Sunday, July 21, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்Facebook & Google தகவற்தொழில் நுட்ப வணிக நிறுவனங்களின் ஏகத்துவமும் எதிர் அழுத்தங்களும்

Facebook & Google தகவற்தொழில் நுட்ப வணிக நிறுவனங்களின் ஏகத்துவமும் எதிர் அழுத்தங்களும்

ரூபன் சிவராஜா

டிஜிற்றல்-வாழ்வு’ என்பது மனித நாளாந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிவிட்டது. அதில் பேஸ்புக் கோலோச்சுகின்றது. ஊடகம் என்பது ஒரு அரசினது (State) நான்காவது அதிகாரம் என்ற கூற்று பொதுவாக மேற்கின் பயன்பாட்டில் உள்ள சொல்லாடல். முதல் மூன்றும் முறையே பாராளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் என்பனவாகும். முதல் மூன்று அதிகாரங்களையும் விமர்சன பூர்வமாக அணுகுகின்ற அதிகாரம் ஊடகங்களுடையது. ஊடகங்களை கண்காணிப்பு மற்றும் கவனத்திற்குக் கொண்டுவரும் வகிபாகத்தைக் கொண்ட ஒரு காவல்நாய் என்று கூறப்படுவதும் உண்டு. ஜனநாயக நடப்புகள் சரியான முறையில் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் பொறுப்பு. அந்த வகையில் ஊடகத்திற்கெனப் பல்வேறு கட்டமைக்கப்பட்ட நியமங்கள் உள்ளன.

நவீன ஊடக நியமங்களை மீறிய நடைமுறைகளையும், பயன்பாட்டு வெளியையும் விளைவுகளையும் கொண்டதாக சமூக ஊடகங்கள் உருப்பெற்றுள்ளன. பேஸ்புக் கொண்டுள்ள அதிகாரக்குவிப்பு ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக ஜனநாயகமற்ற, சர்வாதிகார மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு உவப்பானதல்ல. இந்த விடயம் ஒருபுறமிருக்க, தகவற்தொழில்நுட்பத் தளங்களின் போக்கு, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதாகவும் சென்றுகொண்டிருக்கின்றன. இவற்றின் ஏகத்துவ அதிகாரம் விவாதக் கலாச்சாரத்தின் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்த விமர்சனங்கள் இறுதிக்காலங்களில் அதிகரித்துள்ளன.

புதிய நிறுவனங்கள் சந்தை நீக்கம்

இன்றைய உலகின் தகவல் தொழில்நுட்ப பெருவணிக நிறுவனங்கள் கூகிள், பேஸ்புக், அமேசோன், அப்பிள் ஆகியனவாகும். இவை அமெரிக்க நிறுவனங்கள். ஏகபோக அதிகாரத்தைக் கொண்டவையாகப் பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளன. தத்தமது துறையில் சந்தைப்போட்டியற்ற அல்லது போட்டிக்கு இடம்கொடுக்காத வகையில் தமது இடத்தைத் தக்கவைப்பதற்குரிய மூலோபாய அணுகுமுறைகளைக் கையாண்டு வந்துள்ளன. புதிதாக உருவாகி வளர்ந்து, பாவனையாளர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறும் தகவற்தொழில் நுட்ப, தகவற் பரிமாற்ற ஊடக நிறுவனங்களைத் தம்வசப்படுத்தி வந்துள்ளன. இதன் பொருள் பெருந்தொகை நிதியினைக் கொடுத்து அவற்றைக் கொள்வனவு செய்து தமது உரித்தாக்குவதும், கையகப்படுத்துவதுமாகும். இது சந்தைப் போட்டி இல்லாத தனிக்காட்டு ராஜாவாகத் தமது நிறுவனத்தை தனி அதிகாரத்துடன் பேணுகின்ற அணுகுமுறை. பேஸ்புக் மற்றும் கூகிள் இதில் முதன்மையானவை.

பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மீது அவற்றின் ஏகத்துவ அதிகாரம் மற்றும் தணிக்கை அணுகுமுறை சார்ந்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இவற்றின் ஏகத்துவ சந்தை அதிகாரத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அமெரிக்காவில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவருகின்றன. மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பல்வேறு அழுத்தங்களும் தொடர்ச்சியாக இந்நிறுவனங்கள் மேல் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில நாடுகள் பேஸ்புக் நிறுவனத்துடன் முறுகல் நிலையினையும் கொண்டுள்ளன.

அவுஸ்திரேலியா – பேஸ்புக் முறுகல்

தமது நாட்டின் செய்தி சார் உள்ளடக்கங்களுக்கு பேஸ்புக், கூகிள் பணம் செலுத்தவேண்டுமென்ற சட்டத்தினைக் கொண்டுவருவது தொடர்பாக அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதற்குப் பேஸ்புக் இணங்க மறுத்துள்ளதோடு, பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களின் செய்திகளுக்கு பேஸ்புக் தளத்தில் தடையும் விதித்தது. அதன் பொருள் அவுஸ்திரேலியா ஊடகங்களின் செய்திகளை அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல உலகின் எந்தப் பாகத்திலுள்ள பாவனையாளர்களும் பேஸ்புக்கில் பார்க்கவோ, பகிரவோ முடியாது என்பதாகும். அவுஸ்ரேலிய சட்ட முன்மொழிவு அதன் அனைத்து ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டிருந்தன. நாட்டின் கீழவையில் பெரும்பான்மையை எட்டியிருந்த சட்ட முன்மொழிவு அடுத்துச் செனற் சபைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது. ஆனால் செனற் சபை வாக்கெடுப்பிற்கு முன்னர் இருதரப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தையின் மூலம் எதிர்கால நடைமுறை தொடர்பான சாதகமான தீர்வு எட்டப்படுவதற்கு ஏதுவாக இரண்டு மாத காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தடையைத் தற்காலிகமாக நீக்கி அவுஸ்திரேலியச் செய்திகளை பேஸ்புக் மீண்டும் அனுமதித்துள்ளது.

கூகிள் நிறுவனமும் முதலில் பேஸ்புக்கினை ஒத்த நடவடிக்கையை எடுக்கப்போவதாக, அதாவது அவுஸ்திரேலியச் செய்திகளைத் தனது தளத்திலிருந்து நீக்கப்போவதாக அவுஸ்ரேலியாவை அச்சுறுத்தியது. பின்னர் அவுஸ்ரேலிய அழுத்தத்திற்கு சமரசம் செய்து கொண்டிருக்கின்றது. அடுத்தடுத்த மாதங்களில் இதே போன்ற சட்ட முன்மொழிவைக் கொண்டுவரவிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளும் தகவற் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தொடர்பில் இதனை ஒத்த சட்ட அமுலாக்கங்களை நடைமுறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகநாடுகள் இதனை ஒரு முன்மாதிரியாகப் பின்பற்றப்படக் கூடும் என்ற அச்சம் இந்நிறுவனங்களுக்கும் உண்டு.

அரசியல் உள்ளடக்கத் தணிக்கை அதிகாரம்

பேஸ்புக் சார்ந்த மற்றுமொரு சமகால விவாதம் அரசியல் உள்ளடக்கம் சார்ந்த அதன் அணுகுமுறைகள். அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களை எந்த அளவில் அனுமதிப்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தாம் கொண்டுவரப் போவதாக பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg தெவிவித்திருக்கின்றார். இந்த அரசியல் உள்ளடக்கம் தொடர்பான பேஸ்புக்கின் அணுகுமுறையை முன்வைத்தும் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

எந்த வகையான உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வது, எதனை அனுமதிப்பது, எதனை நீக்குவது என்ற முடிவுகளைத் தனியொரு நிறுவனமாக அது எடுத்துவருகின்றது. அந்த அணுகுமுறை என்பது ஒப்பீட்டளவில் மேற்கின் அரசியல் நலன்கள், அதிகார மற்றும் பொருளாதார நலன்களுக்குச் சாதகமானவை. அத்தோடு மேற்குடன் நல்லுறவைப் பேணுகின்ற ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் சாதகமானவை. பேஸ்புக் தணிக்கை என்பதே அடிப்படையில் அரசியல் நோக்கம் கொண்டது. கூகிளும் யூரியூப் மற்றும் அதன் தேடுதளங்களில் அத்தகைய நீக்கங்களைச் செய்து வருகின்றது. ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் பலஸ்தீன, குர்தீஸ் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அணுகுமுறையையும் அவதானிக்க முடிகிறது. ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு, அடையாளங்கள், நினைவுகள் சார்ந்த பதிவுகள், படங்கள் சில பொதுமைப்படுத்தல் காரணங்களின் கீழ் நீக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், மாவீரர் நினைவுப் பதிவுகளை இடுவோரினது பேஸ்புக் கணக்கு ஒருமாதம் வரை முடக்கப்படுவது கடந்த சில வருடங்களாக இடம்பெற்றுவருகின்றன. இது விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் ஆகியுமிருக்கின்றது.

Donald Trump பதிவுகள்: வன்முறைக்கான தூண்டுதல்

அரசியல் உள்ளடக்கம் சார்ந்த பேஸ்புக்கின் தணிக்கை அரசியல் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனத்திற்கு உட்பட்டுவந்துள்ளன. ஆனபோதும் அண்மையில் அமெரிக்க முந்நாள் ஜனாதிபதி Donald Trump இன் பேஸ்புக் மற்றும் ருவிற்றர் கணக்குகள் முடக்கப்பட்ட பின்னணியில் இந்த விவகாரம் மீண்டும் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை (ஜோ பைடன் வெற்றியை) அங்கீகரிப்பதற்காக செனற் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் (06.01.2021) கூடியிருந்த போது, Trump-இற்கு ஆதரவான வலதுசாரிக் கடும்போக்காளர்கள் கொங்கிரஸ் அவைக்குள் அத்துமீறி உள்நுழைந்து வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறையிலும் கலவரத்திலும் ஒரு காவல்துறை  அதிகாரி உட்பட ஐந்து பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். சமூக ஊடகங்களில் தனது பதிவுகள் மூலம்  Trump தனது ஆதரவாளர்களை இந்த வன்முறைகளுக்கு தூண்டினார், அணிதிரட்டினார் என்பது பலரும் அறிந்ததே. Mark-ன் இந்த முடிவிற்கு வலுச்சேர்க்க இதுவும் காரணமாகியிருக்கின்றது.

அமெரிக்க கொங்கிரஸ் அவைக்குள் ஆதரவாளர்கள் அத்துமீறி துழைவதற்குரிய கோரிக்கை நேரடியாக உரை ஒன்றின் மூலம் Trump-இனால் வழங்கப்பட்டது. கலவரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், வோஷிங்டன் டி.சி.யில் தனது ஆதரவாளர்கள் முன் அவர் உரை நிகழ்த்தினார். தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று கூறியதுடன், தமது ‘பலத்தினைக் காட்ட வேண்டுமென’ ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார். அனைவரும் கொங்கிரஸ் கட்டிடத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் கூறினார். ‘நீங்கள் விரைவில் கொங்கிரஸ் கட்டடத்திற்குள் அணிவகுப்பீர்கள், அமைதியாகவும் தேசபக்தியுடனும் உங்கள் குரல்களைச் செவிமடுக்கச் செய்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்’ என்று அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தார். இவ்வுரை பின்னர் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்பட்டது.

கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் இட்ட ருவிட்டர் பதிவு இப்படி இருந்தது:

தேர்தல் வெற்றி கபளீகரம் செய்யப்பட்டால் இப்படி நிகழும். சிறந்த தேசபக்தர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.  அமைதியும் அன்புடனும் வீடுகளுக்குச் செல்லுங்கள். இந்த நாளை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்’

மேற்படி பதிவுகள் டிவிட்டர், முகநூல் உட்பட்ட இன்னபிற தளங்களிலிருந்து நீக்கப்பட்டது. அடுத்த நாள் பேஸ்புக் நிறுவனர் மார்க், Trump-இன் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு அவர் காலவரையறையற்று நீக்கப்படுவதாகவும் தனது சுவரில் குறிப்பிட்டார். குறைந்தது அவருடைய ஜனாதிபதிக் காலம் முடிவடையும் ஜனவரி இறுதிவரை முடக்கப்படும் என அறிவித்தார்.

சமூக ஊடகங்களிலிருந்து Trump நீக்கப்பட்டிருக்காவிட்டால் மேலும் வன்முறைகள் தூண்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பல மில்லியன் கணக்கானவர்களை நேரடியாகச் சென்றடையக்கூடிய தளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவுசெய்து வந்தவர். அவரை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியமை நன்மையானது என்ற கருத்து நிலவும் அதேவேளை அந்த நடவடிக்கை அச்சமூட்டுவதாகவும் பார்க்கப்படுகின்றது. கருத்துரிமை சார்ந்ததாக எதிர்வாதம் முன்வைக்கப்படுகின்றது. இங்கு Trump நீக்கப்பட்டமை சார்ந்த சரி பிழைகளுக்கு அப்பால் சமூக ஊடகம் கொண்டிருக்கின்ற அதிகாரம் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகின்றது. அதற்கான உதாரணமாகவும் இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றது.

டொனால்ட் டிரம்ப் – சொந்தமாகப் புதிய சமூக ஊடகத் தளம்?

டொனால்ட் டிரம்ப் சொந்தமாகப் புதிய சமூக ஊடகம் ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அவருடைய முன்னாள் ஆலோசகர் Jason Miller, தொலைக்காட்சிக்கு (Fox News) வழங்கிய செவ்வியில் இந்தத் தகவல் பகிரப்பட்டிருப்பதாக மார்ச் இறுதியில் ஊடகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அப்புதிய சமூக ஊடகத்தளம் பாவனைக்கு வரும் எனப்படுகிறது. அதன் வருகை பல மில்லியன் கணக்கான பயனாளர்களை தன்வசப்படுத்தும் என்பதோடு சமூக ஊடகச் சந்தையை மறுவரையறை செய்யும் எனவும் Jason Miller தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டதற்கான டிரம்பின் நேரடிப் பதிலடியாக இது பார்க்கப்படுகின்றது. ருவிற்ரரில் 80 மில்லியன் வரையானவர்கள் டிரம்பைப் பின்தொடர்பவர்களாக இருந்துள்ளனர்.

டிரம்பின் இத்திட்டம் சுலபமானதல்ல. ஏனெனில் அதற்குரிய இணையத் தொழில்நுட்ப வளங்கள் ஊடக ஏகத்துவ சக்திகளான Microsoft, Google & Amazon வசமே உள்ளன. இந்நிலையில் டிரம்பின் புதிய சமூக ஊடகத் தளத்திற்கான சேவர் (server) வளத்தினை இந்நிறுவனங்கள் வழங்கப்போவதில்லை. அமெரிக்க ஆளுகைக்கு உட்படாத வேறு நிறுவனங்களிடமிருந்தே சேவர் வளங்களைப் பெறவேண்டி ஏற்படும். அதில்கூட சிக்கல்கள் இல்லாமலில்லை. Microsoft, Google & Amazon அல்லாத வேறு சிறிய ஊடகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிரம்பின் மில்லியன் கணக்கான பயனாளர்களைக் கவர்ந்திழுக்கும் இலக்கிற்கான தாங்குசக்தியைக் கொடுக்க வல்லனவா என்ற கேள்விகளும் நிலவுகின்றன.

பேஸ்புக்கின் பிரச்சார உத்தி?

இவற்றுக்கிடையில் சமூக ஊடகங்களிலிருந்து Trump வெளியேற்றப்பட்டமை தொடர்பான மற்றொரு பார்வையையும் உள்ளது. அதாவது புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் ஜனநாயகக் கட்சியினதும் அரசாங்கத்தினதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்கின்ற பிரச்சார உத்தியாகவும் பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனங்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருகின்ற புறநிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதிகள் அவை மற்றும் செனற் அவை ஆகிய இரண்டினையும் ஆளப்போகும் ஜனநாயகக் கட்சியிடம் நன்மதிப்பைப் பெறுவது என்பது இதற்கான முக்கிய காரணியாகவும் சில மட்டங்களில் பார்க்கப்படுகின்றது. எனவே இந்நிறுவனங்களின் ஏகத்துவ அதிகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முக்கிய கட்டத்திற்குள் நகரும்போது பைடன் நிர்வாகம் இதற்கான நன்றிக்கடனாக விட்டுக்கொடுப்புகளைச் செய்யக்கூடும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துமுள்ளனர்.

Trump நீக்கப்பட்ட காலமும் நோக்கமும் கவனிக்கப்படவேண்டியது. புதிய ஜனாதிபதியின் வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர், Trump-இன் பதவி நிறைவிற்குச் சிலநாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது. தனது ஆட்சிக் காலம் முழுவதும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரியதும் விமர்சனங்களுக்குரியதுமான பதிவுகளை இட்டு வந்துள்ளார். கடந்த 2020 நடுப்பகுதியில், தனது சமூக ஊடகப் பதிவுகளின் மூலம்,  ‘Black live matters’ போராட்டங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டினார். அக்காலங்களில் அவர் அதிகாரம் மிக்கவராக இருந்த காரணத்தால் நீக்கம் தொடர்பான எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

ஏகத்துவ அதிகாரமும் கருத்துரிமை மீறலும்

இங்கு இரண்டு பாரிய சிக்கல்கள் வெளிப்படுகின்றன. எந்தக் கருத்தினை, எந்த அரசியலினை அனுமதிப்பது, எந்த அரசியலுக்குத் தடைவிதிப்பது, எந்த அரசியலை நீக்குவது என்பது அடிப்படைக் கருத்துரிமை மீறல் என்பது ஒன்று. அடுத்ததாக இத்தனையையும் தீர்மானிப்பது பேஸ்புக் என்ற ஒரு தனித்த நிறுவனம். இங்கே நிறுவனம் எனும் போது அதன் நிறுவனர் மார்க் ஆகப்பெரும் கருத்தியல் அதிகாரம் கொண்ட உலகளாவிய நபராக ஆகியிருக்கின்றார் என்பது இரண்டாவது சிக்கல். அரசியல் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்ற கருத்தியல் அதிகாரத்தை பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்குவது கருத்துரிமை, ஜனநாயக, ஊடகச் சுதந்திரம் சார்ந்த பாரிய சிக்கல். அத்தோடு அவற்றைக் குழிதோண்டி புதைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கு ஒப்பானது.

உதாரணமாகச் சொல்வதானால் ‘Antifa’ எனும் பாசிசத்திற்கு எதிரான அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு குழுக்களை 2020-இல் பேஸ்புக் தடைசெய்தது. ‘Antifa’ என்பது பாசிசத்திற்கு எதிரான நாடு கடந்த ஒரு அரசியல் மற்றும் கருத்தியல் செயற்பாட்டு இயக்கம். திட்டமிடப்பட்ட பாசிச, நாசிச மற்றும் வலதுசாரிக் கடும்போக்குவாதத்திற்கு எதிராகச் செயற்படும் இயக்கம். சிவில் சமூகத்தின் பங்கேற்புடனும் நேரடியான எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலமும் பாசிச அமைப்புகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் மையச் சிந்தனை. பாசிச அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதற்குரிய வெளியை அனுமதித்தால் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை அவை ஏற்படுத்தும் என்ற வரலாற்றுப் புரிதலின்பாற்பட்டது இந்த அமைப்பின் இச்சிந்தனை.

எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் போக்கு

இன்றைய கொரோனா பேரிடர் காலம் மக்கள் ஒன்றுகூடி விவாதிக்கின்ற சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. இணையவழிக் கலந்துரையாடல்களும் தொடர்பாடல்களும்தான் சமூக இயங்குதலை ஓரளவு உயிர்ப்புடன் வைத்துள்ளன. சமூக ஊடகங்கள்தான் தகவல் பரிமாற்றத்திற்கும், கலந்துரையாடல்கள், விவாதங்களுக்குமான தளம் என்றாகியும் விட்டன. இனிவரும் சூழலில் இவற்றின் தேவை இன்னும் அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் இந்த ஏகத்துவ அதிகாரம் என்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. ஏலவே பேஸ்புக்கின் வடிகட்டல், தணிக்கைப் பொறிமுறைகள் தகவல்களையும், விவாதங்களையும், அரசியல் கருத்துகளையும் கணிசமாகக் கட்டுப்படுத்துகின்றன. தடுக்கவும் செய்கின்றன. பேஸ்புக் மேலும் இறுக்கமான தணிக்கை, தடைகள், நீக்குதல்களை நடைமுறைப்படுத்துமாயின் மேலும் பல எதிர்ப்புக்குரல்கள் அழுத்தப்படும் என்பது இதிலுள்ள ஆபத்துகளாகும்.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular