Wednesday, October 9, 2024

லங்கூர்

சுரேஷ் பரதன்

க்ஷ்மி பாய்க்கு படபடப்பாய் வந்தது. தலை சுற்றியது. இருந்தாலும் அவள் இப்போது அவசரமாக அவள் வீட்டுக்குப் போக வேண்டும். பாபுவைப் பார்க்க வேண்டும். அவன் அவர்கள் கையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. அது மட்டும் முக்கியம். வேறெதுவும் இப்போது அவளது கவனத்திலில்லை. நடையின் வேகத்தைக் கூட்டினாள். சாகேத் மெட்ரோவுக்குப் போகும் அந்த குறுகலான தெருவைக் கடந்தது, வலது புறம் திரும்பினால் அவளது வீடு வந்துவிடும். மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிட நடை தூரம் தான். ஆனாலும் அவளுக்கு வெகு நேரமாய் நடந்தாலும் வீடு வராததைப் போல, அவள் வீடு அவளை விட்டு தூர தூரமாய் போய்க் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. அவள் கிட்டத்தட்ட ஓடவே ஆரம்பித்தாள்.

தெருமுனையிலிருந்து பார்க்கும்போது வீட்டுக்கருகினில் சின்னதாய் ஒரு கூட்டம் கூடியிருப்பதைப் போல இருந்தது. அவளது படபடப்பு இன்னும் அதிகமாயிற்று. இந்த முறை இத்தனை பேரா வந்திருக்கிறார்கள் என்ற அச்சமும் அவளை தாக்கியது. என்ன ஆனாலும் சரி.. எத்தனை பேர் வந்தாலும் சரி.. இந்த முறை அவர்களின் பொல்லாப் பேச்சிற்கு தான் இரையாகப் போவதில்லை என்று தீர்மானமாய் முடிவெடுத்துக் கொண்டாள். அவள் தன் வீட்டை நெருங்க நெருங்க அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் யாரும் அவளுடைய மாமனார் வழி உறவுகளோ அல்லது மாமனார் ஊர்க் காரர்களோ இல்லை என்று அறிந்து கொண்டாள். வெளியில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அவள் குடும்பத்திற்கும் எந்த விதமான ஒட்டுமில்லை. உறவுமில்லை. தில்லி நகரத்தில் ஆங்காங்கே நின்று பொழுதைக் கழிக்கும் கூட்டம் இந்த மாதிரி நிறையவே இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து பயப்பட ஒன்றும் இல்லை.

தன் சுடிதாரின் துப்பட்டாவை தலைக்கு மேல் ஒரு முக்காடைப் போல போட்டு அதனை கொஞ்சம் கீழே இழுத்துத் தன் முகத்தையும் மூடிக் கொண்டு தன் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். அங்கே அவளது மாமனார் வீட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நின்றிருந்தார்கள். மாமனார் சச்தேவ் மஹாஜன் நடுநாயகமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவருடன் வந்த அவரது சொந்தக்காரர்கள் அவரைச் சுற்றி நிற்க, லக்ஷ்மிபாயின் அப்பா கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார். லக்ஷ்மிபாய் அந்தக் கூட்டத்தில் தன் நான்கு வயது மகன் பாபுவைத் தான் தேடினாள். அவன் அவள் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை. அத்தனை ஆண்களையும் அவர்களின் முதுகுக்குப் பின்புறமாகக் கடந்து தன் வீட்டு வாசலில் முக்காடிட்டு நின்று கொண்டிருந்த அவள் அம்மா கம்லாதேவிக்கு அருகில் அவளுக்கும் முதுகுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள். மெல்ல அவள் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள். “மா பாபூ கஹான் ஹ! அவனை இங்கே காணாமே” கம்லாதேவி முன்பக்கம் கூடியிருந்த கூட்டத்தின் மீதிருந்த பார்வையின் திசையை மாற்றாமல் அவன் இன்னும் பால்வாடியிலிருந்து வரவில்லை என்று கிசுகிசுப்பாகவே பதில் சொன்னாள். லக்ஷ்மிபாய்க்கு மெல்ல உயிர் திரும்பி வந்தது. இப்போது அவள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சச்தேவரின் குரலைக் கேட்கத் தொடங்கினாள்.

