Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்சுற்றுகளுக்கு இடையில்

சுற்றுகளுக்கு இடையில்

ஓ ஹென்றி

தமிழில் : கயல்


மே மாதத்து நிலவு மிகச் சரியாகத் திருமதி மர்ஃபிக்குச் சொந்தமான தங்கும் விடுதியின் மேற்கூரைமீது பொலிந்துகொண்டிருந்தது. ஜோதிட நூலில், இனி கண்டுபிடிக்கப்படப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த பரந்த நிலப் பரப்பின்மீதும் நிலவின் கதிர்கள் பரவியிருந்தன. இப்போது  உச்சத்தில் இருக்கிற வசந்த காலத்தைப் பின்தொடர்ந்து பனிக் காலத்தில் ஏற்படும் ஒவ்வாமைகளும் வரும். மேற்குதிசையிலிருந்தும், கிழக்கில் இருந்தும் வணிகர்களும், பசுந் தளிர்களும் அங்கிருந்த பூங்காக்களை நிறைத்திருந்தன. மலர்களும் கோடைக் காலத் தங்கும் விடுதிகளின் முகவர்களும் வேகமாக அசைந்துகொண்டிருக்க, காற்றும் லாசனுக்குரிய பதில்களும் தேய்ந்தடி இருந்தன. ஃபிரெஞ்சு இயந்திரக் கருவியான உருளை வடிவ இசைக் கருவிகளும், நீரூற்றுகளும், சீட்டுக் கட்டு விளையாட்டின் ஓசையும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தன.  

திருமதி மர்ஃபிக்குச் சொந்தமான தங்கும் விடுதியின் ஜன்னல்கள் திறந்திருந்தன. அதன் உயரமான படிக்கட்டுகளின்மீது ஜெர்மன் பான்கேக்குகளைப் போல வட்டமாகவும் தட்டையாகவும் இருந்த பாய்களைப் போட்டு, விடுதியில் தங்கியிருந்த ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். 

இரண்டாவது மாடியின் முன்புற ஜன்னல்கள் ஒன்றின் அருகே திருமதி மெக்காஸ்கி, தன் கணவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த இரவு உணவு ஆறிக் கொண்டிருக்க, அதன் வெப்பம் திருமதி மெக்காஸ்கிக்குள் புகுந்தது.

தன்னுடைய மேல் அங்கியைக் கைகளிலும், சுருட்டைப் பற்களுக்கு இடையேயும் ஏந்தியபடி, இரவு ஒன்பது மணிக்கு அங்கு வந்து சேர்ந்த திரு மெக்காஸ்கி, படிகளில்  அமர்ந்திருந்தவர்களைத் தொந்தரவு செய்தமைக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபடி, ஒன்பதாம் எண் அளவும் டி அகலமும்கொண்ட தன் காலணிகளை வைத்து நடப்பதற்கு அவர்களுக்கிடையே காலியாக இருந்த ஒரு படிக்கட்டைத் தேர்வு செய்தார். 

தன்னுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், வியப்படைந்தார்.  தன்மீது எறியப்படும் தட்டுகளோ, உருளைக்கிழங்குகளை மசிக்கப் பயன்படுத்தும் கருவியோ  தாக்காமல், அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டு வழக்கமாக உள்ளே நுழைபவரை, வழக்கத்திற்கு மாறாக சொற்கள்மட்டுமே அன்று வரவேற்றன. 

இனிமையான மே மாத நிலவு தன்னுடைய மனைவியின் இதயத்தைக் கனிவாகிவிட்டதாக மெக்காஸ்கி நினைத்தார்.

சமையலறைப் பாத்திரங்களுக்கு பதிலாக இப்போது சொற்கள் வந்தன.

“நான் கேட்டுக்கொண்டு தானிருந்தேன். அவர்களுடைய ஃபிராக்கின் விளிம்பில் உன் விகாரமான பாதங்கள் பட்டுவிட்டதற்காக தெருக்களில் திரியும் ஒன்றுக்கும் உதவாதவர்களிடம் உன்னால் மன்னிப்புக் கேட்கமுடியும். ஆனால்,  துணி காயவைக்கும் கொடி நீளத்துக்கு உன் மனைவியின் கழுத்தின்மீதே நடந்து நீ காயப்படுத்துவாய். ஆனாலும்கூட, “என்னை முத்தமிடு” என்ற ஒற்றை வார்த்தையைக்கூட உன்னால் சொல்லமுடியாது. அந்தத் துணிக் கயிறு, ஜன்னலோடு ஒட்டி நின்றபடி நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேனே அதைவிட நீளமானது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். உன்னுடைய வாராந்திரக் கூலி முழுவதையும் கேலாகரின் சாராயக் கடையில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் குடிப்பதற்காக நீ எப்படி எந்த உணர்ச்சியும் இன்றிச் செலவு செய்கிறாயோ அதேபோல  இந்த இரவு உணவும் ஆறிவிட்டது. எரிவாயுக் கட்டணம் வசூலிப்பவர் தனக்கான பணத்தைக் கேட்டு இன்று இரண்டு முறை இங்கு வந்திருந்தார்”.

“ஏய்!” என்றபடி தன் அங்கியையும் தொப்பியையும் ஒரு நாற்காலிமீது வீசியெறிந்தவர், “உன் கூச்சல் என்னுடைய பசியை அவமதிக்கிறது. ஒருவர் தன்னுடைய நாகரிகமான பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டால் அது சமுதாயத்தின் அடித்தளக் கற்களின் இடையே உள்ள சிமெண்ட்டுப் பூச்சை அகற்றிவிடுவது போன்றது. பாதையை மறித்து அமர்ந்திருக்கிற பெண்களுக்கு இடையே நுழைந்து வெளியேறுவது குறித்து ஒரு கனவானாக நான் அவர்களிடம் கோபமாகப் பேசியதுதவிர அதில் வேறெதுவும் இல்லை. உன்னுடைய பன்றி முகத்தை ஜன்னலில் இருந்து நகர்த்தி, உணவைக் கொண்டு வரப் பார்க்கிறாயா?” என்றார்.

வேகமாக எழுந்த திருமதி மெக்காஸ்கி அடுப்பை நோக்கிச் சென்றாள். அவளுடைய நடவடிக்கையில் இருந்த ஏதோ ஒன்று மெக்காஸ்கியை எச்சரித்தது.  அவளுடைய உதடுகளின் விளிம்புகள் காற்றின் அழுத்தத்தை அளவிடும் கருவி போன்று திடீரெனத் தாழ்கிறதென்றால், அது சமையல் பாத்திரங்களும் தகரப் பொருட்களும் வீசப்படுவதற்கான வழக்கமான முன்னெச்சரிக்கையாகும்.

“ஓ! பன்றி மூஞ்சி! அப்படியா?” என்றவள் பன்றி இறைச்சியும் நூக்கலும் நிறைந்திருந்த வாணலியைத் தன் கணவன்மீது வீசி எறிந்தாள்.

பதிலடி கொடுப்பதில் மெக்காஸ்கி ஒன்றும் கற்றுக்குட்டி அல்லர். பந்தியில் முக்கிய உணவைத் தொடர்ந்து எந்தப் பதார்த்தம் பரிமாறப்படும் என்பது அவருக்குத் தெரியும். எலும்புகள் ஏதுமற்ற, சதைப் பிடிப்பான பன்றி இறைச்சி வறுக்கப்பட்டு, மணப் புல் வகையிலான இலைகளால் அலங்கரிக்கப்பட்டு,மேஜைமீது வைக்கப்பட்டிருந்தது. தன் மனைவிக்குச் சுடச்சுட பதில் தரும் விதத்தில், ஒரு மண் பாண்டத்தில் வைக்கப்பட்டிருந்த ப்ரெட்டால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டத்தை அவர் பொருத்தமாகத் திருப்பியடித்தார். அவர் துல்லியமாக எறிந்த ஒரு பெரிய பாலாடைக் கட்டித் துண்டுஅவளுடையகண்ணின் கீழே போய் அடித்தது. சூடான, கருத்த, பாதியளவு மணம் வீசிக்கொண்டிருந்த காபிக் குவளையைச் சரியாகக் குறி பார்த்து எறிந்து அவள் அதற்குப் பதில் சொன்னபோது, உணவு பரிமாறப்படும் வரிசையில் அடுத்ததாக வரவேண்டியது என்ற முறையில்,  இது அப்போதே முடிவுக்கு வந்திருக்கவேண்டியது.

ஆனால் திரு மெக்காஸ்கி ஐம்பது சதவிகிதத் தள்ளுபடி விலையில் தரப்படும் உணவு விடுதிகளின் வாடிக்கையாளர் கிடையாது. மலிவான ஆட்களான கலைஞர்கள் வேண்டுமானால், ஒருவேளை தாங்கள் நினைத்தால், காபியை உணவில் இறுதியாகப் பரிமாறக்கூடிய ஒன்றாகக் கருதலாம். 

அவர்கள் வேண்டுமானால் அந்த இழிவான செயலைச்செய்து கொள்ளட்டும். மெக்காஸ்கி அவர்களைவிட அதிக திறமையானவர். 

உணவு மேஜையிலேயே கைகளைக் தழுவிக் கொள்ளத் தரப்படும் சிறு கிண்ணங்கள் அவருடைய அனுபவத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. அவை இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்க வேண்டியவையும் அல்லதான்; ஆனால் அவற்றுக்கு இணையானவை அவருடைய கைவசம் இருந்தன. தன் திருமணத்தால் தனக்கு வாய்த்த இந்தப் பகையாளியின் தலையை நோக்கி வெற்றிப் பெரிமிதத்துடன்  கருங்கல்லால் ஆன கை கழுவும் தொட்டியை உடனே அனுப்பி வைத்தார். சரியான நேரத்தில் அதிலிருந்து லாவகமாகத் தப்பித்து, உளங்கனிந்த ஓர் செயல்போல இஸ்திரி பெட்டியை எட்டி எடுத்த திருமதி மெக்காஸ்கி,  உணவு சார்ந்த இந்தப் போர் இப்போது முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பினாள். ஆனால் கீழ்த் தளத்தில் இருந்து ஒலித்த அலறல் ஓசையால், திரு மெக்காஸ்கியோ திருமதி மெக்காஸ்கியோ, விரும்பாத, தன்னிச்சையான ஒரு  போர் நிறுத்த ஒப்பந்தம் அங்கு திடீரென ஏற்பட்டது.

அவர்களுடைய வீட்டினுடைய நடைபாதையின் மூலையில் காவலர் க்ளேரி தன்னுடைய ஒரு காதை மேல்நோக்கிச் சாய்த்து வைத்தபடி சமையலறைப் பாத்திரங்கள் மோதி விழும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

“அட, இந்த மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும் மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள்” என்றபடி தியான மனநிலைக்குச் சென்றார் அந்தக் காவலர், “மேலே சென்று இந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமா என்று யோசிக்கிறேன். நான் போகமாட்டேன். அவர்கள் திருமணமானவர்கள், வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் மட்டுமே அவர்களுக்கு உள்ளன. இது வெகு காலம் நீடிக்காது. இதை மேலும் தொடரவேண்டும் எனில் அவர்கள் மேலும் சில பாத்திரங்களைக் கடனாகப் பெற வேண்டியிருக்கும்”.

அதே சமயத்தில் பெரும் அச்சத்துடனும் அவசரத்துடனும் ஒரு பெரிய கூச்சல் படிகளுக்குக் கீழ் இருந்து கேட்டது. 

“அது பூனையாகத்தான் இருக்கும்” என்ற காவலர் க்ளேரி அந்தத் திசையை நோக்கி வேகமாக நடந்தார். 

படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த விடுதியின் வாடிக்கையாளர்கள் படபடப்பு அடைந்தனர். பிறவிக் காப்பீட்டு ஆலோசகரும், தொழில்முறை துப்பறிவாளருமான திரு டூமி, அந்த அலறல் சத்தத்தைக் குறித்து ஆராய்வதற்காக உள்ளே சென்றவர், திருமதி மர்ஃபியின் மகன், சிறுவன் மைக் தொலைந்து போய்விட்ட செய்தியுடன் திரும்பினார்.

உண்மையிலேயே இது ஒரு சோகமான காட்சிதான்; ஆனால் திரு டூமி, பெண்கள் அணியும் தொப்பிகளை விற்பனை செய்யும் மிஸ் பர்டியின் அருகே சென்று அமர்ந்துகொண்டதும், அவர்கள் இருவரின் கைகளும் அனுதாபத்துடன் பிணைந்து கொண்டன. கூடத்தில் ஏற்படும் சத்தத்தைப் பற்றித் தினமும் புகார் கூறும் திருமண வயதைக் கடந்த முதிர்கன்னியான திருமதி வால்ஷ், கடிகாரத்திற்குப் பின்னால் யாராவது சிறுவனைத் தேடினார்களா என்று உடனே கேள்வி எழுப்பினாள்.

மேல் படிக்கட்டில், பருமனான தன் மனைவியின் பக்கத்தில்  அமர்ந்திருந்த மேஜர் க்ரிக், உடனே எழுந்து தன்னுடைய மேலங்கியின் பொத்தானைப்  பொருத்திக் கொண்டு, “அந்தச் சிறுவன் தொலைந்துபோய் விட்டானா?”  என்று ஆச்சரியத்துடன் கேட்டபடி, “நான் இந்த நகரத்தையே துருவித் தேடுகிறேன்” என்றார்.  இருட்டிய பிறகு எங்கும் வெளியே செல்ல அவருடைய மனைவி அவரை இதுவரை அனுமதித்ததே இல்லை. 

ஆனால் இப்போதோ கரகரப்பான ஆண் குரலில், “மாவீரரே, நீங்கள் கிளம்புங்கள்! ஒரு தாயின் துயரத்தைப் பார்த்தும் அவளுக்கு உதவி செய்யப் பொங்கி எழாதவர்களின் இதயம் கல்லால் ஆனது”  என்றாள்.

மேஜர், “எனக்கு முப்பது அல்லது அறுபது சென்ட்கள் தா அன்பே. தொலைந்து போகும் சிறுவர்கள் சில சமயம் வெகு தூரம் சென்று விடுவார்கள். பயணம் செய்ய எனக்குப் பணம் தேவை” என்றார்.

தங்கும் விடுதியின் நான்காவது மாடியின் பின்பக்கம் இருந்த சிறிய அறை ஒன்றில் வசித்த முதியவரான டென்னி, கடைசிப் படிக்கட்டில் அமர்ந்து தெருவிளக்கின் வெளிச்சத்தில் செய்தித்தாள் வாசிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். தச்சர்களின் வேலைநிறுத்தம் பற்றிய கட்டுரையை வாசிப்பதற்காகச் செய்தித்தாளைத் திருப்பினார். திருமதி மர்ஃபி நிலவைப் பார்த்து, “ஐயோ,  மைக்! கடவுளின் பெயரால் கேட்கிறேன் என்னுடைய குட்டிப் பையன் எங்கே?” என்று கிறீச்சிட்டாள்.

முதியவர் டென்னி தன்னுடைய ஒரு கண்ணைத் தச்சர்கள் குழுகுறித்த அறிக்கைமீது வைத்துக்கொண்டே, “நீங்கள் கடைசியாக அவனை எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டார். 

“அது…” என்று அலறிய திருமதி மர்ஃபி, “நேற்று பார்த்தேன். அல்லது ஒருவேளை அது நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய குட்டிப் பையன் மைக் தொலைந்து போய்விட்டான். அவன் கட்டிடத்தின் நடைபாதையில் இன்று காலையில்தான் விளையாடிக் கொண்டிருந்தான் அல்லது அது புதன்கிழமையா? நான் ஓய்வில்லாமல் வேலை செய்வதால் தேதிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினமான ஒன்று. ஆனால் ஒன்று மாடியில் இருந்து நிலவறை வரை, வீடு முழுக்க நான் தேடி விட்டேன் அவனைக் காணவில்லை. ஐயோ, இறைவா…”

நிசப்தமான, கடுகடுப்பான, பிரம்மாண்டமான அந்தப் பெரிய நகரம் தன்னை நிந்திப்பவர்களுக்கு எப்போதும் எதிராக நிற்கிறது. அது இரும்பைப் போல கடினமானது என்று அவர்கள் கூறுகின்றனர்; அதன் இதயத்தின் ஆழத்தில் கருணையின் துடிப்பில்லை என்கிறார்கள்; அதன் தெருக்களை அவர்கள் தனிமையான காடுகளோடும், பாலைவன எரிமலைக் குழம்போடும் ஒப்பிடுகின்றனர்.

ஆனால் நண்டின் கடினமான ஓட்டுக்கு அடியில் சுவையான உணவு உள்ளது. வேறு ஒரு உவமையைப் பயன்படுத்தி இருந்தால் ஒருவேளை அது புத்திசாலித்தனமான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும் இதற்காக யாரும் மனம் வருந்தத் தேவையில்லை. சிறந்த, போதுமான அளவுக்குக் கூரான நகங்கள் அற்ற யாரையும் நாங்கள் நண்டு என்று பெயரிட்டு அழைக்கமாட்டோம்.

ஒரு சின்னஞ் சிறு குழந்தை வழி தவறிப் போவதுபோல,  மனித நேயத்தின் பொதுவான இதயத்தைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய பேராபத்து வேறெதுவும் இல்லை. அந்தக் குழந்தைகளின் கால்கள் சிறிதும் உறுதியற்றவை, மென்மையானவை; ஆனால் பாதைகளோ கடினமானவையாக, முன்பின் அறிமுகம் அற்றவையாக உள்ளன. 

விடுதியின் மூலையை நோக்கி வேகமாக ஓடி, மரங்கள் அடர்ந்த சாலையைக் கடந்து பில்லியின் இடத்தைச் சென்றடைந்த மேஜர் க்ரிக்ஸ், “எனக்கு ஒரு விஸ்கி தா” என்று பணியாளரிடம் கூறிவிட்டு, “வளைந்த முழங்கால்களும், அழுக்கடைந்த முகமுமாக, குட்டிச்சாத்தான்களுக்கே உரிய ஆறு வயது நிரம்பிய ஒரு சிறுவன் உன் கண்களில் தட்டுப்படாமல் எங்கும் போயிருக்கமுடியாது. நீ அவனைப் பார்த்தாய்தானே?” என்று கேட்டார்.

பர்டியின் கையைப் பிடித்தபடியே திரு ரூமி படிகளில் இப்போதும் அமர்ந்திருந்தார். 

“அந்தச் செல்லக்குட்டியை நினைத்துப் பாருங்கள். தன்னுடைய அம்மாவிடம் இருந்து பிரிந்துபோன அந்தக் குழந்தை பாய்ந்தோடும் குதிரைகளின் இரும்புபோன்ற குளம்புகளுக்குக் கீழே இப்போதேகூட ஒருவேளை விழுந்துவிட்டிருக்கக்கூடும். ஐயோ அது எவ்வளவு பயங்கரமானது!” என்றாள்.

“ஆம். அது சரிதான்!” என்று அவள் கூறியதை ஏற்றுக்கொண்ட திரு டூமி பர்டியின் கையை அழுத்தியபடி , “இங்கிருந்து கிளம்பிப் போய் அவனைத் தேடுவதற்கு நான் உதவினால் என்ன?” என்று கேட்டார். 

“செய்யலாம்தான்,” என்ற பர்டி, “நீங்கள் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் ஐயோ!  திரு ரூமி, நீங்கள் மிகுந்த உடல் உரத்தோடும், ஆபத்தான விளைவுகளைப் பற்றி நினைக்காமல் அதிக துணிச்சல் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்! உங்களுக்கு இருக்கும் இந்த உற்சாகத்தில் எதிர்பாராதவிதமாக உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால், அதன் பிறகு என்ன….?” என்றாள்.

முதியவர் டென்னி, தன்னுடைய ஒற்றை விரலைச் செய்தித்தாளின் வரிகளின் மீது வைத்தபடி சமரச ஒப்பந்தம் பற்றிய செய்தியைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். 

இரண்டாவது மாடியில் இருந்த திரு மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும் களைப்படைந்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டே காற்று வாங்க தங்களுடைய ஜன்னலுக்கு அருகே வந்து நின்றனர். திரு மெக்காஸ்கி தன் சட்டையின் உட்புறத்தில் இருந்த கிழங்கை வளைந்திருந்த தன் சுட்டுவிரலால் தேடி எடுத்தார். அவருடைய மனைவி வறுத்த பன்றிக்கறியின் மீது தடவப்பட்டிருந்த உப்பு பட்டு எரிச்சலுற்ற தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கீழிருந்து எழுந்த கூச்சல்களைக் கேட்டதும் அவர்கள் இருவரும் தங்களுடைய தலைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தனர்.

“அந்தக் குட்டிப் பையன் மைக் தொலைந்து போய்விட்டான்” என்று ரகசியமான குரலில் சொன்ன திருமதி மெக்காஸ்கி,‌”அழகான, குட்டியான, தொல்லை தரும் சிறு வேலைக்காரப் பயல்” என்றாள்.

ஜன்னலின்மீது சாய்ந்து வெளியே எட்டிப் பார்த்தபடி “அந்த சிறுவன் தொலைந்து போய் விட்டானா?” என்று திரு மெக்காஸ்கி கேட்டார்.

“அடடா! இது உண்மையிலேயே மிகவும் மோசமானதுதான். குழந்தைகள் விஷயமே வேறு மாதிரியானது. இதுவே ஒரு பெண் என்றால், நான் அது எனக்குச் சம்மதமே. அவர்கள் ஓர் இடத்தை விட்டு விலகிய பிறகே அங்கு அமைதி நிலவும்” என்றார். 

இந்தக் கிண்டலைக் கண்டுகொள்ளாத திருமதி மெக்காஸ்கி தன்னுடைய கணவனின் கையைப் பற்றினாள்.

“அன்பே” என்று உணர்ச்சிவசப்பட்டு அவரை அழைத்தவள், “மர்ஃபியின் சிறு குழந்தை காணாமல் போய்விட்டது. சிறு குழந்தைகள் எளிதில் காணாமல் போகும் அளவுக்கு இது ஒரு பெரிய நகரம். அவனுக்கு ஆறு வயது தான் ஆகிறது. அன்பே, ஆறு வருடங்களுக்கு முன்பு நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தால் அந்தக் குழந்தைக்கும் இப்போது ஆறு வயதுதான் ஆகியிருக்கும்” என்றாள்.

“நாம் தான் குழந்தை பெறவே இல்லையே” என்று கூறிய திரு மெக்காஸ்கி, அது குறித்துத் தீவிரமாக யோசித்தார். 

“ஆனால், ஒருவேளை நமக்கு அந்த குழந்தை இருந்திருந்து, நம் குட்டிப் பையன் ஃபெலன் ஓடிப்போய் எங்கோ கண்காணாத இடத்தில் யாரோ அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டிருந்தால்,  இன்று இரவு நம் இதயங்கள் எத்தகைய வேதனையில் நிரம்பியிருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்” 

“ஏய்! முட்டாள்தனமாகப் பேசாதே. ஆண்ட்ரிமில் இருக்கும் என் அப்பாவின் நினைவாக அவனுக்கு பாட் என்றுதான் நான் பெயரிடுவேன்” என்றார் மெக்காஸ்கி.

” நீங்கள் சும்மா சொல்கிறீர்கள்” கோபமற்ற குரலில் கூறிய திருமதி மெக்காஸ்கி, “என் அண்ணன் ஒரு டஜன் மெக்காஸ்கிகளைவிட உயர்ந்தவர். அவருடைய பெயரைத் தான் குழந்தைக்கு சூட்டவேண்டும்” என்றவள் பலகணியின் மீது சாய்ந்தபடி கீழ்த்தளத்தில் நடந்துகொண்டிருந்த களேபரத்தைப் பார்த்தாள்.

“அன்பே”  என்று மென்மையான குரலில் அழைத்த  திருமதி மெக்காஸ்கி, “நான் அவசரப்பட்டுப் பேசியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றாள்.

“நீ சொல்வதுபோல் உன் கோபம் அதிவிரைவாகச் செய்யப்பட்ட இனிப்புப் பண்டம் மாதிரிதான். விரைவாக வேக வைத்த கிழங்குகள், வேகமாகத்  தயாரித்த காபி, நாம் வேகமாகத் தயாரிக்கப்பட்ட மதிய உணவு என்று அழைப்போமே அதுபோல. சரியா, அத்துடன் நீ பொய் சொல்லாதே” 

திருமதி மெக்காஸ்கி,  தன் கணவரின் கைகளுக்குள் தன் கைகளை நுழைத்து, அவனுடைய முரட்டுத்தனமான கைகளைத் தொட்டாள்.

“திருமதி மர்ஃபியின் அழுகுரலைக் கேளுங்கள். இந்த மிகப்பெரிய நகரத்தில் ஒரு சிறு குழந்தை காணாமல் போவது என்பது மிக மோசமான ஒரு விஷயம். அதுமட்டும் நம்முடைய குட்டிப் பையன் ஃபெலான்  ஆக இருந்திருந்தால், ஐயோ  அன்பே,  அது என்னுடைய இதயத்தையே நொறுக்கிவிட்டிருக்கும்”  என்றாள்.

சட்டெனத் தன்னுடைய கைகளை அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டாலும் திரு. மெக்காஸ்கி, தன்னுடைய மனைவியின் தோள்களின்மீது அவற்றைப் படரவிட்டார்.

“இது நிச்சயமாக முட்டாள்தனம்தான்” என்று முரட்டுத்தனமாகக் கூறியவர்,

“நம் குழந்தை பாட் ஒருவேளை கடத்தப்பட்டிருந்தாலோ வேறு ஏதாவது நடந்திருந்தாலோ நானும் பெரும் துயரத்தை அடைந்திருப்பேன். ஆனால் நமக்கு இதுவரை குழந்தையே பிறக்கவில்லை.  சில சமயங்களில் நான் உன்னிடம் மோசமாகவும் கடுமையாகவும் நடந்து கொண்டிருக்கிறேன் ஜூடி.  அதை மறந்துவிடு”

அவர்கள் இருவரும் ஜன்னலின்மீது ஒன்றாகச் சாய்ந்தபடி கீழ்த்தளத்தில் நடந்துகொண்டிருந்த இதயத்தை உருக்கும் நாடகத்தை எட்டிப் பார்த்தனர்.

வெகு நேரம் அவர்கள் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.  நடைபாதையில் மக்கள் கூட்டம் பெருகியது. அந்த இடமே கேள்விகள்,  வதந்திகள், யூகங்களால்  நிறைந்தது. திருமதி மர்ஃபி, இடைவிடாது கொட்டும் நீர்வீழ்ச்சிபோலக் கண்ணீர் சிந்தியபடியே ஓர் மென் மலை தரையிறங்கி வந்ததுபோல முன்னும் பின்னுமாக ஆட்களுக்கு இடையே நடந்துகொண்டிருந்தாள். தகவல் பரிமாறுபவர்கள் வந்து சென்றபடி இருந்தனர்.

விடுதியின் முன்பக்கத்தில் இப்போது பெரும் சத்தமும் புதிதாக ஒரு கூச்சலும் எழுந்தன. 

திரு மெக்காஸ்கி, “இப்போது என்ன ஆயிற்று ஜூடி?” என்று கேட்டார்.

அந்தக் குரலைத் தீவிரமாக ஆராய்ந்த திருமதி மெக்காஸ்கி, “அது திருமதி மர்ஃபியின் குரல்” என்றாள். “தன்னுடைய  படுக்கையறையில், கட்டிலுக்குக் கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய தரை விரிப்பின் பின்பக்கமாக, குட்டி மைக் உறங்கிக்கொண்டிருந்ததை இப்போதுதான் அவள் கண்டுபிடித்தாளாம்” 

திரு மெக்காஸ்கி சத்தமாகச் சிரித்தார். 

“அதுதான் உன் ஃபெலான்” என்று கிண்டலாக கூச்சலிட்டார். “இதுபோன்ற வேலையெல்லாம் பாட் ஒருபோதும் செய்திருக்கமாட்டான். நமக்குப் பிறக்காத நம்முடைய குழந்தை தொலைந்துபோய், யாராவது அவனைத் திருடிக்கொண்டு போய் விட்டால்,  உன்னுடைய திறமையைப் பயன்படுத்தி அவனை நீ ஃபெலான் என்று கூப்பிடு. அவன்தான் கட்டிலுக்குக் கீழ் ஒரு நாய்க்குட்டி போல ஒளிந்துகொண்டிருப்பான்.”

வேகமாக எழுந்த திருமதி மெக்காஸ்கி, தன்னுடைய வாய்ப்பகுதியின் ஓரங்களைத் தொங்கப்போட்டபடி, பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரியை நோக்கி நடந்தாள்.

கூட்டம் கலையத் தொடங்கவும், காவலர் க்ளேரி விடுதியின் மூலையை வந்தடைந்தார். மெக்காஸ்கியுடைய வீட்டின் மேற்புறமாக அவர் தன்னுடைய காதை வைத்தபோது, இரும்புப் பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் வீசி எறியப்பட்டு உடைந்து நொறுங்கும் ஓசை முன்போலவே பெரும் இரைச்சலுடன் இப்போதும் கேட்டதும், தன்னுடைய கடிகாரத்தை வெளியே எடுத்தார். 

“அடக் கடவுளே! மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும்  ஒரு மணி நேரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவனுடைய மனைவி அவனைவிட நாற்பது பவுண்டு  அதிக எடை கொண்டவள். கடவுள் அவனுடைய கைகளுக்கு வலிமையை அளிக்கட்டும்”

காவலர் க்ளேரி விடுதியின் மூலையைச் சுற்றி வந்து பைய நடைபோட்டுத் திரும்பிச் சென்றார்.

திருமதி மர்ஃபி, கதவுகளைப் பூட்டத் தொடங்கிய அதே நேரத்தில் முதியவர் டென்னி தன்னுடைய செய்தித்தாளை மடித்து வைத்துக்கொண்டு விரைந்து படிகளில் ஏறினார். 

ஓ. ஹென்றி – இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் (1862 – 1910), அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் ஆவார். கவிதைகள் புனைவிலக்கியம் ஆகியவற்றுக்கும் இவர் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ஓ.ஹென்றியின் கதைகள், இயற்கை மீதான அவருடைய நுட்பமான பார்வை, நகைச்சுவையான விவரிப்புகள், வியப்பளிக்கும் முடிவுகளுக்குப் புகழ் பெற்றவையாகும்.

***

கயல் – வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகத் தற்போது பணியாற்றுகிறார். இவர் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்லூஞ்சல் (2015), மழைக்குருவி (2016), ஆரண்யம் (2018),ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய கவிதை நூல்களும், கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள் (2022), பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும், சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள் (2022), போரொழிந்த வாழ்வு (நாவல்) (2024), இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள் (நாவல்) (2025) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் : dr.kayalvizhi2023@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here