ஸ்ரீதர் நாராயணன்
ஹரிஹர சங்கரன். இந்தப் பெயரை ஹரியின் தந்தைவழி பாட்டனார்தான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தார்.
“பையன் பிறந்தா ரெண்டு சைட் தாத்தா பேரையும் சேர்த்து ஹரிஹர சங்கரன்னு வச்சிடலாம்”. குட் ஷெட் தெருவின் பின்புறம் சிறிய சந்தின் கோடியில் கனகவல்லி டாக்டர் மகப்பேறு மருத்துவமனை இருந்தது. சிறிய க்ளினிக். நடுவாந்திர அகலத்துடன் அறைகள். பின்புறத்தில் முற்றம் போன்றொரு சிறிய திறப்பு இருந்தது. அதற்குப் பின்னால் ஒரு சிமிண்ட் நடைபாதை. அதன் முனையில் லேபர் வார்ட் வரும். தாத்தா இங்கேயே கையில் பேப்பரும் பேனாவுமாக நின்று கொண்டிருந்தார். பிள்ளை பிறக்கப் போகும் நேரத்தை துல்லியமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டுமென.
“பையன். டைம் 10:41. நல்ல பெரிய தலை. அதான் அம்மாவுக்கு அவ்வளவு வலி படவா” என்று டாக்டரம்மாள் சொல்ல, தாத்தா வேக வேகமாக பேப்பரில் குறித்துக் கொண்டார். செல்ஃபோன் இல்லாத, பொது தொலைபேசிகளும் அதிகம் புழக்கத்தில் வராத காலம் என்பதால், சேதுபதி ஸ்கூல் பக்கம் ஜெனரல் போஸ்ட் ஆபிஸிற்குப் போய் ஃபோன் போட்டு பிள்ளையிடம் சொல்லலாம் எனக் கிளம்பினார். எதற்கும் நர்ஸ் கோகிலத்தம்மாள் வெளியில் வந்தால் ஒரு முறை மருமகளைப் பற்றியும் கேட்டுவிட்டுச் செல்லலாம் என்று சில நிமிடங்கள் தாமதிக்க, உள்ளேயிருந்து டாக்டரின் குரல் மீண்டும் ஒலித்தது.
“பையன். டைம் 10:46. அப்படியே அழகு சுந்தரம்தான். அண்ணனுக்கு பின்னாடியே வழுக்கிட்டு சுருக்க பொறந்திட்டான்” என்றாள்.
உடனே தாத்தாவின் மனதில் தோன்றிய பெயர்தான், கிரிதர மோகனன். ஹரிகிரி சரித்திரம் அப்படித்தான் தொடங்கியது.
அந்த மகப்பேறு மருத்துவமனையில் ஓர் அறைக்கு ஒரு தொட்டில்தான் இருந்தது. “தலைப் பிள்ளய தொட்டில்ல போட்டுடறேன். இவனக் கைப்பக்கமா வச்சுக்க” என்று இருவரையும் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினாள் கோகிலத்தம்மாள். நல்ல அகலமான மரத்தொட்டிலில் குழந்தையை இட்டதும் அது சற்றே ஒருபுறம் சாய, ஹரி ஒருக்களித்து திரும்பிப் படுத்தான்.
அன்று மாலை, காமதேனு அறக்கட்டளை நன்கொடை அளித்த நான்கு புதிய தொட்டில்கள் கனகவல்லி மருத்துவமனைக்கு வந்தன. அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புத் தொட்டில்கள். மேலே சுற்றி சுழலும் ராட்டின பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மலர்த்திய கண்களுடன் பொம்மையை வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தான் கிரி.
சாடைகள் ஒத்துப் போகாத Freternal இரட்டையர் அவர்கள். இரு வேறு கருமுட்டைகளிலிருந்து உண்டான உயிர்கள். ஹரி சற்று பெரிய தலையுடன், கோரை முடியுடன் கொழுத்த கன்னங்களுடன் இருக்க, கிரி அளவெடுத்து செய்தாற்போன்ற அங்க லாவண்யங்களுடன் இருந்தான்.
“நல்ல தடிப்பான அழுத்தமான விரல். மிருதங்கம் வாசிக்க ஏதுவா இருக்கும். இயற்கையா அவனுக்கு லய ஞானமும் இருக்கு. கிளாஸுக்கு அனுப்பி வைங்க நாலே வருஷத்தில் கத்துத் தேறிடுவான்” என்றார் முருகானந்தம்.. அவர் ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வித்வானாக இருந்தார். ஒன்பது வயதில் ஹரி மிருதங்கம் மட்டுமல்லாது ஓரளவிற்கு கஞ்சிராவும் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் திருவிழாவில் சிறுவர் நிகழ்ச்சியில் மேடையேறிய கிரி, ‘பொம்ம பொம்மதா’ பாடலைப் பாட, வாத்தியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. “என்னவொரு கணீர் குரல், கேள்வி ஞானத்திலே இந்தப் போடு போடறானே” என்று அவனை முழுப்பாடலும் பாட வைத்து அவரே பக்கவாத்தியமாக மிருதங்கமும் வாசித்தார். பக்கத்தில் ஹரி கஞ்சிரா வாசித்தான்.
பத்தாவது பொதுத்தேர்வில் ஹரி கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டான். என்று ஒரே தடபுடலாக இருந்தது. அப்போது காந்திகிராம யூனிவர்சிட்டியில் நடத்திய மாவட்ட அளவிலான க்விஸ் நிகழ்ச்சியில் கிரி முதல் பரிசு வாங்கினான். ரேடியோவில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. ஹரியை வாழ்த்த வந்த உற்றார் உறவினர் எல்லாம், கிரியின் வெற்றிக் கோப்பையை அதிசயமாகப் பார்த்து அதைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
உயிரியல் வகுப்பெடுத்த சீதா மேடம் வகுப்பறையில், ‘கருமுட்டை உருவாதல்’ பாடம் எடுக்கும் போது ஹரியையும் கிரியையும் உதாரணமாக நிறுத்தி, எப்படியெல்லாம் இரட்டை கருத்தரித்தல்கள் ஏற்படுகின்றன என விளக்கினார். அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டால், ஹரி, கிரியைவிட ஓரிரு படி உயரமாகவே தெரிவான்.
“இரட்டையர்னாலும், இதில் ஒருவரை விட மற்றொருவர் ஓரிரு நிமிடங்களாவது மூத்தவராக இருப்பர்” என்ற சீதா மேடம், “உங்க பிறந்த நேரம் என்ன?” என்று கேட்டார். “எங்களுக்கு நேரம் சரியா தெரியாது மிஸ். ஆனா இவன் அஞ்சு நிமிஷம் முன்னாடி பிறந்தான்னு அம்மா சொல்லுவாங்க” என்றான் கிரி.
“அப்ப கிரிதான் பெரியவனா இருக்க முடியும். இரட்டையர்னா, பின்னாடி பிறக்கிற குழந்தைதான் முதலில் கருவாக உருவாகியிருக்கும் சாத்தியங்கள் அதிகம் கொண்டது. அதுவும் நீங்க டைஜைகோட்டிக் ட்வின்ஸ் வேற” என்றார் சீதா மிஸ்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹரி மதுரை மாவட்டத்திலேயே இரண்டாவதாக ரேங்க் வாங்கியிருந்தான். வணிகவியலில் சென்ட்டமும் வாங்கியிருந்தான். ‘கல்விச் செல்வம்’ என்கிற இலாபநோக்கில்லாத நிறுவனம், அந்த ஆண்டு மாவட்ட அளவில் ரேங்க் வாங்கியிருந்த மாணவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
“விழா மெட்ராஸில் சீஃப் மினிஸ்டர் முன்னால நடக்கும். பையனை அழைச்சிட்டு வந்திருங்க” என்றார்கள். யார் ஹரியோடு மெட்றாஸுக்குப் போவது, எங்கே தங்குவது என்று வீட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்க, கிரிக்கு மருத்துவப் படிப்பிற்கான அனுமதி கிடைத்து விட்டதாக மாஸ்கோ பல்கலையிலிருந்து தபால் வந்தது. மளிகைக் கடை நாச்சியப்பனின் மகன் சௌந்திரராஜன் முன்பே மாஸ்கோவில் மெடிக்கல் படித்துக் கொண்டிருந்தான்.
“மாடர்ன் ஜெராக்ஸ்” கடை முதலாளி கிருஷ்ணமூர்த்தி, பைகாராவில் இரண்டு கிரவுண்டில் பெரிய வீடு கட்டியிருந்தார். அதன் புதுமனைப் புகுவிழாவில் ஹரியைப் பார்த்தவர், “என்ன படிக்கிறே இப்ப?” என அக்கறையாகக் கேட்டார். அப்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மதுரை வட்டார டீலர்ஷிப்பிற்காக அவர் முயன்று கொண்டிருந்தார். “எம்பிஏ முடிச்சதும், எங்கேயும் ஓடிடாத. உனக்காக பெரிய பிளான் வச்சிருக்கேன்” என்றார். கிரகப்பிரவேச விருந்தில் பந்தி பரிமாறும் போது ஹரி தவறவிட்ட எவர்சில்வர் டம்ளர் தரையில் மோதி எம்பிப் போய் மோனிகாவின் மடியில் விழுந்தது. டம்ளரைத் தூக்கிக் காட்டிய மோனிகா “பாயசத்தையும் மடியில் கொட்டிடாதீங்க” என்று சொல்லி ஹரியைப் பார்த்து முகம் மலர சிரித்தாள். கிருஷ்ணமூர்த்தியின் மனக்கணக்கில் மகள் மோனிகாவையும் சேர்த்துத்தான் திட்டம் போட்டிருந்தார்.
அப்போது தனக்கு லண்டனில் வால்டன் மருத்துவ மையத்தில் வேலை கிடைத்திருக்கிறது என கிரி அறிவிக்க. அவ்வளவு தொலைவிற்கு பையனை எப்படித் தனியாக வேலைக்னெ அனுப்புவது என்று அப்பாவும் அம்மாவும் கவலைப்பட்டார்கள். அதற்கும் மாடர்ன் ஜெராக்ஸ் கிருஷ்ணமூர்த்தியே தீர்வு அளித்தார். அவர் திட்டப்படி கிரியும் மோனிகாவும் தம்பதி சமேதராக லண்டனுக்கு குடிபோனார்கள். ஹரி விருதுநகரில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ப்ரொடக்ஷன் மேலாளராக வேலைக்கு சேர்ந்தான்.
லெதர் இருக்கைகளும், தச்சு வேலைப்பாடுகளும் உள்ள இரத்த சிவப்பு நிறத்தில் ஒரு ஹுண்டாய் காரை புத்தம்புதியதாக வாங்கினான் ஹரி. அதில் பெற்றோரை அழைத்துக்கொண்டு முருகனின் அறுபடை வீடு கோவில்களுக்கும் டூர் போய்வரலாமென திட்டமிட்டிருந்தான். அதற்குள், மோனிஷாவின் பிரசவம் முடிந்து கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் லண்டனிலிருந்து ஊர் திரும்பி விட்டபடியால், கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள துணை வேண்டுமென, கிரி அம்மாவையும் அப்பாவையும் லண்டனுக்கு ஏரோப்ளேனில் அழைத்துக் கொண்டான்.
அப்பா இறந்ததும், குட்ஷெட் தெரு வீட்டை விற்று விட்டு, சொக்கிகுளத்தில் பெரிய அபார்ட்மெண்ட் வளாகத்தில் வசதியான வீடு வாங்கி அம்மாவை அங்கே அழைத்துப் போய்விடலாமென ஹரி திட்டமிட்டான். அப்போது ஊருக்கு வந்த கிரியும் மோனிஷாவும், இனி அம்மா லண்டனுக்கே வந்துவிடலாமே என யோசனை தெரிவித்தார்கள். அம்மாவும், இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் அங்கே தனியாக கஷ்டப்படுகிறாளே எனக் கிளம்பிப் போனாள்.
அப்போது சரணுக்கு நான்கு வயது. சரிதாவிற்கு ஆறு.
“நீங்க பெரியப்பாவா? சித்தப்பாவா?” என சரண் மழலையாகக் கேட்க ஹரியும் கிரியும் சேர்ந்து சிரித்தார்கள். பேசாமல், அது ஹரியப்பா என்றும் இது கிரியப்பா என்றும் கூப்பிடு என மோனிஷா சொல்ல, குழந்தைகளுக்கு அதுவே பழக்கமாகிப் போனது. கைகளை நீட்டி நிற்க இரு குழந்தைகளும் அவற்றைப் பிடித்துக்கொண்டு தொங்க ஹரி தட்டாமாலை சுற்றி வருவான். ஒரே கும்மாளமாக இருக்கும். பிள்ளைகள் பிரியத்துடன் பழகும்போது ஹரிக்கு நெகிழ்ச்சியாக கண்களில் கண்ணீர் சுரக்கும். ஆனால் சாப்பிடுவது, தூங்குவது என்றால் கிரியை கதை சொல்லக் கேட்டு குழந்தைகள் ஓடிவிடுவார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கிராமப் பள்ளிகளை தத்தெடுத்து கல்வி வளர்ச்சி மேம்பாட்டிற்காக நிதி திரட்டும் முயற்சியை, சோலைமலை அறக்கட்டளை நிறுவனம் தொடங்க, அதன் காரிய கமிட்டிக்கு ஹரிதான் தலைமை. அவன் முன்னெடுப்பில் சிங்கப்பூர் மலேசியா என்று ஒரு கலைநிகழ்ச்சிக்கு டூர் சென்று நிதி திரட்ட திட்டமிட்டார்கள். தினமணி பேப்பரில் அதைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டார்கள். அதே சமயம், லண்டன் வால்டன் மருத்துவமனையில் கிரி வைஸ் பிரசிடெண்ட்டாக பதவி உயர்வு பெற்றதைப் பற்றி,, அத்தகைய கௌரவம் பெறும் முதல் இந்தியர் என என்டிடிவியில் அவனுடைய பேட்டி ஒளிபரப்பாகியது.
சரண் கல்லூரியில் சட்டம் படித்துக் கொண்டிருக்க, சரிதா இஞ்சினியரிங் முடித்து வேலையில் சேர்ந்து விட்டிருந்தாள். அப்போது கிரி போன் செய்து. லண்டன் சூழல் அம்மாவிற்கு அவ்வளவாக ஒத்துக் கொள்ள்வில்லை என்றும், ஊரில் ஹரி எப்படி தனியாக சமைத்து சாப்பிடுகிறானோ என்று தீராக் கவலையுமாக இருக்கிறாள் என்றான். “அம்மாவை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றான். அம்மா திரும்பி வரும்போது சர்க்கரை நோயால் பெரிஃபரல் நியூரோபதி பாதிப்படைந்த பாதங்களும் விரல்களுமாக வந்தாள். அதிகம் நடந்தால் மூச்சிரைப்பு வரும் அளவிற்கு உடல் பருமன் கூடிப் போயிருந்தது. ஹரியை கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். அதில் லண்டன் வாசத்தையும், பேரப்பிள்ளைகளின் அண்மையையும் இழந்த சோகம் பிரதானமாக இருப்பதாகப்பட்டது ஹரிக்கு.
அம்மாவின் நடைப்பயிற்சிக்காக ஒரு ட்ரெட் மில், பேரப்பிள்ளைகளுடன் பேசுவதற்கென VOIP போன் கார்டுகள், தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்க பெரிய திரை கொண்ட டீவி என அவள் அறையை தயார் செய்து வைத்திருந்தான் ஹரி. பாகற்காய் பிட்ளை, கத்தரிக்காய் பருப்புக் கூட்டு, கொத்தவரங்காய் பொரியலுடன், அம்மாவிற்கென ஸ்பெஷலாக மாம்பழ புளிசேரியும் சமைத்தான். நாக்கில் விட்டுப் பார்த்தால் அப்படியே அம்மாவின் கைப்பக்குவம் அதில் தெரிந்தது. அப்பா இருந்த காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளித்தட்டை தேடி எடுத்து, நெய்விட்டு பிசைந்த சாதத்தையும் இதர காய்கறிகளையும் அதில் பரிமாறி, கூடவே புளிசேரியை ஒரு கிண்ணத்தில் விட்டு எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றான். பெரிய சாய்வு ரிக்ளைனரில் கால் நீட்டி அமர்ந்தபடி சீரியல் பார்த்துக் கொண்டிருநந்தவள், ‘வாடா வா…. வா….’ என்றபடி எழுந்து கொண்டாள். அவள் அழைப்பதைக் கேட்டதும் ஹரிக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவயதில் கேட்ட அம்மாவின் வாஞ்சையான குரல் அப்படியே இருந்தது. கண்களை விரித்து அம்மாவை ஆசைதீரப் பார்த்தான்.
நீ உண்மையிலேயே என் மேல பிரியம் வச்சுத்தானே எங்கிட்ட திரும்பி வந்திருக்கே? என்ற கேள்வி எழும்பி தொண்டைவரை வந்துவிட்டது.
சுதாரித்துக்கொண்டு தன்னைத்தானே இதென்ன அபத்த சிந்தனை எனக் கடிந்து கொண்டான். ஒரே உதரத்திலிருந்து ஒரே நேரத்தில் ஜனித்தவர் என்பதைத் தவிர அவன் உலகிற்கும் கிரி உலகிற்கும் எவ்வித ஒற்றுமையுமில்லை. உருவம், படிப்பு, பணிச்சூழல், நடையுடை பாவனை, குடும்பம், நட்பு என அனைத்தும் வேறு. அவனுடைய வாழ்க்கையின் அத்தனை சம்பவங்களையும் கிரியுடன் ஒப்பிட்டுக் கொண்டு ஏன் இப்படி தானே தன்னை அலைக்கழித்துக் கொள்கிறோம் என்று கோபமாக இருந்தது. யார் என்ன நினைத்தால் என்ன அம்மாவிற்கு எப்போதும் அவந்தான் தலைப்பிள்ளை. அவள் கண்களில் அவனுக்கே அவனுக்கான பிரத்யேக பிரியம் எப்போதும் மினுமினுத்துக் கொண்டே இருக்கும்.
“அம்மா” என்றான் வாய் நிறைய அன்புடன்.
புளிசேரியை சேர்த்து ஒரு கவளம் சோற்றை வாயில் போட்டு ருசித்து சாப்பிட்டாள், ஹரியின் கையைப் பிடித்துக் கொண்டு,
“இப்படித்தான். கிரியோட ஃப்ரெண்டு ஒர்த்தன் கோவிந்த நாயர்ன்னு…. ஒருதரம் நம்ம வீட்டு புளிசேரி சாப்பிட்டுட்டு இதான் பெஸ்ட்டுன்னு ஒரே பாராட்டு” சிரித்தாள். “அங்க ஒரு மலையாள சேனல்… இந்த ட்யூப் ட்யூப்ன்னு ஏதோ சொல்வீங்களே. ஃபோன்ல ல்லாம் பாப்பாங்களே. அதுல போய் கிரி ஒருதரம் புளிசேரி அவியல் துவரன் எல்லாம் செஞ்சு காட்ட அவங்கள்லாம் அசந்து போயிட்டாங்க போ. அந்த வீடியோ ஆகா ஓகோன்னு போச்சாம்” என்றாள்.
***
ஸ்ரீதர் நாராயணன் மதுரையைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது அமெரிக்காவில், 2007ம் ஆண்டு ‘ரசவாதம்’ எனும் அறிவியல் புனைவுக் கதையோடு எழுத வந்தவர். இதுவரை இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “கத்திக்காரன்” & “அம்மாவின் பதில்கள்”
ஸ்ரீதர் நாராயணனின் நூல்கள் வாங்கிட இங்கே சொடுக்கவும்