து மேல்நெற்றிவரை திலகமாக நீண்ட குங்குமப்பொட்டின் நடுவில் பெரிய அளவில் வட்டமான மைப்பொட்டு வைத்திருந்தான். கழுத்தில் நிறைய துணிகள் கலர் கலராகத் தொங்கின.
கருப்பு நிற முழுச்சட்டை அணிந்து கொண்டு வெள்ளை வேட்டியை கொசுவமிட்டுப் பின்புறமாக சுற்றி இருந்தான். இரண்டு கைகளிலும் கருப்பு, பச்சை கற்கள் பதித்த வெள்ளி மோதிரங்கள் மின்னின.
ஒரு ஜோல்னாபை வலதுதோளோடு தொங்கியது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் அவன் பற்கள் வெற்றிலை போட்டு போட்டுக் காவி நிறத்தில் கிடந்தன. கழுத்தில் நிறைய வண்ணங்களில் கயிறுகள் தொங்கின. ஒரு கயிற்றில் மட்டும் சின்னஞ்சிறிய மண்டையோட்டு உருவம் தொங்கியது. இடக்கணுக்காலில் மட்டும் மந்திரித்து பின்னல் போல் முறுக்கிய கறுப்புக்கயிறு கட்டப்பட்டிருந்தது. உடுக்கையின் நுனியில் ஒரு கர்சீப் துணி போல கட்டி அரை அடிக்கு அது தொங்கியது. பித்தளை நிற உடுக்கையில் அடித்து அடித்து அதன் நடுப்பகுதியில் லேசாக கருப்பாக மாறியிருந்தது.
நின்றவன் ஒரு நொடி கண்களை மூடிவிட்டு நல்வாக்கு சொல்லு ஜக்கம்மா என்று உடுக்கையில் கைகளை வைத்து ‘டுடுடூங்டுடுங் டுடுடூங்டுடுங்’ என தாளத்தோடு சொல்ல ஆரம்பித்தான்.
‘ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு ,ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. அழுகுரலொண்ணு பூர்வீக பூமியில கேட்டுட்டு வந்ததுல இருந்து ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. ஏனிந்தச் சோதனையென தவிச்சுக் கெடக்கு. எங்குறி தப்பாது. அழுகொரல நிப்பாட்ட வழி தெரியாம வீட்டுல ஐயாச்சாமி கொழப்பத்தில் கெடக்கு. சுடுகாட்டில் அழுகுரல் கேட்டதுக்குச் சுடுகாட்டில் இருந்து மந்திரிச்சு எடுத்தாந்த தாயத்திருக்கு. வீட்டில வச்சு பூசை செஞ்சா அழுகுரல் நின்னு போயிரும்ங்க. ஐயா வெளியே வாங்க. நல்ல வேட்டி இருந்தா இந்த ஏழைக்கு தானமாக்கொடுங்க. எல்லாஞ்செரியாப்போயிரும்.’ வேகவேகமாக உடுக்கடித்தான். ஜக்கம்மா தேவி ‘ஐயாவுக்கு நிம்மதி கொடு நிம்மதி கொடு’ என்று நிறுத்திவிட்டு வீட்டைக் கவனித்தான். எந்த அரவங்களும் வீட்டில் இருந்து எழாததால் நகர்ந்து செல்ல ஆரம்பித்தான்.
அவன் சென்றதை உறுதி செய்து கொண்டு வீட்டிற்குள் வந்து படுத்தேன். லேசாக வியர்த்தது. மின்விசிறி முழு வேகமாக ஓடியும் வியர்வை துளிர்த்தது நிற்கவில்லை. அருகில் இருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். சுடுகாட்டில் கேட்ட அழுகுரல் என்பதை எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறான்? தர்க்கமனம் கேள்விகளைத் தூண்டியது. நாம் தவிப்பது எப்படி இவனுக்கு தெரிந்தது. கோடாங்கிகள் ஏதேனும் மனதில் நினைப்பதைக் கண்டறிய கருவி எதுவும் வைத்துக்கொண்டு அலைகிறார்களா என யோசித்தேன். ஆனால் அவன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. என் மனம் இரண்டு நாட்களாக தவிப்பதும் அழுகுரல் கேட்டதும் அதை நிறுத்தும் வழி தெரியாமல் யோசித்தபடியே கிடப்பதும் உண்மைதானே.
தர்க்கக் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விட்டால் இந்த உலகம் மனித வசமாகிவிடுமே. புரிந்து கொள்ள முடியாத மர்மங்களை அடக்கிய இந்தப் பூமிக்குத்தான் எத்தனை வசீகரம். அம்மா இருந்தவரை இந்த மாதிரி விஷயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள். இந்த மாதிரியான குழப்பங்கள் நேர்கையில் எல்லாம் சித்துக்காளி அய்யாவை வீட்டுக்கு அழைத்து சோழி பார்த்து சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பாள்.
சித்துக்காளி அய்யா சொல்வதுதான் அம்மாவுக்கு வேதவாக்கு. நன்மையோ, தீமையோ என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லி விடுவார் என்று புளகாங்கிதம் அடைவாள் அம்மா. அவரை அழைத்தால் என்ன என்று தோன்றியது. அவரை அம்மாவிடம் எத்தனை முறை கேலி செய்திருப்போம் என நினைத்தவுடன் எப்படி அழைப்பது என்கிற தயக்கம் ஒருபுறம் உண்டானது. நன்றாக விடிந்ததவுடன் ஒரு விதமான இரட்டை மனநிலையுடன் அவருக்குப் போனடித்தேன்.
போனை எடுத்தவர் ‘அம்மா போனபொறவு என்ன மறந்துட்டீங்களாய்யா’ எனக்கேட்டவர் தொடர்ந்து நீங்க துடுக்குப்புள்ளனு அம்மா சொல்வாங்க தம்பி. அவனுக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்ல அய்யானு அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதனால்தான் நானும் வர்றதில்ல’ என்றார். எனக்குக் கஷ்டம் வைக்காமல் அவரே என்ன விசயம் தம்பி’ என்றார்
“சும்மா ஓரெட்டு வந்துட்டுப் போங்களேன் வீட்டுக்கு” என்றேன்.
‘தம்பி சொல்லி வராமல் இருப்பனா? பத்து மணிக்கு வந்துடறேன் தம்பி’ எனச் சொன்னதுபோல் சரியாக பத்து மணிக்கு வந்து வாசல் காலிங்பெல்லை அழுத்தினார்.
3
இன்று காலை முதல் பஸ்ஸில் மீண்டும் பூர்வீக இடத்திற்கு வந்து இறங்கி வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக முடக்குச்சாலையின் மூலையில் இருக்கும் சுடுகாட்டுக்குச் சென்றேன். மூன்று மண்மாடங்களில் அப்பாவின் மண்மாடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்றிவைத்த சூடத்தின் கருப்பு அப்பிக்கிடந்தது. ஊதுபத்தி ஏற்றிய வாழைப்பழம் சுருங்கிக்கிடந்தது. ஊதுபத்தி எரிந்தது போக மிச்சமிருந்த குச்சிகள் வாழைப்பழத்தில் நட்டுவைத்தவாக்கில் அப்படியே இருந்தன. நடு மண்மாடத்தையொட்டி நின்று குனிந்து பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. கூம்பலாக குடிசை போல நின்ற அதனுள் சிறுசிறு புற்கள் முளைத்துக் கிடந்தன. ஆளுயரக் குழிகளாக நீளவாக்கில் பறிக்கப்பட்ட தடங்கள் இத்தனை வருடங்கள் கழிந்தும் கோடு போல் பதிந்து கிடந்தன. ஓரமான சுடுகாடு நிலத்தைத்தாண்டி புற்கள் முளைத்துக் கிடந்த இடத்தில் கைகளால் பிடுங்கி எறிந்துவிட்டு அதன்மேல் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டேன். சாலையோர சீத்தமர நிழல் நன்கு படர்ந்து நிழல்தர தூக்கம் கண்களை மூடச்சொல்லி இழுத்தது.
உச்சி நெருங்கும் வேளையாகியிருந்தது. அந்த விசும்பல் சத்தம் அருகே கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வேகவேகமாக மண்மாடங்கள் இருந்த இடத்தில் போய் நின்று உற்றுக் கவனித்தேன். நின்றிருந்த விசும்பல் சத்தம் மீண்டும் சில நொடிகள் கழித்து வந்தது. எனக்குப் பதட்டமானது. விசும்பல் சத்தத்தின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி என்னை நெருங்கி வந்து எனது கால்களைக் கட்டிக் கொண்டது போலிருந்தது. அந்த ஒலி எங்கிருந்து வருகிறதென உற்றுக் கவனித்தேன். நடுமாடத்தின் மையத்தில் இருந்து அந்த ஒலி கிளம்பி வந்தது. கால்களை நகர்த்த முடியவில்லை. சற்று நேரத்தில் கால்கள் தளர்வுற்றது போல் இலகுவானது. மீண்டும் விசும்பல் சத்தம் நடு மாடத்தில் இருந்து கிளம்பி கால்கள் வழியே என்னுடலைத் தொட்டு நீவி மேலேறி என் தாடைகளை நெருங்கியது. எனக்கு கண்ணீர் கண்களில் இருந்து துளிர்த்து உடல் குலுங்க ஆரம்பித்தது. அந்தக்குரல் யாருடையதென்று புரிந்து விட்டது. எழுந்து நின்றேன். ‘ஏண்டா, தம்பி’ என்னைத்தெரியலியா கண்ணு’ என்றது. எனக்கு சப்தநாடிகளும் ஒடுங்கி நாவில் இருந்து சொற்கள் வராமல் பேசமுடியாது அன்னங்கள் ஒட்டிக்கொண்டன. உடலெங்கும் ஒரு மின்சாரம் போல் எல்லா இடங்களுக்கும் அந்த விசும்பல் ஓடியது. எந்த உருவமும் காணமுடியவில்லை. நல்ல வெயில் நேரமாக இருந்ததால் கானல் நீர் தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தது.
நடுமண்மாடத்தின் முன் சம்மணமிட்டு அப்படியே உட்கார்ந்து கொண்டேன். உடலும் உள்ளமும் ஒரு சேர நடுக்கத்தை அனுபவித்தன.
‘ஏய்யா, கண்ணு! என்னப் பாக்க ஆருமில்லீயா சாமி. என்னக் கூட கூட்டிட்டு போ’ என்றது. பேச்சு வராததால் ‘ம்ம்ம்’ என்று தலையாட்டினேன். தலையை வாஞ்சையுடன் தடவி ‘நானுன்னத்தே எம்புள்ளயாட்ட நெனச்சிருந்தேனாயா.. புள்ள பெக்க வழியில்லாம மாண்டுபோனவனு என்னத்தள்ளிட்டியா’ என்றது. ‘ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்’ என வேகமாக அழுதபடியே தலையாட்டினேன். தன் தோளோடு சாய்த்துக்கொண்டு ‘நா ஒன்னோட வந்து இருந்துக்கறங்கண்ணு. ஒன்ன அப்பயாட்டவே நல்ல பாத்துக்குவே’ என்றாள் அத்தை. அய்யோ, அய்யோ! இவ்வளவு நேரம் நான் கேட்டுக்கொண்டிருந்தது அத்தையின் குரல். அத்தையின் விசும்பல். இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பாவுக்கு மட்டும் விளக்கேற்றி விட்டுப்போன நினைவு வந்தவுடன் ‘மன்னிச்சுரு அத்த மன்னிச்சுரு அத்த’ என தலைதலையாக அடித்துக் கொண்டேன். தலையில் இருந்து கைகளை விடுவித்தவள், ‘எஞ்சாமி நானிருக்கச்சொல்லோ அழுவலாமா’ என்று துடைத்துவிட்டாள்.
வறுமை பீடித்துத் தனது கோரமுகத்தை எங்கள் வீட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலம் அது. ஆயாவுக்கு அவளும், அம்மாவுக்கு நானும் கடைக்குட்டிகள். இப்போது போல நினைத்தபோதெல்லாம் உடுத்திக் கொள்ள துணிகள் எடுத்ததில்லை. அத்தை அன்பே உருவானவள் என்பதால் அம்மாவிடமும் பாசத்தோடு ஒட்டிக்கிடப்பாள். அம்மா ரொம்ப காலமாக ரவிக்கை போடாமல் இருந்தாள். அதற்கு காரணம் வறுமையும், அந்தச் செலவில் எங்கள் அனைவருக்கும் துணிகள் எடுக்க நினைத்ததும்தான். அம்மாவின் புடவைகளை இரண்டாகக் கிழித்து அத்தைக்குத் தருவாள். அத்தைக்கு அம்மாவின் சேலைகளே தாவணி ஆனது. தாவணியைக் கட்டிக் கொண்டு ஆடு மேய்க்கையில் அத்தை அந்தக் காலத்தில் படங்களில் வரும் கதாநாயகிகளைப்போல இருப்பாள். எந்தவித ஆடம்பரமும் இல்லாத மனதால் அன்போடு அனைவரையும் கட்டிப்போடுவதால் கிடைத்த அழகு அது. வயது வித்தியாசம் குறைவென்றாலும் என்னைக் குளிக்கவைத்து சாப்பாடு ஊட்டி பள்ளிக்கு அனுப்புவது அத்தைக்குப் பிடித்தமான வேலை. அவள் என்னைக் குளிக்க வைத்து என்னை மார்போடு அணைத்துத் துவட்டி விடும்போது அவள் உடலில் இருந்து மஞ்சள் மணம் வீசும். பள்ளிக்குப்போகாது மெத்தென்ற அவள் மடியில் படுத்து உறங்கி விடலாமென்று மனம் ஏங்கும். அத்தை மாநிறத்துக்குக் குறைவானவள் என்றாலும் வறுமையிலும் இளமையின் பூரிப்பில் அழகு மிளிர்ந்து அதிகாலையில் ஒரு பூ மலர்வது போல மலர்ந்து நிற்பாள். அவள் குளிக்க வைத்தால்தான் நான் அழகாக இருப்பேன் என்று அவளுக்கு ஒரு நம்பிக்கை. தலையை அழகாகப் படிய வாரிவிட்டு கன்னத்தைக் கிள்ளி நெட்டி முறித்து ‘எந்தங்கப்புள்ள நல்லா படிக்கோணும்’ என்பாள்.
ஆளுயர ஆட்டுக்கல்லில் அம்மா காட்டுக்கு சென்றுவிட்டால் நானும் அத்தையும் தான் ஆட்டவேண்டும். நான் சட்டினி கேட்டால் அலுங்காது எடுத்து வேறு யாரும் பார்க்காதபடி ஊட்டிவிடுவாள். சோளத்தை ஆட்டி அத்தை சுடும் பணியாரத்தை எல்லோருக்கும் தந்தது போக எனக்குத் தனியாக யாரும் அறியாமல் எடுத்து வைத்துத் தருவாள். நான் வீட்டின் கடைக்குட்டி என்பதால் அத்தை கூட கடைக்குச் செல்ல, காட்டுக்குச் செல்ல, புளியங்காய் அடிக்க என எல்லாவற்றிலும் கூட்டுக் களவாணிகளாக இருந்தோம்.
அம்மாவின் தம்பி மாமாவுக்கே அவளைக் கொடுப்பதென முடிவு செய்து கல்யாணம் முடிந்து கிளம்பியபோது என்னைக் கட்டிக்கொண்டு அவ்வளவு அழுதாள். எம்புள்ளயாட்ட காலச் சுத்திக்கிட்டு கெடப்பானே அவன விட்டுட்டு எப்படிப்போவே எப்படிப் போவே என்று ஒப்பாரி போல பெருங்குரலெடுத்து அழுதாள். கணவன் வீடு சென்ற அன்றே அம்மைக்கண்டு கன்னிகழியாது ஒரு வாரத்தில் இறந்து போனாள். அத்தை வாழ்க்கையில் எதுவுமே நடக்காமல் இறந்து போனதால் எங்கள் வீட்டுப்பிள்ளையாகவே கருதி இங்கேயே வைத்துவிட்டோம். இத்தனை வருடங்கள் எப்படிப் புழுங்கிக்கிடந்தாளோ அத்தை என்றிருந்தது.
சித்துக்காளி அய்யாவுக்கு போனவுடன் நன்றி சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். நேற்று சித்துக்காளி அய்யா வந்தவுடன் என்ன விவரமென்றார். அப்பா நினைவுநாளன்று வந்த விசும்பல் சத்தம், கோடாங்கி குறி சொல்லியது, மனம் குழம்பி புரியாமல் நிற்பது வரை ஒன்றுவிடாமல் சொன்னேன்.
சேரில் இருந்து கீழிறங்கி தடுமாறி அமர்ந்தவர் நேராக நிமிர்ந்து வேண்டி சோழிகளை உருட்டினார்.
“பூர்வீக பூமியில ஒன் இடத்துல சுடுகாடு இருக்கா?”
எனக்குப் பகீரென்றது. “ஆமாங்க அய்யா. கடைசிப் பையங்கறதால எம்பங்கு மொடக்குச்சாலைகிட்டெ வருது. அங்கனக்குள்ளதே நம்ம பாட்டெ, அப்பமாருங்களெ வச்சிருக்கு.”
மீண்டும் சோழிகளை உருட்டிப்போட்டார். கையில் அவற்றை எடுத்தவர் “உங்க வீட்டுப்பொம்பளக யாரும் கன்னிகழியாம மாண்டு போனாங்களா?”
டங்கென்று மண்டையில் கோடாரியால் ஓங்கிச் சாத்தியதுபோல மின்னி மறைந்தது அத்தை இறந்து போன நிகழ்வு. “ஆமாங்க அய்யா, அத்தை கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் இறந்து போனாள் அவளையும் மொடக்குச்சாலையில்தான் எங்கள் வீட்டு ஆண்களோடு வைத்தோம்.”
“அந்தக் கன்னிப் பொண்ணுதான் அழுதுகிட்டே கெடக்கா. அவளுக்கு நீயின்னாப் பிரியமா தம்பி?.
‘ஆமாங்க அய்யா!.’
“அவ ஒங்கூட வந்து இருக்கணும்னு பிரியப்படறா தம்பி?”
“புரியலீங்களே. அதுவும் இத்தினி காலத்துக்குப் பொறவு!.”
“அததுக்கு ஒரு காலநேரமிருக்கு தம்பி. இத்தனை வருசமா உங்களுக்கு அவ அழுகுரல் கேக்கலனுதான் சத்தமா அழ ஆரம்பிச்சிட்டா. அவ எதுவுமே அனுபவிக்காம நிராசையா செத்துப்போனவ. அவளுக்குச் சீலை எடுத்துவச்சு சாமியா நெனச்சுக் கும்பிட்டு கூடவே வச்சிக்கச் சொல்றா”
எனக்கு மேலும் மேலும் குழப்பமானது. என்னதிது இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று.
“நாஞ்சொல்றதுல நம்பிக்கை வரலியா தம்பி?.”
“இல்லங்க அய்யா?” என இழுத்தேன்.
“வேணும்னா ஒண்ணு செய்யி. திரும்பி ஊருக்குப்போ. உன் இடத்தில் இருக்க சுடுகாட்டுக்குப்போ. எந்த அவசரமும் படாத. அவளா வந்து என்னைக் கூட்டிட்டுப்போனு அழுவறாளா இல்லையான்னு பாரு. இது நடக்கும்.”
“நடக்கலீன்னா?”
“நடக்கும் பாரு.”
“ஒருவேளை அப்படி எதுவும் நடக்கலீன்னா?”
“நான் இனிமேட்டு வாக்குச் சொல்றதையே உட்டுடறேன் போதுமா?”
“என்னங்கய்யா இப்படிச் சொல்றீங்க?”
“பின்ன, சாமி சொல்றதுன்னா சும்மா இல்ல தம்பி. எந்தத் தொழிலுன்னாலும் தெய்வமா நெனச்சாத்தான் நமக்குத் தொழில் வேலை செய்யும். எந்தக் குழப்பமும் இல்லாமல் போங்க. அவளக் கொண்டாடுங்க. அந்தக் கன்னித் தெய்வம் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது. கூடவே இருந்து காக்கும்.” தீர்மானமாகச்சொன்னார்.
இனியும் தாமதிக்காமல் அத்தையைக்கூட்டிச்செல்வது என முடிவு செய்தேன். பெரியசாமி அண்ணன் கடையில் ஓடி அப்பாவுக்கு வாங்கியது போலவே சூடம், பத்தி, சாம்பிராணி என வாங்கி வந்தேன். நடுமண்மாடத்தின் முன் பகுதியில் சுத்தம் செய்து சூடமேற்றி சாம்பிராணி போட்டு பத்தியை ஏற்றி வைத்தேன். எழுந்து நின்று நீளவாக்கில் அந்த இடத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்கிவிட்டுக்கிளம்ப ஆயத்தமானேன். நடந்ததெல்லாம் பிரமையா உண்மையா என்கிற குழப்பம் மட்டும் மீண்டும் தலைதூக்கியது. விசும்பல் சத்தத்தின் ஒலி எதுவும் கேட்கிறதா என ஒரு நிமிடம் நின்று பார்த்தேன்.
என் கரங்களை ஏதோ ஒரு கரம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது போலிருந்தது. குனிந்து எனது கரங்களைக் கவனித்தால் அதைக் காணவில்லை. எந்தச் சத்தமும், விசும்பலும், பேச்சும் எதுவுமேயில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன் வந்து பேசிய அத்தை இங்கே இருக்கிறாளா என்று தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தாற்போல எந்த அறிகுறியும் துளிகூட இல்லை. பற்றியிருந்த கரங்கள் மட்டும் என் கரங்களில் இருந்து விடுபடாமல் இருப்பதை உணரமுடிந்தது.
***
சுபி – கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதை, சிறுகதை, மதிப்புரை என்று எழுத்தில் தொடர்ச்சியாக பங்களித்துவருகிறார். க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதைப் பரிசு பெற்றுள்ளது. இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிவிருக்கிறது. மின்னஞ்சல்:subisenthur82@gmail.com

