Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்உள்ளிருக்கும் சொற்கள்

உள்ளிருக்கும் சொற்கள்

காலத்துகள்

நேர்லயே வந்து ரொம்ப ஆசையா கூப்டாங்க. சண்டே முகூர்த்தம் வேற, நீங்க வரலைனா நல்லாருக்காது’

‘அதுக்கென்ன பண்றது, வேலையிருக்கு. நீங்க போயிட்டு வாங்க’

‘இன்னிக்கென்ன வேலை’

‘லேட்டாகுது கெளம்புங்க’

மனைவியும் மகனும் சென்று விட்டார்கள். அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டார். தன் அறையின் கதவையும் ஜன்னலையும் தாழிட்டுவிட்டு, ரகசியக் காமிராக் கண்கள் எதுவும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மடிக்கணினியை இயக்கி, ஒரு வாரத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் வோர்ட் கோப்பை திறந்து தொடர ஆரம்பித்தார்.

தன்னுடைய அப்பனைப் பற்றிய நினைவு எப்போதேனும் வரும்போது ‘பொறுக்கி, கம்மனாட்டி’ என்றவனை வசை பாடுவதுடன், ‘அந்த நாய் செஞ்ச ஒரே நல்லது என்னை லைப்ரரில மெம்பரா சேர்த்ததுதான்’ என்று அவர் எண்ணிக்கொள்வார். அப்போது அவருக்கு எட்டு வயது. அதற்கு முன்பே வாசிப்பில் ஈடுபாடு இருந்தாலும் வாசிப்பில் வழிநடத்த யாருமில்லாமல் அவராக நூலகத்தில் உள்ள பலதரப்பட்ட நூல்களை படித்தபின் அதீதமாயிற்று. தொடர் வாசிப்பு அவரை இலக்கியத்திற்குள் கொண்டு செல்ல, கல்லூரி நாட்களில் அவருக்கு எழுத்தார்வமும் உண்டாகியிருந்தது. வாசிப்பையே யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழல். இழிபிறவியான அப்பனை திருமணம் செய்து, வாழ்வு முழுதும் சந்தித்த அவமானங்களை போக்க இவனை எதிர்நோக்கி இருக்கும் அம்மா. இதில் வேலை தேடாமல் எழுத ஆரம்பித்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம்.

இருபத்தியொரு வயதில் பணியில் சேர்ந்தார். கீழ் மத்தியத்தர பொருளாதார நிலையிலிருந்து ஒருபடி மேலே செல்ல, அவருடைய வேலையும் ஊதியமும் உதவியது. வாசிப்பைத் தொடர்ந்தார். வார இறுதியில் நூலகத்திற்குச் சென்று நான்கு நூல்கள் எடுத்து வருவார். பணிக்குச் சென்றுவரும் போது, வீட்டிற்குத் திரும்பிய பின் என நான்கையும் படித்து முடித்து அடுத்த வார இறுதியில் இன்னொரு நான்கு நூல்கள்.

இருபத்தியிரண்டு வயதில் முதல் முறையாக சொந்தமாக ஒரு புத்தகத்தை வாங்கினார். நூலகத்திலிருந்து எடுத்து பலமுறை படித்தது தானென்றாலும் தனக்கென்று வாங்கும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ‘பதினெட்டாம் அட்சக்கோட்டை’ தேர்வு செய்தவர், மாதம் ஒரு நூல் வாங்க முயற்சித்தார். அவ்வப்போது நோட்டில் தனக்குத் தோன்றுவதை எழுதிப் பார்க்க ஆரம்பித்ததும் அந்த காலகட்டத்தில் தான். இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் கொண்ட வரிகள் நான்கைந்தை எழுதி, அவற்றை கவிதை என்று எண்ணிக்கொண்டிருந்த மாயையிலிருந்து வெகு விரைவில் விடுபட்டார். புனைவெழுதும் ஆர்வம் மட்டும் இருந்து கொண்டேயிருந்தது. எழுதி சில நாட்கள் கழித்து அந்த தாள்களை கிழித்துப் போடுவதில் பல குறிப்பேடுகள் தீர்ந்தன.

முப்பது வயதில் திருமணம் செய்யும்போது, அவர் சேர்த்திருந்த நூலடுக்கைப் பார்த்து மனைவி வியந்தது பெருமையாக இருந்தது. கணவன் மனைவி எல்லாவற்றிலும் ஒத்த மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற எந்த கற்பனையும் அவருக்கு இல்லாததால் மனைவிக்கு வாசிப்பில் ஆர்வமில்லை என்பது குறித்து அவருக்கு எந்த வருத்தமுமில்லை, ‘புக்கை ஒருவாட்டி படிச்சிட்டீங்கன்னா அப்பறம் எப்படி திருப்பி படிப்பீங்க, ட்ரெஸ்னா பழசாகற வரை போட்டுக்கலாமே’ என்று ஒருமுறை கூறிய அலுவலக நண்பர் போலில்லாமல், தான் புத்தகங்கள் வாங்குவது குறித்து மனைவி எதுவும் சொல்வதில்லை என்பதில் மகிழ்ச்சிதான். வாயில் நுழையாத பெயர் கொண்ட லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களின் ஐநூறு, அறுநூறு பக்கங்களுக்கு மேலிருக்கும் நூல்களை அவர் வாங்கிவரும் போது ‘இவ்ளோ பெரிய புக்கை படிக்க எவ்ளோ நேரமாகும்’ என்றும் ‘அப்பப்ப டஸ்ட்ட தொடச்சி வைங்க’ என்று கூறுவது மட்டுமே அவர் வாங்கும் நூல்கள் பற்றிய அவளுடைய கருத்துக்கள்.

திருமணத்திற்குப் முன் இருந்த தனிமை பொழுதுகள் மனைவி வந்தபின் குறைய, புனைவெழுதும் முயற்சியில் தொய்வு. தான் எழுதுவதைப் அவள் பார்த்து என்னவென்று கேட்டால், என்ன சொல்வது என்ற அவராகவே உருவாக்கிக் கொண்ட தயக்கம். அலுவலகப் பயணத்தின் போது எழுதும் முயற்சி, பஸ்ஸின் குலுங்கலில் தோல்வியடைந்தது. மனதிற்குள் கதைகளை சொல்ல ஆரம்பித்தார். ‘என்ன தனியா முணுமுணுக்கறீங்க’ என்று மனைவி கேட்டதற்கு ‘பாடிட்டிருக்கேன்’ என்று இரண்டு மூன்று முறை கூறினாலும் அதையே தொடர்ந்து சொல்ல முடியாது என்பதால், தன் அக-புனைவெழுதுதலையும் குறைத்துக் கொண்டார். வீட்டில் நூல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன, அவற்றைக் குறித்து பேசத்தான் அவருக்கு யாருமில்லை.

புத்தாயிரத்தின் முதல் தசாப்தத்தின் இறுதியில் இணையத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின், இலக்கியம் குறித்த அவருடைய இணைய தேடலில் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் மின்னஞ்சலில் உரையாடுவது ஆசுவாசமாக இருந்தது. கணினி வாங்கியது எழுதுவதற்கும் உதவியாக இருந்தது, என்ன செய்கிறாய் என்று கேள்வி எழுந்தால் ‘சர்ச் பண்றேன், மெயில் அனுப்பறேன்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் இப்போது வேறு பிரச்சனை. எழுதிக் கொண்டிருக்கும்போது, பல கண்கள் பின்னாலிலிருந்து கவனித்து, தன் எழுத்தைக் கிண்டல் செய்வது போன்ற உணர்வு. எழுதியதை உடனேயே அழித்துவிடுவதும் உண்டு. அப்போது நாற்பதை அவர் தொட்டிருந்ததால், மின்னஞ்சல், நீண்ட வாட்ஸாப் இலக்கிய உரையாடல்களாக மாறிய பின்னரும் நண்பர்களிடம் தன் புனைவெழுதும் ஆர்வம், அதற்கான முயற்சிகள் குறித்து அவர் எப்போதும் சொன்னதில்லை.

சேமிப்பிலிருந்த பணம், நகைகள், வங்கிக்கடன் இவற்றைக் கொண்டு வீடு வாங்கும்போது வயது நாற்பத்தியாறு. ‘என் புக்ஸ நம்ம ரூம்ல வெக்க நல்ல ஷெல்ப் வேணும், மத்ததெல்லாம் நீ உன் சாய்ஸ்’ என்று மனைவியிடம் கூறிவிட்டார். சொந்த வீட்டிற்கு சென்றபின் மடிக்கணினி. இணைய இலக்கிய இதழ்கள் வர ஆரம்பிக்க, அவற்றிற்கு தன் புனைவுகளை அனுப்பலாம் என்று யோசித்து முடிவெடுப்பதற்குள், எழுதும் போதெல்லாம் தன் பின்னால் தோன்றும் முகமற்ற கண்கள் ‘உன் எழுத்து குப்பை’ என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு அந்த எண்ணத்தை அழித்து விடுவார்.

‘ஆஞ்செலாஸ் ஆஷஸ்’ என்ற புலிட்சர் விருது வாங்கிய நினைவுக் குறிப்பை வாசித்து, அதை எழுதிய ப்ரான்க் மக்கோர்ட்டின் முதல் நூல் அதுதான் என்றும், அப்போது மக்கோர்ட்டிற்கு வயது அறுபத்தியாறு என்றும் அறிந்தபோது அவருக்கு ஐம்பத்தியொன்று ஆகியிருந்தது. சாகித்ய அகாடெமி கிடைக்க வேண்டாம், பிரசுரமாகி சிலபல நூறு பேர் படிக்க வேண்டாம், ஆனால் இந்த வயதில் தீவிரமாக எழுத ஆரம்பித்து பிரசுர முயற்சி எடுப்பது ஒன்றும் கேலிக்குரியது அல்ல என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தபோது உலகமே பெருந்தொற்றால் முடங்கியது.

