“வெறும் திறன் என்பது கை சாதுரியமே”
மார்க் ராத்கோ (Mark Rathko)
தமிழில் : கணபதி சுப்ரமணியம்
ஒரு அச்சீட்டாளரின் மை போல , ஒரு ஓவியரின் நிறமிகளுக்கு படைப்பினை உருவாக்குவதை தாண்டி பல உபயோகங்கள் உள்ளது. விளம்பர ஓவியர், கதைக்கு ஓவியம் தீட்டுபவர், உருவப்பட ஓவியர் , ஒப்பனையாளர் மற்றும் அலங்கரிக்கும் கலைஞர் அனைவரும் படைப்பாளியின் அதே கருவிகளான கலை பொருள் மற்றும் உருவ சாதனங்களையே உபயோகிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடய முதன்மை சிந்தனை, நோக்கம் மற்றும் செயல்பாடு ஒரு படைப்பை நோக்கி அல்ல. ஒரு வணிக கலைஞரின் பொறுப்பு வர்த்தக பொருட்களின் விரும்பத்தக்கத்தன்மையினை மேம்படுத்துவதே ஆகும்.
கதைக்கு ஓவியம் தீட்டுபவர் , கதையின் நிகழ்வுகளையும், இடங்களையும் , உண்மைகளையும், காரணிகளையும் விளக்குவதில் ஒரு எழுத்தாளரின் வார்த்தைகளுடன் போட்டியிடுகிறார். உருவப்பட ஓவியர் அவ்வுருவத்திற்கு சொந்தக்காரரை பகட்டுடன் கூடிய பாராட்டுக்கு உட்படுத்தவேண்டும். ஒப்பனையாளர் மற்றும் அலங்கார கலைஞர் அழகினை மேம்படுத்தவேண்டும், சீர்படுத்தவேண்டும். வெளித்தோற்றத்தில் இது ஒரு படைப்புக்கான தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் ஒருமித்த சொற்தொடர்களை உபயோகிக்கும் ஒரு கவிஞனுக்கும் ஒரு விளம்பர நகல் எடுப்பவருக்குமான ஒற்றுமையே இது.
ஒரு படைப்புக்கும் படைப்பல்லாதவற்றிற்கும் உள்ள குழப்பம் ஓவியர்கள் மற்றும் கவிஞர்களை வர்ணிக்க முடியாத பாதிப்புக்குளாக்குகிறது. கவிஞரை காட்டிலும் கலைஞரை அது கொஞ்சம் அதிகமாகவே பாதிப்பதற்கு காரணம், நாம் திறனையும் கலையையும் வேறுபடுத்தாதது தான்.
ஓவியக்கலையின் முமூர்த்திகளான கோடு, உருவம், மற்றும் வண்ணம் (Line, Form, and Color), இங்கே பொதுவானதாக இருப்பதனால் இந்த பொது கூட்டுறவு , “திறனை” போற்றும் அதே சமயம் , “படைப்பு” என்றால் என்ன என்பதிலான குழப்பத்தை பலமடங்கு அதிகரிக்கின்றது.காதல் கலை என்கிறோம், போர் கலை என்கிறோம், மேலும் சமையல் கலை என்று எல்லாமே கலைகளென சொல்கிறோம். உண்மையில் இது ஒரு திறன். மூலப்பொருட்களை கொண்டு உருவ மற்றும் அலங்கார அமைப்புக்களை உருவாகும் ஒரு திறன். ஒரு நிருபரை நாம் கவிஞர் என்று கூறுவதில்லை, அனால் அதிகம் கட்டணம் வசூலிப்பவரானால், சுவற்றிற்கு சுண்ணாம்பு அடிப்பவரை கூட கலைஞர் என்போம்.
வெறும் திறன் என்பது கை சாதுர்யமே.
— மார்க் ராத்கோ, ‘The Artist’s Reality’, 1941
திறனை எந்த விதத்திலும் குறைகூறும் விதமாக பார்க்காமல் , படைப்பென்பதினை பற்றி ஆழமாக சிந்திக்க தூண்டும் ஒரு கூற்றாகவே இதனை அணுகவேண்டும்.
– கணபதி சுப்ரமணியம்