பதின்மூன்றாம் காதல் தோல்வி
என்னை நேசி என்று சொல்ல அவ்வளவு ஆயாசமாக இருக்கிறது
அவள் நேசிக்கவில்லை என்று உள்ளுணர்வுக்குத் தெரியும்
ஆனாலும் உள்ளம் விடுவதாய்த் தெரியவில்லை
மசமசவெனப் பெய்யும் இந்த மழையிரவில் எதுவும் அத்தனை அமைதியாக இல்லை
முன்னால் முந்திச் செல்லும் எண்ணங்களை முடிந்தவரை பிடித்திழுக்கிறது விழிப்பு
பின்னால் செல்வதையோ தானென்று அறியா மாயக் கணமொன்றில் தவறவிட்டும் விடுகிறது
அவளும் அப்படித்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் என்னைக் கைவிட்டுக் கைவிட்டு குறிப்புணர்த்துணர்த்துகிறாள்
தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்பமுடியுமோ
அவள்
அவ்வளவு சந்திரோதயமா என்றால் இல்லை
அவ்வளவு மாந்தளிர்க்கொழுந்தா என்றால் இல்லை
அவ்வளவு குணச்சித்திரமா என்றால் இல்லை
அவ்வளவு தாழம்பூச்சுகந்தமா என்றால் இல்லை
அப்படியோர் கோமேதகக்கல்லா என்றால் இல்லை
அவ்வளவு கணக்கச்சிதமா என்றால் இல்லவே இல்லை
ஏதோ
ஏதோவொரு சுழிப்புதான் இப்படி மாமாங்கமாய் அலைக்கழிக்கிறது
அது எந்த கணத்தில் தோன்றி எந்த கணத்தில் மறைந்ததென்று சற்றும் நினைவில்லில்லாத ஒரு நட்சத்திரப் பொன்கீற்று
ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது
எந்தத்தடயமும் இல்லாமல் இப்படித்தான் தோன்றி மறைகிறதோ அவ்- இறையம்சம்.
*
பதினான்காம் காதல் தோல்வி
நண்பனின் காதலுக்கு துரோகம் செய்வது புவியில் ஒன்றும் புதிதில்லைதான்
அதற்கு அம்மங்கையும்தானே உடந்தை
உங்களிடம் பிடித்ததே உங்கள் நகைச்சுவை உணர்வுதான் என்று அவள் சொன்னபோது எனக்குப் புரியவில்லை
ஆனாலும் உள்ளார்ந்து ஒரு நப்பாசை இருந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஒரு உணர்ச்சியற்ற கவிதையைப் பகிர்ந்தபோது அதற்கு முத்தக்குறியிட்ட ஸ்மைலி அனுப்பிவிட்டு நான் பார்க்கும்வகையில் போதிய அவகாசம் அளித்து பின் அவள் அதை அழித்தபோதுதான் அது உறுதியானது
கதகதப்பான வெயிலில் துரோகத்தின் நிழல் நெஞ்சில் படர ஆரம்பித்தது
இனங்கான முடியாத நெஞ்சுக்குழித்துடிப்பு (அதற்கு தேவையற்ற அமிலச்சுரப்பே காரணம் என்ற திருநின்றவூர் ஹோமியோபதி மருத்துவரின் கூற்றால் தற்காலிக நிம்மதி)
இப்படியாக வளர்ந்து வளர்ந்து காதல் மிகைக்கற்பனைக்குச் செல்லும் வழியில் ஒரு சிறிய வேகத்தடை
அவளுக்கு ஏன் குற்ற உணர்வே இல்லை என்ற ஆதாரமற்ற கேள்வி
(இந்தக் கேள்வி கடைசிவரை அடங்கவே இல்லை)
உங்கள் காதலில் நிலை என்ன என நண்பனிடம் வினவினேன்
உயிருள்ளவரை உஷா என்றானவன்
ஏசு உயித்தெழுந்த மூன்றாம் நாள் அவள் நாக்கைப் பிடுங்கியெறியும்படி நானூறு கேள்விகள் கேட்டாள்(அத்தனையும் நியாயம்)
மண்ணை முட்டி ஆதவனைப் பார்க்க மெல்ல எழுந்த ஒரு நிலக்கடலைக் கொழுந்தை முளையிலேயே கிள்ளி எறிந்தேன்
இப்படியாக ஒரு கார்த்திகைத்திங்கள் மதியம் இளவெயிலில் ஒரு முக்கோணக்காதல் வேர் தூராகிப்போனது.
*
பதினான்காம் காதல் தோல்வி – 2
உங்களைப் பார்த்தால் ஒரு ப்ரதர் ஃபீலிங் வருது என்றாள் அவள்
அப்போது அவள் என் நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள்
எனக்கும் சிஸ்டர் ஃபீலிங் வர்ற மாதிரிதான் இருக்கு
பற்கள் தெரியாமல் சிரித்தபடி வயிறெரிந்து சொன்னேன்
எங்க ஆஃபீஸ் பாஸ் உங்கள மாதிரியேதான் இருப்பாரு அவர்ட்டயும் இதேதான் சொல்வேன் என்று சொன்னாள்
அவர் நேம் என்ன
குசால்தாஸ்
”ஓ”
நண்பனின் நற்குணங்களை நான் நன்றாக அறிவேனென்பதால்
பழம் நழுவி தயிரில் விழும் நாளுக்காகக் காத்திருந்தேன்
மாறாக
தயிர் திரிந்தது
பழம் நழுவியது
ஏசு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள்
நானும் நண்பனும் அதிர்ச்சியடையும் வகையில்
மேரீட் டூ குசால்தாஸ் என்று ஸ்டேடசை மாற்றி வைத்தாள்.
*
கடைசிக்கு முந்தைய காதல் தோல்வி
எஸ்விசி னாக்கூட என்னவென்று தெரியாதா ஜி எனக்கேட்டுவிட்டு சிரித்தாள்
அவள் மனம்விட்டு சிரிப்பது மொபைலில் தெரிந்தது
தெரியாதே என்று முயற்சிகளற்று புன்னகைத்தபடி சொன்னேன்
எஸ்விசினா சுங்குவார் சத்திரம் அங்கிருந்துதான் பேசுறேன் ஜி என்று சொல்லி விட்டு மீண்டும் பலமாக சிரித்தாள் (இதைக் கேட்டது ஒரு ஆணாக இருந்தால் செருப்பைக்கழற்றி அடித்திருப்பேன்)
சிரித்து முடித்துவிட்டு என் நம்பர் எப்படிக்கிடைத்தது உண்மைய சொல்லுங்க ஜி என்று கேட்டாள்
கடைசி ஒருநம்பர் தப்பா போட்டுட்டேன் சாரி இனி பேச மாட்டேன் என்றேன்
உங்க வாய்ஸ் ரொம்ப மேன்லியா இருக்கு ஜி
நீங்க எந்த ஊர் ஜி
சுங்குவார்சத்திரம் சென்னைலேர்ந்து பக்கம்தானே ஜி
உங்களப்பார்க்கணும்போல இருக்கு ஜி
எப்போ வர்றீங்க ஜி
ஐப்பசி மாத மந்தாரமான காலநிலையை மாற்றி அமைத்தாள்
நான்கு இரவுப்பொழுதுகளும் நான்கு பகல்பொழுதுகளும் காலத்தில் உறைந்தது
அவளைசென்று நேரில் பார்த்துவிடுவது என்ற தீர்க்கமான எண்ணம் எழுந்தது
அடுத்த அழைப்பில் உங்களுக்கு எத்தன வயசு ஜி என்றாள்
முப்பத்து நாளு என்றேன்
பெண்கள்ட்ட வயசு கேட்ககூடாது என்று நான் தயக்கத்திலும் மயக்கத்திலும் உளறிக்கொண்டிருக்கும்போது சட்டென்று எனக்கு ஃபோர்டீன் ஜி வயசுக்குக்கூட வந்துட்டேன் என்றாள்
பதட்டத்தில் மொபைலை ஆஃப் செய்தேன்.
வீட்டிற்கு வெளியே வந்து நிதானமாக நின்றேன்
மயக்கத்திலிருந்து மூளை விழித்தது
மழை.
மழையுடன் மழையாகக் கரைந்தேன்
மெல்ல எனக்குள் குளிர் பரவியது.
நனைந்து நனைந்து சமநிலையை அடைந்தேன்
முற்றத்தில் கட்டியிருந்த தேன்குழவிகள் என்னைத்துரத்த ஆரம்பித்தன.
குற்றவுணர்வின் கொடுக்களால் நிறைந்தேன் நான்.
***
சச்சின் – புதுக்கோட்டையை சேர்ந்தவர். திரைத்துறையில் பணியாற்றுகிறார். சென்னையில் வசிக்கிறார். கவிதைகள், சிறுகதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார் எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் : sivamegalaivan@gmail.com

