கிருஷ்ணமூர்த்தி
ஓவியம் : சீராளன் ஜெயந்தன்
நல்ல உறக்கத்துக்குப் பிறகு வரும் விடியற்காலைக் கனவுகள் நம்மை வேறு ஒரு மனநிலைக்கு இட்டுச்செல்வது போல உறக்கமற்ற இரவுகளுக்கு பிறகு வரும் விடிகாலை கனவுகள் பதட்டத்தின் பாதாளத்துக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.
பக்கத்து வீட்டு பேபியம்மா விடிகாலையில் ஆண்டாள் பாசுரத்தைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு இந்த எண்ணம் தோன்றும். தினமும் இல்லாமல் வாரத்தில் இரண்டு நாளோ அல்லது ஒரு நாளோ அகத்துக்குள் போகாத வார்த்தைகளாய் குழந்தைகள் மனப்பாடம் பன்னுவதுமாதிரி அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார். நான் அந்த நேரத்திலெல்லாம் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு கிளம்புவேன். எனக்குள்ளும் ஒருவரி கூட உள்ளே போகாது
காலைப் பாடல்கள் பாடுகிற நாட்களிலெல்லாம் பார்ப்பேன், அவள் வேறொரு ஆளாய் இருப்பாள். எல்லோரிடமும் எரிந்து விழுந்தபடி அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களைத் திட்டியபடியே அந்நாட்கள் நகரும்.
ஆனால் இப்பொழுது விடிகாலைப் பாடல்களும் அதிகமாகியிருக்கிறது அதேபோல் ஊர்க்காரர்கள் மீது வசைகளும் அதிகமாகியிருக்கிறது
அதற்கு காரணமாய் அவள் வேலை செய்துகொண்டிருந்த ஆயம்மா வேலையிலிருந்து ரிட்டையர் ஆகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிப்போனதுதான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பேபியம்மாவுக்கு வயதின் மூப்பு தெரியாத லட்சணமான முகம். ஆனால் உடல் மட்டும் மெலிந்து சொக்காழி போல இருப்பாள். குரலும் அவ்வளவு இனிமையாக இருக்கும். அவர்கள் சிரிக்கும்போது பார்க்கவேண்டும் அப்படியே ஆண்டாள் வந்து குடிகொண்டது போல் இருக்கும். இதுவெல்லாம் வானத்தில் மேகங்களற்ற நாட்களில் தெரியும் தூர நட்சத்திரத்தின் போலத்தான். என் நாற்பது வயதில் அவளை அப்படி பார்த்தது நான்கு முறையோ ஐந்து முறையோதான். அவர் மகன் சுந்தரத்துக்கும் எனக்கும் ஒரே வயதுதான். ஒன்றாகத்தான் படித்தோம்.
அவனுக்கு அம்மா மீது சிறு வயதிலிருந்து கசப்பான எண்ணங்கள் அதனால் குடி, சினிமா என சுற்ற ஆரம்பிக்க அதுவே அவங்கம்மாவுக்க அவனை திட்டுவதற்கு சாக்காக்கி போனது. அவனும் அவங்க அம்மாவும் இயல்பாக பேசி யாருமே பார்த்ததேயில்லை
ஒரே ஒரு மகனாக இருந்தும் தறுதலையாய் எனக்கு வந்து பொறந்துடுச்சே என்ற புலப்பாடுதான் எல்லோரிடமும் பெபியம்மாவுக்கு இருந்தது.
நிறைய நேரங்களில் அவனைப் பற்றிய குறைபாடுகள் கேட்கின்ற ஆளாய் தேமே என்று நான் நின்றிருப்பேன். நாம் ஏதாவது சொன்னால் அவ்வளவுதான் அதற்கு அப்புறம் எல்லோரிடமும் என்னைப் பற்றியும் சேர்த்து வசை கிழியும்.
ஒரு நாள் இருட்டு கவிழும் நேரமாகப் பார்த்து வெளியில் இருந்து பேபியம்மா கூப்பிடுவதைப் பார்த்து உள்ளே வரச்சொன்னதற்கு தயங்கித் தயங்கி உள்ளே வந்தார். அவர் அவ்வளவாக யார் வீட்டுக்கும் போவதில்லை.
உள்ளே வந்தவர் முகம் வாடிப்போய் நிலை குலைந்திருந்தார். “தம்பி எனக்கு ஒரு உதவி பன்றையா” என்று கேட்டபோது, நான் பதறிவிட்டேன்.
பேபியம்மாவுக்கு கல்யாணம் ஆகி சுந்தரம் வயிற்றில் ஏழு மாதமாக இருக்கும் போது அவர் கணவன் விபத்தில் இறந்து போனார். ஆறு ஆண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து வசதியாக வாழ்ந்தவள் பேபியம்மா.
காலம் அவளுக்கு அளித்த அந்தக் கொடுமைக்கு அவள் அப்படியே உறைந்து போனாள். அவளுக்குள் எல்லாம் இந்தப் பையன் ஜனித்த நேரம் தான் என்ற எண்ணம் வர அவள் அவனைப் பால்குடி மறக்காமல் கூட அவனிடமிருந்து விலக ஆரம்பித்தாள். தாத்தா பாட்டியிடமே சுந்தரம் வளர்ந்தான். பேபியம்மாவுக்கு அவர் அப்பா யார் யாரையோ பிடித்து பள்ளிக்கூடத்தில் ஆயம்மா வேலை வாங்கித்தர அதையும் பெயருக்கெனச் செய்துக்கொண்டு சாயந்தரமானால் ஊரிலிருந்த கோயில்களுக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டார்.
காலம் நகர, நகர தம்பிமார்களுக்குக் கல்யாணம் ஆகி அவரவர்கள் தனியாகப் போக ஆரம்பித்தார்கள். பேபியம்மாவுடைய அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்துபோக அவள் இன்னும் தனிமையிலான பொழுதுதான் சுந்தரத்தின் மீது சின்னதாய் ஒரு பிடிப்பு வர ஆரம்பித்தது அவளுக்கு. பங்கு வந்த சொத்தை கொஞ்சம் விற்று அவனுக்காக வீடுகட்ட ஆரம்பித்தார்.
தாத்தா பாட்டியோடு வளர்ந்த சுந்தரத்துக்கு அவள் அம்மாவோடு அவ்வளவாக இணங்க முடியவில்லை. எப்பொழுதும் சண்டையும் சச்சரவும் வர அவள் இலங்கை அகதிகள் முகாமுக்குப் பக்கத்தில் இருந்த நந்திக்கோயிலில் பழக்கமான அம்பலத்தலம்மாவோடு இருக்க ஆரம்பித்தாள். அம்பலத்தாளுக்கும் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க அவளுக்குத் துணையாக அங்கேயே கிடந்தாள். வேலை அதை விட்டால் சாயந்திரம் நந்திக்கோயில் பூஜை அது முடிந்தால் இரவு அவர்களோடு போய் தங்கிக்கொள்வதெனக் காலத்தை நகர்த்திக்கொண்டிருந்தார். எப்பொழுதாவது வழியில் சந்தித்தால் பேச்சு வாக்கில் நான் சுந்தரத்துக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் ஒரு ஒட்டு கிடைக்கும் என்று சொல்வேன். அந்நேரத்தில் சின்னதாய் அவர் முகத்தில் அசையும் நம்பிக்கை துளிர்ப்பதைப் பார்க்க முடியும்.
சுந்தரத்துக்கு அங்கிருந்தே தன் தம்பிகளிடம் சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தார்.
“தம்பி கொஞ்சம் நான் எம்பிள்ளையோட தனியா பேசணும். நீ அவனுக்கு போன பண்ணி இங்க வரச்சொல்ல முடியுமா? என்று சொன்னபோது பேபியம்மாவின் முகம் நல்ல வெளிச்சத்தில் கூட சுருங்கிப்போய் இருந்தது.
நான் எதுவும் பேசாமல் பின்கட்டுக்குப் போய் சுந்தரத்துக்கு போன் பண்ணலாமா வேண்டாமா என்று யோசித்திருந்த நேரம் பின்கட்டு வாசலில் மா மரத்துக்கு அடியில் ஏற்றி வைத்திருந்த சிறு அகலிலிருந்து பரவிய வெளிச்சம் அந்த இடத்தையே நிரப்ப எனக்கு ஏனோ பழைய பேபியம்மாவின் முகத்தில் வரும் ஆண்டாளின் சிரிப்பு தோன்ற சட்டெனப் போனை எடுத்து சுந்தரத்துக்கு போட்டேன். அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. எடுக்கவில்லை. இரண்டு மூன்று முறை போட்ட பிறகும் அவன் எடுக்கவே இல்லை.
உள்ளே வந்த எனக்கு பேபியம்மா முகத்தை பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தது. அவர் என்னைப் பார்த்த கணமே ஏதோ புரிந்தவள் போல் எழுந்து வெளியே போக ஆரம்பித்தார். ஏனோ மனம் உந்த அவர் முன்னால் போய் தடுத்து நின்றேன்.
அவன் எங்கேயாவது வெளியே போயிருக்கலாம். எதுவாயிருந்தாலும் காத்தாலவர இங்கேயேத்தான் தங்கணும் என்று உரிமையாகச் சொல்லி முடித்த பிறகுதான் எனக்குள் எப்படி அந்த வார்த்தை வந்தது என்று பினாத்திக்கொண்டேன். அவர் சாவகாசமாக “தம்பி உங்க வீட்டுக்குள்ள வரும்பொழுதே என்னை பார்த்துட்டுத்தான் வீட்டுக்குள்ள உள்ளே போனான்” என்று சொல்லியபடியே தலையில் அடித்துக்கொண்டு, ”எல்லாம் எந்தப்புத்தான் அவன உட்டு நா விலகியிருக்க கூடாது” என்று கதறியபடி தரையில் புரண்டு அரற்றிக் கொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்ல முடியாமல் அவர் கையை மட்டும் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
மறுநாள் வீட்டில் பேபியம்மாவுடைய தம்பி, நான், பேபியம்மா என ஆளுக்கு ஒரு மூலையாக உட்கார்ந்திருந்தோம். பேபியம்மா முகத்தில் எந்தச் சுரமும் இல்லாமல் அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை முகாமில் பேபியம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அம்பலத்தம்மாள் இறந்ததற்கு மாலை வாங்கிக்கொண்டு நானும் சுந்தரமும்தான் போயிருந்தோம். பிணத்தைச் சுற்றி ஆறேழு பேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அங்கிருந்த யாரோ ஒருவர் பரபரப்பாக ஒரு டி.வியைப் பொருத்தி அதில் தன் செல்போனை இணைத்து அவர் மகன்களுக்கு காட்டிக்கொண்டிருந்தார். டி.வியின் அந்தப் பக்கம் அழுகுரல்கள் கேட்க, நாங்கள் மாலையைப் போட்டுவிட்டு வெளியே வந்தபோது பேபியம்மா தலைவாசல் பக்கத்தின் ஓரமாக சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதை சுந்தரம் ஒருகணம் நின்று பார்த்தான்.
வழக்கத்து மாறாகச் சுந்தரம் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தான்.
வெளியே வந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு ஒயின் ஷாப்ப்புக்கு விட்டு ஒரு ஃபுல் வாங்கிவந்து பெருமாள் கோயில் அருகில் இருக்கும் காலி கிரவுண்ட் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தான்.
ஏண்டா குடிக்கிறத விட்டுத்தான் ரெண்டு வருஷம் ஆச்சின்ன.? இப்ப இன்னடா இது புதுசா..” என்றதற்கு எதுவும் பேசாமல் தம்ளரில் தண்ணியை ஊற்றியபடி கிரவுண்டில் பெருமாள் கோயிலுக்கு நேந்துவிட்ட கழுதைகள் மேய்ந்துகொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
உனக்கு தெரியாது மச்சான், அவ சகுனத்தை தலையில கட்டிக்கிட்டு அலையிற பொணம். எதுக்கெடுத்தாலும் சகுனம். சாக்காடுன்னு எப்பயும் எல்லோரையும் சாபனை விட்டுக்கிட்டா இருப்பா. ஒரு நாய், பூனைய கூட கிட்டவர உடமாட்ட. அவ பக்கத்துல இருந்து இருந்து எனக்கும் ஒட்டிக்கும்னுதான் நான் விலகி விலகி போறேன். ஆனா காலம் என்ன அங்கதான் வந்து நிக்க வைக்குது. அம்பலத்தாம்மாவோடு இருக்கும்போது மட்டும் நல்லபடியா பேசறதா எனக்கு தோணுச்சி. அவங்களுக்குள்ள ஏதோ ஒட்டுறவு இருக்குன்னு நானும் கிட்ட போவாம இருந்திட்டேன்.
ஏனோ என்னையறியாம இனிமேல அவங்க எங்கடா இருக்கிறதுக்குன்னு சொன்னவுடன் வெறி பிடித்தவன் போல பாட்டில்களை எடுத்து தன் தலையிலேயே அடித்துக்கொண்டான். ரத்தம் வழிய துடைக்கவிடாமல் கூட மிச்சமிருந்த சரக்கை ராவாகக் குடித்து தூக்கிப் போட்டான்.
போதை தலைக்கேறி ரொம்ப நேரம் ஏதோதோ பினாத்திக் கொண்டிருந்தான்.
சூரியன் இறங்கிக்கொண்டிருந்த நேரம். மேய்ச்சலுக்கு வந்த கழுதைகளெல்லாம் கோயிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தலைக்கு மேல் மட்டும் வானம் இருண்டு லேசான தூரலைக் கொட்டிவிட்டுத் தள்ளிப்போனது. அந்நேரம் தூரத்தில் அம்பலத்தாமாளின் சவ ஊர்வலம் போகும் சத்தம் கேட்க, சுந்தரம் எழுந்து வந்து மரத்தடியில் உட்கார்ந்து, “சின்ன வயசுல எங்க பாட்டி சொல்லி கேட்டிருக்கேன் மச்சான், உங்கம்மா ஆண்டாளின் அம்சம்டா. நீ அவகிட்ட போ எல்லாம் சரியாயிடுவான்னு சொல்லுவாங்க. ஒரு தடவ திருக்கோயிலூர் ஜீயர் வீட்டுக்கு வந்தப்ப, எங்கம்மா பாடின பாசுரங்கள கேட்டு ஊர் கூடி நிற்க அப்படியே கண் கலங்கி அவ கால்ல நமஸ்காரம் வாங்கனார்னு சொல்லுவாங்க. ஆனா எங்க மாமாக்காரங்கத்தான் அவ படிச்சா நம்மள மதிக்க மாட்டான்னு அவள புடிச்சி ஒரு நாரபையனுக்கு கட்டிவச்சி இப்படி ஆக்கிட்டானுங்கன்னு சொல்லும்.”
கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாசுரத்தை பாடறது புடிக்காம எங்கப்பா அடிப்பானாம்.புத்தகம் பக்கம் போனாவே அடிதான் விழுமாம். அடிக்கடி அடி தாங்காம தாய் ஊட்டுக்கு வந்துடுமாம். இப்பகூட வீட்டலமாரியில நூறு புஸ்தகம் கிடக்கு.
அதுக்கப்பறம் ஒருநாள் எதேச்சையாக இதோ இந்த பெருமாள் கோயிலுக்குள்ள போறேன் எங்கம்மா பாடிட்டிருக்கறதப் பார்த்து நா அப்படியே நின்னுட்டேன். அப்ப எங்கம்மா அம்லத்தம்மா பக்கத்துல உட்கார்ந்திருந்தாங்க. கண்மூடி ஒரு தியானியை போல. இரண்டு புள்ளைய போர்ல பலி கொடுத்த எந்த சுவடும் இல்லாம அவ்வளவு சாந்தமா அம்பலத்தம்மாவும் எங்கம்மா மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. அன்னிலேயிருந்து எங்கம்மா மேல ஒரு பாசம் வர ஆரம்பித்தது. ஆனா ஊர் சனமும் நானும் எங்கம்மா மேல ஏத்தி வச்ச வெறுப்பு இப்ப பொண்டாட்டி கிட்டேயும் புள்ளங்கிட்டேயும் கொதிப்பா இருக்கு .நான் என்ன செய்ய போறேன்னு தெரியல “ என்று சொல்லி முடித்த பிறகும் அவன் கண்ணிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. நான் எதுவும் சொல்லாமல் சாட்சியாய் நின்றிருகின்ற பெரு மலையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது வெளியே சுந்தரம் நின்றுக்கொண்டிருந்தான். உள்ளே வரச்சொன்னேன். மறுப்பு சொல்லாமல் உள்ளே வந்து அவனது அம்மாவின் எதிரே நின்றான்.
சுந்தரத்தின் மாமா சோபாவில் கால்மேல் கால்போட்டு பஞ்சாயத்து தோரணையோடு பேச வாய் எடுத்ததுமே, அவன் வாசல் பக்கம் போய்விட்டான். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கற்சிலை போல அங்கே உறைந்திருந்தோம். தலைவிரி கோலமாய் சுருண்டு கிடந்த பேபியம்மா எழுந்து தலைமுடியைப் பின்கொண்டை போட்டபடி நகர்ந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டார். இரவெல்லாம் அழுது தீர்த்த கண்கள் இப்பொழுது சலனம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன்.
உள்ளே வந்தவன் பேபியம்மா பக்கத்தில் வீட்டுச்சாவியை போட்டுவிட்டு, சரி நீயே இந்த வீட்டுல இரு நாங்க வேற வீட்டுக்கு போறோம் என்று சொல்லி சரசரவென வீட்டைவிட்டு வெளியேறினாள். ராத்திரியே தட்டுமுட்டுச் சாமான்களெல்லாம் ரெடி பண்ணி வண்டியில் கிளம்பத் தயாராக இருந்தது.
நான் சுந்தரம்ன்னு வாயெடுத்தும், “இல்லடா மச்சான், ஒண்ணா இருக்கறதலாம் சரிபட்டு வராது” என்று சொன்னபோது அவன் வாய் மட்டுமே அசைவதாக எனக்கு தோன்றியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்தச் சாவியை எடுத்து கையில் வைத்துகொண்டாள். நான் திரும்பிப் பார்த்தபோது அங்கு உட்கார்ந்திருப்பது உயிருள்ள ஒரு பிணம் போலவே பேபியம்மா எனக்குத் தெரிந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக பேபியம்மா வீட்டில் எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்தது. போய் பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு வற்புறுத்தியும் சாப்பிடவோ,கோயிலுக்குப் போகவோ இல்லை. அவள் கையில் ஆண்டாள் பாசுரத்தை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள். அதனுடனே ஒன்றிரண்டு மாதம் நடமாடிக்கொண்டிருந்தாள்.
அதற்குப்பின் ஒரு மத்தியான நேரம், முன்வாசலில் இருக்கும் திண்ணையில் பேபியம்மா பாசுரப் புத்தகத்தை அணைத்தபடி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். ஏதோ சன்னதம் வந்தவள் போல எழுந்து உட்கார்ந்தவள் சுற்றும் முற்றும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை உச்சாடனம் செய்வது போலவே இருந்தது. தெருவில் இறங்கி ஓடியவள் நான்கு ஐந்து வீடுகள் தள்ளி இருந்த சந்தில் நுழைந்தாள். நான் பின்னாடியே ஓடினேன்.
ஒரு நாய் இரண்டு கண்களிலும் அடிப்பட்டு ரத்தம் வழியத் துடித்துக்கொண்டிருந்தது. “அம்பாலா அம்பாலா உனக்கு என்னாச்சு என்னாச்சு” என்று கதறியபடி அதை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, “நீ என்ன விட்டு போவமாட்டன்னு எனக்கு தெரியும் அம்பாலா” என்று தன சேலையால் ரத்தத்தைத் துடைத்துவிட்டு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.
விடியற்காலை பேபியம்மா பாசுரம் எடுத்துப் பாடப்பாட பின்வாசலுக்குப் போய் பார்த்தேன். மூன்றாம் பிறை வானில் அவ்வளவு அழகாகச் சுடர்ந்துகொண்டிருந்தது. அதனைச் சுற்றி ஆரஞ்சு நிறத்தில் ஒளி வட்டம் தெரிய பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
என்னையறியாமல் தொலைந்து போய் கண்களில் நீர்ததும்பக் கைகூப்பி நின்றுக்கொண்டிருந்தேன். அன்று பெருமாள் கோயிலில் அம்பலத்தாம்ம்மா தியானித்து அமர்ந்திருக்கும் சித்திரம் மட்டுமே என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.
***
கிருஷ்ணமூர்த்தி – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயத் தொழிலுடன் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அங்கே எளியோர்களின் குழந்தைகளுக்கான மாலை நேரப் பள்ளியை நிறுவியிருக்கிறார். அவ்வப்போது அவரது கதைகள் இதழ்களில் வெளிவருகின்றன
மின்னஞ்சல்: krishik793@gmail.com