வழக்கமான இதழ்களுக்கும் சிறப்பிதழ்களுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. வருகின்றவற்றில் தேர்வு செய்யும் முறை கிடையாது, அது முழுக்க முழுக்க கேட்டுப்பெற வேண்டும். அதுவும் தமிழ்புலத்தில் மிக பலஹீமான துறைகளில் ஒன்றான இதில், ஒரு குறிப்பிடத்தகுந்த வேலை செய்ய வேண்டுமென்றால் அது அசாதாரணமானது.
இந்த இதழ் இரு பாகங்களாக வெளிவருகிறது, அப்படிக் கொண்டு வந்தால் மட்டுமே இந்த இதழ் சாத்தியம் எனத் தோன்றியது. இதற்கு முன்னரே மாற்றுவெளி உள்ளிட்ட வேறு சில இதழ்கள் இந்த வடிவம் பற்றி பங்களித்து இருந்தாலும். இந்த இதழில் சிறப்பு பெரும்பாலான நபர்கள் கிராஃபிக் நாவல் மீதான அதிகப் பரீட்சயம் அல்லது இதற்கு முன்னர் வாசித்தேயிராதவர்கள். ஆனால் அவர்கள் எழுத்துத்துறையில் இலக்கியத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் காமிக்ஸ்/கிராஃபிக் நாவல் வடிவம் குறித்து சில விவாதங்கள் செய்து, சில முடிவுகள் எடுத்து, முக்கியமாக புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி, கட்டுரை வழங்கி, அதை மீண்டும் மேம்படுத்தி என நிறையவே சிரமப்பட்டார்கள். அதே சமயம், மிக முக்கியமாகப் பங்களிக்க வேண்டியவர்கள் சிலரது சூழல் காரணமாக இன்னமும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கலாம் என்கிற ஆதங்கமும் வராமலில்லை. அதனால் தான் இந்த இதழ் வெளியாகி அடுத்த பாகத்தில் எழுதுவதற்கான தூண்டுகோலாக அமையும். அந்தத் தூண்டலை வாசகர்களாகிய உங்கள் கருத்துகள் செழுமை சேர்க்கும்.
அடுத்த பாகம் இன்னும் மிகச் சிறப்பாக ஆளுமைகளின் நேர்காணலோடும், கட்டுரைகளோடும் வெளிவரும் என நம்பிக்கை தெரிவிக்கிறேன். இந்த இதழுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த இதழின் பொறுப்பாசிரியர் : வேதநாயக் அவர்களைப் பாராட்டியபடி விடைபெறுகிறேன்.
(இந்த இதழ் – புத்தகமாகும் வாய்ப்பை உங்கள் ஆதரவைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க உதவும்)
குலாம் முகம்மது சேக் (Gulam Mohammed Sheikh)என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும், இதழாளரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீமற்றும் 2014 இல் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் இருக்கும் இவர், இந்தியாவின் முக்கிய ஓவிய ஆளுமைகளில் ஒருவர். சில காலம் வதோதராவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். விவான் சுந்தரத்தின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். இவரது படைப்புகள் உலகின் பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியக் கலை வரலாற்றின் முக்கிய கலை நிகழ்வுகளான க்ரூப் 1890 & ப்ளேஸ் ஃபார் ப்யுப்பிள் இரண்டிலும் அங்கம் வகித்தவர். தனது சகாவும் ஓவியருமான பூபன் காகருடன் சேர்ந்து கலை இலக்கிய இதழான “விருச்சிக்”எனும் இதழை நடத்தியவர்.
இந்த சிறப்பிதழ் பற்றி நாடக இயக்குனரும், கலை விமர்சகருமான திரு.ப்ரஸன்னா ராமசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க GM ஷேக் இந்தக் கட்டுரையை (அஞ்சலிக் குறிப்பை அனுப்பி வைத்தார்).
என் அன்புக்குரிய விவான்..
உன்னை இடுகாட்டில் வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியபோதே உணர்ந்தேன், நீ எங்களை விட்டுச் சென்றுவிடவில்லை என்று. ஐரோப்பாவில் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது எதிர்பாரா இடங்களிலெல்லாம் என் கண்களுக்கு நீ தோன்றிக்கொண்டிருந்தாய். 1961 முதலே உன்னுடைய இருப்பு நீக்கமற்று இருந்ததால் இப்போது நீ இங்கு இல்லை என்பதை நான் நம்ப மறுக்கிறேன்.
நீ படிப்பதற்காக பரோடா வந்தபோதுதான் உன்னை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் நான் கற்பிக்கத் தொடங்கியிருந்தேன். உனக்கு 18 வயது எனக்கு 24 – பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அலெய்ன் டிலானைப் போலவோ அல்லது நூரியேவ் போலவோ தோற்றம் கொண்ட ஒரு துள்ளலான இளைஞனாக உன்னை நினைவுகூர்கிறேன். நுண்கலை பயிலும் பெண்கள் கூட்டத்தினரால் உன் மீதிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும்படி நீ என்னமாய் சத்தமெழுப்பி உன் இருசக்கர வாகனமான ஃபெண்டாபுலஸை ஓட்டிச் செல்வாய் – பரோடாவிலேயே அவ்வகையில் அதுதான் முதல் வண்டி. ஆமாம்… பின்னிருக்கையில் லா போஹிமின் பெண்ணான ஆஷா புத்லியுடன்தான்.
நீ ஜாக்ஸன் பொல்லாக்கைப் போல கருப்பு திரவ ‘ப்ளாக் ஜப்பான்’ பெயிண்டை ஊற்றி ஓவியக் கூடத்தில் தீவிரமாகத் தீட்டிக்கொண்டிருந்தது என் நினைவிற்கு வருகிறது. பிற்காலத்தில் உன் படைப்புகளில் என்ஜின் ஆயிலை உபயோகப்படுத்துவாய் என்பதற்கான முன்னறிவிப்பா அது? அத்தனை திருவிழாக்களுக்கும் விடாமல் பயணித்துச் சென்ற நாட்கள் அவை. தார்நேத்தாரில் தரையில் படுத்து உறங்கினோம்.
பின்பு நான் லண்டனில் இருந்தபோது நீயும் பூபேனும் படைத்த துடுக்குத்தனமான பாலியல் உருவப்படங்களால் அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்த கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் ஊர் திரும்பியபோது நீ ‘ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ க்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். அங்கே லண்டனில் அற்புதமான தனிப்பெரும் கலைஞனான மேதை ரான் கிடாஜின் நட்பைப் பெற்றாய். 69ம் ஆண்டின் கோடையில் நீ தங்கியிருந்த கம்யூனிற்கு வந்தபோது, உன்னை ஆட்கொண்டிருந்த ‘அது’ உனக்குள் ஒரு சலசலப்பை உண்டாக்கத் தொடங்கிவிட்டது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நீயும் இடதுசாரியாக நகர்ந்து 1968-69 களில் தாரிக் அலி போன்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பாரீஸையும் லண்டனையும் புரட்டிப் போட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டாய். அப்போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நீ சிறிது காலம் சிறையில் இருந்ததாக அப்போது அங்கிருந்த என் பால்ய நண்பர் பிராஃபுல் படேல் என்னிடம் தெரிவித்தார்.
Collections of GM Sheikh – Asia art Archieve (விவான் இல்லத்தில் – பூபன் காகர், G.M.ஷேக் ஆகியோருடன்)
பிறகு நீ இந்தியா திரும்பியதும் லலித் கலா அகாடமிக்கு எதிராக இந்தியக் கலைஞர்கள் சமூகம் கிளர்ந்தெழுந்தபோது நீ முழுதாகவே போராட்டத்தில் குதித்துவிட்டாய். Triennale புறக்கணிப்பிலும் பங்குகொண்டாய். அம்ரிதா ஷேர்-கில் படைப்புகளுக்கென ஒரு கண்காட்சியை நீ முன்மொழிந்தபோதுதான் நம்முடைய நட்பு மேலும் மலர்ந்தது. என்ன ஒரு அற்புதமான நிகழ்ச்சி அது! டெல்லி சாந்திநிகேதனில் உன் வீட்டில் இப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான ஓவியங்கள் இதற்கு முன் ரவீந்திர பவனின் சுவர்களை அலங்கரித்திருந்தன. Marg அம்ரிதாவிற்கென ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தது.
நீ இடதுசாரி இயக்கத்தில் இணைந்த உடன் ஏன் ஓவியங்கள் படைப்பதை நிறுத்திவிட்டாய் என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். ஆனால் விரைவிலேயே பாப்லோ நெரூடாவின் நீண்ட கவிதையான ‘The heights of Machchu Pichchu’ வை காட்சிகளாகப் படைத்த அற்புதமான ஓவியத் தொடரின் மூலமாக நீ மீண்டும் வெளிப்பட்டாய். இவற்றால் உந்தப்பட்டு நானும் கமலேஷும் உளவெழுச்சியில் ஒரு திட்டத்தை உருவாக்கினோம் – இந்த ஓவியங்களுடன் இக்கவிதையை பல்மொழியாக்கத்தில் ஒரு பன்னாட்டுப் பதிப்பை வெளியிடுவதுதான் அது. துரதிருஷ்டவசமாக அதை நிறைவேற்ற முடியவில்லை.
ஓவியங்கள் அதிக பார்வையாளர்களை அடையச் செய்யும் வகையில் 1973ல் பரோடாவில் ஒரு கிராஃபிக் பட்டறையை நடத்தும் யோசனையை ஆர்வத்துடன் முன்வைத்தாய். பல்வேறு இடங்களில் அக்கண்காட்சியை ஏதோ கட்டளைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவன் போல நீ நிகழ்த்தியது எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கலைஞர்கள் தீவுகளைப் போலத் தனித்திருந்தனர். அவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக ஒரு கூட்டுக் கண்காட்சியை நீ முன்மொழிந்தாய். அது 1974, பத்து கலைஞர்கள் ஒன்றுகூடினர். என் ஞாபகம் சரியென்றால் ஒரு சர்வாதிகாரியின் பேயுருவைப் போல இந்திரா காந்தியின் உயர்ந்து நிற்கும் உருவப்படம் ஒன்றைக் காட்சிப்படுத்தினாய். பெரும் பாதிப்பை உருவாக்கிய படம் அது. அதன் பிறகு வந்த நாட்களில்தான் பூபேன் (காகர்), ஜோகென் (சொளத்ரி), சுதிர் (பட்வர்தன்), நளினி (மலானி), கிவ் (படேல்) அவர்களோடு நீயும் நானும் இணைந்து 1978ல் “டிரைனாலேவை நிராகரித்த அறுவர்” என்ற ஒரு கண்காட்சியை Triennale விற்கு எதிரான போராட்டமாக நடத்தினோம்.
விவானின் கையெழுத்து..
அதன்பிறகு எண்ணற்ற நாட்கள் அடிக்கடி பரோடாவில் உள்ள என்னுடைய இல்லத்திலோ அல்லது டெல்லியில் உன் வீட்டிலோ மிக நீண்ட ஆழமான தொடர் உரையாடல்களில் ஈடுபட்டோம். சில சமயம் கலையில் அரசியலின் பங்கு என்ன என்று காரசாரமான விவாதங்களைச் செய்தோம். அரசியல் சார்பற்றிருப்பதும்கூட ஒரு அரசியல் செயல்பாடுதான் என்று விவாதித்து எங்களில் பலரை ஒப்புக்கொள்ள வைத்தாயே. …இருப்பினும் பூபேனின் வீட்டில் நாம் ஆறு பேரும் சந்தித்த நாட்களில் – இல்லை… ஏழு. கீதாவையும் சேர்த்து – நீ, நான், பூபேன், நளினி, ஜோகென், சுதிர் எல்லோரும் இணைந்து நம் கனவுத் திட்டமென ஒரு கண்காட்சிக்கான அறிவிப்பை 1979ல் வெளியிட்டோம் – ‘Place for People’. நமது பணியில் நேரடியாகத் தொடர்பு இல்லையென்றாலும் தோழமையின் அடையாளமாக, கட்டுரை எழுதித் தந்து நம் தொகுப்பிற்குப் பங்களித்த கீதாவை ஏழாவது நபராக இணைத்துக்கொண்டோம். இந்தக் கண்காட்சிதான் ஒருவரையொருவர் பிரிய முடியாத பிணைப்பை நமக்குள் உண்டாக்கியது. நம்முடைய தனித்த எதிர்கால பயணங்களைத் திட்டமிடுவதற்கு இந்தக் கண்காட்சிதான் திருப்புமுனையாக அமைந்தது. நான் பரோடாவிலேயே தங்கிவிட்டேன், நீ உன்னுடைய எதிர்காலப் பணிகளைக் குறித்தும் ‘Journal of Arts & Ideas’ குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தாய்.
ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு பிறகான நாட்களில் மையையும் என்ஜின் ஆயிலையும் வைத்து நீ உருவாக்கிய படைப்புகளும் அற்புதமான ஓவியங்களும் எங்களை மதிமயக்கச் செய்தன. ஒருவேளை உன் உள்ளுணர்வாக இருக்கலாம்… அல்லது உனக்கு எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டிருக்கலாம், நீ ஓவியங்களையும் வண்ணங்களையும் மொத்தமாக மூடி வைத்துவிட்டு பலரும் பயணிக்காத ‘நிறுவல்கள்’ உருவாக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாய். ஷேர்-கில்லின் ஆவணங்களைக் கொண்டு உருவாக்கிய பல்லூடக நிறுவல் இதை இயல்பிற்கு மாறான உணர்ச்சிகரத்துடன் எங்களுக்கு அறிவித்தது. உன் மரபுத்தொடர்சியை, தன் வரலாற்றை, வாழ்விற்கு மிக அணுக்கமான ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட நிறுவல், புகழ்மிகுந்த உன் தாத்தா உம்ராவ் சிங் ஷேர்-கில்லின் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்படப் புகைப்படங்களால் மிக முக்கியமானதாக மாறியது. தனிப்பட்ட நினைவலைகளை நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தின் உரையாடல்களாகக் கற்பனை செய்து பார்ப்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அனேகமாக அப்போதுதான் நீ பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணங்களைக் கைக்கொண்டிருப்பாய்: பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகான மும்பை கலவரங்களின் வகுப்புவாதிகளைக் குற்றம்சாட்டும் விதமாக மிகப்பெரிய நினைவிடம் ஒன்றை நிறுவினாய். அப்போது உன்னுடைய குரல் மேலும் மேலும் வலுக்க வேண்டும் என்றும் அடுத்தடுத்த படைப்புகளில் மிக வலிமையாக வெளிப்பட வேண்டும் என்றும் உன் மனம் ஓயாத ஆற்றலுடன் அணையாத் தீயில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
நீ கொல்கத்தாவில் பல மாதங்கள் தங்கி, காலனியாதிக்கத்தின் மாபெரும் சின்னமான விக்டோரியா மெமோரியல் ஹாலையே புரட்டிப் போடும் வகையில் அதனுள்ளேயே நீ உருவாக்கிய உன் லட்சிய நிறுவல்தான் என்னைப் பொறுத்தவரையில் உன் திறமைக்கான தலைசிறந்த சான்று. அதன் பிறகு நீ எத்தனை எத்தனை திகைப்பூட்டும் நிறுவல்களுடன் வெளிப்பட்டாய். அத்தனையும் புதிய பாதையின் மீது ஒளி பாய்ச்சி சென்றன. சஃப்தார் (ஹாஷ்மி) படுகொலை செய்யப்பட்ட பிறகு மற்ற கலைஞர்களுடன் அணிவகுத்துச் சென்று SAHMAT என்ற குழுவை நிறுவினாய். அதற்கு நீ தலைமை தாங்கினாய், முன்னெடுத்துச் சென்றாய், கலைஞர்கள் கூட்டத்தினை ஒன்றுதிரட்டி பன்முக கலாச்சார மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாய்.
‘அறநெறிக் காவலர்களுக்கு’ எதிரான மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நீ பரோடா வந்தது நினைவிருக்கிறது. பிரம்மாண்டமான ஓவியங்களில் மூழ்கடித்து அந்த மாணவர்களின் மனங்களை எப்படி தீ பற்றச் செய்தாய்! அரசியல் எதிர்ப்புச் செயலாக அவர்களைக் கொண்டே அந்த ஓவியங்களை அழிக்கவும் செய்தாய். கொச்சி-முசிரிஸ் பின்னாலே வில் பழங்கால முசிரி நகரின் தோற்றமும் வெள்ளத்தில் மூழ்கிய பின் அதன் அழிவையும் பேரளவு புகைப்படங்களாகவும் காணொளிக்காட்சிகளாகவும் நீ நிறுவியது நினைவில் இருக்கிறது.
நீ ஓயாமல் தொடர்ந்து உருவாக்கிய படைப்புகளின், புகைப்படங்களின், காணொளிகளின் எண்ணிக்கையை வைத்திருப்பது மிகச் சிரமம்… ‘காகவாகா’ என்ற படைப்பில் ஃபேஷன் துறையைப் பகடி செய்திருந்தாய் – உன் ஒவ்வொரு படைப்பும் உனக்கும் சமகால இந்தியக் கலைக்கும் புதியதாகவே இருந்தன. ஒவ்வொரு நாளும் நாம் ஒன்றாக, நண்பர்களாக, தோள் சேர்ந்த தோழர்களாக, ஒருங்கிணைந்த படைப்புகளில் கரம் கோர்த்தவர்களாக, தனிச்சந்திப்புகளில் மாறிவரும் உலகப் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டவர்களாக ஆனோம் – ஆனாலும் இடைவிடாது அதீத ஆர்வத்துடன் கலை உருவாக்கங்களில் ஈடுபட்டோம். நாம் உரையாடினோம், விவாதித்தோம், ஒன்றுபட்டோம், மாறுபட்டோம் ஆனால் ஒருபோதும் பிரிந்ததில்லை. நாம் ஒன்றாக உண்டோம், அருந்தினோம், ஒன்றாகவே சிரித்து மகிழ்ந்திருந்தோம்!
அந்நாட்களெல்லாம் இப்போது எங்கே போயின, என் பிரியத்திற்குரிய விவான்!
-குலாம் முகம்மது ஷேக்
***
நரேன் – ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். சமீபத்தில் கவனம் பெற்ற இவரது மொழிபெயர்ப்பில் வெளியான சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” மின்னஞ்சல்: Narendiran.m@gmail.com
வழக்கமான ஃபார்முலா இணைய இதழ் என்று நிறையவே சலிப்பும் சலசலப்பும் சமூக ஊடகத்தில் வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது, நல்ல படைப்புகள் தாண்டி விமர்சனம், நேர்காணல் , சிறப்பிதழ்கள் என்று கொண்டுவந்தால் மட்டுமே அடுத்தடுத்த இதழ்களுக்கான வேலைகளைச் செய்யும் ஆர்வமும் ஊக்கமும் உடன்வரும்.
புத்தக வணிகத்தின் மர்யனா ட்ரெஞ்ச் இதுதான் என நினைத்துவிட்டால் இதுவும் ஆறுதலே இதற்கு மேல் ஆழமில்லை. அப்படியான ஆறுதலான பொழுதில்தான். இதழ் குறித்து இன்னும் தீவிரத்தன்மை அடையவேண்டிய அம்சங்கள் குறித்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். இந்த இதழில் கட்டுரை தந்துள்ள குலாம் ஷேக் அவர்கள் நடத்திய இதழ் வெறும் எட்டு பக்கங்களில் கூட வெளிவந்திருக்கிறது. மீட்சியை விட தமிழில் எந்த இதழ் காத்திரமாக வந்திருக்கும். அதன் பக்க அளவு 32 தானே. ஆக எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை, அதே சமயம் புதியவர்கள் & இளையோர்களின் பங்களிப்பே மின்னிதழின் சிறப்பாகவும் இருக்க வேண்டும்.
இந்த இதழ் அண்மையில் (மார்ச் 29,23) காலஞ்சென்ற மூத்த ஓவியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் விவான் சுந்தரம் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.
விவான் சுந்தரத்திற்கு தமிழில் எதற்கு மின்னிதழ் என்பதை ஒரு தனிக்கட்டுரையாகப் பதிவிட்டிருப்பதால் அதை இங்கே விவாதிக்க வேண்டாம். இந்த இதழ் குறித்துத் திட்டமிடும்போது ஓரளவிற்கு கட்டுரைகள் வாங்க முடியும் என்று நினைத்து ஏமாந்துவிட்டோம். ஆனாலும் முற்றிலும் எதிர்பாராத விதமாக விவான் சுந்தரத்திற்கே ஆசிரியராக இருந்த மூத்த ஓவிய ஆளுமை, கவிஞர், பத்திரிக்கையாளர், கலை விமர்சகர் குலாம் முகம்மது ஷேக் அவர்கள் இந்த இதழ் குறித்து அறிந்ததும், தாமாகவே தன் சகாவுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி வைத்தார். இது இத்தனை நாட்கள் இதழ் வேலையில் இருந்த எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தாற் போன்ற உணர்வு.
எதற்காக தமிழ்ப்புலத்தில் சம்பந்தமில்லாத ஒருவருக்கு இத்தனைப் பிரயத்தனம் என்று என்னிடம் அக்கறையோடு கேட்டுக்கொண்டவருக்கு நான் சொல்லாத பதில்தான் இந்த அங்கீகாரம். நமது எண்ணம் எந்த உள்நோக்கமுமற்று செயல்வடிவம் பெறும்போது இப்படியான அந்தர நதியின் நீரோட்டம் கால்களுக்குப் புலனாகும். நமது பாதை சரியானதே என்று காண்பிக்கும்.
அடுத்த இதழ் வழமையான படைப்புகளோடு கிராஃபிக் நாவல் சிறப்பிதழாக வெளிவரும். தமிழ் சூழலில் பொம்மைப் படங்களென்றும் குழந்தைகளுக்கான பண்டம் என்று மட்டுமே பொதுபுத்தியில் ஊறிப் போய்விட்ட காமிக்ஸ் & கிராஃபிக் நாவல்கள் பற்றி தீவிரமாக அலசுகின்ற, முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இதழாக அது அமையும்.
இந்த இதழுக்கு மெருகூட்டும் வகையில் நண்பரும் ஓவியருமான சீராளனின் விவரணப்படங்கள் கதைகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இதற்காக சீராளன் அவர்கள் மெனக்கெட்ட விதம் குறித்தும் அறிவேன். மொழிபெயர்ப்புக் கதைக்கு அவர் தந்திருந்த சித்திரம் அவரது ஓவிய மொழியையே மாற்றியதாகத் தோன்றியது. அவரோடும் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த சராய் (சிஎஸ்டிஎஸ்) (CSDS) என்ற ஊடக ஆய்வுத் திட்டத்தின் எழுத்தாளரும் ஆராய்ச்சி உதவியாளாருமானவர். நேர்காணல் செய்யப்பட்ட ஆண்டு – மே 2019.
—-
நான் விவான் சுந்தரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவர் 2018-இல் முன்சென் haus der kunst-இன் சிதைவுகள் (house of art -DISJUNCTURES) என்ற அவரது ஆய்வுக் கண்காட்சியின் அட்டவணையை வெளியே எடுத்து, அதில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசளித்தார். பல ஊடகங்களிலும் காலகட்டங்களிலும் பாவும் அவரது படைப்புகளின் தன்மைக்கு அந்தத் தலைப்பு பொருந்துகிறது. அவரின் இந்தச் சைகை(gestures), இந்தியக் கலைக் களத்தில் ஐம்பது ஆண்டுகளாக அவரது செல்வாக்கை நிலைநிறுத்த உதவிய பெருந்தன்மை, உற்சாகம், பெருமை ஆகிய அனைத்துப் பண்புகளையும் கொண்ட அந்த மனிதருக்குப் பொருந்துகிறது.
75 வயதிலும் (2019*) சுந்தரம் ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். அவரது அலுவலகத்தில் அமர்ந்து, அவரது செயல்பாடுகள் அனைத்தையும் இணைக்கும் ஒற்றைத் தத்துவ இழை என்று ஏதேனும் இருக்கிறதா என்று விவாதிக்கிறோம். அவர், தான் எப்பொழுதும் தனக்கு வெளியே நடக்கும் ஏதோவொன்றிற்கு – ஒரு குறிப்பிட்ட நெருக்கடிக்குப் பதிலளிப்பதாக மறுப்புரைக்கிறார். ஆனாலும் அவர் தன் சொந்த வாழ்விலிருந்து எடுத்துக்கொண்டதும் நிறைய இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது தலைமைத் தேர்தல் ஆணையரின் மகனான சுந்தரம் விடுதலைக்குப் பிந்தைய தொடக்க கால ஆண்டுகளின் தாராண்மைவாதம் (liberalism), அனைத்துலகியம் (internationalism) ஆகியவற்றால் போதிக்கப்பட்ட ஒரு மேட்டுக்குடிச் (அவர் ‘காலனித்துவ’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) சூழலில் வளர்ந்தார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவரான அம்ரிதா ஷெர்-கில் சுந்தரத்தின் பெரியம்மா. அவரது தாத்தா உம்ராவ் சிங் ஷெர்-கில்- ஒரு சீக்கிய நில உரிமையாளர், தொடக்க காலப் புகைப்படக் கலைஞர். சுந்தரம் இந்த மரபைப் பின்பற்றும் வகையில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களிடையே கற்பனையான தொடர்புகளை – அதுவும் பெரும்பாலும் பாலியல் பிணைப்புகளை – உருவாக்கும் ஓவியங்கள், நிறுவல்கள் (installations), புகைப்படத்தொகுப்பு (photomontage) ஆகியவை மூலம் தொடர்ந்தார். அவரது குடும்பத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க உறுப்பினர், கலை விமர்சகரும் வரலாற்றாசிரியருமான அவருடைய மனைவி கீதா கபூர். இவர் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்தியக் கலையின் விமர்சன ஆய்வை முறைமைப்படுத்திய – ஒன்றுதிரட்டிய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர். அவரின் பெரியம்மாவையும் தாத்தாவையும் போலல்லாமல், மனைவி கபூர் தன் கணவரின் படைப்புகளில் சட்டக ஓவியம் (EASEL PAINTING) (1989-1990) எனும் ஒன்றில் மட்டுமே தோன்றுகிறார். ஒரு புத்தகத்தின் கடைசி பக்கங்களில் வைக்கப்படும் படங்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருப்பார். இப்போது அந்தப் படம் எனக்குப் பரிச்சயமானதாகி விட்டது. நான் அழைத்த இரண்டு முறையும் காலை உணவு மேசையில் அவர் (கீதா கபூர்) வாசிப்பதைக் கண்டேன்.
பரோடாவிலும் லண்டனிலும் படித்த சுந்தரத்தின் தொடக்ககாலப் படைப்புகள், மக்கள் கலை (பாப்) மற்றும் 1960-களின் பிற்பகுதி எதிர்பண்பாட்டு யுக தாக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. 1970களில், அரூபத்தின் (abstraction) ஆதிக்கம் நிறைந்திருந்த நவீன இந்திய நியதிக்குள் உருவ ஓவியத்தைக் கொண்டு வந்த கலைஞர்களின் குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். 1990-களின் முற்பகுதி இந்தியாவில் ஒரு கொந்தளிப்பான காலமாக இருந்தது – பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது, ஊடகப்புலம் மாறிக்கொண்டிருந்தது, வன்முறை தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தது. 1992-ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் வடக்கு நகரமான அயோத்தியில் 16-ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை வலதுசாரி இந்துக் கும்பல் இடித்தது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் இரண்டு மாதங்கள் வரை முஸ்லிம் எதிர்ப்புக் கலவரத்தைத் தூண்டியது. அங்கு தீவிரமடைந்த மிருகத்தனம் மறைமுகமாக அரசின் ஆதரவோடு நடந்ததாகப் பரவலாக நம்பப்படும் 1993 மும்பை கலவரத்திற்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வுகளையும் அவை நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களையும் தொடர்ந்து, இந்த அரசியல் குழப்பங்களுக்குப் பதிலளிக்க விரும்பிய சுந்தரம், பல்லூடக நிறுவல் (multimedia installation) என்ற கலை வடிவத்தின் பக்கம் திரும்பினார்.
கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தில் (Kiran Nadar Museum of Art) (KNMA) சுந்தரத்தின் படைப்புகளைப் பின்னோக்கும் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதன் தலைப்பான, “உள்ளே கால்வையுங்கள், இனி நீங்கள் அந்நியர் அல்லர்” (STEP INSIDE AND YOU ARE NO LONGER A STRANGER), தன் பணிகளைப் பற்றித் திறந்து பேச விரும்பும் ஒரு கலைஞருக்குப் பொருத்தமானது. இரண்டு நீண்ட உரையாடல்களின் வழியே, அவர் தனது ஐம்பதாண்டு கால வாழ்க்கையை விரித்துப் போட்டார்.
கே: தொடக்கத்தில் ஓவியராகப் பயிற்சி பெற்றுவிட்டு, 1990-களில் அறைகளையும் அரங்குகளையும் நிரப்பும் கலைப்படைப்புகளைத் தயாரிக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சொல்ல வேண்டியது ‘சட்டகத்துக்கு வெளியே செல்ல வேண்டும்’ என்று உங்களை நம்பவைத்தது எது?
ப: என் நிறுவல் பணியின் முதல் எடுத்துக்காட்டு இயந்திர எண்ணெய் (ENGINE OIL) தொடர் (1991), இது எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் தாக்குதலைக் குறிப்பிடுவது. இதற்குமுன் நெடிய இரவு (LONG NIGHT) (1988) என்ற (கரி) charcoal ஓவியங்கள் வரைந்தேன், இது ஆஸ்விட்சில் உள்ள பெரிய கான்கிரீட் தூண்களையும் முட்கம்பிகளையும் குறிப்பது. வளைகுடாப் போர் வான்வழி நடத்தப்பட்டது, அந்தப் போரின் இந்த வான்வழிக் கூறுதான் என்னைச் சட்டத்தைக் கழற்றி வீசத் தள்ளியது. 100,000 உழிஞைத்தாக்குதல்களை அணுகுதல் (APPROACHING 100,000 SORTIES) (1991) என்ற படைப்பில், குண்டுவெடிப்புக்கு நடுவில் இருக்கும் நிலப்பரப்பின் வரைபடம் சுவரில் இருந்து, எரிந்த இயந்திர எண்ணெயின் தட்டு உள்ள தரைக்கு நீளும்.
கே: இயந்திர எண்ணெய் (ENGINE OIL) தொடர், ஓவியத்தனமல்லாத தொலைவுக்காட்சியாக (tele-visual) ஒருவிதமான தட்டைத்தன்மை கொண்டுள்ளது. இது முதல் வளைகுடாப் போரின் அழகியல் பதிவேட்டின் ஒரு பிரதிபலிப்பாக எனக்குத் தோன்றுகிறது – முதல்முறையாக அவ்வளவு பெரிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. திரைக்கும் உங்களுக்குமான தொடர்புதான் என்ன?
ப: திரை என் பயிற்சிக்குத் தகவலளித்தது உண்மைதான் – ஆனால் தொலைக்காட்சியை விடத் திரைப்படம் மூலம்தான் அதிகம் என்பேன். அந்தப் போர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்பது சுவாரசியமான ஒன்றுதான், ஆனால் வரலாற்றாசிரியர் சலோனி மாத்தூர் இயந்திர எண்ணெய் (ENGINE OIL) பற்றிய ART & EMPIRE: ON OIL, ANTIQUITIES & THE WAR IN IRAQ, 2008 என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டபடி, 1990-களின் இந்தியாவில், தொலைக்காட்சியையும் காணொளியையும் அப்போதுதான் கண்டறியத் தொடங்கியிருந்தோம், எனவே அது என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. அது மேற்கில் அவர்களின் அன்றாட பண்பாட்டில் ஒரு பகுதியாக இருந்ததால் அங்கு நிறைய பேர் தொலைக்காட்சி அழகியலைச் சென்றடைந்திருந்தார்கள். அப்படியிருக்க நான் அந்த நேரத்திற்கு முற்றிலும் முரண்பட்ட பொருட்களான கரித்துண்டையும் இயந்திர எண்ணெயையும் பயன்படுத்தத் தொடங்கியதை மாத்தூர் சுட்டியிருப்பார்.
1960-களின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் என் மாணவப் பருவத்தில், திரைப்படத் தயாரிப்பாளர் தோரோல்ட் டிக்கின்சன், ஸ்லேட் பள்ளியின் முதல்வரும் யூஸ்டன் சாலை பள்ளியின் யதார்த்த ஓவியருமான சர் வில்லியம் கோல்ட் ஸ்ட்ரீம் ஆகியோர் ஒரு திரைப்படப் பாடத்தைத் தொடங்கினர். ஓர் ஆண்டு முழுவதும் நேச நாடுகளாலும் அச்சு நாடுகளாலும் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களையும் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்ட பிற படங்களையும் பார்த்தேன். நான் அதில் திணறிப் போனேன், ஏனென்றால் இந்தியாவில் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் ஈடுபாடு பற்றிய பண்பாட்டு நினைவுகள் குறைவாகவே இருந்தன. அதே வேளையில், ஐரோப்பியர்கள் வெறிகொண்டு அதனுடனேயே வாழ்கின்றனர்.
ஸ்லேட்டில் நான் பார்த்த பலவற்றை உள்வாங்கிக் கொண்டேன் – இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஆஸ்விட்சுக்குச் சென்றபோது, வதை முகாம்களின் விடுதலையைப் பற்றிய ஆலன் ரெஸ்னாய்ஸின் இரவும் மூடுபனியும் (NIGHT AND FOG) (1956) ஆவணப்படத்தின் மீள்நினைவுகளைக் காண முடிந்தது. அந்தப் படங்களைப் பார்ப்பது எனக்கு முழு உலகத்தையும் திறந்து விட்டது, நான் மீண்டும் ஓவியம் வரைவதற்குத் திரும்பிய போது அவற்றில் சில திரைத் தாக்கங்கள் எஞ்சியிருந்தன. அதற்கெல்லாம் மேலாக, ஓவியமும் ஒரு மட்டத்தில் திரை போன்றதுதான்.
கே: உங்கள் தாயின் குடும்ப வழியில் உங்களுக்கு யூத மரபு உள்ளது. அது உங்களை ஆஸ்விட்ச் அழைத்துச் சென்றதா அல்லது வதை பற்றிய விவரிப்புகளில் உங்களுக்கிருந்த பரந்த ஆர்வம் உங்களை அங்கு அழைத்துச் சென்றதா?
ப: இதற்கு ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திசை திருப்பலுடன்தான் பதிலளிக்க முடியும். ஒரு பகுதி யூதராக இருந்த அம்ரிதா ஷெர்-கிலின் தாயார், அவரது யூதப் பின்னணியை எப்போதும் மறுக்கவே முயன்றார். அவர் தனது இரண்டு மகள்களையும் கிறிஸ்தவர்களாகவே ஞானமுழுக்கு செய்தார். என் தந்தை ஒரு தமிழ் பிராமணர், ஆனால் அவர் கோவிலுக்கே சென்றதில்லை. என் அம்மாவும் ஒருபோதும் தேவாலயத்திற்குச் சென்றதில்லை. ஆனால் எங்கள் வீட்டில் ஒரு வலுவான கிறிஸ்தவ நெறிமுறை இருந்தது, யூதத்தனத்தின் இந்தத் துடைத்தழிப்பின்மேல் கட்டப்பட்ட அதை நானும் ஆழப்பொதித்து கொண்டேன்.
கே: ஊடாடும் (interactive) மற்றும் இடஞ்சார் (spatial) கலைப் படைப்புகள் பிரபலப்படுத்தப்பட்டதன் மூலம் 1990-களில் இந்தியக் கலைச் சூழல் மாறத் தொடங்கியது. இதற்கான வினையூக்கி எது என்று நினைக்கிறீர்கள்?
ப: 1993 வரை, இந்தியக் கலைச் சூழலானது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க ஓவிய, சிற்பக்கலை மரபுகளுக்குள்ளேயே செயல்பட்டது, மற்ற எதுவும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் 1990-களின் முற்பகுதியில், புதிய ஊடகங்கள் விடுதலைக்கானவையாகவும் மற்றவை அனைத்தும் பிற்போக்கானவையாகவும் கருதப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கதையைப் புரட்டிப் போட்டோம். நீண்ட காலமாக, பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இருந்த செல்வாக்கு மிக்க கல்வியாளர்களான கே.ஜி.சுப்ரமணியன், ஜே. சுவாமிநாதன் ஆகியோர், இந்தியாவின் வாழ்க்கை மரபுகளின் மறுமலர்ச்சிக்காகவும் புதுப்பித்தலுக்காகவும் வாதிட்டனர். எந்தப் புதிய பொருள்களையும் பயன்படுத்துவதை நிராகரித்தனர். நான் பரோடாவிலிருந்து வந்தவன் என்ற வகையில், அவர்களின் வாதங்களை நிராகரிப்பது எனக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்டு மும்பை கலவரம் நடந்தது. இது ஏதோ மாற வேண்டும், ஏதாவது வேறுவிதமாக இருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைத்தது. அப்படித்தான் தொடங்கியது.
ஒரு கலைஞன் அவனிடம் இருக்கும் கலை உபகரணங்களைக் கொண்டு மட்டும் கலைப் படைப்பு உருவாகிவிடுகிறது என்று சொல்லி விட முடியாது. அதன் பின்னாலிருந்தோ இல்லை அதனைத் தாங்கியோ ஒரு சமூக நிகழ்வு, இயக்கம், அசைவு என்ற ஏதோ ஒரு சில செயல்பாடுகளின் தாக்கங்கள், புறக்காரணிகளால் நேரிடையாகவும் எதிர்மறையாகவும் கலைப் படைப்புடன் தொடர்பு கொண்டிருக்கும்.
அதை ரசிப்பவர்கள் அப்படைப்பில் இருக்கும் தடங்கள் வழியே பயணப்பட தெரிந்தால் மட்டுமே ஒரு பெருவெளியின் திட்டிவாசலென அப்படைப்பை உணர வைக்கும். * 1960களில் இந்தியக் கலை வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கண்டது. இந்திய நவீனக் கலையின் தொடக்கம் பிரித்தானிய ஆட்சிகாலத்தின் தொடர்ச்சியாகவே பாவிக்கப்பட்ட சிந்தனைப்பள்ளிகளின் பங்களிப்பு இருந்தது. இந்த விவாதங்கள் எழ ஆரம்பித்த காலத்தில், “Group 1890” என்கிற குழு ஒன்று உருவெடுத்தது. இந்தக் குழுவை 12 படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கினர். இந்திய சுதந்திரத்திற்கு பின்பான 1950களில் தீவிரமாக உருவாகி ஓவியப் படைப்புகள் மீதிருந்த ஐரோப்பிய சிந்தனை மற்றும் மாற்றங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர முனைப்போடு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் கொள்கையென முன்னெடுத்துச் சென்றவற்றில் முக்கியமானதாக ஐரோப்பிய கலை இயக்கங்களின் நீட்சியாக தன் படைப்புகளை முன் வைத்து வந்த அத்தனை பேரின் படைப்புகளும் இந்தக் குழுவால் நிராகரிக்கப்பட்டது (hybrid mannerisms resulting from the imposition of concepts evolved by successive movements in modern European art’ ). மாற்றங்களை தனது படைப்பாக்கத்தின் அனுபவத்தில் இருந்து ஒவ்வொரு படைப்பாளியையும் அனுகுவதற்கு போதித்தது. அதே நேரம் இந்த இயக்கம் எந்தவொரு குறிப்பிட்ட முறைகளையும், பாணிகளையும் தன் குறிக்கோளாக போதிக்கவில்லை.
ஓவியர் J.ஸ்வாமினாதன் அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த குழு- ரெட்டப்ப நாயுடு, ஜீ.எம்.ஷேக் உள்ளிட்ட முக்கிய படைப்பாளர்கள் அடங்கிய இந்தக் குழு தன்னைத் தொடர்ந்து தக்க வைக்கத்தவறியது. இக்குழுவின் முதல் கண்காட்சியே இதன் கடைசிக் கண்காட்சியாக இருந்தது. அதற்குப் பின் இக்குழுவைக் காப்பாற்ற முனைந்த அடுத்தடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுப் போனது. 1967ல் இரண்டாவது கண்காட்சிக்காக நிகழ்ந்த ஒரு சந்திப்பில் இந்தியாவின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவரான கீதா கபூர் அவர்களும் இருந்தார்.
courtesy : asia-art-archieve / group 1890
க்ரூப்1890 தனது இரண்டாவது கண்காட்சியை நடத்தமுடியாத போனதற்கு கலை குறித்த தர்கங்கள் உண்டாக்கியப் பிளவு என்று புரிந்து கொள்ள முடியும்.
இந்த முடிவிலிருந்து இந்தியச் சமகால கலை இருவேறு முனைகளில் இருந்து செயல்பட ஆரம்பித்தது. ஒரு பக்கம் இதை முன்னெடுத்த ஜே.ஸ்வாமிநாதன் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக உருவாகும் அரசின் உதவியோடு ஒரு கலை அமைப்பை பெரும் கட்டுமானத்தில் கொண்டு வந்தார். அது 1982ல் மத்தியபிரதேசத்தின் போபாலில் வைத்து திறந்துவைக்கப்பட்ட ‘பாரத் பவன்’. மறுமுனையில் க்ரூப் 1890 படைப்பாளர்களோடு செயல்பட்ட கலைவிமர்சகர் கீதா கபூரின் முயற்சியில் அவரது கணவரும் புகழ்பெற்ற ஓவியர் ஷெர்கிலின் தங்கையின் மைந்தருமான விவான் சுந்தரம், பூபன் காகர், க்ரூப்1890ல் இருந்து பிரிந்து வந்த ஜீ.எம்.ஷேக் ஆகியோருடன் இணைந்து உருவான PLACE FOR PEOPLE (1981) என்கிற குழுவாக நடத்திய கண்காட்சி. இது வெற்றிகரமான முக்கிய நிகழ்வாக இந்திய கலை வரலாற்றில் இடம் பிடிக்கிறது. இந்தக் குழுவானது மொத்தமாக ஆறு ஓவியர்களும் ஒரு கலை விமர்சகரும் அடங்கிய குழு. இந்த அமைப்பை முன்னெடுத்துச் சென்றவர்கள் தான் விவான் சுந்தரம் மற்றும் கீதா கபூர் என்ற தம்பதியினர். இவர்கள் சேர்ந்து ஆற்றிய பங்களிப்பு ஒவ்வொன்றுமே சமகாலத்தின் கலை படைப்புகள் மற்றும் செயல்பாடுகளில் முன்னோடியானவை.
தோல்வி வெற்றிகரமானது
ஒரு வெற்றிகரமான கண்காட்சிக்கு முன் நடந்த ஏற்பாடுகளாக, சமகாலத்தில் கையாளப்படவேண்டிய சமூகக், கலாச்சார, அரசியல் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த பிரக்ஞை மற்றும் கலைப் படைப்புகள் வழியே அவற்றை அனுகும் யுக்திகள் என்று கலந்தாய்வு செய்ததன் விளைவாகவே வெற்றி கண்டதாக என்று தன் அனுபவங்களிலிருந்து பகிர்ந்தவர் மேற்சொன்ன இரு குழுவிலும் அங்கம் வகித்த G.M. ஷேக்.
PLACE FOR PEOPLE பிரித்தானிய CURATOR மற்றும் விமர்சகரான திமோத்தி ஹைமேனின் வழிகாட்டுதலில், ஏற்கனவே நாட்டின் முக்கிய நவீன படைப்பாளர்களாக இருந்த விவான் சுந்தரம், GM ஷேக், பூபன் காக்கர், சுதிர் பட்டவரதன், நளினி மாலினி ஆகிய அறுவர்களும் உரையாடும் தன்மையுள்ள ( Narrartive ) படைப்புகளை உருவாக்கத் தூண்டியது. இந்த பாணி இன்னும் அகண்ட வெளியில் விவாதிக்கப் பட்டது. அப்படி விவாதிக்கப்பட்டவையே கண்காட்சிகளின் படைப்புகளாகவும், கீதாவின் கட்டுரைகளாகவும் வெளி வந்த்து. கீதா கபூர் இந்தியாவின் முன்னோடி விமர்சகராக வலம் வர இந்த அமைப்புடன் சேர்ந்து உருவாக்கிய கட்டுரைகள் முக்கியமானக் காரணமாக அமைந்தன.
விவான் சுந்தரம் சமகாலத்தின் முக்கியக் கலைஞரான இவர், ஓவியம், சிற்பம், பதிப்போவியம், நிழற்படக்கலை, காணொளி, என்று பல தளங்களில் முன்னோடியாக செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு GAGA WAKA எனும் கண்காட்சியில் ஆடைகள் வடிவமைப்பை முன்வைத்து ஒரு Cross over exhibitionஆக நாகரிகம் அதன் நடப்பு வழக்கு மற்றும் கலை ஆகியவற்றை இணைக்கும் வாய்ப்புகளை mannequin எனப்படும் மாதிரிகளில் கையண்டார். அரசியலிலும் தனது கருத்துக்களை படைப்புகள் வாயிலாகவும், நேரடியாகவும் செயல்பட்டு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கீதாகபூர் இந்தியாவின் மிக முக்கியமான கலை விமர்சகர்களில் ஒருவர், கலை விமர்சனம், கலை வரலாறு, அரங்க நிர்வாகம்(curator) ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறார். தனது கணவருடன் இணைந்து தனியாகவும், குழுவாகவும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என பல்வேறு கண்காட்சிகள் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். சமகாலத்தின் கலை தத்துவங்கள், கோட்பாடுகளென முப்பது ஆண்டுகளுக்கும் மேலே இவரது செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.
விவான் சுந்தரம் முயற்சித்த ஒவ்வொரு சோதனைகளுமே பெரிய வெற்றிகள் பெற்றன. விவான் சுந்தரத்தின் படைப்புகளை மட்டும் தனியாக ஆராய்வது அல்லது ரசிப்பது என்பதே புதிய பல தளங்களை ஒருவரிடமிருந்தே அறிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமன்று, இவர் கலை குறித்து ஆராய்பவனுக்கும் மிகப் பொருத்தமான தேர்வாக இருப்பார். இவரது தாயின் சகோதரியான புகழ்பெற்ற ஓவியர் அம்ரிதா ஷெர்கில் மேல் கொண்ட ஈர்ப்பில் வெளி வந்த RE-TAKE of AMRITA அவரின் நினைவு போற்றும் தொகுப்புகளில் ஒன்று.
vivan sundaram collections
ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளோடும், புதிய முயற்சிகளோடும் புதுப்புது வடிவங்களை அனுபவங்களைத் தேடும் சுந்தரம், தனது சித்தியான அம்ரிதாவின் வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நிழற்படங்களைத் தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள அநேகப் படங்கள் அம்ரிதாவின் தந்தையான உம்ராவ் சிங் எடுத்தவை. மொத்தமாக வெவ்வேறு காலங்களில் சேமித்த நிழற்படங்களை டிஜிட்டலில் ஒரே காலத்திற்குள் ஒட்டியமைத்த வேலைப்பாடுகள் அவரது பிற படைப்புகளிடமிருந்து அழகியல் பூர்வமாகவும் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு தொகுப்பாகவும் அமைந்த இந்த கண்காட்சியைத் தவிர சமூகத்தின் பங்கை தன் கலைபடைப்புகளில் வெளிப்படுத்தாத வேறு எந்த கண்காட்சியும் நடைபெறவில்லை.
போஸ்ட் மார்டம் என்ற கண்காட்சியில் அவரது முயற்சிகள் மனித மாதிரிகளில் உருவாக்கிய சிற்பங்கள், உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் அரங்கேறிய LADY GAGAவின் தாக்கத்தில், நவநாகரிக ஆடை அலங்காரத்தின் தாக்கங்களை முன்வைத்து அவர் உருவாக்கிய GAGA WALK ஆகியனவும் முக்கியமானவைகளாக பேசப்பட்டன.
விவான் சுந்தரத்தினை இந்தியாவின் முதன்மையான மற்றும் தலை சிறந்த INSTALATION ARTIST ஆகக் கருதுவதும் தவிர்க்க முடியாதது. Installation art என்பது ஓவியங்கள், சிற்பங்களைக் காட்டிலும் அதிக அனுபவத்தை நேரடியாக மக்களுக்குத் தருபவை, அரங்குகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பல்வேறு நோக்கங்களோடும் உருவாக்கப்படும் பொதுவாக முப்பரிமாணத்தோடும், ஒலி, ஒளி, வாசனை என பல பரிமாணங்களோடும் பார்வையாளனுக்கு அனுபவம் தருவது ஆகும். இதன் காரணமாக ஐரோப்பியத் தாக்கம் மிக்கவர் என்றும் இந்தியக் கலை மரபிற்கு எதிரானவர் என்கிற விமர்சனமும் அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர் இந்தியத்தன்மை என்கிற மரபை விமர்சன பூர்வமாகவும் அரசியல் பூர்வமாகவும் எதிர்கொண்டார்.
அவரை கலைஞர் என்று அழைத்ததற்கு இணையாக செயற்பாட்டாளர் என்று அழைக்கும் அளவிற்கே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக மதரீதியான பிரச்சினைகளில், பாசிச ஒடுக்குமுறைகளை மிகக்காத்திரமாக எதிர்த்தவர். அத்தோடு தன் சகாக்களின் குரல்களையும் பதிவு செய்யத் தூண்டியவர். சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை,கொடுமைகளை எதிர்த்தவர் தமது படைப்புகளில் வெளிப்படுத்தியவர். 1960களின் பிற்பகுதியில் குஜராத் கலவரங்களைக் கண்டித்த இவர், வளைகுடா போர், பாபர் மஸ்ஜீத் இடிப்பு என சில ஆண்டுகளுக்கு முன் நடந்த குஜராத் மதக் கலவரங்கள் வரை எல்லா அநீதிகளுக்கும் எதிராக அவர் தமது படைப்புகளிலும் வினையாற்றியுள்ளார்.
* எல்லா காலங்களிலும் சுந்தரத்தின் மனைவி கீதா கபூரின் இணையான பங்களிப்பை ஒதுக்கிவிட்டு இவரைப் பற்றி மட்டும் பேசிவிட முடியாது. இந்த தம்பதியரின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள், படைப்புகளில் வலம் வருவது, இந்திய நவீன ஓவியங்கள் குறித்த ஆய்வுக்கும் பயன்படும். கொள்கைகள், பாணிகள், தொழில்நுட்பங்களினால் மட்டுமே வெற்றி கிட்டுவதில்லை, ஒரு கலைப் படைப்பு வெற்றிகரமாக மக்களிடம் போய்ச்சேர்வதற்கு இத்துறையில் பக்கபலமாய் பல செயல்பாடுகள் இருக்க வேண்டும். அது தான் ஒரு சிறந்த கலைச் சமூகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க முடியும். புதிய பரிசோதனைகள், கலை விமர்சனம், கலை வரலாறு, ஊடகம், அரங்கு ஏற்பாடு, கருத்தரங்கம் போன்றவை அவசியம் வேண்டும்.
கீதா கபூர் மற்றும் விவான் சுந்தரம், இவ்விருவரும் அப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்பியவர்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே கலைத் துறையில் நமக்கு பல கண்ணோட்டங்களை உருவாக்கவும், சில கருத்துகளை, முடிவுகளைத் தகர்த்தெரியவும் உதவும். ஏனெனில் கலை வரலாறு இல்லாத சமூகத்தின் கால்தடங்கள் கண்டிப்பாக அழிக்கப்படும். விடுதலைக்குப் பின்னர் 1980களில் வெவ்வேறு திசைகளில் பயணித்த இந்தியக் கலையின் முற்போக்குத் தடம் விவான் சுந்தரத்தின் மிகப்பெரிய பங்களிப்பில் இருந்தே தொடங்குகிறது.
(2014ல் கணையாழியில் வந்த கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்)
***
ஜீவ கரிகாலன் – ட்ரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. கணையாழியில் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில இதழ்களில், பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகள் எழுதுவது என இயங்கி வருகிறார்.மின்னஞ்சல்: kaalidossan@gmail.com
அசலின் மதிப்பு போலிகளின் வரவிற்குப் பின்னால்தான் தெரியும் என்பர். கலை உலகில் பிரசித்தி பெற்ற எந்த படைப்பையும் சந்தையில் உலவும் போலிகளைக் கொண்டு இன்னும் மதிப்பு வாங்கி தக்கதாகக் கருதுவார்கள். ஆனால் ‘போலி’ – சந்தைகளால் உருவாக்கப்படுபவை. சந்தை போலிகளை ‘மாற்று’ என உற்பத்தி செய்து புது பெயரிட்டும் அழைக்கும்.
அப்படி என்றால் ‘மாற்று’ என்பதே போலியானதா?
இல்லை ஒருபோதும் இல்லை
‘மாற்று’ என்பது உண்மையில் மதிப்பீடு தான். சொல்லப்போனால் மாற்று என்பதுதான் பரிணாமம் மாற்று என்பது தான் வளர்ச்சி. மாற்று என்பது மற்றொரு அசலும் கூட. மாற்று என்று சொல்லப்படும் போலிகள்தான் ‘மாற்று’ என்கிற கருத்திற்கு எதிரான ஒற்றைப்படைத் தன்மையான எதிர்ப்பை ஒரு அமைப்பில் வலுப்பெற வைக்கின்றன.
*
எழுத்தாளர் சி.மோகன் தவிர்த்து – இந்திய அளவில் தாக்கம் செலுத்திய ஒரு பெரும் ஆளுமைக்கு சொல்லிக்கொள்ளும்படியான அஞ்சலிக் கட்டுரைகள் என்று கூடவேண்டாம், அவர் மறைவு குறித்த சமூக ஊடகப் பதிவுகளே கூட தமிழில் இல்லை. தமிழ் நிலத்தோடும் தொடர்புடைய விவான் சுந்தரம் எனும் கலை ஆளுமை மேற்குலகின் தாக்கத்தில் வாழ்ந்தவர், இந்தியக் கலை மரபை எதிர்த்தவர், ஒரு பிராமணர் என்பதால் அவரை ஓவியராக ஏற்றுக்கொள்ளாத சிந்தனைக் குழாம் இருக்கத்தான் செய்யும்.
kiran nadar museum collection
மக்களை முன்வைத்து 70களுக்குப் பின்னர் இந்தியா முழுக்க சிறு சிறு குழுக்களாய் பரவி வந்த முற்போக்கு கலை இலக்கிய உலகில். தனது வாழ்நாள் முழுதும் தமது கலை மற்றும் அரசியல் செயல்பாட்டை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தியும், அதை மக்களுக்கானதாகவும் சமரசமற்றும் முன்வைத்த அசலான கலைஞன் விவான் சுந்தரம்.
சமரசமற்ற என்றால் – தன்னை நேருவியனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் விவான் சுந்தரம். ஒரு பக்கம் இந்திராகாந்தி ‘பாரத் பவன்’ போன்ற இந்தியாவின் உலக அளவிலான கலாச்சார மையத்தை தொடங்கும் காலத்திலேயே, அரசின் கொடுங்கோண்மையை (நெருக்கடிகால அரசை) விமர்சித்தவர். அவ்வாறே சீக்கியப் படுகொலைக்கும் மும்பையில் நடந்த இசுலாமியர்கள் மீதான வன்கொடுமைகளுக்கும், பாபர் மசூதி இடிப்பிற்கும், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய எண்ணெய்க்கான யுத்தம் குறித்தும் என அதிகாரத்திற்கு எதிரான, நசுக்கப்படும் மக்களுக்கான கலையை சர்வதேச படைப்புலகின் காட்சிமொழியில் நிறுவி வந்தவர் சுந்தரம்.
இன்றைக்கு முற்போக்கு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அநேக படைப்பாளர்களும் எடுக்கின்ற அரசியல் சார்பை தன் வாழ்நாளின் எந்த ஒரு காலத்திலும் எடுத்திராதவர் விவான் சுந்தரம். மேற்குலகின் சிந்தனையால் மட்டுமே இப்படியான அரசியல் சார்பை, தலைவனைத் தொழும் மரபைத் தாண்டி சுயத்தோடும் மக்கள் பக்கமும் நிற்க வைப்பதற்கு விவான் சுந்தரமால் முடிந்திருக்கிறது. அவரது காட்சிமொழியை பல காலங்களில் விமர்சித்தவர்கள், மறைமுகமாகவும் மெல்ல மெல்லவும் அந்த வடிவத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும் வணிக பலன்களை ஈட்டுபவர்களாகவும் மாறியிருப்பதை கலையுலகில் காண இயலும்.
வழமையாகப் பேசப்படுகின்ற கலை குறித்த அமர்வுகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் சமகாலக் கலை என்பது் நிகழ்காலத்தை மட்டுமே பேசுவதா அல்லாவிடில் தற்காலத்தைப் பொருத்தும் தேவையான ஒன்றின் அவசியத்தைப் பேசுவதா என விவாதித்துக் கொண்டிருக்கையில், விவான் சுந்தரத்தினை அறிதவதன் வாயிலாக அவரது படைப்புகளும் பயணமும் உணர்த்தும் சமகாலக் கலை குறித்த சித்திரமானது இலக்கியத்தின் வாயிலாக இலக்கணத்தைப் புரிந்து கொள்ளும் செவ்வியல் முறைமையாகப் பார்க்கலாம். இவ்விதம்..
விவான் என்பவர்…
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த இந்தியாவின் மிக குறிப்பிடத்தக்க முக்கியமான ஓவியர்களில் ஒருவரான அம்ரிதா ஷெர்கில் விவான் சுந்தரத்தின் பெரியம்மா. விவானது தாத்தா உம்ராவ் சிங் ஷெர்கில் தொடக்க காலப் புகைப்படக் கலைஞர். சுந்தரத்தின் மனைவியான கீதா கபூர் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்தியக் கலையின் விமர்சன ஆய்வை முறைமைப்படுத்தி ஒன்றுதிரட்டிய முன்னோடிகளில் ஒருவராகவே அழைக்கப்படும் இவரையும் கணக்கில் கொண்டால் கலைக்குடும்ப வரிசையில் ஐவரும் ஒருவராக அமைகிறார்.
பரோடாவிலும் (G.M.ஷேக் என்றழைக்கப்படும் குலாம் முகம்மது ஷேக்கை இங்குதான் சந்திகிறார்) லண்டனிலும் படித்து வளர்ந்தவர் சுந்தரம். Alain Delon, Nureyev போன்ற ஒரு துள்ளலான இளைஞன் சுந்தரம் என நினைவுகூர்கிறார் ஷேக். பரோடாவிலேயே முதல் வண்டியான Fantabulous–யை சுந்தரம் ஓட்டிச்செல்வதை (1962-ல் வெளியான ராயல் என்ஃபீல்டின் புகழ் பெற்ற மாடல்) பெருமையுடன் விவரிக்கிறார்.
Slade School of Art-ல்(இலண்டன்) இருந்தபோது Ronald Brooks Kitaj-ன் (பிற்காலத்தில் 1984-ல் National Academy of Design-ன் Academician ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்) நட்பைப் பெறுகிறார் சுந்தரம். அவரைத் தனது குரு என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
அக்காலங்களில் தன்னை இடதுசாரி அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு பாரீஸையும் இலண்டனையும் உலுக்கிய 1968-69 மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையிலும் இருந்தார். Slade-ல் இருந்தபோது 1960-களில் ஓர் ஆண்டு முழுவதும் நேச நாடுகளாலும் அச்சு நாடுகளாலும் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களையும் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்ட பிற படங்களையும் பார்த்த சுந்தரம் அதில் திணறிப் போகிறார். ஏனெனில் இந்தியாவில் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் ஈடுபாடு பற்றிய பண்பாட்டு நினைவுகள் குறைவாகவே உள்ள அதே வேளையில் ஐரோப்பியர்கள் வெறிகொண்டு அதனுடனேயே வாழ்வதை நன்கு உணர்கிறார். ஸ்லேடில் அவர் பார்த்த பலவற்றை உள்வாங்கிக் கொண்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஆஷ்விட்ஸுக்குச் செல்லும்போது, வதை முகாம்களின் விடுதலையைப் பற்றிய ஆலன் ரெஸ்னாய்ஸின் NIGHT AND FOG (1956) ஆவணப்படத்தின் மீள்நினைவுகளைக் காண சுந்தரத்தால் முடிகிறது. அந்தப் படங்களைப் பார்த்ததில் அவருக்கு முழு உலகையும் திறந்து காட்டியது போல் உணர்கிறார். அவர் மீண்டும் ஓவியம் வரைவதற்குத் திரும்பிய போது அவற்றுள் சில திரைத் தாக்கங்களாய் எஞ்சியிருந்தன. அதற்கெல்லாம் மேலாக ஓவியமும் கூட.
சுந்தரத்தின் தொடக்ககாலப் படைப்புகள் மக்கள் கலைவடிவிலும் 1960-களின் பிற்பகுதியில் எதிர்பண்பாட்டு அரசியல் பேசுவதன் தாக்கத்தின் கீழும் உருவாக்கப்பட்டன. எழுபதுகளில் அரூப ஓவியங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தியக் கலை ஓவியங்களுக்குள் உருவ ஓவியத்தை கருத்துருவமாகக் கொண்டுவந்த கலைஞர்களின் வரிசையில் அவர் தனித்து வெளிப்பட்டார். 1972-இல் சிலி கவிஞர் பாப்லோ நெருடாவின் மச்சு பிச்சுவின் உயரங்கள் (THE HEIGHTS OF MACCHU PICCHU) (1947) என்ற தொகுப்பின் பெயரில் ஒரு தொடரை உருவாக்கினார்.
இந்தியா திரும்பிய பின் ஓவியங்கள் அதிக பார்வையாளர்களை அடையச் செய்யும் வகையில் 1973-ல் பரோடாவில் ஒரு கிராஃபிக் பட்டறையை நடத்தும் யோசனையை ஆர்வத்துடன் முன்வைத்து பல்வேறு இடங்களில் அக்கண்காட்சியை ஏதோ கட்டளைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவர் போல சுந்தரம் நிகழ்த்துகிறார்.
1974 காலகட்டத்தில் கலைஞர்கள் தீவுகளைப் போலத் தனித்திருந்தனர். அவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக ஒரு கூட்டுக் கண்காட்சியை முன்மொழிந்தார். பத்து கலைஞர்கள் ஒன்றுகூடினர். ஒரு சர்வாதிகாரியின் பேயுருவைப் போல இந்திராகாந்தியின் உயர்ந்து நிற்கும் உருவப்படம் ஒன்றைக் காட்சிப்படுத்தினார். அவ்வமையம் பெரும் சலசலப்பை உண்டாக்கியது அது. அதன் பிறகு வந்த நாட்களில்தான் பூபேன் காகர், குலாம் முகமது ஷேக், ஜோகென் சொளத்ரி, சுதிர் பட்வர்தன், நளினி மலானி, கிவ் படேல் அவர்களோடு சுந்தரமும் இணைந்து 1978-ல் “டிரைனாலேவை நிராகரித்த அறுவர்” என்ற ஒரு கண்காட்சியை நடத்தினார். பிறகு Triennale (டெல்லியில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சமகால கலை-ஓவிய சர்வதேச கண்காட்சி)-விற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார். லலித் கலா அகாடமிக்கு எதிராக இந்தியக் கலைஞர்கள் சமூகம் கிளர்ந்தெழுந்தபோது அப்போராட்டத்திலும் ஈடுபட்டார்.
பரோடா, டெல்லியில் எண்ணற்ற நாட்கள் ஈடுபட்ட ஆழமான தொடர் உரையாடல்களில் சில சமயம் கலையில் அரசியலின் பங்கு பற்றியும் அரசியல் சார்பற்றிருப்பதும்கூட ஒரு அரசியல் செயல்பாடுதான் என்றும்கூட விவாதித்து கனவு திட்டமென ‘Place for People’ என்ற ஒரு கண்காட்சிக்கான அறிவிப்பை 1979-ல் வெளியிடுகிறார். இந்நாட்களில்தான் கீதா கபூரின் கலை பற்றிய கட்டுரைகள் அதிகமாக எழுதப்பட்டன.
Installation படைப்புகள் உருவாக்கத் தொடங்குவதற்கு முன்பு கூட்டுத் தயாரிப்புகளில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். 1976-ல் இமாச்சலப் பிரதேசத்தில் கசௌலி கலை மையத்தில் (The Kasauli Art Centre) பட்டறைகள் நிறுவ உதவியதைக் குறிப்பிடலாம். இவ்வமைப்பு 1991 வரை இயங்கியது. அடுத்து 1988-ல் JOURNEYS என்றழைக்கப்படும் மென்வண்ணத் (pastel) தொடரை உருவாக்கினார்.
முதலில் LONG NIGHT (1988) என்ற Charcoal ஓவியங்கள் ஆஸ்ட்விச்சின் பெரிய சிதிலமடைந்த பெரிய சிமெண்ட் தூண்களையும் குத்திக்கிழிக்கும் முள்கம்பிகளையும் குறிப்பது. இவரது Installation பணியின் முதல் எடுத்துக்காட்டாக ENGINE OIL என்கின்ற தொடர் (1991) எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் வளைகுடாப் போரின் வான்வழித் தாக்குதலைக் குறிப்பிட்டுக் காட்டும் மையையும் எஞ்சின் ஆயிலையும் கொண்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பிறகு வண்ணங்களிலும் ஓவியங்களிலுமிருந்தும் சடாரென விடுவித்துக்கொண்டு மரபுத்தொடர்ச்சியை, தனது வரலாற்றை வாழ்விற்கு மிக அணுக்கமான ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட Installation முறையில் சுந்தரத்தின் தாத்தா உம்ராவ் சிங் ஷெர்-கில்லின் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களால் மிக முக்கியமானதாக உருமாறினார். தனிப்பட்ட நினைவலைகளை நிகழ்கால, கடந்த காலத்தின் உரையாடல்களாகக் கற்பனை செய்து பார்ப்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கின்ற ஒன்று. அதைச் செயல்படுத்தலில் காட்டியவர் சுந்தரம். ஷெர்-கில் குடும்பக்காப்பக புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை டிஜிட்டல் போட்டோ மாண்டேஜ்களின் வரிசையே Re-take of ‘Amrita’. இது Victoria Memorial, Calcutta-ல் காட்சிப்படுத்தப்பட்டது.
அடுத்தது 1995-ல் நடைபெற்ற The Sher-Gil Archive, Memorial (1993, 2014) பம்பாயில் வகுப்புவாத வன்முறைக்கு ஆளான மக்களுக்காக அவரது கொந்தளிப்பான மனநிலையில் உருவாக்கப்பட்டது.
2011-ல் நடைபெற்ற GAGAWAKA: Making Strange என்ற நிகழ்வில் ஃபேஷன் துறையை எவ்வளவு கிண்டலடிக்க முடியுமோ அவ்வளவு அடித்திருப்பார். அதீத ஆர்வத்துடனான கலையாக்கங்களை உருவாக்கிய சுந்தரத்தின் ஒவ்வொரு படைப்பும் சமகால இந்தியக்கலை அவர்காலத்தில் வெகு புதிதாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை.
வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று சுந்தரம் தான் உணர்ந்ததாகக் கருதிப் பேசிய சில விஷயங்களை, சமூகச் செயற்பாட்டாளர்களும் ஆள்பவர்களும் கலைஞர்களும் செவிமெடுக்க வேண்டிய ஒன்றாகப் படுகிறது. பிறநாட்டுக் கலைஞர்களுடான நட்பும் அவர்களது நாடுகளின் அரசியலில் வேரூன்றியிருக்கும் புதுமையான கருத்துக்களும் அவர்களது வெளிப்பாட்டு முறைகளுக்கும் நமது மனம் திறந்திருக்க வேண்டும் என்றும்(குறிப்பாக – இலண்டன், கியூபா) சமகாலத்தின் சிந்தனையானது உலகின் மூலை முடுக்குகளிலிருந்து பெறப்படும் அனைத்திலிருந்தும் உட்கிரகிப்பதே ஒவ்வொரு கலைஞனின் கடமை என்கிறார். முற்போக்கு இயக்கமாகக் கலையுலகத்தை வளர்த்தெடுக்க விரும்பும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் விவான் சுந்தரத்தின் வாழ்க்கை ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.
***
வேதநாயக் – “தேவதா உன் கோப்பை வழிகிறது” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். யாவரும் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் ஓவியங்கள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பவர். எந்த அரசியல் சார்புமற்ற கலையைப் பேசுவதே தனது நோக்கமாகக் கொண்டிருப்பவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: மின்னஞ்சல்: editorialmagazines@gmail.com
“நாம இதப் பத்தி பேசணும்” – ஒவ்வொரு முறையும் இந்த நான்கு வார்த்தைகள் இட்டுச்செல்லும் திசையில் சிக்கலாக்கப்படப்போகும் ஏதோவொரு புதிருக்கு ஆயத்தமாகவேண்டும். “எப்படி ஒங்களால ரெண்டு பேர கேரி பண்ண முடியுது.. இதுல எதாச்சும் ஒன்னு பொய்யாதான இருக்கமுடியும்..” என்பதிலோ, “இவ்வளோ டிஸர்விங் பர்ஸனா நா.. சீரியஸ்லி எனக்கே தெரியல.. அதுவும் இந்த வாரம்.. எதோ ரொம்ப ஐ ஃபீல் லைக்.. என்ன யாராலயும் இந்த அளவுக்கு லவ் பண்ணமுடியுமாங்குற மாரி.. (சற்று நிறுத்தி..) பட் அவங்ககூட இந்த வாரத்துல ஹாவ் யு பீன் இண்ட்டிமேட்.. ஹோப் யு கெட் இட்.. செக்ஸ் ஐ மீன்..” என்பதிலோ, “லவ் மேரேஜ் பண்ணியும் மென் வுட் சீக் சம்திங் அவுட்சைட் ல்ல.. எனக்கு இந்த மேரேஜ் சிஸ்டம் மேல இருக்க பிலீஃபே போயிடும் போல..” என்பதிலோ ஆண்களின் பொது மனவோட்டத்தைக் குழப்பத்துடன் பார்ப்பாளேயொழிய என்னைக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டும் சுவடே இருக்காது.
என்னுடைய இயல்பிற்கு சிறு காயங்கள்கூட உகந்தவையல்ல; அசலைப் பெருக்கியுணர்ந்து வேறெங்கோ கொண்டுபோய் நிறுத்தி எந்தவொரு தருணத்தையும் பாழ்செய்யக்கூடியவன். கூடுமானவரை மிக லேசான மனிதனாக முன்னிறுத்துவதே மென்மையாகக் கோபப்பட வராதவன் என்பதால்தான் – முரண்போக்கு தலையெடுத்துவிட்டால் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு தணியவே முடியாத முசுட்டுகுணம்; காயப்படுத்தியவரை அக்கணத்தில் எழவே முடியாத அளவுக்கு வீழ்த்தவேண்டும். பட்டுக் கருகியிருக்கும் புதர்ச்செடியை தீக்குச்சியால் அவள் நிமிண்டிப்பார்க்கும் ஒவ்வொரு முறையும் இயன்றவரை எச்சிலை விழுங்கிக்கொண்டு, அவளால் தாங்கவே முடியாத தணலை மிகுந்த உளைச்சலுடன் மறைத்து வைக்கவே முயன்றிருக்கிறேன். மீறி வெடித்து சின்னாபின்னமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கை இந்த திசையில் ஏன் திரும்பியதென யோசிக்காமலிருந்ததில்லை.
வெளுத்த எண்ணெய் பிசுக்கான சருமத்தையும் செம்பருக்கள் அடர்ந்த ஒடுங்கிய கன்னத்தையும் ஆபரணமற்ற ஒப்பனையையும் இறுக்கி இழுத்துப்போடப்பட்ட குதிரைவாலால் ஏறிய நெற்றியையும் தாண்டி ஈர்க்கப் போதுமான ஏதோவொன்று அந்த முகத்தில் மிச்சமிருந்திருக்கிறது. துறைரீதியில் மட்டுமல்லாது பொது விஷயங்களிலும் கெட்டிக்காரியாகத் தெரிந்ததும் ஒரு காரணம். முகக்கவர்ச்சி குறித்த தற்செருக்கும் நிறையவே உண்டென பேச ஆரம்பித்த நாட்களில் தெரிந்தது. ஆண்களை பலவீனமானவர்களென வரையறுக்கும் எண்ணங்களுக்கு இடமளிக்கக்கூடாதென்ற விழிப்போ என்னவோ.. அவளுடைய சாதாரண உரையாடல்களைக்கூட நீளவிடாமல் வெட்டிக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும், பயிற்சிக்காக வருபவர்களின் தயக்கத்தைக் களைந்து சகஜமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவனென்ற முகவரி கொண்டவன். இப்படி சமநிலை சலனப்படுவதைப் பொறுக்கமாட்டாமல் அவளை ஒரு சராசரி என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவும் அதை அப்படியே நம்பவும் அதிகம் விரும்பினேன். வரையறுத்துச் சொன்னால், பலவீனப்பட்டுவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
“ஸ்டில் என்னால நம்பமுடியாத விஷயம் எதுன்னா.. நீங்க என் பெர்டேக்கு விஷ் பண்ணதுதான்.. நியூ யூனிட்னு யாருக்குமே சொல்லல.. ஈவன் புது சல்வார் கூட இல்ல.. எப்டி தெரிஞ்சுது ஒங்களுக்கு?”, நிறுத்தமாட்டாள். “அண்ட் மோரோவர், நீங்க இதையெல்லாம் மைண்ட் பண்ற பெர்ஸன்னு நெனைச்சதேயில்ல..” இம்மாதிரியான பின்னொட்டுகளில் ‘என்னை’ அடிக்கோடிட்டபடியே இருப்பாள். நெருக்கமான பின்னர் இப்படியான ஏதோவொரு கேள்வியில் மீளும் முந்தைய அலைவு எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அன்றிரவு ஓர் உணவுக்கூடுகை ஏற்பாடாகியிருந்தது – அணியின் இறுக்கம் தளரும் இடங்களில் முக்கியமானது. அணித்தலைவர் அவளுடைய இடது மணிக்கட்டில் பதியப்பட்டிருந்த R என்ற பச்சைக்குத்தலை விசாரித்தார். தன்னுடைய தந்தை பெயரென்று சொன்னவளிடம் அதுவரையிலிருந்த பொலிவு ஒரு மாற்று இருண்டதை நான் குறிப்பிட்டுக் கவனித்தவரை சரி. நிறுத்தாமல், அப்பெயரை அறிய அலுவலக அறையிலிருந்து அவளுடைய விண்ணப்ப படிவத்தை ஏன் தேடியெடுத்தேன் என்பதோ அதில் கண்ணில்பட்ட பிறந்ததினத்தை ஏன் நினைவில் நிறுத்தினேன் என்பதோ பணியிடத்தில் வாழ்த்துச் சொல்லாமல் ஏன் மாலை அலைபேசியில் சொன்னேன் என்பதோ அந்நாளின் புரிதலுக்கு மிக தொலைவிலிருந்தன.
இருபத்திநான்கு வயதிலிருந்தவளுக்கு தன்னைவிட பதினோரு வயது முதிர்ந்தவனிடம் உண்டானது எதிர்பாலினக் கவர்ச்சியென சொல்வதைவிட முட்டாள்தனம் ஏதுமிருக்க முடியாது. வயதுக்கு மீறிய பக்குவம் நிறைந்தவள் என்பதால்தான் என்னோடு அவளுக்கு அலைவரிசை பொருந்திப்போயிருக்க வேண்டும். அரும்புக்காலத்தில் நிகழக்கூடிய பட்டாம்பூச்சித் தருணங்கள்கூட என்னிடமிருந்து சாத்தியப்பட்டிருக்காது. என் இருபதுகளில்கூட அப்பருவத்திற்கான கொண்டாட்டங்களுடன் இருந்தவனில்லை. இவளுக்காகவும் பிரத்யேகப் பிரயத்தனங்கள் எதுவும் செய்யவில்லை; செய்யவரவில்லை என்று சொல்வதே சரி. இரண்டாண்டுகளுக்குப் பிறகும் இந்த உறுத்தல் வெவ்வேறு விஷயங்களில் வெளிப்படும். என்னுடைய இயல்பே அவளுக்குப் போதுமானதாக இருந்தாலும் ‘தனக்காக’ என்ற எளிய எதிர்பார்ப்பு பொய்ப்பதை அவ்வப்போது கொட்டித்தீர்த்துவிடுவாள். “ஒங்களோட ருட்டீன்ல நா அப்படியே வந்து அட்டாச் ஆயிருக்கேன்.. ஜஸ்ட் அவ்ளதான்.. எனக்குன்னு நீங்க எதுமே மாத்திக்கிட்டதில்ல.. நாட் ஈவன் ய பிட்.. எல்லாமே ஒங்க கம்ஃபட்ட பேஸ் பண்ணிதான்..”. வினாடிகளுக்கேனும் சுள்ளென்றிருக்கும்.
ஆனால் எனக்காக தன்னை நிறையவே மாற்றிக்கொண்டிருக்கிறாள் என்றுதான் நம்புகிறேன். முக்கியமாக தன்மதிப்பை விட்டுக்கொடுத்திருக்கிறாள். “அஜய்கூட எனக்கு பிரேக்கப் ஆனதே அவனுக்கு இன்னொரு பொண்ணுமேல இண்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னுதான்.. பட் இப்போ.. ரியலி ஐ டோன்னோ வாட் ஐயம் டூயிங்.. ஆல்ரெடி கல்யாணம் ஆன ஒருத்தர்கூட.. ஜீஸஸ்..” ஒவ்வொரு முறையும் வார்த்தைகள் இவ்விடத்தில் தழுதழுக்கும். அமைதியாக இருப்பதைத் தாண்டி, தேற்ற ஏதுமற்று நிற்பேன். முந்தைய உறவின் மிச்சமாக கடுமையான உளச்சிதைவைக் கடந்து வந்திருக்கிறாள். “நவ் ஐ ஃபீல் லைக் ய பிட்ச்..” குரல் முழுமையாக உடைந்துவிடும். ‘சாரி’ எனச் சொல்லவேண்டுமாவென இவ்விடத்தில் நிறைய முறை யோசித்திருக்கிறேன்; நா எழாது. மறுமுனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்கும், “பட் ஒங்களுக்காக செய்யலாம்.. யு ஆர் ஸ்வீட்..” என்னை சமனப்படுத்துகிறாளா அல்லது தனக்குத்தானே நியாயம் சொல்லிக்கொள்கிறாளா?
ஒன்றரை மாத பயிற்சி முடித்து பெங்களூருக்கு திரும்பிய பிறகு அனுப்பியிருந்த “தேங்க் யு சர்.. வில் மிஸ் த டீம் மச்..” என்ற குறுஞ்செய்தி சம்பிரதாயத்திற்கானதல்ல என்றும் ஏனையருக்கு அப்படியெதுவும் அனுப்பவில்லையென்றும் பின்னொரு நாள் – அவளுக்கும் என் மீது ஈர்ப்பு இருந்ததா என்று கேட்டதற்கு – சொன்னாள்; பதில் இதுதான்; இவ்வளவுதான். ‘ஏன் பிடித்தது’ என மேற்கொண்டு நீட்டிக் கேட்கவே அச்சமாக இருந்தது. தோற்றமாக இருக்க வாய்ப்பில்லை – எனக்கே தெரியும். அவளுக்குப் பிடித்த ஆங்கில வலைதொடர் நாயகனைப் போன்றே அணியின் ரவீந்தர் தெரிவதாக ஓரிரு முறை சொல்லியிருக்கிறாள் – தோற்றத்தில் வீழும் சிறியவளில்லை என காட்டிக்கொள்ளக்கூட சொல்லியிருக்கலாம். சந்திப்பொன்றில் இப்படிச் சொன்னாள், “யு எம்பத்தைஸ் வித் பீப்பிள்.. அதுதான் ஒங்கள ஸ்பெஷல் ஆக்குது..” குறுக்கிட்டு “அதுதான் ஒனக்கு புடிச்சுதா என்கிட்ட?” என்றதற்கு, “சொல்லமாட்டேன்..” – வேறெங்கோ பார்த்துக்கொண்டிருப்பவளின் உதட்டில் முறுவல் இருக்கும்.
இப்படித்தான்.. எதையுமே கேட்டு வாங்கிட முடியாது; சின்ன விஷயத்திலும்கூட. ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் ‘லவ் யு’ என்று சொல்லும்போது பதிலுக்கு, “யா.. பை” என்பாள். “நீயும் சொன்னா எதாச்சும் கொறஞ்சு போயிடுமா?” என்றால், “சொல்லிட்டே இருந்தா அதுல ஒன்னுமே இல்லேல்ல..” என நிறுத்துவாள். ஆனால் அதே தருக்கம் பதிலீட்டில் செல்லுபடியாகாது. என்றேனும் நான் அப்படி அழைப்பைத் துண்டித்தால், “இப்ப என்ன ப்ரச்சன ஒங்களுக்கு.. எதுக்கு மொட்டையா கட் பண்றீங்க?” – உடனே மீண்டும் அழைத்து கத்துவாள். “என்ன இப்படி ச்சைல்டிஷா போட்டிக்கு போட்டி பண்றீங்க.. எனக்கு நீங்க அத மாத்த வேணாம்.. ஒருமாரி ஃபிக்ஸ் ஆயிடுச்சு அது.. ப்ளீஸ்..” ஏறிய வேகத்திற்கு சட்டென குரல் பணியும்.
நிஜம் அதுதான். எதையும் நான் திருப்பிச் செய்யும்போது அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. “என்ன ட்ரை பண்றீங்க இப்ப?.. என்ன மாரி ஒரு பர்ஸன் ரிலேஷன்ஷிப்க்கெல்லாம் லாயக்கில்லன்னு ப்ரொஜக்ட் பண்ணனுமா?” அவளுடைய புரிதலின் அர்த்தத்தில் விமரிசிக்க ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அற்பங்களைப் பெரிதுப்படுத்தாமலிருக்க மெனக்கெடும் என் எத்தனங்களை உயர்த்திக்காட்டவே விளையாட்டாக முயன்றிருப்பேன். “நத்திங் நியூ.. வீட்லயுமே நா அவ்ட்காஸ்ட் தான்.. யாராலுமே என்ன ட்டாலரேட் பண்ணிக்கமுடியாது..” எனும்போது, ‘இல்லை’யென மறுப்பதற்குள், “பட் ப்ளீஸ்.. யு ஆர் நாட் தெம்.. அப்படிதான் நம்புறேன்.. ப்ளீஸ்..” கெஞ்சலும் ததும்பலுமாக பிரச்சனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுபோயிருப்பாள். “நா ஸில்லியா நடந்துக்கிட்டாலும் ப்ளீஸ் புட் அப் வித் மீ..” ஏன் இது இந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என யோசிப்பதற்குள், “வித்தவுட் எனி ஷேம் ஐயம் பெக்கிங் யு.. என்கூட இருங்க.. ப்ளீஸ்.. என்ன வெறுத்துடாதீங்க..” என்று முடித்திருப்பாள்.
இத்தனை அப்பட்டமாக சார்பை வெளிப்படுத்துமளவிற்கு பலவீனமாவளும் இல்லை. நெருங்கிய உறவிற்குள்ளும் சார்பற்றிருப்பதை அடிப்படைக் கண்ணியமாக நம்புபவள். கணவனின் பணத்தில் இதே பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கும் சக பெண்ணொருத்தியை வியப்புடனே அவளால் அணுக முடிந்திருக்கிறது. “எப்படி முடியுதுன்னே தெரியல சீரியஸ்லி.. அவரு அவள எவ்வளோ ச்சீப்பா பாப்பாரு.. இப்படி விமன்தான் அவங்க மரியாதைய கெடுத்துக்கிறாங்க..”, அவள் சொல்லுவதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டிருக்கிறேன். அவளுடைய பெண்ணியக் கோணங்களை அறிவதில் எனக்கு விருப்பம் இருந்திருக்கிறது. பெண்களின் கற்புக்கட்டுப்பெட்டித்தனங்களுக்கு எதிராக புரட்சிப் பேசும் ஆண்களை “இவனுக காஜி அட்வாண்டேஜுக்காகத்தான் இதெல்லாம் பேசுறானுக..” என்பாள், “கவனிச்சு பாருங்க விமன லிபரேட் பண்ற விஷயமெல்லாம் மென்னுக்குதான் நெறைய சாதகமா இருக்கும்.. ப்ரீ மரைட்டல், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ், பொண்ணுங்க குடிச்சா தப்பான்னு கேக்குறது.. எல்லாமே.. ஈவன் இந்த ட்ரெஸ் விஷயம்கூட.. அவனுக்கு வேணும்.. ஆம்பளயால ஆம்பளயா மட்டுந்தான் யோசிக்கமுடியும்..” கேட்டபடி கூசி நெளிந்துகொண்டிருப்பேன். “நாம எதும் தப்பு பண்றோமா?” என ஒவ்வொரு முறை அவள் தடுமாறும்போதும், இல்லையென தேற்றிய தருணங்கள் மனத்தில் குறுக்கிடும்.
“இந்த ரிலேஷன்ஷிப்புக்கு எந்த ஃபியூச்சருமில்லன்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.. இத ரொம்ப ஹெவியாக்கிக்க வேணாம்ன்னு நெனைக்கிறேன்.. எண்ட் ஆஃப் த டே ஒங்களுக்கு வீட்ல ஒருத்தவங்க இருக்காங்க.. இது இல்லேன்னாலும் யு ஆர் கண்ட்டெண்டட் தான்ல..” எந்த உணர்ச்சியுமில்லாமல் வெறுமையாக இதை அவளால் சொல்லமுடியும், “பட் என் விஷயத்துல அப்படியில்ல.. எப்போவாச்சும் இதுலேந்து நா வெளிய போனா, என்னால அத தாங்க முடியணும்.. ஐ ஷுட் சர்வைவ் தட்.. ஒங்களுக்கு இது புரியுதா தெரியல..” உடல்ரீதியான உறவாக அது நீளாததற்கு அவளுடைய இந்த மனநிலைதான் காரணமென்று நினைத்ததுண்டு. இருவருக்கும் அதிலிருந்த விருப்பம் அவ்வப்போது எட்டிப்பார்த்திடாமலில்லை. பின்னிரவு பேச்சுகள் அந்த விளிம்பைத் தொட்டுத் திரும்பும். ஒவ்வொரு முறையும் அடுத்தநாள் காலையில் தவறாமல் ‘சாரி’ என்று அனுப்பியிருப்பாள்.
இந்த விஷயத்தில் அவளுடைய அந்தந்த சமயத்து மனப்போக்கை ஒத்திசையும் விதத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறேன்; ‘ஒங்க லைஃப்ல எதுக்கு நான்? யு ஹாவ் எவ்ரிதிங்..’ பலமுறை இதைக் கேட்டிருக்கிறாள். அது உடற்தேவைக்காக அல்ல என்ற பதில் கொடுக்கக்கூடிய தன்மானம் அவளுக்கு ரொம்பவே அவசியம். அதற்காகவோ என்னவோ, எப்போதுமே நானாக நெருக்கமான உரையாடல்களை முன்னெடுக்க முனைந்ததில்லை. சந்திப்பொன்றில் நிகழ்ந்த முத்தத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல அத்தனை சாத்தியங்களும் இருந்தன; செய்யவில்லை. ‘நாம இதப் பத்தி பேசணும்’ என்பதில் இந்த விஷயம் ஒரு நாள் விவாதிக்கப்பட்டது. “ஒங்களுக்கு எல்லாவாட்டியும் நானே கேக்கணும்ல.. ஏன் என்ன இப்படி ப்ரிமிட்டிவா ஃபீல் பண்ண வைக்கிறீங்க?” என்றாள். “இல்ல.. ஒனக்கு இது ரொம்ப ஊண்டிங்கான விஷயமா இருக்கக்கூடாது.. அதுக்காகத்தான்..” என்றதற்கு, “நீங்க கேட்டு நா வேணாம்ன்னு சொன்னா என்ன இப்ப ஒங்களுக்கு.. எங்கிட்ட ஏன் இவ்வளோ ஈகோ பாக்குறீங்க..” என்றாள். “ஸீ.. ஒனக்காக யோசிச்சுதான்..” என்று என் தூய்மைக்கு சவுக்காரம் போடுவதற்குள், “மைரு.. எனக்கான டெஸிஷன நீங்க எடுக்காதீங்க.. என்னோட பிரச்சனய நா யோசிச்சுக்கிறேன்..” பொரிய ஆரம்பித்துவிட்டாள்.
எப்போதேனும் கசப்பு வலுத்து என்னுடைய மறைகுணம் வெளிப்பட்டு ‘பிரேக்கப் பண்ணிக்கலாம்’ என நிறுத்தும்போது இதே வார்த்தையை சொல்லுவாள். “அந்த டெஸிஷன நாதான் எடுக்கணும்.. யு காண்ட்..”. அதன் அர்த்தம் புரிந்ததில்லை; எனக்கு வேண்டாமென்ற முடிவையெடுக்க இவளென்ன தடை சொல்லுவது என்றிருக்கும். “இந்த செப்பரேஷன் என்ன ஒரு டார்க்னஸ்ல விட்டுடும்.. வெளிய வரவே முடியாது.. அதெல்லாம் யோசிக்கவே மாட்டீங்கள்ல.. என்னோட ஒவ்வொரு மூவ்லயும் கொஞ்சமாச்சும் ஒங்களோட ப்ரெஸன்ஸ் இருக்கு..” – நாடக வார்த்தைகளெனப் புறந்தள்ள முடியாதவை; இன்றைய நிலையிலிருந்து யோசித்தாலும் அத்தனை சத்தியமானவை. அவளுடைய சராசரி இயக்கங்களில் மிகச்சிறிய வடிவிலேனும் நான் இருக்கத்தான் செய்தேன். எத்தனை வெறுப்பிலும் விட்டுவிடமுடியாத நேசம் நிச்சயம் மிச்சமிருக்கவே செய்தது.
அவளுக்குத் தன் அன்றாடத்தின் சின்னச்சின்ன நகர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் அதிக விருப்பமிருந்தது. பொறுத்துக் கவனிக்கும் வழக்கம் அதிகம் இல்லாததாலோ என்னவோ, கேட்கும் எந்தவொரு விஷயத்திற்கும் இடையிடையே அதே விஷயத்தையொட்டிய என் நினைவிலிருந்து கடந்தகாலத்தை முன்வைக்க தவிர்க்கவே முடிந்ததில்லை “நடுநடுவுல எதாச்சும் ஒங்க சைட்லேந்து சொல்லிட்டே இருக்கணும்.. ஆல்வேஸ் டாமினண்ட்..” என்று கேலி செய்வாள். இப்படி சொன்ன அடுத்தநாள் எதுவும் குறுக்கிடாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால், “மை காட்.. நா சொன்னதுக்காகவா? ஹவ் சில்லி ஆர் யூ..” நிறுத்தவே முடியாமல் கலகலவென சிரிப்பாள். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சமயங்களில் முதிர்ச்சியற்றவனாகத்தான் நடந்துகொண்டிருக்கிறேன். பதினோரு ஆண்டு இடைவெளிக்கான பக்குவத்தை – தவறுகளையும் குறைகளையும் ஏற்கக்கூடியவன் – எப்போதுமே எதிர்பார்ப்பவளாகத்தான் இருந்திருக்கிறாள். நானோ சமவயதினனாக நடந்துகொள்ளவே முயன்றபடி இருந்திருக்கிறேன். வயது வித்தியாசத்தை அருகச்செய்வது என்னை சற்று இலகுவாக்குமென நம்பியிருக்கிறேன். வயதுப் பேதம்தான் தனக்கு விவரிக்கமுடியாதொரு பாதுகாப்புணர்வு கொடுப்பதாக அவள் சொல்லும்போதெல்லாம் துளியேனும் கலவரப்படாமல் இருந்ததில்லை.
சொல்லப்போனால், தேக்கிவைத்து வெடிப்பதை மட்டும்தான் என்னுடைய ஒரே குறையாக பல முறை சொல்லியிருக்கிறாள். “ஆஸ் ய பெர்ஸன், யு ஹாவ் நோ அதர் ஃப்லாஸ்” இந்த உறவிற்குள் இப்படியொரு வார்த்தையா எனப் பார்ப்பேன். “இந்த ரிலேஷன்ஷிப்ப வெச்சு ஒங்கள தப்பு சரின்னு ஜட்ஜ்மெண்ட்டலா சொல்ல எனக்குமே எந்த தகுதியுமில்ல.. பட் அதுலயுமே, வேற யாருமா இருந்தா எதாவது ஒரு பக்கம் நிச்யமா காம்ப்ரமைஸ் பண்ணிருப்பாங்க.. யு ரெஸ்பெக்ட் யுவர் பீப்பிள்.. அண்ட் யு டேக் பெய்ன் ஃபார் தட்.. நானா இருந்தாகூட இப்படி இருந்திருப்பேனான்னு தெரியாது” என்பாள். தன்னுடைய மனிதர்களை மதிப்பவன் என்ற உயரத்தில் வைக்கப்பட்டிருப்பவனால் அந்த நம்பிக்கைக்கு எதிர்முனையில் நிற்கமுடிவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. என்னுடைய கோவம் அத்தனை மோசமான முகத்தை எனக்கு அளித்திருக்கும். “நெஜமாவே நீங்க என்ன லவ் பண்றீங்களா?” என்னால் பதிலே சொல்லமுடியாது. அக்கணத்தில் இல்லையென்று சொல்வதுகூட என் புத்திக்கு சாத்தியம். “இல்ல இப்படியொரு பர்ஸனதான் நா லவ் பண்றனா.. சத்யமா ரொம்ப அசிங்கமா இருக்கு..” உடைவுக்கு நடுவேதான் இந்த வார்த்தைகளைக் கேட்கமுடியும். விளக்குவதாக நினைத்து, “நா ரொம்பவே நார்மலா எல்லா விஷயத்தையும் எடுத்துக்குறேங்கறதுக்காக.. வென் இட் கோஸ் பியாண்ட் ய பாயிண்ட்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, “நோ.. ஹெல் நோ..” அழுகையோடே குரலை உயர்த்துவாள், “நீங்க நார்மலா எடுத்துக்கல.. அடக்கி மனசுல வெச்சுக்குறீங்க.. நார்மலா எடுத்துக்கிட்டா சேத்து வெச்சு கத்தமாட்டீங்க..” இத்தனை அழுகையிலும் எப்படி இந்த அலுப்பூட்டும் தர்க்கத்துடன் பேசமுடிகிறது என்று மேலும் கோவம்தான் வரும். “ஆமா.. சரி அப்டியே இருக்கட்டும்.. அதுக்காக ஒன்ன மாத்திக்கப் போறியா..? இல்லேல்ல..” குத்திக் கிழிக்கவேண்டும் என்ற மூர்க்கம் எங்கிருந்தோ வந்துவிடும்.
“ஒங்களால நா அழும்போதுகூட கத்திட்டே இருக்கமுடியும்ல..” ஓரிரு நாட்கள் கழித்து சாவதானமாக கேட்பாள். பதிவுசெய்து வைத்திருக்கும் அழைப்பை அனுப்பி கேட்கச் சொல்லுவாள். கொதிப்பு அடங்கியிருக்கும்போது ஒருவன் இக்கேள்விக்கு சரணடையத்தான் வேண்டும். “கொஞ்சம் ஷாட் டெம்பர்ட்.. மாத்திக்க முடியல..” மாறவேண்டியது நான்தானென ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. உடனே மறுமுனையில் நிறம் மாறும். “ஷாட் டெம்பர்ட் இல்ல.. இல்-டெம்பர்ட்.. வீட்ல அவங்ககிட்டயும் இப்படிதான் பிஹேவ் பண்ணுவீங்களா?” கூண்டிலேயே நிறுத்திவிடுவாள். ஆமாம் / இல்லை என்ற பதிலே சொல்லமுடியாத இப்படியான அநேக கேள்விகள் உண்டு.
அவளுடைய எண்ணங்களை ஒத்திசைத்துத்தான் நான் பேசவேண்டும் என எப்போதுமே எதிர்பார்த்திருக்கிறாள். பிசிறி விலகும் வெளியிருந்தும் நானும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவே விரும்பியிருக்கிறேன். அதற்கான சிறிய விலையாகவே என் நிறுவைகளைப் பிழையாக்கிக்கொண்டிருக்கிறேன். அவள் சரியென்றும் பிழையென்றும் அளவிடுவனவற்றை ஆமோதிக்க கூச்சமேயில்லாமல் அபத்த விளக்கங்களைத் தயாரிப்பது ஒருவிதத்தில் தன்வதைதான். ஏன் அப்படி செய்தேனென விளக்கமுடியவில்லை. அவளால் விரும்பப்படுவனாக இருப்பது எனக்குப் பிடித்திருந்தது, அவ்வளவுதான்; மனத்தளவில் அது எனை உயர நிறுத்தியது.
பெங்களூரில் ஆய்வுக்காக இணைந்த புதிய அணியைப் பற்றி நிறையவே சொல்லுவாள். அவர்கள் எத்தனை சிறந்தவர்கள் என அவள் சொல்லும்போது ஏற்கனவே பரிச்சயமானவர்களைப் பற்றி பேசுவதைப்போல ஆமாம் ஆமாம் என்பேன். அவர்களின் வார்த்தைகளுக்கு மேன்மையான அர்த்தத்தை தருவித்துச் சொல்லி மேலும் மெருகூட்டுவேன். இவையெல்லாம் ஆரம்பத்தில் எல்லோருடனும் அவளுக்கு இணக்கமான போக்கு இருந்த நேரத்தில் நடந்தவை. பின்னாளில் ஒவ்வொருவராக அவள் பார்வைக்கு வெளுக்க ஆரம்பித்தார்கள். அசூயையின்றி அவர்களைச் சபிக்க ஆரம்பித்தேன்; அவர்களின் சராசரி சுயநலப்போக்குகளைக்கூட பூதாகரப்படுத்தி வன்மையாக நான் விமர்சிப்பது அவளுக்கு ஆறுதலளித்தது.
மட்டுமின்றி, ஆய்வறிக்கை தயார் செய்ய வழிகாட்டியாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை நிர்ணயித்திருந்தார்கள். அறவே பொருந்திப்போகவில்லை. “காலாகாலத்துல கல்யாணத்த பண்ணாம அவளோட டிப்பெல்லாம் வந்து எம்மேல எறக்குறா.. எது கேட்டாலும் வெட்டி வெட்டிதா பதில் சொல்றா..“ நாளுக்கு நாள் இருவருக்குமான இறுக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. “அவளுக்கு எப்டியோ நாவொரு கேரிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு தெரிஞ்சிருக்கு.. அந்த காண்டு தெரியுது நல்லா.. நா ஃபோன் யூஸ் பண்ணாலே எரிச்சலாவுறா..” சின்னச்சின்ன சீண்டல்களுக்கும் இவளிடமிருந்து அளவிற்கதிகமான எதிரீடுகள் முளைத்தன. பாராத அப்பெண்ணிடமிருந்து தினந்தோறும் புதிய குறைகளையும் குற்றங்களையும் நான் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அடுத்த ஆறு மாதம் எப்படி அப்பெண்ணை சமாளித்து அறிக்கையைச் சமர்ப்பிப்பது என்பதைத் தாண்டி எங்களுக்கு பேச எதுவுமே இல்லை என்றளவில்தான் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் உறைந்திருந்தன. என்னையொரு ஆய்வு மாணவனுக்கான பதற்றத்திலேயே அந்நாளில் வைத்திருந்தேன்.
எப்போதேனும் கொஞ்சம் விடுபடல் வேண்டி, இதைவிட மோசமான சூழலில் மோசமான மனிதனுக்குக் கீழிருந்துதான் என்னுடைய ஆய்வறிக்கையை நிறைவு செய்தேன் என்று அவளைத் தேற்றுவதற்காக சொல்லப்போனால், “ஐயோ.. ஒங்க பழய கதெயெல்லாம் வேணாம்.. இட் டஸின்ட் ஹெல்ப் மீ..” என கத்துவாள். நான் அணுக விரும்பாத விதத்தில் அவள் அப்பிரச்சனையை அணுகினாலும் அதை மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமலிருப்பதோடு அல்லாமல், அவளை அத்திசையிலேயே உத்வேகப்படுத்த வேண்டியிருந்தது. “ஒனக்கு எதுதாம்ப்பா ஹெல்ப் பண்ணும்?” என விரக்தியுடன் கேட்டால் தயக்கமேயில்லாமல் “அத நீங்கதான் யோசிக்கணும்” என்பாள். சுர்ரென்றிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாத எல்லையை கிட்டத்தட்ட கடந்திருந்தேன். மாதக் கணக்கில் ஒரே விஷயத்தில் ஏற்படும் ஒரே மாதிரியான பிரச்சனைக்கு – அதையெல்லாம் முழுமையாகக் கடந்து வந்து வாழ்வின் வேறொரு கட்டத்திலிருக்கும் – என்னிடமிருந்து வெவ்வேறு தீர்வுகளையும் ஆறுதலையும் எப்படி எதிர்பார்க்கிறாளென எரிச்சல் மண்டும். தனிப்பட்ட முறையில் தீவிர உளநெருக்கடி. பணியிடத்திலும் அக்கறைக் கோளாறு. சொன்னதற்கு, ‘கொஞ்சம் எனக்கு இதெல்லாம் செட்டில் ஆகுற வரைக்கும் டூ வீக்ஸ் லீவ் எடுங்க’ என்றாள். இந்த உறவிலிருந்து விலகிக்கொள்ளலாமாவென ஒவ்வொரு சிகரெட்டிலும் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வினாடி அழுத்தி யோசித்தாலும் அத்தனையும் பூஜ்ஜியமாக தெரிந்தது.
“இதுல எதுமே இல்ல எனக்கு.. ஏதோ ஒனக்காக மட்டும்தான் இத கேரி பண்ணிட்டிருக்கேன்னு தோனுது..” எப்படி இதைச் சொன்னேனெனத் தெரியவில்லை. அவள் வழக்கத்திற்கு மாறாக மெளனித்திருக்க, நிறுத்தாமல் தொடர்ந்தேன், “சுத்தமா ரெஸிப்ரோக்கேஷனே இல்ல இதுல.. எதோ நா மட்டும் கொடுத்துட்டேயிருக்கமாரி இருக்கு.. இவ்வளோ எஃப்பர்ட்ஸ்லாம் எதுக்குன்னு இருக்கு இப்போ..” அவள் விடும் எந்த வார்த்தையையும் பற்றிக்கொண்டு ஏறி நசுக்க தவித்துக்கொண்டிருந்தேன். மாறாக நிலவிய அமைதியில், இங்குமங்குமாக உள்ளிருப்பவற்றைக் கொட்ட ஆரம்பித்தேன். “நடுவுல ரெண்டு நாள் ரொம்ப தலவலின்னு சொன்னேன்.. லீவ் போட முடியாம அத்தன ஸ்ட்ரெஸ்லயும் வேலைக்கு போயிட்டிருந்தேன்.. அதப் பத்தி அக்கறப்பட்டு விசாரிக்கவேணாம்.. ஒனக்கு அது ஈஸியா வராது (நானே ஏன் இன்னும் அவளுக்காகவும் வாதாடுகிறேன் என உள்ளுக்குள் கொந்தளிப்பாக இருந்தது) அட்லீஸ்ட் அன்னிக்காச்சும் ரெண்டு வார்த்த ஸூதிங்கா.. போன எடுத்தா அதே சேம் தீஸிஸ் தீஸிஸ் தீஸிஸ்.. பொலம்பல்.. அதர் எண்ட பத்தி எதுமே யோசிக்கமுடியாதுல்ல ஒன்னால..” என தொடர்ந்தபோது இடைமறித்து, “ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?” என்று அவள் கேட்டதும் பளாரென அறையவேண்டும் போலிருந்தது. வாய்ப்பை விடக்கூடாதென, “ஐ டோண்ட் ஃபீல் பீயிங் லவ்ட்.. ஒரு எழவும் இல்ல அங்கேந்து..” முடிந்தளவிற்கு கசப்புடன் திடமாகவே சொன்னேன். நெடுநேரம் மறுமுனை நிசப்தித்திருந்தது. வாயைப் பொத்திக்கொண்டு அழுவதின் தேம்பலொலி மட்டும் இடையிடையே கேட்டது. பலவீனப்பட விருப்பமின்றி இணைப்பைத் துண்டித்தேன். துண்டிக்க துண்டிக்க மீண்டும் மீண்டும் அழைத்தபடியிருந்தாள். எடுத்தால் அதே அமைதி.. அதே அழுகை..