“அதுங்க தான் சின்னஞ்சிறுசுக.. எதோ கோபத்துல சண்டை போட்டுக்கிட்டு ஆளுக்கொரு திசையில வந்து இருக்குதுங்க. ஆனா பெரியவங்க நாம் தான புத்தி சொல்லி சேந்து வாழ வைக்கனும். அது நம்ம கடமையில்லையா. அதை விட்டுட்டு அதுக்கு நீங்க இப்படி வீடு எடுத்துக் கொடுத்து தனியாவே வாழ்ந்துக்கோன்னு சொல்லி வச்சுட்டா எப்படி. சின்னப் புள்ளைகளுகக்கு தான் புத்தியில்லைன்னா பெரியவங்களுக்கும் இல்லைங்கிறத எப்படி ஏத்துக்கிறது. இல்லை அவ சம்பாரிச்சுக் கொடுக்குற காசுக்கு ஆசைப்பட்டு இங்கனேயே இருக்கட்டும்ன்னு வைச்சுக்கிட்டீங்களா”

லக்ஷ்மிபாயின் அப்பா எதுவும் பேசாமல் மௌனமாய் தலையைக் குனிந்து நின்று கொண்டிருந்தார்.

“வாய்க்குள்ள அப்படி என்னத்தை வச்சு அடைச்சு வச்சிருக்கீரு. இப்படி ஒன்னுமே பேசாம நின்னா எப்படி. நீரா புத்தி சொல்லி அனுப்பறீரா இல்லை எங்கூட்டு பஹூவை (மருமகளை) நாங்களே கூட்டிட்டு போகட்டுமா.. கட்டுன புருஷன் அங்கன கையில புடிச்சுக்கிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்குறப்ப இந்த ச்சோரி (திருட்டுப் பெண்) இங்கன ஊர் மேய்ஞ்சுட்டு இருக்கிறத எந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஆம்பளை தான் பாத்துக்கிட்டு இருப்பான்”

“யாரு திருடி.. நானா .. என்னத்தைத் திருடினேன்.. யார்கிட்ட திருடினேன்..” லக்ஷ்மிபாய் அவள் அம்மா முதுகுக்குப் பின்னால் இருந்து குரல் எழுப்பினாள்.

“அரே லடுக்கீ… சுப் ரஹோ.. பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது பொம்பளைப் புள்ளை வாய மூடிகிட்டு இருக்கனும்ன்னு உங்க மாதாஜீ உனக்குச் சொல்லித் தரலையா.. இல்லை நாலு காசு இடுப்பு சுருக்குல முடிஞ்சு வைச்சிருக்கேன்னு வாயத் தொறக்கியா..”

கூட்டத்திலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள். அது யார் என லக்ஷ்மிபாய் பார்க்க முற்பட்டாள். சச்தேவருக்கு வால் புடிக்கும் அவர் தெருவைச் சேர்ந்த நடுவயசுக்காரன். லக்ஷ்மிபாய்க்கு சுள்ளென கோபம் வந்தது. இருப்பினும் நிதானமாக பதில் சொன்னாள்.

“அங்கிள் ஜீ… உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தேவையில்லாமல் தலையிடாதே.. அது உனக்கு நல்லதல்ல போன்ற பல நல்ல விசயங்களை எனக்கு என் சிறுவயதிலேயே என்னோட அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அதை ஒருநாளும் மறக்கவே இல்லை. அப்படித்தான் நான் குடும்பம் நடத்தினேன் என்பதை அதோ என் அப்பாஜீ(மாமனார்)யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்தவனின் முகம் சுண்டிப் போயிற்று. அவன் மெதுவாக “சச்தேவ்ஜி.. உங்கள் மருமகளுக்கு வாய்த் துடுக்கு அதிகம் தான். ரகுநாத் எப்படி இவளுடன் குடும்பம் நடத்தினான்.. நீங்கள் ஏன் இவளை மீண்டும் உங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இப்படியே விட்டுவிடுங்கள். குளிர் காலம் வரப் போகிறது.. உடம்பு சூட்டுக்கு ஆளில்லாமல் தனியாய் கிடந்தால் என்றால் புத்தி வந்து தானாய் ரகுநாத்தை தேடி வருவாள்” என்று சொல்லி விஷமமாய் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். .

லக்ஷ்மிபாய் இப்போது தான் கோபத்தைக் காட்ட வேண்டியதின் கட்டாயத்தினை உணர்ந்தவளாய்..

“அங்கிள் ஜீ.. எங்கள் குடும்பத்திலோ அல்லது அப்பாஜீ குடும்பத்திலோ பிறந்த பெண்கள் உடம்பு சூட்டுக்கு அலைந்ததே இல்லை. இல்லையா அப்பாஜீ.” என தன் மாமனாரையும் அவன் பேச்சுக்குள் இழுத்துவிட, சச்தேவர் அவனைப் பார்த்து முறைத்தார். அவருக்குக் கூட அவன் அப்படி பேசியது பிடிக்கவில்லையென அவர் பார்வை காட்டியது. அவன் இனிமேல் தான் பேசினால் எடுபடாது என்று நினைத்து அமைதியானான்.

லக்ஷ்மிபாய் மேலும் பேசினாள். ”அப்பாஜீ யார் கூப்பிட்டாலும் நான் மதன்கிரிக்கு (அவள் மாமனார் ஊர்) வருவதாய் இல்லை. இங்கேயேதான் இருக்கப் போகிறேன். எனக்கு பாபுவும் பாபுவுக்கு நானும் போதும்.”

உடனே சச்தேவர்.. “அதெப்படி அப்படியே விட்டுவிட முடியும். நீ வந்து தான் ஆக வேண்டும். என் மகனின் மனைவி. அப்படியெல்லாம் உன் இஷ்டத்துக்கு விட முடியாது.. உடனே மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு புறப்படு. இல்லையென்றால்…”

“என்ன செய்வீர்கள் அப்பா ஜீ.. மதன்கிரி வீட்டில் வைத்து அடித்தீர்களே அதைப் போல இப்போதும் அடிப்பீர்களா.. மாட்டுக் கொட்டகையின் கூரையில் செருகிவைத்திருந்த மூங்கில் பிரம்பை எடுத்து வந்திருக்கிறீர்களா. ”

சச்தேவருக்கு அவமானமாய் போய்விட்டது. “ஏய்…. நான்.. நான்.. அது வந்து.. எப்போது உன்னை அடித்தேன். எல்லாரும் கூடியிருக்கும் பொது இடத்தில் என் மீது பொய்க் குற்றம் சொல்லாதே.. “ என கோவத்தில் கத்தினார்.
”கத்தாதீங்க அப்பாஜீ.. இப்படி கத்துறதால நீங்க அடிச்சது இல்லைன்னு ஆயிடாது. எத்தனை நாள் அடிச்சிருப்பீங்க.. எத்தனை நாள் குளிர்லேயும் வெயில்லேயும் நான் அந்த மாட்டுக் கொட்டகையிலேயே படுத்து கெடந்திருக்கேன். இன்னும் என் உடம்புல, மனசுல பல காயங்களோட வடு இருக்கு.”

“அதெல்லாம் விடு. அங்கன உன்னோட மாமியார் தனியா கெடந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. அவளுக்கு உடம்பு கூட சரியா இல்லை. நீ என்னடான்னா உன்னோட கடமைகளை விட்டுட்டு இங்க வந்து தனியா குடித்தனம் பண்ணிகிட்டு இருக்க..”

“ஏன் அப்பாஜீ.. உங்க இரண்டாவது மருமகள் சாரதாதேவி வீட்டில் இல்லையா. ஓ,, அவ, விகாஸ் தேவர்ஜீ (கொழுந்தன்) கூட தனிக் குடித்தனம் போயிட்டாளா.. தேவர்ஜீக்கு சம்பளம் கூடியிருச்சா..”

எல்லா திசைகளிலும் தான் மடக்கப்படுவதை உணரத் தொடங்கினார் சச்தேவர்.

கூட்டத்தில் இருந்த இன்னொருவர் “ க்யா.. சச்தேவ்ஜீ,, இந்த சோக்ரி (சின்னப் பெண்) பாட்டுக்கு வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் பாட்டுக்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எழுந்து போய் அவள் முடியைப் பிடித்து இழுத்து வாருங்கள். யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.”

“யாராவது என்னைத் தொட்டீர்கள் என்றால் நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன். அப்புறம் காஸ் சிலிண்டரைத் திறந்து தீ பொருத்தி கொள்வேன். நீங்கள் அத்தனை பேரும் அப்புறம் திஹாரில் தான் ரொட்டி சாப்பிட வேண்டும். சாக்கிரதை.” லக்ஷ்மிபாய் கோபமாய்க் கத்தினாள்.

சச்தேவரும் கூட வந்திருந்த அத்தனை பேரும் பயந்து ஒடுங்கினார்கள். லக்ஷ்மிபாயின் அப்பா அவளை அப்படியெல்லாம் செய்து விடாதே என்ற மாதிரி பார்த்தார், கம்லா தேவியோ அவள் அவசரப்பட்டு எதுவும் பண்ணிவிடக் கூடாதென லக்ஷ்மிபாயின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா விடம்மா.. இவர்கள் என்னைத் தூண்டிவிடாத வரைக்கும் நானாக என்னை ஒன்றும் செய்து கொள்ள மாட்டேன். அப்பாஜீ,, நான் திரும்பவும் சொல்கிறேன் நான் மதன்கிரிக்கு வரமாட்டேன். நீங்கள் போகலாம்,”

வேறு என்ன சொன்னால் இவள் தன்னோடு வர சம்மதிப்பாள் என யோசனை செய்யத் துவங்கினார் சச்தேவர். தன் பிரம்மாஸ்திவாரத்தை உபயோகிக்க முடிவு செய்தார்.

“நீ வரவில்லை என்றால் நாங்கள் சும்மா இருப்போம் என்று நினைக்காதே. பாபு எங்கள் பேரன். ரகுநாத்தின் பிள்ளை. நாங்கள் அவனை உன்னிடம் விட்டு வைக்க மாட்டோம். இப்போதே தூக்கிக் கொண்டு போவோம். அவனை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய். அவனை கொண்டு வந்து கொடுத்துவிடு. நாங்கள் போகிறோம்”. என்றார்.

“ஒருக்காலமும் அது மட்டும் நடக்காது. என் பிள்ளையை உங்க மகனால ஒழுங்கா வளக்க முடியாது..”

“ஏன் முடியாது.. அவன் தன் பிள்ளையை ராசா மாதிரி வளப்பான்.”.

“எப்படி.. என்னைய அப்பப்ப இங்க என் அப்பா வீடுக்கு போயி காசு வாங்கிட்டு வான்னு அடிச்சு அனுப்பினாப்புல இனி தன் புள்ளையை அடிச்சு அனுப்பி காசு வாங்கிவரச் சொல்லி அந்தக் காசுலயா..”

“ஏ புள்ள.. எம்மகன் கெவர்மெண்டு ஆபீஸில வேலை பாக்கான்.. இண்டியா கேட்டு பக்கம்.. விதேஸ் மந்த்ராலாயவுல .. (வெளியுறவு அமைச்சகம்) தெரியுமா.”.

“தெரியும்.. தெரியும். என்ன வேலைன்னு உங்களுக்குத் தெரியுமா.. ”

“அது வந்து… அது வந்து ..”

“சொல்லுங்க அப்பாஜீ.. என்ன வேலை பாக்கார் உங்க மகன். சொல்லுங்க.. ஏன் பேசாம இருக்கீங்க.. என்னையையும் எங்க அப்பாவையும் ஏமாத்தின மாதிரி இவங்க எல்லாரும் ஏமாற மாட்டங்க இல்லையா. அதனால உங்களால சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வேலை அது. இல்லையா அப்பா ஜீ.. நான் சொல்லவா..”

“இவரு பையன் சர்க்கார் உத்தியோகத்துல எல்லாம் இல்லை.. ஆனா இண்டியா கேட்டு பக்கம் இருக்குற எல்லா சர்க்கார் பில்டிங்கு ஆபீஸ்லேயும் அவருக்கு வேலை. அதானா அப்பா ஜீ..”

“என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி எங்கப்பா அங்க போயி விசாரிக்க போனப்ப எதோ ஆபீஸ்ல வேலை பாக்குற மாதிரி நடிக்கத் தெரிஞ்ச உங்க பையனுக்கு முத ராத்திரியிலயோ அதுக்கு அப்புறமாவோ எங்கிட்ட நடிக்க தெரியலை. எப்படிக் கத்தினாரு இல்ல.. அடுத்த ரூம்ல இருந்த உங்களுக்கும் கேட்டுத்தானே இருக்கும் அப்பா ஜீ. எப்படி கத்துனாரு.. ஒரு லங்கூர் குரங்கு மாதிரி. நா பயந்தே போயிட்டேன். அவருக்கு புத்தி சரியில்லாம கத்துறாரோன்னு நெனைச்சேன். அப்புறம் தானே தெரிஞ்சுது. அவருக்கு வேலையே அதுதானாம்.”

“இந்தியா கேட்டுக்கிட்ட இருக்குற எல்லா ஆபீஸ்கள்லேயும் குரங்குகளோடத் தொல்லை ரொம்ப அதிகமாம். சுத்தி இருக்குற மரங்கள்ல குடியிருக்கிற குரங்குகள் அப்பப்ப கூட்டம் கூட்டமா எதுனா தெறந்து இருக்குற ரூம்க்குள்ள போயி ஃபைல் பேப்பர் எல்லாம் கிழிச்சு வைச்சிருங்களாம். கண்ட இடத்துல ஒன்னு ரெண்டுல்லாம் போயி அசிங்கமாக்கி வைச்சிடுங்களாம். அதுகளை எல்லாம் எப்படி வெரட்டுறதுன்னே தெரியாம, இவர் பையன மாதிரி அஞ்சாறு பேரை கம்பனி மூலமா வேலைக்கு வைச்சிருக்காங்களாம். இவங்க என்ன பண்ணி அந்தக் குரங்குகளை வெரட்டுறாங்க. சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் குரங்குன்னா பயம். அதோட ஆக்ரோசம் பாத்து பயம். அதனால இவங்க லங்கூர் மாதிரி கத்திக்கத்தி மத்த சாதரணக் குரங்குகளை வெரட்டுவாங்க. ரகுநாத் அந்த வேலையில ரெம்பக் கெட்டியாம். அவர் கத்துனா அச்சு அசலா ஒரு நிச லங்கூர் கத்துனாப்புலேயே இருக்குமாம். அதனால மத்தவங்க சத்தத்துக்கு பயப்படாத குரங்குகள் கூட ரகுநாத் சத்தத்துக்கு பயந்து ஓடுமாம். குரங்கை கத்தி பயப்பட வைச்ச மாதிரி என்னையையும் கத்தி பயப்பட வைக்க பாத்தாங்க. லக்ஷ்மிபாய் என்ன குரங்கா.. சொல்லுங்க நான் என்ன குரங்கா.. ”

“சரி.. வேலை விசயத்துல தான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பரவாயில்லை. மனுசன் சம்பாதிச்சு குடும்பத்தைப் பாத்துக்குறார்ன்னு தான ஒரு வருஷமா கூடவே இருந்து குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் பெத்துக்கிட்டேன். அந்த வேலையையாவது ஒழுங்கா பாத்தாரா உங்க புள்ளை அப்பாஜீ.. சொல்லுங்க, ஒழுங்காப் பாத்தாரா. பாதி நாளு வேலைக்குப் போறதில்லை. கெடைக்குற பாதி நாள் காசையும் குடிச்சே காலியாக்கினாரு. அப்புறம் குடும்பம் நடத்த காசில்லாம போறப்ப எல்லாம் லெக்ஷ்மிபாயை அடிக்க வேண்டியது உதைக்க வேண்டியது. உங்கப்பங்கிட்ட போயி காசு வாங்கிட்டு வான்னு அனுப்ப வேண்டியது. உன் புருஷன் காசு கொடுக்கலை.. அதனால உனக்கும் ரொட்டியில்லைன்னு எத்தனை நாள் என்னய பட்டினி போட்டிருப்பீங்க அப்பாஜீ.. சொல்லுங்க. என்னை விடுங்க அப்பாஜீ.. பாபு உங்க பேரன் தானே.. மகனோட புள்ளைதானே.. அவனுக்காவது ஒழுங்கா என்னை விட்டு பால் கொடுக்க விட்டீங்களா.. இல்லை.. வீட்டுல கட்டின பெயஸ் (எருமை மாடு) பாலையாவது கொடுத்தீங்களா.. பச்சைமண்ணு பசியில கத்தினப்ப எல்லாரும் வேடிக்கை தானே பாத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப பாபுவை மதன்கிரிக்குக் கூட்டிட்டு போய் ராசா மாதிரி பாத்துக்குவோம் சொல்றீங்க. எப்படி அப்பாஜீ.. எப்படி.. ”

சச்தேவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. என்ன சொன்னாலும் தன் பேச்சை லக்ஷ்மிபாய் கேட்கப்போவதில்லை என்று புரிந்து கொண்டார். ஊரிலிருந்து அவர் சேர்த்துக்கொண்டு வந்த கூட்டத்தின் முன்னால் அவருக்கு தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் கோபம் வந்தது. கொதிக்கும் கோபத்தில் பேசத் துவங்கினார்.

