பாரதிராஜா
“எனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
“இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்?
அதுதான் அடுத்து நடக்கப் போகிறது. இன்றும் நீங்கள் இதைச் செய்யலாம். இதே கேள்வியை, நீங்கள் இப்போது கூகுளிடம் கேட்டால், அதற்குப் பதிலாக அருகில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்தையும் பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களிடம் – அங்கு சென்ற நோயாளிகளிடம் பெற்ற மதிப்பீட்டை எத்தனை நட்சத்திரங்கள் என்பதோடு காட்டும். ஆனால் ஒரு மனிதர் உங்களிடம் பேசுவது போலக் கருத்துக்களைச் சொல்லாது. இது போல மருத்துவத்துறை என்றில்லை. எது பற்றி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் ஆயிரம் பேரிடம் கேட்டுப் பெறும் அறிவுரையை விட – அதுவும் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சொல்லப்படும் அறிவுரையை விட – தரவுகளின் அடிப்படையிலான குழப்பமற்ற – தெளிவான அறிவுரையை ஒரு இயந்திரத்திடமிருந்து பெறும் நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டோம். இப்போதைக்கு அது முற்றிலும் முதிர்ந்த நிலையை அடைந்துவிடவில்லை. ஆனால் அதற்கு நீண்ட காலமெல்லாம் ஆகப் போவதில்லை. இன்னும் சில ஆண்டுகள்தாம். சில மாதங்களிலேயே அதற்கான அறிகுறிகள் நன்றாகத் தென்படத் தொடங்கிவிடும்.
அது மட்டுமில்லை. கருத்து சொல்வது என்று வந்துவிட்டால் அதில் மாற்றுக்கருத்துகளும் வந்துவிடும். எனவே இந்த தொழில்நுட்பத்தை ஏற்க மறுக்கும் – வெறுக்கும் ஒரு குழுவும் உருவாகிவிடும். வந்த சில நாட்களிலேயே அமெரிக்காவில் அது சொல்லும் பதில்கள் – கருத்துகள் எல்லாம் முற்போக்காளர்களின் கருத்துக்கள் போல் உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பெரும்பாலான பதில்கள் – கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்களோடு முரண்படுபவையாகவே உள்ளன என்ற குரல் எழுந்தவுடனேயே அதற்கான எதிரிகள் உருவாகிவிட்டார்கள். ஏற்கனவே தொழில்நுட்பத்தை வெறுப்பவர்கள் – இன்னும் சொல்லப் போனால், எதையாவது யாரையாவது வெறுத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு – வெறுக்க இன்னோர் உருப்படி கிடைத்தது என்று சொல்லலாம். இதை தொழில்நுட்பர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி பதில் சொன்னால் பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பதில் சொல்லும் வகையிலும் மாற்றிவிட வாய்ப்புள்ளது. “நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ காலமெல்லாம் அதுவாகவே இருக்கக் கடவது” என்றும் வசதி செய்து கொடுத்துவிடலாம்.
அந்த தொழில்நுட்பத்தின் – உருவாக்கத்தின் பெயர்தான் என்ன என்கிறீர்களா? அதுதான் சாட்ஜிபிடி (ChatGPT). கடந்த நவம்பர் 30-ஆம் நாள் அளவான பயன்பாட்டுக்காகத் தொடக்க வெளியீடு செய்யப்பட்டு, பிப்ரவரி 13-ஆம் நாள் எல்லோருக்குமாக வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள் முதலே தொழில் நுட்ப உலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரண்டே மாதங்களில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று இதற்கு முன் தொழில்நுட்ப உலகத்தில் எந்த உருவாக்கமும் பெறாத பேராதரவைப் பெற்றது. இதுவே எல்லோருக்கும் இதன் மீதான ஆர்வத்துக்கு காரணம். 100 மில்லியன் பயனர்களைப் பெற டிக் டாக்குக்கு 9 மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால் சாட்ஜிபிடிக்கு இரண்டே மாதங்களில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. அதுதான் அதன் வெற்றி. அதனால்தான் நாம் அது என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. ஏன் எல்லோருமே அது பற்றி ஆர்வமும் அச்சமும் கொண்டு உரையாடுகிறார்கள்? அதன் எதிர்காலம் என்ன? அது நம் எதிர்காலத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை உண்டாக்கும்? யார் யார் வேலைக்கெல்லாம் வேட்டு வைக்கப்போகிறது? யாருடைய வேலையெல்லாம் இதை மீறியும் நிலைத்து நிற்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
எளிய மொழியில் சொல்வதானால் இது ஓர் உரையாடி (chatbot). உரையாடி என்றால் என்ன? உரையாடி என்பது நாம் ஏற்கனவே ஓரளவு பழகிவிட்டதுதான். கடந்த பல ஆண்டுகளில் உரையாடி தொழில்நுட்பம் ஓரளவுக்கு அனைத்து துறைகளிலுமே ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. எடுத்துக்காட்டாக, இணையத்தில் நம்முடைய வங்கிக் கணக்குக்குள் நுழைந்திருக்கும் போது அதில் நமக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால் முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம் அல்லது அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்து நம் சிக்கலைச் சொல்லித் தீர்வு பெறுவோம். அதுவே உரையாடி தொழில்நுட்பம் வந்த பின்பு ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுவது போல நேரலையில் அரட்டை (chat) செய்து நம் கேள்விகளுக்கு விடைபெற்றுக் கொள்ளவும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “என் வங்கிக் கணக்கில் என்னைக் கேட்காமல் 100 ரூபாய் எடுத்துள்ளீர்கள். ஏன்?” என்று கேட்டால், “மன்னிக்கவும். இதைத் திரும்பப் போட்டுவிடுகிறோம்” அல்லது “இது உங்கள் அனுமதியோடுதான் எடுக்கப்பட்டது. நீங்கள் அனுமதியளித்த விவரம் கீழே கொடுக்கிறோம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்” என்று விடையளிக்கும். இந்த மொத்த அரட்டையும் நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
மேலே சொன்ன எடுத்துக்காட்டில் ஒரு வங்கிக் கணக்கை எடுத்துக் கொண்டோம். அதுவே ஒரு சில்லறை விற்பனை வலைத்தளமாக இருந்தால் அவர்கள் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு விடைபெற்றுக் கொள்ளவும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும் அவர்கள் கொடுத்த உரையாடியைப் பயன்படுத்தினோம். எடுத்துக்காட்டாக, “நான் வாங்கிய பொருள் இன்னும் வந்துசேரவில்லை, எப்போது கிடைக்கப்பெறுவேன்?” என்று கேட்டால், “சென்னையில் இருந்து புறப்பட்டுவிட்டது. மதுரையில் உள்ள எங்கள் சேமிப்புக் கிடங்கை அடைந்துவிட்டது. நாளை மதியத்துக்குள் உங்களுக்கு வந்துவிடும்” என்று பதில் சொல்லும். இப்படி எல்லாத் துறைகளிலும் உரையாடி பயன்பட்டுக் கொண்டிருந்தது. அப்படியான இன்னோர் உரையாடிதான் இப்போது வந்திருக்கும் சாட்ஜிபிடியா?
சாட்ஜிபிடி, இந்தக் குறிப்பிட்ட தொழிலுக்கு என்று இல்லாமல் நாம் இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய எந்தக் கேள்விக்கும் விடைபெற்றுத் தரக்கூடிய – நேரடியாக இணையத்தில் விடை பெற முடியாத கேள்விகளுக்கும் கூட அதுவே இணையத்தில் இருக்கும் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்து நமக்கு வேண்டிய விடையைக் கொடுக்கும் ஒரு மிக மேம்பட்ட – வளர்ச்சி அடைந்த தொழில்நுட்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் கணிப்பொறி வந்து, பின்னர் இணையம் வந்தது. அப்போதும் என்னென்ன இணையதளத்தில் என்னென்ன கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளும் வசதி இருக்கவில்லை. குறிப்பிட்ட தளத்தின் முகவரி தெரிந்தால் நீங்கள் போய் வேண்டியதைப் பார்க்கலாம். பின்னர் வந்த கூகுள் போன்ற நிறுவனங்கள் அதை எளிதாக்கின. யார் பெயரைப் போட்டாலும் உலகத்தில் அந்தப் பெயரில் உள்ள – அந்தப் பெயர் போலவே பெயர் கொண்டவர்கள் எல்லோருடைய முகவரியையும் எடுத்துக் கொடுப்பது போல, என்ன கேட்டாலும் அது தொடர்பான சொற்கள் கொண்ட இணையதளங்கள் அனைத்தின் முகவரியையும் கொண்டுவந்து நம் முன் கொட்டின. ஆனாலும் நமக்கு வேண்டிய தகவல் எந்த தளத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை நாம்தான் தேடிக் கண்டுபிடித்தோம்.
அடுத்ததாக, சிரி, அலெக்ஸா போன்ற உரையாடிகள் வந்தன. அவை நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் இருந்து தேடி இருப்பதிலேயே சிறந்த தளம் என அவை நினைக்கும் தளத்திலிருந்து அங்குள்ள பதிலை நமக்குக் கொடுத்தன. இதுவும் ஒரு தளத்தில் இருந்து கொடுக்கப்படும் தகவல்தான். இணையம் முழுக்க இருக்கும் தகவல்களைப் படித்து, அவற்றை உள்வாங்கி, தொகுத்து, நமக்கேற்றபடி ஒரு முழுமையான பதிலைக் கொடுப்பதில்லை. இப்போது வந்திருக்கும் சாட்ஜிபிடி அந்த வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கிறது.
இன்னோர் எடுத்துக்காட்டாக, “இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பமாக இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?” என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது பதிலுக்கு, “மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால் இவர்களுக்கு வாக்களியுங்கள், மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால் இவர்களுக்கு வாக்களியுங்கள், பொருளாதார வளர்ச்சியோ அமைதியோ வேண்டும் என்றால் இவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூட விடை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படியான விடைகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்ட பின்பு அதை எத்தனை நாட்டில் செயல்பட அனுமதிப்பார்கள் என்கிற கேள்வியும் வருகிறது இல்லையா? எனக்கு எதிரான கருத்துக்களை அடக்கி வாசிக்காவிட்டால் உன் சமூக வலைத்தளம் எங்கள் நாட்டில் இருக்கவே முடியாது என்று இன்று பேஸ்புக்கையும் ட்விட்டரையும் மிரட்டி உருட்டிக் கைக்குள் வைத்திருக்கும் நாடுகளில் இந்த தொழில்நுட்பம் எந்த அளவுக்கு கால் ஊன்ற முடியும் என்ற கேள்வியும் வருகிறதுதானே!
சாட்ஜிபிடியை வடிவமைத்திருக்கும் நிறுவனத்தின் பெயர் ஓபன் ஏ ஐ (OpenAI). ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் தொடக்க காலத்தில் டெஸ்லா – ட்விட்டர் புகழ் இலான் மஸ்க்கும் அதில் ஒரு நிறுவனரான இருந்தார். இப்போது தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். தொடங்கிய போது இருந்த கொள்கை இப்போது அவர்களிடம் இல்லை, பணம் பண்ணுவதே குறிக்கோளாக மாறிவிட்டதால் தனக்கு அது பிடிக்கவில்லை என்றிருக்கிறார்.
இதன் எதிர்காலத்தை சரியாகப் புரிந்துகொண்டுவிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் பாய்ந்து குதித்து அதன் பங்குகளை வாங்கி முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. சாட்ஜிபிடியோடு சேர்ந்து செயல்படுவதன் மூலம் மைக்ரோசாப்ட்டின் பிங் (Bing) தேடல் பொறி, கூகுள் தேடலைவிடப் பெரிதளவில் பயன்பாட்டை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நீண்ட காலமாக என்னென்னவோ செய்து சாதிக்க முடியாத இந்த வெற்றியை இப்போது சாதிக்கும் இடத்துக்கு மிக அருகில் வந்துவிட்டது எனப்படுகிறது. இதை கூகுள் எளிதில் அனுமதிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சாட்ஜிபிடி வந்தவுடன் கூகுள் அவசர அவசரமாக அவர்களின் பார்ட் (Bard) உரையாடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் அது சாட்ஜிபிடி அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை. அடுத்த சில மாதங்களில் இந்தப் போர் முற்றலாம். கூகுளிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு கூகுளையே சோலியை முடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ஓபன் ஏ ஐ. ஒரு காலத்தில் ஓபன் ஏ ஐ நிறுவனர்களில் ஒருவரான சாம் அல்ட்மனை கூகுளில் அழைத்துப் பேச வைத்தார்கள். இப்போது அவருடைய தயாரிப்பான சாட்ஜிபிடி கூகுளுக்கே தலைவலி ஆகியிருக்கிறது.
சாட்ஜிபிடிக்கு அடிப்படையாக இருப்பது செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
மனிதனைப் போலவே நுண்ணறிவு படைத்த இயந்திரங்கள் நுண்ணறிவுமிக்க மனிதர்களை விட ஆற்றல் மிக்க பணிகளைச் செய்யும் தொழில்நுட்பம். அதுதான் செயற்கை நுண்ணறிவு. அது ஏற்கனவே அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாகனம் ஓட்டும் போது பார்க்கும் வரைபடம் முதல் அமெரிக்காவில் சில நகரங்களில் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்ட ஓட்டுனரற்ற வாகனம் வரை, ஒரு மருத்துவரைவிடத் துல்லியமாக உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று சொல்லும் ஆற்றல் முதல் மருத்துவர் துணையின்றியே செய்யப்படும் அறுவை சிகிச்சை வரை ஒவ்வொரு துறையிலும் மனிதனுக்குப் பேருதவிகள் பல செய்து வருகிறது. இப்படியே போனால் என்ன ஆகுமோ என்ற பேரச்சத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதில் களத்தில் இறங்கிச் செய்யப்படும் வேலைகள் எதையும் சாட்ஜிபிடி செய்யாது. உரையாடல், பேச்சு, எழுத்து ஆகியவைதான் அதன் பணி. அதற்குள் புகுந்து விளையாடும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.
சாட்ஜிபிடியைப் பொருத்தமட்டில் இப்போதைக்கு அது தரும் விடைகள் பலவற்றில் தகவல் பிழைகள் இருப்பதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கருத்து என்று சொல்லப் புறப்பட்டுவிட்டால், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்பது எல்லாக் காலத்திலும் இருந்தே தீரும். அந்தக் குற்றச்சாட்டைவிட்டு முழுமையாக என்றுமே வெளிவர முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை அதுவே அந்த தொழில்நுட்பத்துக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சிக்கலாக உருவெடுத்தால் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்க்கும் வகையில் அந்த தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்கக்கூடும். ஆனால் தகவல் பிழைகள் கூடிய விரைவில் களையப்பட்டுவிடும். ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை அமைப்பே அப்படி. மனிதர்களை விட வேகமாகத் தான் செய்யும் தவறுகளை உடனடியாகத் திருத்திக்கொண்டு மாற்றி அமைக்கும் வல்லமையோடு கட்டப்பட்டதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு. இதற்குப் பெயர்தான் பொறி கற்றல் (machine learning). நீங்கள் என்ன செய்ய வேண்டும் – அதை எப்படிச் செய்ய வேண்டும் – எந்த தகவலைப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னீர்களோ அதை அப்படியே அதே தகவல்களை மட்டும் வைத்துச் செய்யும் பொறி அல்ல இது. என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டு, எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஓரளவு பயிற்சி கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டால் போதும், என்ன தகவல்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அதுவே தேடி கண்டுபிடித்துக்கொள்ளும், தனக்குத் தானே கூடுதல் பயிற்சியும் அளித்துக்கொள்ளும்.
சாட்ஜிபிடியில் இருக்கும் ஜிபிடி (GPT) என்பது, ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ண்டு டிரான்ஸ்பார்மர் (Generative Pretrained Transformer) என்பதன் சுருக்கம். தமிழில் சொல்வதானால் ‘உருவாக்கும் – முற்பயிற்றுவிக்கப்பட்ட உருமாற்றி’ எனலாம். ஜிபிடியை மட்டும் தனியாக முற்றிலும் தமிழ்ப்படுத்த விரும்புவோர் உ-மு-உ என்றழைக்கலாம். உ-மு-உ உரையாடி! நன்றாகத்தான் இருக்கிறது.
ஜிபிடி என்பது ஒரு மொழி மாதிரிகளின் குடும்பம். மனிதர்களால் பயிற்சி செய்யப்படும் இது போன்ற உரையாடிகள், இரு வகைகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒன்று கண்காணிப்புக்குட்பட்ட கற்றல் (supervised learning), மற்றொன்று வலியுறுத்தப்பட்ட கற்றல் (reinforced learning). கண்காணிப்புக்குட்பட்ட கற்றல் முறையில் இரண்டு மனிதர்கள் ஒருவர் கேள்வி கேட்பவராகவும் இன்னொருவர் உரையாடியின் இடத்தில் இருந்து பதில் சொல்பவராகவும் வேடமேற்று உரையாடுவதை இந்த உரையாடி கண்காணிக்கும். அதன் மூலம் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பதைக் கற்றுக் கொள்ளும். வலியுறுத்தப்பட்ட கற்றல் முறையில், உரையாடி இதற்கு முன் கொடுத்த பதில்களை வரிசைப்படுத்தி, அவற்றுள் எந்தப் பதில் சிறந்தது என்று அதற்கு அறிவுறுத்தப்படும். அப்படிக் கற்றுக்கொண்டதன்படி எதிர்காலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகிக்கொள்ளும். இங்குதான் பெரும் சிக்கல்கள் உருவாகும். நமக்கு வேண்டிய படி பொய் சொல்லவும், புரட்டிப் பேசவும், வெறுப்பைப் பரப்பவும் உரையாடியைப் பழக்கத் தொடங்கிவிட்டால், இப்போதைய வாட்சாப் பல்கலைக்கழகத்தினர் கருத்துருவாக்கத் தளத்தில் எத்தகைய பேருரு எடுத்து என்னவெல்லாம் செய்யத் தொடங்கிவிடுவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இது சாட்ஜிபிடி உருவாகும் காலத்தில் அதை உருவாக்கியவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறை. இது அத்தோடு நின்றுவிடுவதில்லை. நாம் எல்லோரும் இதைப் பயன்படுத்தும் போது நம்முடைய கேள்விகளுக்கு அது கொடுக்கும் பதிலை நாம் சிறப்பு என்றோ சரியில்லை என்றோ மதிப்பிடுவதைப் பொறுத்து அடுத்தடுத்து அது போன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு எப்படிப் பதில் சொல்வது என்பதை நம்மிடம் இருந்தே கற்றுக் கொள்ளும்.
ஒரு மனிதனுக்கு எப்படி அறிவாற்றல் என்பது தொடர்ந்து கொடுக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் வளர்கிறதோ அது போலவே சாட்ஜிபிடிக்கும் கொடுக்கப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே அதன் நுண்ணறிவு வளரும். அதே வேளையில் அதை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் படிமுறை (algorithm) வழியாக ஏற்றப்பட்டிருக்கும். இதில் படிமுறைதான் மூளை போல. கொடுக்கப்படும் தரவுகள் நாம் அன்றாடம் படித்து – பார்த்து – கேட்டுப் பெறும் அறிவைப் போல.
நாம் அதற்கு முன்பு அது கேள்விப்பட்டிராத ஏதொவொன்றைப் பற்றிக் கேள்வி கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அது பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள இணையத்தில் போய் தகவல்களைத் தேடும். நாம் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்த்துக்கொள்ள விரும்பும் அறிவைப் பொறுத்து அவர்களுக்கு வேண்டிய நூல்களை வாங்கிக் கொடுப்பது போல இதை நிர்வகிப்பவர்கள் அதற்கு வேண்டிய தகவல்களையும் தரவுகளையும் அள்ளிக் கொட்டுவார்கள். இணையத்தில் இருக்கும் தரவுகளை அதுவே தேடிப் பெற்றுக்கொள்ளும். இணையத்துக்கு வெளியே இன்னும் விலைமதிப்பற்ற எவ்வளவோ தகவல்கள் இருக்கத்தானே செய்கின்றன. அவையெல்லாம் இதற்கு ஊட்டப்படும். அதை வைத்து அடுத்து அந்த துறைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகிக்கொள்ளும்.
இதில் இருக்கிற பெரும் சிக்கல்களில் ஒன்றாகக் கருதப்படுவது, நாம் கேட்கும் கேள்விகளை வைத்து நம்மைப் பற்றி எவ்வளவு தகவல்களை இந்த நிறுவனம் சேகரிக்கும், அதை எப்படி எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தும், அது நமக்கு எதிராக எப்படி எல்லாம் திரும்பலாம் என்பது போன்ற கேள்விகளே. இப்போது கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களிடம் நம்மைப் பற்றிய அளவில்லாத தகவல்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நமக்கு எதிராக அவை எப்படி எல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பது போன்ற கவலைகள் ஏற்கனவே பேசப்படுபவைதான். இது அதன் அடுத்த கட்டம்.
சாட்ஜிபிடி செய்யும் பணிகளில் பெரிதும் சுவாரசியமானதாக பேசப்படுவது, அது கதை எழுதுகிறது – கட்டுரை எழுதுகிறது – கவிதை எழுதுகிறது என்பதே. அதுபோலவே கணிப்பொறித் துறையில் இருக்கும் பொறியாளர்கள் செய்யும் வேலையைக் கூட அது செய்கிறது, ஒரு கணிப்பொறி நிரலில் இருக்கும் கோளாறுகளை அதுவே சரி செய்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்ந்தால் இவர்களின் வேலை என்ன ஆகும்? ஒரு பதிவுப் பத்திரத்தை அதனிடம் கொடுத்தால், அதில் தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர் நான்கு வாரங்கள் நம்மை அலையவிட்டுச் செய்து முடிக்கும் வேலையை, அவரைவிடப் பல மடங்கு சிறப்பான முறையில் நொடிப் பொழுதில் வாசித்து முடித்து இன்னின்ன கோளாறுகள் இருக்கின்றன என்று துப்பிவிடுமாம். ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒரு உளவியல் மருத்துவரிடம் சென்று பெறும் அறிவுரையை சாட்ஜிபிடியிடமே பெற்றுக் குணமடையலாம் என்று கூடச் சொல்லப்படுகிறது. அப்படியானால் அந்த எழுத்தாளரின் – கவிஞரின் – கணிப்பொறியாளரின் – வழக்கறிஞரின் – மருத்துவரின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது? இதுதான் இப்போது மனித குலத்தை எதிர்நோக்கி இருக்கும் முக்கியமான கேள்வி.
மனிதர்கள் அறிவாளிகளா சாட்ஜிபிடி அறிவாளியா என்று கேட்டால், அதற்கு இரண்டு விதமாகவும் பதில் அளிக்கலாம். சாட்ஜிபிடியிடம் கேட்பது போல என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு அவ்வளவு விரிவாக தரவுகளோடு பதில் சொல்லும் மனிதர் எவரும் இல்லை. அந்த வகையில் சாட்ஜிபிடிதான் மனிதனைவிட அறிவாளி. ஆனால் ஒரு பேரறிவாளி சொல்வது போல் அல்லாமல் சில கேள்விகளுக்கு சாட்ஜிபிடி அளிக்கும் பதில் மிகவும் தவறாகவும் முட்டாள்தனமாகவும் பொருளற்றும் இருக்கவும் செய்கிறது. காலமெல்லாம் இப்படியேதான் இருக்கப் போகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்றைய நிலைப்படி பார்த்தால் மனிதர் அளவுக்கு அறிவாளியாக இல்லை என்றும் ஒத்துக்கொள்ளலாம். இன்னொரு கோணத்தில் பேசினால், மனிதர்களிலும் பேரறிவாளிகள் கூட சில துறைகளில் அறிவற்றவர்கள் போலப் பேசுவதும் இருக்கத்தானே செய்கிறது! கலைத்துறையில் பெரிய ஞானியாக இருக்கும் ஒருவர் அரசியல் பேசும் போது அடி முட்டாள் போலப் பேசுவதும், அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் ஒருவர் பிற துறைகளில் முட்டாள் போலப் பேசுவதும், ஓர் அறிவியலாளர் சமூகவியல் பேசும் போது முட்டாள் போலப் பேசுவதும் அடிக்கடி பார்க்க முடிவதுதான். முட்டாள் போல என்று சொல்ல முடியாது என்றாலும் கூட, எப்பேர்ப்பட்ட அறிஞரும் தான் கேள்விப்பட்ட – தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தனக்குச் சொல்லிக் கொடுத்த நியாயங்களின்படி – நினைவுகளின்படி ஏற்றுக்கொள்ள முடியாத சில நிலைப்பாடுகள் எடுப்பது இயற்கைதானே! அதுபோலவே சாட்ஜிபிடியும் தனக்கு ஊட்டப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் வைத்து சில கருத்துக்களை வெளிப்படுத்தும். அது பைத்தியக்காரத்தனமானதாகவோ ஏற்றுக்கொள்ளத்தகாததாகவோ இருப்பதும் இயற்கையே. அதே வேளையில் சாட்ஜிபிடி அளித்த பல பதில்கள் மனிதர் அளித்த பதிலோ என்று எண்ணும் அளவுக்கு அழகாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மொழிபெயர்ப்பில் சாட்ஜிபிடி ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மொழிவழிக் கல்விக்கு எதிராக காலம் காலமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஆங்கிலத்தில் இருப்பது போல அல்லது வேறு சில உலக மொழிகளில் இருப்பது போல நம் ஊரில் நூல்கள் – அறிவுக் களஞ்சியங்கள் இல்லையே, நாம் எப்படி எல்லாவற்றையும் நம் மொழியில் கற்றுக் கொடுக்க முடியும் என்பதே. இந்தக் கவலைக்கு சாட்ஜிபிடி வெகு விரைவில் முடிவு கட்டிவிடும். ஆங்கிலத்திலும் பிற உலக மொழிகளிலும் இருக்கும் பெரும் பெரும் நூல்களைத் தமிழ் போன்ற மொழிகளில் நிமிடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட்டால் வேறென்ன வேண்டும்! இப்போதைக்கு ஆங்கிலம், ஸ்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் போன்றவற்றில் மட்டும் வெளியாகியுள்ளது என்றாலும், இவ்வளவு அறிவாளியான சாட்ஜிபிடி தமிழ் போன்ற மொழிகளிலும் கூடிய விரைவில் முழுமையாகப் பேசத் தொடங்கிவிடும் என்பதில் ஐயமே வேண்டியதில்லை.
இதை எப்படிப் பயன்படுத்துவது? chat.openai.com என்ற தளத்துக்குப் போய் உள்நுழைந்து வேண்டியதைக் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை அள்ளி வீசத் தொடங்கிவிடும் சாட்ஜிபிடி. இப்போதைக்கு இது ஒரு வலைத்தளமாகவே இருக்கிறது. கணிப்பொறியில் – கைபேசியில் வலைத்தளமாகப் பயன்படுத்தலாம். கைபேசியில் பயன்படுத்தும் செயலியாக இன்னும் வெளிவரவில்லை. தனிமனிதப் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவை எப்போதுமே இலவசமாகவே இருக்கும், நிறுவனங்களும் கூடுதல் வசதிகள் வேண்டும் தனிமனிதர்களும் கட்டணம் செலுத்திக் கூடுதல் வசதிகள் கொண்ட பதிப்பைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதன் வருகை பல வேலைகளுக்கு வேட்டு வைக்கப்போகிறது என்பது உண்மைதான். இன்னும் சில ஆண்டுகளில், “யாவரும் தளத்தில் வாசிப்பவர்களுக்கு ஏற்ற விதத்தில் மூவாயிரம் சொற்களில் சாட்ஜிபிடி பற்றிய ஒரு கட்டுரை கொடு” என்று கேட்டால் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையைவிடப் பற்பல மடங்கு சிறந்த ஒரு கட்டுரையை நொடியில் தூக்கி வீசிவிடும். இப்படி ஒரு தொழில்நுட்பம் வந்துவிட்டபின் நான் ஏன் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கப் போகிறேன்! நீங்கள் ஏன் என்னுடைய கட்டுரையைப் படிக்கப் போகிறீர்கள்! யாவரும் ஏன் நம் இருவரையும் இணைத்து வைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கப் போகிறது! நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேலைகளைச் செய்யப் போய்விடுவோம். அது முற்றிலும் கெடுதலா என்பதே இப்போதைய கேள்வி. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இதன் விளைவாக – உணர்வுக்கு வேலையில்லாத வேலைகள் எல்லாம் (அவை மட்டுமா என்றுதான் தெரியவில்லை!) பொறிகளால் செய்யப்படும் போது, நாம் நமக்குள் இருக்கும் உணர்வுகளைப் பற்றியும் உணர்வோடு வெளிப்படுத்த வேண்டிய பல திறமைகளைப் பற்றியும் கூடுதலான அறிவு பெற்றவர்களாக மாறக்கூடும். அது மனிதகுலத்துக்கு நல்லதுதானே!
***
பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com இது இவருடைய முதல் சிறுகதை.