‘நாம இத பத்தி பேசணும்’ என ஓரிரு நாளில் வந்து நிற்பாளென நினைத்ததற்கு மாறாக அன்றிரவே சற்றே நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள் – ‘ஒங்க ஒருத்தரால மட்டுந்தான் எப்போமே என்ன வெறுக்கமுடியாதுன்னு நெனச்சிட்டிருந்தேன்.. ஃபைனலி அதுமே பொய்யாயிடுச்சு.. ஒங்கள ப்ளேம் பண்ணல.. எதோ ஓவர்கான்ஃபிடன்ஸ்.. நம்ம ரிலேஷன்ஷிப் அப்டியில்லன்னு நெனச்சேன்.. ரொம்ப டேக்கன் ஃபார் க்ராண்டட் மாதிரி பண்ணிட்டேன்.. உள்ளுக்குள்ள இருக்கறத இன்னொருத்தரால ஃபீலே பண்ணமுடியாத அளவுக்குதான் நா பிஹேவ் பண்றேன்.. நீங்க எனக்கு எவ்வளோ இம்ப்பார்ட்டண்ட்ன்னோ ஹவ் மச் ஐ வேல்யூ யுன்னோ சொல்லிப் புரிய வைக்கிறது அசிங்கம்.. ஒங்கள நா ஃபோர்ஸ் பண்ணல.. ஒங்க நெலமைல நா இருந்தா இவ்ளோல்லாம் பொறுத்துப்போக மாட்டேன்தான்.. வேணாம்ன்னு ஒங்களுக்கு தோனுச்சுன்னா கஷ்டப்பட்டெல்லாம் இதுல இருக்கவேணாம்..’ மூன்று நான்கு முறை வாசித்தேன். வாக்குவாதமாக இருந்தால் ‘இப்போதுமே உனக்கு நான் தேவை என்ற புள்ளியில்தான் நீ இதை யோசிக்கிறாய். எனக்கு நீ தேவையானவளாக இருக்கும்படி உன்னை உயர்த்திக்கொள்ள நீ யோசிக்கவேயில்லை’ என்று பேசலாம். சொல்லவில்லையே தவிர மனதிற்குள் அத்தனை வறட்டுத்தனத்துடன் இருந்தேன். பதிலே அனுப்பாமல் விலகிவிடலாமாவென யோசித்தேன். இன்னொரு செய்தி வந்தது, “ஓகேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருக்கு.. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ.. ப்ளீஸ்.. கொஞ்ச நாள் இதேல்லாம் பொறுத்துக்கோங்க.. எனக்கே தெரியிது நா நார்மலா இல்ல.. ஒருமாதிரி இந்த தீஸிஸ் விஷயத்துல ரொம்ப ப்ரீஆக்குப்பைடா இருக்கேன்.. இத முடிச்சடுறேன்.. அதுக்கப்பறம் நா புதுசா எதும் மாத்திக்கிறேன்னு பொய் சொல்லல.. அட்லீஸ்ட் நீங்க எதிர்பாக்குற அந்த மியூச்சுவாலிட்டி வந்துரும்.. ப்ளீஸ் இருங்க..” கனிந்துவிடவில்லையெனினும் ஈரமேயில்லாதவனாக நடந்துகொள்ளமுடியவில்லை.
சுமூகமான பின்னர் ஒரு நாள், “ஒங்களுக்கு அன்னிக்கு அனுப்புன டெக்ஸ்ட்ட திரும்ப வாசிச்சுப் பாத்தேன்.. ச்சும்மா அந்த நேரத்து எமோஷன்லல்லாம் அனுப்பல அத.. தட் இஸ் சோ ட்ரூ.. ஒன்னுமே பண்ணமுடியாது நீங்க இல்லாம என்னால..” என்றாள். இயல்பு நிலையிலிருக்கும்போது இப்படிச் சொன்னது நிறையவே கனத்தது. “நாளிக்கு இன்னொரு பெர்ஸன் என் லைஃப்ல வந்தா.. எனக்கெல்லாம் அது அமையாது.. பட் வந்தா சொல்றேன்.. அவன ஒங்களோட கம்பேர் பண்ணியே ஒட்ட முடியாம போகப்போது.. ஒங்கள கொஞ்சமா வெறுக்க கத்துக்கனும் இனிமே..” சிரித்தாள். “இல்லேன்னா.. அந்த நாயி அஜயவே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ரெடியாதான் இருப்பான்.. அப்பப்ப டெக்ஸ்ட் போட்டு ஆழம் பாப்பான் இப்பவும்.. அவன்கூடன்னா ஐ கேன் கண்ட்டினியு திஸ் வித் யூ ஆல்வேஸ்.. எந்த கில்ட்டும் இல்லாம.. சம்ஹவ் நீங்க எப்போமே இருக்கணும் எனக்கு..” ஐந்தாரு வினாடிகள் பிடித்தன எனக்கு. மெல்ல நிதானித்து, “பைத்தியம்” என்றேன்.
மீண்டும் இதையே வேறோரு முறையும் சொல்லியபோது, “நீ ஏன் அப்படி சொல்ற.. என்னோட லைஃப்க்குள்ள வரணும்ன்னு சொல்ல வரல ஒனக்கு?” வயதின் தாழ்வெண்ணத்தில்தான் இதைக் கேட்டிருக்கவேண்டும். “கேட்டா நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. ஐ நோ யுவர் ப்ரையாரிட்டீஸ்..” நிச்சயம் குற்றமாகச் சொல்லவில்லை. “எனக்கு ஆச இல்லாமல்லாம் இல்ல.. ரொம்ப சாதாரண பொண்ணுதான் நா அந்த விஷயத்துல.. பட் எனக்கு எதையும் டெஸ்ட்ராய் பண்ணவேணாம்..”. என்றாவது ஒரு நாள் விலகிச்செல்லப் போகிறவள் என்ற நினைவுக்கு மாறாக, எப்போதுமே அவள் உடனிருக்கவேண்டுமென எனக்குமே அக்கணத்தில் தோன்றியது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்து எல்லாம் சாதகமாக, திருவனந்தபுரத்தில் பணி கிடைத்தது. புது இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் அழுத்தத்தை சீக்கிரமே கடந்துவிட்டாள். “திரும்ப பொலம்ப ஆரம்பிக்கப்போறான்னு பயந்துட்டீங்களா? பொலம்பறதுக்கு இங்க எவனாச்சும் மல்லுவ புடிச்சுக்கிறேன்.. பயப்படாதீங்க..” என்றதற்கு, “அதச்செய் மொதல்ல.. சத்யமா இன்னொருவட்டில்லாம் முடியாது..” என்றேன். “ச்ச.. கொஞ்சம்கூட பொஸஸ்ஸிவா பேச மாட்டீங்க.. அப்பாடான்னு சொல்றீங்க..” கோவிப்பதைப் போல சொன்னாள். “நீ என்ன பொலம்பதானப் போற.. அதத்தாண்டி போமாட்ட.. தெரியும் எனக்கு..” என்றேன். “ஓவர் கான்ஃபிடன்ஸ் இதெல்லாம்.. இதுக்குன்னே சீக்கிரம் ஒரு பையன புடிக்கிறேன் இருங்க.. ஒரு தமிழ் பையன் இருக்கான்.. பாத்துட்டே இருங்க”
விளையாட்டாக குறிப்பிட்ட அந்த தமிழ்ப் பையனைப் பற்றித்தான் பின்னாட்களில் அதிகம் பேச ஆரம்பித்தாள். சில நாட்களில் அவனைப் பற்றி பேசுவதை அப்பட்டமாக நிறுத்தினாள் – அதுதான் விநோதமாக இருந்தது. மனத்தொந்தரவில் சிறிய பிசிறுகளும்கூட தனித்துத் தெரிய ஆரம்பித்தன. இயல்பாக இருக்க சிரமப்படுவளாகத் தெரிந்தாள். நிறுத்தி யோசித்தால், விலகிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதோவெனத் தோன்றியது. தடுமாறுவதைப் பார்க்க பரிதாபமாகக்கூட இருந்தது. “நீ எதாச்சும் என்கிட்ட சொல்லனுமா?” கேட்டுவிட்டேன். “என்ன சொல்லனும்.. ஒன்னு இல்லயே பேபி..” அந்த பேபி ரொம்பவே செயற்கையாகப்பட்டது. சந்தேகப்பட்டு விசாரிக்கும் தோற்றத்தையெடுத்துக்கொள்ள தயாராக இருக்கவில்லை; ஏதோ மழுப்பி பேச்சை முடித்துக்கொண்டேன். அதேநேரம், அன்றாடப் பேச்சை நானாக தொடங்குவதை நிறுத்தவேண்டுமென முடிவு செய்துகொண்டதோடு, நிறைவேற்றவும் செய்தேன். இரு வாரங்களாகியும் அவளுக்கு அது அந்நியமாகப்படவில்லை என்பதே போதிய பதிலைச் சொல்லுவதாகத் தெரிந்தது.
“எக்ஸ்ப்ளைன் பண்ற கஷ்டமெல்லாம் ஒனக்கு வேணாம்.. எனக்கே புரியுது.. ஐ வில் மூவ் ஸ்லோலி.. அண்ட் இதுல ஒன்ன எதுமே ஜட்ஜ் பண்ணமாட்டேன்.. ஃபீல் ஃப்ரீ..” என்று அனுப்பினேன். பின்னிரவு இரண்டரை மணி. குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டாள். ஏதோ தட்டச்சு ஆகி மீண்டும் அழிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. சட்டென எதுவுமே பதில் வராமல் ஓய்ந்தும்விட்டது. ‘என்ன?’ என்று நான் அனுப்பிய செய்தி ஒற்றை டிக்குடன் நின்றது. இம்மியும் தூக்கம் வரவில்லை.
“எனக்கே என்ன பத்தி ஒங்க அளவுக்கு தெரியாது.. எப்டியும் நீங்க கேட்ருவீங்கன்னு ஐ வாஸ் ஃபியரிங் த மொமண்ட்.. ஸ்டில்.. நீங்களே கேட்டுட்டா பெட்டர்ன்னுதான் வேண்டிட்டு இருந்தேன்.. பட் சத்யமா நீங்க கேக்குற மாதிரி இல்ல.. ப்ளீஸ் மூவ் பண்றேன்னுல்லாம் எப்பயுமே சொல்லாதீங்க.. கண்டிப்பா இந்த ஃபியூ வீக்ஸ் நா முன்ன மாதிரி ஒங்கக்கிட்ட இல்ல.. பட் இதெல்லாம் புரியாத ஆள் கெடையாது நீங்க.. புது ரிலேஷன்ஷிப்போட யர்லி டேஸ்ல இருக்க ச்சின்ன ஹை தான்.. சீக்கிரமே அதெல்லாம் போயிடும்.. நாம எப்பவும்போலத்தான் இருப்போம்..” மறுநாள் காலை பேசும்போது படபடவென ஆரம்பித்தாள். எங்கோவொரு மூலையில் என் அனுமானத்தை மறுப்பாளென அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும் – ‘நாம் பிரியப்போவதில்லை’ என்ற தேற்றலையுமேகூட தோற்றுப்போன மனநிலையில்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களுக்குள் இருப்பதாகச் சொல்லும் அந்த ‘ச்சின்ன ஹை’ முன்பு எங்களுக்குள் இருந்ததாவென யோசித்தேன். இனி அவர்களோடும் அவனோடும் எங்களையும் என்னையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கப்போகிறேனென நினைத்துக்கொண்டிருக்கும்போதே, “அண்ட் என்னால ஒவ்வொரு மொமண்ட்லயும் அவன ஒங்களோட ரிலேட் பண்ணாம இருக்கமுடியல.. யு ஹாவ் செட் சம் ஸ்டாண்டட்..” அழுகையும் சிரிப்புமாகச் சொன்னாள். “ஹீ இஸ் ய வெரி ஆடினரி கை.. அவனால..” என்று அவள் தொடர நினைத்த இடத்தில் வெட்டினேன். “வேணாம்.. ஃபார் காட் சேக்..” அவள் அமைதியானாள். “மத்தவங்க எல்லார பத்தியும் சொல்ற மாதிரி அந்தப் பையன பத்தியும் என்கிட்ட ஷேர் பண்ணவேணாம்.. நா எதாச்சும் சொன்னா நிச்சயமா அதுல பயஸ் இருக்கும்.. சோ ப்ளீஸ்..” புரிந்துகொண்டாள். “இட் மஸ்ட் பீ ய ஹெல் ஃபார் யூ..” தவிப்பவளை நான்தான் இதற்கும் தேற்றவேண்டும். “பட் ப்ளீஸ் ஸ்டே.. வீ வில் பீ ஓகே சூனர்..” தீர்க்கமாகச் சொன்னாள்.
பின்னாளில் அன்றாடங்களைப் பகிர்வது அவளுக்குச் சுலபமாக இல்லை. முன்புபோல அத்தனையையும் கொட்டமுடியவில்லை. எதை விடுத்துப் பேசுவது என்பதில் வெளிப்படையாகத் தடுமாறினாள். “ஒங்களால எப்படி அது முடிஞ்சுது.. அவங்கள பத்தி எதுமே கொண்டுவரமாட்டீங்க என்கிட்ட.. நானே எதாச்சும் கிளறிதான் ஹர்ட் ஆயிப்பேன் அப்பப்போ.. பட் நீங்களா ஒரு ச்சின்ன இது கூட சொல்லமாட்டீங்க.. ரியலி ஐ யம் ஸ்ட்ரக்லிங் ஆன் தட்..” இதற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. “மே பீ கொஞ்ச நாள்ல என்னாலயும் இத ஹாண்டில் பண்ண முடியும்ன்னு நெனைக்கிறேன்..” அவளே முடித்துவிட்டாள்.
அவள் நம்பியதற்கு மாறாக நாளுக்கு நாள் தணிக்கைகள் அதிகம் அவசியப்பட்டபடி இருந்ததாலோ என்னவோ.. என்னோடு அவளால் ஐந்து நிமிடங்களுக்குமேல் பேசவே முடியவில்லை. தேய்வை அதன் போக்கிலேயே அனுசரிக்க முயன்றேன். இட்டு நிரப்ப அவளும் முயன்றபடி இருந்தாள். நமக்குள் எதுவும் மாறப்போவதில்லை என அடிக்கடி உறுதி சொன்னாள். அவளுக்கே நினைவூட்டிக்கொள்ளத்தான் அப்படிச் சொல்கிறாளெனப் பட்டது.
எப்போதேனும் பொதுவான விஷயங்களைக் கொண்டு உரையாடலை நீட்டிக்கவும் முடிந்தது. அப்படி நீளும் நாட்களில் எதையோ நிகழ்த்திவிட்ட திருப்தி அவளிடம் தெரிந்தது. ஏன் இத்தனை போராடுகிறாள் என்றிருக்கும். துயர நாட்களில் பயன்படுத்திக்கொண்டு இப்போது விலகிவிட்டாளென நினைத்துவிடுவேனென அஞ்சுகிறாளா? அப்படி நினைத்தாலும்தான் என்ன.. விட்டொழித்துவிட்டு குழப்பமின்றி வாழலாம்தானே.. கொஞ்சம் குற்றவுணர்ச்சியுடன் இருந்தால்தான் என்ன கெட்டுவிடப் போகிறது? இக்கேள்விகளையெல்லாம் கொண்டு அவளை அதிகமாகத்தான் நேசிக்க முடிந்தது.
ஓரிரவு பேச்சு எங்களின் தொடக்கநாட்களை மையமிட்டது. அம்முகம் அப்போது எப்படியிருந்தது என்பதையே நான் மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளில் எப்படியெப்படியோ மாறிவிட்டாள் – தாடை சற்று அகண்டு.. வேறு மாதிரி. அணியில் எல்லாருமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பினாள் – முன்பு பார்த்திடாத படம். சிவப்புநிற மேக்ஸியில் அப்புகைப்படத்தில் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நிற்கிறாள். அந்தக் கண்களில் வாஞ்சை தெரிவதைக் குறிப்பிட்டேன். அதற்காகத்தான் இத்தனை நாளும் காட்டியதில்லையெனச் சிரித்தாள். அவளைப் பார்க்கவில்லையேயொழிய அதே பூரிப்புடன்தான் நானும் அப்படத்தில் நிற்கிறேன். அங்கிருந்து எங்கெங்கோ வந்துவிட்டோம் என்றேன். “என்ன உயிரோட புடிச்சு வெச்சிருக்கீங்க..” என்றாள். அவள் அடிக்கடி சொல்லுவதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் பொருட்படுத்திச் சொல்லுவதைப் போலத்தான் இருக்கும். “கிஸ்ஸஸ்” என்று அனுப்பினேன். முறுவலைப் பதிலாக அனுப்பினாள். பேச்சை இன்னும் நெருக்கினேன். இப்போதைய புதிய சூழலில் அவளே ஆரம்பிப்பது சிரமம். நானே தொடர்ந்தேன். மறுத்தாலும் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்று நினைப்பதற்குள், “வேணாம்..” என்று அனுப்பியிருந்தாள். தயாராக இருந்தாலுமே உள்ளுக்குள் அடைத்தது. “பரவால்ல..” என தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே, “எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..” என்ற செய்தி வந்தது. மேற்கொண்டு எதுவுமே அவ்விரவு பேசிக்கொள்ளவில்லை.
“ஐ நோ தட் வாஸ் ஹார்ஷ்.. பட் எனக்கு வேற என்ன சொல்றதுன்னு..”என ஆரம்பித்து அவள் அனுப்பியிருந்த நீண்ட செய்தியை வாசிக்காமல் உடனடியாக அழித்தேன். “நீ எதும்மே எக்ஸ்ப்ளைன் பண்ணவேணாம்.. ஒரு மாசத்துக்கு முன்னவே நா விலகிக்கிறேன்னு சொன்னேன்ல.. ஒனக்கு அவன் ஓகேவான்னு அஸஸ் பண்ற டைம் வரைக்கும் இத கண்டினியூ பண்ணனும்ன்னு தோனுச்சா?” அனுப்பிவிட்டு பார்க்கும் அவகாசம்வரை பொறுத்திருந்து நானே அழித்தேன். “ப்ளீஸ்.. என்ன ஆச்சு இப்ப..” மன்றாடும் குரலில் இச்செய்தியை யூகிக்கமுடியவில்லை. அலட்சியக் குரலே பொருந்தியது. “இப்ப பேசும்போதெல்லாம் அவன ச்சீட் பண்ற மாதிரி இல்லயா ஒனக்கு? நா க்ளோஸா வந்தா மட்டும் ஆக்வடா இருக்குன்னா.. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுதா? யு ஜஸ்ட் வாண்ட் மீ பை யுவர் சைட்.. பக்கத்துல இருக்கனும்.. கொட்றதுக்கு ஒரு வெண்ட்.. அவ்வளோதான்.. புரியுதா ரெஸிப்ரகேஷனே இல்லன்னு ஏன் சொன்னேன்னு.. இதுல என்னத்த நா ஃபீல் பண்ணமுடியும்.. மியர் சப்போர்ட்.. இந்த ஏஜ் டிஃபரன்ஸ்ல யு காண்ட் ஃபைண்ட் எனித்திங் பெட்டர் வித் மீ..” பொரிந்து அனுப்பினேன். துண்டிக்க துண்டிக்க விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தாள். “ஒங்கள நா யூஸ் பண்ணிக்கிட்ட பிக்ச்சர மட்டும் எனக்கு கொடுக்காதீங்க ப்ளீஸ்” உடைந்து அழும் குரலை பதிவு செய்து அனுப்பியிருந்தாள். என்னைத் தொடர்புகொள்ள முடியாதபடி அத்தனை வழிகளையும் அடைத்தேன்.
ஏக்கத்தோடு அல்லாமல் வெறுப்புடன் விலகியதாக என்னை நம்பவைப்பதுதான் அதிலிருந்து அதிக காயமின்றி வெளிவர உதவுமென நம்பினேன். அவ்வுறவில் ஒரு முட்டாளாகவே இருந்திருக்கிறேன் என – அவமானமாகவே இருந்தாலும் – மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். என் பணி முன்னேற்றங்களை இத்தனை நாளும் காவு கொடுத்திருப்பதாகவே தோன்றியது. பண முதலீடுகளில் அக்கறையில்லாமல் இருந்திருப்பதாகப்பட்டதும் நிறையவே குறுகினேன். கீர்த்தி கேட்டுக்கொண்டேயிருந்த டிரைவிங்கை சனி ஞாயிறுகளில் சொல்லிக்கொடுத்தேன். பையனை மாலைகளில் ஷட்டில் வகுப்பிற்கு அழைத்துப்போனேன். தன்முன்னேற்ற/மனநெறி நூல்களை வாசிக்கவேண்டுமென ஏனோ தோன்றியது. தவறவிட்ட தருணங்களை நினைத்தால் அதீதச் சோர்வு மண்டியது. நண்பர்களுடன் சரிசெய்ய முடியாத அளவிற்கு மனத்தொலைவு அதிகமாகியிருந்தது. எல்லாவற்றையும் களைத்துப்போட்டுவிட்டு செல்லும் கொடுங்காற்றைப் போல தெரிந்த இரண்டு வருடங்களைப் புழுங்கி நொந்துகொண்டேன். தோற்றுப்போனவனாக என்னை நினைக்கக்கூடாதென அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது.
நான்கு வாரங்களுக்குள் புதிய வாழ்முறையை வகுத்துக்கொண்டதாக நம்பி முன்நகர ஆரம்பித்தேன். உடனிருப்பவர்கள் என் உற்சாகத்தில் குழம்பினாலும் மனப்பூர்வமாக மகிழ்கிறவர்களாகவே தெரிந்தார்கள். என்னுடன் நேரம் ஒதுக்கிப் பேச அணித்தலைவரும் அதிகம் விரும்பினார். விநோதமாக சிலர் எங்காவது பயணம் போய்வரச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இவையளித்த உத்வேகத்தின் அளவிற்கே என் பலவீனத்தின் வெளிப்படைத்தன்மையும் சுற்றியிருப்பவர்களின் தாட்சண்யமும் அச்சமளிக்க ஆரம்பித்தன. அத்திசையிலேயே யோசனை நீள, சட்டென எங்கிருந்தோ புதிய இருள் கவிந்ததைப் போலிருந்தது. அன்று மதியம் முழுக்க அறைக்கதவைச் சாத்திக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன். கீர்த்தியை அழைத்துப் பேச முயன்று, ஏதோ சமாளித்து வைத்துவிட்டேன். அணித்தலைவரின் அறையில் பார்த்தால், அவர் புறப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். மொட்டைமாடிக்குப் போனவனை காலி கிங்ஸ் பெட்டி பரிகாசம் செய்தது. அந்த மாலையைக் கடந்துவிட்டால் போதுமென்றிருந்தது. அடுத்த நாள் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது. மீட்சியின் ரேகைகள் மெல்ல அழிய ஆரம்பித்திருப்பது தூலமாகத் தெரிந்தது.
மீண்டும் அறைக்கு வந்ததும் அவசரமாக அலைபேசியிலிருந்து அவளுக்கான தடைகள் அத்தனையையும் களைந்தேன். இனம்புரியாத ஆசுவாசம். அவளை மேலும் வெறுக்க ஏதேனும் கிட்டினால் தேவலாமென்றிருந்தது. முகப்புப் படத்தின் இடம் காலியாக இருந்தது – அவளுமே என் இணைப்பை தடை செய்திருக்கலாம். அழைத்துப் பேசலாமாவென ஒரு கணம் யோசித்தேன். மன்னிப்பேதும் கோராமல் தன் தினசரி அல்லல்களை அவள் சொல்ல ஆரம்பித்தால் விலக்கத்தை என்னால் சுலபப்படுத்த முடியும். நிச்சயம் அப்படி பேசமாட்டாள். அசிரத்தையுடன் யதார்த்தத்தை அவள் முன்வைத்தால் என் மனநிலையை மிக மூர்க்கமாக அது சிதைக்கக்கூடும். வட்டத்திற்குள்ளிருக்கும் சாம்பல்நிற பெண் வடிவத்தைப் பார்த்தபடி நின்றேன். என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் முகப்புப் படம் என்னவாக இருக்கமுடியும்? அவனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி எதுவுமா? நெருக்கமாக ஒட்டி நின்று.. கன்னங்களை உரசிக்கொண்டு.. அப்படித்தான் இருக்கமுடியும்.
அலுவலக அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியில் நரைக்கத் தொடங்கியிருக்கும் கிரிதா மயிரைப் பார்த்தபடி நின்றேன். நிகழ்ந்த அந்த முத்தத்தை அன்று நீட்டியிருக்கவேண்டுமென திடீரென தோன்றியது. ‘பெரிய கண்ணியவான் மயிரு’. டையைத் தளர்த்திக்கொண்டேன். அந்த கடைசிக் குறுஞ்செய்தியை மீண்டும் எடுத்துப் பார்த்தேன் -‘எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..’ அடிநெஞ்சின் நமைச்சல் தொண்டைவரை ஏறியிறங்கியது. காணாத அந்த தற்படத்தை வண்ணங்களால் விரிவாக்கிக்கொண்டே இருந்தேன். அவர்களுடைய முத்தங்களுக்கு தடையின்றி அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் உரிமம் உண்டென ஆமோதித்துத் தலையசைத்துக்கொண்டேன். மறுக்க நினைத்தும் மனக்கண்ணில் மின்னலாக அக்காட்சிகள் வெட்டியபடி இருந்தன. பின்கழுத்துப்பட்டையில் வியர்வை இறங்கியது. வஞ்சிக்கப்பட்ட பாத்திரத்தை ஏன் தூக்கி அலைகிறேன் என்ற கேள்வியின் புகைத்திரை மெல்ல விலகுவதைப் போலிருந்தது. பாவனைகளைத் துறந்திருக்கும் புதியதொரு முகம் கண்ணாடியில் தெரிந்தது. ‘ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?’ என்ற அழுகுரல் எங்கிருந்தோ காதுக்குள் ஒலித்தது.
***
மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர். இதுவரை வெளிவந்துள்ள படைப்புகள் – நாவல் – பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் – 2019; சிறுகதைத்தொகுதிகள் – நூறு ரூபிள்கள் – 2020, அநாமதேயக் கதைகள் – 2021, சிருங்காரம் – 2022. தொடர்புக்கு : premamayilan@gmail.com
ஜென்ஸ் பீட்டர் ஜேக்கப்ஸன் (7 ஏப்ரல் 1847-30 ஏப்ரல் 1885) டென்மார்க்கில் பிறந்த எழுத்தாளர், அறிவியலாளர். சொற்பமான நாவல்களும், சிறுகதைகளும் கவிதைகளும்தான் படைத்திருக்கிறார் என்றாலும் டேனிஷ் இலக்கியத்தின் உச்ச எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இயல்புவாதத்தை டேனிஷ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இரண்டு நாவல்களும், ஏழு சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவரின் மரணத்திற்குப் பிறகு கவிதைத் தொகுப்பு வெளியானது. இளம் வயதிலேயே காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். தன் விருப்பத்திற்கேற்ப பயணங்களை மேற்கொள்ள முடியாததினாலும் அறிவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தமுடியாததினாலும் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். புகழ் பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான தாமஸ் மன், தன்னை அதிகம் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவராக ஜேக்கப்ஸனை குறிப்பிடுகிறார்.
1882ல் வெளிவந்த ‘பெர்காமோவில் கொள்ளை நோய்’ என்ற சிறுகதையின் மீது அதன் எதிர்மறைத்தன்மைக்காகவும் இறைநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தீவிர நாத்திகரான ஜேக்கப்பஸன், சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் எழுந்த கண்டனக் குரல்களை மென்மையாகவே அணுகினார். பெரும் துன்பத்திற்கும் அவதிகளுக்கும் உள்ளாகும் மனிதர்கள், வாய்ப்பு கிடைத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்தும் தளைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளத் தயங்குவது ஏன் என்ற விசாரணையை இச்சிறுகதையில் எழுப்புகிறார். நோய்களையும் மரணங்களையும் எந்த விண்ணுலகமும் தடுக்காது என்பதை உணரும்போது எழும் கொந்தளிப்பு இக்கதையில் மிக இருண்மையாகக் கையாளப்பட்டிருக்கிறது. மனிதனை ஒரு பாவப்பிறவியாக கருதுவதற்கு எதிராகப் பல கேள்விகளை இச்சிறுகதை எழுப்புகிறது.
மனிதனின் பாவங்கள்தான் கொள்ளை நோய்க்கான காரணமா? இப்பாவங்களை இனி ஏற்றுக்கொள்ள ஒருவரும் இல்லையா? இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தூதர் தன் கடமையை நிறைவேற்றாமல் திடீரென மறைந்துவிட்டால் அது கடவுளை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பென்றா அல்லது மீண்டும் அத்தூதரை உருவாக்க வேண்டும் என்ற தவிப்பா, எது எளிய மானுடனின் உணர்வாக இருக்க வேண்டும்?
பெர்காமோவில் கொள்ளை நோய்
பழைய பெர்காமோ நகரம் ஒரு தாழ்வான மலையின் உச்சியில் மதிற்சுவர்களும் வாயிற்கதவுகளும் சூழ வேலியிடப்பட்டு அமைந்திருந்தது. புதிய பெர்காமோ நகரம் அதே மலையடிவாரத்தில் நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றுக்குத் தன்னை வெளிக்காட்டியபடி இருந்தது.
ஒரு நாள் புதிய நகரத்தில் கொள்ளை நோய் தோன்றி அச்சந்தரும் வேகத்தில் பரவத் தொடங்கியது; பேரெண்ணிக்கையில் மக்கள் மாண்டனர், பலர் சமவெளிகளைக் கடந்து உலகின் நான்முனைகளுக்கும் தப்பித்தோடினர். பழைய பெர்காமோ நகரின் குடிமக்கள் காற்று வெளியைச் சுத்தம் செய்யும் நோக்கில் கைவிடப்பட்ட இந்நகரின் மீது தீ மூட்டினர். ஆனால் அதனால் நன்மையென ஏதும் விளையவில்லை. மலை மீதிருந்த நகரத்திலும் மக்களின் மரணங்கள் தொடங்கியது; முதல் நாளில் ஒருவர், பின்னர் ஐந்து, அதன் பின்னர் இருபது… கொள்ளை நோய் அதன் உச்சத்தைத் தொட்டதும் மேலும்மேலுமென மரிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது.
புதிய நகரத்தில் வாழ்ந்த மக்கள் தப்பிப் பறந்தோடியதைப் போல இவர்களால் வெளியேற இயலவில்லை.
அதையும் முயன்ற சிலர் இருந்தனர், ஆனால் அவர்கள் வேட்டையாடப்பட்ட ஒரு விலங்கின் எஞ்சிய முடமான வாழ்வினை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்; கழிவுக் குழிகளிலும் ஓடைகளிலும், வேலிகளின் அடியிலும், பச்சை வயல் வெளிகளிலும் பதுங்கி வாழவேண்டியிருந்தது. குறு நிலக்கிழார்களின் வீடுகளுக்குள் கொள்ளை நோயினை முதலில் பரப்பியவர்கள் தப்பியோடி வந்தவர்கள்தான் என்பதால், காணும் அந்நியர்கள் அனைவரின் மீதும் கற்கள் எறியப்பட்டன. நிலங்களின் மீது கால் வைத்திராதபடி அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அல்லது சற்றும் இரக்கமும் கருணையுமின்றி ஒரு பித்தேறிய நாயைப் போல அடித்து வீழ்த்தப்பட்டார்கள். அது நியாயமான தற்காப்பு செயல்தான் என்றும் இரக்கமற்றவர்கள் நம்பினார்கள்.
பழைய பெர்காமோ நகரத்து மக்கள் எங்கும் வெளியேறிட முடியாமல் இருக்கும் இடத்திலேயே தங்கிட நேர்ந்தது. நாளுக்கு நாள் நோயின் தீவிரமும் கூடி வளர்ந்தது; இக்கொடூரமான நோய் வேகமாகப் பற்றிப் பரவும் தன்மையுடையதாகவும் பெரு வேட்கை கொண்டதாகவும் மாறியது. பேரச்சம் தன்னிலை மறக்கும் பித்தாக வளர்ந்தது. ஒழுக்கம் நல்வாழ்வு என்பவற்றையெல்லாம் பூமி வாய் பிளந்து முழுங்கிவிட்டதைப் போல மனித இயல்பின் ஆகப் பெரும் கேடுகள் அவற்றுக்குப் பதிலாக மேலெழத் தொடங்கின.
கொள்ளை நோய் முதன்முதலில் தோன்றிப் பரவத் தொடங்கிய நாட்களில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் அதை எதிர்த்துப் போராடினர். சடலங்கள் குறித்த நேரத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்தனர். ஒவ்வொரு நாளும் நகரச் சதுக்கங்களில் பெருந்தீயெழுப்பி தெருக்களினூடாக நற்புகை வழிந்தோடச் செய்தனர். ஜூனிபர் தழைகளும் புளிங்காடி நீரும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இவையனைத்திற்கும் மேலாக மக்கள் பெருங்கூட்டமாகவும் தனித்தும் அதிகாலையிலும் பின்னிரவிலும் தேவாலயத்தை நாடிச்சென்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்கள் பிரார்த்தனைகளுடன் இறைவனின் முன்னால் வந்து நின்றனர். ஒவ்வொரு நாளும் கதிரவன் மலைகளின் பின்னால் மறையும்போது தேவாலயத்தின் அத்தனை மணிகளும் சொர்க்கத்தை நோக்கி அலையாடும் தன் நூற்றுக்கணக்கான குரல்வளைகளிலிருந்து ஓலமிட்டு அழைப்பொலிகளை எழுப்பின. நோன்புகள் ஒருங்கமைக்கப்பட்டன, அன்றாடம் புனித திருச்சின்னங்கள் ஆல்டரின் மீது எழுந்தருளின.
இறுதியாக ஒரு நாள் இதற்குமேல் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்றானபோது, நகர் மண்டபத்தின் மாடங்களில் ஏறி, ஊதுகுழலிலும் இசைக்கொம்புகளாலும் பெருஞ்சப்தத்தினை எழுப்பி, கன்னி மாதாவோ, நடுவர் நீதிமானோ அல்லது நகரத் தலைவரோ இப்போதே இங்கு தங்களைக் காக்க உடனே இங்கு வரவேண்டும் என்று கட்டளை இயற்றினர்.
ஆனால் இவையெதுவுமேகூட உதவவில்லை; உதவக்கூடிய ஒன்றென அங்கு எதுவுமேயில்லை.
மக்கள் இதை உணர்ந்தபோது, விண்ணுலகம் தங்களைக் காக்காது, காக்கவும் இயலாது என்ற நம்பிக்கை வலுப்பெற்றபோது, வெற்றுக் கைகளை மடிமீது வெறுமையில் விரித்துப் போட்டு, ‘இனி வருவது வரட்டும்” என்றும் கூறத்தொடங்கினர். இல்லையில்லை… உண்மையில், ஒரு இரகசிய வஞ்சகமான நோயெனப் பதுங்கியிருந்த ‘பாவம்’ தற்போது வெளிப்படையாகவே கொடூரமான சீற்றங்கொண்ட கொள்ளை நோயாக மாறிவிட்டதைப் போலத் தோன்றியது. இது உடல் நோயோடு கை கோர்த்துக்கொண்டது. ஒன்று உடலை அழிக்க முயன்றுகொண்டிருந்தபோது மற்றொன்று ஆன்மாவைத் தேடி வேட்டையாடி அழித்துக்கொண்டிருந்தது. அவ்வளவு நம்புதற்கரியது அவற்றின் செயல்கள், அவ்வளவு பெரியது அவை உண்டாக்கிய பேரழிவுகள்! பெருந்தீனிக்காரர்களின் புலம்பல்களோடும் குடிகாரர்களின் அலறலோடும் தெய்வ நிந்தனையும் இறை வெறுப்பும் காற்றில் நிறைந்தது. பகலிலேயே நடந்தேறிய மட்டற்ற ஒழுக்கக்கேடுகளை விட பெரியதாக எதையும் தறிகெட்ட இரவுகள் ஒளித்துவிடவில்லை. “நாளையே மரிக்கப்போகிறவர்கள் நாம், இன்றே உண்டு தீர்ப்போம்!” – ஏதோ இவ்வரிகளை அவர்கள் சந்தத்திற்கேற்ப இயற்றி பல்கருவிகள் கொண்டு முடிவிலாத ஒரு இசையரங்கில் தொடர்ந்து இசைத்ததைப் போலிருந்தது. ஆம், அத்தனை பாவச்செயல்களும் அரங்கேறின. அதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒன்றென ஏதுமிருந்தால், அவை அங்கே புனைந்துருவாக்கப்பட்டது. ஏனென்றால், அவர்கள் தங்கள் துர்மார்க்கத்தை பின்பற்றுவதற்கு ஏதுவான அத்தனை வழிகளையும் கைக்கொண்டனர். விண்ணுலகம் உறுதியளிக்காத பாதுகாப்பை அவர்கள் தீய சக்திகளின் பேராற்றலினால் பெற்றுவிடலாம் என்று நம்பியதால் இயற்கைக்கு மிக முரணான தீயொழுக்கங்கள் அவர்களிடையே செழித்தோங்கின. மேலும், பில்லி சூனியம், மாயமந்திர வித்தைகள், பேயோட்டுதல் போன்ற தீச்செயல்களைக்கூட அவர்கள் நன்கு கைவரப்பெற்றனர்.
அடுத்தவர்க்கு இரங்குதல், உதவிகள் பரிமாறுதல் என்பதெல்லாம் அவர்களின் மனங்களிலிருந்து முற்றாக மறைந்துவிட்டிருந்தது; ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே கொண்டிருந்தனர். நோயில் விழுந்தவன் பொது எதிரியாகக் கருதப்பட்டான். யாராவது கொள்ளை நோயின் முதல் தாக்குதலான முதற் காய்ச்சலால் சோர்வுற்று துர்பாக்கியமாக தெருவில் விழ நேர்ந்தால் அவனுக்கென ஒரு கதவும் அங்கே திறக்கவில்லை. ஆனால், அவன் மீது கற்களை வீசியும், ஈட்டியால் குத்தியும், ஆரோக்கியமானவர்களின் பாதையிலிருந்து வலிந்து வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டான்.
நாளுக்கு நாள் கொள்ளை நோயின் தீவிரம் அதிகரித்தது, நகரத்தின் மீது கோடை வெயில் அழல் வீசியது. ஒரு துளி மழையும் பொழியவில்லை, மெல்லிய இளங்காற்றுகூட சுழன்றசையவில்லை. வீடுகளில் அழுகிக் கிடக்கும் சடலங்களிலிருந்தும், பூமியில் பாதி புதைக்கப்பட்டிருந்த பிணங்களிலிருந்தும் உண்டாகிய மூச்சடைக்கும் துர்நாற்றம் தெருக்களில் அசைவற்று தேங்கி நிற்கும் காற்றுடன் கலந்து வீசியது. கருங்காகங்களை அது பெருங்கூட்டமாக ஈர்த்ததில், கூரைகளும் சுவர்களும் கருமையைப் போர்த்திக்கொண்டன. வெகுதூரத்திலிருந்து வந்திருந்த விசித்திரமான, அருவருப்பான பெரிய பெரிய பறவைகள் அழுகிய உடல்களைக் கொத்தும் ஆர்வமுடைய அலகுகளுடனும், வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் கூரிய நகங்களுடனும் நகரைச் சுற்றியிருக்கும் சுவர்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்தன; அவை பேராசை மிகுந்த உளைவற்ற கண்களால் நோக்கியபடி காத்திருந்தன. இந்த துர்பாக்கியம் பீடித்த நகரம் சவக்குழியாக மாறுவதற்குக் காத்திருப்பதைப் போல.
கொள்ளை நோய் பரவத் தொடங்கி பதினோரு வாரங்கள் ஆகியிருந்தபோது, சமவெளியிலிருந்து புது நகரத்துத் தெருக்களினுள் புகை பூசிய கற்சுவர்களுக்கும் மரவீடுகளின் கருஞ்சாம்பல் குவியல்களுக்கும் இடையே காற்றைப் போல மக்கள் ஊர்வலம் ஒன்று புகுவதைக் காவல் கோபுரத்தின் மீதிருந்த காவல்காரனும், உயரமான இடங்களில் நின்று கொண்டிருந்த மற்றவர்களும் கண்டனர். பேரெண்ணிக்கையில் மக்கள் திரள்! ஆண்களும் பெண்களும் வயதானவர்களும் இளைஞர்களுமென குறைந்தது அறுநூறு அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள். பெரிய கறுப்புச் சிலுவைகளை அவர்கள் சுமந்து வந்தனர். அவர்களின் தலைக்கு மேல் நெருப்பைப் போல தீ சிவப்பில் பரந்த பதாகைகள் மிதந்துகொண்டிருந்தன. அவர்கள் பாடல்களைப் பாடியபடி முன்னோக்கி நகர்ந்து வந்தனர். மனக்கசப்பின் வெந்துயரளிக்கும் சுரங்கள் சலனமற்ற வெப்பக்காற்றில் மேலெழுந்தன.
பழுப்பு, சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்களில் இருந்தன அவர்களின் ஆடைகள், ஆனால் அவர்களனைவரும் சிவப்பு நிற சின்னமொன்றை மார்பில் அணிந்திருந்தனர். அவர்கள் நெருங்கி வருகையில்தான் அது சிலுவை என்று தெளிவானது. அவர்கள் அருகில் வருவதற்கே வெகு நேரமானது. பழைய நகரத்திற்கு இட்டுச் செல்லும், சுவர்களால் சூழப்பட்ட செங்குத்தான சாலையில் அழுந்த நடைபோட்டு மேலேறி வந்தனர். அது வெள்ளை முகங்களின் மொய்திரள்; அவர்கள் தங்கள் கைகளில் சாட்டையை ஏந்தியிருந்தனர். அவர்களின் சிவப்பு பதாகைகளில் தீ மழை காட்சியாக இருந்தது. கறுப்புச் சிலுவைகள் கூட்டத்தில் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியான அத்திரளிலிருந்து வியர்வையின், சாம்பலின், சாலைத் தூசியின், பழைய தூபத்தின் நாற்றமெழுந்தது.
அவர்கள் பாடுவதை நிறுத்திவிட்டனர், பேசுவதைக் கூட. மந்தையின் வெற்றுக் காலடிச் சப்தங்களைப் போன்ற மிதியொலிகளைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.
முகங்களுக்குப் பின் முகங்களாகக் கோபுர வாயிலின் இருளுக்குள் அமிழ்ந்து மறுபக்கத்தில் வெளிச்சத்தில், கலங்கிய சோர்வுற்ற உணர்வுகளுடனும் பாதி மூடிய இமைகளுடனும் வெளிப்பட்டன.
பின்னர் பாடுவது மீண்டும் தொடங்கியது; மன்னிப்பு கோரும் ஒரு இரங்கற் பாடல்; தங்கள் கைகளிலிருந்த சாட்டைகளை மேலும் உறுதியாக இறுகப் பற்றிக்கொண்டு போர் கூவலுக்கு நடை போடுவதைப் போல வீறுகொண்டு நடந்தனர்.
கடும் பஞ்சத்தில் வீழ்ந்த நகரத்திலிருந்து வந்தவர்கள் போல அவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் கன்னங்கள் உள்ளொடுங்கி இருந்தன, எலும்புகள் துருத்தி வெளியே நின்றன. இரத்தம் இலாது உலர்ந்த உதடுகளும், கண்களுக்குக் கீழே கருவளையங்களும் கொண்டிருந்தனர்.
பெர்காமோ நகரத்து மக்கள் ஒன்று திரண்டு அவர்களை மலைப்புடன் வேடிக்கை பார்த்தனர் – சற்று அச்சத்துடனும். மது உச்சத்தில் சிவந்த முகங்கள் இவ்வெளிறிய வெள்ளைப் புதுமுகங்களை நேரில் எதிர்கொண்டு நின்றன; தீயெரியும் கண்களுக்கு எதிரில் மட்டுமீறிய குடியில் தொய்வடைந்திருந்த மந்தப் பார்வைகள் தாழ்ந்து போயின. இவ்வளவு காலம் தெய்வ நிந்தனை செய்தவர்கள் இக்கூட்டத்தின் பாடல்களுக்கு முன்னால் வாய் பிளந்து நின்றனர்.
அவர்கள் வைத்திருந்த சாட்டையின் மீது குருதி படிந்திருந்தது.
இந்த அந்நியக் கூட்டத்தினரைக் கண்டதும் விசித்திரமான மனக்குலைவிற்கு ஆளானார்கள் மக்கள்.
ஆனால் இவ்வுணர்வுகளை உதிர்த்து தெளிவடைய அவர்களுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. சற்று நேரத்திலேயே சிலுவையைத் தாங்கிய கும்பலில் ஒருவன் ப்ரெஸியாவைச் சேர்ந்த காலணிகள் செப்பனிடும் அரைப் பைத்தியக்காரன் என்பதைச் சிலர் கண்டுகொண்டனர். உடனடியாக அவன் சார்ந்த மொத்தக் கும்பலுமே மக்களின் பார்வையில் கேலிக்குரியவர்களானார்கள். ஆனாலும், அங்கே புதியதாக ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அன்றாடத்திலிருந்து ஒரு கவனச் சிதறல்; கரடி வித்தைக்காரனையோ ஒரு கூத்தாடியையோ பின்தொடர்வது போல கதீட்ரலை நோக்கி அணிவகுத்துச் சென்ற அந்நியர்களை மக்களும் பின்தொடர்ந்தனர்.
ஓவியம்: சீராளன் ஜெயந்தன்
ஆனால் தங்களை உந்தி முன்னேறிச் செல்கையில் அவர்கள் சற்று மனக்கசப்புற்றனர்; இந்த அந்நியர்களின் உணர்வுக் கொப்பளிப்புடன் ஒப்பிடுகையில் தங்களின் இறை வெளிப்பாடு மிகத் தட்டையானது என்று உணர்ந்தனர். அந்நியர்களான இந்த செருப்பு தைப்பவர்களும், தையல்காரர்களும் தங்களை மதமாற்றவும், தங்களுக்காகப் பிரார்த்திக்கவும், தாங்கள் கேட்க விரும்பாத வார்த்தைகளைச் சொல்லவும்தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். மெலிந்த, தலை நரைத்த இரண்டு தத்துவவாதிகள் இறைக்கு எதிரான நிலையை விவரித்து ஒரு முறைமையை பெர்காமோவில் ஏற்கனவே உருவாக்கியிருந்தனர். அவர்கள் குடிபோதை கும்பலைத் தூண்டிவிட்டனர், இதயங்களினுள் உறைந்திருக்கும் தீமையைக் கிளர்ந்தெழச்செய்தனர். இதனால் தேவாலயத்தை நெருங்கும் ஒவ்வொரு காலடிக்கும் கூட்டத்தின் கொந்தளிப்பு அச்சுறுத்துவதாக மாறியது, கோபத்தில் கதறல்கள் காட்டுத்தனமாக எழுந்தன. அந்நியர்களின் மீது இவர்கள் வன்முறையைப் பிரயோகிக்க அதிக நேரம் பிடித்திருக்காது. தேவாலய நுழைவாயிலுக்கு இன்னும் நூறு அடிகளே இருந்தபோது, மதுவிடுதிகளின் கதவுகள் திறந்துகொண்டன. அதற்குள்ளிருந்து மதுவெறியர்கள் தட்டுத்தடுமாறி ஒருவர்மீது ஒருவர் விழுந்தடித்து ஒடி வந்தனர். ஊர்வலத்தை தாங்களே தலைமை தாங்குவதைப் போல முன்னால் ஓடிச் சென்று ஓங்காரக்குரல் எடுத்து கோஷமிட்டனர் – ஒருவனைத் தவிர. அவன் தேவாலயத்தின் புற்கள் மண்டிய கற் படிகளில் தலைகீழாக கைகளால் நடை போட்டு ஏறிச்சென்றான். இது அங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்தியதால் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழாமல் திருக்கோயிலுள்ளே அந்நியர்கள் நுழைந்தனர்.
மீண்டும் இங்கே வருவது, பிரம்மாண்டமான இக்குளிர்ந்த வெளிக்குள் பிரவேசிப்பது, விசித்திரமாகத் தோன்றியது பெர்காமோ மக்களுக்கு. மெழுகுவர்த்திகளிலிருந்து உருகிய பழைய சொட்டுக்களின் மூக்கைத் துளைக்கும் வாசம் நிறைந்த இச்சூழலில் – அவர்களின் பாதங்களுக்கு நன்கு பரிச்சயமான கற்தரையின் முழுதும் தேய்ந்து போன வடிவங்களும் தடிமனாகச் செதுக்கப்பட்ட எழுத்துகளும் அவர்களின் எண்ணங்களைப் பலமுறை சோர்வடையச் செய்திருக்கின்றன. அவர்களின் பார்வைகள் பாதி ஆர்வத்துடனும் மீதி விருப்பமின்றியும் பெட்டகங்களின் அடியில் படர்ந்திருந்த மங்கலான வெளிச்சத்தின் மீது விழுந்தன. பன்மடிப்புகளாய் ஒளிரும் தங்கத் தூசியிலும் புகை மூட்ட வண்ணங்களிலும் நழுவிச் சென்றன. ஆல்டரின் விசித்திரமான நிழல்களில் தங்களையே தொலைத்தனர். அவர்களின் இதயங்களிலிருந்து என்றென்றும் அடக்கவியலாத ஏக்கங்கள் கிளர்ந்தெழுந்தன.
இதற்கிடையில் மதுவிடுதியிலிருந்து வந்தவர்கள் உயரிய பலிபீடத்தில் நின்றபடி இழிவான செயல்களைச் செய்தவண்ணம் இருந்தனர். ஒரு கசாப்பு கடைக்காரன், உருவம் பெருத்த இளையவன், தனது வெள்ளை பனிக்கவச உடையை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டான். அது குருமார்களின் வெண்ணிற அங்கியைப் போல அவன் முதுகில் தொங்கியது. அருவருப்பும் தெய்வப்பழியும் நிரம்பிய, வெறித்தனமும் ஆபாசமுமான வார்த்தைகளால் ஜெபக் கூட்டத்தை நிகழ்த்தினான். சற்றே வயதான பருத்த தொப்பையுடன் இருந்த ஒருவன், அவன் உடல் எடையையும் மீறி சுறுசுறுப்புடனும் விரைந்தும் செயல்பட்டான். தோலுரித்த பூசணிக்காய் போல முகமுடைய அவன்தான் வழிபாட்டுச் சொற்களுக்குக் கேலியான மறுமொழி சொல்லிக்கொண்டிருந்தான். வழிபாட்டுக்கு மண்டியிடுவதைப் போல அவன் முழந்தாளிட்டு பலிபீடத்திற்கு முதுகைக் காட்டி கோமாளியைப் போல மணியடித்தான், தூபக்கலத்தை சக்கரம் போலச் சுண்டிவிட்டான். மற்ற குடிகாரர்கள் உரக்கச் சிரித்தபடி குடிபோதையில் விக்கலெடுத்து நன்றாக நீட்டி படிக்கட்டுகளில் படுத்து கிடந்தார்கள்.
அந்நியர்களைப் பார்த்து முழு தேவாலயமும் கேலி செய்து சிரித்தது. பழைய பெர்காமோவின் மக்களாகிய தாங்கள் கடவுளைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறோம் என்று தங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்து அறிந்துகொள்ளும்படி கூவல் விடுத்தனர். அவர்கள் கடவுளை அவமதிக்க வேண்டும் என்பதற்காக ஆவேசமாக களிக்கூச்சலிடவில்லை. மாறாக, தங்களின் ஒவ்வொரு தெய்வ நிந்தனையும் இந்த அந்நியப் புனிதர்களின் மனங்களில் கூர்மையாகக் குத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் அவர்களோ தேவாலயத்தின் மையத்தில் வந்து நின்று வேதனையில் முணுமுணுத்தனர். அவர்களின் இதயங்கள் வெறுப்பினாலும் பழி வேகத்தினாலும் கொதித்தன. அவர்கள் தங்கள் கைகளையும் கண்களையும் கடவுளை நோக்கி உயர்த்தி அவருடைய இல்லத்திலேயே அவரை நோக்கிச் செய்யப்படும் கேலிக்கூத்துகளுக்கு எதிராகக் கடவுளின் பழி இவர்கள் மீது விழ வேண்டுமென வேண்டினார்கள். இவர்கள் அத்தனை பேரையும் அழித்துவிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள், ஆனால் முதலில் கடவுள் தன்னுடைய வல்லமையைக் காட்ட வேண்டும் என்று வேண்டினார்கள். இறைவனை நோக்கி எழும் இந்த கொடூரக் கூச்சல்களையும், அவநம்பிக்கைகளையும், போலியான உதடுகளிலிருந்து பிற்பாடு வெளிப்படக் காத்திருக்கும் வேதனைக் குரல்கள் அனைத்தையும் மொத்தமாகக் கடவுள் வெல்வாரென்றால் அவர் காலடியிலேயே நொறுங்கி மடிவதற்கும் தயாராகவே இருந்தார்கள் அந்நியர்கள்.
பின்பு மன்னிப்பு கோரும் இரங்கற்பாடலை பாடத் தொடங்கினார்கள். அதன் ஒவ்வொரு இசைக் குறிப்பும் சோதோமை மூழ்கடித்த தீ மழை வேண்டியும் எதிரிகள் வீட்டின் தூண்களை உருக்குலைக்கும்போது சாம்சனை ஆட்கொண்ட வலிமையையும் வேண்டுவதாக ஒலித்தது. அவர்கள் இசையாலும் சொற்களாலும் பிரார்த்தனை செய்தார்கள்; தங்கள் தோள்களிலிருந்த ஆடைகளை விடுத்து கசைகளால் ஜெபித்தார்கள். அவர்கள் வரிசை வரிசையாக மண்டியிட்டார்கள், இடுப்பு வரை துணிகளைக் களைந்து கூர்மையான முனைகளைக் கொண்ட, இழை இழையாகப் பின்னப்பட்ட கயிற்றை தங்கள் முதுகின் மீது சுழற்றினார்கள். வெறித்தனமாகவும் தன்னிலை மறந்தும் சீறும் சாட்டையிலிருந்து இரத்தத் துளிகள் இடுப்பில் வழிந்து உடம்பில் ஒட்டுமளவிற்குச் சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு அடியும் கடவுளுக்கான படையல். இன்னும் வேறு வேறு வழிகளில் அவர்கள் இப்படியே தொடர்ந்து அடித்துக்கொள்வார்கள் என்றால் இறைவனின் கண் முன்னாலேயே குருதி தோய்ந்த சதைத் துண்டுகளாக அவர்கள் உடைந்துவிடுவார்கள். இறைவனின் கட்டளைகளை எதிர்த்து பாவம் செய்த இவ்வுடல் தண்டிக்கப்பட வேண்டும், சித்திரவதை செய்யப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இவ்வுடல் எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை இறைவன் பார்க்க வேண்டும். இறைவனை மகிழ்விப்பதற்காக அவர்கள் எப்படி நாயைப் போல ஆனார்கள் என்பதை அவர் காண வேண்டும். அவரின் ஆற்றலின் முன்னால் அவர்கள் நாயை விடவும் கீழானவர்கள், அவர் பாதத்தின் அடியில் உழலும் தூசியை உண்ணும் பூச்சிகள்! அவர்களின் கைகள் வலுவிழந்து போகும்வரை, சதைப் பிடிப்புகளால் சுருண்டு வீழும்வரை அடி மேல் அடி விழுந்தபடி இருந்தது. பித்தேறிய கண்களுடன், வாயில் நுரை பொங்க, சதையை விட்டு இரத்தம் சொட்டு சொட்டாக வெளியேற அவர்கள் ஒவ்வொருவராய் வரிசையில் சரிந்தனர்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள் இதயம் அதிர்வதை உணர்ந்தனர், கன்னங்களில் வெப்பம் மேலேறுவதையும் மூச்சு விடக் கடினம் கூடுவதையும் கவனித்தனர். உச்சந்தலையின் அடியில் குளிர்ச்சியான ஏதோவொன்று வளர்வதைப் போலத் தோன்றியது, அவர்களின் முழங்கால்கள் வலுவிழந்தன. அது அவர்களையும் ஆட்கொண்டுவிட்டது; அவர்கள் மூளையில் இருந்த பைத்தியக்காரத்தனத்தின் ஒரு சிறு புள்ளி இந்தக் கொந்தளிப்பை புரிந்துகொண்டது.
மிகக் கடுமையானதும், பெரும் சக்தி கொண்ட ஒரு தெய்வத்தின் அடிமைகளாக தங்களை உணர, அக்கடவுளின் முன்னால் தாழப் பணிய, அவருடன் ஒன்றெனக் கலக்க, மென்மையான பக்தியில் அல்லாமல் – மெளனமான ஜெபத்தின் செயலற்ற தன்மையின் ஊடாக அல்லாமல் – பித்துப்பிடித்ததைப் போல, அவமானத்தின் விளைவான வெறித்தனத்தாலும், இரத்தத்தாலும், கதறலினாலும், ஈரம் பளபளக்கும் சாட்டையின் அடியில் விழுந்து இறையுடன் கலப்பதை மக்களால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அந்த கசாப்பு கடைக்காரன் கூட அமைதியாகிவிட்டான். பல்லில்லாத தத்துவவாதிகள் தங்கள் நரைத்த தலையை அலையும் கண்களுக்கு முன்னால் தாழ்த்திக்கொண்டார்கள்.
தேவாலயம் இப்போது முற்றிலும் அமைதியாகிவிட்டது; அலையைப் போன்ற ஒரு அசைவு மட்டுமே கூட்டத்தினிடையே வீசிச் சென்றது.
அப்போது அந்நியக் கூட்டத்திலிருந்து ஒரு இளம் துறவி எழுந்து பேசினார். அவர் புத்தம்புதிதாக நெய்யப்பட்ட நாரிழைத்துண்டைப் போல வெளிர் நிறத்தில் இருந்தார். நிலக்கரியைப் போல அவரது கருமையான கண்கள் ஒளிர்ந்தன, அவரது வாயைச் சுற்றி தடிமனான முகக் கோடுகள் ஒரு மனித முகத்தின் மடிப்புகளைப் போல அல்லாமல் கத்தியால் மரத்தில் செதுக்கப்பட்டவை போல இருந்தன.
அவர் தனது மெலிந்த நடுங்கும் கரங்களை வானை நோக்கிப் பிரார்த்திப்பதற்காக உயர்த்தினார், அவரது அங்கியின் மேற்கைகள் சுருண்டு கீழிறங்கியது.
பின்னர் அவர் பேசினார்.
நரகத்தைப் பற்றிப் பேசினார், சொர்க்கம் எல்லையற்றது என்பதனால் நரகமும் எல்லையற்றதுதான் என்றார். தனிமையான இவ்வுலகத்தின் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சகித்துக்கொள்ள வேண்டிய வேதனைகளைப் பற்றியும் அழுகுரல்களால் அதை நிறைப்பதைப் பற்றியும் உரைத்தார். கந்தகக் கடல்களும், தேள்கள் நிறைந்த நிலப்பரப்புகளும், மேலாடையைப் போல ஒரு மனிதனைப் பற்றிச் சூழ்ந்துகொள்ளும் தீப்பிழம்புகளும், காயத்தைக் குத்தி ஊடுருவும் ஈட்டியைப் போல உடலைத் துளைக்கும் கடுமையான மௌன தீக்கதிர்களும் அங்கே உள்ளன.
இன்னமும் தேவாலயத்தில் அமைதி நிலவியது; மூச்சற்று அவருடைய சொற்களைக் கேட்டார்கள். அவர் ஏதோ தன் கண்களாலேயே நரகத்தைக் கண்டவர் போலப் பேசினார். அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள்: அவர் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரா அல்லது நரகக் குழிகளிலிருந்து சாட்சி சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் ஒருவரா?
பின்னர் நீண்ட நேரம் நீதியைப் பற்றியும் நீதியின் வலிமையைப் பற்றியும் பிரச்சாரம் செய்தார். நீதியமைப்பின் ஒவ்வொரு அங்கமும் முழுமையாகச் செயல்படவேண்டும் என்றும் ஒவ்வொரு மீறலும் குற்றமென்றாகி அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு பருக்கையும் கணக்கிடப்படும் என்றார். “ஆனால் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகத்தானே மரித்தார்? ஆம் என்றால் நாம் இனி சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நான் உங்களிடம் உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், உங்களில் ஒருவராலும் நரகத்தை ஏமாற்றிவிடமுடியாது. சித்திரவதை பல்சக்கரத்தின் ஒரேயொரு பல் கூட உங்களின் சதையைக் கிழிக்காமல் கடந்துவிடாது. நீங்கள் கோல்கோத்தா சிலுவைக் கதையை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டீர்கள், அல்லவா?. வாருங்கள், வாருங்கள். வந்து பாருங்கள்! நான் அதன் அடிவாரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். உங்களுக்குத் தெரியுமல்லவா, வெள்ளிக்கிழமை ஒன்றில்தான் கதவுகளைத் திறந்து ‘அவரை’ வெளியே தள்ளி மிகக் கனமான சிலுவையை அவர் தோள்களின் மீது வைத்தார்கள். அதைச் சுமந்து குடியிருப்புகள் அற்ற, வறண்ட ஒரு பாழ் குன்றின் மீது ‘அவரை’ ஏற வைத்தார்கள். கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து சென்றது, அவர்களின் பாதங்கள் மிதித்து சுழன்றெழுந்த தூசிப் படலம் அவ்விடத்தை நிறைக்கும் செம்மேகங்கள் போலக் காட்சியளித்தன. ஒரு குற்றவாளியை முற்றிலுமாக அம்பலப்படுத்த வேண்டும் என்பதனால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் தசைகளை அத்தனை கண்களும் காண வேண்டும் என்பதனால், நீதியின் அதிபதிகள் ‘அவரின்’ ஆடையைக் கிழித்தெறிந்தார்கள். சிலுவையின் மீது அவரைக் கிடத்தி, அவரது கை கால்களை நீட்டி, கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு இரும்பு ஆணியையும், குறுக்கு பாதங்களின் மீது ஒரு ஆணியையும் அடித்தனர். முழுவதுமாக உள்ளிறங்கும் வரை ஆணியின் தலைகளில் ஓங்கி அடித்தார்கள். தரையில் ஒரு குழியிட்டு சிலுவையை அதில் இருத்தி நிமிர்த்து உயர்த்தினார்கள், ஆனால் அது நேராக உறுதியாக நிற்கவில்லை. ஆகவே அசைத்து நகர்த்தி பக்கவாட்டில் தூண்களையும் ஆப்புகளையும் முட்டுக் கொடுத்து அதைத் தாங்குமாறு செய்தனர். இதைச் செய்யும்போது, ‘அவரின்’ இரத்தத் துளிகள் கண்களின் உள்ளே விழுந்துவிடாமல் தடுப்பதற்குத் தொப்பிகளைச் சற்று கீழிறக்கி மறைத்துக்கொண்டார்கள். ‘அவர்’ சிலுவையில் இருந்தபடி தன்னுடைய கிழிந்த ஆடைகளை வீசியெறிந்து கொண்டிருந்த வீரர்களைப் பார்த்தார், கொந்தளிப்பான மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். யாரைக் காக்கும்பொருட்டு அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாரோ அவர்கள் ஒருவரின் கண்களிலும் இரக்கம் தென்படவில்லை.
கீழே இருந்தவர்கள், பலவீனமாகியும் துடிதுடித்துக்கொண்டும் இருந்த ‘அவரை’ மேல் நோக்கிப் பார்த்தார்கள். தலைக்கு மேலே ‘யூதர்களின் ராஜா’ என்று எழுதியிருந்த பலகையைப் பார்த்தார்கள். ‘அவரை’ நிந்தித்து குரலை எழுப்பினார்கள்: “ஆலயத்தை இடித்து மூன்றே நாட்களில் அதைத் திரும்பக் கட்டுகிறவரே, உன்னை நீயே காப்பாற்றிக்கொள். நீ தேவனுடைய குமாரனாயிருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா.” அதன் பின்னர், தேவனின் ஒரே குமாரனாகிய ‘அவரை’ கோபம் ஆட்கொண்டது. பூமியை நிறைக்கும் இந்த வெற்றுக் கும்பல் இரட்சிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தார். ஆணித் தலையினூடாக தனது கால்களைக் கிழித்து விடுவித்தார். தனது கைகளை இறுக மூடி ஆணியோடு பிய்த்து வெளியே எடுத்தார், சிலுவையின் கரங்கள் வில் போல வளைந்தன. தரையில் குதித்து தன்னுடைய ஆடைகளைப் பிடுங்கிக்கொண்டார். அதை ஒரு அரசனைப் போலத் தன்னைச் சுற்றி போர்த்திக்கொண்டு பரலோகத்திற்கு உயரப் பறந்து சென்றார். சிலுவை காலியாக நின்றது, மீட்பு எனும் மகத்தான பணி நிறைவேறவேயில்லை. நமக்கும் இறைவனுக்கும் இடையில் இடையீட்டாளரென ஒருவரும் இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை!”
அவர் அமைதியானார்.
அவர் தனது கடைசி வார்த்தைகளை உச்சரித்தபோது, கூட்டத்தை நோக்கி முன்னோக்கிச் சாய்ந்து தனது கைகளாலும் உதடுகளாலும் அச்சொற்களைக் கூட்டத்தின் தலைகளை நோக்கிப் பரப்பினார். வேதனையின் முனகல் சப்தம் தேவாலயத்தினுள் ஊர்ந்து பரந்தது, ஆங்காங்கே மூலையில் அழத் தொடங்கினர்.
உடனே கசாப்பு கடைக்காரன் பிணத்தைப் போல வெளிறியிருந்த கைகளை அச்சுறுத்தும் வகையில் மேலே உயர்த்தி உரக்கக் கத்தினான்: “துறவியே, துறவியே… நீங்கள் ‘அவரை’ மீண்டும் சிலுவையில் அறைய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும்.” அவனுக்குப் பின்னால் சீற்றத்துடன் கரகரப்பான குரல்கள் எழுந்தன: “ஆமாம், ஆமாம், சிலுவையில் அறையுங்கள்! சிலுவையில் அறையுங்கள்!”
தெளிவாகவும் தீர்க்கமாகவும் நடுங்கும் ஒற்றைக் குரல் எழுந்தது: “ஆம், சிலுவையில் அறைய வேண்டும்.”
ஆனால் அத்துறவி, உயர நீட்டியிருக்கும் கைகளின் அலைகளைப் பார்த்தார், கத்தும் உதடுகளின் இடையே விரிந்த இருளையும், வேட்டை விலங்கைப் போல வெண்மையாக ஒளிரும் பற்களையும் கண்டு ஆனந்த பரவசத்தில் பரலோகத்தை நோக்கி கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார். பின்னர் அவர் கீழிறங்கினார். அவருடைய கூட்டத்தினர் தீ மழை தாங்கிய பதாகைகளையும் வெற்று கருப்புச் சிலுவைகளையும் உயரப் பிடித்தபடி தேவாலயத்தை விட்டு வெளியேறினர். பாடல்களைப் பாடிக்கொண்டு மீண்டும் சதுக்கத்தைக் கடந்து கோபுர வாயிலின் திறப்பு வழியே வெளியே சென்றனர்.
மலையிலிருந்து கீழிறங்கிச் சென்ற இக்கூட்டத்தினரைப் பழைய பெர்காமோவினர் வெறித்து நோக்கினர். நீண்ட சுவர்களால் ஆன செங்குத்தான சாலை, சமவெளிக்கு அப்பால் மறையும் சூரியனின் ஒளியினால் மங்கலாகத் தெரிந்தது. ஆனால் நகரத்தை வட்டமிட்டுச் சூழ்ந்திருக்கும் சிவந்த சுவரின் மீது கூட்டத்தில் அங்குமிங்கும் அசையும் சிலுவைகள் நிழலுருக்களாகத் தெளிவாகப் பதிந்தன.
***
நரேன் – ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். சமீபத்தில் கவனம் பெற்ற இவரது மொழிபெயர்ப்பில் வெளியான சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” மின்னஞ்சல்: Narendiran.m@gmail.com
“ஏன்டா, சாப்பாடு ருசியா இல்லன்னா டா ஊர விட்டு ஓடி வந்த?” முதலாளி கேட்டபோது சட்டெனப் பொங்கி வந்த கோவத்தை மறைத்தபடி நின்றான் நாராயணன். சுற்றி நின்ற மற்ற வேலையாட்கள் கை கொட்டிச் சிரித்ததைப் பொருட்படுத்தாமல் பாத்திரம் கழுவ தண்ணீர் குழாயைத் திறந்து விட்டான். அதன் இரைச்சல் சத்தத்தினூடே காதுகளை இறுக்க பொத்திக்கொண்டதைப் போல பாவனை செய்தான். “அட, என்னாக் கோவம் வருகு மயித்தானுக்கு! சோத்துக்கு வழி இல்லன்னாலும் சூடும் சொரணையும் ஒருவாடு உண்டும், என்னடே?” நெருங்கி வந்த முதலாளியை மீண்டும் அவமதிக்க மனம் கொள்ளாமல் எழுந்து நின்றான் நாராயணன்.
“மரியாத மயிரெல்லாம் ஒன்னும் வேண்டாம் கேட்டியா? அவவன் குனிஞ்சு குனிஞ்சே கொதவளையக் கடிக்க நிக்கானுவோ. நீ கொள்ளாம் டே. செரி, சொல்லு, கேப்பம். சாப்பாட்டுல ருசி இல்லன்னுலா ஓடி வந்தியான், உள்ளது தானா புள்ளோ?” என்னதான் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் பெருகி வந்தாலும், வாழ்க்கை கொடுத்த மனிதன் முன் திமிறி நிற்க முடியாமல் மெல்லத் தலையாட்டினான் நாராயணன். கண்கள் நீர் நிறைந்து நின்றன.
சரியெனத் தலையாட்டியவன் தேங்காய் சவுரியுடன் புளியும் உப்பும் சேர்த்து கரி பிடித்த போணிகளை அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தான்.
“பெரிய மவராசன் வீட்டுப் பிள்ளல்லா இவரு. ஊத்ததக் குடிச்சிட்டுப் போனும் பாத்துக்கோ. குண்டிக்குத் துணி இல்ல, வாய்க்கு மட்டும் வக்கணையா கேக்குது, என்ன? பிச்சக்காரப் பயல. ஒங்கப்பன் ஊருக்கு ஒழச்சிட்டே இருப்பான். நா பெத்துப் போட்ட எல்லாத்துக்கும் பீத்துணி கழுவிட்டே கெடக்கேன். இதுல வக்கண மயிரு, வக்கண, ராஸ்கல். சத்தங்காட்டாம தின்னுட்டுக் கெடக்கணும். மீச மொளச்சி ரெண்டு நாள் சம்பாதிச்சிட்டா பெரிய ஆம்பளைன்னு நெனப்போ? ஒட்ட நறுக்கிருவேன்.. அவனுக்க மொறப்பும் மயிரும்..” அம்மா கத்திக் கொண்டிருந்தபோது உப்போ புளிப்போ அற்ற சோற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணன். ஒருநாளும் உப்பு, புளிப்பு எதுவும் இருந்ததில்லை தான். ஏனென்று எவ்வளவு யோசித்தாலும் பதிலில்லை. அம்மாவும் அதைத்தான் சாப்பிடுகிறாள். ஒரு நாள் கூட அவள் பசித்தோ ஆர்வத்தோடோ சாப்பிட்டுப் பார்த்ததில்லையே!
அப்பாவுடன் கல்யாண வீடுகளுக்குச் செல்வதற்காக ஏங்கிக் காத்திருப்பான் நாராயணன். ஏழு கறியா? ஒன்பது கறியா? பருப்புப் பாயாசமா, அடைப் பிரதமனா? என்று பலத்த யோசனையாக இருக்கும். நேந்திரம்பழ பாயாசம் வைக்கும் வசதியான திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலி ஃப்ளவரையோ அல்லது சேனைக் கிழங்கையோ சிக்கன் பொரிப்பு மாதிரியே எப்படித்தான் செய்கிறார்களோ என்று வியந்து சாப்பிடுவான். அப்பாவும் கல்யாணப் பந்தியில் அவன் செய்வதையெல்லாம் ரசித்துப் பார்த்திருப்பார். தலை வாழை இலையாகக் கேட்பான். சிறு கைக் குழிவில் நீரேந்தித் தெளித்து இடம் வலம், வலம் இடமாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவான். “மாப்ளேய், சோப்பு வேணுமா?” என்று கண்ணடித்துக் கேட்பார் மணி மாமா. அவரது கைப்பக்குவம் தான் நாஞ்சில் முழுதும். ‘மணி மாமா மாதிரி மாஸ்டர் ஆகணும்’ என்று லட்சியம் வேறு.
“பொட்டப்புள்ள மாதில்லா அடுக்களய சுத்திச் சுத்தி வாரான். மூக்க வெட்டித் தூரப் போட்டா செரி ஆயிரும். வாசம் புடிச்சிட்டு சுத்துது சவம்,” என்று விரட்டுவாள் அம்மா. “மாஸ்டர் ஆவனுமாம் மாஸ்டர். அப்பன் கிழிச்ச கிழி போறாதுன்னு நல்ல மவன் வந்து சேந்துருக்கான். அந்த மணிய பாத்துட்டும். பயலுக்க கூட என்ன சேர்க்கன்னு கேக்கேன்.”
வாழையிலையின் நிறம் பார்த்துக் கூட சில சமயம் முகம் சிறுத்து விடுவான் நாராயணன். அப்பாவை நோண்ட, “எப்போ, பயலுக்க எலய ஒன்னு மாத்திக் குடுப்போ,” என்று சமாதானப்படுத்துவார் அப்பா.
இலையின் இடது ஓரத்தில் சிறு பொட்டென பொடி உப்பு, அதன் அருகே வாழைக்காய் துவட்டல், நேந்திரம் பழ வத்தல் இருந்தால் இவை இரண்டிற்கும் இடையே இரண்டோ மூன்றோ, சில பந்திகளில் நேந்திரம்பழ உப்பேரியும் உண்டு, பின் இடமிருந்து வலமாக தயிர்ப் பச்சடி, இஞ்சிப் பச்சடி, நார்த்தங்காய்ப் பச்சடி, மாங்காக்கோசு என்று சென்று இலையின் வலது பகுதியில் சிறு குன்றென அவியல். ஏற்கெனவே வைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் விரல் தொட்டு நக்கிப் பார்த்து அப்பாவைப் பார்த்துத் தலையாட்டுவான்.
“சாப்புடு மக்ளே, நல்லா சாப்புடு..” என்று சிரிப்பார் அப்பா.
அவியல் வைத்ததும் அடுத்து வருவது என்னவென ஆர்வமாய்ப் பார்ப்பான். சேனைக் கிழங்கு எரிசேரி பக்கத்துப் பந்தியில் வந்தாலே தெரிந்து விடும். நாராயணன் முகமும் அப்படி சொலிக்க ஆரம்பிக்கும். இல்லை, உருளைக் கிழங்கு மசாலா என்றால் ஒரு பெருமூச்சு விட்டு, ‘சரி, என்ன செய்ய’ என்பதைப் போல பார்ப்பான். அதுவும் சுடு சோறு இலையில் கொட்டப்படும் வரையில்தான். இரண்டு பங்குகளாகப் பிரித்து, ஓரம் கரிந்த அல்லது சரியாகப் பொரியாத பப்படம் வந்துவிடக் கூடாதே என வேண்டியிருப்பான். பப்படத்தைப் பொடிக்கும் ஓசையில் அவனையறியாமல் சிலிர்த்துக்கொள்வான். பருப்பு விட்டு அதன் நடுவே குழிவில் வாழையிலைத் தண்டிலிருந்து வடியும் நெய்யோடு சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையாக உருட்டி வாய்க்குள் திணித்ததும் கண்களில் நீர் நிரம்பி விடும்.
“கண்ணு வைக்காதீரும் ஓய்! மருமவன அப்பிடியாக்கும் வளக்கேன்.” ஒரு நாள் விளம்பத் தெரியாத யாரோ மாற்றி மாற்றி விளம்பிவிட, சாப்பிட்ட திருப்தி இல்லாமல் தலைவலியே பிடித்துக் கொண்டதாய் அவன் சொன்னதைக் கேட்டு வீடே சிரித்தது. அம்மா மட்டும் ஏனோ சிரிப்பதேயில்லை.
கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவனைச் சாக்காக வைத்து அப்பாவைத் திட்டுவாள் அம்மா. அவளது அழகும், மகிழ்ச்சியும் இங்கு வந்த பிறகு இல்லாமல் ஆகிவிட்டதென திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பாள். அடுக்களைக்குள் அவள் இருக்கும்போதெல்லாம் ஒரே எரிச்சல்தான். தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டேதான் சமைப்பாள். பாத்திரங்கள் உருளும். கரிந்த வாடை வரும். கடுகிற்குப் பதிலாக வெந்தயத்தைப் போட்டு தாளிப்பாள். உருளைக் கிழங்கைத் தோலோடு அப்படியே பெரிய பெரிய துண்டுகளாகப் போடுவாள். சேனை என்றால் தொண்டையைப் பிடித்துக்கொண்டு ஓடுவான் நாராயணன். முட்டைப் பொரியலில் எப்போதும் முட்டை ஓடு கண்டுபிடித்துப் பொறுக்கி வைத்து விளையாடுவான். அவியல் என்றால் நறுக், நறுக், பொரியல் என்றாலே தீய்ந்து போனது என்றுதான் அக்குடும்பத்து சிறுசுகளுக்குப் பழக்கம்.
“என்ன மாப்ள, இந்தா தேய் தேய்க்க? பாத்து டே, பக்கத்துக் கடைக்கு ஓட்ட போட்டுட்டுப் போய்ராத,” என்று நாராயணனின் தோளில் தட்டிச் சிரித்தான் குட்டிமணி.
“அது, சும்மா எதுக்கோ உம் பேச்சு வந்தா, அப்போ மொதலாளி தான் உன்னப் பத்தி பெருமையாப் பேசுனாரு. கெட்டிக்காரனாம். சொன்ன வேலையும், சொல்லாத வேலையும் சேத்துப் போட்டு செய்வியாம். நம்ம பயலுவளுக்கு ஒருத்தனப் பத்தி நல்லதா ஏதும் சொன்னா பொறுக்காதுல்லா! அதான் போட்டுக் குடுத்துட்டானுவோ, அதுக்கென்னா இப்போ, மொதலாளி மொதல்ல சிரிச்சாரு. பொறவு ஆள் அமைதியா நின்னு தலையாட்டிட்டே ஏதோ யோசிச்சாரு. அவரு பாக்காததா என்ன? இன்னிக்கி நீ மாட்டிக்கிட்டயா, மனசுல வைக்காம கேட்டுட்டாரு மக்ளே. நீ ஒன்னும் நெனைக்காத என்ன?”
குட்டிமணி சொல்லச் சொல்ல கழுவிய ஒவ்வொரு பாத்திரமாகப் பளபளத்து வந்தது. அடுப்பங்கரையில் ஊதுபத்தி மணம். மாஸ்டர் வந்திருக்க வேண்டும்.. சட்டென எழுந்தவன் குட்டிமணியைப் பார்த்து சைகை காட்டிவிட்டு அடுப்பங்கரைக்குள் ஓடினான்.
“வாடே, வா. என்ன, செரியான தீவனமோ? கொடவண்டி முன்னாடி சாடிச் சரிஞ்சிரும் போலயே?” மாஸ்டரைப் பார்த்ததும் எல்லாம் மறந்து சிரித்தபடி, “ஒரே எண்ணெத் தீவனம்லா மாஸ்டர். பின்ன, உளுந்தவடையக் கண்டா கை நிக்க மாட்டுக்கு, இந்த வயித்தெரிச்சல் வேற கொடஞ்சிட்டே வருகு. ஒரு மாதி நெஞ்சுல தீய வச்ச மாதி. என்னவாருக்கும் மாஸ்டர்?” என்று கேட்டபடி பனியனில் ஈரக் கைகளைத் துடைத்தான். “ஆமா, இப்போ வந்து கேளு. வாயி தான் கேடு. பெருஞ்சீரகத்த கொஞ்சம் கொதிக்க வச்சிக் குடி. செரி ஆவும். என்னத்த தின்னாலும் செரிக்க வயசுதான் மக்ளே. ஆனாலும் கொஞ்சம் வயிறு சொல்லதையும் கேக்கணும் பாத்துக்க. ஊருக்கே ஆக்கிப் போட்டாலும் நம்ம வயிறு அரப் பக்கா தான கொள்ளும். ஆனா, நீ அப்பிடி அள்ளி முழுங்க ஆளும் கெடயாதே! எண்ணப் பலகாரத்த கொஞ்ச நாளைக்கி கொறச்சிப் பாரு மக்ளே.”
மாஸ்டருக்கு நாராயணன் இருந்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். எல்லா கறிகளையும் கூட்டுகளையும் ஆரம்பிப்பது அவர் என்றால் முடிப்பது அவனாக இருப்பான். சுவையில் பாதிப்பங்கு அவனுக்கு. பல நேரங்களில் மொத்தத்தையும் அவன் கையில் விட்டுவிட்டு சுகமாகக் கால் நீட்டி உட்கார்ந்து பீடி இழுத்துக் கொண்டிருப்பார். அவனும் ஆசான் முன்னால் தன் கைப்பக்குவத்தைக் காட்டுவதில் மும்முரமாக இருப்பான்.
“அது சும்மா ஒன்னும் இல்ல. ருசி அறிஞ்ச நாக்கு உள்ளவனுக்குதான் ருசி அறிஞ்ச கை அமையும். அதுலயும் அவன் பசிச்சிக் கெடந்தவனாக்கும். சும்மா சாதாரண பசியில்ல கேட்டேளா, அது ஒரு மாதி வக்கணையான பசியாக்கும். நளன் மாதின்னு சொல்லலாமா இருக்கும். அவனுக்க கையில ருசின்னா இவனுக்கு மொத்தமும் ருசிதான். பெருசா என்ன தின்னுரப் போறான், ரெண்டாளு திங்கதத் திம்பானா இருக்கும். ஆனா, அதில்ல விசயம். அந்தக் கை தொட்டாலே எதுல என்னத்தக் கொறன்னு சொல்லிரும். தொடணும்னு கூட இல்ல, வாசம் புடிச்சாலே சொல்லிருவான். அதாக்கும் உள்ளது. அன்னிக்கி, நா வெச்ச சக்கப்பழப் பாயாசத்தயே சரியில்லன்னு சொல்லிட்டாம்லா! எனக்குக் கோவந்தான். ஆனா, ஒருத்தன் நமக்கும் மேல ஏறி வாராம்னு வைங்கோ, ஒரு அளவுக்கு மேல நம்ம ஒன்னுமே இல்லன்னு ஆயிரும் பாத்துக்கோங்கோ. நாராயணன் ருசிக்கப் பொறந்தவன். அவன் பட்ட கஷ்டமெல்லாம் இதுக்குதானோன்னு நெனப்பேன்.”
அடுப்பங்கரையில் மட்டுமல்ல. விளம்பும் நேரத்திலும் மங்கலமாகக் கிளம்பி வந்து நிற்பான் நாராயணன். நெற்றிப் பட்டையும் பளிச்சென்ற சிரிப்பும். வரும் வாடிக்கையாளரின் முகமறிந்து அங்குமிங்கும் ஓடி பணியாளர்களிடம் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.
“உப்புமால அடில புடிச்சதச் சொரண்டிப் போட்டு கொஞ்சம் மொளவாடில தேங்காயெண்ண விட்டுக் கொழச்சு ஒரு உருண்ட உருட்டி வச்சிப் பாருங்கோ. நம்ம ஹோட்டல் தான் நம்பர் ஒன்! தெரியுமா?”
“இவன் என்னத்த டே ஒளருகான்? கரிஞ்சிப் போனா ஏன் கரிஞ்சின்னு சண்டைக்கு வாரான். இப்போ அடில புடிச்சத சொரண்டித் திங்கச் சொல்லுகான். வட்டுப்பய..”
“அட, எது கரிஞ்சா நல்லது, எது கரியக்கூடாதுன்னு இருக்குல்லாண்ணே. சாளக் கருவாட்ட கரிச்சி சுட்டுக் கஞ்சி குடிச்சிருக்கேளா? அது ஒரு இதாக்கும்.”
முதல் வாடிக்கையாளர் வரும் முன் அடுப்பங்கரையில் சம்மணம் போட்டமர்ந்து ஒவ்வொரு கறியையும் கூட்டையும் தானே விளம்பி ஒரு தட்டம் சோற்றோடு ருசித்து எழுவான் நாராயணன். அவன் முகத்து திருப்தியைப் பார்த்தாலே அன்றைய வியாபாரம் தெரிந்து விடும் என்பார் மாஸ்டர்.
“சரி மக்கா, ஓடி வந்துட்ட செரி, திரும்பப் போற யோசன இருக்கா இல்லையா? யார்ட்டயும் போன்லயும் பேச மாட்டுக்க, ஊருக்கும் போன மாதி தெரியல்ல. மாசாமாசம் யாருக்கோ பணம் மட்டும் போட்டு விடுக, என்னவாக்கும் எண்ணம்?”
சட்டென முகம் இருண்டு விட, “அண்ணே, இந்த அட்வைஸ் மயிரெல்லாம் வேண்டாம்ணே. ஒனக்கு எல்லாம் கேக்க உரிம உண்டும். ஆனா, இத விடு. அது செரி வராது..”
“அப்பிடி என்னடே பிரச்சன?”
அப்பாவின் முடிவு அன்று அப்படி வருமென்று நாராயணன் நினைத்தும் பார்க்கவில்லை. கொத்த வேலையிலிருந்து அழுது தெவங்கி வந்து நின்றவன் காதில் விழுந்த முதல் குரல், “தவிச்ச வாய்க்கு தண்ணி கூட குடுக்க மாட்டால்லா. இந்த மனுசனுக்கு என்னத்தக் குடுத்தாளோ? சாப்புடும்போது பொதப்பேறில்லா சரிஞ்சி விழுந்தாராம்.” என்றது. அம்மா மயங்கிக் கிடந்தாள். அவளை உலுக்கி எழுப்பிக் கேட்க வேண்டும். அப்பாவின் ‘விடு மக்கா’ என்ற குரல் கேட்க பரிதவித்து நின்றான்.
அடுத்த நாள் காடாற்று முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவன் புடக்களையில் பேசிக்கொண்டிருந்த அம்மாவைக் கவனித்தான்.
“இந்தப் பிள்ளேளுக்கு சோறு போடுவாளோ என்னமோ! எல்லாம் ஒட்டடக் குச்சி மாதில்லா இருக்கு. அவளும் வக்காடு மாதி தான் இருக்கா? என்னமோ, செய்வின எதாம் இருக்குமோ?” என்றது மற்றொரு குரல். “ஆமாக்கா, நான் கேட்டது அப்பிடியாக்கும். இவளுக்க அடுப்பச் சுத்தி யாரோ செய்வின வச்சிட்டாளாம். அடுப்பங்கரைல ஒன்னுமே வெளங்காதாம். பாதி சண்ட அதுக்கு தானாம்.” “அதுக்கென்ன, எங்க வீட்டுலயும் அப்பிடித்தான். ஒரு வருசத்துக்கு கறி எடுத்தா கல்லு மாதில்லா கெடந்து. எவ்ளோ வேக வச்சாலும் வாய்ல வைக்க முடியாம. பொறவு, ஒரு பூசாரி சொல்லித்தான் அடுப்பச் சுத்திப் போட்டு எரிச்சேன். பின்ன, எவளுக்க கண்ணோ என்னவோ?”
அம்மாவிற்கு செய்வினை வைக்க யாரால்தான் முடியும்? அது மட்டுமா பிரச்சினை? அப்பாவைக் கண்டாலே அவளுக்கு ஆகாதே? பாசம் இருந்தால் ருசி தானாக வரப் போகிறது.
அடியந்திரம் அன்று. மூன்று தலைவாலை இலைகள் நெடுவாக்கில் போட்டு, ஐயர் சொல்லச்சொல்ல, ஒவ்வொரு காய்கறியாய் அவர் சொன்ன இடங்களில் அடுக்கினான். எலுமிச்சை, முருங்கை, கத்தரி, வெண்டை, கிழங்குகள், மஞ்சள், என்று அத்தனையும் ஒவ்வொரு நினைவாய் கொண்டுவர கண்ணீர் விட்டுத் தேம்பி அடுக்கினான்.
அப்பாவின் படத்தின் முன் நின்று கண் மூடி வணங்கிய போது அவனுக்கு அவரோடு சேர்ந்து சாப்பிட்ட பந்திகள் நினைவு.
மாவும் எள்ளும் சேர்த்துப் பிசைந்து பிடி உருண்டை உருட்டி அவன் கையில் கொடுத்து, “அப்பாவுக்கு வையிப்போ” என்று ஐயர் சொன்னபோது, “அப்பா, அப்பா” வெனக் கதறி விட்டான்.
பூசை முடிந்து படையலின் முதல் இலை முன் அமர்ந்தபோது ஒரு சொட்டு வாசம் கூட இல்லை. நிறமற்ற கறிகள். ருசியற்ற உணவு. உயிரற்ற வெறும் குவியல். ஒரு உருண்டை உருட்டி எடுத்து வாயில் வைத்த கணம், அடுக்களையில் இருந்து அம்மா யாரிடமோ கேட்டாள், “என்னத்த டே கறி வச்சிருக்கான் கறி மயிரு. அடியந்திரத்துக்கு எரிசேரி வைக்காண்டாமா? எவனாக்கும் மாஸ்டரு? நா என்னான்னு கேக்கேன்..”
சட்டென எழுந்து அம்மாவின் முன் சென்று, “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? அப்பா செத்ததுக்கு ஒரு சொட்டு கண்ணீர் விட்டியாட்டி நீ? எரிசேரி மயிரு கேக்கா ஒனக்கு? ஊருல எல்லாவனும் சொல்லது சும்மா ஒன்னும் இல்ல, அவருக்கு என்னவாம் குடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்ப நீ. இப்ப எரிசேரி மயிரு! ஒங் கையால ஒரு சொட்டு கஞ்சி குடிச்சாக்கூட வெளாங்காது. அப்பிடியே எனக்கும் ஒரு காடாத்து நடத்திரு…” என்று கத்திவிட்டு வெளியேறியவன் தான்.
*
புது ஹோட்டல் திறப்பு விழாவன்று நாராயணனுக்கு அப்படி நடந்தது எல்லோருக்கும் சங்கடம் தான். அடுப்பங்கரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறி அழுது விழுந்திருக்கிறான். முதலாளியே வந்து தன் காரில் தூக்கிக்கொண்டு போய் ஊரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்தார். வயிறு முழுதும் புண்ணாக்கி வைத்திருக்கிறான். எண்ணெயும் காரமும் வக்கணையும் சேர்ந்து செய்த காரியம். குடலின் சில பகுதிகளை நீக்கித் தைத்து ஓய்வில் கிடத்தினார்கள். குட்டி மணியும் மாஸ்டரும் வேலை நேரம் போக சென்று பார்த்து வந்தாலும் கூடவே இருக்க யாருமில்லாமல் தனித்துக் கிடந்தான். நினைவு வந்ததும் பசி, பசி. சாப்பிட்டுப் பல நாட்கள் ஆயிருக்கும். நரம்பு வழி உள்ளேறும் திரவங்களின் ருசி அறியத் தெரிந்தாலும் தெரிந்திருக்கும் அவனுக்கு. விழித்தவன் குட்டி மணியையும், மாஸ்டரையும் தேடினான்.
“என்ன தம்பி, எப்பிடி இருக்கு இப்போ? டாக்டர் நீ முழிச்சதும் சொல்லச் சொன்னாரு.. இன்னா வாரேன்.. எதாம் குடிக்கியா?”
தலை தானாக ஆடியது. அப்பாவின் வயிற்றில் பார்த்த அதே நெடிய தழும்பு. பம்பாயில் அலைந்த காலத்தில் வயிற்றுப் பிரச்சனையில் தான் அப்படி ஆனது என்று சொல்லியிருக்கிறார். தன் வயிற்றுப் பஞ்சில் கைவைத்து கண் மூடிக் கிடந்தான். அந்த வலியின் ஊடாக பல குரல்கள், பல முகங்கள், மலர்ந்து ருசித்துச் சாப்பிடும் முகங்கள், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்கும் கண்கள், விரல் நக்கிச் சாப்பிடும் குழந்தைகள், ருசியின் உச்சத்தில் உள்ளிருந்து தெறித்து விழும் புன்னகைகள்…
கண்களை அறை முழுதும் ஓட விட்டான். வெறும் வெள்ளை. ஒற்றை நிறம் கூட இல்லா வெள்ளை. ஏதும் வாசம் வருகிறதா என முகர்ந்து பார்த்தான். மருத்துவமனை மருந்து வாடைகள் மட்டுமே வர குமட்டிக் கொண்டு வந்தது. பார்க்க யாரும் வந்திருந்தால் ஏதும் வாங்கி வந்திருப்பார்களே என கட்டிலின் அருகே கிடந்த சிறு மேசையை நோக்கித் தலையைத் திருப்பினான். வெறும் குளுக்கோஸ் பாட்டில்கள். ஒரு பிரெட் பாக்கெட் கூடவா வாங்கி வந்திருக்க மாட்டார்கள்? இதோ இப்போது சென்ற நர்ஸ் திரும்பி வந்தால் கேட்டுப் பார்க்கலாம். ஏதும் குடிக்க வேண்டுமா என்று கேட்டாளே! நல்ல ஒரு டிக்காசன் காப்பி கேட்டுப் பார்ப்போம். கூட ஒரு உளுந்த வடை! ம்ம்…
அந்த அறையின் மேல் சுவரிலிருந்து ஒரு சத்தம் வந்தது. கூர்ந்து பார்த்தபோது மெல்லிய ஒரு விரிசல் விழுந்தது. அதன் தூசி அவன் மீது விழ கைகளை ஆட்டி விலக்கினான். மெல்ல விரிந்த விரிசலிலிருந்து மென்கைகள் இரண்டு நீண்டு வந்தன. கைகளில் ஒரு தங்கத் தட்டு. என்ன அதன் மீது? அட, மொறுமொறு உளுந்த வடையும் தேங்காய்த் துவையலும்! அடுத்து வந்தது மல்லிகைப்பூ இட்லியும் சாம்பாரும், கூட ஒரு கிண்ணத்தில் ரச வடையும்! அற்புதம், அற்புதம். என்ன ருசி! ஒன்றைச் சாப்பிட்டு முடிக்க இன்னொன்று, பிறகு இன்னொன்று என வந்து கொண்டேயிருந்தது. நின்றபாடில்லை. அறை முழுதும் தங்கத் தட்டுகள்! தின்று முடித்த எச்சில்கள்!
தட்டுகளும் மிச்சங்களும் சேர்ந்து மலை போலக் குவிய அதன் மேல் படுத்திருந்தான் நாராயணன். நறுமணங்கள் மெல்ல மெல்ல நாற்றமாக மாறின. மூச்சுத் திணறி, “போதும், போதும்” என்று அரற்றினான். மேலும் மேலுமென உணவுகள் குவிய நறுமணங்களும் வாடைகளும் நிறைய, அவற்றுள் மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கினான். மணி மாஸ்டரின் குரல், “நாராயணா, நாராயணா, எப்பிடி இருக்க மக்ளே?”
மருத்துவர் வந்து பார்த்து விட்டு, “ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கு போலாம் தம்பி. கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட்டு தான் கேட்டியா? ஆமா, கூட யாரு இருப்பாங்க? வேளைக்கு சாப்பிடணும். நேரத்துக்கு சாப்பிடாம இருக்கக் கூடாது. பின்ன, காரம், எண்ணப் பலகாரம் கொஞ்ச காலத்துக்கு அவுட். என்ன? புரிஞ்சுதா?” என்றார்,
“சார், கூட யாரும் இல்லன்னு நெனைக்கேன். அந்த ஹோட்டல்காரரு கூட்டிட்டு வந்த பேசண்ட் சார்.”
“ஓ, ஆமா, சரி சரி.. யாரும் கூட இருந்து பாத்துக்க முடியுமான்னு பாருங்க. கொஞ்சம் குடல் ஆறிடுச்சுன்னா பரவால்ல..”
வீட்டிற்கு வந்தவனுக்கு வேளாவேளைக்கு ஹோட்டலிலிருந்து சாப்பாடு வந்தது. ஆனால், சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. மூச்சு மூட்டியது. கஷ்டப்பட்டு சாப்பிட்ட போது நாவில் எதுவும் ஏறவில்லை. ரப்பர் துண்டுகளைக் கடித்து விழுங்குவதைப் போலிருந்தது. நோயின் தாக்கம் என இருந்தவனுக்கு அடுத்தடுத்த வேளைகளிலும் அதே சப்பென்ற சாப்பாட்டைக் கண்டு மனம் நடுங்கியது. சாப்பாட்டுத் தட்டின் அருகே கிடந்து கனவுக்குள் மூழ்கினான். கனவில் வரும் வாசமும் ருசியும் ஆறுதலாக இருந்தது. பசி கூடிக் கூடி அவனை மெல்ல அரிக்க ஆரம்பித்தது. வலிந்து ஒவ்வொன்றாய் எடுத்து வெறி கொண்டதைப் போல தின்றான். ஒரு சொட்டு ருசி கூட இல்லை.
வாழ்வின் ருசி எல்லாமும் வடிந்து போய்விட்டதா, இனி அப்பாவுடன் சாப்பிட்ட கல்யாணச் சாப்பாடு கிடைக்கவே கிடைக்காதா? என் நரம்புகளிலெல்லாம் பாவம் குடியேறி விட்டதா? அம்மாவைப் பழித்த பாவமா? அவள் மட்டும் என்ன யோக்கியமா? எரிசேரி, அவியலெல்லாம் எங்கே? மாம்பழப் புளிசேரி, நார்த்தங்காய்ப் பச்சடி, போளி, பால் பாயாசம் எல்லாம் எங்கே?
படுத்தால் தூக்கம் இல்லை. தூங்கினாலும் எழுந்துகொள்ளப் பிடிக்கவில்லை. அறைக்குள்ளேயே அந்த முடை நாற்றத்திற்குப் பழகி படுக்கையிலேயே கிடந்தான். மெலிந்தான். கண்களைச் சுற்றி கருமை. இதென்ன இளநரையும் வந்துவிட்டதா? ஒருவேளை இதெல்லாமே கனவுதானோ? எப்படி இந்தக் கனவிலிருந்து வெளிவருவது? மாஸ்டர் வந்து பார்த்தாரா? குட்டி மணி? முதலாளி?
உத்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட இரண்டு வேட்டிகளின் முடிவில் ஒரு தலை கொள்ளுமளவு சுருக்கு கிடந்தது. நிதானமாக எழுந்து நின்றவன் அருகே குவிந்து கிடந்த தங்கத் தட்டுகளின் மீது ஏறி நின்றான். இன்னும் சிறிது எம்பினால் சுருக்கில் மாட்ட சரியாக இருக்கும். இன்னும் சில தட்டுகள்! தொங்கும்போது கால்கள் கிடந்து அடிக்குமா? நாக்கை கடித்துத் துண்டாக்கி விடுவேனா? இரத்தம் தெறிக்குமே? இரத்தத்தின் ருசி எப்படி இருக்கும்? அப்பா பொதப்பிலேறி தான் செத்துப் போனாரா? அப்போது என்ன ருசி தெரிந்திருக்கும்? இன்னும் சில தட்டுகள்! இதோ, இப்போது ஏறி விடுவேன். இதென்ன, இந்தச் சுருக்கு எட்டாமலேயே இருக்கிறது? கடைசியாக ஒருமுறை கூட ருசியாகச் சாப்பிட முடியாதா?
ஒவ்வொரு நாடியிலும் இதயத் துடிப்பு தடித்துக் கேட்ட, ஒவ்வொரு மூச்சும் நீண்டு விழுந்த அந்த கணத்தில் அவன் படுக்கையருகே வந்து நின்றது ஒரு உருவம். இருக்காது, இருக்கவே இருக்காது? அம்மாவா? சீ, சீ! ஒரு கணம் பல்லைக் கடித்தவன் அடுத்த நொடி ஓவெனக் கதறி அழ ஆரம்பித்தான். உடன் அந்த உருவமும் அழ ஆரம்பித்தது. அம்மா வந்திருப்பது நிஜம் தானா? எப்படி வந்தாள்? அவள் வீம்பை விடுத்து வந்திருக்க வாய்ப்பேயில்லையே? அவள் என்ன வீம்பு காட்டுவது, நானல்லவா காட்ட வேண்டும்? அவள் முகத்திலேயே முழிக்கக்கூடாது என்றிருந்தேனே! இப்போது எதற்கு வந்திருக்கிறாள்? ஒரு வேளை குட்டி மணி சொல்லியிருப்பானோ? மாஸ்டரே நேரில் போய் கூட்டி வந்திருப்பாரோ? என் தலையில் கைவைத்திருக்கிறாளே, இதெல்லாம் சாத்தியமேயில்லையே? அப்பாவின் சாவு, அடியந்திரம். எரிசேரி….
பசிக்கிறதே! பசி, வெறி கொண்ட பசி.. செத்துப் போன நாக்கு. கை கால்கள் தூக்கித் தூக்கி படுக்கையில் அடித்தன. வெறியில் கூச்சலிட்டான். அலறினான். ஓங்கி அழுதான். அப்போது, அருகேயிருந்த உருவத்தின் அந்த நடுங்கிய மென் கைகள் அவனை நோக்கி நீண்டன. கழுத்தோடு அவனைத் தாங்கி, எழுந்து உட்காரச் செய்தன. அருகேயிருந்த கிண்ணத்தை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றன. தாவிச் சென்று அந்தக் கிண்ணத்தில் வாய் வைத்து உறிஞ்சினான். உயிர், உயிர், உடலின் மொத்த நோயையும் தீர்க்கும் உயிர்.. ஒரே உறிஞ்சலில் மொத்தக் கிண்ணத்தையும் முடித்து எழுந்து கண் திறந்தவன் உதட்டோரம் இருந்த ஒற்றைப் பருக்கையை நாவால் உள்ளிழுத்த போது துள்ளி எழுந்தான்.
“ஆஹா, என்ன ருசி. அற்புதம்.. அற்புதம்…” என்று கத்திக் கொண்டே ஆட ஆரம்பித்தான்.
***
சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”… மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com