”ஹரே.. ச்சோக்ரீ.. நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேங்கிறது உனக்கு மறந்து போச்சுன்னு நெனைக்கேன். சச்தேவ் மஹாஜன்.. மதன்கிரியில இப்படி எங்கிட்ட பேசுறதுக்கு உதட்டுக்கு மேலே மீசை வச்ச ஒரு ஆம்பளைக்குக் கூட தைரியம் கெடையாது. ஒரு பொண்ணுக்கு இத்தனை தைரியம் எங்கேருந்து வந்தது. நாலு காசு கையில இருக்குன்னு தெம்புல பேசிறியா.. எப்படி வந்தது அந்தக் காசு.. யார் கூட … ”

”நிறுத்துங்க அப்பாஜீ. இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா அப்புறம் மரியாதை கெடையாது. படிக்காத பொண்ணுன்னா யார் கூடயாவது படுத்துத்தான் பணம் சம்பாதிக்கனுமா. இப்படி பேச உங்களுக்கு ஷரம் ஆனாச் சாகியே..(வெக்கமா இல்லையா). பத்து வீட்டுல பர்த்தன் (பாத்திரம்) கழுவுறேன். தரை தொடைக்கிறேன். நாலு வீட்டுல ரொட்டி போட்டு, சப்ஜி வைச்சுக் கொடுக்கிறேன். கெடைக்கிற காசை பத்திரமா சேத்து வைக்கிறேன். இப்படித்தான் லக்ஷ்மிபாய் சம்பாதிப்பா. மத்தபடி இல்லை. ஆமா.. வந்ததுலேருந்து பாக்குறேன். காசு வைச்சிருக்க காசு வைச்சிருக்கன்னே பேசுறீங்களே அப்பாஜீ.. அதுனால தான் இப்ப என்னை கூட்டிட்டு போக வந்தீங்களா. சரிதான். இப்பல்ல புரியுது”

சச்தேவர் மஹாஜனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஒன்னும் தெரியாத பெண்ணை நாலு பேர் வைத்து மிரட்டிக் கூட்டிக் கொண்டு போய்விடலாம். அவளிடம் இருக்கும் காசை அடித்துப் பிடித்து பிடுங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வந்தவரின் மன ஓட்டத்தினை இந்த சின்னப் பெண் எத்தனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டாள் என்று ஏமாற்றமும் ஆச்சரியமும் தோல்வியும் துவளலுமாக அவரை உணர்ச்சிகள் வாட்டியெடுத்தன. இருந்தாலும் வாய்ப் பேச்சுக்கு மட்டுமாவது ஏதாவது சொல்லவேண்டுமென நினைத்தார்.

”உன் காசு பணமெல்லாம் யாருக்கு வேண்டும். ஒழுங்கு மரியாதையாக என்னோடு புறப்பட்டு வருகிறாயா.. இல்லையேல் நான் ரகுநாத்துக்கு வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவேன். நீ, உன் வாழ்நாளெல்லாம் இப்படி தனியொருத்தியாகவே அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். சாக்கிரதை.. ”

”என்ன மிரட்டுகிறீர்களா அப்பாஜீ.. தாராளமாக நீங்கள் அவருக்கு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தப் பெண்ணையாவது காசுக்காக அடித்துத் துன்புறுத்தாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் தனித்து வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்வேன் அப்பாஜீ. ஒரு நாள் நீங்கள் உங்கள் மகனுடன் வாருங்கள். நான் வீட்டு வேலை பார்க்கும் வக்கீலம்மாவிடம் இது குறித்துப் பேசுவோம். பரஸ்பரம் பேசி முடித்து பிரிந்துவிட்டால் ஒருவருக்கும் பிரசச்சினை இல்லை பாருங்கள். இப்போது நீங்கள் போய் வாருங்கள். ”

லக்ஷ்மிபாய் தீர்மானமாகச் சொன்னாள். சச்தேவர் மஹாஜன் தோளில் போட்டிருந்த நீண்ட துண்டை கையில் எடுத்து உதறினார். ”வக்கீலம்மாவெல்லாம் பழக்கமா உனக்கு.” அவர் குரலில் இப்போது சாந்தமும் பயமும் தெரிந்தது.

”உலகம் ரொம்பப் பெரியது அப்பாஜீ. தண்ணீர் தன் மேல் விழும் நிழலைப் பிரதிபலிக்குமே அது போல இந்த உலகம் அப்பாஜீ. நாம் அதன் மேல் எப்படி இருக்கிறோமோ அப்படியே உலகமும் பிரதிபலிக்கும். நல்லவர்களுக்கு இந்த உலகம் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கும். அது போலத் தான் இவ்வுலக மனிதர்களும் அப்பாஜீ. நம்மைச் சுற்றி நல்லவர்கள் வேண்டுமெனில் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அப்படி இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும் அப்பாஜீ. ”

“அப்படியானால், நான் என் மகன் ரகுநாத் யாருமே நல்லவர்கள் இல்லையென குற்றம் சொல்கிறாயா.. ”

”இல்லை அப்பாஜீ.. இல்லை. உங்களுக்கு காசு முக்கியம். காசு கிடைத்துவிட்டால் நீங்கள் நல்லவர். உங்கள் பையனுக்கு குடி போதை முக்கியம். அதை விட்டுவிடார் எனில் அவரும் நல்லவர் தான்.”

”அப்படியானால் அவன் குடிப்பதை விட்டுவிட்டால் நீ அவனோடு குடித்தனம் நடத்துவாயா. ”

”ஏன் முடியாது அப்பாஜீ. அவரை குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள். நிறுத்திவிட்டால் அவர் ஒழுங்காக வேலைக்குப் போவார். ”

”அப்படியானால் நான் சொல்கிறேன் பேட்டா(மகளே). நீ இப்போது என்னுடன் வரலாம் இல்லையா. ”

”இல்லை அப்பாஜீ. இப்போதும் என்னால் அங்கே வரமுடியாது. இங்கே எனக்கு ஓரளவு வருமானம் வருகிறது. அவரும் இங்கிருந்து வேலைக்குப் போகச் சொல்லுங்கள். இருவரின் வருமானத்தையும் சேர்த்து பாபுவுக்கு நல்ல படிப்பைத் தரலாம். இங்கே வீட்டுக்கு வெளியே தெருவில் சாயங்காலத்திலிருந்து ராத்திரி வரை மார்கெட் நடக்கும் அப்பாஜீ. அந்த மார்க்கெட்டின் வியாபாரி சங்கத்தில் ஒரு அங்கிள் ஜீயை எனக்குத் தெரியும். அவர் சங்கத்தில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார். சங்கத்துக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டினால் நானும் மெம்பராகிவிடுவேன். அன்றன்றைய காய்கறி பாவ் (விலை) எல்லாருக்கும் போனில் அனுப்பிவிடுவார்கள். காலையில் வீட்டு வேலைக்கு போய்விட்டு வந்து சாயங்காலத்தில் வியாபாரமும் பார்த்து சம்பாதிக்கலாம். உங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்பலாம். என்ன சொல்கிறீர்கள் அப்பாஜீ.. ”

லக்ஷ்மிபாய் பேச்சை நிறுத்தினாள். சச்தேவர் தன் தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அங்கே இருந்த எல்லாரும் மௌனமாக இருந்தார்கள். சச்தேவருடன் வந்தவர்களில் அவர் வயதுடைய ஒருவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்.

”மஹாஜன்ஜி.. லடுக்கிக்கீ திமாக் தேஜ் ஹ.. ஆவோ. ஹம் சல்தே ஹே.!(இந்த பெண் புத்திசாலி. வாருங்கள் நாம் போகலாம்.) அவள் சொல்வதுதான் சரி. நியாயமும் கூட. ” என்று சொல்லிவிட்டு லக்ஷ்மிபாயின் வீட்டை விட்டு தெருவுக்கு போனார். மொத்த கூட்டமும் அவர் பின்னே சென்றது. சச்தேவ் மஹாஜனும் தான்.

***
சுரேஷ் பரதன் – சொந்த ஊர் நெல்லை. பணி நிமித்தம் வசிப்பது டில்லியில். இவரது படைப்புகளாக முதல் சிறுகதைத் தொகுப்பு “சந்நதம்” மற்றும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு “ஈரூசற்தாண்டவம்” ஆகியன வெளிவந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular