Saturday, July 13, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்நினைவில் காதலுள்ள மிருகம்

நினைவில் காதலுள்ள மிருகம்

ஈரோடு கதிர்

ஓவியம் : சீராளன் ஜெயந்தன்

யாரோ தன்னை தட்டுவதாக உணர்ந்து பதட்டமாய் கண் விழித்தான் நந்தன்.

“சென்ட்ரல் வந்துடுச்சா!?” என எழ முயன்றவனை தடுத்தவாறு, “உங்களக் கூப்பிடுறாங்க பாருங்க” என அவர் சன்னல் வழியே கை நீட்டினார்.

கை நீட்டிய திசையில் எம்டிசி பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. பஸ் சன்னலில் அவளின் மலர்ந்த முகம். அன்று ரயிலில் அருண் குறித்துக் கேட்டவள். குப்பென மனமெங்கும் ஒரு அவஸ்தை பூத்தது. அவள்தானா….!? மூச்சு ஒரு கணம் அடைபட்டு வந்தது. கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான். நெஞ்சு லேசாய் படபடத்தது. நிஜமா கனவா என தலையை உதறிக் கொண்டான்.

சைகையால் ஏதோ கேட்டாள். பேசினால் கேட்காத தொலைவில் பஸ் நின்று கொண்டிருந்தது. “ட்ரெய்ன்க்கு சென்ட்ரல் போய்க்கிட்டிருக்கேன்” என சப்தமாகச் சொன்னான். கம்மிய குரலாய் இருந்தது, தொண்டையைச் செருமிக் கொண்டான். அவள் பேருந்து எதிர் திசையில் நகரத் தொடங்கியது. என்ன செய்வதெனப் புரியவில்லை. தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். மறைந்து போன பஸ்சுக்கு பின்னால் அடுத்தடுத்து வாகனங்கள் சாலையை நிரப்பிவிட்டிருந்தன.

குழப்பமாக இருந்தது. எப்போது தூங்கினேன் என யோசித்தான். வள்ளுவர் கோட்டம் நிறுத்தத்தில், தேர் எந்தப் பக்கம் இருக்கிறதென தேடியது நினைவிலிருந்தது. அதன்பின் எதுவும் நினைவில் இல்லை. இறங்கி ஓடிப்போய் அந்த பஸ்சில் ஏறியிருக்கலாமோ எனத் தோன்றியது. நினைப்பே பைத்தியக்காரத்தனமாய் இருந்தது. இடது பக்கத்தில் எதிர் திசையிலிருந்து மூன்று ரயில் எஞ்சின்கள் ஒன்றாய் நகர்ந்து கொண்டிருந்தன.

சென்னையின் மதியக் கசகசப்பை அப்பட்டமாய் உணர முடிந்தது. செல்போனை எடுத்து நேரம் பார்த்தான். இன்டர்சிட்டிக்கு முக்கால் மணி நேரம் இருந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. வாட்ச் ஒன்று வாங்க வேண்டுமென அவ்வப்போது நினைப்பதுண்டு. செல்போன் வந்த பிறகு வாட்ச் எதற்கு எனத் தோன்றும். ஆனாலும் வாட்ச் ஒரு கெத்து.

சன்னல் வழியே தலையை நீட்டி தேய்ந்து கொண்டிருந்த சாலையைப் பார்த்தான். அப்படி எட்டிப் பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகப்பட்டது. அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாய் இருந்தது. ஆனாலும் அந்தப் பைத்தியக்காரத்தனம் பிடித்திருந்தது. பிடித்தமான காரணம் இருந்தால் எந்தப் பைத்தியக்காரத்தனமும் நியாயமானதாகவே தோன்றும்.

நமக்கு வாய்த்திருக்கும் நட்பு அல்லது உறவுகளில், அரிதான தருணங்களில் யாரையாவது நாம் பெற்றெடுத்திருக்கலாமென்றோ அல்லது நாம் அவருக்குப் பிறந்திருக்கலாமென்றோ தோன்றும் தேவகணம் குறித்து எங்கோ படித்தது நினைவில் வந்தது. பேருந்தில் கடந்து போனவள் அப்படி ஒருத்தியாய் இருப்பாளோ என மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். ஆமென்று சொல்லவும், இல்லையென்று மறுக்கவும் தோன்றவில்லை.

முந்தைய வருடம் மே மாதம்தான் அவளை முதன்முதலாகச் சந்தித்தான்.

சித்தப்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தான் நந்தன். சனிக்கிழமை காலை நாமக்கல் திரும்பியாக வேண்டும். வேலை எப்போது முடியுமெனத் தெரியாததால் முன்னதாகவே டிக்கெட் எதும் போட்டிருக்கவில்லை. வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்தோ பெங்களூரிலிருந்தோ நாமக்கல் வருவது ஆகாத ஒன்று. வழக்கமான ரயிலில் தட்காலில் வாய்ப்புண்டா எனத் தேடியபோது, ஆச்சரியமாக சென்ட்ரலில் இருந்து பத்தரை மணிக்கு சேலம் வழியாக திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் இருந்தது. அதில் இடமும் இருந்தது. இருவருக்கும் டிக்கெட் போட்டாகிவிட்டது. ஆனாலும் வந்த வேலை முடியும் அறிகுறி தென்படவில்லை. சித்தப்பாவை விட்டுவிட்டு நந்தன் மட்டும் புறப்படுவதாக முடிவானது. தட்கால் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

சென்ட்ரலை அடைந்து பெட்டியைக் கண்டுபிடித்து ஏறியபோது பெயிண்ட் வாசனை வீசியது. பெட்டி பளிச்சென இருந்தது. சுத்தமாய் பளிச்சென இருக்கும் பெட்டி கண்டதும் மகிழ்வாய் இருந்தது. 67 மற்றும் 72ம் எண் படுக்கைகள். பெட்டியின் மறுமுனைக்கே வரவேண்டியதாக இருந்தது. 72 பக்கவாட்டில் மேல் படுக்கை. கீழ் படுக்கையின் இருக்கையில் ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொன்றும் மேல் வரிசை படுக்கைதான். இரண்டு கீழ்ப்பக்க படுக்கை முழுக்க வயதானவர்கள் பைகளை வைத்தபடி நிரம்பியிருந்தார்கள். கால் வைக்கும் இடமெங்கும் பைகள், பெட்டிகள். திருதிருவென விழித்தபடி சுற்றிலும் பார்த்தான். முதலில் அந்த ஆண் நிமிர்ந்து பார்க்க, அதைக் கவனித்த அந்தப் பெண்ணும் சாப்பிட்டவாறு நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைக் குனிந்தாள். குனிந்த வேகத்தில் நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில், அந்த முகத்தில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்தன. நொடிப்பொழுதிற்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை நந்தனுக்கு. ஏன் அந்தப் பெண் அப்படிப் பார்க்கிறாள் என யோசனையாக இருந்தது.

கையிலிருந்த பையை அவர்களின் தலைக்கு மேலிருந்த படுக்கையில் வைத்துவிட்டு வெளியே வந்தான். நேரத்தைப் பார்த்தான். இரயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நடைமேடையில் அங்குமிங்குமாய் ஓடும் மனிதர்களின் முகங்களை கவனிக்க ஆரம்பித்தான். விதவிதமான முகங்கள் சுமக்கும் உணர்வுகள்தான் எத்தனையெத்தனை. வழியனுப்பும் முகங்கள் ஒருவிதம், பயணிக்கும் முகங்கள் ஒருவிதம். ஒரு பயணம் எத்தனையோ உணர்வுகளைத் தந்து விடுகின்றது. யதேச்சையாக சன்னலைப் பார்த்தான். அவள் நந்தனையே பார்த்தபடியிருந்தாள். அவன் கவனிப்பதைப் பார்த்ததும் குனிந்து சாப்பிடத் துவங்கினாள்.

நகரும் மனிதர்கள் மேல் வலுக்கட்டாயமாக வைக்க முயன்றாலும் எதோ ஒன்று சொடுக்கியிழுத்துப் பெயர்த்தெடுத்து வந்து அவள்மீது குவித்தது. அப்படிப் பார்க்கும் எல்லாக் கணத்திலும் அவளும் பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஏன் அந்தப் பெண் அப்படிப் பார்க்கிறாள் எனப் புரியாதது சுவாரஸ்யத்தையும், மிரட்சியையும் தந்தது. முதன்முறை பார்த்துவிட்டு வேகமாகக் குனிந்து நிமிர்ந்தவளின் முகத்தில் இருந்த உணர்வுகளுக்கும், இப்போது முகத்தில் இருக்கும் உணர்வுக்கும் நிறைய வேறுபாடிருந்தது. இந்தப் பார்வையில் ஒரு சிநேகமிருந்தது. அந்த சிநேகம் ஏன் என்ற யோசனை மீண்டும் மீண்டும் அவன் பார்வையை அவளை நோக்கி குவிய வைத்தது. இப்படிப் பார்ப்பது அநாகரிகமாகப் படலாமோ என சில அடிகள் நடந்து பெட்டியை விட்டு மறைந்து போனான். சில நிமிடங்கள் கழித்து பழைய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்தான். பரபரப்பாய் ஓடும் மனித முகங்கள் புதிது புதிதான சுவாரஸ்யங்களைத் தந்தபடியே இருந்தன. எந்த முகத்தில் பார்வையைச் செலுத்தினாலும் மனசு தன்னாலேயே அந்தப் பெண்ணின் மீது இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படி துரத்தித் துரத்திப் பார்த்தேயாக வேண்டிய அழகொன்றுமில்லை. ஆனாலும் அவள் அடிக்கடி பார்ப்பதே மீண்டும் மீண்டும் பார்வையை அங்கேயே இழுத்துச் சென்றது.

ரயில் நகர்வதற்கான முனைப்பு தெரிந்தது. முன் பக்கம் பச்சை விளக்கு ஒளிரத் தொடங்கியது. கடைசிப் பெட்டியில் பச்சை விளக்கு மேலும் கீழும் அசைந்தது. பெட்டிக்கு அருகில் வந்து நின்று கொண்டான். வெடுக்கென விடுபட்டது ரயில், படியில் ஏற முற்படும்போது அந்த பெண்ணிற்கு எதிரில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண் இறங்கினான். எதற்கு இப்போது இறங்குகிறான் என யோசித்தபடியே படியில் ஏறி இரண்டு பக்கமும் கம்பியைப் பிடித்தவாறு அவனைப் பார்க்க, சன்னலருகே வந்து அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்லிவிட்டு கையசைத்தபடி பின்னோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நந்தன் தன் படுக்கைக்கு நேர் கீழே இருந்த இரண்டு பெருசுகளிடம் கொஞ்சம் நகருங்கள் என சைகை செய்தான். நுனியில் கொஞ்சம் இடம் விட்டார்கள். நடக்கும் பகுதியில் கால் வைத்தபடி பெருசுகளுக்கு முதுகு காட்டி அமர்ந்தான். நேரெதிரே அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். கூடுதல் சிநேகம் அவள் முகத்தில் கசிந்தபடியிருந்தது. தலையை தாழ்த்திக்கொண்டான்.

’யாரிது. ஏன் எப்பப் பார்த்தாலும் தன்னையே பார்க்கிறாள்’ என்ற சந்தேகம் நந்தனுக்குள் உழன்றது. செல்போனை எடுத்து தலையைக் குனிந்து கொண்டான். நிமிர்ந்த போதெல்லாம் அவள் அவன் முகத்தையே பார்ப்பதை உணர்ந்து சற்றே அசூசையாய் உணர்ந்தான். ஆனாலும் நெருடலோ சங்கடமோ உருவாகாத மென்மையான பார்வைதான்.

பெருசுகள் தங்கள் படுக்கைகளை விரிக்க முற்பட்டனர். எழுந்து மத்தியிலிருக்கும் படுக்கையைப் பொருத்த உதவினான். ரயிலில் ஏறியவுடன் படுக்கும் ஜென்மமல்ல நந்தன். உறக்கம் சூழும் வரை சன்னல் காற்று முகத்தில் மோத வேண்டும்.

எங்கே உட்கார்வதென்ற யோசனையோடு இருந்தவனுக்கு தன் படுக்கையில் இருந்த பையை எடுத்து மடிமீது வைத்துக்கொண்டு தன் எதிரில் உட்கார இடம் கொடுத்தாள். எதிரில் உட்கார்ந்தவன் முகத்தையே ஒரு மெல்லிய புன்னகையோடு விடாது பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தனுக்கு மெல்லக் கூசியது. இப்படி எப்போதும் இடைவிடாது ஒரு பார்வைக் கவனிப்புக்குள் இருப்பது நல்லதா கெட்டதா… ஏன் இவள் இப்படிப் பார்க்கிறாள். தலையை சன்னல் கம்பிகளில் முட்டி, காற்று வாங்க ஆரம்பித்தான். ரயில் பயணங்களில் நந்தனுக்கு உடனே தூக்கம் பிடிக்காது. இப்படி எத்தனை முறை காற்றைப் பருகினாலும் அவனின் இரவுப் பயணத்தின் சன்னல் தாகம் தீர்ந்ததேயில்லை. ஓரக்கண்ணால் அந்தப் பெண்ணை நோக்கினான். அவள் அதே புன்னகையோடு அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

தாங்க முடியாமால் அவளை நோக்கி மெல்ல புன்னகைத்தவாறு

“ஏன் என்னையே பார்த்துட்ருக்கீங்க!?”

“சும்மா”

“சும்மா… இல்ல… என்னவோ காரணம் இருக்கு. சொல்லுங்க!”

“ரொம்ப தெரிஞ்ச முகமா இருக்கீங்க”

ஏதேனும் மறுப்பை எதிர்பார்த்தவனுக்கு இந்த நேரிடை பதிலை எதிர்கொள்ளத் தெரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.

“நாமக்கல்லா நீங்க?”

“ம்ஹூம்… நேட்டிவ் தென்காசி. சென்னைல செட்டில்ட்”

“அப்ப என்னைப் பாத்திருக்க வாய்ப்பில்லையே”

“தெரியல… தெரிஞ்ச முகமா இருக்கீங்க”

வேறொன்றும் பேசத் தோன்றவில்லை. சக பயணியிடம், அதுவும் பெண்ணிடம் அதற்கு மேல் கேள்வி கேட்க மனம் ஒப்பவில்லை. ஆனால் அந்த பார்வையில் இருந்த சிநேகம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை நிரப்பி, அதனடியில் ஆச்சரியப் பூக்களை வைத்தது.

அவள் படுக்க விரும்பினால், மேல் படுக்கையை அளித்துவிட்டு கீழே சிறிது நேரம் அமர்ந்திருக்க விரும்பினான்.

“நீங்க தூங்கணுமா!?”

“இல்ல”

“நீங்க தூங்குறதா இருந்தா நா என்னோட பெர்த்துக்கு போய்டுறேன்”

“பரவால்ல உட்காருங்க”

“நீங்க தூங்கனும்னா அப்பர் பெர்த் எடுத்துக்குங்க. நான் கொஞ்சம் வேடிக்கை பார்க்கனும்”

”நீங்க இதுல தூங்கப்போறீங்ளா!?”

“சைடு பெர்த் கால் இடிக்கும், அந்த அப்பரும் என்னோடதுதான்”

“அப்ப நான் இங்க படுத்துக்குறேன்” என மேலே கையைக் காட்டினாள்.

ஆனாலும் நகரும்பாடில்லை. அதே புன்னகையோடு, அதே மென்மையோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியில், மொபைலில் பார்வையைச் செலுத்தினாலும், அவள் அவனையே பார்ப்பதுபோல் உணர்ந்து கொண்டேயிருப்பது சற்றே சங்கடமாய் இருந்தது. ஆனாலும் பிடித்திருந்தது. அவ்வப்போது தவிர்க்கவே இயலாமல் அவள் முகத்தைப் பார்த்தான். பார்க்கும் பொழுதெல்லாம் புன்னகை சற்றே வளர்ந்தொளிர்ந்தது. மையமாய் புன்னகைத்து வைத்தான். யார் இந்தப் பெண், ஏன் இப்படிப் பார்க்கிறாள்? மண்டைக்குள் குடைச்சலாய் இருந்தது.

அவள் படுப்பதாகத் தெரியவில்லை. விட்டுவிட்டு மோதும் பார்வையின் அர்த்தம் என்னவென்றே விளங்கவில்லை நந்தனுக்கு. தப்பான நோக்கம் கொண்ட பெண்ணாக இருப்பாளோ என நினைக்கவே தோன்றவில்லை. அவள் குறித்த நினைவிலிருந்து விலக முற்பட்டான். விலக முற்படும்போதே அவள் பார்க்கிறாளா எனப் பார்க்கத் தோன்றியது. அவள் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள்.

படுக்கைக்கு ஏறினான்.

“தூங்கப் போறீங்ளா!?”

சற்றே எரிச்சல் வந்தது. வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஆமா”

“குட் நைட்”

பெரிதாய் புன்னகை வந்தது நந்தனுக்கு..

“குட் நைட்… இனியாச்சும் என் முகத்தைப் பார்க்காம நிம்மதியா தூங்குங்க”

அவளும் பெரிதாய்ப் புன்னகைத்தாள்.

கதவு அருகில் எப்போதும் அணைக்கப்படாமல் இருக்கும் விளக்கின் வெளிச்சம் நந்தன் முகத்தில் அடித்தது. ரயிலில் இந்த மாதிரி படுக்கைகள் வாய்க்கும்போது இதுவொரு பெரு அவஸ்தைதான். அவளும் படுக்கைக்கு நகர்ந்தாள். அங்கிருந்து அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடிந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாசூக்காய் முதுகு காட்டிப் படுத்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு யதேச்சையாய் திரும்பிப் படுத்தான். அவள் விழிகள் அவனைத் துளைத்தபடியே இருந்தன.

ஒரு வழியாய் தூங்கிப்போனான். இடையில் இரண்டு மூன்று முறை விழிப்பு வந்தபோதும் அவள் தூங்காமல் இருப்பதை உணர்ந்தான்.

நாலே முக்கால் மணிக்கு நாமக்கல்லில் இறங்க வேண்டும் என்பதால் நாலரைக்கு அலாரம் வைத்திருந்தான். அலாரம் சப்தம் எழும்போது ரயில் ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தது. நாமக்கல்தானோ எனப் பதறி படுக்கையிலிருந்து கீழே இறங்கியபோது

“சேலம்” என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தான். களைத்த முகமாய் இருந்தாள்.

அவள் தூங்கவே இல்லையோ எனும் நினைப்போடு கதவருகே நின்று பார்த்தான். பெரிதாய் மக்கள் நடமாட்டமில்லை. ரயில் நகரத் துவங்கியது. கீழ்ப் படுக்கை காலியாகவே இருந்தது. அதில் அமர்ந்து கொண்டு கடக்கும் ஸ்டேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி தூக்கம் பிடிப்பது சிரமம். கால் நீட்டி சாய்ந்தவாறு கண் மூடி காலை நேர விசுவிசுப்பை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஒருமுறை மேலேயிருந்து அவள் எட்டிப் பார்ப்பதைக் கவனித்தான். நாமக்கல் ஸ்டேஷனுக்குள் ரயில் நுழைந்தது.

“ட்டீட்ட்ட்ட்ட்டீ… ச்ச்சாயா” குரல்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டும்.

விளக்குகளைப் போடாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு கதவுப்பக்கம் நகரும்போது அவள் இறங்கி கீழ்ப் படுக்கையில் பையை வைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“என்ன நாமக்கல்ல இறங்கப் போறீங்ளா!?” என்றான் கிண்டலாக

மறுப்பாய் தலையசைத்தாள்

”நான் இறங்கிடுறேன்… இனியாச்சும் கொஞ்சம் தூங்குங்க” என்றான்.

“ம்ம்ம்”

நீண்ட நாள் பழகிய யாரையோ பிரிவதுபோல் தோன்றியது அவனுக்கு. ரயில் நின்றது.

“சார்”

அவள் குரல் சற்றே கம்மலாய் இருந்தது.

இறங்கும் முனைப்பில் இருந்தவன், என்ன என்பது போன்ற பாவனையில் அவளை ஏறிட்டான்.

“உங்களுக்கு ப்ரதர் இருந்தார்ல!?”

சட்டென அதிர்ந்தான்.

“ஆமா… ஏன் கேக்குறீங்க?”

“என்னவோ கேக்கணும்னு தோணுச்சு. ஸாரி” அவள் முகம் இருண்டு போயிருந்தது.

“உங்களுக்கு அருணைத் தெரியுமா!?”

ஒன்றுமே சொல்லாமல் மௌனமாக இருந்தாள். இரவில் பார்த்த முகத்தின் மலர்ச்சி எதுவும் இல்லை. தலை குனிந்தபடியே நின்றாள். அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவள் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. விசில் சத்தம் கேட்டது. சட்டென இறங்கினான். குலுங்கியபடி ரயில் புறப்பட்டது. பெட்டி அவனிடமிருந்து விலகியது. கதவருகே நின்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அருண் குறித்துக் கேட்டபோது, அவள் பதில் சொல்லாமல் இறுக்கமாய் தலை குனிந்திருந்தது நந்தனுக்கு என்னவோபோல் இருந்தது. அவள் யார் எனும் கேள்வி குடைந்தது. அருணுடன் படித்த அல்லது அவனுக்குத் தெரிந்த பெண்ணாய் இருந்திருப்பாளோ!?.

அருணின் சாவு நிமிடங்கள் வந்து மோதின. அருண்… அருண்… அருண் என மனதுக்குள் ஒரு பதற்றம் தொற்றியது. விபத்தும், மூன்று நாள் மருத்துவமனை தவமும், கடைசி கணத்தில் உடல் உதறியெழுந்து விழுந்து அடங்கியதும் நினைவில் சூழ்ந்து அவன் நடையைத் தளர்த்தின. அருண் பற்றி அவளிடம் வற்புறுத்திக் கேட்டிருக்கலாமோ. அட்லீஸ்ட் அவள் பெயரையாவது கேட்டிருக்கலாமோ? அந்த நாள் முழுதும் அவள் நினைவாகவே இருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் அவள் பார்வை எத்திசைகளிலிருந்தும் தன்னையே பார்ப்பதுபோல் ஒரு உணர்விருந்தது.

ரயில் கிளம்பியதும் எல்லாம் இருண்டுபோனதுபோல் இருந்தது பாரதிக்கு. அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. கழிவறைக்குச் சென்று முகத்தைக் கண்ணாடியில் பார்த்த நொடி ஓலமிட்டு அழத் துவங்கினாள். அவளின் ஓலம் அந்த இரும்புப் பெட்டியின் உரசல்களில் ஒன்றுமில்லாது போனது. படுக்கைக்குத் திரும்பியவள் நந்தன் தலை சாய்த்து அமர்ந்திருந்த அதே பாணியில் அமர்ந்துகொண்டு விடியற்காலைக் காற்றை முகத்தில் மோத விட்டாள். கண்களின் இரு புறமும் கண்ணீர் சுரப்பதும் உலர்வதுமாய் இருந்தன. பதினொரு வருட பாரம் மெல்லக் கரைவதுபோல் உணர்ந்தாள்

ஒரு தீபாவளிக்கு ஊருக்குப் புறப்படும்போதுதான் அருணை அவ்வளவு அருகில் பார்த்தாள் பாரதி. வேலை பார்த்துக்கொண்டு மாடி போர்சனில் ஒன்றாய்க் குடியிருக்கும் நான்கு பேரில் ஒருவன் அருண். பாரதி குடும்பம் கீழ் வீட்டில். அதுவரை அம்மாவிடமோ அப்பாவிடமோ தம்பியிடமோ ஓரிரு வார்த்தைகள் பேசும் அருணை எட்ட நின்று மட்டுமே கவனித்திருக்கிறாள். தீபாவளி வாழ்த்துச் சொல்லிவிட்டு, “ஊரிலிருந்து வரும்போது உங்க ஊரு தீவாளிப் பலகாரம் கொண்டு வாங்க” எனச் சொன்னபோதுதான் அருகில் பார்த்தாள்.

ஊர் திரும்பி ஸ்வீட் காரம் கொடுத்ததில் தொடங்கிய நட்பு, அடுத்தடுத்த நாட்களில் காதலானது. அருணோடு இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த காதல், பாரதி குடும்பத்திற்கு மெலிதாய் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும்போதுதான் அருண் ஊருக்குப் போனான். வீட்டில் கல்யாணப் பேச்சு எடுப்பதாகவும், பாரதி குறித்துப் பேசி நல்ல முடிவோடு திரும்புவதாகவும் போனவன் திரும்பவேயில்லை.

அருண் நண்பர்களுக்கே நான்கு நாட்கள் கழித்துதான் தகவல் தெரிந்தது. சபரியும், முரளியும் மட்டும் போய் வந்தனர். பாரதி உருக்குலைந்து போனாள். அவள் குடும்பம் அவளின் வலியைப் புரிந்துகொண்டு மௌனமாய் அரவணைத்தது. ஒரு வார்த்தை பேசாமல் அவளைத் தேற்றியது. அனுசரனையாய் அவளை நடத்தியது. ஒருபோதும் எவரும் எது குறித்தும் பேசவில்லை. அருணின் குடும்ப டூர் போட்டோ ஆல்பம் பாரதியிடம் இருந்தது. அருணின் அப்பா அம்மா தம்பி தங்கை ஆகியோரின் பெயர்களும் மனதில் தன் உறவுகளாய்ப் பதிந்து போயிருந்தனர்.

மூன்று வாரம் கழித்து அருணின் பொருட்கள் மற்றும் பைக் எடுத்துச் செல்ல அருணின் தம்பி நந்தன் வந்திருப்பதாக சபரி சொன்னான். நந்தன் அருணை உறித்து வைத்தார்போல் உருவத்தில் இருந்தான். எட்ட நின்று நந்தன் அங்கிருந்து கிளம்பும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

பதினொரு ஆண்டுகள் கழித்து நந்தனை ரயிலில் பார்த்த கணத்தில் உறைந்துபோனது, அடுத்த நொடியே அத்தனை வருடத் துக்கம் தீர்ந்ததுபோல் நந்தனை மிக நெருக்கமாக உணரத் துவங்கியது, அருண் குறித்துப் பேசிவிடலாமா என விடிய விடிய நினைத்து தோற்றுப்போய், இறுக்கமான புன்னகையோடு அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது எல்லாம் மனதிற்குள் சுழன்று சுழன்றோடியது. நந்தன் முகத்தில் அருணையும் அவன் குடும்பத்தையும் கண்டதுபோல் நிறைவாய் உணர்ந்தாள். நந்தன் குடும்பம் குறித்து, அப்பா அம்மா குறித்து, தங்கை சுகந்தி குறித்துக் கேட்க பல நூறு கேள்விகள் முளைத்தும் புன்னகையால் விழுங்கியது சரியா தவறா என்ற முடிவிற்கு அவளால் வரமுடியவில்லை. அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென இடைவிடாத பிரார்த்தனை மட்டும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கினாள் பாரதி. நந்தனை மீண்டுமொரு முறை, அதுவும் இப்படியான எதிரெதிர் பஸ்ஸில் பார்ப்போம் என நினைத்திருக்கவில்லை. உலகம் ஏன் இத்தனை சுருங்கிப்போனது எனும் கேள்வி எழுந்தது. உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாமல் விட்டிருக்கலாமோ எனத்தோன்றியது. எதுவும் தெரியாமல் அன்றும் இன்றும் அவனைக் குழப்பியதற்கு மானசீகமாக மன்னிப்பை வேண்டினாள்.

வீட்டிற்குள் நுழையும்போதே பிள்ளைகள் பாட்டியிடமிருந்து ஓடி வந்து கட்டிக்கொண்டன. இருவரையும் அள்ளி இறுக்கிக்கொண்டாள். எப்போதுமில்லாத அளவில் இருந்தது அந்த இறுக்கம். ஒருவழியாக ஆசுவாசம் அடைந்து, உள்ளே சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தாள். சாப்பிடுவதற்காக தட்டு எடுத்து வைத்தார் சிவலட்சுமி.

“என்ன பாரதி, ஒரு மாதிரியா இருக்கே!?”

“அருணோட தம்பி நந்தனை இன்னிக்கு ரெண்டாவது முறையா பஸ்ல பார்த்தேன்மா”

பனிரெண்டு வருடத்தில் பாரதி ‘அருண்’ எனச் சொல்வதை சிவலட்சுமி அப்போதுதான் முதன்முறையாகக் கேட்கிறார்.

***

ஈரோடு கதிர் – எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான அமைப்பையும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். சூழலியல், உடல்நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு, திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், நடப்பியல் பேசும் சமூகக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular