Wednesday, October 9, 2024
Homesliderஎன் அன்புக்குரிய விவான்..

என் அன்புக்குரிய விவான்..

குலாம் முகம்மது ஷேக்

(தமிழில் நரேன்)

குலாம் முகம்மது சேக் (Gulam Mohammed Sheikh)என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும், இதழாளரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீமற்றும் 2014 இல் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் இருக்கும் இவர், இந்தியாவின் முக்கிய ஓவிய ஆளுமைகளில் ஒருவர். சில காலம் வதோதராவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். விவான் சுந்தரத்தின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
இவரது படைப்புகள் உலகின் பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியக் கலை வரலாற்றின் முக்கிய கலை நிகழ்வுகளான க்ரூப் 1890 & ப்ளேஸ் ஃபார் ப்யுப்பிள் இரண்டிலும் அங்கம் வகித்தவர். தனது சகாவும் ஓவியருமான பூபன் காகருடன் சேர்ந்து கலை இலக்கிய இதழான “விருச்சிக்”எனும் இதழை நடத்தியவர்.

இந்த சிறப்பிதழ் பற்றி நாடக இயக்குனரும், கலை விமர்சகருமான திரு.ப்ரஸன்னா ராமசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க GM ஷேக் இந்தக் கட்டுரையை (அஞ்சலிக் குறிப்பை அனுப்பி வைத்தார்).

என் அன்புக்குரிய விவான்..

உன்னை இடுகாட்டில் வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியபோதே உணர்ந்தேன், நீ எங்களை விட்டுச் சென்றுவிடவில்லை என்று. ஐரோப்பாவில் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது எதிர்பாரா இடங்களிலெல்லாம் என் கண்களுக்கு நீ தோன்றிக்கொண்டிருந்தாய். 1961 முதலே உன்னுடைய இருப்பு நீக்கமற்று இருந்ததால் இப்போது நீ இங்கு இல்லை என்பதை நான் நம்ப மறுக்கிறேன்.

நீ படிப்பதற்காக பரோடா வந்தபோதுதான் உன்னை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் நான் கற்பிக்கத் தொடங்கியிருந்தேன். உனக்கு 18 வயது எனக்கு 24 – பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அலெய்ன் டிலானைப் போலவோ அல்லது நூரியேவ் போலவோ தோற்றம் கொண்ட ஒரு துள்ளலான இளைஞனாக உன்னை நினைவுகூர்கிறேன். நுண்கலை பயிலும் பெண்கள் கூட்டத்தினரால் உன் மீதிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும்படி நீ என்னமாய் சத்தமெழுப்பி உன் இருசக்கர வாகனமான ஃபெண்டாபுலஸை ஓட்டிச் செல்வாய் – பரோடாவிலேயே அவ்வகையில் அதுதான் முதல் வண்டி. ஆமாம்… பின்னிருக்கையில் லா போஹிமின் பெண்ணான ஆஷா புத்லியுடன்தான்.

நீ ஜாக்ஸன் பொல்லாக்கைப் போல கருப்பு திரவ ‘ப்ளாக் ஜப்பான்’ பெயிண்டை ஊற்றி ஓவியக் கூடத்தில் தீவிரமாகத் தீட்டிக்கொண்டிருந்தது என் நினைவிற்கு வருகிறது. பிற்காலத்தில் உன் படைப்புகளில் என்ஜின் ஆயிலை உபயோகப்படுத்துவாய் என்பதற்கான முன்னறிவிப்பா அது? அத்தனை திருவிழாக்களுக்கும் விடாமல் பயணித்துச் சென்ற நாட்கள் அவை. தார்நேத்தாரில் தரையில் படுத்து உறங்கினோம்.

பின்பு நான் லண்டனில் இருந்தபோது நீயும் பூபேனும் படைத்த துடுக்குத்தனமான பாலியல் உருவப்படங்களால் அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்த கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் ஊர் திரும்பியபோது நீ ‘ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ க்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். அங்கே லண்டனில் அற்புதமான தனிப்பெரும் கலைஞனான மேதை ரான் கிடாஜின் நட்பைப் பெற்றாய். 69ம் ஆண்டின் கோடையில் நீ தங்கியிருந்த கம்யூனிற்கு வந்தபோது, உன்னை ஆட்கொண்டிருந்த ‘அது’ உனக்குள் ஒரு சலசலப்பை உண்டாக்கத் தொடங்கிவிட்டது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நீயும் இடதுசாரியாக நகர்ந்து 1968-69 களில் தாரிக் அலி போன்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பாரீஸையும் லண்டனையும் புரட்டிப் போட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டாய். அப்போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நீ சிறிது காலம் சிறையில் இருந்ததாக அப்போது அங்கிருந்த என் பால்ய நண்பர் பிராஃபுல் படேல் என்னிடம் தெரிவித்தார்.

Collections of GM Sheikh – Asia art Archieve (விவான் இல்லத்தில் – பூபன் காகர், G.M.ஷேக் ஆகியோருடன்)

பிறகு நீ இந்தியா திரும்பியதும் லலித் கலா அகாடமிக்கு எதிராக இந்தியக் கலைஞர்கள் சமூகம் கிளர்ந்தெழுந்தபோது நீ முழுதாகவே போராட்டத்தில் குதித்துவிட்டாய். Triennale புறக்கணிப்பிலும் பங்குகொண்டாய். அம்ரிதா ஷேர்-கில் படைப்புகளுக்கென ஒரு கண்காட்சியை நீ முன்மொழிந்தபோதுதான் நம்முடைய நட்பு மேலும் மலர்ந்தது. என்ன ஒரு அற்புதமான நிகழ்ச்சி அது! டெல்லி சாந்திநிகேதனில் உன் வீட்டில் இப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான ஓவியங்கள் இதற்கு முன் ரவீந்திர பவனின் சுவர்களை அலங்கரித்திருந்தன. Marg அம்ரிதாவிற்கென ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தது.

நீ இடதுசாரி இயக்கத்தில் இணைந்த உடன் ஏன் ஓவியங்கள் படைப்பதை நிறுத்திவிட்டாய் என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். ஆனால் விரைவிலேயே பாப்லோ நெரூடாவின் நீண்ட கவிதையான ‘The heights of Machchu Pichchu’ வை காட்சிகளாகப் படைத்த அற்புதமான ஓவியத் தொடரின் மூலமாக நீ மீண்டும் வெளிப்பட்டாய். இவற்றால் உந்தப்பட்டு நானும் கமலேஷும் உளவெழுச்சியில் ஒரு திட்டத்தை உருவாக்கினோம் – இந்த ஓவியங்களுடன் இக்கவிதையை பல்மொழியாக்கத்தில் ஒரு பன்னாட்டுப் பதிப்பை வெளியிடுவதுதான் அது. துரதிருஷ்டவசமாக அதை நிறைவேற்ற முடியவில்லை.

ஓவியங்கள் அதிக பார்வையாளர்களை அடையச் செய்யும் வகையில் 1973ல் பரோடாவில் ஒரு கிராஃபிக் பட்டறையை நடத்தும் யோசனையை ஆர்வத்துடன் முன்வைத்தாய். பல்வேறு இடங்களில் அக்கண்காட்சியை ஏதோ கட்டளைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவன் போல நீ நிகழ்த்தியது எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கலைஞர்கள் தீவுகளைப் போலத் தனித்திருந்தனர். அவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக ஒரு கூட்டுக் கண்காட்சியை நீ முன்மொழிந்தாய். அது 1974, பத்து கலைஞர்கள் ஒன்றுகூடினர். என் ஞாபகம் சரியென்றால் ஒரு சர்வாதிகாரியின் பேயுருவைப் போல இந்திரா காந்தியின் உயர்ந்து நிற்கும் உருவப்படம் ஒன்றைக் காட்சிப்படுத்தினாய். பெரும் பாதிப்பை உருவாக்கிய படம் அது. அதன் பிறகு வந்த நாட்களில்தான் பூபேன் (காகர்), ஜோகென் (சொளத்ரி), சுதிர் (பட்வர்தன்), நளினி (மலானி), கிவ் (படேல்) அவர்களோடு நீயும் நானும் இணைந்து 1978ல் “டிரைனாலேவை நிராகரித்த அறுவர்” என்ற ஒரு கண்காட்சியை Triennale விற்கு எதிரான போராட்டமாக நடத்தினோம்.

விவானின் கையெழுத்து..

அதன்பிறகு எண்ணற்ற நாட்கள் அடிக்கடி பரோடாவில் உள்ள என்னுடைய இல்லத்திலோ அல்லது டெல்லியில் உன் வீட்டிலோ மிக நீண்ட ஆழமான தொடர் உரையாடல்களில் ஈடுபட்டோம். சில சமயம் கலையில் அரசியலின் பங்கு என்ன என்று காரசாரமான விவாதங்களைச் செய்தோம். அரசியல் சார்பற்றிருப்பதும்கூட ஒரு அரசியல் செயல்பாடுதான் என்று விவாதித்து எங்களில் பலரை ஒப்புக்கொள்ள வைத்தாயே. …இருப்பினும் பூபேனின் வீட்டில் நாம் ஆறு பேரும் சந்தித்த நாட்களில் – இல்லை… ஏழு. கீதாவையும் சேர்த்து – நீ, நான், பூபேன், நளினி, ஜோகென், சுதிர் எல்லோரும் இணைந்து நம் கனவுத் திட்டமென ஒரு கண்காட்சிக்கான அறிவிப்பை 1979ல் வெளியிட்டோம் – ‘Place for People’. நமது பணியில் நேரடியாகத் தொடர்பு இல்லையென்றாலும் தோழமையின் அடையாளமாக, கட்டுரை எழுதித் தந்து நம் தொகுப்பிற்குப் பங்களித்த கீதாவை ஏழாவது நபராக இணைத்துக்கொண்டோம். இந்தக் கண்காட்சிதான் ஒருவரையொருவர் பிரிய முடியாத பிணைப்பை நமக்குள் உண்டாக்கியது. நம்முடைய தனித்த எதிர்கால பயணங்களைத் திட்டமிடுவதற்கு இந்தக் கண்காட்சிதான் திருப்புமுனையாக அமைந்தது. நான் பரோடாவிலேயே தங்கிவிட்டேன், நீ உன்னுடைய எதிர்காலப் பணிகளைக் குறித்தும் ‘Journal of Arts & Ideas’ குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தாய்.

ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு பிறகான நாட்களில் மையையும் என்ஜின் ஆயிலையும் வைத்து நீ உருவாக்கிய படைப்புகளும் அற்புதமான ஓவியங்களும் எங்களை மதிமயக்கச் செய்தன. ஒருவேளை உன் உள்ளுணர்வாக இருக்கலாம்… அல்லது உனக்கு எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டிருக்கலாம், நீ ஓவியங்களையும் வண்ணங்களையும் மொத்தமாக மூடி வைத்துவிட்டு பலரும் பயணிக்காத ‘நிறுவல்கள்’ உருவாக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாய். ஷேர்-கில்லின் ஆவணங்களைக் கொண்டு உருவாக்கிய பல்லூடக நிறுவல் இதை இயல்பிற்கு மாறான உணர்ச்சிகரத்துடன் எங்களுக்கு அறிவித்தது. உன் மரபுத்தொடர்சியை, தன் வரலாற்றை, வாழ்விற்கு மிக அணுக்கமான ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட நிறுவல், புகழ்மிகுந்த உன் தாத்தா உம்ராவ் சிங் ஷேர்-கில்லின் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்படப் புகைப்படங்களால் மிக முக்கியமானதாக மாறியது. தனிப்பட்ட நினைவலைகளை நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தின் உரையாடல்களாகக் கற்பனை செய்து பார்ப்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அனேகமாக அப்போதுதான் நீ பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணங்களைக் கைக்கொண்டிருப்பாய்: பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகான மும்பை கலவரங்களின் வகுப்புவாதிகளைக் குற்றம்சாட்டும் விதமாக மிகப்பெரிய நினைவிடம் ஒன்றை நிறுவினாய். அப்போது உன்னுடைய குரல் மேலும் மேலும் வலுக்க வேண்டும் என்றும் அடுத்தடுத்த படைப்புகளில் மிக வலிமையாக வெளிப்பட வேண்டும் என்றும் உன் மனம் ஓயாத ஆற்றலுடன் அணையாத் தீயில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

நீ கொல்கத்தாவில் பல மாதங்கள் தங்கி, காலனியாதிக்கத்தின் மாபெரும் சின்னமான விக்டோரியா மெமோரியல் ஹாலையே புரட்டிப் போடும் வகையில் அதனுள்ளேயே நீ உருவாக்கிய உன் லட்சிய நிறுவல்தான் என்னைப் பொறுத்தவரையில் உன் திறமைக்கான தலைசிறந்த சான்று. அதன் பிறகு நீ எத்தனை எத்தனை திகைப்பூட்டும் நிறுவல்களுடன் வெளிப்பட்டாய். அத்தனையும் புதிய பாதையின் மீது ஒளி பாய்ச்சி சென்றன. சஃப்தார் (ஹாஷ்மி) படுகொலை செய்யப்பட்ட பிறகு மற்ற கலைஞர்களுடன் அணிவகுத்துச் சென்று SAHMAT என்ற குழுவை நிறுவினாய். அதற்கு நீ தலைமை தாங்கினாய், முன்னெடுத்துச் சென்றாய், கலைஞர்கள் கூட்டத்தினை ஒன்றுதிரட்டி பன்முக கலாச்சார மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாய்.

‘அறநெறிக் காவலர்களுக்கு’ எதிரான மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நீ பரோடா வந்தது நினைவிருக்கிறது. பிரம்மாண்டமான ஓவியங்களில் மூழ்கடித்து அந்த மாணவர்களின் மனங்களை எப்படி தீ பற்றச் செய்தாய்! அரசியல் எதிர்ப்புச் செயலாக அவர்களைக் கொண்டே அந்த ஓவியங்களை அழிக்கவும் செய்தாய். கொச்சி-முசிரிஸ் பின்னாலே வில் பழங்கால முசிரி நகரின் தோற்றமும் வெள்ளத்தில் மூழ்கிய பின் அதன் அழிவையும் பேரளவு புகைப்படங்களாகவும் காணொளிக்காட்சிகளாகவும் நீ நிறுவியது நினைவில் இருக்கிறது.

நீ ஓயாமல் தொடர்ந்து உருவாக்கிய படைப்புகளின், புகைப்படங்களின், காணொளிகளின் எண்ணிக்கையை வைத்திருப்பது மிகச் சிரமம்… ‘காகவாகா’ என்ற படைப்பில் ஃபேஷன் துறையைப் பகடி செய்திருந்தாய் – உன் ஒவ்வொரு படைப்பும் உனக்கும் சமகால இந்தியக் கலைக்கும் புதியதாகவே இருந்தன. ஒவ்வொரு நாளும் நாம் ஒன்றாக, நண்பர்களாக, தோள் சேர்ந்த தோழர்களாக, ஒருங்கிணைந்த படைப்புகளில் கரம் கோர்த்தவர்களாக, தனிச்சந்திப்புகளில் மாறிவரும் உலகப் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டவர்களாக ஆனோம் – ஆனாலும் இடைவிடாது அதீத ஆர்வத்துடன் கலை உருவாக்கங்களில் ஈடுபட்டோம். நாம் உரையாடினோம், விவாதித்தோம், ஒன்றுபட்டோம், மாறுபட்டோம் ஆனால் ஒருபோதும் பிரிந்ததில்லை. நாம் ஒன்றாக உண்டோம், அருந்தினோம், ஒன்றாகவே சிரித்து மகிழ்ந்திருந்தோம்!

அந்நாட்களெல்லாம் இப்போது எங்கே போயின, என் பிரியத்திற்குரிய விவான்!

-குலாம் முகம்மது ஷேக்

***

நரேன் – ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். சமீபத்தில் கவனம் பெற்ற இவரது மொழிபெயர்ப்பில் வெளியான சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” மின்னஞ்சல்: Narendiran.m@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular