வைரவன்.லெ.ரா
ஒரு கதையை இன்னொருவருக்கு எப்படி உணர்த்துவது? முதலில் ஒரு கதையை எதற்கு இன்னொருவருக்கு உணர்த்த வேண்டும். அது மொழியின் வாயிலாக பலவழிகளில் சாத்தியமாகிறது. கவிதைகளாக, நாவலாக, சிறுகதையாக. மொழி மட்டுமா! ஓவியம், இசை, நடனம், சிற்பம், நடிப்பு இப்படி எத்தனையோ வழிகள் உண்டு. என்னளவில் அது என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குச் சமம், சாமானியனாக அதுவொன்றும் குற்றமில்லை. நம்மிடையே இலக்கியத்தின் மூலம் இந்தக் கூறுமுறை பெருமளவில் வந்தடைகிறது. வரைகலைப் பற்றிய புரிதலும்உணர்தலும் நம்மிடையே பெரிதளவில் அறிமுகம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த கூற்று ஒருவேளை தவறான புரிதலாகவும் இருக்கலாம். எனக்கு வரைகலை பற்றிய அறிமுகம் ஜீவ கரிகாலன் அண்ணன் வாயிலாகவே நடந்தது. சென்னையின் பொதுவான மதிய வெயிலில் யாவரும் புத்தக நிலையத்தில் அவரைச் சந்தித்த பொழுது ‘vann nath painting the khmer rouge’ என்னும் வரைகலை நாவலை வாசித்துப் பாருங்கள் என்றார்.
அதன் பக்கங்களை இயல்பாக விரல்கள் தொடுதிரையில் புரட்டும் போதே ஏனோ கண்கள் மொழியின் கோட்டுருவங்களை விட, அதன் வரையுருவங்களையே அதிகம் கிரகித்தன. ஏதோ ஒருவகையில் என்முன்னே அவை அசைய ஆரம்பித்து உயிர் கொண்டது எனவும் சொல்லலாம். அப்படித்தான் வரைகலை மீண்டும் எனக்குத் திரும்பக் கிடைத்தது. அதற்கு முன்னரே தமிழில் இரும்புக்கை மாயாவி, மார்வெலின் ஸ்பைடர் மேன், டிசியின் பேட்மேன் வரைகலை நாவல்கள் அறிமுகம் என்றாலும் அவற்றில் வணிகத் தேவைகள் அளவிற்கு அதிகமாகவே இருந்தன. அசாதாரண வாழ்வின் இனிப்புகளையும் கசப்புகளையும் சுமந்தவை அவை என நினைக்கிறேன். இலக்கியத்தில் தீவிரத்தையும் நிதர்சனத்தின் எதேச்சையின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் கண்டடைய முற்படுவோருக்கு இதில் என்ன கிடைக்கப் போகிறது என்றெண்ணிய நான் இந்தக் கட்டுரையின் வாயிலாக சிலவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
ஜீன் க்ரெமெர்ஸ் (jean cremers) பெல்ஜியத்தில் வரைகலைக் கலைஞராக இருக்கிறார். ‘Académie royale des beaux-arts de Liège’-ல் ஃபைன் ஆர்ட்ஸ் படித்திருக்கிறார். அவருடைய ‘Cold Front’ எனும் வரைகலை நாவலைப் பற்றியே இதில் எழுதியிருக்கிறேன். ‘Cold Front’, முழுக்க அடர்த்தியும், நிறையும், வெப்பநிலையுமுடைய குளிர்ந்த காற்று நிரம்பிய வெளியில் அதன் முனைகளையே ‘Cold Front’ என அழைக்கிறோம். இந்தக் குளிர்ந்த காற்று நேரடியாகப் பனிமலைச் சிகரங்களில் இருந்து சமவெளிகளை நோக்கி நகரும், கடற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று இதனோடு மோதுமிடங்களில் மேகக்கூட்டங்கள் உருவாகி பெரும் மழைப்பொழிவு நிகழலாம் அல்லது பனிப்பொழிவு நிகழலாம். இவை இந்த இருவேறு நிகழ்வுகளும் காற்றுத் திரளின் அமைப்பையும் அளவையும் பொறுத்து மாறுபடும். குளிர்ந்த காற்றின் நிறை வெப்பக் காற்றைவிட அதிகம், எனவே அவை நிலத்தின் தாழ்நிலையிலேயே பயணிக்கும், ஏனென்றால் அது கனமானது. உதாரணத்திற்கு பனிக்கட்டி. மறுபுறம் வெப்பக் காற்று அடர்த்தி, நிறை குறைவு உதாரணத்திற்கு நீராவி, ஹீலியம் காற்று. எதற்கு இவ்வளவு அறிவியல், குளிர்ந்த காற்று, வெப்பக் காற்று. இந்த நாவலிலும் இரண்டு பாத்திரங்கள்தான். ஒருவன் மார்ட்டின், இன்னொருவன் ஜூல்ஸ். இருவரும் சகோதரர்கள்.
பெல்ஜியத்திலிருந்து டென்மார்க் வழியே நார்வே நோக்கி பயணிக்கிறார்கள். மார்ட்டின் நாவல் ஒன்றை எழுத முயற்சித்து வருகிறான். ஜூல்ஸ் ஓவியன்.கல்லூரியில் படிக்கிறான். இந்தப் பயணம் அவனது கல்லூரித் தேர்விற்கு உபயோகப்படும் என்றெண்ணி பயணத்திற்கு வந்திருக்கிறான். அவர்களுடைய பிரதான திட்டம் மலையேற்றத்தின் மூலம் Preikestolen எனும் செங்குத்தான பாறையுச்சியை அடைவது. இந்தப் பயணத்தில் மார்ட்டினுக்கும் ஜூல்ஸுக்குமிடையே நிகழும் உரையாடல்களும், தருணங்களும், அவர்கள் சந்திக்கும் சில மனிதர்களும், திட்டங்களை மீறி எதிர்கொள்ளும் சம்பவங்களும்தான் நாவல்.
மார்ட்டின் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தினால் தூக்கமின்மையால் ஒருவிதச் சலிப்புடன் இருக்கிறான். கூட நார்ஸ் புராணங்களில் (Norse Mythology) நம்பிக்கை கொண்டவன், நார்வே செல்ல அதுவும் ஒரு காரணம். நாம் அறிந்த ஓடின், தார், லோகி, ஆஸ்கார்ட், மிட்கார்ட் தான். மார்வெலின் கதாபாத்திரங்கள் புராணக் கதாபாத்திரங்களில் இருந்து சற்று மாறுபட்டவை, வணிகத் தேவை. இந்திய இதிகாசத் திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூல்ஸுக்கு ஓவியமும் வரைய வேண்டும், தன் அண்ணனையும் பயணத்தின் மூலம் இறுக்க நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு இழுத்துவர வேண்டும். அவன் ஒரு சராசரி இளைஞனாக வாழ்வின் அந்தந்த தருணங்களை அனுபவிப்பவன்.
நாவலின் கதையில் இருந்து விலகுகிறேன். இந்த நாவலில் வரைகலைப் பற்றி சிந்திக்கும் முன் வரைகலையின் ஆரம்பம் எங்கிருக்கிறது என்றால் அவை குகையோவியங்களில் இருந்து தொடங்குகிறது. சிறுசிறு வரைபடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது சீராக விடுபட்டோ ஏதோ ஒன்றினை உணர்த்த முயற்சிக்கின்றன. சட்டென்று தோற்பாவைக் கூத்து நினைவில் வருகிறது. இரண்டும் வெவ்வேறுதான். ஆனால் காட்சிகள் மாறுகின்றன. எவை வேண்டுமோ, எங்கு வேண்டுமோ, போதுமோ என நிறுத்தி, சிலநொடிகள் கவனிக்க வேண்டுமோ என நீள்கின்றன.
கதைமொழியும் மொழியின் மூலம் பெரும்பாலும் வெளிப்படவில்லை. வரைப்படங்களின் முகங்களில், விழிகளின் சுருக்கங்களில், கன்னங்களில் பாயும் கோடுகளில், உடல் மொழியில், அகண்ட வானத்தில், பனியின் வெண்மையில், பறக்கும் பறவைகளில், நுரைக்கும் அலைகளில், விலங்குகளில், தேவையான இடங்களில் அதிர்வுக் கோடுகளின் வழியாகவும் உணர்த்தப்படுகின்றன. மொழியும் தேவையான இடங்களில் மட்டும் நுட்பமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான கதை சொல்லல் உத்தி, வரைப்படங்களில் நேர்த்தி, கட்டுப்பாடான மொழி போதுமா? எங்கே நம்மை இவை பாதிப்படைய செய்கின்றன. ஜீன் க்ரெமெர்ஸ் (jean cremers) பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணி இணையத்தளம் முழுக்க அலசியதில் அவரைப் பற்றி பெரிதாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய சில புகைப்படங்கள் மாத்திரம் காணக் கிடைத்தது. அவருக்கு நார்ஸ் புராணங்களில் இருக்கும் ஈடுபாடு, மெல்லிய நகையுணர்வு, நாவலில் சரியான இடங்களில் வெளிப்படும் மௌனம், ஆற்றாமை, இயற்கையின்முன் நம் நம்பிக்கைகளின் (நம்பிக்கைகள் பிறரைத் துன்புறுத்தாதவரை) முன் பேச்சற்று, அசைவற்று, இப்பிரபஞ்சம் எனும் அண்டவெளியில் எதுவுமற்று இன்மையாகி மௌனித்து எதேச்சையின் விளைவுகளை ஏற்றுக்கொள்ளுதல் என நாவலில் நான் உணர்ந்தவை இதை வேறுப்படுத்திக் காட்டுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே மார்ட்டின் அமெண்டிண்டமிருந்து வரும் அலைபேசி அழைப்பை ஏற்க மறுக்கிறான், அவர்களிடையே இருக்கும் அந்த இடைவெளி, அதற்கான காரணம் என்ன? கேள்வி முளைக்கிறது. கூடவே அவனது தோற்றம், மார்பு வரை நீண்ட தாடி, கலைந்த தலைமுடி, கண்களின் சுருக்கம் அவனின் இறுக்கத்தை வெளிக் காட்டுகிறது. ஜூல்ஸ் சராசரி இளைஞனுக்குரிய ஆடை, நீண்ட கேசம், தொப்பி, குறுகுறுப்பு என இலகுவானவனாக இருக்கிறான்.
மார்ட்டின் நார்வே செல்வதே நார்ஸ் நம்பிக்கையால்தான். ஜூல்ஸ் மார்ட்டினின் நார்ஸ் புராண நம்பிக்கையை அவ்வப்போது சீண்டுகிறான். மார்ட்டின் தன்னை ஓடின் கவனிப்பதாக, கண்காணிப்பதாக தீர்க்கமாக நம்புகிறான். ஓடின் மனதின் ரணங்களைத் தீர்ப்பவராக, கடவுள்களின் கடவுளாக இருப்பவர் என்கிறான். தன்னைச் சீண்டும் ஜூல்ஸிடம் நார்ஸ் கடவுள்கள் நீரை திராட்சை ரசமாக மாற்றத் தெரியாதவர் என்கிறான். பயணத்தின் போது ஜிபிஎஸ் வேலை செய்யாமல் போக மார்ட்டின் மட்டும் யாராவது தென்பட்டால் வழி கேட்கலாம் என்றெண்ணி வழிதவறி அலைகிறான், இறுதியில் ஒரு மேய்ப்பரைச் சந்திக்கிறான். ஓடினின் சாயலில் அவரிருக்க இருவரும் உரையாடுகிறார்கள். அவர் இவனுக்கு உணவளிக்கிறார். அங்கே வித்தியாசமாக இருக்கும் கருப்பு ஆடு ஒன்று மற்ற மந்தைகளோடு சேர மறுக்கிறது. அது மட்டும் தனித்திருக்க, மேய்ப்பர் அது கைவிடப்பட்டு குழந்தையாக கிடைத்தது என்கிறார். மார்ட்டினும் தன்னை கைவிடப்பட்டவனாகவே உணர்கிறான்.
கைவிடப்பட்டவர்களையே இறைவன் அதிகம் நேசிக்கிறான். இருவருக்குமிடையே நிகழும் உரையாடலில் ‘வாழ்க்கை அவ்வளவொன்றும் எளிதானதில்லை’ – மேய்ப்பர் சொல்ல, மார்ட்டினும் ‘ஆம் சில நேரங்களில்’ என பதிலளிக்கிறான். இருவரையும் இரண்டு கருங்காக்கைகள் கவனிக்கின்றன. தன்னிடம் இருக்கும் நில வரைப்படத்தையும், உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவ விடைபெறுகிறான். மேய்ப்பரின் சித்திரம் ஓடினின் உருவ அமைப்பிலேயே வரையப்பட்டிருக்கும். பிறகு ஜூல்ஸிடம் அவர் ஓடின்தான் என நம்புகிறான். ஆட்களே தட்டுப்படாத இந்த வனாந்திரத்தில் யார் கம்போடு தனித்து அலைவார் என்கிறான்.
மீண்டும் இருவரும் பயணிக்க வழியில் கிரிஸ்டினை சந்திக்கிறார்கள். அவள் தன் பெண் குழந்தையோடு தனியாகப் பயணிக்கிறாள். மார்ட்டினிடம் அக்குழந்தை இயல்பாக ஒட்டிக்கொள்ள மற்ற இருவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். குழந்தையை தன் கையில் வாங்கியவுடன் மார்ட்டினின் மனவோட்டங்கள் சித்திரங்களாக சில பக்கங்கள் ஆக்கிரமிக்கின்றன. கேமிலிதன் மகளின் நினைவுகளை, அருகாமையை கையில் இருக்கும் குழந்தையின் மூலம் உணர்கிறான். ஆற்றாமை, நாம் அறியாத இழப்பொன்றின் வலி, கிடைத்தவொன்றில் அதை மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, ஆனால் எல்லாமே தற்காலிகம்தான்.
இந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே அவர்களிடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, ஜூல்ஸ் வரையும் சித்திரங்களை பயணத்தின் இறுதியிலேயே மார்ட்டின் பார்க்க வேண்டும். அதைப் போல ஜூல்ஸ் அலைபேசியில் இடையிடையே மார்டினுக்கு கேட்காமல் வீட்டோடு பேசிக்கொள்வான். மார்ட்டின் யாரோடும் ஒட்டிக்கொள்ளாமல் உறவற்று தனித்து அலைபவன். ஜூல்ஸும் மார்ட்டினின் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவுண்டு. ஓடி ஒளிவதால்அதிலிருந்து தூர விலகி நிற்பதால் எதுவும் மாறப் போவதில்லை எனப்பலமுறை சொல்லிப் பார்க்கிறான். அந்நேரங்களில் மார்ட்டின் கடுங்கோபம் கொள்கிறான், தந்தையை வெறுக்கிறான். இடையில் ஜூல்ஸையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டு வேகமாக வண்டியை ஓட்டி, ஒரு கறுப்பு ஆட்டை மோதிவிடுகிறான். அவனுக்கும் அடிபடுகிறது. நெற்றியில் இரத்தம் வழிந்தோட, கையில் தட்டுப்படும் ஜூல்ஸின் சித்திரப் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கத்தைப் புரட்ட, அதில் ஓடின் வரையப்பட்டிருப்பார். அவர் தன்னை கவனிக்கிறார் என உணரும் வேளையில், வண்டியின் முன் கண்ணாடியில் கருங்காக்கையொன்று வேகமாக மோதி அலகால் கொத்துகிறது.
திரும்பவும் ஜூல்ஸிடமே செல்கிறான். அவன் வருந்துகிறான். இரவு அவர்கள் தங்கும் தற்காலிகக் கூடாரத்திற்கு கரடி வருகிறது. இருவரும் எப்படியோ தப்பிக்கிறார்கள். அடுத்த நாள் Preikestolen நோக்கி பயணிக்க தீர்மானிக்கிறார்கள். பனி பொழிய ஆரம்பிக்கிறது. தூரத்தில் கருங்காக்கையொன்று மார்ட்டினை நோட்டமிடுவதாக உணர்கிறான். ஓடின்தான் வந்துவிட்டார் என அவரைத் தேடி ஓடுகிறான். ஜூல்ஸும் அவன் பின்னாலேயே ஓட, Preikestolen உச்சிக்கு செல்லும் பாதை வருகிறது. அதிகப் பனிப்பொழிவு இருப்பதால் மலையேற்றம் செய்யத் தடைப்பட்டிருக்கிறது. இருப்பினும் மார்ட்டின் அவ்வழியே சென்றதால் ஜூல்ஸும் பின்னாலேயே செல்கிறான். அபாயகரமான பாதை, எங்கும் பனி. பாறையுச்சியின் விளிம்பில் மார்ட்டின் அமர்ந்திருக்கிறான். அருகே ஜூல்ஸ் அமர்கிறான்.
‘Cold Front’ – ஒரு பக்கம் அடர்த்தியான நிறையுள்ள உடலை உருக்கும் குளிர்ந்த காற்று, மறுப்பக்கம் இலகுவான வெதுவெதுப்பான வெப்பக் காற்று. ‘Cold Front’.
நாவலின் அத்தியாயங்கள் சித்திரங்கள் மூலமே விளக்கப்பட்டிருக்கும். அவர்களின் சமகால அரசியலும் நம்பிக்கைகள் சார்ந்த கிண்டல்களும் தனித்து தெரிகின்றன. பாறையுச்சியில் ஜூல்ஸ் வரைந்த சித்திரங்களை மார்ட்டினிடம் நீட்டுகிறான். அவையும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பயணத்திற்கு செல்வதில் ஆரம்பித்து, பயணம் முடிவடையும் இடத்தில் நாவலும் முடிக்கப்பட்டிருக்கும். மார்ட்டின் தன்னுடைய பிரச்சனைகளை தூர நின்றே அணுகுகிறான். அதன் அடர்த்தியும் நிறையும் உண்மையில் அதிகம் விலக விலக விஸ்தாரமாகிறது. சிலநேரம் அணைப்பில் கிடைக்கும் வெதுவெதுப்பு நம்மை இலகுவாக்குகிறது. எதேச்சையின் விளைவான இப்பிரபஞ்சம் ஒரு முத்தத்தின் சூட்டால் மீண்டும் வெடிக்கட்டும்.
***
வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது நூல்கள் ’பட்டர் பீ & பிற கதைகள்’ ’ராம மந்திரம்’. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com