வைரவன்
இருட்டில் ஒளிந்துக் கொண்டிருந்த என்னை நிச்சயமாக அந்த வீரன் கவனிக்கவில்லை. குளிரில் உறைந்து போய்விட்ட என் கால்களை கைவிரல்கள் தொடும்போது எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இன்னொருவன் உடையதாய் கிழிந்த காலுறையில் வெளிபிதுங்கி நின்ற பெருவிரல் பல்லிளித்தது. காட்டின் இருளில் பசுமை மறைந்து போன வெளிகளில் நிலவொளி மரத்தின் இடைவழி மின்ன, என் கண்கள் கூசியது. அவனது ஆங்காரமான கைகள் கீழே நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையை உருவும் போது அவளின் கதறல்களை நான் கேட்டேன். அவளின் நாக்கு பூரணமான வார்த்தைகளை அவிழ்த்து விட்டது. அவையெல்லாம் இறைவனை நோக்கிய வேதனை கொப்பளிக்க பிறந்த சொற்கள். அவை மேல்நோக்கி வட்டமிட்டுச் செல்வதை கண்கள் கவனித்தன.
ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் ஒட்டியபடியே மிதப்பதை நான் பார்த்தேன். அவற்றின் வடிவு என்னை ஆச்சர்யப்படுத்தியது. எப்படி இவள் மிருகத்தின் காலடியில் மிதிப்பட்டு இருக்கும் போதும் நேர்த்தியான வார்த்தைகள் மூலம் இறைவனை அலங்கரிக்கின்றாள், அவ்வளவு மேன்மைப் பொருந்தியவனா அவன். அருந்திய மதுவின் வேலையென, எனக்குள் ஒருவன் தலையைத் தட்டி அதையெல்லாம் கவனிக்காதே அவையெல்லாம் வீண்வேலை என்றான். இருந்தாலும் என் கண்கள் வான் நோக்கின. ஆயுதம் ஏந்திய ஒருத்தன் இறங்கி வருவான் என்பதை என் மனம் நம்பியதை வேறொருவனுக்குச் சொல்லி என்ன பயன் என்பது போல, இதயத்தில் கடைசி இருந்த குழியில் போட்டு மண் நிரப்பினேன்.
மீண்டும் அவன் தலையில் தட்டி ‘ஏய் உனக்குள்தானே நானிருக்கிறேன், நீ ஒரு அடிமுட்டாள் என்பதை நிரூபிப்பதில் ஏன் அத்துணை மகிழ்வுறுகிறாய்’ என்றான். நான் உடனே உனக்கு ஒரு பெயர் சூட்டிக்கொள்கிறேன் அப்போதுதான் நினைத்தவுடன் உன்னை நான் அழைக்க முடியும் என்றேன். அதற்குள் ‘உனக்கு நான் ஏற்கனவே பெயர் சூட்டிவிட்டேன். உன் பெயர் முட்டாள்’ என்றான். அவனது சொற்கள் எனக்குள் இருந்த அகங்காரத்தைத் தூண்ட நானும் சிரித்துக் கொண்டே ‘அட அற்ப பயலே. என்னுடலில் பாதியாய் இருந்து என்னையே இழிவு செய்கிறாயா. பார் உனக்கு நான் இப்போதே இறைவனின் நாமத்தால் பெயர் சூட்டுகிறேன். உன் பெயர் முட்டாள்’ என்றேன். ‘உனக்கென்று சுய அறிவு கூட இல்லையே. நான் சூட்டிய பெயரையே நீயும் உபயோகிக்கிறாய் ‘, ‘ஏன் உலகமே முட்டாள்களால் இயக்கப்படும் நிலையில் இரண்டு முட்டாள்கள் அருகருகே இருப்பதில் பிழையில்லையே’ – நான் சொல்லிவிட்டு அமைதியாகி, தூரமாய் நடக்கும் காட்சிகளை உள்வாங்கினேன். அவனிடம் இருந்து மேலெழும்பாத கேள்விகளே மாள முடியாத மகிழ்ச்சியில் என் உள்ளம் திளைத்து முகம் சிவக்க வைத்தது.
அவளின் மார்புக் கச்சையை பிய்த்தெறியும் போது கண்கள் அவளின் முலைகளையே நோக்கின. தளர்ந்து தொங்கிய முலைகள். முட்டாள் சொன்னான் ‘வயதான பெண்ணிடம் வீரத்தைக் காட்டுகிறான். பார்க்கலாம் அவனின் அதிவீரத்தை. நானும் இளையவள் ஒருத்தியை தூக்கிக்கொண்டு புணர முயற்சிக்கிறான் என்றே நினைத்தேன்’, நானும் பதிலுக்கு நெஞ்சில் பலமாய் தட்டியபடி, ‘என் இளையப் பெண்கள் அவனை தூக்கி எறிந்து, காலால் மிதித்து, கைகளாலே மார்பை பிளந்து அதன் வழியே பீச்சி அடிக்கும் ரத்தத்தை குடிப்பார்கள். இன்றைக்கு அவனுக்கு அதிர்ஷ்டம்தான் என்பேன். கிராமத்தில் சென்று ஒரு வயதான பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறான். நிச்சயமாக கோழையைப் போல தெரிகிறான். அவனின் வேகத்தைப் பார்த்தாயா ஒரு பொலிக் குதிரையை போல. பெண்ணுடலை மேயப் பார்க்கிறான்’.
‘நீயும் ஒரு புரட்சிகரக் குழுவில் இருந்தவன்தானே. ஏன் அமைதியாய் வேடிக்கை பார்க்கிறாய். போய் ஒரு எத்து விடக்கூடாதா’ முட்டாள் மீண்டும் சொன்னான். ‘அங்கே அவனுள் எழும் வேகத்தைப் பார்க்கிறேன். நானும் மனைவியை, குழந்தையை விட்டு வெவ்வேறு சூழலில் ஓடினேன். நெடுநாட்கள் காட்டின் சகல காலநிலையிலும் உடல்கள் மரத்து போயிருக்கும். ஆனால் விரகதாபங்கள் மட்டுமே எரியும். உணர்ச்சிகள் அவர்களுக்குள் எரியும் வேளையில் ஆண்கள் பெண்களுடனும், ஏன் ஆண்கள் ஆண்களுடனும், பெண்கள் பெண்களுடனும் புணர்வதை நான் கண்டிருக்கிறேன். அங்கே இருசாராரும் தன்னைத் தொலைத்து மீண்டும் தன்னைக் கண்டடைவதில் எவ்வித கேடும் இருப்பதாய் தோன்றியதில்லை. அவரவர் பாடு இல்லையா. எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.
மொத்த உணர்ச்சியையும் தினம் தினம் என் மண்டைக்குள் அடைத்து கூடு கட்டுவேன். அவை ஒரு ஆலமரம் போல விழுதுகளை விரித்து நிற்கும். அது சரிய ஆரம்பிக்கும் சமயம் அரசின் பாதுகாப்பு படைக்குத் தெரியாமல் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் முதலில் கண்கள் மனைவியை மட்டுமே தேடும். குழந்தைகள் என் காலண்டையில் நின்று என்னைப் பிடித்து ‘அப்பா, அப்பா’ என்று கத்தினாலும் அவைகளை கைகள் அகற்றி அந்த அழகி வந்ததும் அப்படியே அள்ளித் தூக்கும். பின் என் அறைக்குள் செல்வேன். உனக்கு தெரியுமா என்னுடைய மோசமான உறுப்பைப் பற்றி? அது என் மூக்கு. அறைக்குள் நுழைந்ததும் வேறு ஆண்களின் மணத்தை அவை மோப்பம் பிடிக்கும். அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவளின் அத்துணை சதை துணுக்குகளையும் நாவால் நக்கி ஆண்மை பெருக புணருவேன். மொத்தப் பலமும் இழந்தவுடனும் ஆடைகளை உடுத்தி வெளியே வருவேன். பிள்ளைகள் அறையின் கதவருகே நிற்பார்கள்.
ஒருநாள் என் மூத்த பிள்ளை மெதுவாக அழைத்து காதில் ரகசியம் என எண்ணி குரலைத் தாழ்த்தாமல் “அப்பா, நீங்கள்தான் உண்மையிலே எங்கள் அப்பாவா? அம்மா சிலவேளை ஒரு தாடிக்காரக் குண்டனையும், ஒல்லியான தையல் வேலை செய்யும் கருமியையும் அப்பா என்று அழைக்கச் சொல்கிறாள். உங்களுக்கே தெரியுமே! நான்தான் வளர்ந்து விட்டேன். என்னுடைய மூக்கும் மோவாயும் தங்களுடையதைப் போலவே இருக்கின்றன. ஆனால் தம்பி தங்கைகளின் முகச்சாயல் அப்படியில்லையே. நான் மட்டும்தான் உங்கள் பிள்ளை அல்லவா! உங்களோடு என்னை அழைத்துச் செல்லுங்கள். நானும் சண்டை புரிய தயார் ஆகிவிட்டேன். அன்றைக்கு காட்டில் ஒரு நரியை ஒற்றையாக கொன்றேன். சரி சரி அந்தப் பொம்பளை பார்க்கிறாள்” சொல்லிவிட்டு அமைதியாக மனைவியின் அருகே சென்றான். அவள் என்னை நோக்கி புன்முறுவல் செய்தாள், நானும் பதிலுக்குச் சிரிக்க வேண்டியதாய் ஆச்சு’. அருகில் இருந்தவன் கோபத்தோடு என் தலையில் தட்டி ‘உன் கதையை யார் கேட்டார். நான் அறியாததா? அந்தப் பெண் இன்னும் அவனின் வலுவான பிடிகளுக்குள் மாட்டிக்கொண்டு தன்னை விடுவிக்க போராடுகிறாள். நீயேன் உதவக் கூடாது’ கூறிவிட்டு அமைதியானான்.
‘அவள் உதவிக்கு இன்னும் மேன்மைப் பொருந்திய இறைவனையே அழைக்கிறாள். மனிதனை ஏன் அழைக்க மறுக்கிறாள். மனிதர்கள் மேலே அவ்வளவு நம்பிக்கையின்மையா? என் உளம் அவளின் பிரார்த்தனைகளிலே சுழல்கிறது. ஒரு பெண்ணின் குரலுக்கு இறைவன் ஒருவன் இருந்தால் இறங்கி இந்நேரம் வந்திருக்க வேண்டும். ஆனாலும் ஜனங்கள் இறைவனையே கைகூப்பி அழைக்கிறோம். இந்த வயதான பெண்ணும் அதிலொருத்தி’ சொல்லிக்கொண்டே இருக்கும் போதே இடைவாரில் இருந்த துப்பாகியை விரல்கள் வருடின. துருவில் ஊறி நெடுநாளாய் என் இடையில் இருக்கிறது. வெவ்வேறு காலநிலையிலும் உளநிலையிலும் என்னிடம் பயணிக்கும் ஒரே நண்பன். ‘ஏய், இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கிறதா? இதனை நீ விட்டெறிந்தால் குழந்தைகள் கூட இதைத் தொடாது’ அவனின் குரல் மீண்டும் எரிச்சலை உண்டாக்கியதை வெளிக்காட்டாமல் இருந்தேன்.
‘உனக்கும் மனசாட்சி இருக்கிறது போல. ஏன் உனது அருமைத் துப்பாக்கியை தொடுகிறாய். சுட்டு வீழ்த்து அவனை. ஒரே தோட்டா. முடிந்தது கதை’ அவன் என் உணர்ச்சியைச் சீண்டினான். ‘நீ செவிடாகி விட்டாய் போல’ மீண்டும் கேள்விகளை அவிழ்த்துவிட்டான். ஒரு தோட்டா இருக்கிறது, அதுவும் எனக்காக நெடுநாளாக காத்திருக்கிறது, அதன் துடிநாவிற்கு என் குருதி வேண்டும்.
‘இல்லை.. இல்லை.. பொறு, வயதான பெண் அவளின் காலால் அவனை மிதிக்க ஆரம்பிக்கிறாள். பார்த்தாயா பிரார்த்தனைகள் உதட்டில் வடியவில்லை. அப்பப்பா என்ன மிதி. அவள் தன்னை நம்ப ஆரம்பிக்கிறாள். நிச்சயமாக இனி வீரனின் விரல்கள் அவளின் அங்கங்கள் மேலே படுவதை விரும்ப மாட்டாள். அந்த தொடுதல்களே அருவருப்பை கொடுக்கும். அவை மேலேழும்பி பெண்ணின் மெல்லிய ஆத்துமாவின் மேற்படலம் மேலே முதலில் தன்மையாய் மோதும் ஒரு தென்றலைப் போல. அப்போது அவள் சிறுத்துப் போவாள். பின் அதுவே ஒரு ஊழிக்காற்றை போல அதே படலத்தின் மேலே வேகமாய் மோதும் அப்போதுதான் ஆன்மபலம் வெளிவரும். அந்நிலைக்கு அவள் வந்துவிட்டாள். அவனின் கதி இன்றோடு முடிந்தது.’ ஆனந்தமாய் உணர்ந்தேன்.
வயதானப் பெண்ணின் மொத்த உடலுமே வீரனின் அத்துமீறல்களுக்கு எதிர்வினையாற்றியது. வீரனின் உடல் நடுங்கியது. சகாக்களின் பெயர் சொல்லி கத்த ஆரம்பித்தான். இரண்டு பேர் ஓடி வந்தனர். அவர்கள் அவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர் ‘உன் அம்மாவின் வயது இருக்கும். அவளை அடக்க தெரியவில்லையே. நீயே உன் இடைவாரில் இருக்கும் துப்பாக்கியால் சுட்டுக்கொள்’ சத்தமாய் சிரிக்கவும் ஆரம்பித்தனர்.
சகாக்களின் ஏளனம் அவனின் செய்கைகளின் வேகத்தைக் கூட்டியது. பலமாய் பெண்ணின் முகத்தில் காறி உமிழ்ந்தான். கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். போதமில்லாமல் சரிந்தாள். என் தொடையிலே வேகமாய் குத்தினேன். ‘முட்டாளே.. உன் வீரத்தை அவர்கள் மேல் கொஞ்சமேனும் காட்டேன். வீணாக ஏன் உட்கார்ந்து இருக்கிறாய்’ மண்டைக்குள் அதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
‘கொஞ்சம் பொறேன். அவளால் அவர்களை எதிர்கொள்ள முடியும். பெண்ணின் மனபலத்தின் முன்னே நான் எப்போதும் மண்டியிடுவேன்’ அமைதியானேன். ‘நீ ஏன் போராளிக் குழுவில் இருந்து பிரிந்து நாடோடியாய் வாழ்கிறாய்’ அவன் கேட்கிறானா? இருக்கட்டும்.. என்னை வதைப்பதில் களிவுறுகிறான்.
‘நான் முன்பிருந்த குழுவில் போராளி ஒருவன் இருந்தான். டிசம்பர் மாதத்தின் நள்ளிரவு வேளையில் நாங்கள் நகரத்தில் இருக்கும் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்தோம். அவர்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதே நோக்கம். அவனுக்கு சொல்லிக்கொள்ளும் பெரிய வயதெல்லாம் இல்லை. அந்தப் பயல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து திரும்பும் வேளையில் வயதான அதிகாரியின் இளம்மனைவியின் வார்ப்பில் ஈர்க்கப்பட்டு அவளைப் புணர முடிவு செய்தான். அதற்காக அதிகாரியின் கழுத்தை கத்தியால் அறுத்து இரத்தம் ஓடும் அவர்களின் படுக்கையிலே அவளையும் புணர்ந்துக் கொன்றுவிட்டான். இதைக் கேள்விப்பட்ட தலைவர் அவனைத் திட்டாமல் ‘பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம்’ என உரக்கக் கத்தினார்.
அன்றிரவே அந்தக் குழுவின் சகலப் பந்தங்களையும் அறுத்துவிட்டு நாடோடி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டேன். கொஞ்சம் நகைப்பாகச் சொன்னால் அவர்களும் என்னைத் துரோகி எனும் அடைமொழியோடு கொல்லத் துடிக்கிறார்கள். யாரால் முடியும்’ நான் என்னையறியாமல் கத்திச் சிரித்துவிட்டேன், தவறுதான் என்ன செய்ய! அந்த வீரர்கள் காதுக்கு எட்டிவிட்டது.
“யார் அங்கே. ஏன் இருட்டில் மறைந்து கொண்டு சிரிக்கிறாய். வெளியே வாயேன். அந்த மூஞ்சை நாங்களும் பார்க்கிறோம்” மூவரில் நெட்டையான தடியன் கத்தினான். நான் அமைதியாய் ஒளிந்துப் புதர்களில் மறைந்துக் கொண்டேன். இதற்கு முன் அமர்ந்திருந்த இருப்பிடத்தில் அவர்கள் விளக்கடித்து பார்த்தார்கள். ஒரு நொடியில் சுதாகரித்து வேறொரு புதரில் ஒளிந்தது நல்லதாய் பட்டது.
வயதானப் பெண் தன் ஆடைகளைச் சரிப்படுத்தி எழுந்து நின்றாள், தன் முகத்தில் இருந்த எச்சிலைத் துடைத்து இறைவனுக்கு நன்றி கூறினாள். புரியாமல் விழித்தபடி பார்த்தேன். வீரர்களில் ஒருவன் “ச்சீ, படுடி. வேசியே. உடைகளை நீயே அவிழ்க்கிறாயா? இல்லை உதவிக்கு நான் வரட்டுமா” என்றான்.
“குழந்தைகளே, என் மகனின் வயதுதான் உங்களுக்கு இருக்கும். அப்படியானால் நான் உங்கள் அன்னையைப் போன்றவள். நாய்கள்தான் உறவைப் பார்க்காது. மனிதர்கள் நீங்களுமா!”, “யார் சொன்னார்கள் நாங்கள் மனிதர்கள் என்று. நாங்கள் வெறி பிடித்த நாய்கள். உங்களின் நிலம் முதல் வேட்டை. பின் அழகான பெண்களின் உடல். நீ அப்படியொன்றும் வயதானாவளாய் தெரியவில்லை. உன் அங்கங்கள் என்ன வனப்பு. நீயே ஆடைகளை அவிழ்த்து எறி. நிலவொளியில் உன் வளமைகளை காணத் துடிக்கிறேன்”.
“இப்படி பேசாதே தம்பி. நீ கேட்டாய் அல்லவா. அந்த புன்னகையை. இறைவன் வந்துவிட்டான். என் பிரார்த்தனைகள் வீண்போகவில்லை. என்னை விட்டுவிடு. இல்லையேல் இறைவன் பார்த்துக் கொள்வான்” அவளின் நம்பிக்கையான வார்த்தைகள் என்னை மீண்டும் கத்திச் சிரிக்க வைத்தது. தடியன் மீண்டும் உரக்கச் சொன்னான் “ஏய்.. நாடோடியோ, காட்டுவாசியோ ஓடிப் போய்விடு. இல்லை துப்பாக்கி குண்டுக்கு பலியாவாய்”, “எனக்கும் கொஞ்சம் அவர்களுடன் விளையாட வேண்டும் எனத் தோனிச்சு” “உனக்கு துப்பாக்கி குண்டுகளை கொடுத்தவனே நான்தான். ஏன் துப்பாக்கியே என்னுடையதுதான். எங்கே குறி வைத்து சுடு” காட்டிற்குள் அலைந்து யார் கண்ணிலும் படமால் சுற்றி, எளிதாக எவ்வித சப்தமும் இல்லாமல் என்னால் இடம்விட்டு இடம் நகர முடியும்.
குரல் வந்தவிடத்தில் சுட்டான், நான் “அய்யோ பரிதாபம். ஒரு குண்டு வீணாகி விட்டதே” மீண்டும் உரக்கச் சிரித்தேன். வந்தவர்களில் ஒருவன் தலை தெறிக்க ஓடி மறைந்தான். இப்போது இரண்டு வீரர்கள் மட்டுமே. முதல் வீரன் எதையோ உணர்ந்தவன் போல, “இது காட்டுவாசிதான். வனத்தில் நிறைய பேர் அலைகிறார்கள். அவர்களுக்கு மந்திர வித்தைகளும் தெரியும். வா நாம் போய்விடலாம்” தடியனை உடன் அழைத்தான்.
“அயோக்கியப் பயலே. நீ இறைவனா. ஒளிந்து மறையாதே. முன்னால் வந்து நிற்க திராணியற்றவன் பேசாதே” தடியன் மூச்சிறைக்கப் பேசினான். “உன் முன்னால் இருந்தபடியே பேசும் என்னை காண எது தடுக்கிறது” – பதிலுக்கு அவனை வெறுப்பூட்டினேன்.
“அங்கே நிற்கும் பெண்ணை தொடுபவர் உங்களில் முதலில் பலியாவார்” மீண்டும் சொன்னேன், நல்ல விளையாட்டுதான். பிடித்திருக்கிறது. தடியன் அவளின் கேசத்தைப் பிடித்து தரையில் தள்ளினான். என்னிடம் உதவ என்ன இருக்கிறது. வலுவிழந்த கைகளும் தளர்ந்து போன கால்களும் அவர்கள் அருகே செல்ல விடாமல் தடுத்தன. ஒருவேளை அவர்கள் முன்னே நான் நின்றாலும், அந்தோ.. பரிதாபமான தோற்றம் அவர்களை எள்ளி நகையாட வைக்கும். முட்டாள் என்னை மீறி எனது கையாலே இடைவாரை அவிழ்க்க முயற்சித்தான்.
கோபத்தில் ‘முட்டாளே விட்டுப் போ’ என்று கத்த, தடியன் அவனைச் சொல்கிறேன் என்பது போல வெறிகொண்டு பெண்ணின் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் மிதிக்க, யோனியில் இருந்து சொட்டிய ரத்தம் நிலத்தில் பட்டது என் கண்களில் விழவும், அவளும் ‘இறைவா’ எனும் அழுகுரலில் கூப்பாடிட்டாள். உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆங்காரமாய் அலறினேன். இரவில் துயில் கொண்ட புள்ளினங்கள் கத்தியபடி சிதறிப் பறந்தன.
ஒரே தோட்டா, எனக்கான தோட்டா, சீறிக்கொண்டு அவனது வலது கையைத் துளைத்தது. வலியால் அவன் துடித்தான். முதல் வீரன் ஓட, தடியன் வலியால் துடித்தபடி அவன் பின்னாலேயே ஓடினான். வயதானப் பெண் மண்டியிட்,டு “மேன்மைப் பொருந்திய இறைவனே உனக்கு நன்றி” எனக் கண்ணீர் வடியக் கத்தினாள். முட்டாள் என் மண்டையைத் தட்டி “அவள் உன்னைத்தான் வணங்குகிறாள்” என்றான். நான் பலவீனமான குரலில் சொன்னேன், “நான் இங்கிருந்து நகர்ந்தவுடன் மீண்டும் அவர்கள் நிறைய பேராய் இங்கே வருவார்கள். அவள் மீண்டும் அந்த மேன்மைப் பொருந்திய இறைவனையே வேண்டுவாள். அப்போதாவது அவன் இறங்கி வருவானா? தூரத்தில் இருந்து கவனிக்க வேண்டும்”.
***
வைரவன் –
சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது.
மின்னஞ்சல்: vairavanlr@gmail.com