இன்னும் மூன்று வருட ஈஎம்ஐ-யை கட்டும் வரையாவது இந்த வேலை நிலைக்க வேண்டும். இந்த வயதில் புனைவெழுத ஆரம்பிக்கலாம், ஆனால் வேறு வேலை கிடைக்காது. முதலில் உயிரோடு இருக்க வேண்டும் என்ற அச்சத்தோடு இரண்டு ஆண்டுகளைக் கடந்தார். இந்த காலத்தில் அவருடைய புனைவு முயற்சிகள் மரணம், அழிவு, மன உளைச்சல் போன்ற கருப்பொருட்களையே தன்னிச்சையாக தேர்வு செய்ததால், எழுதவே பயந்தார். வாசிப்பு மட்டுமே ஆறுதலாக இருந்தது.

முதலிரு அலைகளைக் கடந்தவர், இந்த வருட ஆரம்பத்தில் மூன்றாவதில் சிக்கினார். ‘ரெண்டு டோஸ் வாக்ஸினும் போட்டிருந்தேன், அதனாலதான் ரெண்டு நாள் மட்டும் பீவர் இருந்தது போல. டோலோபாரே சரணம்’, ‘ஆனா டயர்ட்னெஸ் போக பத்து நாளுக்கு மேலாச்சு. புல் பாடி பெயின்’ என்று நண்பர்களிடம் வாட்ஸாப்பில் கூறினார்.

உடல் முழுதும் வலி நிறைந்திருந்த அந்த நாட்களில்தான் இதுவரை தான் கவனித்திராததை முதல் முறையாக உணர்ந்தார். ஷெல்ஃபில் நிறைய நூல்கள், அவற்றினுள் எண்ணற்ற சொற்கள். ஒன்றுகூட என்னுடையது இல்லை. மூன்றாவது அலையில் நான் இறந்திருந்தால், இப்போது மனைவி, மகனைத் தவிர மற்றனைவரும் என்னை மறந்திருப்பார்கள். இருந்ததற்கான ஒரு சின்ன சுவடைக்கூட விட்டுச்சென்றிருக்க மாட்டேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எட்டு வரிகளை எழுதியவன் இன்றும் நினைவில் இருக்கிறான், நான் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதம். அதன் பின் மனைவியும், மகனும் கூட…

இருப்பு, இருத்தல் குறித்து அவரை பீடித்த பயம் அடுத்த இரு மாதங்களில் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தீவிரமாக எழுத ஆரம்பித்தார். விடுமுறை நாட்கள் முழுதும் எழுத்து தான். வீட்டிலிருந்தே வேலை என்பதால், அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தையும், அலுவலக நேரத்தில்கூட முடிந்தவரை எழுதுவதற்கே உபயோகித்தார். வெளியே செல்வதே இல்லை. உடலெங்கும் தன்னைச் சொற்களாக உணர ஆரம்பித்தார். எலும்புகளைத் துளைத்து, சதையை பிய்த்துக்கொண்டு வரத்துடித்துக் கொண்டிருக்கும் சொற்கள்.

கீபோர்டின் மீது சொல்லொன்று விழ, எழுதிக் கொண்டிருந்த வோர்ட் பைல் நிரம்பி ததும்பிக் கொண்டிருந்தது. மடிக்கணினியின் நினைவகத்தில் இடம் இல்லை. தொடர்ந்து தட்டச்சு செய்ய, மேலும் உதிர ஆரம்பித்த சொற்கள், மேஜையை நிரப்பிய பின் தரையில் குவிய ஆரம்பித்தன. நிறுத்தி விடலாம். இல்லை, இத்தகைய படைப்பூக்க மனநிலை இனி வாய்க்கும் என்று சொல்வதற்கில்லை, நான்காவது அலை எப்போது சுருட்டிக்கொண்டுச் செல்லுமோ? எழுத நினைப்பதை, ஒலியில்லாமல் வாயசைத்துக் கொண்டே தட்டச்சு செய்வதைத் தொடர்ந்தார். தரையை நிறைத்த பின் எழும்ப ஆரம்பித்து அவர் அமர்ந்திருந்த இடத்தைத் தவிர அறையை முற்றிலும் நிரப்பியப் பின், கால்களைச் சுற்றிய சொற்கள் அவர் உடம்பில் பரவ ஆரம்பித்தன. சொற்களாக மாறிவிட்ட தன் விரல்களைப் பார்த்துக்கொண்டே, எழுதிக் கொண்டிருந்தவர், உதட்டின் மீதிருந்த சொல்லிலிருந்து ‘ழ’ உதிர்ந்து தன் வாயினுள் செல்வதை இறுதியாக உணர்ந்தார்.

***

காலத்துகள்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது வசிப்பது பாண்டிச்சேரியில்.

சொல்வனம், பதாகை இணைய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலும் அண்மையில் இவரது சிறுகதைத் தொகுதி “வேதாளத்தின் மோதிரம்” நூலும் யாவரும் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular