ரேமண்ட் கார்வர் – க்ளாட் க்ரிமால்
தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன்
ரேமண்ட் கார்வர் (1938–1988) ஒரு அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் தனது எளிமையான பாணிக்கும் (minimalist style) மற்றும் தொழிலாளர் வர்க்க வாழ்க்கையின் யதார்த்தமான சித்தரிப்புகளுக்காகவும் கொண்டாடப்பட்டார். அவரது கதைகள் பெரும்பாலும் அன்பு, இழப்பு, போதை மற்றும் மனிதத் தொடர்பு போன்ற கருப்பொருள்களை ஆராய்கின்றன, அவை எளிய, ஆனால் உணர்ச்சிபூர்வமான சக்திவாய்ந்த மொழியில் சொல்லப்படுகின்றன. க்ளாட் க்ரிமால் பாரிஸ் XIII பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராக பணிபுரிபவர். பாரிஸில் வெளியாகும் “L’Histoire ne descend pas des nuages” எனும் இதழில் ரேமண்ட் கார்வரை நேர்காணல் செய்திருந்தார். ஆங்கிலத்தில் வில்லியம் எல். ஸ்டல் மொழிபெயர்த்த நேர்காணல் தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது.
க்ளாட் க்ரிமால் : நீங்கள் ஏன் நாவலைவிட சிறுகதைகள் எழுதுவதை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: வாழ்க்கை சூழல்களால்தான். நான் மிகவும் இளையவனாக இருந்தேன். எனது பதினெட்டாவது வயதில் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவிக்கு வயது பதினேழு. அவள் அப்பொழுது கருவுற்றிருந்தாள். என்னிடம் பணமிருக்கவில்லை. எங்கள் இரண்டு பிள்ளைகளை வளர்க்கவேண்டி நாங்கள் எல்லா நேரங்களிலும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. அதோடு, நான் எப்படி எழுதவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக கல்லூரிக்கும் செல்லவேண்டிய தேவை இருந்தது. இரண்டு மூன்று ஆண்டுகள் எடுத்து நான் செய்யவேண்டியதை அவ்வளவு எளிதாக தொடங்கிவிட இயலாத நிலை. அதனாலேயே நான் என்னை சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதவதில் ஈடுபடுத்திக்கொண்டேன். ஒரு டேபிளில் அமர்ந்து ஒரே மூச்சில் தொடங்கி முடித்துவிடவும் முடியும்.
க்ளாட் க்ரிமால்: நீங்கள் உங்களை நல்ல கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் கருதுகிறீர்களா? அதேவேளை உங்கள் கவிதைகளுக்கும் உரைநடைகளுக்கும் என்னவிதமான தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: எனது கதைகள் நன்றாக அறியப்பட்டவைகள் என்றாலும் எனது கவிதைகளே என்னுடைய விருப்பத்துக்குரியன. தொடர்பா? எனது கவிதைகள் மற்றும் கதைகள் இரண்டுமே சிறியவைகள்.(சிரிக்கிறார்). அவற்றை நான் ஒரே வகையிலேயே எழுதுகிறேன் என்பதாலேயே அவை ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பேன். அதில் நாவலுக்குள் இல்லாத வகையில் மொழி மற்றும் உணர்வுகளின் சாரங்கள் அடங்கியிருக்கின்றன. நான் அடிக்கடி குறிப்பிடுவதுபோல கவிதைக்கும் சிறுகதைகளுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் சிறுகதைகளுக்கும் நாவலுக்கு இடையில் இருப்பதில்லை.
க்ளாட் க்ரிமால்: நீங்கள் படிமத்தின் சிக்கல்களை ஒரே வகையிலேயே அணுகுகிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: ஓ.. படிமம். நான் என் கவிதைகளையும் கதைகளையும் படிமத்தை மையப்படுத்தி எழுதுவதாக என்னிடம் யாரோ கூறினார்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. படிமம் என்பது கதையிலிருந்துதான் உருவாகிறது மாறாக அல்ல. நான் எழுதும்போது படிமங்களைப்பற்றியெல்லாம் நினைப்பதில்லை.
க்ளாட் க்ரிமால்: எந்த கவிதை வழிமுறையைப் பின்பற்றுபவராக உங்களை நீங்கள் கருதுகிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: இப்படி வைத்துக்கொள்ளலாம். எனக்கு வாலஸ் ஸ்டீவன்சைப்பற்றி அக்கறை இல்லை. எனக்கு ராபர்ட் ஃப்ரோஸ்ட் மற்றும் சமகால கவிஞர்கள் பலரைப் பிடிக்கும். கால்வே கின்னல், W S மெர்வின், டெட் ஹுக்ஸ், C K வில்லியம்ஸ், ராபர்ட் ஹாஸ் போன்ற பலரைப் பிடிக்கும். ஐக்கிய அமெரிக்க நாட்டில் தற்பொழுது கவிதையில் உண்மையான மறுமலர்ச்சி நிலவிவருகிறது. உரைநடையிலும் கூட. குறிப்பாக சிறுகதை எழுத்தாளர்கள் மத்தியில் எனலாம்.
க்ளாட் க்ரிமால்: உதாரணத்திற்கு..
ரேமண்ட் கார்வர்: அமெரிக்காவில் இப்பொழுது பல நல்ல படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இது எழுத்தாளர்களுக்கான நல்ல காலம். சிறுகதைகள் நன்றாக விற்பனையாகின்றன. ஏராளமான திறமைமிக்க இளம் தலைமுறையினர் இருக்கிறார்கள். நான் ஒரு தொகுப்பை சரிபார்க்கும் வேலையை செய்தேன். ‘தி பெஸ்ட் அமெரிக்கன் ஷார்ட் ஸ்டோரிஸ் 1986’ எழுதியவர் பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. அனைத்து கதைகளும் நன்றாக இருந்தது. சமகால எழுத்தாளர்களில் ரிச்சர்ட் ஃபோர்ட், டோபியாஸ் உல்ஃப் ஆகியவர்கள் முதல்தரமான எழுத்தாளர்கள் என்பதோடு ஜேன் ஆன் ஃபிலிப்ஸின் சில கதைகளுக்காக அவரையும், ஆன் பீட்டி, பேரி ஹனா, க்ரேஸ் பாலே, ஹரால்ட் ப்ராட்கி, ஜான் உப்டிக் மற்றும் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ் ஆகியோரின் சில கதைகளுக்காவும் அவர்களைக் கண்டு நான் வியந்து பாராட்டுகிறேன். ஆங்கிலேயரான இயான் மேக்வானையும் குறிப்பிடவேண்டும். ஏமி ஹேம்பெல் என்ற மிக இளம்வயது எழுத்தாளர், அதோடு ஐம்பதுகளில் ஃப்ரான்சில் வாழ்ந்த ரிச்சர்ட் யேட்ஸ் இவர்களின் சில கதைகள் எனக்குப் பிடிக்கும்.
க்ளாட் க்ரிமால்: உங்களுக்கு நாவல் எழுதுவதைப் பற்றிய யோசனை இருக்கிறதா?
ரேமண்ட் கார்வர்: இப்பொழுது நான் விரும்புவதை என்னால் எழுத முடியும், அது கதைகள் என்று இல்லை எதையும் எழுதலாம் என்பதனால் ஒருவேளை எழுதலாம். நான் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை முடித்துத்தர வேண்டிய ஒப்பந்தத்தில் இருக்கிறேன். பெரும்பாலானவைகளை முடித்துவிட்டேன் என்பதால் ஜனவரி மாதம் வெளிவரும். அதற்குப் பிறகு பார்க்கலாம். என்னுடைய முதல் தொகுப்பிற்குப்பின் நான் நாவல் எழுதவேண்டும் என்று பலர் விரும்பினர். நிறைய அழுத்தங்களும் இருந்தது. சொல்லப்போனால் நான் அதற்காக முன்பணம்கூட வாங்கியிருந்தேன். ஆனாலும் அதற்கு பதிலாக சிறுகதைகளையே எழுதினேன். எப்படியும் நான் ஒரு நெடிய கதையை யோசித்து வருகிறேன். எனக்கே அதைப்பற்றி தெரியவில்லை.
ஒருவேளை அது நாவலாகவும் மாறலாம். ஆனால் நாவல் எழுதிவிடவேண்டும் என்று எந்த கட்டாயமும் என்னிடம் இல்லை. நான் எதை எழுத விரும்புகிறேனோ அதை எழுதலாம். அதற்கான சுதந்திரம் இப்போது எனக்கு இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இதுவரை எனது ஆசிரியரான ஜான் கார்டனர் பற்றி, என்னுடைய தகப்பனார் பற்றி, எனக்கிருந்த மதுப்பழக்கத்தையும் அதன் பிரச்சனைகள் அதிலிருந்து நான் 1977ல் வெளியானதைப்பற்றி என பலவற்றை கவிதைகள் கட்டுரைகள் சுயசரிதை என எழுதியிருக்கிறேன். இப்பொழுதைக்கு என்னுடைய பதிப்பாளர் நிறைவாக உணர்கிறார். என்னுடைய கதைகள் நன்றாக விற்பனையாகின்றன. எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது.
க்ளாட் க்ரிமால்: ஃப்ரான்சில் உங்களுடைய பிந்தைய தொகுப்புகள் முதல் தொகுப்பிற்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்படுவதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: ’வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ வால் ஈர்க்கப்படாத பலர் ‘கதீட்ரல்’ கதைகள் மேம்பட்டதாக இருப்பதாக உணர்கிறார்கள் போலும்..கடைசியில் எது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியானாலும் பதிப்பாளர் நல்ல முடிவையே எடுத்திருக்கிறார்.
க்ளாட் க்ரிமால்: ஆக உங்களுடைய முதல் படைப்பிற்கும் சமீபத்திய படைப்பிற்கும் இடையில் உங்களுடைய எழுத்து நடையில் மாற்றங்கள் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: ஆம். நிறையவே… என்னுடைய பாணி முழுமையடைந்திருக்கிறது. பரந்துபட்டதாக ஆகியிருக்கிறது. என்னுடைய இரண்டாவது புத்தகமான ‘ வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் துண்டானவைகளாகவும், மிகவும் சிறியதாகவும், சுருக்கமானதாகவும் பெரிய அளவில் உணர்ச்சிகள் அற்றதாகவும் இருந்தன. அண்மையில் வெளியான ‘கதீட்ரல்’ தொகுப்பில் கதைகள் பரந்துபட்டவைகளாக இருக்கின்றன. அவை முழுமையானதாக, வீரியம் மிக்கவைகளாக, மேம்பட்டவைகளாக இருப்பதோடு நம்பிக்கையளிப்பவையாகவும் இருக்கின்றன.
க்ளாட் க்ரிமால்: இவை நீங்கள் வேண்டுமென்றே செய்தவையா?
ரேமண்ட் கார்வர்: இல்லை. அவற்றை வேண்டுமென்றே செய்யவில்லை. எனக்கு எந்த திட்டங்களும் இல்லை. என்னுடைய வாழ்கை சூழல் மாறியிருக்கிறது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டதால் அதிக நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு எழுத்தாளனுக்குள் மாற்றங்கள் நிகழவேண்டும். அவை எதார்த்தமானதாக இருக்கவேண்டும். முடிவெடுத்து செய்தவையாக இருக்கக்கூடாது. அதனாலேயே நான் ஒரு புத்தகத்தை முடித்தபின் ஆறு மாதங்களுக்கு சிறு கவிதைகள் கட்டுரைகள் என்பதைத் தாண்டி எதையும் எழுதுவதில்லை.
க்ளாட் க்ரிமால்: நீங்கள் கதைகளை எழுதும்போதே அவற்றை தொகுப்பிற்காக என்று எண்ணி எழுதுவீர்களா அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டவைகளாக கருதியே எழுதுகிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: நான் அவற்றை ஒரு தொகுப்பாகவே எண்ணி எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அவை முழுமைபெற்று வடிவம் பெறுகின்றன.
க்ளாட் க்ரிமால்: உங்களின் தொகுப்பிற்கான தலைப்பினை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: பொதுவாக சிறந்த ஒரு கதையின் தலைப்பாக இருக்கும். ஆனால் அது கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். “வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்” என்பது தவிர்க்க முடியாத ஒரு தலைப்பு.
க்ளாட் க்ரிமால்: உங்களுக்குப் பிடித்தமான கதைகள் எவை?
ரேமண்ட் கார்வர்: ‘கதீட்ரல்’, ‘எ ஸ்மால் குட் திங்’. எனக்குப் பிடிக்காமல் போன நிறைய கதைகளும் இருக்கிறன, ஆனால் நான் அவற்றை உங்களிடம் சொல்லமாட்டேன். நான் என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகளை பிரசுரிக்க விரும்புகிறேன். நிச்சயமாக என்னுடைய எல்லா கதைகளையும் அல்ல.
க்ளாட் க்ரிமால்: ‘எ ஸ்மால் குட் திங்’ என்பது ‘ வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற ‘தி பாத்’ என்ற கதையை திருத்தி எழுதியதில் உருவானதுதானே?
ரேமண்ட் கார்வர்: ஆமாம். ‘தி பாத்’ ஒரு பத்திரிகையில் இடம்பெற்று எனக்கு என்ன பரிசு கிடைத்தது என்பதே மறந்துபோன ஒரு பரிசைப் பெற்றிருந்தது. ஆனால், அந்த கதை என்னை பாதித்தது. அது முழுமைப் பெற்றுவிட்டதாகத் தோன்றவில்லை. சொல்வதற்கு இன்னும் விஷயங்கள் இருப்பதாகத் தோன்றியது. நான் ‘தி கதீட்ரல்’ எழுதிக்கொண்டிருக்கும்போது (அதைவிட விரைவாக நான் வேறு எதையும் எழுதியதில்லை. அதற்கு எனக்கு பதினெட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே தேவைப்பட்டது) அப்படித் தோன்றியது. ‘தி கதீட்ரல்’ என்ற கதை நான் எழுதிய முந்தைய எல்லாக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது நான் பெருந்தன்மைமிக்கவனாக இருந்த காலகட்டம். “தி பாத்’ கதையை பார்த்தபோது அது முழுமையடையாத ஒரு ஒவியத்தைப்போலத் தோன்றியது. அதனாலேயே அதை மீண்டும் திருத்தி எழுதினேன். அது இப்பொழுது மேன்மையடைந்திருக்கிறது. ஹாலிவுட்டிலிருந்து ஒருவர் அதைத் திரைப்படமாகக்கூட எடுத்திருக்கிறார். ஆஸ்த்திரேலியர்கள் கூட “ஃபேதர்ஸ்’ என்ற கதையை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நான் முதலாவது படத்தைப் பார்த்தேன். அது இரண்டாவதைப்போலவே நன்றாக இருந்தது. அதில் மயிலையும், பல் செட்டையும் போட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.
க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளின் முடிவைப்பற்றி பேசமுடியுமா? உதாரணத்திற்கு “தி கதீட்ரல்” கதையை எடுத்துக்கொள்வோம்.
ரேமண்ட் கார்வர்: அந்த கதாப்பாத்திரம் பார்வையற்றவர்கள்மீது தவறான எண்ணம் கொண்டது. அவன் மாறுகிறான். ஏற்றம் பெறுகிறான். அப்படியான ஒரு கதையை முன்னெப்போதும் நான் எழுதியதில்லை. ’வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ எழுதிமுடித்து ஆறு மாதங்களுக்குப்பின் நான் எழுதிய முதல் கதை. பிறகு அந்த கதையை நான் எழுதி முடித்தபின் அதை மெய்யாகவே முற்றிலும் வித்தியாசமானதாக உணர்ந்தேன். அது எனக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. அப்படி எல்லா கதைகளுக்கும் நிகழ்ந்து விடாது. ஆனால் நான் ஏதோவொன்றை அடைந்ததாக உணர்ந்தேன். அது எனக்கு உற்சாகத்தை அளித்தது. பார்வையுள்ளவன் மாறுகிறான். அவன் தன்னை பார்வையற்றவனின் இடத்தில் பொருத்திப் பார்க்கிறான். அந்தக் கதை ஏதோ ஒன்றை வலியுறுத்துகிறது. அது ஒரு நேர்மறையான கதை. அதனாலேயே அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மக்கள் அதை வேறேதோவொன்றின் படிமமாகப் பார்க்கிறார்கள். கலையின் அம்சமாக, ஏதோ செய்வதற்கான என்ற வகையில். ஆனால் நான் அந்த மனிதன் பார்வையற்றவனின் கைகள்மீது தன் கைகளை வைத்துப்பார்க்கும் தொடுஉணர்வைத்தான் நினைத்துப்பார்த்தேன். அவை முற்றிலும் கற்பனையானதுதான். ஒருபோதும் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. அது ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பு. அப்படியான ஒன்றுதான் ‘எ ஸ்மால் குட் திங்’ கிலும் நடந்தது. அந்த பெற்றோர் ரொட்டி சுடுபவனோடு இருக்கிறார்கள். நான் அதை ஏதோ ஆன்மாவைத்தட்டி எழுப்பும் ஒரு செயலாக சொல்லவரவில்லை என்றாலும் அது ஒரு வகையில் நேர்மறையான முடிவாக அமைந்துவிடுகிறது. அந்த இருவரும் தங்களுடைய குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வருகிறார்கள். அது நேர்மறையான ஒன்று. இரண்டிற்கும் ஒரு வகையான ஒற்றுமை உண்டு. இரண்டு கதைகளுமே நேர்மறை முடிவைக் கொண்டிருக்கின்றன என்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இரு கதைகளும் நிலைத்து நின்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் தன்வரலாற்று குறிப்புகள் அவசியமென்று கருதுகிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: மாப்பசான், செகாவ் போன்ற நான் விரும்பும் எழுத்தாளர்களுக்கு அது அவசியமானதாக இருக்கிறது. கதைகள் எங்கிருந்தாவது வரவேண்டும். எப்படியானாலும் எனக்கும் அது விருப்பமானதாகவே இருக்கிறது. மெய்யுலகத்திலிருந்து சில மேற்கோள்கள் இடம்பெறுவது அவசியமாகிறது.
க்ளாட் க்ரிமால்: அது நீங்கள் எழுதும்போது என்றால் சரி. உங்கள் வாழ்க்கைக் குறிப்புகள் வாசகனுக்கு உதவும் என்று கருதுகிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: இல்லை. இல்லவேயில்லை. ஏதோ ஒரு பிம்பம், நான் கேட்ட வரிகள், நான் பார்த்த காட்சி, நான் செய்தது, என்று ஏதோ ஒன்றை வேறொன்றாக மாற்றியமைக்கப் பார்க்கிறேன். ஆமாம். சிறிதளவு தன்வரலாறும் பெருமளவு கற்பனைகள் இருக்கும் என்பதாக நம்புகிறேன்.
என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களான ஃபிலிப் ராத், டால்ஸ்டாய், மாப்பசான் போன்றவர்களுக்கு ஏதோவொரு அம்சம் பொறியை ஏற்படுத்துவதாக கருதுகிறேன். கதைகள் மெல்லிய காற்றிலிருந்து உருவாவதில்லை. அதற்கு ஒரு பொறி தேவைப்படுகிறது. அந்த வகையிலான கதைகளே என்னை ஈர்ப்பவை. உதாரணத்திற்கு, ’ஃபாட்’ டிற்கு உணவு விடுதியொன்றில் பணியாற்றிய என் மனைவி, என்னுடைய முதல் மனைவி ஒரு நாள் இரவு வீட்டிற்கு வந்தவுடன் அவள் விடுதிக்கு தன்னை பன்மையில் குறிப்பிட்டுக்கொண்ட ஒரு வாடிக்கையாளன் வந்திருந்ததாகவும், ’எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ரொட்டி வேண்டும்’, ‘நாங்கள் இன்று சிறப்பானதொரு இனிப்பை சாப்பிடப்போகிறோம்’ என்று சொன்னதாகக் கூறினாள். அது என்னைத் தாக்கியது. அதை நான் அசாதாரணமானதாகக் கருதினேன். அதுதான் ஒரு கதைக்கான பொறியாக அமைந்தது. அதை நான் பலவருடங்கள் கழித்து எழுதினேன் என்றாலும் என் மனைவி என்னிடம் சொன்னதை நான் ஒருபோதும் மறந்துவிடவில்லை. நெடுநாளைக்குப் பிறகு நான் எழுத உட்கார்ந்தபோது இதை சிறப்பாக எப்படி எழுதலாம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அது நான் விழிப்புணர்வுடனே எடுத்த முடிவு. அதை ஒரு உணவு விடுதியில் பணியாற்றும் ஒரு பணிப்பெண்ணின் பார்வையிலேயே எழுத முடிவெடுத்தேன். என் மனைவியின் பார்வை என்றில்லாமல் ஒரு பணிப்பெண்ணின் பார்வையில்.
க்ளாட் க்ரிமால்: கதையின் முடிவில் அந்தப் பெண் தன் வாழ்க்கை மாறிவிடப்போவதாக சொல்வார், அதை நீங்கள் எப்படி விளக்கப்போகிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: நான் அதை விளக்கவில்லை. அதிலும் ஒரு நேர்மறையானதையே இடம்பெற செய்தேன் என்பதாகக் கொள்ளலாம்.
க்ளாட் க்ரிமால்: அது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு கதை.
ரேமண்ட் கார்வர்: ஆம். அதுதான் அதற்கான சரியான காலமென்று கருதினேன். தி நியூயார்கரில் வெளியிட்ட நான்கைந்து கதைகளுமே கூட நிகழ்காலத்தில் நடப்பதாகவே இருந்தது. எதனால் என்று எனக்குத் தெரியாது. அது ஏன் என்று தெரியாமலே நான் எடுக்கும் முடிவு. சில முடிவுகள் அதுவாகவே அமைந்துவிடுவதுண்டு அதை நான் ஏதோ அமானுஷ்யம் என்பதாக உங்களை எண்ண வைத்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம். அது அப்படித்தான்.
க்ளாட் க்ரிமால்: உங்கள் எழுத்தில் அமெரிக்க மரபு சொற்றொடர்களை சேர்க்க முயல்கிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: நிச்சயமாக. நான் நன்றாக பேச்சை கவனிப்பவன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன். நான் எழுதும் வகையிலேயே மக்கள் பேசுவதாக நான் நினைக்கவில்லை. ஹெமிங்வேயைப்போல என்று சொல்லவேண்டும். அவருக்கும் பேச்சைக் கவனிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் அவர் தானாக உருவாக்கியவை. மக்கள் அவ்வாறெல்லாம் பேசுவதில்லை. அது ஒருவித தாளலயத்துடனானது.
க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் இடம்பெரும் வசனங்களுக்கு எப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: அது முக்கியமானதுதான். அது கதையினை முன்னகர்த்த, கதாபாத்திரத்தை ஜொலிக்க வைக்க போன்றவற்றை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. காரணமில்லாமல் மக்கள் பேசிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை ஆனால், ஒருவர் பேசுவதை மற்றொருவர் கவனிக்காமல் பேசிக்கொண்டிருக்கும் வகையான வசனங்கள் எனக்குப் பிடிக்கும்.
க்ளாட் க்ரிமால்: உங்களுடைய கருப்பொருளைப் பற்றி பேசலாமா?
ரேமண்ட் கார்வர்: ஒரு எழுத்தாளன் அவனுக்கு முக்கியமானதாக இருப்பனவற்றைப் பற்றிப் பேசியாக வேண்டும். நான் பதினைந்து ஆண்டுகள் பல்கலைக்கழகங்களில் வேலைப் பார்த்திருக்கிறேன். அங்கு வேறு வேலைகள் செய்வதற்குமான நேரம் இருந்தும், அது என் வாழ்க்கையில் உணர்வுரீதியாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதாலேயே நான் அந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையைப் பற்றி ஒரு கதைகூட எழுதியதில்லை. என் இளம் பிராயம், எனக்கு நன்றாகத் தெரிந்த மனிதர்கள் என்மீது ஏற்படுத்திய உணர்வுரீதியான தாக்கங்கள் என என் வாழ்க்கையில் பின்னோக்கி பயணித்துப் பார்ப்பேன்… சமீபத்திய என்னுடைய கதைகள் அலுவலர்களைப் பற்றி பேசுகிறது. ( உதாரணத்திற்கு தி நியூயார்கரில் இதழில் “ஹூஎவர் வாஸ் யூசிங் திஸ் பெட்” இல், என்னுடைய முந்தைய கதைகளின் கதாபாத்திரங்கள் ஒருபொழுதுமே பேசிக்கொள்ளாதவைகள் இடம்பெற்றிருந்தன) அவர் ஒரு தொழிலதிபர் போன்றவைகளைக் கூறலாம். பெரும்பாலும் என் கதைமாந்தர்கள் ஏழைகளாகவும் கைவிடப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பொருளாதாரம் முக்கியமானதுதான். நான் அரசியல் பேசும் எழுத்தாளன் அல்ல என்றாலுமே USA வை நல்ல விதமாக சித்தரிக்கவில்லை, நம்பிக்கையுடனான அணுகுமுறையற்றவன், வெற்றிபெற முடியாதவர்களைப் பற்றி எழுதுகிறேன் என்பதால் வலதுசாரியினரால் தாக்கப்பட்டேன். ஆனால், இவர்களது வாழ்வுமே செயல்வீரர்களுக்கு இணையானதுதான். ஆம். வாழ்க்கையில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், பணப்பிரச்சனை, மணவாழ்க்கை பிரச்சனை இவற்றை எடுத்துக்கொள்கிறேன். மக்கள் வீட்டுவாடகை, குழந்தைகள், வீட்டு பிரச்சனைகள் போன்ற அடிப்படை தேவைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அப்படியாகத்தான் 80 -90 சதவீதத்தினர் வாழ்கிறார்கள். அதற்கும்மேல் எத்தனைபேர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். தங்களுக்காக பேச யாரும் இல்லாத நசுக்கப்பட்ட மக்களின் கதைகளைத்தான் நான் எழுதுகிறேன். நானே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்த வாழ்க்கை அது, நான் அதற்கான சாட்சியைப் போன்றவன். நான் அவர்களுக்காக பேசுபவனாக கருதிக்கொள்ளாமல், அந்த வாழ்க்கையை கண்ணுற்றவனாகவே எண்ணிக்கொள்கிறேன். நான் ஒரு எழுத்தாளன்.
(தமிழில் கார்வரின் சிறுகதைகள்)
க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளை எப்படி எழுதுகிறீர்கள் அதன் முடிவை எப்படி கொண்டுவருகிறீர்கள்?
ரேமண்ட் கார்வர்: கதையின் முடிவை எழுதுவதற்கு எழுத்தாளனுக்குள் நாடகத்தனத்திற்கான உணர்வு இருக்க வேண்டும். ஒரு முடிவு என்பது அதிசயமாக வந்துவிடாது. அந்தக் கதையை திருப்பிப் பார்க்கும்போதுதான் கிடைக்கும். நான் பதினைந்து இருபது முறை திருப்பிப் பார்ப்பேன். கதையின் பல பதிப்புகளை என்னிடம் வைத்துக்கொள்வேன். முன்பெல்லாம் அப்படியில்லை இப்பொழுதெல்லாம் புத்தகம் சேகரிப்பு செய்பவர்களுக்காக அப்படி செய்கிறேன். எனக்கு கைகளால் எழுதுவதில் இருக்கும் வலி பிடிக்கும். என்னிடம் செயலி (வர்ட் ப்ராசசர்) எதுவும் இல்லை, ஆனால் தட்டச்சுசெய்து தருபவர் பிழைகளைத் திருத்தி சரியாக்கி தருவதற்கென்று இருக்கிறார். அவர் தருவதை நான் மீண்டும் திருத்திக்கொண்டிருப்பேன். டால்ஸ் டாய் ‘ வார் அண்ட் பீஸ்’ ஐ ஏழுமுறை திருத்தியபின்னும் அச்சுக்கு செல்லும் கடைசி நேரம் வரை திருத்திக்கொண்டிருந்தார். பிழைதிருத்தம் செய்யப்பட்டதின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். நல்லவிதமாக செய்துமுடிக்கப்பட்ட அந்த வேலையின் மீதான அக்கறையை நான் விரும்புகிறேன்.
க்ளாட் க்ரிமால்: அப்படியானால் ‘ஆன் த ரோட்’ ஐ ஒரே மூச்சில் தட்டச்சு இயந்திரத்தை கொண்டு ஒரு பெரிய பேப்பர் சுருளில் படைத்ததாக சொல்லும் கெரோவாக்கை பிடிக்காதுதானே?
ரேமண்ட் கார்வர்: ஆமாம். ‘ஆன் த ரோட்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்றாலுமே அவருடைய மற்றவைகளைப் பிடிக்கவில்லை. அவை படிக்கமுடியாதவை. மிகவும் பழையனதாகிவிட்டன.
க்ளாட் க்ரிமால்: கெரோவாக் பொய் சொல்கிறார் போலும்.
ரேமண்ட் கார்வர்: ஆம். எழுத்தாளர்கள் பொய் சொல்பவர்கள்.( சிரிக்கிறார்)
க்ளாட் க்ரிமால்: உங்களையும் சேர்த்தே சொல்கிறீர்களா?
ரேமண்ட் கார்வர்: (சிரிக்கிறார்) இல்லை. நான் இல்லை. நான் மட்டும் விதிவிலக்கானவன்.
க்ளாட் க்ரிமால்: எந்த வகையான எழுத்தாளர்கள் உங்களை ஈர்க்கிறார்கள்?
ரேமண்ட் கார்வர்: நான் ஆசிரியராக இருந்தபொழுது இளம் எழுத்தாளராக எனக்கு பயனுள்ள வகையில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து வந்தேன். ஃப்ளாபர்ட் அவர்களின் கதைகள் மற்றும் கடிதங்கள், மாவ்பசன்ட் (இவரைப் பற்றி நான் கவிதை ‘ஆஸ்க் ஹிம்’ எழுதியிருக்கிறேன்), செகாவ், ஃப்ளானரி ஓ கனோர், வில்லியம் காஸின் ஒரு நாவல், யுடோரா வெல்டி…
க்ளாட் க்ரிமால்: அதோடு நீங்கள் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசப்படும் ஹெமிங் வே
ரேமண்ட் கார்வர்: நான் அவருடைய படைப்புகள் பலவற்றைப் படித்திருக்கிறேன்.
நான் 19 அல்லது 20 வயதில் படித்தவற்றில் ஹெமிங் வேயும் அடங்கும். உதாரணமாக அதே சமயத்தில் நான் வாசித்த ஃபால்க்னரை விடவுமே ஹெமிங் வேயால் வெகுவாக கவரப்பட்டேன். ஹெமிங் வே அவர்களிடமிருந்து அவரின் ஆரம்பகால எழுத்துகள் வழியாக நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவருடன் ஒப்பிடப்பட்டால் அது எனக்கான கவுரவமாகக் கருதுவேன். என்னைப் பொறுத்தவரையில் அவரது வாக்கியங்கள் கவித்துவமானவை. அதில் தாளலயமும் ஏற்ற இறக்கங்களும் இருக்கும். அவரின் ஆரம்பகாலக் கதைகளை நான் மீள்வாசிப்பு செய்து அவை என்றைக்குமே சிறப்பானவைகள் என்று சொல்லமுடியும். அவை எனக்குள் எப்பொழுதுமே ஒரு பொறியை ஏற்படுத்தும். அவருடைய எழுத்து அற்புதமானது. அவர் உரையாடலைக் கட்டிடக்கலை என்றதோடு பராக் (17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஒரு கலைப்பாணி) காலம் முடிந்துவிட்டது என்றார். அதில் நானும் உடன்படுகிறேன். சொற்கள் என்பது கற்களைப்போன்றது என்றும் ஒருவர் அதைக்கொண்டு சுவர் எழுப்ப முடியும் என்பதாக ஃப்ளாபர்ட் இதேபோல ஒன்றைக் கூறினார். வழுக்கிச் செல்லும்படியான பிடிப்பற்ற வார்த்தைகளைக்கொண்டு எழுதக்கூடிய எழுத்தாளர்களை எனக்கு பிடிப்பதில்லை.
க்ளாட் க்ரிமால்: ஆனால் நீங்கள், ரகசியங்களைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள் அவை என்ன என்பதை ஒருபோதும் சொல்வதில்லை. இந்த திடீர்த்தன்மை, இப்படி சொல்லலாம், உங்கள் கதையின் முடிவுகளில் இருக்கக்கூடிய தொடர்பின்மை உங்கள் வாசகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் வாசகர்களை வெறுப்பேற்றுகிறீர்கள்.
ரேமண்ட் கார்வர்: எனக்கு எப்படிக் கதைகளை எழுதவேண்டும் என்று தெரியுமா என்றே தெரியவில்லை. நான் எழுதுகிறேன். எனக்கு திட்டம் எதுவும் இல்லை. கதை முன்னேற வேண்டும், உச்சநிலை அடைய வேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. என்னால் சிறப்பாக எழுத முடிந்த கதையை எழுதுகிறேன். கதை எதையாவது வெளிப்படுத்த வேண்டும் ஆனால் எல்லாவற்றையும் அல்ல. கதையில் சற்று மர்மம் இருக்க வேண்டும். நான் வாசகனை வெறுப்பேற்ற விரும்பவில்லை. வாசகனுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதைப் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடுகிறேன் என்பது உண்மை.
க்ளாட் க்ரிமால்: உங்களுடைய கதைகளில் பார்வையில் உவத்தல்/ நோக்குக் காமம் இருப்பதாக நினைக்கிறீர்களா? எப்பொழுதும் ஒருவரை ஒருவர் வேவுபார்க்கும் மனிதர்கள், அண்டை வீட்டாரின் வாழ்க்கையால் கவரப்படுபவர்கள் இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.
ரேமண்ட் கார்வர்: அது உண்மைதான். எல்லா புனைவுகளுமே அப்படித்தான். இயல்பாக மக்களிடம் சொல்லாத ஒன்றை சொல்வதுதான் எழுத்து. (சிரிக்கிறார்) ’நைபர்ஸ்’ ல் நோக்குக் காமம் இருக்கிறது,’தி ஐடியா’ விலும் வயதான ஜோடியிடம் தோன்றும் காமக் கிளர்ச்சி. உண்மைதான். ’ நைபர்ஸ்’ ல் அடுத்த வீட்டைப் பார்த்த அந்த ஜோடி கிளர்ச்சியடைவது வருகிறது.
க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் இடம்பெறும் காமம் சலிப்பானதாக அல்லது அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப் பார்த்து கிளர்ச்சியுறுவதாக அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ‘ஃபெதர்ஸ்’ , ‘ நைபர்ஸ்’…
ரேமண்ட் கார்வர்: ஆனால் என்னுடைய கதைகளில் அதிக அளவில் காமம் இல்லை. கதைகள் நிதானமானவை, காமமும் அப்படியானதே. என் கதைகளில் இடம்பெறும் காமம் திரைமறைவாகவும் இயந்திரத்தனமாகாவும் நிகழ்பவையாக இடம்பெறுவது உண்மைதான். எனக்கே தெரியவில்லை.
க்ளாட் க்ரிமால்: ’தி ஐடியா’ வில் அண்டை வீட்டை வேவு பார்க்கும் ஜோடியையும் அடுக்களை மடுவினடியில் இருக்கும் எறும்புகள் இப்படி இணைப்பேயில்லாததாகத் தோன்றும் இரண்டை இணைத்து வைக்கிறீர்கள். தொடர்பே இல்லாதவற்றை தொடர்பு படுத்துகிறீர்கள்.
ரேமண்ட் கார்வர்: ஆம். இணைப்புகள் சாத்தியமற்றவைகளாக மட்டும் தோன்றாமல் தவிர்க்கமுடியாததாகவும் இருக்கின்றன. எனக்கு அவற்றை விவரிக்கத் தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் இந்தக் கதைகளை எழுதும்போது என்னிடம் எந்த திட்டமும் இல்லை. கதையில் எறும்புகளை புகுத்தப்போகிறேன் என்பது தெரியாமலேதான் தொடங்கினேன். தொடங்கும்போது எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இதேவகையில் எழுதுபவர்களை எடுத்துக்காட்டாக சொல்ல எனக்கு முன்னொடிகள் இருக்கிறார்கள். ஒரு முறை ஹெமிங் வேயிடம் அவர் தொடங்கும்போது இதை எப்படி முடிக்கப்போகிறீர்கள் என்று தெரியுமா என்று கேட்டபோது,” இல்லை எனக்குத் தெரியாது‘ என்றார். ஃப்ளனரி ஓ கானரும் கூட எழுத்து என்பது ஒரு கண்டுபிடிப்பு என்று கூறினார். ஒரு வரியிலிருந்து அடுத்த வரிக்குள் என்ன நடக்கும் என்பதே தெரியாது என்றார். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல அதிசயமாகவெல்லாம் முடிவுகள் தோன்றிவிடாது. உங்களுக்குள் ஒரு நாடகத்தனம் இருக்க வேண்டும் அப்போதுதான் எழுதிக்கொண்டிருக்கும்போதோ அல்லது திருத்தி எழுதும்போதோ, நான் திருத்தி எழுதுவதில் நம்பிக்கையுள்ளவனாதலால் முடிவு தோன்றும். திருத்தி எழுதும்போது கதையின் கரு, அப்படி சொல்வது எனக்கு சற்று அசௌகரியமாகத் தோன்றுவதால் கதையின் உணர்வில் ஒவ்வொரு முறையும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
க்ளாட் க்ரிமால்: தற்பொழுது ஃப்ரான்சில் எந்தவிதமாக எழுதப்படுகிறது என்று அறிவீர்களா?
ரேமண்ட் கார்வர்: ம்ம்ம்…இல்லை. ’ தி நியூ’ நாவலுக்குப் பிறகு தெரியாது. ( அது நல்லதுதான் இல்லையா) ஃப்ரான்சில் சிறுகதைகள் பிரபலமாகவில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு வெறும் பத்து புத்தகங்கள் மட்டுமே வெளியானதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மாப்பசான் போன்ற முன்னோர்கள் இருந்த இடத்தில் என்ன நடக்கிறது!
***
சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com





