Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி

மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி

தமயந்தி

ங்க பேரு?

“காத்ரீன் மேக்னா தமிழ்ச்செல்வி”

அந்தப் பெண் ஒரு நிமிடம் ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்து புருவங்களுக்கு மத்தியில் சுருக்கி ஒரு கணம் பார்த்து “ மூனு பேரா?” என்றாள். இதற்கு பதில் சொல்ல வேண்டுமா என ஒரு கணம் இவள் யோசித்தாள். அது மரணத்தைப் பதிவு செய்யும் அலுவலகம். இங்கு பெயர் காரணங்கள் பெரிதாகத் தேவையே இல்லை.

அப்பா இறந்து போனதை பதிவுசெய்ய வேண்டி வந்து இங்கிருக்கும் ஆணி நீட்டிய மர பெஞ்சுக்களில் ஒரு வாரமாய் உட்கார்ந்தாகி விட்டது. இதே பெண் விடுமுறையில் இருப்பதாக சொல்லியே தினம் வரவைத்து திருப்பி அனுப்பினார்கள்.

“ஒரு வாரத்துல தபால்ல அக்னாலெட்ஜ்மெண்ட் வந்துரும் – ஃபார்முக்கு மட்டும் காசு கொடுத்துட்டு போங்க” என்றவள் நாக்கை இடது பக்கமாய் ஒதுக்கிச் சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கீறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா”

இவள் அப்படிக் கேட்பாள் என்று அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. சட்டென அவள் முகம் மாறியது.

“அடுத்தது யாருங்க?”

கோபத்தை மறைத்துக் கொண்டு அவள் கேட்டது புரிந்தும் தமிழ்ச்செல்வி நகராமல் அவளையே உற்றுப்பார்த்து “எங்கப்பா செத்ததுக்கு சிரிக்குற மாரில்ல இருக்கு..” என்றாள் பல்லைக் கடித்தபடி மெதுவாக –

“இங்க பாருங்க… வழி விடுங்க”

“சாரி கேளுங்க”

“என்ன மயித்துக்கு… இடத்த காலி பண்ணும்மா”

“மயிரா… என்ன பேசுறீங்க மிஸ் மயிராண்டி?”

சத்தம் வலுக்க, இவள் கேட்க, எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். ஒரு நிமிடம் பக்கத்து கவுண்டர் ஆள் ஓடிவந்து “ஏம்மா… சும்மாருக்க மாட்டியா? தெனக்கும் வந்து அப்பன் சாவ பதிவு பண்ணனும்னு உயிரெடுத்த… ஒம்மாள… இப்ப என்ன சண்டய இழுக்க?”

திருநெல்வேலிக்கார மனசு சட்டென கை நீட்டியது. அந்த ஆள் மடங்கி சேரில் விழுந்து பின் எழுந்து அடிக்க வர, பின்னால் இருந்த ஆள் அவனை நெட்டித்தள்ள, சேர் சரிந்து அவன் விழுந்தான்

“நீ போ தாயீ… பொட்டப் புள்ளன்னா இம்புட்டு பேச்சு ஆஹ்? நானும் பாத்துட்டே இருக்கேன்… பேரு கேட்டதுலருந்து அந்த பொம்பள நக்கல் சிரிப்பு சிரிச்சிட்டே வேற இருக்கு” என்றவர் கீழே விழுந்தவனுக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டு – “இவுக யாருன்னு டிவில பாக்கல? துப்பாக்கி குண்டுக்கு அப்பன பறி கொடுத்துட்டு அலையுற புள்ளன்னு கூடவா தெரில?” என்றார்.

ஒரு நிமிடம் ஆபீஸே தமிழ்செல்வியைத் திரும்பிப் பார்த்தது. ஒரு நிமிடம் அப்பாவை நோக்கி பாய்ந்த குண்டு நிறைந்த சத்தத்துடன் வெடித்து போலிருந்ததது இவளுக்கு. கை நரம்புகளின் மையத்தில் சிறு குமிழ்கள் தோன்றி கரைந்தோடியது போலிருந்தது. தமிழ்செல்விக்கு ஒரு கணம் உடல் இறுகி பின் மெல்ல இறகு போல உதிர்வது போலிருந்தது.

பார்வைகள் ஒரு குவியமாய் வந்து இவள் மேல் விழ இவள் வேகமாக நடந்தாள். அப்பாவை ஒரு பிணமாக பெட்டியில் மட்டுமே காட்டினார்கள். மதவாதிகள் ஒரு தலைவரைக் கொல்ல வந்தபோது அவரைக் காப்பாற்ற அப்பா அந்தக் குண்டை ஏற்றுக் கொண்டார். தாழ்வாரத்தில் உறக்கம் வராத இரவுகளில் உட்கார்ந்து மேலே ஊர்ந்துபோகும் நிலாவைப் பார்க்கும் போது மனசில் ஒருவிதமான அசூயை நீந்தும். அந்தத் தலைவர் ஒருகோடி ரூபாய் நஷ்ட இழப்பீட்டு தொகை கொடுப்பதாக அறிவித்தார். ஆனால் அமலி அதை ஏற்கவில்லை. ஓயாமல் கலைந்து கிடந்த முடிக்கற்றைகளுக்கு நடுவே “ஏமாத்துதானுக தமிழ்… வாங்கிறாத” என்றாள். மன அயர்ச்சிக்குட்பட்டவள் எப்படி இவ்வளவு தெளிவாகப் பேசினாள் என்று எனக்குப் புரியவில்லை.. அம்மா இறந்த பிறகு அப்பா அமலியையும் தமிழையும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார். அப்போது அப்பாவுக்கு விருதுநகரில் போஸ்டிங். அம்மா பெற்ற அப்பா. பாட்டி அன்பாக பார்த்துக் கொள்வாள். ஆனால் மாமாவைக் கட்டிய அத்தை எல்லா வேலைகளையும் அமலியையே செய்யச் சொல்வாள். அதில் அமலிக்கு மிகுந்த அயர்ச்சி வரும். முதன்முறை மாதவிடாய் ஆனபோது அத்தையிடம் சொன்னபோது கூட “முதல்ல தண்ணி எடுத்து தொட்டிய நிரப்பு மக்களே…. அப்றம் பாத்துக்குவோம்” என்று விட்டாள். பிசுபிசுக்கும் தொடையோடு அமலி தொட்டியை நிரப்பும் போதுதான் பாட்டி ரத்தம் மினுங்கும் அவள் ஸ்கர்ட்டைப் பார்த்து “ஐயே ராசாத்தி… இங்க வாடி” என்று கூட்டிவந்து அழுது முத்தமிட்டு அப்புறம் அப்பாவுக்கு ஃபோன் செய்தாள்.

அப்பா வந்த பிறகான நாட்களை இப்போதும் நினைத்துப் பார்க்கவே முடியாது.. அமலி அப்பாவுடனே போகவேண்டும் என்று தேம்பித் தேம்பி அழுதாள். பாட்டிக்கு கோபம் வந்தது. வெண்டைக்காய் வெட்டிக் கொண்டிருந்தவள் வேகவேகமாக அதன் தலையையும் வாலையும் கொய்து கீழே தூக்கி எறிந்தாள். அமலியின் தலையில் நங்கென்று கொட்டினாள்,

“இதுக்குத்தான் நீ ஒரு கண்ணாலத்த கட்டிருன்னு சொன்னேன்” என்றாள். அப்பா காப்பி குடித்தபடி அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, தாத்தாவுக்கு முகம் இறுக்கமாக்க மாறியது.

“இதுகளை நல்லா படிக்க வச்சாலே செத்து போனாளே… அவ மனசு ஆறிறும்… இதுக்கு மேல இன்னொருத்திய கட்டிட்டு நா அவஸ்தப்படணுமா? இல்ல… அவளதான் அவஸ்தபட வைக்கணுமா? ”

அப்பா சொல்லி முடித்ததும் தாத்தா சட்டென அவர் கையை இழுத்துப் பிடித்து “புள்ளங்கதான் எங்க ஆறுதலாருக்கு சாமி.. அவுகள கூட்டிட்டு போயிறாத” என்று கண் கலங்கினார். அன்று சீறிக்கொண்டு பெய்த மழைக்கு அமலியின் மனவலி தெரிந்திருக்க கூடும் போல. சாய்ந்து கொண்டு பெருஞ்சத்தத்துடன் மண்ணில் சிறுதுளைகளை ஈட்டியின் கூர்முனை கொண்டு வேய்ந்தது போலே பெய்தது. பின்னாட்களில் அவள் யாருடனும் பேசாமல் ஒற்றை திசையையே வெறித்துக் கொண்டிருந்ததை பார்த்து முதலில் பேய் ஓட்டினார்கள். அப்புறம் மாந்தீரிகம், பில்லி சூன்யமெல்லாம் பார்த்து அவள் உள்ளங்கையில் சூடு வைத்தப் பிறகு களிம்பு போடும்போது வலியில் அமலி, “தாத்தா எங்கிட்ட தப்பு பண்றார் தமிழ்” என்று சொல்ல ஆரம்பித்து, பின் வார்த்தைகளில் வலி கீறி அது மெல்லத் துருபிடித்த இரும்புத்தகடு போல உதிர, பெருங்குரலெடுத்து அழுதாள். பின் சட்டென மெளனமானாள்.

தமிழ்செல்வி திரும்பிப் பார்க்க கதவு நிலையோரமாய் பாட்டியின் நிழல் தெரிந்தது. அன்றிரவு சுமார் எழுபத்தியிரண்டு வயதில் பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். அதற்கு பிறகு ஊர் “கெழவிக்கு அவ பேத்திமார பத்திதான் கவல… மூத்த பேத்தி லூசாயிட்டாளாமே” என்று ஆயிரம் காரணம் சொல்ல, அமலி அதற்கு பிறகு பேசவே இல்லை. பாட்டியின் பிணம் முன்னால் சற்றும் கலங்காத கண்களோடு வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

அப்பா அதற்குபின் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். தாத்தாவை எவ்வளவு கூப்பிட்டும் அவர் வரவில்லை. தாத்தா அதற்கடுத்த வருடம் இறந்துபோன போதும் அமலி அப்பாவுடன் வரமறுத்தாள். சமீப காலங்களில் அவள் கிழித்து ஊக்கு குத்திய நோட்டு தாள்களில் முனை மடிந்த ஒரு பால்பாயிண்ட் பேனாவை வைத்து ஏதோ எழுதியபடி இருந்தாள். அவள் பாத்ரூம் போகும்போது அதை தலையணைக்கடியில் அவள் எடுத்து வைத்துவிட்டுப் போவாள். அவளைப் பொறுத்தவரை தலையணை என்பது பாதுகாப்பு என்று தோன்றும். ஒரு தடவை இவள் அமலி பாத்ரூமிலிருந்து வருவதற்குள் அதை வாசித்தாள்.

“விரல். எல்லாமே விரலும் உடம்பும் தான். வாணிஸ்ரீ விரலால் வீணையை மீட்டி மீட்டிப் பாடுவாள், எம்ஜிஆர் விரலை சுழற்றி பாடுவார், ரஜினி விரலை நீட்டி சபதம் செய்வார். கமல் விரலை மடித்து பரதம் ஆடுவார். எனக்கு விரலை நீட்ட பிடிக்கவில்லை. என் விரல்களை அறுக்க வேண்டும். வேண்டாம். தாத்தாவின் விரல்களை அறுக்க வேண்டும். என்றைக்காவது நீள்காய்களை விரல்போல நீட்டும் மரக்கிளைகளை நறுக்க வேண்டும். இந்த எழவெடுத்த முருங்கைக்காய் கூட விரல் போலதான் இருக்கிறது. அப்பாவின் மரணத்துக்கு அவர் உயரதிகாரி போட்ட மாலையில் ஒரு சங்குப்பூ விரல் போலிருந்தது. எனக்கு விரல்கள் வேண்டாம்”

அமலி உள்ளே ப்ளஷ் செய்யும் சத்தம் கேட்ட து. இவள் சட்டென நகர்ந்து உட்கார்ந்து கொள்ள அமலி வெளியே வந்தவள், இவளைப் பார்த்து மருண்டு பக்கத்தில் உட்கார்ந்து கண்ணை உற்றுப் பார்த்தாள். பின் சரசரவென பாம்பு அதன் புற்றுக்குள் நுழைவது போல கையைத் தலையணைக்கடியில் விட்டு தாள்களைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். இவள் அவளின் கைகளையே பார்த்தாள். கூர்மையான நகங்கள் துளியும் சிதையாமல் இருந்தன. சட்டென இவள் விரல்களைப் பற்றி தீராமல் முத்தமிட்டாள்.

“ஒனக்கு தெரியுமா… பொம்பளப் புள்ளங்களயும் சுன்னத் பண்றாங்க..”

“யாரு சொன்னா?”

“யாரு சொல்லணும்? நான் கண்டேன்… நாம ஸ்கூல் படிக்கறப்ப வீட்ல இழுத்து வச்சி தூக்க மருந்து கொடுத்து.. அதும் கேக்காம…”

“இப்ப எதுக்கு அத பேசுற”

“கனவுல வந்திச்சு..” என்றவள் ஜன்னலைப் பார்த்து, திரும்பி நின்று “திரும்ப..” என்றாள். “வெட்னா சுத்தம்னு எதுக்கு அவ்ளோ கொடூரமா.. ஆஹ்.. என்ன பாக்குற.. பைத்தியமாட்டம் பேசுறன்னா.. வளந்தப்புறம் அவுகளுக்கு புடிச்சா வெட்டிக்கலாம் தான..”

“இப்ப எதுக்கு இதல்லாம் பேசுற”

“கொல்லணும் இல்ல… அப்ப அங்க தொடுறவன் மட்டும் யோக்கியனாருப்பான்ம்ப?”

“அப்டில்லாம் ஒன்னுமில்ல… எத ஆச்சும் நினைக்காத”

“இருக்கு இருக்கு இருக்கு”

அமலி தொடர்ச்சியாய் அரற்றிக்கொண்டு வெறித்தபடி இருக்க, அந்த அரசியல்வாதி வாசலில் வந்து நின்றான். அப்பாவின் படத்துக்கு பெரிய சிகப்பு ரோஜா மாலை போட்டு பத்து லட்சம் இழப்பீட்டுத் தொகையை காசோலையாக கொடுக்க தமிழ்செல்வி கொஞ்சம் இறுக்கமாய் நின்றிருந்தாள். மெளனம் ஒரு பறவை போல படபடத்து அந்த அறையைச் சுற்றி பறந்து பின் கால்களை மடித்து தரையிலிறங்கி அறையின் மத்தியிலுறைந்து உட்கார்ந்தது.

“நன்றிங்கிற ஒத்த வார்த்தைக்கு பத்து லட்சம் கம்மிதான்ங்க.. ஆனா உங்கட அப்பா எங்கட உயிருக்கு செஞ்சத கொஞ்சமும் மறக்க முடில… அப்றம் நீங்க ஏதோ ஒரு தனியார் அலுவலகத்துல சொச்ச சம்பளத்துல இருக்கீங்கன்னாங்க.. முதல்வர்ட்ட சொல்லி வேல போட்டு தர சொல்லிருக்கேன்”

“நீங்க தமிழ்ல மட்டும் தான் பேசுவீகளா?”

அவன் தலையசைக்க அமலியின் குரல் சன்னமாய் கேட்டது.

“வாங்கிடாத… வாங்கிடாத தமிழ்”

அவள் விரல்களை வேகவேகமாக கோர்த்து கோர்த்து பிரித்தபடி இருந்தாள். அரசியல்வாதி அமலியை வித்தியாசமாகப் பார்த்து “இவுகட கூட நாம சிகிச்சை கொடுத்து சரியாக்கிறலாம்” என்றான்.

“என்ன சிகிச்ச கொடுப்பீக?”

“எடக்கு மடக்கா பேசப்படாது.. முதல்வர்ட்ட சொல்லி…”

“முதல்வர் போன வாரமே பேசிட்டார்… கவலப்படாதீக” தமிழ் தெளிவாய் சொல்ல, அவன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கவிந்த முகத்தோடு “எப்ப… எங்கிட்ட சொல்லலயே.. காலைல… ஆமாங்க… இன்னிக்கு காலைல கூட செயலாளர்ட்ட பேசினேன்ங்க.. அந்த ஸ்கூல்ல வாத்தியார் கைதானார் இல்ல… அதுக்கு எதிரா போராட்டம் நடத்த போறோம்ங்க.. அத சொல்ல பேசினேன்.. உங்கட்ட பேசனதா சொல்லலயேங்க..”

“ஸ்கூல்னா இங்க்லீஷ் இல்ல… பள்ளிக்கூடம் இல்லயா தமிழ்ல?”

”ஆமாங்க… பதட்டத்துல பேசிட்டேன்.. கரெக்டா… ச்ச.. சரியா சொல்லிட்டீங்க… இத வாங்கிக்கோங்க”

“இல்ல வேணாம்…”

தமிழ்செல்வி கையை நெஞ்சுக்கு குறுக்காய் கட்டிக்கொள்ள அமலி எழுந்துவந்து இவளுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அரூபமான ஒரு குரலில் அவனைக் கையை வைத்து விரட்டுவது போல செய்துகொண்டே இருந்தாள். அவன் ஒரு நிமிஷம் ஏதோ சொல்ல வந்து, பின் வெளியேற நினைத்து அதையும் செய்யாமல் வேஷ்டியிலிருந்து விபூதி எடுத்து நீட்டினான்.

“இல்ல…நம்பிக்கை இல்ல”

“உங்கம்மா கிறிஸ்ட்டின் இல்ல”

“வேதங்காரங்கங்கிறது தான தமிழ்ல”

அவன் விரைந்து வெளியே போனான்.

போய் நேராக முதல்வரின் செயலாளருக்கு ஃபோன் செய்வான்.. தமிழ்செல்வி பருப்பைக் களைந்து குக்கரில் போட்டபடி சிரித்தாள். பின்னால் அவளையே வெறித்த அமலியைப் பார்த்து “செயலாளர் முதல்வர் பேசவே இல்லன்னு சொல்வாரு.. பேசினாரா… இல்லயா… இல்ல… அரசியல் சூழ்ச்சியான்னு நெனச்சி நெனச்சே நிம்மதி போயிரும்… அடுத்து எவன் சுட வருவான்.. எப்ப சுட வருவான்ன்னு உயிர் பயம் தொண்ட நரம்புல துடிச்சிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் சாவு மணி அடிச்சிட்டு திரியும்…”

அமலி ஒன்றும் பேசவில்லை. தமிழ் அவளையே பார்த்தபடி பக்கத்தில் போய் “நகம் வெட்டிக்கலாமா”? என்றாள். அமலி வேகமாக மறுத்து கையை பின்னால் இழுக்க இவளை வாழ்நாள் முழுவதும் நகம் வெட்டச் சொல்லக் கூடாது என்று தோன்றிற்று இவளுக்கு. அவள் தூங்கியபின் தொலைக்காட்சியை ஆன் செய்தாள். ஒரு மாணவி தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்த ஆசிரியரிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருக்கும் பதிவை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த மாணவியின் குரல் அமலி அப்பாவிடம் கூட்டிப்போகச் சொன்ன குரலை ஒத்திருந்தது.

சட்டென எழுந்து அப்பாவின் படத்தில் தொங்கிய சிகப்பு ரோஜா மாலையைக் கழற்றி வீசினாள். இரவு ஒரு கொடிய விலங்கு இரையைப் புசிப்பது போல அதன் இருட்டுக்குள் அந்த மாலையைக் காணாமல் செய்தது. எழுந்துபோய் இருட்டினில் நின்றாள். எங்கோ ஒரு பெண்ணின் அபாயக் குரல் கேட்டது. இருளும் குரலுமாய் இவளில் அது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. உள்ளே தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு தடவை எடுக்காமல் போக மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. அமலி எடுத்துக்கொண்டு வந்து நீட்டிவிட்டு உள்ளேபோக, அரசியல்வாதியின் மொண்ணைக் குரல் ஹீனமாய்,

“என்ன பேரு சொன்ன? ஆஹ்?”

“என்ன இருந்தா என்ன.. சொல்லுங்க சார்”

“ரொம்ப பிசியாம்மா? கோவப்பட்டு வந்துட்டேன்… மனசு கேக்கல… யார் இருக்கா உனக்கு.. சொல்லு… நாளைக்கு கட்சி ஆள்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா வாரேன்..”

“வந்து..”

அவன் குடித்திருந்தான் போலும்.. குளறியபடி, “வந்து… வந்து” என்று மிகக் கேவலமாக அவன் சிரிக்க – “நாளைக்கு ஏன் சார்…” என்றபடி வாட்ஸ் அப் வீடியோ கால் போட, அவன் எடுக்கிறான். சட்டென மார்பு சேலையை தமிழ் நகர்ந்த, அமலி உள்ளிருந்து ஓடி வருகிறாள்.

அரசியல்வாதி முகம் ஒரு நிமிடம் வெளிற, அமலி ஃபோனை எறிகிறாள்.

“வெறும் ஒடம்பு.. ஒரு பாவிக்கும் தெரில” அவள் உதடுகள் முணுமுணுக்க, ஃபோன் உடைந்து கிடக்கிறது. தமிழ்செல்வி அப்படியே சரிந்து உட்கார, அமலி வீட்டு வாசல்நடையில் சாய்ந்து உட்கார்ந்து தன் விரல்களை ஒன்றோடு ஒன்றாக அதுவரை வாழ்நாளெல்லாம் பற்றிக்கொள்ள முடியாத அழுத்தத்தோடு பற்றிக்கொள்கிறாள். வாழ்வில் முதன்முறையாக வலது கையைக் குவித்து உதட்டில் முத்தி அதை விடாமல் நீண்ட நேரத்திற்கு கன்னத்தில் ஒத்திக்கொண்டே இருந்தாள் அமலி.


தமயந்தி – திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் திரைப்படம் சார்ந்து இயங்கும் இவர் ஒரு ஆவணப்பட இயக்குநரும் ஊடகவியலாளரும் ஆவார். இவரது முதல் நூல் 1989-ல் வெளிவந்தது. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்புகளும் ஒரு கவிதை தொகுப்பும் நேர்காணல் தொகுப்பு ஒன்றும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ஒரு நாவலும் வெளிவந்திருக்கிறது. அண்மையில் மலையாளத்தில் ‘நிழலிரவு’ நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular