Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்138 கோடி தலைகளின் மிஸ்டர் பொதுஜனம்

138 கோடி தலைகளின் மிஸ்டர் பொதுஜனம்

கவிதைக்காரன் இளங்கோ

பாலருந்திய சுவையின் ஈரத்தில் பிரபஞ்சத்தின் கருநீல ருசியை கேலக்ஸி என்று உரைப்போம்
வாலறுந்த டார்வீனிய குரங்கு தன் தடம் பற்றிய பிரக்ஞை அற்று
காட்டைத் துறக்க எடுத்த முடிவில் அறிவின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை
புரோகிராம் எழுதப்பட்ட வீடியோ கேம்களில் முடிவற்று ஓடுகிற
அனிமேட்டட் கால்கள் இலக்கற்றவை
வரலாறு குறித்த பார்வையில் சர்ச்சைகள் எழும் பட்சத்தில் மேற்கொள்ளப்படுகிற
ஆய்வுகளின் தீர்வில் கைவிடப்பட்ட விவாத மேஜைகள்
மரத்தின் கனவுகளை வனத்தின் அடர்த்தியில் புதைத்து வைத்திருக்கலாம்
ஒரு விறகு வெட்டியோ அறுத்து இழைத்த தச்சனோ அதற்குப் பொறுப்பேற்க தேவை இல்லை
கதவுகளற்ற குகைகள் மர்மம் நிறைந்தவை ஆனால் குறைந்தபட்ச உணவுக்கு உத்தரவாதம் அளித்தவை
தப்பிப் பிழைத்தல் சேமிப்பைப் பதுக்குதல் இரண்டின் கீழும் உருட்டப்பட காத்திருக்கும் ரேகைகள் சிவப்பு நிறத்திலானவை
அதிகாரத்தின் குரல் இசைத் தட்டுகளில் கீறப்பட்டு திரையரங்குகளில் ஒலிக்கின்றன
எழுந்து நின்று செலுத்த வேண்டிய மரியாதை ஒரு Mandatory
எங்கள் அனிமேட்டட் கால்கள் குறைந்தபட்சம் அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்
அதுவரை துரத்திப் பிடிப்பதற்கு பேருந்துகளும்
நடைப்பயிற்சிக்கு பூங்காக்களும்
பொருள் நுகர ரேஷன் கடைகளும்
வார இறுதிகளுக்கான ஷாப்பிங் மால்களும்
மல்டி ஃப்லெக்ஸ் திரையரங்குகளும்
காற்றாட கடற்கரைகளும் திறந்து கிடக்கின்றன
புனைவின் வழியே நிகழ்த்த விரும்பும் எங்கள் ப்ரியத்தின் கழுத்தை கவ்விக்கொண்டு கனவுகள் தோறும் அலைகிற மனப்பூனையின் முனகலை
பிரதியாக்கும் முயற்சியை பத்திரப்படுத்த ஒரு பழைய டைரியை நடைபாதை கடைகளில் மலிவு விலையில் வாங்கிக்கொள்ளுவோம்
விழுமியங்கள் நேர் செய்யப்பட முடியாத சூழ்நிலையை தொடர்ந்து
பெருகச் செய்வதன் மூலம் ஏதாவது ஒன்றில் முட்டிக்கொண்டு திரும்புவது அவஸ்தை
விடியலை இன்னும் முழுமையாக அனுமதிக்காத இரவின் கைவிரல்
இதுவரை அறிந்திராத உடற்பாகங்களை வருடியபடி காலத்தை
வடிவிழக்கச் செய்கிறது நிதானமாக
யாவற்றையும் சந்தேகி என்ற கார்ல் மார்க்ஸை ஒரு முறையேனும் நினைத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை எந்தவொரு அரசாங்கமும்
குடிமக்களுக்கு வழங்கத் தவறுவதில்லை
தேசத்தின் புன்னகையை ரூபா நோட்டுகளில் அங்கீகரிக்கும் உலக வங்கிகளுக்கு
அடமானமாகக் கணக்குக் காட்ட நூற்றி முப்பெத்தெட்டு கோடித் தலைகள் இங்கு உண்டு
அவை போடும் குட்டிகளுக்கான வட்டிக்கணக்கு அந்நிய செலாவணியாகும்
திராணியுமுண்டு
சதா வானத்தில் ஏற்றுமதியாகும் மூளைகளுக்கு நல்ல கிராக்கி
வெயில் உடைக்கும் தலைக்குள் ராக் / ஹிப் ஹாப் பாடல்களை ஒத்திகையில் ஓடவிட்டு விசாவுக்காக நீண்ட மதிலோரம் கால்களை ஏந்தி நிற்கிற
லீ கூப்பர்களும் வுட்லேண்ட்களும் தாம் டேக் ஆஃப் ஆகப் போகிற ரன்வேயை தியானிக்கின்றன
ஆடம் ஸ்மித்தின் பாதம் தொட்டு சுண்டிவிடப்பட்ட நாணயத்தால் விழுந்ததெல்லாம் தலை மட்டுமே
நாம் சடுதியில் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துவிடுவோமேயானால்
இந்நிலத்தில் சிந்தக் காத்திருக்கும் ரத்தத் துளிகள்
தொடர் அதிருப்தியின் வழியே அசாதாரண வீரியத்தோடு கொப்புளிக்க பழக்கப்படுத்தப்படலாம்
குறி தவறாத ஈயக் குண்டுகள் துப்பாக்கிகளின் வாய்களை அண்ணாந்தபடி கேட்ரிட்ஜ்களில் தவமிருக்கின்றன
தேவையெல்லாம் ட்ரிகரை சுண்டும் விரல்களும் ‘க்ளியர்’ என்று அலற ஓர் அதிகாரக் குரலுமே
மீன்பிடி படகுகளும் கைப்பிடிச் சோறும் தர்க்கக் கேள்விக்கு உள்ளாகும் நாளில்
வீட்டுவாசலில் மண்டையோடு பிளந்து சிதறும் மூளைக்குள் இருந்திருக்கலாம் அடுத்த மாத வாடகைக் குறித்த சொற்ப யோசனை
செய்திகள் ஊமையாக ஸ்க்ரோல் ஆகும் கேட்டட் கம்யூனிட்டியின் ஹாலோபிளாக் உள்ளடுக்குப் பின்னிரவாய் கசிந்திடும் குளிரை மட்டுப்படுத்த ஏஸி ரிமோட்டை இருளில் துழாவி திசை தப்பி விரலில் தட்டுப்படும் விறைத்த மார்புக்காம்பு அறையின் வெப்பத்தை மெல்ல உயர்த்திடும் விந்தையின் சீரற்ற வேகத்தில் திரளும் உன்மத்த காமம்
உடல்களின் சேர்க்கையில் விளைகிற சந்தையின் நுகர்வு பொருட்கள் எண்ணற்றவை
மனம் ஒப்ப தேர்வாகும் பட்டியல்படி அமேஸான் தருவிக்கிறது யாவற்றையும்
வக்கற்று பிறந்துவிட்ட குழந்தைகளின் உலகில் கொஞ்சமாய் உலவுகின்றன கதைகள்
கவனிக்கத் தவறாத சங்கதிகளின் அடர்த்தியில் வெட்டவெளிச்சமாகும் பகிர்தல் ஒவ்வொன்றும் இளம் டி.என்.ஏ வடிவத்தை உருமாற்றுகின்றன
பிடித்தங்களையும் விருப்பமற்றவைகளையும் உளச் சிக்கல்களையும் டவுன்லோட் செய்து சேமித்து வைக்கும் டேட்டாக்களாக ஃபோல்டர் உருவாக்கி குவிக்கிறோம்
மறுபரிசீலனைக்கு நேரமற்று விட்ட இடத்திலிருந்து தொடரும் சண்டைகள்
வார இறுதியை காலாவதியாக்குகிறது
மதுக்கூடங்கள் குறைந்த வெளிச்சத்தில் ரகசியமாக அழுதுகொள்ள கொஞ்சமாக அனுமதிக்கின்றன
தேவையெல்லாம் ஏதாவது ஒரு பிளாட்டினம் கிரெடிட் கார்டும்
முழு கண்ணாடி கூஜாவில் தளும்பும் ஒரு டிராஃப்ட் பீரும் மட்டுமே
தலைப்புச் செய்திகள் சலிப்புறச் செய்யும் அன்றாடத்தை திங்கட்கிழமை காலையில் தொடங்கி
புளியங்கொட்டை அரவைக் கலந்த டீயின் கசப்பை ஏற்று முகஞ்சுழித்து
கெட்ட வார்த்தை உதிர்த்து உதைக்கும் பைக்கில்
சுற்றிவர நகரெங்கும் தன்னிஷ்டத்திற்கு வளைத்துத் திருப்பும் ஒன்வே
மழையில் ஜல்லி பெயர்ந்த நகரச் சாலைகளும் கிளைச் சந்துகளும்
பழுதே ஆகாத ஸ்பீட் பிரேக்கர்களும்
மிச்சமாக
வெள்ளிக்கிழமை வரை புலம்பித் தீர்க்கும் பகல்களும் அதன் நீட்சியில் மசங்கிய அவ்விரவுகளும் இருக்கவே இருக்கின்றன
அதுகாறும் மணிக்கட்டு நரம்பை அழுத்தாத கைக்கடிகாரம் ஓர் உற்றதுணை
ஒவ்வொரு முகத்திலிருந்தும் இன்னொரு முகம் உதிர உதிரப் பெருகும் பாவங்கள்
மரத்தினடியில் மண் பூடமாக முளைப்பதிலிருந்து கோபுரங்களுக்குள் சிலைகளாகி சமைவது வரை கடவுளரின் பயணங்கள் பாதை தொலைந்தவை
இதுவரை சொன்னதற்கும் முன்பிருந்தே இருந்திருந்தாலும்
இப்போது முழங்கால்களுக்கு கீழான மனித எலும்புகள் புல்லாங்குழல்களாகி
திபெத்திய புத்தத் துறவிகளை சென்றடைகின்றன
அதன் துளைகளினூடே நுழைந்து வெளியேறும் மூச்சுக்காற்றில்
மரணத்தின் இசையை முழந்தாளிட்டு வணங்கிக் கேளுங்கள்
சீவப்பட்ட மண்டையோட்டின் மேல்தட்டு
சாம்பிராணி கிண்ணமாகி
மணக்கும் புகை சூழ்ந்த பிரார்த்தனையின் ஆன்மா எதை எழுப்பும்?
அர்த்தம் பொதிய விரும்பும் கனவுகளில் தலைப்புச்செய்தி குறித்த கவலையில்
கச்சா எண்ணெய் தீர்மானிக்கும் ஒற்றை பேரல் விலையே
கறுப்புத் தங்கம்
பங்குச்சந்தை பங்கிட்டு ஏப்பம் விடுவது உடல்களை
கீழ் நோக்கிய சிவப்பு நிற அம்புக்குறி யாரை நோக்கி எய்யப்படுகிறது
அனலிஸ்டுகளின் புள்ளி விபரங்களை சரிபார்த்துக் கொள்ளும் கால்குலேட்டர்
பர்மா பஜார் நடைபாதைக் கடைகளில் சல்லிசான விலையில் கிடைக்கலாம்
பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரையிலா இலக்கங்கள்?
வேடிக்கையானவை
நாம் செய்த தானத்தின் மதிப்பு காலத்தின் குரல்வளையில்
தழும்பாகி
காய்த்துக் கிடக்கிறது
வாதாடும் வலுவற்ற வரலாற்றின் நரை மயிரில் மௌனத்தின் நூலாம்படை
சிலந்தியின் புள்ளிகள் குளோபல் கிராமங்களை சட்டைப் பாக்கெட்டில்
பத்திரப்படுத்தும் வடிவத்திலானவை
அதனூடே கசியும் தகவல்கள் சிறைக்கம்பிகளை பாலீஷ் பிடிக்கின்றன
கொள்கைகளின் கெட்டித்த அட்டை போட்ட புத்தகங்கள்
வடிவம் சிதைந்திடாமல் கிண்டில் கருவிக்குள் டிஸ்கவுண்ட் விலையில்
தரவிறக்கம் ஆகிவிடுகிறது
அனைத்துப் பக்கங்களிலும் வாய்களின் ஓலம்
ஒப்புக்கொள்ள மறுக்கும் தர்க்கங்களின் ஊளை
ஒரு பசி கையேந்தி நிற்கும் இருளடர்ந்த சுரங்கப்பாதையில் பேரமாகப் பேசப்படுகிறது மீண்டும் மீண்டும் மனித உடல்
எங்கோ ஒளி மங்கிய கருணையைச் சீந்திட ஆளில்லாமல் பிச்சையிடப்படுகிற காமம் ஈட்டுத் தருகிற கூலியில் வேறு என்னவெல்லாம் நிரம்பும்?
ஓர் அவலத்தின் நாசி விடைத்துக்கொண்டு நுகர நினைக்கிற பகல்நேர விளையாட்டை உருட்டி உருட்டித் திரட்டுகிறது மானுட கவுச்சி
நிராசைகளைப் பிசைந்து உண்ணும் உத்தரவாதங்களை வாசல் கதவில் ஓட்டிப் போகிறார்கள்
அடையாளமாகிவிட்ட குறியீட்டின் பயங்கரம் அறியாமல் தலை தொங்கி கிடக்கிறது துருப்பிடித்த உரிமைகளின் நீண்ட சாவி
தொடர்ந்து கூட்டம் சேருங்கள் பிரியாணி பொட்டலங்கள் எந்த சந்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிற ரகசியத்தை மட்டும் பத்திரப்படுத்தச் சொல்லுங்கள் உங்கள் தரகனை
லாரிகளை புழுதிப் பறக்க கிளப்பிக்கொண்டு வந்தபடி இருக்கிறது பிரச்சார மேடை
தோள் வலு உள்ளவரை வேறென்ன வேண்டும்
இன்னும் இன்னும் என இரத்தம் பெருக்கும் கடுஞ்சூடு இளகாத உப்புத்துளியும்
சீ நாயே என உறுமலிடும் கட்டளைக்கண் எச்சில் துப்பல் என்பதும் மேலான கவுரவம்
கார்ப்பொரெட் போங்காட்டத்தில் கீழே இறக்கிவைக்க விருப்பமில்லாத உங்களின் சீட்டுக்கட்டை உட்பக்க விசிறியாக விரித்துப் பிடியுங்கள் உங்களுக்கொரு மேஜிக் காட்டுகிறோம்
நுண்கிருமிகள் அதன் விளிம்பிலிருந்து மேலேறி உம் வாய்க்குள் நுழைந்து தமக்குரிய மொழியொன்றை உற்பத்தி செய்து உம் குரலாக அலறி நீவிர் ஓயும்போது உமது படுக்கையறை கண்ணாடியில் நாங்கள் தெரிவோம்
உள்ளும் புறமும் இறைந்து நலியும் பணக் கத்தைகளை தண்ணீரில் மிதக்கவிடும்போது இதுவரை முட்டிமோதிய ஒட்டுமொத்த சித்தாந்தத்தையும் சந்துக்குள் கூட்டிப்போய் யாரிடமாவது படுத்துக்கொள்ள அனுமதிக்கிறீர்கள்
போகம் உச்சம் தொட்டு முகத்தில் பீய்ச்சி அடிக்கும்வரை
கால்கடுக்க நின்று கைகூப்பி கூலிக்கு விளக்குப் பிடிக்க அவை ஏற்றி அனுப்பப்படும் கண்டெயினர் லோடுக்கான கன்சைன்மெண்ட்டில் கைநாட்டு வைக்க உங்களுக்கு யாருடைய ரத்தம் வேண்டும்?
இதோ எங்கள் மஜ்ஜை
இதோ எங்கள் நிணம்
இதோ எங்கள் கருப்பை
இதோ எங்கள் விந்துத்துளி
இதோ எங்கள் மதிப்பு
இதோ எங்கள் கனவு
இதோ எங்கள் உற்பத்தி
இதோ எங்களின் உபரி
இதோ எங்கள் எலும்பு
இதோ எங்கள் மொண்ணைத்தனம்
இதோ எங்கள் நம்பிக்கை
இதோ எங்களின் வரி
சுங்க வரி
வர்த்தக வரி
வீட்டு வரி
தண்ணீர் வரி
கழிவுநீர் வரி
சாலை வரி
விற்பனை வரி
வருமான வரி அவமான வரி தன்மான வரி
இதோ எங்களின் தூக்கம்
இதோ எங்களின் பசி
இதோ எங்களின் பிறப்புறுப்பு
இதோ எங்களின் அறியாமை
இதோ எங்களின் வாக்குரிமை
இதோ எங்களின் சுயமரியாதை
இதோ நாங்கள் நாங்களாக இல்லாமல் போய்விட்ட மிச்சமுள்ள நாங்கள்
எங்களைக் கற்பழியுங்கள் தெருவில் இழுத்து நிர்வாணமாக்கி
செதில் செதிலாக வெட்டி எடுத்துப் போய் உங்கள் உணவு மேஜையில் ஏலம் வையுங்கள்
வெறுமனே பிறந்துகொண்டே இருக்க கடமைப்பட்டிருக்கிறோம்
பொருள் உற்பத்தி இனி எதற்கு?
நூற்றி முப்பெத்தெட்டு கோடியை இனியும் பெருக்குவோம் நீங்கள் வியந்து போகும் அளவுக்கு
பலவண்ண Condom-கள் பலூன்களாக வானெங்கும் நிறைந்து பறக்கும்வரை காத்திருங்கள்
நீங்கள் பார்ட்டி வைத்து குடித்து கும்மாளமடித்து குப்புற விழுந்து எழும்போது மல்டி மில்லியனராய் உங்களின் சதைப்பற்று கூடிப் பார்வை மங்கும்படி பெருக்கிடுவோம் எங்கள் தலையெழுத்தை
என்ன? உலக வங்கியின் கடன் பத்திரங்களை சேமித்து வைக்கும் லாக்கர்களின் கதவுகள் கிறீச்சிட்டு திறக்கும் ஓசை கேட்கிறதா?
ஸ்கேன் செய்ய விரும்புகிறீர்களா இம்முகத்தை?
பிசாசுக்களின் களை ஒளிரும் தேஜஸை கண்டு மிரள வேண்டாம் அது பாஸ்வோர்ட்
புதிய வர்த்தகத்துக்கான புதிய ஒப்பந்தங்களை ஆகாயத்தில் பறந்துகொண்டே கையொப்பமிட்டு களைத்துவிடும் உங்கள் விரல்களுக்கு சொடுக்கெடுக்க புதிய பணியாளரை நியமித்துவிட்டீர்களா
ஒரு கோப்பையை கொண்டுவரச் சொல்லுங்கள் ஊற்றித் தருகிறோம் எங்களின் இழிந்து புளித்த வாழ்வை
தெரியும்தானே அது பன்னெடுங்காலம் இம்மண்ணில் ஊறிய ரசம்
புளித்த ஏப்பத்தோடு நீங்கள் துப்பவிருக்கிற ஆணையை தலைமீது வைத்து சுமந்து ஊர்வலமாக வந்துசேர காத்திருக்கிறோம் உங்களின் வாக்குச் சாவடி நோக்கி
சாவடி
சாவடி
அதுவே அவனை
அதுவே இவனை
அதுவே உவனை தரம் பிரிக்கிறது வீதி வாரியாக வட்டம் வாரியாக உள்வட்டம் வாரியாக கிளைவட்டம் வாரியாக மாவட்டம் வாரியாக
அவசரத்திற்கு மூத்திரச் சந்து வாரியாகவும்
கொள்கைவாத தத்துவங்களை மோனநிலைக்கு உந்தித்தள்ளி தவம் கலைக்காமல் காஜி பிடித்த எதிர்காலத்துளைக்குள் அமுக்கி நுழைத்து அரைப்பத்தாண்டு திட்டத்தின் மீது ஏதோ ஒரு வண்ணத்தை சாயம் பூசி கத்தையாய் ப்ரிண்ட் அவுட் எடுத்துத்தள்ளும் காகிதக் குப்பைகளை கெஸட்டில் அடைத்துப் பூட்டுங்கள்
ஆவணக் குப்பைகள் மண்டி புழுக்கும் குடௌன் குகைகளில் மூர்ச்சையாகிக் கிடக்கிறான் மூத்தக் குடி
என்ன அவனுக்கான அடையாள அட்டையா?
அது அவன் பெற்றுப் புழுத்த ரத்த டி.என்.ஏ வின் கைகால் முளைத்த
ஐந்து தலைமுறை சதைப்பிண்டத்தின் உயிர் நடமாட்டமுள்ள ஒரு சாதாரண கேடுகெட்ட ஃபிராங்கன்ஸ்டைன்
வாங்க
வாங்க
கலாச்சாரப் புனிதத்தின் அளவை இந்த பின்மண்டையில் ஓர் உளிகொண்டு ஓட்டைப் போடுங்க
அங்கேதான் நினைவுகளுக்கான சுரப்பி ஒன்று உகுத்துக்கொண்டு உயிரை வாங்குகிறது
பின்னிரவு பார்டிகளின் காரிடாரில் வழிந்தோடும் இம்போர்டட் சாராயத்தை மண்டியிட்டு நக்கி உய்க்க துணைக்கு இன்னொரு நாக்கு சல்லிசாகக் கிடைக்கிறது
ஃப்ரன்ச்சில் ச்சியர்ஸ் சொல்லிக்கொள்வோம்
ஹோய்..!
கண்விழிக்கும்போது ஒரு பூச்சியாக மாறியிராத அவலத்தை யாருக்காவது மின்னஞ்சல் செய்தாக வேண்டும்
காமத்திலிருந்து கடவுளுக்கு பயணம் செய்யும்போது தலைக்கேறும் போதையில் யார் மீதாவது மோதிவிட வேண்டும்
வீரம் சிரைக்கப்பட்ட மொட்டைத் தலையிலிருந்து சிதறும் நரம்புத்துளிகளை வழித்துச் சுவைக்க காத்திருக்கும் அகாலப் பசியை கார்ப்பொரெட் நிறுவனங்களுக்கு உயில் எழுதி வைத்துவிட வேண்டும்
அதற்குரிய தரகு கமிஷனை பப்ளிக் அன்-லிமிடெட் ஷேர்களாக மாற்றி பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளின் வழியே விநியோகத்திட ஒரு கௌண்ட்டரை திறக்கச் சொல்லி போராட்டங்கள் தொடங்க வேண்டும்
போராட்டத்தில் பத்து லட்சம் பேர் திரள வேண்டும்
கைவிட முடியாது எனச் சொல்லி நூறாவது நாள் வெறும் இரண்டாயிரம் பேர் மட்டும் மண்டை உடைப்பட்டு வீடு நோக்கி ஓடிட வேண்டும்
கொலை பாதகப் பட்டியலின் முடிவில் உரித்தெடுக்கப்படுகிற நூற்றாண்டு மௌனத்தை இன்ஸ்யூரன்ஸ் பண்ணிக்கொள்ள விருப்பப்படும்போது அதில் Nominee-யாக ஏதேன் தோட்டத்திலிருந்து தப்பிவிட்ட முதுகிழவியின் கர்ப்பப்பையை பரிந்துரைத்து மனு எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும்
குழந்தைகள் வளர்கிறார்கள் இளைஞர்கள் முதிர்கிறார்கள் முதியவர்கள் வளைகிறார்கள்
வளைந்தவர் உதிர்கிறார் ஒரு சாதாரண சருகைப் போல
சாக்கடையோரம் நெளியும் புழுவைப் போல துர்வாடையில் தகிக்கிறார்
புதைக்க இடமில்லாமல் பிணங்கள் காத்திருக்கின்றன
பிணங்களை வைத்துக்கொள்ள முடியாமல் உறவுகள் காத்திருக்கின்றன
உறவுகளைக் காத்து வைத்துக்கொள்ள முடியாமல் கிருமிகள் காத்திருக்கின்றன
கிருமித் தொற்றால் அனைத்தும் எடுத்து வீசப்படுகின்றது
பிறிதொரு நாளில் நாய்கள் எச்சில் ஊற கிளறித் தோண்டி கவ்வியெடுத்தோடும் துண்டு எலும்புகளாக எங்கோ தெருவோரம் கைவிடப்பட்டு மக்குகின்றன சந்தைக்கு உதவாத மதிப்பு
மதிப்புக்கு உதவாத ஆதாரம்
ஆதாரம் இழந்துவிட்ட பொருள்
பொருளின் அர்த்தம் அழிந்துபட்ட நியதி
கவலை வேண்டாம்
எண்கள் சுழியிடப்பட்ட வீட்டமைப்புகளுக்குள் வேஸின் பூஸ்டர்கள் பத்திரப்படுத்துகின்றன மாற்று உலகச் சந்தை உற்பத்திக்கான புத்தம் புதிய கொப்பூழ்க்கொடிகளை

***


கவிதைக்காரன் இளங்கோ – சென்னையில் வசிக்கிறார். கணையாழியின் துணையாசிரியராகவும் யாவரும் பதிப்பகத்தில் Content Editor-ஆகவும் பணி புரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் என இரு சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி இரவு, கோமாளிகளின் நரகம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி: elangomib@gmail.com


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular