(யாவரும் பதிப்பக வெளியீடாக ப. நந்தகுமாரின் முதல் நாவல் I AM வெளியாகவிருக்கிறது. அந்த நாவலின் ஒரு பகுதி வாசகர்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது)
ரத்தம்
“மரணத்தை அனுபவிப்பது என்பது அதைப்பற்றி திரும்பத் திரும்ப சிந்திப்பது மட்டுமல்ல. அது அதற்கு முன் பின் வாழ்வைப் பற்றி அறிய முனைவதும் தான். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு எளிதில் முடிவதில்லை. முடியும் தருவாயில் அது எவ்வாறு அமைந்து விடுகிறது என்பதைத் திரும்ப வந்தவர்களால் கூடத் தெளிவாக உரைக்க முடியவில்லை.”
நான் சாவதை உண்மையில் விரும்பினேனா? தெரியவில்லை.
ஆனால் அதன் எல்லையின் விளிம்பில் சதா தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொள்ள அதிகம் முனைந்தேன்.
தன்னைத் தானே கொல்வது. உடல் எனும் பரப்பு ஒரே நேரத்தில் சில்லுக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பல விதமாய் உருமாறிக் கொள்ள அனுமதித்தல். சின்னஞ்சிறு உடலிலிருந்து மாபெரும் உடல் வரை தனக்குள் தானே ஆகிக் கொண்டே இருப்பது. ஒரு தொடர் நிகழ்வு போல அதை செய்வது. அதன் மூலம் அது ஒரு எளிய செயலாக மாறிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்கிறேன். எனக்கு மரணம் பற்றி அத்தனை தெளிவான பதில்கள் இருந்தன. அது எனக்கு அளிக்கப் போகும் அனைத்தைப் பற்றியும் கனவு கண்டேன்.
மரணம் சிறகுகள் மட்டுமே உடலாகக் கொண்ட பறவை!
அந்தக் கடைசி விருந்தினை என் நண்பர்களுடன் நான் அருந்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் எனக்கும் நான் என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி அனைவருக்குமே தெரிந்திருந்தது.
நான் என் சதையையும் இரத்தத்தையும் அவர்களுக்கு திங்கக் கொடுப்பேன். நான் அவர்களின் உடலாவேன்!
நான் எப்படி சாக வேண்டும்?
வலி! வலி! வலி! என்று சொல்லிக் கொண்டேன். வலியினால் மரணத்தை மிக எளிய நிகழ்வாக்குவேன். நடக்கும் போது தன்னிச்சையாக, நம் கால்களும் கைகளும் அடுத்த நகர்விற்கு அசைவது போல மரணமும் ஒரு அனிச்சை செயலாய் என்னை ஆட்கொள்ளும். தனித்தவனாய் நான் இருக்கும் பொழுதே இந்த மொத்த பிரபஞ்சமும் என்னுள் வலியினால் ஒன்றிணையும் என்று நினைத்தேன்.
நான் வலியை நம்பினேன். என் மரணம் ஒரு இசை உச்சம் போல நிகழ ஆசைப்பட்டேன். என் நண்பர்கள் என் சொற்களில் அமிழ்ந்திருந்தனர். அவர்கள் என்னை அப்பொழுது வெறுத்திருக்கலாம். நானாக ஆவதைப் பற்றி அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
நான் ஒரு நுண்ணுயிரி, 13 தலைகளும் 26 கால்களும் கொண்ட மாபெரும் உடல் கொண்டு பூமியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறேன். மிக அழகான சிவந்த நிறக் கொடுக்குகள் தலைக்கு இரண்டாக எனக்கு இருந்தன. நான் எண்ணிலடங்காதக் கால்களைக் கொண்டிருந்தேன். காண்பவை அனைத்தையும் கொட்டுவதே எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில் காண்பது அல்ல. உணர்வது. எனக்கு கண்கள் இல்லை. உணர் கொம்புகள் மூலமே நான் அனைத்தையும் அறிந்தேன்.
என் தலைகள் முரண்படும் பொழுது, ஒன்றினை ஒன்று விழுங்கத் தொடங்கின. நீர்த் துளிகள் தரையில் சிதறி நெழிவது போல நான் சிதறிக் கொண்டிருந்தேன். எல்லா தலைகளும் விழுங்கிய ஒற்றைத் தலை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது.
பின் நான் உடல் மட்டுமே ஆனேன். நான் உணர்வதை எல்லாம் என் உடல் கொண்டு விழுங்கினேன். என் உடல் பெருத்துச் சிதறியது. சிதறிய துகள்கள் முட்டைகள் ஈனின. கரும்பழுப்பு நிற முட்டைகள். என் உதிர்ந்த ஒற்றைத் தலை அதை ஒவ்வொன்றாக விழுங்கியது.
கனவினுள் இருந்து எழுந்த பொழுது ரத்த விளாராய்க் கிடந்தேன். தோல் கிழிந்தும் பிளர்ந்தும், என் தேகம் பல்லாயிரம் வாய்களால் ஆனது போல இளித்தது. ரத்தம் அவ்வாய்களிலிருந்து கசிந்து என்னைச் சுற்றி தேங்கி நின்றது.
நான் மண்ணைப் பார்த்துக் கூவினேன். என் முட்டைகள் உடையவில்லை, உடையவில்லை என்று!
பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் என் வருகையை அறிவிக்கும் நிமித்தம் என் பிணத்தின் முன் அமைதியுடனும் மிகுந்த சிரத்தையுடனும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வானை அணுகினர். அவர்கள் தங்கள் ஒவ்வொருவரின் வலது முழங்கையிலிருந்து மூன்று துளி ரத்தம் வீதம் என் முன்னே சொட்டினர். என் பிணம் மண்ணில் நாறிக் கொண்டிருந்தது.
அவர்கள் என் பிணத்தின் முன்னே ஒன்றை மந்திரம் போல கூட்டாகத் திரும்பத் திரும்பச் சொல்லினர்.
“ரத்தம்
ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே உன் பிரார்த்தனை
ரத்தமே நீ”
“ரத்தத்தால் மீண்டும் எழுவாய் என் தேவனே!”
ஒரு கருவி வேண்டும். தன்னந்தனியாக மரணத்தை அனுபவிக்க ஒரு கருவி. எனக்காக நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆம்! என் சொந்தக் கைகளினால்.
அது எப்படி இருக்க வேண்டும். ஒரு குமிழ் போலத் தொடங்கி கடல் ஒதம் போல வலியை உருமாற்றும் செய்யும் கருவி. நான் விடுவிக்க விடுவிக்க என்னை இறுக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று.
உயிர் என்பது உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருப்பதை அதன் மூலம் உணர்வேன். நான் வலியை மறுதலிக்க விரும்புகிறேனோ! என்று தோன்றியது. இல்லை! காலமற்றிருப்பதை விரும்பினேனா? தெரியவில்லை.
என் சொந்த மரணத்தை நான் பணயம் வைக்கிறேன்.
என் பிணத்தின் முன் அவர்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.
” ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்
ரத்தமே உன்னை அறிவித்தது
ரத்தமே உன்னை விடுவித்தது
ரத்தமே உன் சொல்
ரத்தமே உன் மொழி.
ரத்தமே உன் இருப்பு
ரத்தமே உன் பிரார்த்தனை
ரத்தமே நீ”
“ரத்தத்தால் மீண்டு எழுவாய் என் தேவனே!”
காதல்
அன்பின் பரிசுத்தத்தை நான் மேவினேன். இயற்கையைப் போல அன்பையும் நம்பினேன். அன்பை மட்டுமே நான் எனக்காக எடுத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் அவளிடம் நான் குழப்பிக் கொண்டேன். அன்பின் நிமித்தங்கள் பாசாங்கானவை. அவளை நான் அங்கு சென்று சந்தித்திருக்கக் கூடாது.
அவள் என்னிடம் தெள்ளத் தெளிவாக உரைத்தது ஒரு சொல்லை மட்டுமே. எடுத்துக் கொள்! நான் அவள் உடல் முன் கூனி நின்று கொண்டிருந்தேன். எங்களுக்குள்ளே பாவனைகள் அற்ற ஒன்றிருந்தது. அதனை நாங்கள் தழுவிக் கொள்ள முயன்றோம். ஆனால் அவள் சீற்றமடைந்தாள். என் சொற்களின் தாழ்வாரத்தில் அவளது எண்ணங்கள் குழம்பித் தவித்தன. அவளை அமைதியடையச் செய்ய முடியவில்லை. அதனால் என்னை நான் அவளிடம் விடுவித்தேன்.
எனக்குள் ஆழமான ஒரு புண் உருவாகியிருந்தது. நான் சேர்த்து வைத்திருந்த ஞாபகங்களின் கூடாரத்தில் அவள் வேறு ஒன்றாக இருந்தாள். ஆனால் என் முன்னே இருப்பவள் முற்றிலும் புதியவள். என் பகற்கனவுகளில் அவளை நான் ஒருவாறு உருவகித்து வைத்திருந்தது, ஒரு சிறுமியின் லயத்தை. நான் புண்பட வேண்டும் என அவள் விரும்பியிருப்பாளோ? என்னுள் தகிக்கிறது. அவள் எனும் சொல், நினைவு, உரு, ஞாபகங்களின் தீட்சண்யமான வெளி அனைத்தும் ஏங்கி நிற்கிறது. என் செவிகளில் அவளது குரலை ரீங்கரிக்க முயல்கிறேன். அவள் என்னை அழைப்பதைப் போல. சமாதானம் செய்ய முயல்வதைப் போல. ஆனால் நிகழில் அவள் நேரிடையாக என்னை வெறுத்தாள். இல்லை! நான் அப்படி நம்பினேன். அப்படி அவள் இருக்க வேண்டும் என வேண்டினேன்.
இல்லை! அவள் என்னை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என எனக்கு விருப்பங்கள் இருந்தன. ஒரு ஆணைப் போல அவள் என்னை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னை சிறுமை செய்தாள். என்னிடம் அவள் பேச முனையவில்லை. ஆனால் என் கண்களைக் கவனித்தாள். ஒரு விளக்குத் துளி போல அலைவுறும் அவளது விழிகள் வழி என்னை நான் ஒரு பலவீனனாக நினைத்தேன். அவளுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். என்னை, என் பார்வையைத் தவிர்த்தாள். நிலத்தில் குத்திட்டிருந்த அவள் விழிகள், ஒரு நீள நிழல் போல என் இருப்பைத் தழுவித் ததும்பியது.
நான் அமைதியடைந்தேன். அவளை என் கைகளில் ஏந்திக் கொள்ள முயன்றேன். அவளிடம் அனிச்சமில்லை. நான் செய்வதறியாது திகைத்தேன். அவள் அப்படியே படுத்துக் கொண்டாள். மற்ற ஆண்களைப் போலவே என்னையும் நீ எடுத்துக் கொள்! என்பதைப் போல அவள் சலனமற்று மேற்கூரையைப் பார்த்தவண்ணம், அசையாது கிடந்தாள். அவளது வியர்வையின் மென் நெடி துளைத்து அறையின் சுவர்களில் பாவித்து அலையடித்தது. நான் அவள் உடுத்தியிருந்த மிருதுவானத் துணியின் நுனியை பற்றிக் கொண்டு அசையாது அவளை நோக்கி அமர்ந்திருந்தேன். நான் வெடிக்கக் காத்திருந்தேன். அவளின் சின்னத் தலை அசைப்பு போதும். ஆனால் அவள் அசைவற்றுக் கிடந்தாள்.
எவ்வளவு காலம், நேரம் என்று நான் அறிய முற்படவில்லை. நான் காலமற்று அவள் முன்னே இப்படியே அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவே அப்பொழுதின் என் ஒரே பிரார்த்தனையாக இருந்தது. அவளது நெஞ்சு விம்மி அசைவதை, சீராக மூச்சு இறைப்பதைக் கவனித்தேன். நான் ஏற்றிருப்பது பற்றி அவளுக்குக் கேள்விகள் இருந்தன. இது நேராக மரணத்தின் பாதை என்பதை அவள் அறிந்திருந்தாள். வேண்டாம்! வேண்டாம்! யார் வேண்டுமானாலும் என்னை அப்படிப் பார்க்காட்டும். நீ அப்படி என்னைப் பார்க்காதே! என்று என் அகத்தினுள் புலம்பினேன்.
அன்பின் வழிகளின் உண்மையில் பாசாங்கானவையா? நான் ஏங்கியது வேறொன்றைப் பற்றி. இது அன்பைப் பற்றியது அல்ல. வாழ்வைப் பற்றியது நான் சாவதற்காக வாழ்கிறேன். இல்லை! இது அப்படி நிகழ்ந்து விடாது. என் நம்பிக்கைகள் வீண் போகாது. என் தந்தையின் சொற்களை நான் கூர்கிறேன். என் துடிப்புகளின் நீண்டக் குளிர்மையானக் கைகள் அவளது நினைவுகளினுள் அளைகிறது.
நெடிது உயர்ந்த மரத்தின் உச்சி நுனி இலையைப் போல என்னை எண்ணிக் கொள்கிறேன். அவள் ஒரு தீர்க்கமானக் காற்றினைப் போல என் நெற்றியில் படறி சிலிர்க்கிறாள். நான் அசைந்து அசைந்து அவளுள் குதூகலிக்கிறேன். சட்டென காற்றின் குளிர்மை கூடுகிறது. என் நரம்புகளில் உறைகிறது, கூர்மையான அக்குளிர். உடைந்து விழுகிறது இலைத்தும்பு. நான் அவளின் இமைகளுக்குள் உருளும் கண்களின் சொப்பனத்தில் ஒரு ஆட்டினைப் போல, ஒரு பாவப்பட்ட ஆட்டுக்குடியைப் போலத் தெரிவதை வெறுத்தேன். அவளை வெறுத்தேன். என்னை, என் தந்தையை, எனக்கு விதிக்கப்பட்ட சொல்லை, என் உடலை, என் மாபெரும் பாதையை. அனைத்தையும் வெறுத்தேன். அவளது சூடான உள்ளங்கைகளினால் என் முகத்தைத் தாங்கி என்னை அவளின் மார்புக்குவைகளில் அழுத்தி அணைத்துக் கொண்டாள். நான் அச்சமயம் உறுதியாக முடிவு செய்திருந்தேன்.
ஞானம்
என்னிடம் தெளிவானத் தீர்வுகள் இருந்தன. நான் அதனை என் வாழ்வில் நிகழ்த்திப் பார்க்க முனைந்தேன். உண்மையில் அத்தீர்வுகளை நான் முழுமையாக நம்பினேன்.
என் சபலங்களை நான் மதித்தேன். என்னால் திரும்பிச் செல்ல முடியாது. என் முன்னே புழுதியின் சொல் மட்டுமே நீக்கமுற நிறைந்திருந்தது. நான் என் மனத்தை போஷிக்கிறேன். ஒரு நாய்க்குட்டியினைப் போல. எனக்கு கிடைத்தது, இல்லை நான் அடைந்தது என்பது என்ன? என்று துழாவிக் கொண்டிருந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அடைய விரும்புவது இந்த இயற்கையைப் போன்ற ஒரு திட்டவட்டத்தை.
என்னுடைய சொற்கள் என உலவும் வாக்கியங்கள் என்னுள் மிகுந்த கிளர்ச்சியை அளித்தன. ஒரு புறம் அது சுவாரஸ்யமாகவும் மறுபுறம், நான் அடைந்தவை என எனக்கேக் காட்டி எக்களிப்பவையாகவும் இருந்தன.
“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயுவைப் பற்றி நான் ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்திருக்கிறேன். இதோ இந்தத் திட்டவட்டத்தைத் தான் நான் விரும்புகிறேன். ஆனால் அதனுள் இருக்கும் சூட்சுமத்தை நான் கேலி செய்கிறேன். ஒரு பைத்தியக்காரத்தனத்தை வேண்டுமென்றே வலுக்க சேர்த்துக் கொள்வது எவ்வளவு அவசியம் என்று நான் நம்புகிறேன் என்பதற்கு இந்த வாக்கியமே சாட்சி.
“அதற்கு இயேசு:நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”
யோவான், பாவம்! அவருக்கு என்னால் RIP மட்டுமே செலுத்த முடியும். ஆனால் இச்சொல்! இதன் பிடி அபரிமிதமானது. யோவானின் தலை வெட்டி வைக்கப்பட்ட போது என்னை நினைத்திருக்கும். நான் நம்பிக்கைகளை விதைப்பவன். அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை. என் சாவின் முன்னும் வாழ்வின் முன்னும், நான் படைத்திருப்பது அசைக்கவே முடியாத நம்பிக்கையை. அதன் மேல் தான் இதோ என்னுடைய சொல். வழியும், சத்தியமும், ஜீவனுமயிருக்கும் ஒன்று நிச்சயம் ஒரு நம்பிக்கைதானே. என் ஞானம் என்று நான் அடைந்திருப்பதும் அளிப்பதும் அழிவில்லாத நம்பிக்கை. மனுஷனுக்கு என்னால் அளிக்க முடிந்ததும் அது மட்டும் தான். யோவான்! சற்று இளைப்பாறுங்கள். என்னுடைய முடிவிலும் எந்த மாற்றமுமில்லை. உங்களைப் போலவே தான் நானும்.
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”
அன்பில் படிந்த வாக்கியங்கள். சரியான இருமை என்று இவ்வாக்கியத்தை சொல்லலாம். நான் ஒரு தந்தையாக மாறுவதை உணர்கிறேன். பவுல் நிச்சயம் இதனை ரசித்திருப்பான். பாவம்! என் கால்கள் நடுங்குகின்றன. என் பிள்ளைகளை நான் கடுமையாக நடத்துகிறேன். என்னை என் தந்தை நடத்தியதைப் போலவே. ஆனால் பிள்ளைகளுக்குத் தெரியும், அப்பன்! நமக்கு அளித்திருப்பதன் மகிமை. என் அன்பின் ஊடுவழிகளில், அவர்கள் சதா அகப்பட்டுக் கொள்கிறார்கள். குற்றமும், தண்டனையும். அன்பும் மீட்சியும் , வாழ்வும் மரணமும் ஒன்றே என்பதனை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் புரிந்து கொள்வார்கள், நான் புரிந்து கொள்வதைப் போலவே. நிரந்தரமான மற்றும் உறுதியான வழிப்பாதையில் அவர்களை நான் தவற விடமாட்டேன். என் அன்பின் சாஸ்வதமான இருப்பில் அவர்களை களித்திருக்கப் பண்ணுவேன். ஆனால் இந்தத் துடுக்குப் பிடித்த பவுல் மறு பக்கத்தையும் காட்டச் சொல்கிறான். என் பிள்ளைகள் அதிகப்பிரசங்கிகள்தான் . அதனால் என்ன? பரவாயில்லை. ஒரு அப்பனாக என்னால் கொடுக்க முடிந்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். வாழ்வின் நிச்சயங்கள் நிலையற்றவை. அதனால் மகிழ்ந்திருங்கள். துக்கித்திருங்கள். என் அப்பன் எனக்கு அளித்ததையே நான் உங்களிடமும் அளிக்கிறேன்.
“தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.”
பவுல் என்னைச் சிலையாக்குவதில் மும்முரமாக முயற்சி செய்திருக்கிறான். ஒரு நீதிமானாக என்னை நிறுவுவதில் அவன் ஜெயித்து விட்டான் என்றே நினைக்கிறேன். நுட்பமானப் பகடி இச்சொல்லில் பரவுவதை என்னால் உணர முடிகிறது. பவுல் அப்படித்தான் அவன் எதிர்ப்புறம் பார்ப்பவன். அதனால் ஒரு பீ உருட்டி வண்டினைப்போல சொற்களை உருட்டி உருட்டிப் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறான்.
தீமை, வஞ்சம் என்பது எளிதானவையாக இருக்க வாய்ப்பில்லை. அதன் பிடிமானங்கள் மிகவும் உறுதியானவை. மனுஷனின் வாழ்வை விடவும் அவனின் வஞ்சம் பெரியது. அதனால் தான் அதற்கு நிகராக நான் நம்பிக்கையை வைத்தேன். ஆனால் தீ நுனிகளில் விட்டில் பூச்சிகள் செய்வதற்கு என்ன உண்டு. அதில் எரிந்து அழிவதைத் தவிர. துக்கம் எனும் உணர்வு, வாழ்வின் எல்லா உணர்வையும் விட ஆழமானது. அதனாலேயே எளிதில் சீண்டக் கூடியதும்.
என் புண்களின் ரணத்துடன் நான் போராடுவதில்லை. அதன் வலி! என்னைப் புரட்டியபொழுது, நான் கை விடப்பட்டவனாக என்னை நினைத்த பொழுதெல்லாம், நான் உண்மையைத் தவிர்த்தேன். எளிய உயிர்கள்! நாம்! உண்மையின் பால் நம்மால் எரிந்தழிய முடியும். ஆனால் அச்சங்களினால் தான் நாம் வாழ்கிறோம். நான் உயிர்த்தெழுந்து வந்தபின், முதலில் யூதாஸிடமே சென்றேன். மூன்று நாட்கள் என் வருகைக்காக அமைதியாகக் காத்திருந்த அவனிடம் நான் சொன்னதையே உங்களிடமும் சொல்கிறேன். “மனுஷர்கள் தனக்களிப்பதை வைத்து போதுமானவர்கள் ஆவதில்லை. அவர்களை திருப்திப்படுத்துவதினால் நம் யோக்கியதை மாறுவதுமில்லை”.
எங்கள் இருவரது உருக்களும், ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும் ஆடி பிம்பங்கள் போல உருமாறியிருந்தது. அவனை என்னருகில் அழைத்து என் உடலுடன் பிணைத்துக் கொண்டேன். அந்த நொடி, நாங்கள் சமரசம் செய்து கொண்டோம். அன்பின் மிகுதிகள் நாடகீயமானவை தான். நாங்கள் நடிப்பதைப் போல.
***
நந்தகுமார் பத்மனாபன் – குமரி மாவட்டம், நாகர்கோவில் – ஒழுகினசேரி பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் தனியார் துறையில் பணிசெய்துவருகிறார். கவிதைகள் மற்றும் கதைகள் சொல்வனம், யாவரும் இதழ்களில் வெளிவந்துள்ளது.
மின்னஞ்சல்: nantha65@gmail.com


