Wednesday, January 22, 2025
Home Blog

ஏமாற்றாத நாயகர்கள்

0

ஷான் கருப்பசாமி

ண்பதுகளின் முற்பகுதி என்று நினைக்கிறேன். அப்போது எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். இந்தியா உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் வீரர்கள் மெல்ல கோடீஸ்வரர்களாக மாறத் தொடங்கியிருந்தார்கள். தொலைக்காட்சிகள் ஊருக்கு ஒன்று என்று முளைத்துக் கொண்டிருந்தன. வேறு எங்கும் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால் இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை ஒரு மருத்துவர் தன் வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சியை எடுத்து வைத்து அனைவரும் பார்க்கச் செய்தார். பக்கத்து வீடுகளில் தேடிப் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர், பூந்தளிர் பரிச்சயம் இருந்தது. அப்படியான ஒரு பெல்பாட்டம் காலத்தில்தான் ராணி காமிக்ஸ் கையில் கிடைத்தது. அழகியைத் தேடி என்ற பெயரில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் சாகசம். எச்சில் விழுங்கி சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்ள வைக்கும் கிளுகிளுப்பான மேலாடையில்லாத படங்களுடன் அந்தக் காமிக்ஸ் வெளியாகி இருந்தது. அதன் பிறகான இதழ்களில் எல்லாம் அந்த அந்நிய அழகிகளின் மாண்பைக் கூட உள்ளூர் ஓவியர்கள் மேலாடை வரைந்து காப்பாற்றியிருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு வேறு புத்தகங்கள் தந்திராத ஒரு வாசிப்பு அனுபவத்தை அந்தக் கதைகள் தந்தன. நான் காமிக்ஸ் கதைகளின் அடிமையாகத் தொடங்கியது அப்போதுதான்.

முத்து காமிக்ஸ், லயன், மினி லயன், ஜூனியர் லயன்  போன்றவை அதற்குப் பின்பாக எனக்கு அறிமுகம் ஆனவை. அழிவு கொள்ளை தீமை கழகத்தை எதிர்த்துப் போராடிய லாரன்ஸ் டேவிட் கதைகள் படித்தபோது உண்மையில் அப்படி ஒன்று உலகில் இருக்கக் கூடும் என்று நம்பினேன். பிற்காலத்தில் அந்த நம்பிக்கையை நம் அரசியல் கட்சிகள் காப்பாற்றின. ஸ்பைடர் என்ற நெகடிவ் ஹீரோவும் ஆர்ச்சி என்ற தங்கமான குணம் கொண்ட இயந்திர மனிதனும் என் பதின் வயதுக் காலங்களின் நினைவுகளில் பதிந்து போனவர்கள். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் கதைகள் படிக்கும்போது அமெரிக்கா என்ற வல்லரசு எத்தகைய சமாதியின் மீது எழும்பியிருக்கிறது என்று புரிந்தது. பிறகு நான் செய்த அமெரிக்கப் பயணங்களின் அனுபவத்தை காமிக்ஸ் கதைகள்தான் தந்தன. எத்தகைய வில்லனாக இருந்தாலும் தாடையைப் பெயர்க்கும் டெக்ஸ் இன்றைய மாஸ் ஹீரோக்களுக்கு முன்னோடி. டெக்ஸ் வில்லருக்குப் பெரிய இடைஞ்சல் தரும் வில்லன் இதுவரை பிறக்கவில்லை. அவருடைய மகனுக்கே திருமணம் நடந்தாலும் அவர் இளமை குன்றாமல்தான் வலம் வருவார். மகனுக்கு ஒரு ஆபத்தென்றால் இவர்தான் போய் காப்பாற்றுவார். இவை அத்தனையும் நம் ஹீரோக்களுக்கு ஒத்துப் போகிறது பாருங்கள்.

ஏனென்று இப்போது நினைவில்லை. நாடோடி ரெமி கதை குறித்து மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். உலகின் மிகப் பிரபலமான காமிக்ஸ் அது குறித்து வெளியான விளம்பரங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதும் ஏதாவது ஒரு காமிக்ஸ் புத்தகத்தைக் கையில் வைத்தபடி திரிந்து கொண்டிருந்தேன். இன்று வரை என்னோடு பயணிக்கும் நெருங்கிய நண்பனை நான் தேர்ந்தெடுக்க அவனும் காமிக்ஸ் வாசகன் என்ற காரணம் மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போதும் புத்தகக் கண்காட்சிகளில் என் பெரும்பகுதி புத்தகச் செலவின் ஒதுக்கீடு காமிக்ஸ் கதைகளுக்காக இருந்து வருகிறது. என் இளம் வயதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் சினிமாவுக்கு அடுத்தபடியான இடத்தை படக்கதைகளுக்குத் தரலாம்.

படங்களின் வழியாக சொல்லப்படும் கதைகள் தரும் அனுபவம் ஒரு புதினத்துக்கும் திரைப்படத்துக்கும் இடைப்பட்டது. எத்தகைய சிக்கலான கதைக் களத்தையும் காமிக்ஸ் எளிதாக சில படங்களில் விளக்கி விடும். இறந்தகாலம், எதிர்காலம், விண்வெளி, பாதாள உலகம் என்று நொடிகளில் நம்மை கதைக்குள் இழுத்து விடும். படக்கதைகள் அப்படி என்ன அப்பா டக்கர்களா என்று கேட்டால் அப்படித்தான். உலகத்தின் இதுவரை அதிக வசூல் சாதனை செய்த முதல் பத்து படங்களில் நான்கு படங்கள் டிசி அல்லது மார்வல் காமிக்ஸ் பாத்திரங்களை ஒட்டி எடுக்கப்பட்டவை. பொதுவாக காமிக்ஸ் அல்லது கிராபிக் நாவல் என்றால் அது சிறுவர்களுக்கானது என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. படிப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அப்படியே காட்டும் கிராபிக்ஸ் நாவல்கள் இருக்கின்றன. அவற்றில் பல தமிழில் கூட மொழிபெயர்த்துக் கிடைக்கின்றன. பல நாடுகளின் உள்நாட்டுப் போர்களை காமிக்ஸ் கதைகளின் வழியாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கோட்பாடுகளைச் சொல்லும் கதைகளை காமிக்ஸ் வாயிலாக இன்னும் அழுத்தமாகச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட நிலத்தின் இனத்தின் தன்மைகளை காமிக்ஸ் ஒவ்வொரு வரையப்பட்ட கட்டத்திலும் சொல்லிக்கொண்டே வரும். இதை ஒருபோதும் எழுத்தில் கொண்டுவர முடியாது.

இப்போது சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய கதை சொல்லும் ஆர்வம் காமிக்ஸ் வாசிப்பிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாக நாவல்களுக்கான கதைக்களம் பற்றி யோசிக்கும்போது எதுவும் சாத்தியம் என்ற கோணத்தில் சிந்திக்க வைப்பவை காமிக்ஸ்கள்தான். கதை எழுதும்போது இதையெல்லாம் விளக்கி விளக்கி எழுத வேண்டுமா, வாசகர்கள் யோசித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றும். அதுவும் காமிக்ஸ் வாசிப்பிலிருந்து வந்த பழக்கம்தான். காட்சிகளாக விரியும் வகையில் கதை சொல்ல காமிக்ஸ் எனக்கு கற்றுத் தந்தது.  எத்தனை உதவி இயக்குநர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ ஷாட் பிரிப்பதில் காமிக்ஸ் குறிப்பாக கிராஃபிக் நாவல்களுக்கு ஈடு இணை இல்லை. ஒரு காட்சிக்கு எப்படியெல்லாம் கேமரா கோணம் வைக்கலாம் என்பதை ஒருவர் இந்தப் புத்தகங்கள் வழியாகவே படிக்க முடியும்.

என் பெயர் லார்கோ – Philippe Francq வின் ஆக்‌ஷன் Panels

லார்கோ வின்ச் வகை கிராபிக் நாவல்கள் பொருளாதாரக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட சாகசங்கள். ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவருடைய கடல் போன்ற திரண்ட சொத்துக்கு வாரிசாக வரும் அவருடைய தத்துப் பிள்ளை ஒரு தறுதலை, கேளிக்கை விரும்பி. கணக்கில்லாத தோழிகளுடன் வலம் வருபவன். அவன் சகவாசம் எல்லாம் நிழல் உலக ஆசாமிகளிடமும் பித்தலாட்டக்காரர்களிடமும்தான். தனது தந்தையின் சொத்தைப் பாதுகாக்க லார்கோ குறுக்கு வழிகளில் சென்றாலும் அவன் நியாயத்தின் பக்கம் நிற்பவன். தன்னுடைய எளிய வாழ்க்கையை அவன் நிறையவே நேசித்து அதற்கு திரும்ப நினைக்கிறான். என்னுடைய வெட்டாட்டம் கதையின் நாயகன் வருண் இதைப் போன்ற ஒரு பாத்திரப்படைப்புதான். தந்தையின் பதவி, பணம், அதிகாரத்தின் மீது எந்த விதத்திலும் ஆசை இல்லாதவன். அவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். நண்பர்கள், குடி, தோழிகள் என்று திரிந்தவனின் மடியில் பதவி வந்து விழுகிறது. அதை அவன் எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. இதை எழுதும்போது லார்கோ வின்ச் என் நினைவில் இல்லை. இப்போது யோசித்தால் இத்தனை ஒற்றுமைகளா என்று தோன்றுகிறது.

அடுத்தபடியாக எனக்குப் பிடித்த கதாபாத்திரம் மாடஸ்டி ப்ளைஸி. எத்தனை வலிமையான ஆண்களையும் அடித்து வீழ்த்தும் பலமும் அசத்தி வீழ்த்தும் அழகும் கொண்டவள். உயிருக்கு ஆபத்தான சூழல்களில் புறங்கையை வாய்க்கு மேல் வைத்து வீல் என்று கத்தும் நாயகிகளைப் பார்த்து வளர்ந்தவனுக்கு மாடஸ்டியின் சாகசங்கள் ஆச்சரியமானவையாக இருந்தன. ஆண் நண்பர்களை விருப்பம் போல மாற்றிக்கொண்டே செல்லும் அந்தப் பாத்திரம் என் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். பதின் பருவத்தில் மாடஸ்டி போன்ற கண்கள் கொண்ட ஒருத்தியிடம் அதற்காகவே மயங்கியது கூட உண்டு. பொன்னி என்ற நாவலை எழுதி முடித்த பிறகுதான் அதன் முக்கியப் பாத்திரத்தில் மாடஸ்டியின் சாயல் இருப்பதை உணர்ந்து கொண்டேன். மாடஸ்டியைப் போலவே பொன்னிக்கும் உயிரைக் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள். எத்தகைய சாகசத்துக்கும் பொன்னி அஞ்சாதவள். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக உயிர் போனாலும் கவலை இல்லை என்று செயல்படுபவள். அத்தனையும் மாடஸ்டியின் குண வார்ப்புகள்.

அமெரிக்காவின் வரலாறு எனக்கு பாடப் புத்தகங்களில் படித்துத் தெரிந்ததை விட காமிக்ஸ்களின் வழியாகத்தான் அதிகம் பரிச்சயம். ரோமப் பேரரசின் வலிமை எத்தகையது என்பதை ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளிலிருந்துதான் படித்துத் தெரிந்து கொண்டேன். இவற்றைப் படிப்பதால் வரலாறு பற்றி முழு அறிவு வந்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தேர்வுகள், ஆசிரியர் என்ற பயம் இல்லாமல் ஏதோ ஒரு அறிவை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள எனக்கு காமிக்ஸ்கள் உதவியிருக்கின்றன. சொல்லப் போனால் கொஞ்சம் பட்ஜெட் ஒதுக்கி ஐந்தாம் வகுப்பு வரையிலான நம் பாட நூல்கள் அத்தனையும் காமிக்ஸ் வடிவத்தில் மாற்றினால் மாணவர்களின் திறன் இப்போது இருப்பதை விடப் பல மடங்கு மேம்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மாணவர்களின் படைப்புத் திறனையும் அது மேம்படுத்தக் கூடும். மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான வாசிப்பை நோக்கி அது அவர்களை இட்டுச் செல்லும். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகள் தோறும் நூலகம் உருவாக்கி வைத்தால் மட்டும் போதாது. அந்த நூலகங்களை மகிழ்ச்சியான இடங்களாக மாற்ற வேண்டும். படக்கதைகள் அந்த மாயத்தைச் செய்யும் சக்தி வாய்ந்தவை.

பிக்பேங் தியரி என்ற நெட்ஃப்ளிக்ஸ் வலைத்தொடரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். உச்ச கட்ட அறிவுடைய நான்கு நண்பர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கில்லாடிகள். ஆனால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளில் அத்தனை விவரம் தெரியாதவர்கள். உடலளவில் பலவீனமானவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை காமிக்ஸ் வாசிப்பு. ஒரு காமிக்ஸ் புத்தகக் கடைதான் அவர்களின் சரணாலயம். ஏன் நோஞ்சான் படிப்பாளிப் பிள்ளைகள் தங்களை ஒளித்துக் கொள்ளும் இடமாக காமிக்ஸ் இருக்கிறது என்று அதில் ஒரு உரையாடல் வரும். அவர்களுக்குத்தான் சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களைவிட வலிமையான சக மாணவர்களிடமிருந்து தப்பித்து அவர்கள் இந்த சாகச உலகில் தங்களை தொலைத்துக் கொள்கிறார்கள். தங்களையே அந்த ஹீரோக்களில் ஒருவனாக நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது அப்படி ஒருவன் தங்களைக் காப்பாற்ற வருவான் என்று நம்புகிறார்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்கள் காக்கப்படும் அந்த உலகத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் இவை இல்லை என்று பொருளில்லை. புராண, இதிகாசங்கள் வடிவத்தில் அவை இருக்கின்றன.

இன்றைய சூழலில் சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் நோஞ்சான் பிள்ளைகளாகத்தான் இருக்கிறோம். நம்மை விடப் பல மடங்கு பெரிய ஏதோ ஒன்று நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. நம்மை நசுக்குவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவை நாம் தொடர்ந்து தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். திரைப்படங்களிலும் அரசியல் தலைவர்களிலும் சுய முன்னேற்ற குருக்களிடமும் சாமியார்களிடமும் நாம் விடாமல் தேடிக்கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் இந்தக் காமிக்ஸ் நாயகர்கள் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் இந்த உலகத்துக்கு ஆபத்து நேரும்போது அவர்கள் பறந்து வந்து காப்பாற்றும் தங்கள் கடமையில் தவறுவதே இல்லை.

***

ஷான் கருப்பசாமி – தனியார் இணையவழிக் கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் இருக்கிறார். “வெட்டாட்டம்”, “பொன்னி” பொன்னி-2 என மூன்று நாவல்களும் சின்ராசு (உரையாடல்கள்), தங்கம் சிறுகதைத் தொகுப்பும் ‘ஆண்ட்ராய்டின் கதை’, ‘எதிரொலிக்கும் அறைகள்’ என்ற இரு கட்டுரைத் தொகுப்புகளும் ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’ என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது. திரைத்துறையில் திரைக்கதை ஆசிரியராகவும் இயங்குகிறார். மின்னஞ்சல்: shan.mugavari@gmail.com

Persepolis – சத்ரபியின் வாழ்க்கைக் குறுக்குவெட்டுத் தோற்றம்

0

தூயன்

ர்ஜான் சத்ரபி 1969 ல் ஈரானில் பிறந்தவர், 1979 ல் வெடித்த ஈரானின் இஸலாமியப் புரட்சியினால் புலம் பெயர்ந்தவர்களில் சத்ரபியும் ஒருவர். தற்போது பாரிஸில் வசிக்கிறார். இவர் குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள், காமிக்ஸ்கள் எழுதியுள்ளார். இவரது காமிக்ஸ்கள் பல தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க்கர் உட்பட உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. பெர்செபோலிஸ் 1, பெர்செபோலிஸ் 2 இரண்டும் சுயசரிதை வடிவில் எழுதப்பட்ட, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான காமிக்ஸ். அதன் பிறகு எம்ப்ராய்டரிஸ் என்கிற புத்தகத்தை 2005 ல் எழுதினார். தொடர்ந்து அரசதிகாரத்திற்கு எதிராகவும் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இஸ்லாமியப் பெண் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற பெண்களில் சத்ரபியும் முக்கியமானவர்.

“இரண்டாம் உலகப் போர் மேற்கில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது, அது முழு உலகிற்கும் ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அது அல்ல. இரண்டாம் உலகப் போர் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. எங்களுக்கு ஒரு போர் இருந்தது. கொரியாவின் போருக்குப் பிறகு, ஈரான்-ஈராக் போர் மிகப்பெரிய போர், ஆனால் அதைப் பற்றி யாருக்குத் தெரியும்? இந்த போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையிலான இந்த வெள்ளையர்கள் அனைவரும் சுமார் அறுநூறு மில்லியன், அதாவது உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதம். உலகம் முழுவதிலும் உள்ள பத்து சதவிகித மக்களின் பிரச்சனை நூறு சதவிகிதப் பிரச்சனை என்று நம்மீது முன்னிறுத்துகிறார்கள் அதுதான் வெள்ளை நாசிசம்.”

பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல்

‘மெய்யான உலகமானது மானுட உடலின் விரிவாக்கமாகிறது. மானுட உடல் எப்படி அங்ககமான உறுப்புகளைக் கொண்டிருக்கிறதோ அதுபோல மெய்யான உலகம் மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்புகளாகிறது. இதனால்தான் மானுடர்களின் பௌதிக இருப்பும், மனம் சார்ந்த இருப்பும் இயற்கையோடு இணைந்திருப்பது என்பது, இயற்கை இயற்கையோடு இணைந்திருப்பது என்றே அர்த்தமாகிறது. ஏனெனில் மானுடர்கள் இயற்கையின் பகுதியாகிறார்கள் என்கிறார் மார்க்ஸ். இயற்கை என்றழைக்கப்படும் பௌதிக உலகமே மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்பு. இந்த மேற்கோளை உள்முகமாக விரித்துப் புரிந்துகொண்டே போகலாம். இன்றைக்கு ‘உலகம்’ என்பதற்கு அர்த்தம் என்ன? உலகம் / மெய்யான உலகம் / மெய்நிகர் உலகம் என நவீன அறிவியல் உலகத்தை அர்த்தப்படுத்துகிறது. மார்க்ஸ் குறிப்பிட்ட அங்ககமல்லாத மானுட உறுப்புகளான பௌதிக உலகத்திற்கு இந்த நவீன அறிவியல் இன்று என்னவாக இருக்கிறது?

இதற்கு முதலில் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஒன்று நவீன அறிவியல் மற்றொன்று கலாச்சார மாற்றம். முதலில் நவீன அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நவீன அறிவியல் கிரேக்க அறிவின் தாக்கத்தைக் கொண்டே உருவானது என்பது நாம் அறிந்தது. கிரேக்கப் பார்வை இந்திய, அரேபிய பண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய கணிதவியலை இஸ்லாமிய இறையியலிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவொன்றாக நவீன அறிவியல் அதை அப்புறப்படுத்துகிறது. சுந்தர் சருக்கை சொல்வதை இங்கு மையப்படுத்த வேண்டும். காலனியத்தின், ஏகாதிபத்தியத்தின் விளைவாக இயற்கையை (பௌதிக உலகை எனப் புரிந்துகொள்ளலாம்) ஒருவிதமாக அர்த்தப்படுத்தும் நவீன அறிவியல் முறைமை உலகளாவியத் தன்மை கொண்டதாகி விட்டது. இதுவே புறவயத் தன்மை கொண்டதாகவும், நவீனத்துக்கு முந்தைய சமூகங்கள் உருவாக்கிய மற்ற வரையறைகள் அகவயமான கதையாடல்களாகவும் முன்வைக்கப்பட்டன. இதே கருத்தைத்தான் சையித் ஹூசைன் மேற்கத்திய நவீனத்தின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக மாபெரும் இஸ்லாமிய அறிவியலாளர்கள் எல்லோரும் இஸ்லாமிய மறைஞானத்துக்கு உட்பட்டுத்தான் இயங்கினார்கள் என்கிறார். நவீன மேற்கத்திய அறிவியல் மதத்தையும் அறிவியலையும் எதிரெதிராக வைப்பதை நாம் நினைவில் கொள்வோம். இங்கு இஸ்லாமிய மறைஞானம் என்ற சொல்லை, நான் மேலே குறிப்பிட்ட நவீன அறிவியலால் விலக்கப்பட்ட கீழைத்தேய கணிதவியல் என்றே புரிந்துகொள்கிறேன்.

இரண்டாவது, கலாச்சார மாற்றம். கலாச்சார மாற்றம் எப்போதும் ஒருவித நவீன உலகப் பார்வையை முன்வைப்பதாக நாம் தவிர்க்க முடியாமல் நம்புகிறோம். எப்படி நவீன அறிவியலை மறுக்க முடியாதோ அதேபோல கலாச்சார பிம்பத்திலிருந்து நம்மால் விலக்கவும் முடியாது. உலகளாவியப் பார்வை என்கின்ற பதமே கலாச்சார இறக்குமதியின் இன்னொரு அர்த்தம். அப்படியென்றால் நவீனம் , பழமையை முற்றிலுமாக நிராகரிக்கிறதா? அல்லது இணைத்து விலகுகிறதா? என்றால் இரண்டும் நடந்திருக்கலாம் என்கிறார்கள். காலனிய நவீனத்துவம் அறிமுகப்படுத்திய மேற்கத்திய நவீனத்துவம்தான் இருபதாம் நூற்றாண்டின் உலகம் முழுக்க வேர் ஊன்றியதென்பது மறுக்க முடியாத உண்மை.

நவீனத்துவம் எப்படி பொருளாதார அதிகாரத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதோ அப்படியேதான் பொருளாதார அதிகாரம் நவீனத்துவத்தை உள்ளடக்கமாகக் கொள்கிறது. அப்படியென்றால் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயிப்பதில் பொருளாதாரத்திற்கும் அடிப்படை மதவாத அனுகுமுறைக்குமான உறவு என்ன?

இந்தக் கேள்விகளை மர்ஜான் சத்ரபி எழுதிய பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல் வழியே நாம் எதிர்கொள்ள முடியும். 1979 வரை ஷா முகம்மது ரீஷா பக்லவியின் ஆட்சி நடக்கிறது. ஈரானை நவீனமயமான நாடாக, வெளியே செல்வது, ஹிஜாப் அணிவது என பெண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், மேற்கத்தியக் கலாச்சாரத்தின் போக்கில் சுதந்திர நாடாக வைத்திருக்கிறார். அப்போது ஈரானின் அரசதிகாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் (ஈரானின் எண்ணெய் வளங்களுக்காக) இருக்கிறது. ஷாவை ஆட்சியிலிருந்து இறக்கி அவரது மகனைத் தூண்டிவிட்டு பிரிட்டனும் ரஷ்யாவும் செல்வாக்கைப் பிடிக்கின்றன. ஆனால் ஷா தனது தந்தையைப் போன்றே நவீனமயமான நாடாகத்தான் ஆட்சியை நடத்துகிறார் (அப்போது உருவானதுதான் கலாச்சார வெண்மை புரட்சி) , ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து ஆட்சி செய்து வந்த பிரிட்டனின் கொள்கையைத் துறக்கும் முடிவில்-எண்ணெய் நிறுவனங்களை தாங்களே நிறுவகித்துக் கொள்கின்ற நிலை-பிரிட்டன் ஈரானின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, தங்களுடைய முதலீட்டியத்திற்குச் சிக்கல் ஏற்படுகிறபோது , இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை உருவாகிறது. ஈரானுக்கு முன்பாக இப்போது இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று, தனது சொந்தப் பொருளாதாரத் தேவைகளை நிர்வகிக்க வேண்டும், இரண்டாவது, உள்ளூர் மதகுருமார்கள் அலி கமேனி போன்றவர்களால் இஸ்லாமிய அடிப்படை வாத வழக்கங்களை மீளப் பற்றும் முடிவு.

இந்தச் சூழலில்தான் அங்கு இஸ்லாமியப் புரட்சி வெடிக்கிறது. நாவலின் மையப் பாத்திரமான மர்ஜான் சத்ரபி ஆறுவயதுச் சிறுமியாக இந்தப் புரட்சியை என்னவென்றே தெரியாமல் எதிர்கொள்வதிலிருந்து தொடங்குகிறது பெர்சேபோலிஸ் நாவல் . நவீன பழக்கவழக்கங்களால் (பர்தா அணியாத) வளரும் சத்ரபிக்கு திடீரென ஒருநாள் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளின் நெருக்கம் குழப்படையச் செய்கின்றன. இருபாலர் பள்ளியாக பாட முறைகள் மாறுகின்றன. எங்கு பார்த்தாலும் பெண்கள் கலாச்சார அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதாவது, ஈரானிய அரசு மேற்கத்திய நவீன கலாச்சாரத்திற்கு எதிராக (Counter to Western Modernity) தனது அதிகாரத்தை நிறுவ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரப் பண்பை கையில் எடுக்கிறது. பிரிட்டிஷின் ஏதேச்சதிகாரப் போக்கிலிருந்து புரட்சி மூலம் விடுதலை பெறுவதா? அல்லது அடிப்படை இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்வதா? என்கின்ற இரட்டைக் குழப்பத்தில் அன்றைய ஈரானின் முகம் புரட்டிப் போடப்படுகிறது. (இதை இன்று ஓரளவுக்கு நம்மால் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் சீன அரசின் மறைமுக அதிகாரத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.)

பெர்சேபோலிஸ் நாவலின் தொனி எள்ளல் தன்மையுடையது. சிறுமியான சத்ரபி அடிப்படைவாதக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் விதம் நாவல் முழுக்க அதை நையாண்டிப் போக்கில் சொல்லப்படுகிறது. அதாவது, பிரக்ஞை பூர்வமாகப் பகடி செய்யாமல் ஒருவித Black Humour போல். சத்ரபி சிறுவயதில் அத்தனைப் பிரச்சனையையும் கடவுளிடம் (கற்பனையில் உரையாடுவது) சொல்கிறாள் (முறையிடுவதில்லை). கடவுள் நீண்ட வெள்ளை முடியும் தாடியுமாக மார்க்ஸைப் போல தோற்றமளிக்கிறார் என்கிறாள். கடவுள் அவளிடம், “நீ டாக்டராகப் போகிறாயா?” என்று கேட்பதற்கு இல்லை “நான் தீர்க்கதரிசியாகப் போகிறேன்”என்று, ”ஏன் இந்த உலகை சகிப்புத் தன்மை கொண்டதாக மாற்ற முடியவில்லை?” எனக் கேள்வி கேட்கிறாள். அவளது அப்பா மூலம் அறிமுகப்படுத்தப்படும் உலகத் தலைவர்கள் காந்தி, சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ மற்றும் தத்துவவாதிகள் மார்க்ஸ், தெகார்த்தே என அனைவரையும்போல தன்னை ஒப்பனை செய்துகொண்டு புரட்சி செய்யப் போராட்டத்திற்கு கிளம்புவதாக விளையாடுகிறாள். ஒரு சமயம், மார்க்ஸ் அவளுக்கு கனவில் வரும் வெள்ளைத் தாடியும் சுருட்டை முடியுடன் இருக்கும் கடவுள் போல இருக்கிறார்.

ஈரான்-ஈராக் போர் துவங்கும்போது ஈராக்கிலிருந்து நிறைய பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்கள். சத்ரபியின் குடும்பமும் முயற்சிக்கிறது. ஆனால் கடைசியில் சத்ரபி மட்டும் ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்படுகிறாள். ஒருபுறம் கலாச்சார அடக்குமுறை, அடிப்படைவாத நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல் என அனைத்திலிருந்தும் வெளியாவதற்கு ஒரே தீர்வான நாட்டை விட்டு வெளியேறுவது நல்ல முடிவு என்றாலும் புலம்பெயரும் நாட்டின் கலாச்சாரம், அன்றாட நடைமுறைகள் அவளது உலகத்தை மேலும் சிக்கலாக்குகிறது. ஆஸ்த்திரியாவின் நவீன வாழ்க்கை முறை, மது விடுதி, களிப்பூட்டும் ஆடை ஒப்பனைகள், அதீத சுதந்திரம் எல்லாம் சத்ரபிக்கு உற்சாகத்தை அளிப்பதற்குப் பதிலாக மன அழுத்தத்தையும் புரியாதக் குழப்பத்தையும் தருகிறது. அங்கேயே படிப்பை முடிக்கின்ற சத்ரபி, பின் தாய்நாடுக்குத் திரும்பி வேலை செய்கிறாள், இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாள், திருமணம் செய்து கொள்கிறாள், பின் திரும்பவும் நாட்டை விட்டு வெளியேறுவதோடு நாவல் முடிகிறது. கிழக்குக்கும் மேற்குக்குமான சுதந்திரத் தன்மையையும் நிலையின்மையும் சத்ரபியின் இளமைக் காலம் முழுவதும் அலைகழிப்பை ஏற்படுத்துகிறது. சத்ரபி மட்டுமில்லை அன்றைய ஈரானின் பெண்கள் அனைவரின் சுயமும் நவீனத் தன்னிலையாலும் அடிப்படைவாதத் தன்னிலையாலும் கட்டப்படுகிறது.

ஆஷிஸ் நந்தி தனது The Uncolonized Mind கட்டுரையில் ருத்யார்ட் கிப்ளிங் என்கின்ற ‘ஆளுமை’ எப்படி காலனியப்பட்ட இந்திய நிலத்தின் பழக்கங்களைக் கொண்ட மேற்கத்திய மனிதனுக்குள் உருவானது என உரையாடுகிறார். அதவாது, கிப்ளிங் போன்று பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வளரும் குழந்தைகள் Indianized Westerner / Westernized Indian என்கிற பண்பாட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். கிப்ளிங்கால் பிரிட்டிஷ்காரர்களை வெறுக்கவும் முடியாமல் முழுமையான இந்திய மனோநிலையால் கவரப்பட்டு இந்தியர்களால் பிரிட்டிஷ்காரராகப் பார்க்கப்படுவதன் பிரதிபலிப்புதான் Kim கதாப்பாத்திரம். இத்தகைய சுயம் ஒருவகையான பிளவுபட்ட தன்னிலையால் உருவாகிறது. முழுமையானச் சுயமாக இல்லாமல் பிளவுபட்ட சுயமாக. கிப்ளிங்கின் படைப்பூக்க மனம் இந்தப் பிளவுபடுவதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறது என்பதாலே Kim இந்திய நிலத்தில் அநாதையாக அலைவதும் (ஈரானைவிட்டுத் தப்பிச் சென்றாலும் சத்ரபி இதே போன்று ஆஸ்திரியாவில் சுற்றிக் கொண்டிருப்பாள்), தி ஜங்கிள் புக் போன்ற அதீதக் கற்பனைகளும் வரக் காரணமாக அமைகிறது. மர்ஜான் சத்ரபியின் எழுத்தை முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கு கிப்ளிங்கின் படைப்பூக்க சுயத்துடன் ஒப்பிட முடியும். ஈரானிய எழுத்தாளர் முகமது மோக்தரி போன்றவர்கள் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகான ஈரான் இரட்டை கலாச்சாரத்தால் உருவானது என்கிறார்கள். புரட்சி மக்களுக்கு-முக்கியமாகப் பெண்களுக்கு-இரட்டைத் தன்மையான வாழ்வைக் கொடுத்துள்ளது.

நாவல் முழுக்க முழுக்க சத்ரபியின் வழியாகவே Autobiography வடிவில்தான் சொல்லப்படுகிறது. மனவோட்டங்களும் அவளைச் சுற்றியிருப்பவைக்கான எதிர்வினைகளும்தான் சித்திரங்களாக விரிகின்றன. கல்லூரி ஆசிரியர்களிடம் ஹிஜாப் அணிவதற்கு எதிராக, “ஆண்களைப் பார்த்து நாங்கள் சபலப்பட மாட்டோமா?” என்றும் பேருந்து பிடிக்க ஓடியதற்காகக் கண்டிக்கும் காவலனிடம் ”நீங்கள் எனது பின்பக்கத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே?” என்றும் திருப்பிக் கேட்கிறாள். நாவல் முழுக்க கலாச்சார காவல்களிடமிருந்து அவள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறாள்.

நாவலின் ஆசிரியர் மர்ஜான் சத்ரபி, இயல்பில் அவர் ஓவியர் என்பதால் காமிக்ஸ் வடிவத்தில் நாவலுக்கான சித்திரங்களையும் (அவரது உருவத்தை மிக அழகாக, நிஜத்தில் இருக்கின்ற அதே ஒற்றுமையுடன்-மூக்கின் மேல் இருக்கும் மச்சம் கூட) வரைந்திருக்கிறார். அதேசமயம் வழக்கமாக கிராஃபிக் நாவலின் தனித்துவமான வண்ணப்படங்களோ சாகஸ சித்திரங்களோ கிளர்ச்சியூட்டும் கட்டிட அமைப்புகளோ எதுவும் பெர்சேபோலிஸில் கிடையாது. பெர்சேபோலிஸின் சித்திரங்கள் கருப்பு-வெள்ளையில் இருக்கும். எந்தவித அதிக ரசனைத் தன்மையும் இல்லாமல் தட்டையாக, பரவலாக கிராஃபிக் நாவல்கள் அளிக்கும் வாசிப்பு இன்பத்தை வாசிப்பவர்களுக்குத் தராது. கிராஃபிக்கின் வண்ண உலகை ரசித்தவர்களுக்கு பெர்சேபோலிஸ் ஏமாற்றத்தையே தரும். இத்தனையும் தாண்டி பெர்சேபோலிஸ் வாசிக்கப்பட வேண்டுமென்றால் அதன் கதையும் அது பேசியிருக்கும் அரசியலும் அரசதிகாரமும் கலாச்சார மாற்றமும் மிகவும் முக்கியமானது. அன்றைய ஈரானின் பெண் அடக்குமுறைக்குக் காரணமான அடிப்படைவாதத்தைப் (இன்றைக்கும் கூட) பேசியுள்ளது.

ஆசிரியரே சித்திரங்களை வரைகிற போது கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், கற்பனைகள், வெளிப்படுகிற விதம் என அனைத்தும் துல்லியமாக வெளிப்படுகின்றன. மர்ஜான் சத்ரபியின் கலாச்சார அழுத்தம் ஏற்படுத்திய பிளவுபட்ட சுயத்தின் பாதிப்பு மொழியால் வெளிப்படுத்த முடிகின்ற இடங்களுக்கு சவாலான சித்திரப் பிரதிபலிப்பு தீட்டப்படுகிறது. உதாரணமாக, 1979 இஸ்லாமியப் புரட்சி ஏற்படுகின்ற இடங்கள் கரிய பரப்பில் எண்ணற்ற பேய்கள் பறப்பது போன்றும், ஹிஜாப் அணிந்தபின் இராட்சஸ உருவமாகவும் உலகம் இருண்டு போவது போலும், கடவுளும் மார்க்ஸும் அருகருகே நிற்கின்ற படங்கள், கலாச்சார அடக்குமுறைக்கு எதிராக ஸ்பைடர் மேன் போல் கட்டிடங்களில் தாவி ஓடுவது என பௌதிக உலகின் குரூரம் சத்ரபியின் கற்பனைக்குள் சிதறலான குணங்களை, கிப்ளிங்கின் மோக்லி மாதிரியான தப்பித்து ஓடும் வழிகளையும் கொண்டிருக்கிறது.

உதவிய நூல்கள்

  1. ராமாநுஜம் கட்டுரைகள் (எதிர் வெளியீடு)
  2. ஆஷிஸ் நந்தியின் The Uncolonized Mind கட்டுரை

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்; thuyan154@yahoo.com

பெஞ்சமின் (எ) ஜெட்ஸன் – புனிதம் கெடாத புதினம்…

0

– கார்த்திகேயன் புகழேந்தி

என்னதான் மொழிப் புலமையும், விசாலமான அறிவும் இருந்தாலும் கடும் நேர வரயறைக்கு உட்படும்பொழுது எழுதுகோல், காகிதம், அழிப்பான் சகிதம் பணியமர்த்தப்பட்ட எந்த மனிதனும் ஒரு எந்திரனே

அலன் டியூரிங், நவீன கணினி யுகத்தின் தந்தை

தழியலில் தன்னையே மையக் கதாபாத்திரமாக வைத்து சம்பவத்தை விவரிக்கும் இந்த உத்திக்குப் பெயர் ’கொன்சோ முறை’. சில வருடங்களுக்கு முன் உலகின் முதல் கொன்சோ நாவலை எழுதிய ’ஜாக் கெரோவாக்’கிற்குப் போட்டியாக ஒரு கதாசிரியரை அப்படியே போகிற போக்கில் தன் நினைவோடையைக் கதையாக வடிக்கும்படி அமெரிக்காவின் தெருக்களில் நகர்வலம் அனுப்பினார் ’ராஸ் குட்வின்’.

கெராவாக்கும் இவரும் எதிரும் புதிருமான கதாசிரியர்கள். கெராவாக் 50 வருடங்களுக்கு முன் ஹிப்பிக்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தவர். இன்றும் பாப் டைலான், பீட்டில்ஸ் என்று பல பாப் இசையின் முடி சூடா மன்னர்களின் ஆதர்சமான எழுத்துலக முன்னோடி. முரண்பாடுகளின் மூட்டை. தடாலடிப் பெயர்வழி. போதையிலேயே மிதந்தவர். நரம்பியல் கோளாறுடையவராக முத்திரை குத்தப்பட்டவர்.

புதியவரோ ஒரு சொல்லைக் கொடுத்தால் அதையே உள்ளீடாகக்கொண்டு ஒரு கவிதோவியத்தைப் படைக்கும் நயம் கொண்டவர். வாய் பேசாதவர். தர்க்கத்தை மீறாத கனவான். விடாப்பிடிக்கு பெயர் போனவர். ஒரு மைக்ரஃபோன், ஒரு கேமரா, மடிக்கணினி சகிதம் இணையத்தையே இதயமாகவும், நேரியல் கணித்ததையே நரம்பு மண்டலமாகவும் கொண்ட கவனகக் கலைஞர்.

”டிரோன்களும், பாட்களும் கோலோச்சியுள்ள இந்த காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்ன மாதிரியான முன்னேற்றங்களை அறிவியலில் சாத்தியமாக்கியுள்ளதோ அதேபோல் செயற்கை படைப்பாற்றலும் கலைத்துறையில் பெரிய மாற்றங்களைச் செய்யக் கடவது” என்று கட்டியம் கூறுகிறார் ராஸ் குட்வின்.

யார் இந்த ராஸ் குட்வின்? கெரோவாக்குக்கே போட்டியாக அவர் நகர்வலம் அனுப்பிய கதாசிரியர் யார்?

கூகிள் கண்டெடுத்த ராசுக்குட்டிதான் ராஸ். கவிதோவியம்(Poem Portraits) என்ற கலை வடிவை எஸ் டெல்வினுடன் சேர்ந்து தோற்றுவித்த ஒபாமா தோட்டத்து கன்றுக்குட்டி. செயற்கை படைப்பாற்றலைக்கொண்டு கவிதை வரிகளும், பாடல்களும் இயற்றத் துவங்கிய இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிகாலத்தில் அவருக்காக பல உரைகளை இயற்றியுள்ளார். இனி வருங்காலத்தில் சிம்பொனி இசை முதல் டிஸ்னி போன்ற பெரிய திரைப்படக் கம்பெனிகள் எடுக்கும் படங்களின் கதைவரை இப்படித்தான் உருவாகும் என்று அடித்துச் சொல்கிறார்.

அதை மெய்ப்பிக்கும் முயற்சியில்தான் ஒரு ரோபோ காரை ரோந்தில் அனுப்பிவைத்தார். எப்படி கெராவாக் தன் பெண் தோழிகளை வண்டியை ஓட்டச்சொல்லிவிட்டு கையில் கிடைக்கும் காகித்திலெல்லாம் குறிப்புகளைக் கிறுக்கிக்கொண்டே செல்வாரோ அதேபோல் கேமரா காட்டும் வெளிகள், மைக்ரஃபோன் பிடிக்கும் குரல்கள், ஜிபிஎஸ் காட்டும் இடம் எல்லாவற்றையும் உள்ளீடாக எடுத்துக்கொண்டு ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட இலக்கிய அடித்தளத்தைக்கொண்டு காட்சிகளைப் புனைகிறது இந்த மகிழுந்து. ஒரு கதாசிரியர் அல்லது இயக்குநரின் வேலை அதைத் தொகுப்பது மட்டுமே. கெராவாக்கும் எடுத்த குறிப்புகளும் அப்படித்தான். குறிபார்க்காமல் 100 பேரை 3 நிமிட்த்தில் சுட்டு வீழ்த்தும் லோகேஷ் படத்தில் வரும் பீரங்கியைப்போல் தன் டைப்ரைட்டரில் செருகப்பட்ட 120 அடி பேப்பர் சுருளில் தன் பல வருட குறிப்புகளை அடிப்படையாக்கொண்டு மூன்றே வாரத்தில் கதையை தட்டச்சு செய்து முடித்தார். அவர் எழுத்தை அவரது பயணம், உடன் பயணித்தவர்கள் பேசியது, ஊடாடிய நிகழ்வுகள் எல்லாம் வழிநடத்தினாலும் எதை நோக்கிக் கதையை நகர்த்தவேண்டும் என்ற ஒரு முன்தீர்மானத்தோடுதான் தட்டச்சைத் தொடங்கினார்.

100 வருடங்களுக்குமுன் எந்திரகதியில் இயங்கும் மனிதனைப் பற்றி டியூரிங் பேசினார். 50 வருடங்களுக்குப் பிறகு கொராவாக் படைப்பூக்கம் கொண்ட ஒருவனால் எப்படிப்பட்ட சூழலிலும் ஒரு கதையை சிருஷ்டிக்க முடியும் என்று நிரூபித்தார். இன்று மனிதனுக்கு இணையாக கற்பனை செய்யும் முயற்சியில் இருக்கும் 4 சக்கர கதாசிரிய இயந்திரத்தைத்தான் ராசுக்குட்டி பயிற்றுவிக்கிறார்.

இது எப்படி செயல்படும் என்பதை ஒரு உதாரணத்தோடு விளக்கினால் இந்த எழுத்து பானியைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். வருங்காலத்தில் நெல்லைப் பின்புலத்தில் ஒரு கதை வேண்டும் என்று ஒரு பட தயாரிப்பாளர் இந்தக் காரை வாடகைக்கு எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கரிசல் எழுத்தாளர்களின் கதைப் பின்புலங்கள், வர்ணனைகள் எல்லாம் இதன் நரம்பு மண்டலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். பின்பு கதை நடக்கும் அந்தப் பிரதேசத்தில் மட்டும் அது பவனி வரும். நெல்லையப்பர் கோயிலைக்கடக்கிறது என்றால் ஜிப்எஸ்ஸில் டேக் செய்து யாரெல்லாம் அந்தத் தளத்தைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்களோ அது எல்லாவற்றையும் உள்ளீடாக எடுத்துக்கொள்ளும். கூகிள் லென்ஸ் போன்ற மென்பொருளின் உதவியுடன் போகும் வழியில் இருக்கும் மரம், செடிகொடி, வாகனங்கள் எல்லாவற்றைப்பற்றிய தரவுகளையும் கேமரா வழியாக குறிப்புகளாக மாற்றிக்கொள்ளும். ஒலிப்பு முறையைத் தொடர்புபடுத்தி தேவையான பதிவுகளை வட்டார வழக்கிற்கும், மற்றவற்றை உரைநடையாகவும் பதிந்துகொள்ளும். ஒரு நேரத்தில் ஒரு வாக்கியம் என்று வரிசைகரமாக இயற்றிக்கொண்டே பயணிக்கும்.

என்னதான் நொடிக்கு பல வரிகளை அது எழுதித் தீர்த்தாலும் இன்னும் கருப்பொருள், கதாபாத்திரத்தை எல்லாம் வடிவமைக்கும் அளவிற்கு அது வளரவில்லை என்றது ஹாலிவுட் வட்டாரம். ராஸ் வைத்த ஜெட்ஸன் என்ற பெயரை மாற்றி தனக்குத் தானே பெஞ்சமின் என்று நாமகரணம் செய்துகொண்டு முன்னே நகர்ந்தது மகிழுந்து. (உலகின் முதல் AI கதாசிரியர்)

“மொழிதான் மனிதனை இயங்கச்செய்யும் மென்பொருள். மராபார்ந்த ஒரு மொழியின் உவமைகள், உருவகங்கள், நகைச்சுவை குறிப்புகளை,வழிப்போக்கன் யார் முக்கிய கதாபாத்திரம் யார், யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பதற்கெல்லாம் எல்லாம் ஒரே நாளில் தர்க்கத்தால் கட்டமைக்க முடியாது. மற்றபடி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் அறிவுசார் கூறுகளை(facts) இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு கதாசிரியரோ அல்லது இயக்குநரோ சேகரிப்பதில் நிறைய நேரத்தை சேமிக்க முடியும்” என்கிறார் ராஸ்.

“அதற்காக புனைவு சாத்தியமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட மிகை இல்லாது சரியான கலவையில் உணர்வுகளையும், உவமைகளையும் என் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும்விதம் பல பத்திகளை பெஞ்சமின் எனக்கு எழுதிய கதையில் நீங்கள் படிக்கலாம்.” என்பது ராஸ் குட்வினின் வாதம்.

“அக்மார்க் மனித மூளையில் உதித்த சிந்தனைகளையும், வாக்கியங்களையும் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒருவர் சொல்பவராயினும் அவர் ஒரு சமூகத்தை அல்லது ஒரு சாராரைப் பற்றி ஒரு தனி மனிதனின் பொதுப்புத்தியில் உள்ள கருத்துக்களையும், வன்மங்களையும், கற்பிதங்களையும் காழ்ப்பையும் அவருடைய எழுத்திலிருந்து பகுத்தறியும் ஊடுகதிர் சட்டகமாக(editor/fact checker) இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்” என்கிறார் குட்வின்.

சரிதான். காட்சி ஊடகத்தில் சரித்திரப் படங்கள் எடுக்க ஏன் பொருட்செலவு அதிகம் ஆகிறது? ஏனென்றால் அந்த காலத்தில் எல்லாமே மனிதனின் கைப்பட கலை நயத்தோடு கட்டப்பட்டவை. மின்சாரத்திற்கு முந்தய காலத்தில் ஒரு தீப்பந்தத்தின் பிடிப்புச்சட்டகத்தில்கூட ஒரு சின்ன வேலைப்பாடு இருக்கும். அதையெல்லாம் மீள் உருவாக்கம் செய்யும் செலவு நடிகர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு ஆகும்…

அந்த காலத்தில் ஒரு கைவினைஞர் பொருட்களின் வடிவத்தை செழுமைப்படுத்தத்தான் தன் நேரத்தை செலவிட்டார். அகழ்ந்து எடுத்த கீழடி முதல் இன்று நாம் எழுப்பும் ஸ்மார்ட் சிட்டிவரை தானியங்குப் பொறிகள்தான்(automation) செங்கல் சூளைகளில் எந்திரத்தனமான வேலைகளில் உழலாமல் மனித சக்தியை இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வழிவகுத்துள்ளது. இன்று கிராஃபிக்ஸ் பெரும் அளவிற்கு மனித ஆற்றலை திரைத்துறையில் மிச்சப்படுத்துகிறது. வரிசையாக வரலாற்றுப் படங்கள் வெளியாவதற்கும் அதுவே காரணம். ஏதோ ஒரு கட்டத்தில் அனிமேஷன் போன்ற ஆட்டமேஷனை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு எல்லாத் தொழில்களும் தள்ளப்படும்.

ஒரு மருத்துவர், நோய்க்குறைக் கண்டுபிடிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும்தான் நேரத்தை செலவிட வேண்டும். குமாஸ்தா வேலைகளை ஒரு ஆள் அல்லது ஏஐ செய்ய வேண்டும். அப்படியென்றால் அடிமட்ட வேலைகளை எல்லாம் ரோபோ எடுத்துக்கொள்ளுமா? என்றால். இல்லை. அப்போதும் சுஜாதா கதைகளில் வருவதுபோல் எந்த பொத்தானை அழுத்தினால் என்ன வேலை நடக்கும் என்று பொறியை இயக்கத் தெரிந்த தெரிந்த மனிதன் தேவை.

அந்த காலத்தில் ஒரு மன்னரின் கோட்டோவியத்தை வரைய பல மாதங்கள்கூட ஆகும். ஓவியரின் நேரத்திற்காக பெரும்பணத்தை அவர்கள் செலவுசெய்யத் தயாராக இருந்தார்கள். இன்று நாம் யாரும் புகைப்படம் எடுக்க ஸ்டுடியோவுக்கெல்லாம் போவதில்லை. திருமணம் போன்ற பிரத்தியேகத் தேவைகள் தவிர்த்து. ஆண்டி வார்ஹாலின், பிக்காசோவின், டாலியின், வான்கோவின் ஓவிய பாணியை மென்பொருள் தத்ரூபமாக பிரதியெடுத்து பிரிஸ்மா ஃபில்டர்களாக்கி ஒரு புகைப்படத்தில் தட்டையாகப் பொருத்தி சில விநாடிகளில் பைசா செலவில்லாமல் கொடுத்துவிடுகிறதல்லவா? அப்படி ஒரு நாள் ஏஐயிடம் கரிசல் நிலத்தைப் பற்றி கதை எழுதச்சொல்லும்பொழுது அது கி.ராவின் எழுத்தையும், இளையராஜாவின் இசையையும், சில்பியின் சிலையையும், பி.சி.ஸ்ரீராமின் கேமராக் கோணங்களையும் கலந்துகட்டிய ஒரு குறைந்தபட்ச டெம்ப்ளேட்டை உருவாக்கும். (காப்புரிமை சட்டங்கள் எல்லாம் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன). இதை மென்பொருளாகப் பதிவிறக்கம் செய்துகொண்டால் ஒரு செல்போனைக்
கையில் வைத்திருக்கும் யாரும் சரியான உள்ளீடுகளுடனும், தேவையான இடத்தில் செழுமைப்படுத்தலுடனும் கதை எழுதலாம், குறும்படம்
எடுக்கலாம். ஆகவே கதாசிரியர்களும், வரைகலைஞர்களும், இசையமைப்பாளர்களும் பரிச்சார்த்த முயற்சிகளுக்கு இவற்றை இயக்கத் தெரிந்தவர்களாக இருந்தால்தான் இதுவே ஒரு புதிய தொழிலாக மாறும்பொழுது அதன் பலனை அடைய முடியும்.

முயன்றால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. காகிதமும், மையும் தீறத் தீற எழுதிய நாம்தான் இன்று கெராவாக்கின் நீண்டுகொண்டே போகும் வெள்ளைத் தாள்போன்ற வலைப்பூக்களில் அதைவிட வேகமாக தட்டச்சு செய்கிறோம். பார்த்துப்பார்த்து படம்பிடித்த படச்சுறுல்களிலிருந்து பார்ப்பதையெல்லாம் படம் பிடித்துத் தள்ளும் கேமராக்களை அனாயாசமாக உபயோகிக்கிறோம். ரஹமான் போன்ற ஆளுமைகள் தொடர்ந்து முன்னணியில் இருப்பதும், அவர்களது இசையில் ஒரு பாடகரின் குரல்,கருவிகளின் ஒலி பலமடங்கு மெருகேறுவதும் படைப்பாற்றலோடு சேர்ந்த தொழில்நுட்பத்தில் அவர்களது சரியான முதலீடுகளால்தான். அதேபோல் எழுத்தாளர்களின் எல்லா தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு இடமாக பதிப்பகங்கள் மாற வேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் பல கோடிகள் புழங்கும் உணவுத் துறையை ஸ்விக்கி, சொமாட்டோ, டன்ஸோ போன்று நவீன வெட்டிக்குடிகளை உருவாக்கும் செயலிகள் எப்படி கபளீகரம் செய்கின்றனவோ அப்படி ஒரு நாள் பதிப்பகங்கங்களையும் ஒரு தொழில்நுட்பம் அச்சகங்களாக சுருக்குவதைத் தவிர்க்கவே முடியாது.

ஒரு போட்டிக்குமுன் விளையாட்டு வீர்ர்கள் பலமுறை அந்த களத்தில் நடந்துபார்ப்பார்கள் இல்லையா? அதுபோல்தான் நியூ யார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் வரையிலான தன் பல வருட கார் பயணங்களை ஜாக் கெரோவாக் குறிப்புகளிலிருந்து ஒரு துடிப்பான புதினமாகவே ‘On the road’ என்ற பெயரில் வடித்தார். ஏராளமான தனிக்கைக்குப் பின் அது பிரசுரமாக 7 ஆண்டுகள் பிடித்தன. இன்றும் அது உலக யுத்தத்திற்கு பின்பான தலைமுறை(beat generation) (1950கள்) அமெரிக்க வாழ்க்கையின் தடைசெய்ய்யப்பட்ட பக்கங்களைத் தாங்கி நிற்கும் முக்கியமான பதிவு. 2012ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.

பெஞ்சமின் முதன்முதலில் ‘சன்ஸ்ப்ரிங்’ என்ற குறும்படத்திற்கு திரைக்கதை எழுதியது. 2017இன் தொடக்கத்தில் கெரோவாக் சென்ற அதே பாதையில் பயணித்து ‘1 the road’ என்ற புதினத்தை செயற்கை படைப்பாற்றலைப் பயன்படுத்தி ராஸ் குட்வின்(பென்ஜமின்) 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் எழுதியுள்ளார். எழுத்துப்பிழைகள், இடம், நேரம் பற்றிய குறிப்புகள் என்று பதிவான எதையுமே அவர் தொகுக்கவில்லை. ஒரு வருடத்திற்குள் அது அப்படியே பதிப்பிக்கப்பட்டது.

இப்போதுதான் ஏஐயில் படங்கள் வரைந்து அழகுபார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் எழுத்துலகிற்கு ஒரு பெஞ்சமின் வேண்டுமா? என்று கேட்பது உண்டிகோள் வைத்திருப்பவனிடம் எட்டு தோட்டாக்கள் கொண்ட பிஸ்தல் வேண்டுமா…சரமாறி சுடும் பீரங்கி வேண்டுமா…என்று கேட்பதைப்போல் ஆகிவிடும்.

எந்த ஆயுதத்தைத் தேர்வு செய்கிறோம் என்பது ஒரே நேரத்தில் எவ்வளவு பேரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை மட்டும் சார்ந்ததல்ல(scale)…நமது இயங்குசக்தியையும்,களத்தையும் சார்ந்ததே(capacity). பத்திரிகைகள், புத்தகங்கள் தாண்டி ஒலி\ஒளி ஊடகங்களில்(OTT) கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைப் பெற முதலிலி நம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு இருப்பின் இரண்டு நாவலையும் படியுங்கள். படத்தையும் பாருங்கள். சேட் ஜிபிடி, ஐலேஸா, இந்தியா ஏஐ உள்ளிட்ட ஏனைய செயற்கை படைப்பாற்றல்சார் கருவிகளைப் எப்படித் திறம்பட எழுத பயன்படுத்தலாம் என்று யோசிக்கத் தோன்றும்.

இந்தியச் சந்தைகள் நம் சாலைகள் போலவே லேன்கள் இல்லாதவை. ஆர்க்கெஸ்ட்ரா இல்லாத இசையை நாளை முதல் கேட்கமாட்டேன் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் இந்த BTS யுகத்தில் கடிவாளம் கட்டிக்கொண்டு அண்ணாசாலையில் ஒரே நேர்க்கோட்டில்தான் கடப்பேன் என்று அடம்பிடிப்பதாகிவிடும் செயல் அது. சொல்லப்போனால் ஆட்டோமாட்டிக் கியரில் வண்டி ஓட்டுவது இன்றைய போக்குவரத்து நெறிசலில் எவ்வளவு பெரிய சௌகரியம். அதை உபயோகிப்பதான் நம் ஓட்டும் திறனை யாரும் குறைத்து மதிப்பிடப்போவதில்லையே. இதற்கப் பொருத்தமான சுஜாதாவிடம் ஒருமுறை இதுபற்றி கேட்கப்பட்டது. அவருடைய பதிலோடு நிறைவு செய்வோம்.

கேள்வி : ஒரு வார்த்தையில் இளையராஜா இசையையும், ஏ.ஆர்.ரஹமான் இசையையும் ஒப்பிடுவதாக இருந்தால் உங்கள் பதில் என்ன?

சுஜாதா : அவர் ‘அம்மா’, இவர் ‘ஹம்மா’

***

பதிப்பாளர் கார்த்திகேயன் புகழேந்தி, இவர் வானவில் புத்தகாலயம் எனும் பெயரில் பதிப்பகம் நடத்தி வருவதோடு. பதிப்புலகம் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார். பல்வேறு சர்வதேச, தேசிய ஊடகங்களில் பதிப்புலகம் தொடர்பான இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன – மின்னஞ்சல்:Writerpk86@gmail.com

புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து

0

சுனில் கிருஷ்ணன்

சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள்  வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.

இலக்கியம் போலவே சித்திர நாவல்களிலும் பொழுதுபோக்கு படைப்புகள் தீவிர இலக்கிய படைப்புகள் எனும் பகுப்பு உண்டு. ஓவியம் வழி கதை சொல்லுதல் என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சித்தன்னவாசல் ஓவியத்தில் மலர் கொய்யும் துறவியை பெரிய கதையின் பகுதியாக நம்மால் காண முடியும். சித்திர நாவலை திரைக்கதையுடன் ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. திரைப்படம் அசையும் காட்சிகளால் ஆனது எனில் சித்திர நாவல் உறைந்த சட்டகங்கள் கொண்ட ஓவியங்களால் ஆனது. ஓவியம் காட்சியை மட்டும் காட்டுகிறது பொருள்கொள்ளுதலை முழுக்க நம் கற்பனையில் நிகழ்த்த சொல்கிறது. நாவல் பொருள்கொள்ளுதலை எளிதாக்குகிறது ஆனால் காட்சியை கற்பனைக்கு உரியதாகச் சொல்கிறது. சித்திர நாவல் நாம் இதை காண வேண்டும் என நம் கற்பனைக்கு திண்ணமான வழிகாட்டுதலை அளிக்கிறது, திரைப்படம் நாம் இதைக் காண வேண்டும், அதை இன்ன வேகத்தில் தான் காண வேண்டும் என்றும் சொல்கிறது. சித்திர நாவலை திரைப்படத்திற்கும் நாவலுக்கும் இடையேயான ஒரு வடிவமாக வரையறை செய்ய  முடியும்.

ஓவியங்களை அதிகமாகப் பயன்படுத்தி சொற்களைத் துணைக்கழைத்து கதை சொல்லும் முறை எனச் சொல்லலாம். ஓவியத்திற்கு எது தேர்ந்தெடுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கான சட்டகத்தைப் பயன்படுத்துகிறது? சில ஓவியங்கள் முழு பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓவியத்திற்கான முக்கியத்துவம் என்ன? இப்படியாகச் சித்திர நாவல் காமிக்ஸிலிருந்து வேறுபடுவதை கவனிக்கலாம். முக பாவனைகள், உடல்மொழிகள் எளிதாக கடத்தப்படுகின்றன. இப்படி தனக்கென சில பாதைகளை வகுத்துக்கொண்டு, தனக்கென சில இலக்கணங்களை உருவாக்கிக்கொண்டு சித்திர நாவல்கள் முன் நகர்கிறது.

ர் இலக்கிய நாவல் சித்திர நாவலாக உருமாற்றம் அடைந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வோன்னுகாட்டின் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலாக வடிவம் பெற்றுள்ளது. ரியான் நார்த் எழுத்தாக்கத்தில், ஆல்பர்ட் மான்டிஸ் சித்திரங்களுடன் 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலில் என்னவாக உருமாற முடியும் என்பதற்கு இந்நாவல் மிகச்சிறந்த உதாரணம்.  ரியான் நார்த்தால் அசல் நாவலாசிரியரின் பகடியையும் பார்வையையும் அபாரமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தனக்கேயுரிய சுதந்திரத்துடனும் துடுக்குத்தனத்துடனும் நாவலுக்கு சித்திர வடிவத்தை அளித்துள்ளார். உதாரணமாக நாவல் தொடங்கும் இடத்திலேயே இரண்டு வடிவங்களுக்கு இடையேயான ஒற்றுமையைச் சொல்கிறார், இரண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது, ஒரே இடத்தில் முடிகிறது என்கிறார். பின்னர் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். துணைப் பாத்திரங்களின் இயல்புகளைச் சொல்கிறார். ஒவ்வொரு துணைப் பாத்திரங்களையும் மூன்று சட்டகங்களில் அறிமுகப்படுத்தும் உத்தியைக் கையாள்கிறார்.

நாவலின் மையம் பில்லி பில்க்ரிமின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்கிறது. பில்லியின் காலக்கோடு என ஒரு சட்டகத்தை வரைந்துள்ளார். அவன் எப்போது பிறந்தான், எப்போது அவனிடம் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை வந்தடைந்தது, எப்போது ராணுவத்தில் சேர்ந்தான், எப்போது போர்க்கைதியாக ஆனான், எப்போது மனநோயாளியாக ஆனான், பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், வெற்றிகரமான கண் கண்ணாடி நிபுணராக திகழ்கிறான், அயல்கிரகவாசிகளால் கடத்திச் செல்லப்படுகிறான், பின்னர் தான் காலம் குறித்து அறிந்துகொண்டதை விளக்குகிறான். லயன்ஸ் சங்கத் தலைவராக இருக்கிறான், மரணமடைகிறான். பூமிவாசிகள் காலத்தை நேர்கோடாகக் காண்கையில் அந்நிய கிரகவாசிகளான ட்ராஃபல்டோர்காரர்கள் காலத்தை நான்கு நிலைகளில் காண்பவர்கள். அவர்களுடைய கோணத்திலிருந்து பில்லி ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் உயிருடன் கண்ணாடி நிபுணனாக இருக்கும்போது இன்னொரு இடத்தில் மரணமடைந்த சடலமாக இருக்கிறான். அவர்கள் கோணத்தில் மனிதர்களுக்கு மரணமே இல்லை. மரணம் என்பது எத்தனையோ செயல்பாடுகள் போல அதுவும் ஒன்று. அந்நிய கிரகவாசிகள் காலத்தை மலைத்தொடரைக் காண்பது போல காண்கிறார்கள்.

பில்லி எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். அவனுக்கு அதற்கான தகுதியோ விருப்பமோ இல்லை என்பதை அவனது நண்பர்கள் அவனுக்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெர்மானியர்களின் போர்க்கைதியாக அவனும் அவனது நண்பன் ரோலாண்ட் வியரியும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சரியான காலணி கூட அணியாத பில்லி  பரிதாபகரமான நிலையில் உடன்வருகிறான். தலைக்கு தொப்பியோ கவசமோ கூட இல்லை. ரியான் நார்த் ரொலாண்டை அவனது முழு ராணுவ உடையில் ஒரு பக்கம் முழுக்கச் சித்தரித்து இருப்பார், எதிரியைப் பற்றி கையேடு, கிளர்ச்சியூட்டும் நிர்வாணப் படம், பருத்தி உள்ளாடை, அதற்கு மேலாக கம்பளி உள்ளாடை, அதற்கு மேலாகக் கம்பளி மேலாடை, அதன்மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், கோட் தொடங்கி முக்கோணக் கத்தி வரை அவனது சகலத்தையும் அட்டவணைப்படுத்தியிருப்பார் நார்த். குரூரங்களின் மீதும் நாயக வாழ்வின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவன் வியரி. பில்லியைப் பலமுறை காப்பாற்றியதாகச் சொல்லிக்கொள்வான். வியரியின் இந்த வினோதக் கோலத்தை கண்ட ஜெர்மானியர்கள் அவனிடமிருந்து காலணிகளைப் பிடுங்கி பில்லிக்கு கொடுப்பார்கள். அவனது காலணி பறிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில் காலில் புண் வந்து மரித்துப் போவான். அவனது மரணத்திற்கு காரணம் பில்லிதான் எனச் சாகும் தறுவாயில் சொல்லிவிட்டு செல்வான். அப்போது உடனிருந்த பால் லாசரோ அவனுக்காக பில்லியைக் கொன்று பழி தீர்ப்பதாக உறுதி எடுத்துக்கொள்வான். அதை இறுதியில் நிறைவேற்றவும் செய்வான்.

இந்த நாவலுக்கு ‘குழந்தைகளின் போராட்டம்’ அல்லது ‘மரணத்துடனான கடமையின் நடனம்’ எனப் பெயரிட்டுள்ளார். ஸ்லாட்டர் ஹவுஸ் போரை நிராகரிக்கும் நாவல். போரில் நியாயம் என்பது என்ன? உண்மையில் நாம் நினைக்கும் அளவிற்கு எதிரெதிர் தரப்புகள் வெவ்வேறானவையா? ட்ரெஸ்டன் நகரத்தின் மீதான அமெரிக்க தாக்குதலின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். நாவலின் மையமான பேசுபொருள் மனிதனுக்கு சுயத்தேர்வு என்று ஏதேனும் உண்டா? அப்படி ஏதுமில்லை என அன்னியகிரகவாசிகளின் வழியாக அறிந்துகொள்கிறான் பில்லி. அப்படியானால் நாம் விதியின் அல்லது காலத்தின் கைப்பாவைகள் தானா? தனக்கென எதையும் வகுத்துக்கொள்ள முடியாத, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையிலிருந்து நாம் போரிட்டோம், அவை தவிர்க்க முடியாதது ஆகவே நிகழ்கிறது. ட்ராபல்டோர்வாசிகள் பிரபஞ்சம் எப்படி அழியும் என்பதை விளக்குகிறார்கள், அவர்களில் ஒருவர் ஒரு சுவிட்சை தவறாக இயக்க எல்லாம் அழிகிறது, பில்லி ‘அப்படியானால் அதை நீங்கள் தடுக்கலாமே?” என கேட்பான். இல்லை நாங்கள் அதை அனுமதிப்போம், பிரபஞ்சம் முந்தியும் அழிந்தது, பிறகும் அழியும் அதை எதற்கு தடுக்க வேண்டும்!’ என்பார்கள். விமான விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவனாக பில்லி மருத்துவமனையில் இருக்கும்போது அவனருகே அமெரிக்க ஜெனெரல் அதே மருத்துவமனையில் படுத்திருப்பார். வெளியுலகிற்கு ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு பற்றிய தகவலை மூடி மறைக்க முயலும்போது, நான் அங்கிருந்தேன் என பில்லி அவரிடம் கூறுவான், பேரழிவின் சாட்சியாக குழந்தைகளும் பெண்களும் மொத்தமாக வான்வழி தாக்குதலில் மரணித்ததை அவன் கண்களால் பார்த்திருப்பான். ஜெனெரல் அவனிடம் ‘அது தவிர்க்க முடியாதது’ என்பார். பில்லியம் ஆமோதிப்பான். கர்ட் வோனேனுகாட் மனிதர்களின் இந்தப் பொறுப்பற்ற தன்மையை இடித்துரைக்கிறார். உண்மையில் மனிதன் தனது சுயத்தேர்வு எனும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட்டு காலத்தின் மீதும் விதியின் மீதும் பழிபோடுகிறான் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டு. 

நாவல் முழுவதும் ‘இப்படியாக இது நடந்தது’ (So it Goes) எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் நமது தேர்வுகளின் விளைவுகளுக்கு விதியின்மீது பழி சுமத்துகிறோம் என்பதே நாவலாசிரியர் மனிதர்கள் மீது வைக்கும் குற்றசாட்டு. கில்கோர் எனும் வெளியுலகம் அறியாத அறிவியல் புனைவு எழுத்தாளர் கதைகளால் பில்லி மிகவும் ஈர்க்கப்படுகிறான். ட்ராஃபல்டோர்வாசிகள் மற்றும் அவர்களது காலக்கோட்பாடு கில்கோரின் காலக்கோட்பாடுகளுடன் நெருக்கமாக இருப்பதைக் காண முடியும். தனது மரணம் என்பது உண்மையில் மரணமல்ல, தன்னுடையது மட்டுமல்ல, எவருடைய மரணமும் மரணம் அல்ல, அவை புகைப்பட ‘போஸ்’ போல ஒரு நிலை மட்டுமே எனும் அறிதல் அவனுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும். எஞ்சியிருப்பதன் துயரத்தையும் குற்ற உணர்வையும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இவை யாவும் பில்லி உலகில் தரித்திருக்க அவனது மனம் உருவாக்கிக்கொண்ட மாயைகள், சல்ஜாப்புகள் என உளவியல் கோணத்திலிருந்து வாசிக்க ஒரு இடமுண்டு. 

ரியான் இந்தச் சித்திர நாவலை கர்ட் வோன்னுகாட்டின் மேற்கோள் ஒன்றுடன் தொடங்குகிறார். “ட்ரெஸ்டன் குண்டுவீச்சினால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை, என்னைத் தவிர, இந்த நாவலை எழுதிய வகையில் அங்கே செத்த ஒவ்வொருவரும் எனக்கு இரண்டு டாலரோ மூன்று டாலரோ ஈட்டித் தந்திருக்கிறார்கள்”. சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எல்லோராலும் கைவிடப்பட்ட உயிரினமாகவே மனிதன் சித்தரிக்கப்படுகிறான். வாழ்க்கைக்கு எந்த அர்த்தமோ இலக்கோ இல்லை.  இனிய நினைவுகள் கொண்ட காலத்திற்கு துன்பம் வரும்போது திரும்பிச் செல்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கு இல்லை. வேற்று கிரகவாசிகள் பூவுலகிலிருந்து ‘மோண்டானா’ எனும் நீலப்பட நடிகையை கவர்ந்து வருகிறார்கள். அவளுக்கும் பில்லிக்குமான உடலுறவை ஆராய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பில்லி ‘காலத்தடையை’ கடந்தவனாக வாழ்கிறான். பில்லி எவ்வித லட்சியவாதமும் இல்லாதவன். பிறரை வென்று முன்செல்லும் திண்மையும் கூட  இல்லாதவன். அமெரிக்க நாஜியாக ஆகும் பாப் போல பச்சோந்தியும் அல்ல, அவனை எதிர்த்து குரல்கொடுத்து தேநீர் கோப்பையை எடுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்படும் எட்கர் டெர்பி போல நாயகனும் அல்ல. பில்லி தன்னை ‘எவருமில்லாதவன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். லட்சியமற்று, எவருமில்லாதவனாக வாழ இங்கு இடமிருக்கிறதா என்பதே கேள்வி. ஷோபா சக்தியின் நாவல்களுடன் இந்தக் கேள்வியை ஒப்பிட்டு நோக்கலாம் என்றே தோன்றுகிறது.

வன்முறையின் மீதான நமது அதீத நாட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். நாயகத்தன்மையின் பேராலும் நீதியின் பேராலும் அவை நிகழ்த்தப்படுகின்றன. ரொலாண்ட் வியரி மனிதர்களைக் கொல்வதற்கு தானே சிந்தித்து உருவாக்கிய ஆகக் குரூரமான முறையை விளக்குகிறான். ஏறத்தாழ முக்கால் பக்கத்திற்கு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பாலைவனத்து எறும்பு புற்றுக்களுக்கு அருகே ஒருவனின் கைகால்களைப் பிணைந்து தேனை ஆண்குறி மற்றும் விதைப்பந்துகள் மீது ஊற்றிச் சாகடிப்பதே வியரி கண்டுபிடித்த முறை. பால் லாசரோ எல்லாவற்றையும் விட பழி தீர்ப்பதையே தனது வாழ்க்கைக்கான குறிக்கோளாகக் கொள்கிறான். தொந்தரவு செய்த நாய்க்கு விஷ உணவு கொடுத்துக் கொன்ற அனுபவத்தைப் பெருமையாகச் சொல்கிறான். யூதர்களின் உடல் கொழுப்பிலிருந்து உருவான மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் சிறை முகாம் ஒளிவிடுகிறது என்பது நம்மைக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. நாவல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசுகிறது.

பில்லிக்கு மிகவும் பிடித்த அறிவியல் புனைவு எழுத்தாளர் கில்கோர் கால இயந்திரத்தின் மூலம் கிறிஸ்துவைக் காணச் செல்லும் நாயகனைப் பற்றி நாவல் எழுதுகிறார். இயேசுவே பாலகனாக இருக்கும்போது தனக்கான சிலுவையை வடிவமைக்கிறார். உண்மையில் சிலுவையில் அறையப்பட்டுதான் இயேசு மரித்தாரா என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான். அவன் கொண்டுவந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் நெஞ்சைப் பரிசோதித்து உறுதிசெய்து கொள்கிறான். மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட கிறிஸ்துவின் வாழ்க்கைச் செய்தி கைவிடப்படுவதன் துயரத்தை எழுதுகிறார். ட்ராஃபல்டோர்வாசிகள் இரண்டாம் பைபிளை உருவாக்கி மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். அப்போதும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார், அப்போதும் மனிதர்களுக்கு சில உபதேசங்களைச் சொல்கிறார். கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்துக்குமான இடைவெளியை நாவல் சுட்டிக் காட்டுகிறது. நமது வன்முறையின் வெளிப்பாடாகவே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்கிறார். ட்ரெஸ்டனின் கசாப்பு விடுதிக்குள் பதுங்கி உயிர்பிழைப்பார்கள் பில்லியும் அவனது சகாக்களும், நாவலின் தரிசனம் என்பது இந்த உலகத்தையே ‘ஸ்லாட்டர் ஹவுஸாக’ காண்பதுதான். போர் புனிதப்படுத்தபப்டுகிறது. மரணம் ‘உயிர்த்தியாகம்’ எனப் போற்றப்படுகிறது. இன்றைய சூழலில் அவற்றின் அபத்தத்தை நமக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாகவே ஸ்லாட்டர் ஹவுஸ் சித்திர நாவலைக் கருத முடியும்.

***

சுனில் கிருஷ்ணன் – தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் வசிக்கிறார். நாவல், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். காந்திக்காக www.gandhitodaytamil.com என்றொரு இணைய தளத்தை நடத்தி வருகிறார். முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது கிடைத்தது. மின்னஞ்சல்:drsuneelkrishnan@gmail.com

குருதித் துளிகளின் கதை (Vann Nath – Painting the Khmer Rouge)

0

இவான் கார்த்திக்

யல்பாக, இறந்தவர்களை மறந்துவிடுதல் எளிது. ஆனால் அகால மரணங்களை நம் மனம்  என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவை நம்மேல் கடவுளின் சாபம் போல் வந்து விழுபவை. அப்படியொரு மரணம் என் சொந்த அனுபவத்திலும் நடந்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது போன்ற அனுபவங்கள் நம்மை விடாமல் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருப்பவை.

எழுத்து வடிவில் இந்த அனுபவங்கள் எழுதப்படுமானால், எப்படிப் பார்த்தாலும் நேரடியாகச் சாமானியர்களை பாதிப்பதில்லை (ஒரேயொரு விதிவிலக்கு இறந்தவர் உங்களுக்கு நெருக்கமானவர் எனில்) அதே வேளையில் அவை உண்டாக்கும் வீரியமும் இயல்பாகச் சொற்களை வாசித்துக் கற்பனையாக்கி பின் சிந்தித்து கருத்துக்களாகவோ உணர்வுகளாகவோ மாற்றி அதனுள் உழலும் மனம் மட்டுமே அடையக்கூடியது. காலனியாதிக்கத்தின் மோசமான விளைவுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நீடித்த நாடுகளில் மேற்சொன்ன எழுத்துவடிவம் மக்களிடம் நேரடியாகப் பேசவோ நீதியை உணர்த்தவோ எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம். காந்தி இன்னும் நம் நாட்டில் அதிகமானோரால்  புரிந்துகொள்ளப்படாமல் இருபதற்கு காரணம் அவர் எழுத்தில் இயங்கியவர் என்பதே என்  கருத்து.

ஓர் ஓவியன் தன் ஓவியங்களை நீதிக்கான ஆதாரமாக பயன்படுத்தி இனப்படுகொலையை, தன்னைச் சுற்றி  காற்றில் கரைந்து தடயமற்றுப் போன, தன்னால் மட்டுமே அடையாளம் காணமுடிந்த அப்பாவி உயிர்களின் ஆத்மாக்களுக்காக அதன் உண்மைத்தன்மையை மக்களிடம், இளம் தலைமுறையிடம் நிரூபித்த கதையாக அமைகிறது இந்த Vann Nath – Painting the Khmer Rouge என்ற வரைகலை நாவல். 

வரைகலை நாவலின் சாதகமான அம்சம் அது ஒரு ஓவியத்தைச் சுட்டி நேடியாகக் கதையினுள் காட்சியாக நம் கற்பனைக்குள் அதனை நிகழ்த்திச் செல்கிறது. கூடவே  கதாபத்திரங்களின் உரையாடலும் குறிப்புகளும் மேலதிகமான உணர்வுகளை உருவாக்கக் கூடியவை. எல்லாவற்றையும் மொழியாக்கும் மனம் ஓவியங்களை நேரடியாக மொழியற்ற நிலைக்கு சில கணங்கள் இட்டுச் செல்கின்றன. அதில் உணர்ச்சிகள் மட்டுமே நிரம்பியிருக்க அதன்வழி கதாபாத்திரங்களுடன் இணைந்துவிடுகிறோம். ஆசிரியர் மாத்யூவின் (Matteo Mastragostino) கதைக்கு அர்மாண்டோ (Armando Mìron Polacco) ஓவியங்களை வரைந்துள்ளார். மாத்யூ இதற்குமுன் ஒரு வரைகலை நாவல் எழுதியுள்ளார். பிரைமோ லெவி (Primo Levi) எனும் யூதர், அறிவியலாளர் போலந்து நாட்டில் இருக்கும் ஆஸ்ட்விச் வதைமுகாமிலிருந்து பிழைத்து வந்தவரின் கதையை அதன் வரலாற்று ஆவணங்களிலிருந்து பெற்று புனைவாக்கியிருக்கிறார். இந்த நாவலும் அதேபோன்று வரலாற்றின் மேல் எழுதப்பட்ட மற்றுமொரு புனைவு. வரலாறு ஆண்டுகளாகவும் பெயர்களாகவும் சிறு குறிப்புகளாக மட்டுமே நாவலில் வருகின்றன. மேலதிக வாசிப்பு நாவல் சம்பவங்களை மேலும் உணர்வுப்பூர்வமாக அணுக வாய்ப்பளிக்கும்.

பிரான்சு,  சீனா, வியட்நாம், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் கம்போடியாவின் அரசியல் சமூகவியலில் முன்பிருந்தே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக அரச பரம்பரையிலிருந்து வந்த நார்டொம் நிஹ்னோக் (Norodom Sihanouk) 1955-ல் பிரான்சின் வெளியேற்றத்திற்கு பிறகு அதிபராகிறார். அவரை எதிர்த்து அமெரிக்காவின் ஆதரவுடன் லோன் நோல் (Lon Nol) வலதுசாரிக் கருத்துக்களுடைய அதிபராகிறார். இங்கே சீனா வியட்னாமின் ஆதரவுடன் அவரை எதிர்க்கத்தொடங்கும் ஒரு ஆயுதம் ஏந்திய கம்யூனிசக் குறுங்குழுவே “கமேர் ரூஜ்”அல்லது “ரெட் கமேர்”. தேசியவாதத்தை மையக்கொள்கைகளில் ஒன்றாகக் கொண்ட இந்தக் குழு மற்றெல்லாவற்றையும் அழிக்கும் பணியில் இறங்கி கிட்டத்தட்ட 2 மில்லியன் உயிர்களை அழித்திருக்கிறார்கள். அதில் இவர்களின் கைகளால் கொல்லப்பட்டவர்கள் 1.5 மில்லியன்.மற்றவர்கள் எளிதாக குணப்படுத்தக்கூடிய கொள்ளை நோய்களால் இறந்திருக்கிறார்கள்.

கமேர் ரூஜ்-ன் (Khmer Rouge) தலைவன் போல் பொட்-ன் (Pol Pot) ஓவியமொன்றை வரைவதற்காக வான் நாத் (Vann Nath) அவர்களது பல வதைமுகாம்களில் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவர் காணும் காட்சிகளை பின்னால் வரைந்து மக்களின் முன் நிறுத்தும் வான் நாத் அங்கு அனுபவித்திருக்கூடும் என நாம் கற்பனை செய்பவற்றை கதைக்களமாகக் கொண்டு நகர்கிறது இந்த நாவல்.

நாவலில் தொடக்கத்தில் சிவப்பு கமேர் கூட்டம் போரின் முடிவை அறிவிக்கிறது. மக்களும் நம்பிக்கையுடன் ஆர்ப்பரிக்கின்றனர். ஆயுதமேந்திய மக்கள் எல்லா இடங்களிலும் நிற்பது உறுத்தலாக இருக்கையில் ராணுவத்தால் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். கருமேகங்கள் சூழ்ந்த வானில் இருள் படிந்திருக்க, மக்கள் அதனுள் சோகம் கப்பிய கரிய உருவங்களாக நடக்கின்றனர். அதனூடே வீட்டில் தனியாக விடப்பட்ட, தன் குடும்பத்தை காப்பாற்றிவிடும் வேகத்தில் ஓடும் நாயகன் மழைச்சேற்றில் விழுந்து சிக்கியிருக்கும் போது அக்குழந்தை காப்பாற்றப்பட்டதை நினைத்து மகிழும் கணம் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறான். தன் குழந்தை அப்போது கொல்லப்பட்டிருப்பது தன்னால் என உணரும் விழிப்பில் குற்றவுணர்வு சூழ்ந்திருக்கிறது.

சிவப்பு கமேர் தோற்கடிக்கப்பட்ட பின் தன் குழந்தைக்காகவும் கூடவே இறந்துபோயிருந்த மற்றவர்களுக்காகவும் அவன் அடைக்கப்பட்டிருந்த வதைக்கூடத்திலேயே போய் அங்கு நடந்தவற்றை வரைகிறான். இறந்த ஆத்மாக்களின் மூச்சுக்காற்று நிறைந்த கூடத்தின் வராண்டாக்கள், முன் களம், அறைகள் என அனைத்தும் அமானுஷ்யத் தன்மை கொண்டிருக்கின்றன. முன்னும் பின்னும் நகரும் காலத்தில் அவன் வரைந்துகொண்டிருந்த ஓவியங்கள் சம்பவங்களாக நாவலில் நகர்கின்றன. எப்போதும் அவனுடைய வரவுக்காகக் காத்திருக்கும் மரணம் அவனுடன் நிற்கிறது. சில காட்சிகளில் ஒரு அடர்த்தியான கரும் நிழல் போலவே அவனைத் தொடர்கிறது. உயிருடன் வைத்திருப்பது அவன் ஓவியன் எனும் காரணத்தால் மட்டுமே, ஆனால் அவன் வரைவதோ கருணை ததும்பும் முகத்துடன் நிற்கும் போல்போட். மொத்த அழிவும் நடப்பதன் ஆதியூற்று.

அவன் வரைகிறான். அந்த ஓவியத்தை திருத்தமாக மேலும் மெருகேற்றி அதில் தெரியும் கருணையின் தளத்தை அதிகரித்தாலொழிய அவனால் உயிரோடிருக்க முடியாது. ஓர் ஓவியன் தன்கழுத்தில் முள்ளால் ஆன பாதத்துடன் அழுத்தும்போது அழுத்துபவனின் முகத்தை மேலும் மேலும் கருணையுடன் வரைவேண்டும் என்பது எப்படிப்பட்ட முரண். 

ஒல்லியான சோகைபிடித்த உடலுடன் வரும் அந்த வதைமுகாமின் தலைமை அதிகாரி டவுச் (Douche) கொடும் அரக்கனின் கூரிய பற்களுடன் சித்தரிக்கப்படுகிறான். அச்சமுட்டும் கண்களும் முக அமைப்பும் அதற்கு ஏற்றாற்போல இருக்கிறது. அவன் மூளையில் வளரும் வன்முறையின் கனம் அந்த சோகைபிடித்த உடலின் போதாமையால் விளைந்ததோ எனத் தோன்றவைக்கிறது.

ஓவியத்தைப் பற்றிய கேள்விகள் டவுச்-ஆல் கேட்கப்படும் போது நாயகனும் அவனும் தனித்துவிடப்பட்டது போல் காட்சி காட்டப்படுகிறது. அந்த தனிமை மரணத்தை, சித்ரவதையை கணத்தில் நம்முள் பற்றவைக்கிறது.

வதை முகாமின் பல்வேறு அறைக் கதவுகள் திறக்கப்படும் போது அதனுள் என்ன இருக்கப்போகிறதோ எனும் பதற்றம் கதவுகளும் அதை நோக்கி தொய்வாக நடக்கும் கதாபாத்திரங்களின் உருவமும் தனித்துவிடப் படுகையில் நம்மால் உணரமுடிகிறது.

இந்த நாவல் முழுக்க முழுக்க பழுப்பு நிறத்தை அடித்தளமாகக் கொண்டு அதன்மேல் கருப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட ஓவியங்களால் ஆனது. முழுமையுறாத தீற்றல்களாக மட்டுமே இருக்கும் உருவங்கள் இயக்கங்களை எளிதாக நமக்குக் கடத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் நாயகனின் உருவம் மகிழ்ச்சியின் சிறிய தடத்துடன் இருக்கிறது. அடுத்தடுத்த காட்களில் அவனது கண்கள் முழுக்க உள்ளொடுங்கிய சிறிய புள்ளியாக மண்டையோட்டுக்குள் இருக்கும் கண்களென மாறிவிடுகிறது. அச்சத்தில் உறைந்து வெறிக்கும் கணங்களில் அவன் கண்கள் நம்மை நேரடியாகப் பார்க்கையில் நாமும் பதற்றமுறுகிறோம். வதைமுகாமில் அலையும் சிவப்பு கமேர் கூட்டத்தினர் கழுத்தில் துணியொன்றை அடையாளமாகச் சுற்றியிருக்கிறார்கள். அதில் தெரியும் சிவப்புத் துளிகளும் சித்திரவதைக்கு பிறகான உடலின் தெரியும் குருதி படிந்த காயங்கள் மட்டுமே மொத்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம்.

டவுச்-ஆல் நாயகனை கண்காணிக்க நியமிக்கப்படும் அதிகாரியின் உருவம் ஜோசப் ஸ்டாலினைப்போல் இருப்பதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. அதே கட்டை மீசை, மேல் நோக்கி உயர்ந்த தாடை,சிறிய ஆனால் தீவிரமான கண்கள். அணுக்கமாகப் பார்க்கும்போது கழுத்திலிருக்கும் துணியில் துளித்துளியாகத் தெறித்திருக்கும் இரத்தத்துளிகள் வரலாற்றில் படியத் தொடங்கும் குருதியின் முதல் துளிகளோ என்றும் தோன்றுகிறது.

வதைமுகாமுக்கு அழைத்துச் சென்றபின் வரைய ஆரம்பிப்பதற்கு முன் மூன்று நாட்கள் நாயகன் ஒய்வில் இருக்கிறான். கம்போடியாவின் தேசிய வானொலி அப்பட்டமான பொய்களை அவனுக்கு வழங்கியபடி இருக்கிறது.

‘அமோகமான விளைச்சல்’

‘மக்கள் மகிழ்ச்சி’

‘90% புரட்சியாளர்களின் நாடு’

ஓவியம் வரைய ஆரம்பித்தபின் தூங்க முடியாமல் தவிக்கும் நாயகன் திரும்பத் திரும்பக் கேட்கிறான் ,

“மெர்சி…மெர்சி…”

யாருக்காக யாரை ஏமாற்ற இந்த வேஷம்?!

நாவலின் இறுதியில் வயதான நாயகன் இருவரை சந்திக்கிறார். இருவரும் அவரிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர். டவுச் கிறிஸ்துவத்தை தழுவி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்து தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். நீதிமன்றம் வான் நாத்திடம் விசாரிக்கும்.”ஏன் இவை சொல்லப்படவேண்டியவை”என்று கேட்கிறார்.

“இளம் தலைமுறையினர் இதைப் பார்த்து மாறவேண்டும்”என்கிறார். உண்மைச் சம்பவம் எனும் இடத்திலிருந்து மட்டுமே இந்தப் பகுதிகள் முக்கியமாகின்றன. படைப்பூக்கம் குறைவான பகுதிகள் இவை.

நீதி கிடைப்பதற்கு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த வதைமுகாம்கள், கொலைகள் நடப்பதற்கு காரணமான முக்கிய தலைவர்களின் இறப்பு வருடங்களை கவனித்தேன். அனைவரும் மூப்பெய்தி நோயில் இறந்திருக்கிறார்கள். சிலர் மீண்டும் கம்போடிய ஆட்சியமைப்பில் பங்கேற்றுள்ளனர். வரலாற்றை விசித்திரத் தன்மையை அயர்ச்சியுடன் நினைத்துக்கொண்டேன்.

தேசியவாத கொள்கைகள் கொண்ட சிவப்பு கமேர். மற்ற எல்லா இனங்களையும் எதிரிகளாகவே கண்டனர். உண்மையாகவே கம்யூனிச நாடுகள் இந்தப் பொன்னுலகத்தில் எதை சாதித்தார்கள். லெனினின் புரட்சி ஜார் ஆட்சியை குலைத்தது வன்முறையால். அதன் ஆரம்பம் அப்படி இருக்கையில் அதன் வழித்தோன்றல்களிடம் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில், கோட்பாட்டளவில் மட்டுமே சகோதரத்துவம் பேசும் கம்யூனிசம் சகமனிதனிடம் நம்பிக்கை என்பது அறவே அற்றது என்றே நினைக்கிறேன். தலைமை எப்போதும் எதையும் சந்தேகத்துடன் கணித்து அழித்து சமநிலையை உண்டுபண்ண முயன்றிருக்கிறது. அழிவை ஆக்கசக்தியாக அது ஆரம்பத்திலேயே கற்பனை செய்துவிட்டது.

கம்யூனிசம் தன் கோட்பாட்டளவில் மதத்தை, ஆன்மீகத்தை, நம்பிக்கையை, உணர்வுகளை மனிதனுக்கான ஒருகருவியாக மட்டுமே கண்டிருக்கிறது. சிவப்பு கமேர் கூட்டம் நாத்திகத்தை தன்னுடைய கொள்கைகளில் முக்கியமான ஒன்றாகக்கொண்டது நாம் கவனிக்க வேண்டியது.

தஸ்தாவெஸ்கியின் இடியட் நாவலின் தன்னுரையொன்றில், “ஒருவரையொருவர் சகோதரனாகப் பார்க்காமல் எந்தக் கோட்பாடும் கொள்கையும் எதையும் மாற்ற முடியாது”என்கிறான் அதில் வரும் மிஷ்கின். வான் நாத் வரைகலை நாவலில் நாயகனும் புரட்சியாளர்களும் ஒருவருக்கொருவர் ‘சகோதரா’ என்றே விளித்துக்கொள்கின்றனர். சகோதரர் எனும் சொல் தன்னுடையவன் அன்றி மற்றவனிடம் உண்மையாகச் செல்லுபடியாகாமல் போனதின் விளைவே கம்போடியாவின் கொலைகள். தஸ்தாவெஸ்கியின் ஏசுவை லெனின் கவனித்திருக்கவில்லை, ஒருவேளை அந்த ஒளி அவர்மேல் விழுந்திருந்தால் நாம் கற்பனையில் மட்டுமே காணும் கம்யூனிசப் பொன்னுலம் உருவாகியிருக்கலாம்.

***

இவான் கார்த்திக் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். தற்போது மதுரையில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். பதாகை, சொல்வனம், ஒலைச்சுவடி, வனம் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. ‘பவதுக்கம்’ இவரது முதல் நாவல். தொடர்புக்கு: Ivaankarthik@gmail.com 9003405948

Cold Front

0

வைரவன்.லெ.ரா

ரு கதையை இன்னொருவருக்கு எப்படி உணர்த்துவது? முதலில் ஒரு கதையை எதற்கு இன்னொருவருக்கு உணர்த்த வேண்டும். அது மொழியின் வாயிலாக பலவழிகளில் சாத்தியமாகிறது. கவிதைகளாக, நாவலாக, சிறுகதையாக. மொழி மட்டுமா! ஓவியம், இசை, நடனம், சிற்பம், நடிப்பு இப்படி எத்தனையோ வழிகள் உண்டு. என்னளவில் அது என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குச் சமம், சாமானியனாக அதுவொன்றும் குற்றமில்லை. நம்மிடையே இலக்கியத்தின் மூலம் இந்தக் கூறுமுறை பெருமளவில் வந்தடைகிறது. வரைகலைப் பற்றிய புரிதலும்உணர்தலும் நம்மிடையே பெரிதளவில் அறிமுகம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த கூற்று ஒருவேளை தவறான புரிதலாகவும் இருக்கலாம். எனக்கு வரைகலை பற்றிய அறிமுகம் ஜீவ கரிகாலன் அண்ணன் வாயிலாகவே நடந்தது.  சென்னையின் பொதுவான மதிய வெயிலில் யாவரும் புத்தக நிலையத்தில் அவரைச் சந்தித்த பொழுது ‘vann nath painting the khmer rouge’ என்னும் வரைகலை நாவலை வாசித்துப் பாருங்கள் என்றார்.

அதன் பக்கங்களை இயல்பாக விரல்கள் தொடுதிரையில் புரட்டும் போதே ஏனோ கண்கள் மொழியின் கோட்டுருவங்களை விட, அதன் வரையுருவங்களையே அதிகம் கிரகித்தன. ஏதோ ஒருவகையில் என்முன்னே அவை அசைய ஆரம்பித்து உயிர் கொண்டது எனவும் சொல்லலாம். அப்படித்தான் வரைகலை மீண்டும் எனக்குத் திரும்பக் கிடைத்தது. அதற்கு முன்னரே தமிழில் இரும்புக்கை மாயாவி, மார்வெலின் ஸ்பைடர் மேன், டிசியின் பேட்மேன் வரைகலை நாவல்கள் அறிமுகம் என்றாலும் அவற்றில் வணிகத் தேவைகள் அளவிற்கு அதிகமாகவே இருந்தன. அசாதாரண வாழ்வின் இனிப்புகளையும் கசப்புகளையும் சுமந்தவை அவை என நினைக்கிறேன். இலக்கியத்தில் தீவிரத்தையும் நிதர்சனத்தின் எதேச்சையின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் கண்டடைய முற்படுவோருக்கு இதில் என்ன கிடைக்கப் போகிறது என்றெண்ணிய நான் இந்தக் கட்டுரையின் வாயிலாக சிலவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

Jean Cremers

ஜீன் க்ரெமெர்ஸ் (jean cremers) பெல்ஜியத்தில் வரைகலைக் கலைஞராக இருக்கிறார்.  ‘Académie royale des beaux-arts de Liège’-ல் ஃபைன் ஆர்ட்ஸ் படித்திருக்கிறார். அவருடைய ‘Cold Front’ எனும் வரைகலை நாவலைப் பற்றியே இதில் எழுதியிருக்கிறேன். ‘Cold Front’, முழுக்க அடர்த்தியும், நிறையும், வெப்பநிலையுமுடைய குளிர்ந்த காற்று நிரம்பிய வெளியில் அதன் முனைகளையே ‘Cold Front’ என அழைக்கிறோம். இந்தக் குளிர்ந்த காற்று நேரடியாகப் பனிமலைச் சிகரங்களில் இருந்து சமவெளிகளை நோக்கி நகரும், கடற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று இதனோடு மோதுமிடங்களில் மேகக்கூட்டங்கள் உருவாகி பெரும் மழைப்பொழிவு நிகழலாம் அல்லது பனிப்பொழிவு நிகழலாம். இவை இந்த இருவேறு நிகழ்வுகளும் காற்றுத் திரளின் அமைப்பையும் அளவையும் பொறுத்து மாறுபடும். குளிர்ந்த காற்றின் நிறை வெப்பக் காற்றைவிட அதிகம், எனவே அவை நிலத்தின் தாழ்நிலையிலேயே பயணிக்கும், ஏனென்றால் அது கனமானது. உதாரணத்திற்கு பனிக்கட்டி. மறுபுறம் வெப்பக் காற்று அடர்த்தி, நிறை குறைவு உதாரணத்திற்கு நீராவி, ஹீலியம் காற்று.  எதற்கு இவ்வளவு அறிவியல், குளிர்ந்த காற்று, வெப்பக் காற்று.  இந்த நாவலிலும் இரண்டு பாத்திரங்கள்தான். ஒருவன் மார்ட்டின், இன்னொருவன் ஜூல்ஸ். இருவரும் சகோதரர்கள். 

பெல்ஜியத்திலிருந்து டென்மார்க் வழியே நார்வே நோக்கி பயணிக்கிறார்கள். மார்ட்டின் நாவல் ஒன்றை எழுத முயற்சித்து வருகிறான். ஜூல்ஸ் ஓவியன்.கல்லூரியில் படிக்கிறான். இந்தப் பயணம் அவனது கல்லூரித் தேர்விற்கு உபயோகப்படும் என்றெண்ணி பயணத்திற்கு வந்திருக்கிறான். அவர்களுடைய பிரதான திட்டம் மலையேற்றத்தின் மூலம்  Preikestolen எனும் செங்குத்தான பாறையுச்சியை அடைவது. இந்தப் பயணத்தில் மார்ட்டினுக்கும் ஜூல்ஸுக்குமிடையே நிகழும் உரையாடல்களும், தருணங்களும், அவர்கள் சந்திக்கும் சில மனிதர்களும், திட்டங்களை மீறி எதிர்கொள்ளும் சம்பவங்களும்தான் நாவல்.

மார்ட்டின் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தினால் தூக்கமின்மையால் ஒருவிதச் சலிப்புடன் இருக்கிறான். கூட நார்ஸ் புராணங்களில் (Norse Mythology) நம்பிக்கை கொண்டவன், நார்வே செல்ல அதுவும் ஒரு காரணம்.  நாம் அறிந்த ஓடின், தார், லோகி, ஆஸ்கார்ட், மிட்கார்ட் தான். மார்வெலின் கதாபாத்திரங்கள் புராணக் கதாபாத்திரங்களில் இருந்து சற்று மாறுபட்டவை, வணிகத் தேவை. இந்திய இதிகாசத் திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூல்ஸுக்கு ஓவியமும் வரைய வேண்டும், தன் அண்ணனையும் பயணத்தின் மூலம் இறுக்க நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு இழுத்துவர வேண்டும். அவன் ஒரு சராசரி இளைஞனாக வாழ்வின் அந்தந்த தருணங்களை அனுபவிப்பவன்.

நாவலின் கதையில் இருந்து விலகுகிறேன். இந்த நாவலில் வரைகலைப் பற்றி சிந்திக்கும் முன் வரைகலையின் ஆரம்பம் எங்கிருக்கிறது என்றால் அவை குகையோவியங்களில் இருந்து தொடங்குகிறது. சிறுசிறு வரைபடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது சீராக விடுபட்டோ ஏதோ ஒன்றினை உணர்த்த முயற்சிக்கின்றன. சட்டென்று தோற்பாவைக் கூத்து நினைவில் வருகிறது. இரண்டும் வெவ்வேறுதான். ஆனால் காட்சிகள் மாறுகின்றன. எவை வேண்டுமோ, எங்கு வேண்டுமோ, போதுமோ என நிறுத்தி, சிலநொடிகள் கவனிக்க வேண்டுமோ என நீள்கின்றன.

கதைமொழியும் மொழியின் மூலம் பெரும்பாலும் வெளிப்படவில்லை. வரைப்படங்களின் முகங்களில், விழிகளின் சுருக்கங்களில், கன்னங்களில் பாயும் கோடுகளில், உடல் மொழியில், அகண்ட வானத்தில், பனியின் வெண்மையில், பறக்கும் பறவைகளில், நுரைக்கும் அலைகளில், விலங்குகளில், தேவையான இடங்களில் அதிர்வுக் கோடுகளின் வழியாகவும் உணர்த்தப்படுகின்றன. மொழியும் தேவையான இடங்களில் மட்டும் நுட்பமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான கதை சொல்லல் உத்தி, வரைப்படங்களில் நேர்த்தி, கட்டுப்பாடான மொழி போதுமா? எங்கே நம்மை இவை பாதிப்படைய செய்கின்றன. ஜீன் க்ரெமெர்ஸ் (jean cremers) பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணி இணையத்தளம் முழுக்க அலசியதில் அவரைப் பற்றி பெரிதாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய சில புகைப்படங்கள் மாத்திரம் காணக் கிடைத்தது. அவருக்கு நார்ஸ் புராணங்களில் இருக்கும் ஈடுபாடு, மெல்லிய நகையுணர்வு, நாவலில் சரியான இடங்களில் வெளிப்படும் மௌனம், ஆற்றாமை, இயற்கையின்முன் நம் நம்பிக்கைகளின் (நம்பிக்கைகள் பிறரைத் துன்புறுத்தாதவரை) முன் பேச்சற்று, அசைவற்று, இப்பிரபஞ்சம் எனும் அண்டவெளியில் எதுவுமற்று இன்மையாகி மௌனித்து எதேச்சையின் விளைவுகளை ஏற்றுக்கொள்ளுதல் என நாவலில் நான் உணர்ந்தவை இதை வேறுப்படுத்திக் காட்டுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே மார்ட்டின் அமெண்டிண்டமிருந்து வரும் அலைபேசி அழைப்பை ஏற்க மறுக்கிறான், அவர்களிடையே இருக்கும் அந்த இடைவெளி, அதற்கான காரணம் என்ன? கேள்வி முளைக்கிறது. கூடவே அவனது தோற்றம், மார்பு வரை நீண்ட தாடி, கலைந்த தலைமுடி, கண்களின் சுருக்கம் அவனின் இறுக்கத்தை வெளிக் காட்டுகிறது. ஜூல்ஸ் சராசரி இளைஞனுக்குரிய ஆடை, நீண்ட கேசம், தொப்பி, குறுகுறுப்பு என இலகுவானவனாக இருக்கிறான்.

மார்ட்டின் நார்வே செல்வதே நார்ஸ் நம்பிக்கையால்தான். ஜூல்ஸ் மார்ட்டினின் நார்ஸ் புராண நம்பிக்கையை அவ்வப்போது சீண்டுகிறான். மார்ட்டின் தன்னை ஓடின் கவனிப்பதாக, கண்காணிப்பதாக தீர்க்கமாக நம்புகிறான். ஓடின் மனதின் ரணங்களைத் தீர்ப்பவராக, கடவுள்களின் கடவுளாக இருப்பவர் என்கிறான். தன்னைச் சீண்டும் ஜூல்ஸிடம் நார்ஸ் கடவுள்கள் நீரை திராட்சை ரசமாக மாற்றத் தெரியாதவர் என்கிறான். பயணத்தின் போது ஜிபிஎஸ் வேலை செய்யாமல் போக மார்ட்டின் மட்டும் யாராவது தென்பட்டால் வழி கேட்கலாம் என்றெண்ணி வழிதவறி அலைகிறான், இறுதியில் ஒரு மேய்ப்பரைச் சந்திக்கிறான். ஓடினின் சாயலில் அவரிருக்க இருவரும் உரையாடுகிறார்கள். அவர் இவனுக்கு உணவளிக்கிறார். அங்கே வித்தியாசமாக இருக்கும் கருப்பு ஆடு ஒன்று மற்ற மந்தைகளோடு சேர மறுக்கிறது. அது மட்டும் தனித்திருக்க, மேய்ப்பர் அது கைவிடப்பட்டு குழந்தையாக கிடைத்தது என்கிறார். மார்ட்டினும் தன்னை கைவிடப்பட்டவனாகவே உணர்கிறான்.

கைவிடப்பட்டவர்களையே இறைவன் அதிகம் நேசிக்கிறான். இருவருக்குமிடையே நிகழும் உரையாடலில் ‘வாழ்க்கை அவ்வளவொன்றும் எளிதானதில்லை’ – மேய்ப்பர் சொல்ல, மார்ட்டினும் ‘ஆம் சில நேரங்களில்’ என பதிலளிக்கிறான். இருவரையும் இரண்டு கருங்காக்கைகள் கவனிக்கின்றன. தன்னிடம் இருக்கும் நில வரைப்படத்தையும், உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவ விடைபெறுகிறான். மேய்ப்பரின் சித்திரம் ஓடினின் உருவ அமைப்பிலேயே வரையப்பட்டிருக்கும். பிறகு ஜூல்ஸிடம் அவர் ஓடின்தான் என நம்புகிறான். ஆட்களே தட்டுப்படாத இந்த வனாந்திரத்தில் யார் கம்போடு தனித்து அலைவார் என்கிறான்.

மீண்டும் இருவரும் பயணிக்க வழியில் கிரிஸ்டினை சந்திக்கிறார்கள். அவள் தன் பெண் குழந்தையோடு தனியாகப் பயணிக்கிறாள். மார்ட்டினிடம் அக்குழந்தை இயல்பாக ஒட்டிக்கொள்ள மற்ற இருவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். குழந்தையை தன் கையில் வாங்கியவுடன் மார்ட்டினின் மனவோட்டங்கள் சித்திரங்களாக சில பக்கங்கள் ஆக்கிரமிக்கின்றன. கேமிலிதன் மகளின் நினைவுகளை, அருகாமையை கையில் இருக்கும் குழந்தையின் மூலம் உணர்கிறான். ஆற்றாமை, நாம் அறியாத இழப்பொன்றின் வலி, கிடைத்தவொன்றில் அதை மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, ஆனால் எல்லாமே தற்காலிகம்தான்.

இந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே அவர்களிடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, ஜூல்ஸ் வரையும் சித்திரங்களை பயணத்தின் இறுதியிலேயே மார்ட்டின் பார்க்க வேண்டும். அதைப் போல ஜூல்ஸ் அலைபேசியில் இடையிடையே மார்டினுக்கு கேட்காமல் வீட்டோடு பேசிக்கொள்வான். மார்ட்டின் யாரோடும் ஒட்டிக்கொள்ளாமல் உறவற்று தனித்து அலைபவன். ஜூல்ஸும் மார்ட்டினின் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவுண்டு. ஓடி ஒளிவதால்அதிலிருந்து தூர விலகி நிற்பதால் எதுவும் மாறப் போவதில்லை எனப்பலமுறை சொல்லிப் பார்க்கிறான். அந்நேரங்களில் மார்ட்டின் கடுங்கோபம் கொள்கிறான், தந்தையை வெறுக்கிறான். இடையில் ஜூல்ஸையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டு வேகமாக வண்டியை ஓட்டி, ஒரு கறுப்பு ஆட்டை மோதிவிடுகிறான். அவனுக்கும் அடிபடுகிறது. நெற்றியில் இரத்தம் வழிந்தோட, கையில் தட்டுப்படும் ஜூல்ஸின் சித்திரப் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கத்தைப் புரட்ட, அதில் ஓடின் வரையப்பட்டிருப்பார். அவர் தன்னை கவனிக்கிறார் என உணரும் வேளையில், வண்டியின் முன் கண்ணாடியில் கருங்காக்கையொன்று வேகமாக மோதி அலகால் கொத்துகிறது.

திரும்பவும் ஜூல்ஸிடமே செல்கிறான். அவன் வருந்துகிறான். இரவு அவர்கள் தங்கும் தற்காலிகக் கூடாரத்திற்கு கரடி வருகிறது. இருவரும் எப்படியோ தப்பிக்கிறார்கள். அடுத்த நாள் Preikestolen நோக்கி பயணிக்க தீர்மானிக்கிறார்கள். பனி பொழிய ஆரம்பிக்கிறது. தூரத்தில் கருங்காக்கையொன்று மார்ட்டினை நோட்டமிடுவதாக உணர்கிறான். ஓடின்தான் வந்துவிட்டார் என அவரைத் தேடி ஓடுகிறான். ஜூல்ஸும் அவன் பின்னாலேயே ஓட, Preikestolen உச்சிக்கு செல்லும் பாதை வருகிறது. அதிகப் பனிப்பொழிவு இருப்பதால் மலையேற்றம் செய்யத் தடைப்பட்டிருக்கிறது. இருப்பினும் மார்ட்டின் அவ்வழியே சென்றதால் ஜூல்ஸும் பின்னாலேயே செல்கிறான். அபாயகரமான பாதை, எங்கும் பனி. பாறையுச்சியின் விளிம்பில் மார்ட்டின் அமர்ந்திருக்கிறான். அருகே ஜூல்ஸ் அமர்கிறான்.

‘Cold Front’ – ஒரு பக்கம் அடர்த்தியான நிறையுள்ள உடலை உருக்கும் குளிர்ந்த காற்று, மறுப்பக்கம் இலகுவான வெதுவெதுப்பான வெப்பக் காற்று. ‘Cold Front’.

நாவலின் அத்தியாயங்கள் சித்திரங்கள் மூலமே விளக்கப்பட்டிருக்கும். அவர்களின் சமகால அரசியலும் நம்பிக்கைகள் சார்ந்த கிண்டல்களும் தனித்து தெரிகின்றன. பாறையுச்சியில் ஜூல்ஸ் வரைந்த சித்திரங்களை மார்ட்டினிடம் நீட்டுகிறான். அவையும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பயணத்திற்கு செல்வதில் ஆரம்பித்து, பயணம் முடிவடையும் இடத்தில் நாவலும் முடிக்கப்பட்டிருக்கும். மார்ட்டின் தன்னுடைய பிரச்சனைகளை தூர நின்றே அணுகுகிறான். அதன் அடர்த்தியும் நிறையும் உண்மையில் அதிகம் விலக விலக விஸ்தாரமாகிறது. சிலநேரம் அணைப்பில் கிடைக்கும் வெதுவெதுப்பு நம்மை இலகுவாக்குகிறது. எதேச்சையின் விளைவான இப்பிரபஞ்சம் ஒரு முத்தத்தின் சூட்டால் மீண்டும் வெடிக்கட்டும்.

***

வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது நூல்கள் ’பட்டர் பீ & பிற கதைகள்’ராம மந்திரம்’. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

ச.மோகனப்ரியா கவிதைகள்

0

வாழையடி வாழை

லரொன்று உறங்கிக்கொண்டிருந்தது
முழுதும் மூடிய விழிகளில்
உறைந்திருந்தது
சிறு புன்னகை
கனவுகளில் மிரளும் முகச்சுளிப்பு
வெளியின் இரைச்சல்களென
அறையின் உரையாடல்கள்
எதையோ, எங்கோ,
யாரோ திடீரென உருட்டும்
சின்னஞ்சிறு அரவங்களால்
உறக்கத்திலேயே அதிர்ந்து
கைகளை அணைப்புக்காய்
அவ்வப்போது காற்றில் துழாவும்
பிறந்து சில நாட்களேயான
பச்சிளம் குழந்தை.

பாதுகாக்கும் பனிக்குடம் விட்டுவந்த
சின்னஞ்சிறு மலரே!
வெளியின்
இருப்பின் சாகசங்கள்
ஆரம்பிக்காத இத்தருணத்தின் பூவே!
நெடும் பயணத்தின் முதல் நாளிலிருக்கும்
உன்னை ஏந்திக்கொள்கிறேன்.

அரவணைப்பின் சுகந்தத்தில்
உறக்கம் தழுவிப் பிரகாசிக்கும் உன் முகத்தால்
துக்கம் மேலிட உன்னைத் தொட்டிலிலிட்டு
மொட்டை மாடிக்கு ஓடிச்சென்றேன்.
கைகளிரண்டை விரித்து
அந்தியின் முன் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தேன்.

மேகங்களுக்கிடையே வந்த கீழ்வானச் சிவப்பு
உன் சிவந்த மலரிதழ் பாதங்கள்
என் முகத்தில் பட்டதும் கொண்ட
மிருதைப் போலவே
வந்தெனைத் தழுவிக் கொண்டது.
எனக்கும் சற்று
ஆறுதலாக இருந்தது.

*

கேட்கப் பழகுதல்

மூச்சுவிட சிரமாயிருக்கும்
தருணமொன்றில்தான் உதவியெனக் கேட்கத் தோன்றும்
தூரத்திலிருந்து அப்போதுதான்
வேகமாக வந்து கொண்டிருக்கும்
ஒரு பழைய துக்கம்.

உதவுபவர்கள் அருகாமையிலேயே இருக்கிறார்கள்.
வாயைத் திறந்து கேட்க வேண்டும்
அவ்வளவுதான்.
கேட்பதற்காய் முயற்சிக்கும் முகத்தில்
திறக்கும் வாயிலிருந்து
உடனேயே ஒலி எழுவதில்லை.

முதலில்
பொழுதும் உறக்கமும்
ஒன்றுசேர மறுக்கிறது.
உதவி கேட்கத் துடிக்கும்
குரல்வளையை உள்ளிருந்தே
தடுக்கிறது உருவமற்ற ஒன்று.

பின்பு
உள்ளே ஒரு போர் மூள்கிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்
அது வீழ்த்தப்படும் நாளில்
உதவிக்காய் எழும் குரல்களை
நீங்கள் கேட்கலாம்.
பல நேரங்களில் அது
உங்களின் குரல் போலவும்
ஒலிக்கலாம்.

*

மறத்தல் என்பது…

உண்மையில் மறத்தல் ஒரு பாவனை
துக்கத்தை இன்னொரு துக்கத்தால்
மூடும் செயல் போன்றதது
ஒன்றை மறக்கப் பழகுவதென்பது
மீண்டும் அதைத் தொட்டுத் தொட்டு
சரிபார்ப்பதைப் போன்றது
அங்கேயேதான் இருக்கிறதா
அவ்வளவும் போதுமா என
சதா கேள்வி கேட்கும் மனதுடன்
போராடுவதைப் போன்றது
நெடுநாள் மனதிலிருந்த அன்பின் சாயல்
எங்கும் தட்டுப்பட்டுவிடக் கூடாத
பதற்றத்தில் உலவுவதைப் போன்றது

நினைவுகள் தடம் புரளும் நாளில்
மறக்க வேண்டியவற்றை விட
அதைச் சார்ந்தவர்களின் பெயர்கள்
முதலில் மறக்கின்றன

பின்
வானம் முழுவதுமாக இருண்டுவிடுகிறது
அதைப் பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
இருளில் கரைகின்றன

இறுதியில்
மறக்க நினைக்கும் ஒன்றை மட்டும்
விடிவெள்ளி போல்
இன்னும் நினைவில் வைத்திருக்கும்
பகல்களால் சதா உறங்காது உலவுகிறோம்.
உண்மையில் ஒன்றை மறப்பதென்பது
அதைச் சார்ந்தவற்றை மறப்பது
அந்த ஒன்றை மட்டும்
எப்போதும்
மறப்பது அல்ல.

***

ச.மோகனப்ரியா – இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி வருகின்றன.
இவரது மின்னஞ்சல் முகவரி : mohanapriyawrites@gmail.com

சிகண்டி கவிதைகள்: பொருளும் படிமமும் பிரதிபலிப்பும்

0

ரூபன் சிவராஜா

விதாவின் மிகச் சிறந்த கவிதைகள் என்று மதிப்பிடக்கூடிய கவிதைகளிற் சிலவற்றைப் புரிந்துகொள்வதற்குரிய நிபந்தனையாக அவை வாசகரிடத்தில் முன்கூட்டிய அறிதலையும் தேடலையும் பார்வையையும் கோருபவை. குறிப்பாக கவிதையிற் கொண்டுவரப்படும் படிமங்கள், மேற்கோள் காட்டப்படும் இலக்கியங்கள், வரலாற்று மற்றும் புராண-இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய அறிதல் – வாசிப்பனுபவம் அவசியப்படுகின்றன. பெண்ணிய-சமூக-உலகப் பார்வையும் அவசியப்படுகின்றது

கவிதாவின் படைப்புத் தளம், அதாவது கலை இலக்கிய இயங்கு தளங்கள் பன்முகப்பட்டவை. நடனம் சார்ந்து ஆசிரியர், நடனக்கலைஞர், நடனப் படைப்புகளை உருவாக்குபவர். நடன நாடக நெறியாள்கை மற்றும் அவற்றுக்கான பிரதிகளையும் எழுதுபவர். எழுத்துச் சார்ந்து, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனவாக இயங்குபவர். கவிதாவின் இலக்கியத்தில் முதன்மையானது கவிதை. கடந்த 20 ஆண்டுகளில் (2002 – 2022) ஆறு கவிதைத்தொகுப்புகளும் ஒரு கதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் அவரிடமிருந்து வெளிவந்துள்ளன.

தன்னுணர்வும் சமூக வாழ்வனுபவங்களும்

கூர்மை, செறிவு, அழகியல், பல்பரிமாணம் கொண்ட கவிதைகள் அவருடையவை. இன்னும் சொல்வதானால் தனிமனித மற்றும் சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கிய வாழ்வனுபவப் பிரதிபலிப்புகளை அவருடைய கவிதைகளில் தரிசிக்கலாம். நடனம் தெரிந்தவர்களுக்கு உடல் நெகிழ்வானதும் இலகுவாக வளையக் கூடியதும் என்பது ஆச்சரியமில்லை. ஆனால் மொழியும் அவர்களுக்கு மிக லாவகமாக வளைந்து கொடுக்கும் அல்லது மொழியை லாவகமாக வளைக்கின்ற பக்குவமும் கலைத்துவ ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. காத்திரமாகவும் கூர்மையாகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவுமென பேசுபொருளுக்கும் இலக்கிய வடிவத் தெரிவுக்குமேற்ற வகையில் மொழியைக் கையாள்வதிலும் கவிதாவின் ஆளுமையை அவரது எழுத்துகளில் தரிசிக்கலாம் என்பது எனது அனுபவம். ஒரு உணர்வை, ஒரு கருத்தைச் சொல்வதற்கு எந்தச் சொற்கள் தேவையே அவற்றைக் கவனமாகத் தேர்ந்து எழுதுபவர். அளவுக்கு அதிகமான சொற்கள் இருக்காது. அலங்காரம் இருக்காது. ஒரு கவிதையில் ஒரு சொல்லைத் திரும்பப் பயன்படுத்த மாட்டார்.

இதெற்கெல்லாம் அடிப்படை அவரது ஆழ்ந்த வாசிப்பு. வாசிப்பினூடாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்கள், வளர்த்துக் கொண்ட தேடல்கள், சமூக- உலகப் பார்வைகள். சிறுவயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தினை வளர்த்துக் கொண்டவர். அதற்கு முக்கியமான உந்துதலாக இருந்தவர்கள் அவருடைய அம்மா மற்றும் மாமாமார் என்பதைக் கவிதா பலமுறை கூறியிருக்கின்றார். சமூகநீதி, பெண்ணிய, அரசியல் பார்வைகளுக்கான உந்துதலாக மாமாமாரும், தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தவராக அம்மாவும் இருந்திருக்கின்றனர். நோர்வேயில் 14 வயதில் வளர்நிலா என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையினை வெளியிட்டவர் கவிதா என்பது பலருக்கும் வியப்பான தகவலாக இருக்கலாம்.

பெண் மீதான அக-புற அழுத்தங்கள்

சிகண்டி கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பக வெளியீடாக 2020 ஜனவரி வெளிவந்தது. இத்தொகுப்பில் பல்வேறு பேசு பொருட்களைக் கொண்ட கவிதைகள் உள்ளன. பெண் மீதான அக-புற அழுத்தங்கள் மீதும் அவற்றுக்குக் காரணமான சமூகக் கட்டமைப்பு மீதும் கூர்மையான கேள்விகளை எழுப்புகின்ற கவிதைகள் அதில் முக்கியமானவை.

உலகெங்கும் அளவுகளில் வேறுபட்டாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை ஒப்பீட்டளவில். நமது சமூகக் கட்டமைப்பில், ஆண் மையச் சிந்தனையுடைய சமூகக்கட்டமைப்பில் பெண்கள் மீது கலாச்சாரம், மதம், குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, உடல், உடை, சடங்குகள், புனிதம் எனப் பலவற்றின் பெயர்களாலும், இன்னும் சொல்வதானால் அவற்றின் போர்வைகளில் அழுத்தங்கள், கட்டுப்பாடுகள், சுமைகள், ஒடுக்குமுறைகள் கட்டமைக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுகின்றன. அவருடைய கவிதைகளை முதன்மையாகப் பெண்ணியக் கவிதைகள் என்ற வகைமைக்குள் மதிப்பிடலாம். பெண்ணின் உணர்வுகள், பிரச்சினைகள், சவால்களை அவை பேசுகின்றன. ஆண் – பெண் உறவு, குடும்பம் சார்ந்த முரண்களைப் பேசுகின்றன. இவற்றின் மீது கூர்மையான கேள்விகளை எழுப்புவன கவிதாவின் கவிதைகள். சமூகம், இயற்கை, காதல், புலம்பெயர் வாழ்வு, சூழலியல், தொழில் நுட்பம், மனதின் மென்னுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பல கவிதைகளையும் எழுதி வருகின்றார்.

புதுக்கவிதையின் பரிமாணம் – கருத்தியற் கட்டுடைப்பு

புதுக்கவிதை குறித்ததான மேம்பட்ட புரிதல் தமிழ்ச்சூழலிற் பரவலாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. சொற்களுக்கு வர்ணம் பூசுவது கவிதையாகிவிடாது. உலகின் வெவ்வேறு மொழிக்கவிதைகளும் தமிழ்க் கவிதைகளும் சொல்முறையிலும் சரி, சொற்தேர்விலும் சரி, பேசுபொருளிலும் சரி உத்தியிலும் சரி புதிய பல கட்டுடைப்புகளைச் செய்திருக்கின்றன. அந்தக் கட்டுடைப்புகள் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கின்றன. அழகியல் கவித்துவம் சார்ந்த புதிய பரிமாணங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கவிதாவின் கவிதைகள் கருத்தியல் ரீதியாகப் பல கட்டுடைப்புகளைச் செய்துள்ளன. அதாவது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கின்ற ஒழுங்குகளை மீறுவது, அவற்றின் மறுபக்கத்தைப் பார்ப்பது – அவற்றின் மீது கேள்விகளை எழுப்புவது – அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறை சார்ந்த அதன் கூறுகளை, கேள்விக்குட்படுத்துவது – பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை கட்டுடைப்பது –என்பதாக கவிதாவின் கவிதைகளின் கருத்தியல் சார்ந்த விடயங்களை மதிப்பிடலாம். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் அவர் தன்னைக் கடந்து நின்று நோக்குகின்றார். அதனைக் கவிதை வடிவில் வெளிப்படுத்துகின்றார். அதிகமாகப் பெண்ணியப் பார்வையில் அவற்றை நிகழ்த்துகின்றார் என்றபோதும் பெண்களின் சிக்கல்களை மட்டுமல்ல. பல்வேறு வகைகளிலும் ஒவ்வாத விடயங்களோடு முரண்படுகின்றார். கூர்மையான
கேள்விகளை எழுப்புகின்றார்.

தன்னைக் கடந்து நின்று பார்த்தல் – எழுதுதல்



சிகண்டி – என்ற இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பும் அதனோடு தொடர்புடைய ‘தன்னைக் கடந்து’ என்ற கவிதையும் முக்கியமானவை. சிகண்டி என்பது மகாபாரதப் புனைவில் வரும் ஓர் முக்கிய பாத்திரம். அந்தப் பாத்திரம் மிக வலிமையானது. ஆற்றல் மிக்கது. பெண்ணாகப் பிறந்து, ஆணாக வளர்க்கப்பட்ட பாத்திரம் அது. பின்னர் ஆணாகவே ஒரு கட்டத்தில் மாறுகின்றது. அதற்கும் அப்பால் ஆணுமாகி பெண்ணுமாகி நின்ற பாத்திரம். இன்னும் சொல்லப்போனால் ஆண்மையைக் கடந்து, பெண்மையைக் கடந்தது மட்டுமன்றித் தன்னைத் தானே கடந்து நின்ற பேராற்றலும் பேரனுபவமும் கொண்ட ஒரு பாத்திரம். சிகண்டி என்பது ஒரு குறியீடு. இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகளின் பேசுபொருளுக்கான, உணர்வுகளுக்கான, பிரதிபலிப்புகளுக்கான குறியீடாகவும் படிமமாகவும் அது சாலப் பொருந்துகின்றது.
பொதுவாகவே முன்னோக்குமிக்க சிந்தனைகளையும் அது சார்ந்த எழுத்துகளையும் சமூகம் திறந்த மனதோடு வரவேற்பதில்லை. அதிலும் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை ஒடுக்குகின்ற, அவமதிக்கின்ற, பாதிக்கின்ற கட்டமைக்கப்பட்ட சமூக விதிகளை, ஒழுங்குகளைப் பெண்களே கேள்வியெழுப்பும் போதும் அவற்றோடு முரண்படும் போதும் அவற்றைப் படைப்பிலக்கியங்களிற்; பிரதிபலிக்கும் போதும் அதற்குக் கொடுக்கநேரும் விலை அதிகம். ஆனால் எத்தகு விலைகொடுக்க நேர்ந்தாலும் கவிதா அந்தச் சலசலப்புகளையெல்லாம் பொருட்படுத்துபவரல்ல. தனது உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதில் அவரிடம் எவ்வித மனத்தடையும் இல்லை. சமூகம் சுமத்த எத்தனிக்கும் தடைகளுக்கும் அஞ்சுபவருமில்லை.

சொற்களுக்கு அப்பால்

தமிழ் வெகுஜனச் சூழலில் பெரும்பாலும் கவிதைகளைச் சொற்களாக மட்டும், அல்லது முதன்மையாகச் சொற்களுக்கூடாகப் புரிந்து கொள்கின்ற போக்குத்தான் நிலவுகின்றது. சொற்களை விலத்தி, அல்லது சொற்களுக்கு வெளியே கவிதையைக் கண்டடைதல் என்பது அரிதான போக்கு. கவிதை சொற்களால், மொழியினால், வார்த்தைகளினால் ஆனது எனும் போதும் நல்ல கவிதையின் கனதி, செழுமை, அழகு, கவித்துவம், இலக்கியப் பெறுமதி, வீச்சு, அது கடத்தும் உணர்வு- அனுபவம் என்பன சொற்களுக்கு அப்பாலானவை.

எழுத்தென்பது தனக்கு எத்தகையதென்பதை இப்படிச் சொல்கிறார் ஒரு கவிதையில்:

ஒரு காலக் கயிறிழுப்பு,
சாஸ்திரக் கட்டவிழ்ப்பு
தொலைதலுக்கான மொழிக்காடு
அகம் துறக்கும் மேலாடை
உணர்வின் உண்மை நிறம்
முழுநிர்வாணம்
பிறப்பின் எதிர்விளைவு

என் மகனின் காதலிக்கு என்ற மற்றொரு கவிதையில் அவரது கவிதைகளுக்கான ஓர் தன்னிலை விளக்கமாகக் கொள்ளக்கூடிய பின்வரும் படிமங்களைக் காணலாம்:

கூன்முதுகுக் கூட்டத்துக்
குத்தல்களின் பிடிரியிலேறி,
பிடுங்கப்பட்ட இறகுகளை
ஒவ்வொன்றாய்த் தன்னில் ஏற்றி
கனவுகளைக் கொய்து சூடி
தனது நிழல்களைத் தானே அள்ளி
அந்தக் கறுப்பினில் கவிதை நெய்து
ஆடிக் களைத்தொவொரு தாயினை
முத்தவிட்டவன்.


சுதந்திர மனமும் நேசிப்பும் அழகியல் உணர்வும் ஆசுவாசமும் மிடுக்கும் கொண்ட வீட்டுச்சூழல் காத்திருக்கின்றது என்று மகனின் காதலிக்குச் சொல்வதை அந்தக் கவிதை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றது.

படிமங்களைப் புரிந்துகொள்வதற்கான நிபந்தனைகள்

கவிதாவின் மிகச் சிறந்த கவிதைகள் என்று மதிப்பிடக்கூடிய கவிதைகளிற் சிலவற்றைப் புரிந்து கொள்வதற்குரிய நிபந்தனையாக அவை வாசகரிடத்தில் முன்கூட்டிய அறிதலையும் தேடலையும் பார்வையையும் கோருபவை. குறிப்பாக கவிதையிற் கொண்டுவரப்படும் படிமங்கள், மேற்கோள் காட்டப்படும் இலக்கியங்கள், கதைகள், நிகழ்வுகள், புனைவுகள், வரலாற்று மற்றும் புராண-இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய அறிதல் – வாசிப்பனுபவம் அவசியப்படுகின்றது. மட்டுமல்லாமல் பெண்ணிய-சமூக-உலகப் பார்வையும் அவசியப்படுகின்றது. அவை குறித்துச் செவிவழி கேள்விப்பட்டாவது இருத்தல் வேண்டும். அப்போதுதான் கவிதையின் பிரதிபலிப்பினை உணர அல்லது அதற்கான வெவ்வேறு புரிதல்களை அடையமுடியும்.
சிகண்டி தொகுப்பிலுள்ள ‘தன்னைக் கடந்து’ எனும் தலைப்பிலான கவிதை ஆண்-மைய புராண-இதிகாச, வரலாற்று மற்றும் இலக்கியப் பாத்திரங்கள் மீது கேள்வியெழுப்புகின்றது. மகாபாரதத்தின் கிளைக்கதைகளும் அதன் பாத்திரங்களும், கௌதமன் -யசோதரை, ராமன்-சீதை, சிலப்பதிகாரத்தின் கண்ணகி, கோவலன், மாதவி – உதயகுமாரன், மணிமேகலை காதல், துர்வாச முனிவர் – குந்தி, சிகண்டி எனப் பல்வேறு பாத்திரங்களும் கதைகளும் பற்றிய அறிதலுடன் அவை வாசிக்கப்படும் போதுதான் அக்கவிதையை உரிய முறையில் புரிந்துகொள்ள முடியும். அத்தோடு பெண்ணிய நிலைப்பாடும் இருக்கும் பட்சத்திலேயே இந்தக் கவிதை சொல்லவரும் செய்தியை, கடத்த நினைக்கும் உணர்வை, அனுபவத்தைப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் இந்தக் கவிதையின் பரிமாணம் புரிந்துகொள்ளப்படாமல் போகும் அபாயம் உள்ளது.

இத்தொகுப்பிலுள்ள ’என்னை வரையும் நான்’இ’என் முகம்’இ ’கிரவுஞ்சப் பறவை’ போன்ற வேறு சில கவிதைகளும் அத்தகையனவே. பிகாஸோ, இரவிவர்மா போன்றவர்களின் ஓவிய வடிவங்கள், தன்மைகள், நிறப்பாவனை, அவற்றின் வெளிப்பாடுகள், பேசுபொருள் குறித்த அறிதல் அவசியப்படுகின்றது. பாரதி, இப்சன் போன்றவர்களின் படைப்புலகம் பற்றிய அறிதல்; அவசியப்படுகின்றது.

இப்சன் கண்ட பெண்ணும் பாரதியின் கண்ணம்மாவும்
ஒன்றோ எனக் கேள்வியெழும் சமயங்களில்
பிரபஞ்சத்துள் ஒரு சிறு பந்தினைப்போல்
உருண்டு மறைகிறதென் உலகம்

சுதந்திரத்தோடு பெருங்காதல் குறித்த இக்கவிதையின் படிமத்தைப் புரிந்துகொள்ள ஹென்றிக் இப்சனின் கடலிலிருந்து ஒரு கன்னி படைப்பினையும் அப்படைப்பின் முதன்மைப் பாத்திரமான சுதந்திரத்துடனான காதலை அவாவி நின்ற எலிடாவையும், பொம்மை வீட்டின் நூராவையும் அறிந்திருக்க வேண்டும். ஒளி என்பது ஞானத்தையும் வாழ்வின் சாரத்தையும் சுட்டுவதாகவும் கொள்ளலாம்.

ஒளியை உணவாக உட்கொண்டு வாழ்வது கிரவுஞ்சப் பறவை என்று சொல்லப்படுவது வெற்றுப் புனைவுதானோ என்று கேள்வியெழுப்புகின்றது ஒரு கவிதை. அதனைப் புரிந்துகொள்வதென்றால் கிரவுஞ்சப் பறவை பற்றிய குறியீட்டினை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்தோடு பெருங்காதலைப் பெற்றவள்.
அந்த ஒருத்தி!
உணர்ந்திருக்கக்கூடும்
அப்பறவை மேவி அத்தனையும்!

‘வீடு’ என்ற கவிதை புலம்பெயர் சூழலின் வீடொன்றை அல்லது மேலைத்தேய வீடொன்றைச் சித்தரிக்கின்றது. மனித – குடும்ப உறவுகளுக்குள் நெருக்கமும் ஊடாட்டமும் வற்றிப்போன சூழலைக் காட்சிப்படுத்துகின்றது. பொருட்களாலும் தொழில்நுட்ப, தகவல் தளங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டினைப் படிமாக்கியிருந்தது அந்தக் கவிதை. ‘அப்பம்மாவின் வீடு’ என்ற கவிதை தாயகத்து வீட்டைப்பற்றியது. வீடு என்பது வெறும் கட்டடங்களாலும் சுவர்களாலும் கதவுகளாலும் ஆன ஒன்றல்லவே. அக்கவிதை ஒரு ஆத்மார்த்தமான நினைவுத் தெறிப்புகளை வெளிப்படுத்துகின்றது. அப்பம்மாவை, இளமைக்காலத்தை உறவுகளை, முற்றத்தை, சுற்றத்தை, மரம், செடி கொடிகளை, காற்றை இரண்டு காலங்களுக்கிடையிலான மாற்றங்களோடு ஒப்பிட்டு நினைக்கிறது மனம். வீட்டுச் சூழலின் நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கிறது. இல்லாமற் போனவை எவை, இருப்பவை எவை எனத் தேடுகிறது. வீடும் சுற்றமும் மரமும் உயிர்களின் வாசனையை நிரப்பியிருக்கின்றன.

இப்போதுகூடக் கேட்கிறது
அருகில் விழும் அந்தத்
துப்பாக்கிச் சத்தம்

என்று முடிகின்ற அந்தக் கவிதை, போர் என்பது மனதில் ஏற்படுத்திய ஆறாவடு தசாப்தங்கள் கடந்தும் வெளிப்படுவதை உணர்த்துகின்றது.

கடவுளர்கள் மற்றும் உலகத் தலைவர்களின் வெவ்வேறு அளவிலான தலைகள் விற்பனைப் பொருட்களாக்கப்பட்ட போக்கு மீதான ஒரு விமர்சனமாக ‘ஞானம் தேடிச் சென்றவர் கதை’ கவிதையைச் சொல்லலாம். தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடி, சமையலறை, காலணிகள் கழட்டுமிடம், வரவேற்பறை, குளியலறை, கழிவறை, கதவின் இடுக்கு, படுக்கையறை என வீட்டின் மூலைகளைத் தலைகள் அலங்கரிக்கின்றன. சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டதும் பிரக்ஞையற்றதுமான போக்கு மீதான எள்ளலாக அக்கவிதையின் படிமங்கள் வெளிப்படுகின்றன.

பெண்ணியம்

’நான் பெண்மையின் உச்சமாகிறேன்’ என்ற தலைப்பிலான கவிதையை முதற்பார்வையில் வேறுமாதிரியாகவும், அதன் இறுதிச் சிலவரிகளை வாசித்த பின் வேறுமாதிரியாகவும் புரிந்து கொள்ளலாம். முதற்பார்வையில் சமையலை ரசித்துச் சமைக்கும் பெண்ணின் அனுபவமாக… அடுத்தாற் போல் ஒரு சமையலைச் செய்யும் போதான அதன் படிநிலைத் தருணங்களைப் பெண் தனது சிருங்கார உணர்வுகளுக்கு உவமையாக்குவதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதன் இறுதிப் படிமங்கள் அதனை ஒரு அசலான, வீரியமான பெண்ணியக் கவிதையாக மாற்றிவிடுகிறது. பெண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று இந்தச் சமூகம் விரும்புகின்றது அல்லது கட்மைத்து வைத்திருக்கின்ற பிம்பத்தின் மீது ஒரு பலத்த அடி விழுகிறது. எள்ளலாகவும் அதேவேளை சீரான உத்தியுடனும் அதில் கவிதை வெளிப்படுகின்றது.

’பெண்கள் தினம்’; என்ற கவிதை நிலவுகின்ற ஒரு முரணைத் துல்லியமாகச் சித்தரிக்கின்றது. பெண்கள் எதற்காகவெல்லாம் போராடினார்கள், எந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முனைந்தனர் என்பதைச் சொல்லுகின்ற அந்தக் கவிதை, போராட்டக் காரணங்கள் அப்படியே இருக்க சடங்காகிப் போன பெண்கள் தினம் பற்றிய சமூக வெளிப்பாடுகளைக், குறிப்பாக ஆண்களின் வெளிப்பாடுகளை இப்படிச் சாடுகிறது:

நாங்கள் தெருவில்
இறங்கிப் போராடிக் கொண்டே இருந்தோம்
பெண்கள் தின வாழ்த்தென்றாய்
தேனீர் தந்தாய்
ரோஜாக்கள் தந்தாய்

மனநிலையில் மாற்றமில்லை, பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றமில்லை, சமூகக் கட்டமைப்பில் மாற்றமில்லை. ஆனால் வெறும் சடங்குபூர்வமான அடையாள நாளாகப் பொதுப்புத்தியில் பெண்கள் தினம் மாறிப்போன அவலத்தைப் பேசுகின்றது. பொதுவாகவே உரிமைகளின் அடையாள நாட்கள், அவற்றுக்குரிய அர்த்தங்களை இழந்து பரிசுப் பொருட்களின் நாட்களாக, நுகர்வுக் கலாச்சாரத்தின் நாட்களாக, பொருள்முதல் வாதத்தினால் தத்தெடுக்கப்பட்ட நாட்களாக ஆக்கப்பட்டுள்ளமையுடன் இணைத்து உரையாடக் கூடிய வெளியை இக்கவிதை திறக்கின்றது.

மனவெளியும் வாழ்வுவெளியும்

’மகனுக்கு’ கவிதை ஒரு பெரிய மன வெளியையும் வாழ்வு வெளியையும் தெரிவு வெளியையும் விரித்துக் காட்டுற கவிதை அது. கவிதா இதுவரை வெளிவந்த ஆறு கவிதைத் தொகுப்புகளிலும் இன்னும் வெளிவராத கவிதைகளையும் சேர்த்து குறைந்தது 400 வரையான கவிதைகளை எழுதியிருப்பார். அவற்றில் ஆகச் சிறந்த பத்துக் கவிதைகளில் ஒன்றாகவும் ஆகச் சிறந்த மனித மகத்துவத்தை வெளிப்படுத்துகின்ற கவிதைகளில் ஒன்றாகவும் நான் அந்தக் கவிதையை மதிப்பிடுவேன். அது விரித்து நிற்கும் பிரபஞ்சமளாவிய பார்வை மிக அழகானது, ஆழமானது. தன் பிள்ளைக்கு வாஞ்சையோடு எல்லா அம்மாக்களும் அப்பாக்களும் வாசித்துக் காட்டக் கூடிய அல்லது வாசிக்கக் கொடுக்கக் கூடிய கவிதை அது. அதன் பொருள் அத்தனை அழகானது, ஆழமானது, மானிட சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டது.

‘என் மகனின் காதலிக்கு’ என்ற கவிதை இன்னொரு கவிதை, மன உணர்விலும் வாழ்வு வெளியிலும் பிரவாகிக்கின்றது. சுதந்திர எண்ணங்களும் உணர்வும் கொண்ட மனமும் நேசிப்பும் அழகியல் உணர்வும் ஆசுவாசமும் மிடுக்கும் கொண்ட வீடும் சூழலும் காத்திருக்கின்றது மகளே என மகனின் காதலியை வாஞ்சையுடன் வரவேற்கின்றது.

சிறகுகளைத் தன் பார்வையில்
கொண்டிருப்பான
கைவசப்படும்
இந்தக் காதலினுடனான
சுதந்திரம் உனக்கு

ஒரு பறவையைக் கொல்வது எப்படி

’ஒரு பறவையைக் கொல்வது எப்படி’ எனும் கவிதை பேசுகின்ற பொருளும், கட்டமைக்கப்பட்ட விதமும் சொல்முறையும் படிமங்களும், அதன் பிரதிபலிப்பும் முக்கியமானவை. ஒரு பெரும்கதையாடலுக்கான உள்ளடக்கத்தினை அது கொண்டிருக்கின்றது. அதற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ளது. சுதந்திரமாகப் பறந்து திரியும் ஒரு பறவையின் வெளிகளையும் கனவுகளையும் உயரங்களையும் அறிந்து அதனோடு நட்பாகி, உதவிகள் ஒத்தாசைகள் செய்து தந்திரங்களால் அதன் சிறகுகளை ஒவ்வொன்றாக நறுக்கிக் கூண்டடைத்து, அது மெல்ல மெல்ல இறந்துகொண்டே போவதை பார்த்து ரசிக்கும் நிலையைப் பிரதிபலிக்கின்றது. இங்கே பறவை என்பது குறியீடு. அதுவொரு பெண்ணை உருவகப்படுத்துகின்றது. சிறகொடித்து நசுக்குகின்ற பாத்திரங்களாக ஆண்களும் பெண்களும இணைந்த சமூகம் உருவகப்படுத்தப்படுகின்றது. அதாவது கட்டமைக்கப்பட்ட சமூக மனநிலையின் துன்பியலை, அதன் உளவியலைப் பேசுகின்றது.; குறித்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இல்லாமல் இதற்குள் ஒரு உலகளாவிய பிரதிபலிப்பு உள்ளது. அடிப்படையில் அது ஆண்மைய வாதம், அதனால் கட்டமைக்கப்பட்ட சமூக உளவியல்.

நுண்ணுணர்வு

மனித உறவுகள் ஏற்படுத்தும் இன்பமும் துன்பமும் துரோகமுமான உணர்வுகளின் தாக்கங்களால் உருவான கவிதைகள். காதல், பிரிவு தூரம், ஏக்கம் சுமந்த கவிதைகள். பெரும்காதலை வெளிப்படுத்துகின்ற மென்மையும் வன்மையும் நிலவும் நெருப்புமான கவிதைகள் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் ‘சிகண்டி’ தொகுப்பில் உள்ளன.‘இரவல் முகத்தவர்’ நுண்ணிய அகவுணர்வினை வெளிப்படுத்தும் கவிதை இது. மனித உறவுகளின் முரண்களையும் அவை ஏற்படுத்தும் இன்பமும் துன்பமுமான உணர்வுகளின் தாக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. ‘இதயம் எனக்குச் சொந்தமில்லை’ என்ற கவிதை, மரணத்தின் பின் சடங்குகளற்ற ஓர் இறுதி நிகழ்வை வேண்டுகின்றது.

ஈழம் – உலகம் – அரசியல்

‘நோர்வேஜிய சுதந்திர தினம்’ என்ற கவிதையின் உள்ளடக்கம், நோர்வேஜிய சுதந்திர தினம் எப்படிக் கொண்டாடப்படுகின்றது என்ற ஒரு சித்தரிப்பு. மிக எளிமையானதும் சாதாரணமானதுமான சித்தரிப்பு. ஆனால் அதன் இறுதி ஒற்றை வரி அந்தக் கவிதையைக் குருதி வடியும் ஒரு துன்பியல் இலக்கியமாக மாற்றிவிடுகிறது. ஒரு இறுதி ஒற்றை வரியில் அற்புதமான கவிதை உருவாகுகின்றது என்பதற்கு இந்தக் கவிதை உதாரணமாகிவிடுகிறது. கவிதையின் வீரியத்தை சக்தியை உணர்த்தி விடுகிறது.

ஈழத்தமிழரையும் புலம்பெயர் தமிழரையும் அவர்களின் சமூக அரசியல் கையறு நிலையையும் இழிவையும் வெளியாருக்காகக் காத்திருக்கும் மனநிலையையும் கோயில்களே கதியென்று கிடக்கும் நடப்புகளையும் கூர்மையாக விமர்சிக்கின்ற கவிதையாக ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனும் கவிதையைக் காணலாம். அது கோபம், ஏக்கம் எள்ளலோடு வெளிப்படுகின்றது.ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் சகோதரப் படுகொலைகளை துயருடன் பேசுகின்றது ‘வேதாளம் சொல்லும் கதை’ எனும் தலைப்பிலமைந்த கவிதை.

பேதங்களற்று தேச விடுதலைக்காக உயிர் ஈகம் செய்த அனைத்துப் போராளிகளும் சமமாக நினைவுகூரப்பட வேண்டுமென்ற ஆதங்க வெளிப்பாடு. புறக்கணிப்பற்ற மனநிலையைப் பெறவேண்டும் என்பதைப் பிரதிபலிக்கின்றது ‘மனம் மனம் மனம்’ எனும் கவிதை. இக்கவிதை வெளிப்படுத்துகின்ற உணர்வும் கோருகின்ற செயலும் ஆத்மார்த்தமானது. ஒரு உயிர் பெரிதென்றும் இன்னொரு உயிர் சிறிதென்றும் எண்ணாத மன வெளிப்பாடு. அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பதற்கு முதலில் மனம்தான் வேண்டும், பிறகே மற்றவை. ஆதலால் ஒரு உன்னதமான அகக்குடிலை அவாவுகின்றது அக்கவிதை.
‘உலகினை ஒரு பந்தாக்கி அவர்கள் விளையாடத் தொடங்கினர்’ என்ற கவிதை சர்வதேச அரசியலைப் பிரதிபலிக்கின்றது. ஆதிக்கத்தை அடிநாதமாகக் கொண்ட அதிகார அரசியலின் இயங்குநிலையை, அதன் போக்கினை, போலித்தனங்களை, பாசாங்குகளைத் தோலுரித்துக் காட்டுகின்றது.

சங்க இலக்கியங்கள் முதல் நோர்வேஜிய இலக்கியங்கள் வரை

தமிழ் இலக்கியம், குறிப்பாகச் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் கற்பதுவும் ஆய்வுப் பார்வையோடு அவற்றை அணுகுவதும் எழுத்துச் சார்ந்த அவரது வெளிப்பாடுகளுக்குத் துணைநிற்கின்றன. நோர்வேஜிய மற்றும் உலக இலக்கியங்கள் மீதான வாசிப்பும் மொழிபெயர்ப்பு அனுபவங்களும் இன்னுமொரு வகையாக அவரின் எழுத்துகளின் செழுமைக்கு சேர்க்கின்றன. நோர்வேஜிய இலக்கியங்களில் அவருக்குப் பரிச்சயம் உண்டு. அந்தப் பரிச்சயம் என்பது, கல்வி, வாசிப்பு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றினூடாக வளர்க்கப்பட்டது. ஹென்றிக் இப்சனின் உலகப்புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘பேர் கிந்த்’ கவிதை நாடகத்தினை மொழிபெயர்த்து முடித்துள்ளார். இருபதிற்கும் மேற்பட்ட நோர்வேஜியக் கவிஞர்களின் பல்வேறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்து வருகின்றார். பாரதி கவிதைகளை ஆழமாக, தத்துவார்த்தமாக, சொற்களுக்கும் வரிகளுக்கும் அப்பாற் சென்று அதற்குள் இருக்கும் கவிதையைக் கண்டடைகின்ற அவருடைய ஆர்வமும் ஆய்வுப் பார்வையும் முக்கியமானவை.

கவிதாவின் கலை மனம், தேடல், கலை-இலக்கியப் பார்வை, சமூக-உலகப் பார்வை-சமூகநீதி மற்றும் பெண்ணிய நிலைப்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுநிரலே அவருடைய படைப்பாக்கங்களுக்கான உந்துதலாக விளங்குகின்றன. அவரது எழுத்தினதும் எழுத்திற் கையாளும் பேசுபொருள், சொல்முறை, மொழிநடை, வாசகர்களுக்குக் கடத்தும் உணர்வு என்பவற்றில் செழுமையைத் தருகின்றது.

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்

தனிமையே என் துணைவன்

0

ஜா.ராஜகோபாலன்

றுப்பு வெள்ளையாக மட்டுமே வரும் செய்தித்தாள்களைக் கூட அத்தனை காதலாகப் பார்க்கும் “ஆறாப்பு” படிக்கும் கிராமத்துச் சிறுவன். மாவட்டத் தலைநகருக்குப் போக நேர்ந்தால் அங்கு பேருந்து நிலையக் கடைகளில் வண்ண வண்ணமாகத் தொங்கும் பல இதழ்களையும் பார்க்கப் பார்க்க அலுக்காதவன். ஊரில் யாரேனும் குமுதம், விகடன், மாலைமதி, கல்கி வாங்கிய தகவல் தெரிந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் வாசலில் நின்றாவது வாசித்து வருபவன். அதில் வரும் கதைகள் அவனுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் வாசிப்பில் சுவாரசியம் கொண்டிருப்பவன். அப்போது வாசித்த குமுதத்தின் ஒருபக்க கதைகளில் சில இப்போதும் அவன் நினைவில் உண்டு. அப்படியான நாட்களில் மேலத்தெரு நாராயணன் வீட்டில் அவன் அப்பா (தலைமைக் காவலராக தென்காசியில் பணியாற்றியவர்) திருநெல்வேலி ‘டூட்டிக்கு போய் வந்தபோது படம் போட்ட கதைப் புத்தகம் ஒன்றை வாங்கி வந்திருப்பதாக அவனுக்கு பள்ளியில் சொல்லப்பட்டது. பள்ளி விட்டதும் வீட்டிற்குள் கூட நுழையாமல் வாசலில் இருந்தபடியே பைக்கட்டை உள்ளே வைத்து விட்டு நாராயணன் வீட்டுக்கு ஓடினான். பத்து நிமிட கெஞ்சல், நாராயணனின் அக்கா பரிந்துரையின் பேரில் அப்புத்தகம் அவனுக்குத் தரப்பட்டது. சாட்டையடி வீரர் ஃபிலிப் (அவருடன் இருவர் உண்டு) தோன்றி வன்மையாக நீதியை நிலைநாட்டும் வன்மேற்கின் சித்திரக் கதை. அதுவரை அவனறியா உலகம். அரைமணி நேரத்திற்குள் 5 முறை வாசித்து விட்டான். நாராயணன் அப்பா கேலி செய்வார் – “போதும்டே, படிச்சு, படிச்சு எழுத்து தேஞ்சிராம”. அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் என்னுடைய காமிக்ஸ் கிறுக்கு.

முதல்முறை காமிக்ஸ் படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை. அந்தச் சூழல், நில அமைப்பு, உரையாடிக் கொள்ளும் பாணி, எல்லையற்ற வெளியில் உண்டு உறங்கும் நாடோடி வாழ்க்கை என எண்ணி எண்ணி கற்பனை அலுக்காமல் மேலும் மேலும் என விரிந்துகொண்டே போனது. கிட்டத்தட்ட 15 நாட்கள் தினமும் அதே புத்தகத்தை போய் பார்த்து வருவது வழக்கமானது. அதன்பின் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், வீரப்பிரதாபன் கதைகள் (அணில் அண்ணா), பூந்தளிர், வாண்டுமாமா என வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கற்பனையில் திளைக்க வைத்த நாட்களால் நிரம்பிய இளம் பருவம். தென்கோடி முனையில் இருக்கும் சிறு கிராமம். மதுரை தாண்டிப் போனதில்லை. ஆனால் அமெரிக்க நிலம், அவர்கள் உணவு, விழுமியங்கள், வாழ்க்கை முறைகள், வரலாறு, போர், நீதிமுறை, குடும்ப முறை, நட்பு, துரோகம், பழங்குடி மக்களுக்கும் நகர மக்களுக்குமான உரசல்கள், நிலம் என்பதன் மீதான பொருளாதாரப் பிடிமானத்துக்கு தங்களது உணர்வுரீதியிலான பிடிமானத்தைப் போராடி பலியிட்டு மறையும் பழங்குடி வரலாறை டெக்ஸ் வில்லர் கதைகள்தான் உணர்த்தின என்று உறுதியாகச் சொல்வேன். இறுதி நொடி வரை நம்பிக்கை இழக்காத போராடும் தன்மையை டெக்ஸும், இறங்கும் வரை யோசிப்பதையும், இறங்கியதும் களத்தை தீப்பற்ற வைப்பதையும் கிட் கார்சனும் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அமெரிக்க கெளபாய் வீரர்களான இவர்கள் இத்தாலிய கைவண்ணத்தில் பிறந்தவர்கள் என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை இப்போது வரை.

பிறகு வந்த வரிசைகளில் நகைச்சுவை காமிக்ஸுகள். இன்றுவரை எனது அபிமான ஜோடிகள் லக்கி லூக் – ஜாலி ஜம்பர் மற்றும் உட் சிட்டியின் டாக் புல்- கிட் ஆர்டின். அபத்தமான “விட்”, “ஜோக்” ஆகியவற்றிலிருந்து வாழ்வோடு இணைந்த நகைச்சுவை என்பதை மிகச்சிறு வயதிலேயே ருசி பார்க்க வைத்தவை இந்த காமிக்ஸுகள். கொலைகாரக் குடும்பத்தில் ஆவரெல் அம்மா செல்லமாக ஆகி அடிக்கும் லூட்டிகள் ஒரு பக்கம் என்றால் சலூனுக்குள் லக்கி நுழைந்ததுமே ஜன்னலை ஏறிட்டு நிற்கும் ஜாலி ஜம்பர் இன்னொரு புறம். அனைத்து நகைச்சுவைகளுமே காதை ஒட்டி, தொப்பியை ஓட்டை போடும் துப்பாக்கிக் குண்டுகளின் சீறல்களுக்கு நடுவே என்பதுதான் அந்த நகைச்சுவையின் தரத்தைச் சொல்வது. கார்சனை கிழவன் என டெக்ஸ் கிண்டலடித்ததும் கார்சன் மாணிக்கத்திலிருந்து பாட்ஷாவாக மாறுவது அனைத்தும் எதிரிகளின் துப்பாக்கி முனையில். அத்தனை அபத்தங்களுக்கும் ஆபத்துகளுக்கும் நடுவில் புன்னகைப்பதும், புன்னகைக்க வைப்பதுமான ஒரு மனப்பாங்கை அன்று அந்த வயதில் நான் வாசித்த எந்த பிற புத்தகங்களும் சொல்லிக் கொடுத்ததில்லை.

அமெரிக்க காமிக்ஸ் இப்படி என்றால் பிரிட்டன் முதலிய நாடுகளின் ஐரோப்பிய காமிக்ஸ்கள் வேறு வகை. கருப்பு வெள்ளை எனும் இரு நிறங்களை ஒளியும் இருளும் எனப் பார்க்கக் கற்றுத் தந்தவை ஐரோப்பிய காமிக்ஸ்கள்தான். கனவுகள்தான் கருப்பு வெள்ளையில் வரும். ஆனால் கற்பனையில் வரும் வண்ணங்கள் எண்ணில் அடங்காதவை. தாளில் உறைந்த கனவு வண்ணமயமான எவ்வளவு கற்பனைகளை அளிக்கிறது? இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் உள்ளங்கை ஒன்றை விரித்துப் பாருங்கள். மானசீகமாக உள்ளங்கையை நான்கு சம சதுரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சதுரத்தின் அளவில் மட்டுமே அச்சிடப்பட்ட வரைபடம் ஒரு துறைமுகத்தை, கப்பலின் மேற்பகுதியை, பனி சூழ்ந்த இரவின் சாலை விளக்கு வெளிச்சத்தை, பெருங்கடலின் நடுவே அகப்பட்டுக் கொண்ட தனிப் படகை, ஆப்பிரிக்க-அமேசான் காடுகளின் உட்புறத்தை, கழுகு பறக்கும் உச்சியிலிருந்து மலைக் கணவாய்களை , மலைக் குன்றுகளுக்கிடையே புகை சமிக்ஞைகளாக நடைபெறும் செய்திப் பரிமாற்றத்தை, ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் ஒரு கலை அரங்கின் இரவு நிகழ்வை, பாட்டும், நடனமும் உணவும் மதுவும் பரிமாறப்படும் ஒரு உணவுவிடுதியின் இரவுப் பொழுதை … இன்னும் எவை எவையெல்லாமோ அந்த உள்ளங்கையின் ஒற்றை சதுரப்பரப்பில் ஒருவரை வந்தடையும்.


நான் சொல்வது அதீதமாக இருப்பதாக நினைத்தால் மாடஸ்டி ப்ளைஸி-கார்வின், ரிப் கெர்பி வரும் எந்த கருப்பு வெள்ளை காமிக்ஸையும் வாங்கிப் படியுங்கள். இரவில் வெட்டவெளியில் கணப்பு நெருப்பின் வெளிச்சச் சுடர் கன்னங்களிலும், மூக்கு நுனியிலும் ஒளிவிடும் ப்ளைஸியை நீங்கள் பார்த்து விட்டால் வண்ணங்களான கருப்பு வெள்ளை ஒளியும் இருளுமாக மாறும் மாயத்தை உணர்வீர்கள். அதன்பின் இங்கே நான் சொன்னவை முழுமை அல்ல என்றுதான் சொல்வீர்கள்.
தங்கள் விழுமியங்களைத் தவிர வேறெதற்கும் கட்டுப்படாமல் வெட்டவெளியில் ஒரு நாடோடி வாழ்வை வாழத் துணிந்த கதை நாயகர்களை நான் அதற்கு முன் சந்தித்ததில்லை. எந்த பந்தத்துக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால் உணர்வற்றவர்கள் ஆகிவிடுவதில்லை அவர்கள். நட்பு என்பதன் ஆழம், நெருக்கம், விலக்கம், துரோகம் எல்லாவற்றையும் அனுபவித்து அதன் காரணமாக வாழ்வே தலைகீழாகிப் போன நிலையிலும் சற்றும் தன்னம்பிக்கை தளராத கேப்டன் டைகரை நீங்கள் ஏதாவது ஒரு கதையில் சந்தித்தாலும் நான் சொன்னதை விட அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும்.

மனைவி இறந்ததும் வேறெந்த பெண்ணையும் மனதாலும் தொடாத டெக்ஸ் வில்லரை “இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”என்ற கம்ப ராமாயண வரியை முதன்முறை வாசிக்கும்போது நினைத்துக் கொண்டேன். இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். வன்மேற்கு உலகில் அப்படி ஒரு கதாபாத்திரம் என்பது உச்ச நீதி மற்ற உத்தரவுகிணங்க முறையாக தண்ணீர் திறக்கும் கர்நாடகாவை விட அபூர்வமானது. பணி காரணமாக இருவேறு வழிகளில் பிரிந்து செல்ல நேரிடும் நிமிடங்களிலெல்லாம் “உன் முதுகைக் காப்பாற்ற இந்தக் கிழவன் உடனில்லை என்பதால்” என்று சொல்லி டெக்ஸை கவனமாக இருக்கச் சொல்லும் கார்சன், வேலைக்காக நான் சென்னை கிளம்பிய நாளில் இருந்த என் அப்பாவை நினைவுப்படுத்துவார்.


எவ்வளவோ செய்யத் தயாராக இருக்கும் நண்பர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கையில் சொல்லாமலேயே கிளம்பி தன்வழியில் தனியே செல்லும் லக்கி லூக் தான் அந்த வெற்றிக்குக் காரணமானவனாக இருப்பான். இருளோ, அஸ்தமனச் சூரியனோ தெரியும் ஏதுமற்ற வெளியை நோக்கி அவனும் ஜாலி ஜம்பரும் நமக்கு முதுகு காட்டி “தனிமையே என் துணைவன்” எனப் பாடிக்கொண்டே செல்லும் காட்சி இல்லாமல் எந்த லக்கி லூக் கதையும் முடிவடையாது. மறக்க வேண்டாம், லக்கி லூக் ஒரு நகைச்சுவை நாயகன். அதுவரை வந்த அத்தனை நகைச்சுவைகளும் பின்நிற்க ஒரு கசப்புப் புன்னகைதான் கடைசிக் காட்சியின் கட்டத்தில் நமக்குக் கடத்தப்படும். கசப்புப் புன்னகை ஒன்றைக் கூட உணர முடியாதவனுக்கு நகைச்சுவை என்ன எழவில் புரியப் போகிறது? பெரும் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தனி ராணியென விளங்கி அனைத்தையும் கைவிட்டு நாள் ஒவ்வொன்றையும் அனுபவித்து வாழும் மாடஸ்டிக்கும், எந்தப் பெண்ணையும் இமைக்கும் நொடிக்குள் கவர்ந்து விடும் கார்வினுக்கும் இடையே இருக்கும் கண்ணியமான நட்பை இதுவரை எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை என்பேன். சிறு வயதிலேயே காதலை விட நட்பே அபூர்வமானதும் உயர்வானதும் என எனக்குத் தீர்மானமானது இவர்கள் இருவராலும்தான். மாடஸ்டி அடுத்த நொடி என்ன செய்வாள் என்பது மாடஸ்டியை விட கார்வினுக்கும், கார்வின் சிந்தனை இந்த நொடியின் பாதியில் எப்படிப் போகும் என்பதை கார்வினை விட வேகமாக யோசிக்க முடிந்த மாடஸ்டியும் கொண்டிருக்கும் உறவுக்கு இன்றைய சமூக உறவுமுறைகள் எவற்றின் பெயரை வைத்தாலும் போதாமல்தான் இருக்கும். மாடஸ்டியின் பழைய நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதில் வியப்பே இல்லை.

கேப்டன் டைகருக்கும் கிழவன் ஜிம்மிக்கும் இடையே இருக்கும் உறவு இப்படி விளக்க முடியாத மனித மன விசித்திரங்களைக் காட்டுவது. எந்த சாகசமும் காட்டாமல் முயன்றால் நாமும் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கும் இங்கிலாந்தின் ரிப் கெர்பி அமெரிக்காவின் டெக்ஸ் வில்லருக்கு நேர்மாறானவர். ரிப் க்கு அதிகபட்ச வன்முறை என்பதே தடுப்பாட்டம்தான். ஆனால் அங்குலம், அங்குலமாக மைல்கணக்கில் பொறுமையாகத் தொடர்ந்து வந்து குற்றம் செய்தவரை நெருங்கும் அசாத்திய மனவலிமையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரை சொன்னவை நான் காமிக்ஸ் உலகிலிருந்து பெற்றவற்றில் பத்து சதம் கூட இல்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ரசனை சார்ந்த விமரிசன நோக்கை ஒதுக்கி விட்டே இதை எழுத ஆரம்பித்தேன். காமிக்ஸ்களை வாசிக்க ஆரம்பித்தபோது நான் அடைந்த அந்த உற்சாகத் துடிப்பை இப்போது அடைய முடியாதபடி அனுபவங்களால் உலர்ந்து, தடித்துப் போய்விட்டேன். ஆனால் இன்றும் காமிக்ஸ் ஒன்றைக் காணும்போது அந்த உவகையை நினைவில் மீட்டெடுக்க முடிகிறது. கடினமான தேங்காய் ஓட்டின் உள்ளே இனிப்பான சுவை நீர் போல மனதுக்குள் அந்தச் சிறுவனை காமிக்ஸ் இன்னும் உயிர்துடிப்புடன் வைத்திருக்கிறது. தொட்டி மீனை கடலில் விட்டால் அது அடையும் குறையாத பிரும்மாண்டத்தின் வியப்பை எனக்குக் காட்டியவை காமிக்ஸ்கள்தான். கற்பனையின் எல்லையைச் சீண்டியபடியே இருக்கும் ஒரு விஷயம் சிறு வயதில் கிடைப்பது எவ்வளவு பெரிய வரம்? மெக்ஸிகோவின் கிராமமும் அமெரிக்காவின் கிராமமும் எப்படியெல்லாம் வேறுபடுகின்றன என்பதில் தொடங்கி அமெரிக்க உள்நாட்டுப் போர்கள், இரண்டாம் உலகப் போர், தங்க வேட்டை காலம், அமெரிக்க ரயில் கட்டுமானம், பழங்குடியினப் போராட்டங்கள் என வரலாறுகள் எனக்கு பாடப்புத்தகங்களுக்கு முன்பே அறிமுகமாகி விட்டன. மா டால்டன், ஜேன் போன்றோர் உண்மை கதைமாந்தர் என்பதை காமிக்ஸ் மூலம் வாசித்த பிறகு ஒரு சராசரி அமெரிக்கனை விட அமெரிக்காவின் மாற்று வரலாற்றை அறிந்தவனாகி விடுகிறேன்.

குழந்தைகள், சிறுவர்கள்தான் காமிக்ஸ் வாசிப்பார்கள் என்பது பல்லில்லாதவன்தான் இட்லி சாப்பிடுவான் என்று சொல்வது போல. குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவனாக மாறும் வயதில்தான் காமிக்ஸ் தன் மாயத்தைச் சரியாகச் செய்ய ஆரம்பிக்கும். தன்னையும் ஒரு ஆளுமையாக ஆக்கிக்கொள்ளும் கற்பனை முளைவிட ஆரம்பிக்கும் வயதில்தான் இவ்வளவு விதவிதமான ஆளுமைகளை காமிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சிறுவனுக்கு அவன் எவ்விதத்திலும் பார்த்திராத நிலப்பரப்பை, தேசத்தை, வாழ்க்கை முறைகளை, அதன் சவால்களை, பண்பாட்டை, நாகரிகத்தை, விழுமியங்களை அறிமுகப்படுத்தி விடுகிறது. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள அவன் தன் கற்பனையை மட்டுமே நம்பி யூகித்து அதிலேயே வாழ்ந்து வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் அவற்றை ஒப்புநோக்கிச் சரிசெய்து… எவ்வளவு சுவாரசியமாகி விடுகிறது வாழ்க்கைதான்.
ஒரு குழந்தையின் வாழ்வை இன்று கார்ட்டூன்/அனிமேஷன் படங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அதில் இருக்கும் பெரிய சிக்கலே அவற்றின் சலனங்கள், அதாவது அசைவுகள். ஒரு அசைவைக் கவனிக்கும் மனம் அசைவை மட்டுமே பின்தொடரும். பின்தொடர நமக்குத் தேவைப்படுவது கவனக் குவிப்பே தவிர கற்பனை அல்ல. காமிக்ஸ்களும் வரைகலையின் ஒரு வகைப்பாடுதான் என்றாலும் ஒரு அசைவை உறையச் செய்து நமக்கு அளிப்பவை. அந்த உறைவுக்கு முன்பையும், பின்பையும் நாம் நம் கற்பனை கொண்டே நிகழ்த்திக்கொள்ள முடியும். அதாவது புத்தகத்தின் பக்கங்களில் உறைந்துள்ள அசைவுகள் சலனம் பெற்று நிகழ ஆரம்பிப்பது நம் மனங்களில். கற்பனையைப் பயிற்சி செய்ய இதைவிடச் சிறந்த ஒன்றை அளிக்க முடியுமா?

ஒரு சிறுவனுக்கோ, சிறுமிக்கோ அளிக்கப்படும் காமிக்ஸைப் போல அவர்களின் வாழ்நாள் முழுதும் தொடரும் இனிமையான பரிசு வேறொன்றில்லை. வயதால் மட்டுமல்ல, வாசகனாகவும் சிறுவருக்கு உரிய கண்களையும் கற்பனையையும் பெற்றால் மட்டுமே பேரிலக்கியங்கள் வாசிப்பதும் சாத்தியமாகும். நான் இன்றுவரை காமிக்ஸ்களின் ரசிகன். என் கனவுகளில் இன்றும் மாடஸ்டியும், டெக்ஸ் வில்லரும், கேப்டன் டைகரும், லக்கி லூக்கும் நிறைந்திருக்கிறார்கள். அஸ்தமனச் சூரியனை நோக்கி என் தனிப் பயணம் தொடரும் நொடியில் கூட என் நினைவின் உதடுகள் வழியே “தனிமையே என் துணைவன்” எனும் பாட்டு கசிந்து வரும். அது இன்னொரு காமிக்ஸ் வாசகனுக்குத்தான் கேட்கும்.

***

ஜா.ராஜகோபாலன் – தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவர். பி.காம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.ஏ மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் பயின்ற இவர் ஆட்டத்தின் ஐந்து விதிகள்(தமிழினி), எப்போதும் முடிவிலே இன்பங்கள் (புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு) என இரண்டு நூல்களின் ஆசிரியர். மின்னஞ்சல்: rjgpaltrainer@gmail.com

அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியுடன் ஒரு நேர்காணல் – தமிழில் பாரதிராஜா

0

( 2011ல் நடந்த ஓர் உரையாடல் சமகாலத்தின் கலைச்சூழலுக்குத் தேவைப்படும் எத்தனையோ விசயங்களைக் காண்பிக்கிறது)

“நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்”: அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்
ஜோ மெக்கலக் | ஆகஸ்ட் 24, 2011

து வேடிக்கையானதுதான், அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கி அறிமுகமே தேவையில்லாத ஒரு தலைசிறந்த மனிதரா அல்லது அவரது எண்ணற்ற ஈடுபாடுகளின் பரப்பு தெளிவான சுற்றுக்கோடு ஒன்றை வரையக் கோருகிறதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எனது இந்தச் சமரசத்தை மன்னியுங்கள். திரைப்படம், சர்க்கஸ், இசை, ஊமம்(mime), கவிதை, நாடகம், டாரோ, அதற்கு மேல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக வரைகதை (காமிக்ஸ்) ஆகியவற்றில் முதுவரான, 82 வயதான சிலி நாட்டின் மைந்தர், நான்கு மொழிகளில் புதிய அல்லது கூடிய விரைவில் வெளிவரப்போகிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெருமைக்குரிய இவரை இதுதான் என்று குறிப்பிட்டு வகைப்படுத்துவது பெரும் சிரமமாகவே உள்ளது. ஸ்பானிய வாசகர்கள் அவரது சமீபத்திய உரைநடைப் படைப்பான ‘மெட்டா ஹினியாலோஹியா’ (ஆங்கிலத்தில் ‘மெட்டாஜீனியாலஜி’) (மரியான் கோஸ்டாவுடன் இணைந்து எழுதியது) எனும் நூலை விரைவில் வாசித்து அனுபவிக்கலாம். இது, 2010-இல் வெளிவந்த ‘இன்னர் ட்ரெடிஷன்ஸ்’ (Inner Traditions) நிறுவனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான Psychomagic: The Transformative Power of Shamanic Psychotherapy (சைக்கோமேஜிக்: ஷேமனிய உளவியல் சிகிச்சையின் பெருமாற்ற ஆற்றல்) எனும் நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள ‘சைக்கோமேஜிக்’ (உளவியல் மாயவித்தை) என்னும் கருத்துருவை மேலும் விரிவாக்கும் வகையில் இருக்கும். அதே வேளையில் ஜெர்மானியக் கலை நூல் வெளியீட்டாளர் ஹாட்ய கெண்ட்ஸ் ஃபெலாக் (Hatje Cantz Verlag), ஃபிராங்க் ஹெர்பர்ட்டின் ‘டூன்’ (Dune) புதினத்தைத் திரைப்படமாகத் தழுவுவதற்கான தயாரிப்பு வேலைகளின் போது தொகுக்கப்பட்ட 1974 குறிப்பேட்டிலிருந்து 48-பக்க மீள்நகல் சாரத்தை (facsimile extract) எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். கைவிடப்பட்ட இந்தப் பணியின் போதுதான் ஜோடராவ்ஸ்கி ஓவியர் ஜான் “மோபியஸ்” ஜீஹோ (Jean “Moebius” Giraud)-வைச் சந்தித்தார். இந்த உறவு ஜோடராவ்ஸ்கியை பிரெஞ்சு வரைகதைக்கு இட்டுச் சென்றது. ஃபைனல் இன்கல் (Final Incal)-இன் இரண்டாவது தொகுதி (ஓவியம்: ஹோஸே லட்ரான்) அவருடைய சமீபத்திய பிரெஞ்சுப் படைப்பு. இது, 2000-களில் நவீனமயமாக்க முயன்று தோல்வி கண்ட பிறகு அதன் அசல் 1980-88 வண்ணங்களுடனேயே மீட்டெடுக்கப்பட்ட, இப்போது ஆங்கிலத்தில் ‘The Incal Classic Collection’ (இன்கல் செவ்வியல் தொகுப்பு) என்று ஒரே அட்டையின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ள பரந்த, டாரோ மயமான, மோபியஸ் ஓவியத்தில் வெளிவந்த அறிவியற் புனைவுத் தொடரின் தொடர்ச்சி.

இன்னமும் வரைகதையாளர் ஜோடராவ்ஸ்கியைப் பற்றிய சித்திரத்தை முழுமையாகக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. 1967 முதல் 1973 வரை அவர் ஃபேபுலஸ் பேனிகாஸ் (2006-இல் க்ரியாபோ [Grijalbo]-வால் ஸ்பானிஷ் மொழியில் சேகரிக்கப்பட்டது) தொடரை எழுதி வரைந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ஃபெர்னாண்டோ அர்ரபல் மற்றும் ரோலண்ட் டாப்பருடன் அவர் உருவாக்கிய பீதி இயக்கத்திற்காகப் (Panic Movement) பெயரிடப்பட்ட ஒரு மெக்சிகன் வார இதழ் சிறப்புப் பகுதி. இது, 1966 வரை பின்னோக்கிப் போகும் ஓவியர் மானுவல் மோரோவுடன் இவர் இணைந்து உருவாக்கிய வரைகதைகள் உட்பட சமீபத்தில் மெக்சிகோ சிட்டியில் உள்ள கரில்லோ கில் கலை அருங்காட்சியகத்தில் (Museo de Arte Carrillo Gil) நடைபெற்ற அவரது ‘கபிநேத்தே கிரஃபிகோ’ (Gabinete Gráfico) கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மற்ற மெக்சிகன் பணிகளுடன் இணைந்தே உருவாக்கப்பட்டது. ஜோடராவ்ஸ்கியின் பிரெஞ்சுப் படைப்புகளின் ஆங்கிலப் பதிப்புகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, இந்தப் பணிகள் தனியாக மொழிபெயர்க்கப்படாமலேயே கிடக்கின்றன. அமெரிக்காவில் ‘பாண்ட் டிசினி’ (bandes dessinées) தொடரை உள்ளூர் மயப்படுத்த முயன்ற பணி போலவே நிறுத்தலும் தொடங்கலுமாக – தனித்த ஆல்பங்கள், பத்திரிகைத் தொடர்கள், வரைகதை நூல் வரிசைகள், சூப்பர் ஹீரோ பதிப்பாளர்களுடனான கூட்டணிகளாக – ஊறிக் கிடக்கின்றன.

தடித்த, தனிப்பட்ட தொடர்களின் விரிவான தொகுப்புகளுக்கும் ஹுமனாய்ட்ஸ் (Humanoids, Inc.) வெளியீடுகளுக்குமே இப்போது விருப்பம் அதிகமாக இருக்கிறது. ஹுமனாய்ட்ஸ் இன்க் என்பது, 1974-ஆம் ஆண்டு மோபியஸ் இணைந்து நிறுவிய நீடித்து நிற்கும் பிரெஞ்சு வெளியீட்டாளரான ‘லேஸ் ஹுமனோய்டஸ் அஸோஸியேஸ்’ (Les Humanoïdes Associés)-இன் வட அமெரிக்கப் பிரிவு. ஹுமனாய்ட்ஸ், இன்கல் தொடரின் இடைவிளைவான ‘த மெட்டாபேரன்ஸ்’ (ஓவியம் – ஹுவான் கிமெனெஸ்), ‘த டெக்னோ பிரீஸ்ட்ஸ்’ (ஃபிரெட் பெல்ட்ரானின் டிஜிட்டல் கூறுகளுடன் ஜோரன் ஜான்ஜெடோவ் வரைந்தது) ஆகியவற்றுடன் டார்க் ஹார்ஸ் நிறுவனம் (தொடக்கத்தில் அரைகுறையாக) வெளியிட்ட – மோபியஸ் உடன் இணைந்து பணியாற்றி வெளியான ‘மேட்வுமன் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்’ (Madwoman of the Sacred Heart), பல்கலைஞர் (multi-artist) குறும்படத் தொகுப்பான அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியின் ‘ஸ்க்ரீமிங் பிளானட்’ (முன்பு இது சாத்தியப்பட்ட காலத்தில் இதன் பகுதிகள் ‘மெட்டல் உஹ்லான்-இன் தனிப்பட்ட வரைகதை நூல் வெளியீடுகள் நெடுகவும் தொகுக்கப்பட்டன) ஆகியவற்றையும் முறையே மொழிபெயர்த்து முடித்தது. ஜோடராவ்ஸ்கியின் குடும்பம், உளவியல், வரைகதைகள் வடிவத்தில் கொடுக்கும் சாகசமிகு படவியல் (iconography) ஆகியவற்றின் மீதான கவர்ச்சியின் மிக விரிவான வெளிப்பாடான ‘மெட்டாபேரன்ஸ்-இன் அனைத்துமடங்கிய பதிப்பு கூடிய விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையளிக்கும் அதே வேளையில், இன்றைய நாள், துப்பாக்கிச் சண்டைத் தொடரான ‘பவுன்சர்’ (ஓவியம் – ஃபிரன்ஸ்வா பூச் [François Boucq])-இலிருந்து ஒரு புதிய பகுதி வெளியிடப்படுவதைக் காண்கிறது. இதற்கிடையில் — குடும்பக் கருப்பொருள் விஷயத்தில் — அடிமைத்தளை அறுத்த மெட்டல் உஹ்லானின் அரைச் சகோதரர் ‘ஹெவி மெட்டல்’ (Heavy Metal), ஜோடராவ்ஸ்கியின் கத்தோலிக்கக் கலவரப் படைப்பான போஜா (Borgia) (ஓவியம் – மீலோ மனாரா)-வின் நான்காவதும் இறுதியுமான தவணையை எதிர்பார்க்கிறது. அதே வேளையில், அதன் ஆவணங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தைய அவரது மெக்சிகன் வரைகதையில் ஒன்றான அனிபால் 5-இன் 1990-களில் நிகழ்ந்த இரு தொகுதி மறுமலர்ச்சியை (ஓவியம்: ஜார்ஜ் பெஸ்) மறைக்கின்றன. பையப் பைய, தாரகைகள் கண்ணுக்குத் தட்டுப்படத் தொடங்குகின்றன.

பின்வருவது மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட ஒரு குறுகிய நேர்காணல்; எவ்வளவு விலாவரியான கேள்விகளின் மூலமும் வரைகதை உலகின் மாபெரும் வாழ்வின் அகலத்தை உள்ளடக்கிவிட முடியாது. இருப்பினும், ஜோடராவ்ஸ்கி ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இருக்கிறார், திருகல் பேச்சைப் பொறுத்துக்கொள்ள விருப்பமில்லாத குதூகலத்தோடும் இருக்கிறார். இந்தக் கலைஞரிடம் அவருக்கென்று ஒரு பதிலளிக்கும் பாணி இருக்கிறது. அதைப் பாதுகாக்கும் வகையில், ஆங்காங்கே சில சிறிய அச்சுக்கலைத் திருத்தங்கள் மட்டும் செய்துள்ளேன். நீங்கள் கூடிய விரைவில் மீண்டும் அவரிடமிருந்து கேள்விப்படுவீர்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், ஆனால் அது நிச்சயமாக வேறொரு வடிவத்திலோ வேறொரு மொழியிலோ – கண்டிப்பாக வேறோர் இடத்திலோ இருக்கும் என்பதையும் சொல்ல முடியும்.

***

மெக்கலக்: வரைகதை (காமிக்ஸ்) உடனான உங்களின் முதல் அனுபவங்களுடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். சிலியிலோ பிரான்சிலோ நீங்கள் குழந்தையாகவோ மாணவராகவோ இருந்தபோது, அல்லது கவிதைகள் இயற்றுகையிலோ ஊமை நாடகங்களில் நடிக்கும் போதோ, நீங்கள் வரைகதைகள் வாசித்தீர்களா?

ஜோடராவ்ஸ்கி: நான் 7 வயதில் வரைகதைகள் படிக்க ஆரம்பித்தேன், சிலியில் அமெரிக்க இதழ்களின் ஞாயிறு பக்கங்களை வெளியிட்டனர்: மந்திரவாதி மாண்ட்ரேக், இளவரசர் வேலியண்ட் (Prince Valiant), ஃப்ளாஷ் கார்டன் (Flash Gordon), போபியே, டார்சன் போன்றவை… 14 வயதில் வில் ஈஸ்னரின் (Will Eisner) ‘ஸ்பிரிட் (Spirit) மீது எனக்குப் பைத்தியம் பிடித்தது.

மெக்கலக்: நீங்கள் ஃபெர்னாண்டோ அர்ரபல், ரோலண்ட் டாப்பர் ஆகியோருடன் இணைந்து பீதி இயக்கத்தை நிறுவிய பிறகு, மெக்சிகோவிலிருந்து உங்கள் ஆரம்பகால வரைகதைகள் வந்தன. குறிப்பாக, 1966-இல் ஓவியர் மானுவல் மோரோவுடன் இணைந்து செய்த அனிபால் 5. அவருடன் இணைந்து அடுத்து நீங்கள் ‘லோஸ் இன்சோபோர்டாப்லே பொர்போயா’(Los insoportables Borbolla) செய்தீர்கள். இந்த வெளியீடுகள் எப்படி உருவாகின? மோரோவுடனான உங்கள் பணி, உங்கள் பிற்கால வரைகதைக் கூட்டுப்பணிகளில் இருந்து வேறுபட்டதா?

ஜோடராவ்ஸ்கி: மெக்சிகோவில் வரைகதைத் துறை பிரபலமாகவும் குழந்தைத்தனமாகவும் மெக்சிகனியமாகவும் இருந்தது. என் மேடை நாடகங்களின் புண்ணியத்தில், நோவாரோ பதிப்புகளின் வெளியீட்டு இயக்குனர் ஒருவரை என் ரசிகராகப் பெற்றேன். அவரை ஓர் அறிவியற் புனைவுத் தொடர் உருவாக்கச் சம்மதிக்க வைத்தேன். 12 எண்ணங்கள் வெளியிட முடிவு செய்தோம். பதிப்பாசிரியர்கள், என்ன செய்கிறோம் என்று புரியாமல், ஜேம்ஸ் பாண்டைப் போலப் போலி செய்யும் எனக்குப் பிடிக்காத ஒரு நடிகரின் படங்களை முன் அட்டையிலும், மடப்பேரழகி ஒருத்தியைப் பின் அட்டையிலும் வெளியிட்டனர். அதை மாற்றுவதற்குச் சண்டை போட்டு, 6-ஆவது எண்ணத்தின் அட்டைப்படம் மோரோதான் வரைவார் என்று பேசி முடித்தேன். அதன் மூலம் ஒரு நல்லது நடந்தது என்றால் ஒரு கேடும் ஏற்பட்டது. நோவாரோவின் உரிமையாளர் என் கதைகளைப் படித்துவிட்டு, மோரோவின் ஓவியங்கள் தொடரைத் திடீரென முடித்துவிடுகின்றன என்று கோளாறு சொன்னார். மோரோ ஒரு கலைஞராக மதிக்கப்படாமல், ஓர் ஓவியப் பணியாளராக – ஊழியராக நடத்தப்பட்டார். அவர்கள் வரையச் சொன்ன எதையும் அவர் வரைய வேண்டும். ‘அனிபால் 5’ வரைவது அவருக்கு ஒரு வகையான விடுதலையாக இருந்தது.

மெக்கலக்: 67-இல், ‘ஃபாண்டோ ஒய் லிஸ்’(Fando y Lis), ‘எல் டோபோ’(El Topo), ‘த ஹோலி மௌண்டைன்’(The Holy Mountain) போன்ற உங்கள் திரைப்படங்களோடு சேர்த்து, அவற்றுக்கு இணையாக, ‘எல் ஹெரால்டோ டி மெக்ஸிகோ’-வுக்கான (El Heraldo de México) ஞாயிறு வரைகதை ‘ஃபேபுலஸ் பேனிகாஸ்’ வரையத் தொடங்கினீர்கள். பீதி இயக்கத்துடன் ஒத்ததிர்ந்த வரைகதைகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தரம் உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி: ஒரு வகையில் பீதி இயக்கம் ஒரு கேலிக்கூத்து. டாப்பர் அர்ரபலும், நானும், நாங்கள் செய்த எல்லாவற்றையுமே பீதி என்று பெயரிட்டு அழைத்தோம். அது ஒரு கோட்பாடு என்று சொல்வதை விட ஒரு வணிகக்குறி (பிராண்ட்) போன்றது எனலாம். ‘அனிபால் 5’ ஒரு கலை முயற்சி, தொழில் முயற்சி அல்ல. அதை நான் நோவாரோவுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன்.

மெக்கலக்: உங்கள் பெரும்பாலான வரைகதைகள் பிற ஓவியர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டவை. திரைப்படத் தயாரிப்பிலோ நாடகங்கள் இயக்குவதிலோ இல்லாத ஒரு நெருக்கம் வரைகதைகள் படைப்பதில் இணைந்து இயங்கும் போது இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது, மாறாக, ஒரே ஒருவருடன் பணி புரியும் போது கொடுக்கல் வாங்கல் கூடுதலாக உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி: ஆம், வரைகதை படைப்பது ஒரு சொர்க்க உணர்வு. அதுவும் உங்களோடு பணி புரியும் ஓவியக் கலைஞர் போற்றத்தக்கவராக இருந்தால் அது தெளிவாகத் தெரியும். இந்தப் பணியில் உங்கள் முதுகின் மேல் பேராசை பிடித்த தயாரிப்பாளர் கிடையாது. நீங்கள் விரும்பும் அனைத்தையும் பொருளாதார வரம்புகள் இல்லாமல் நீங்கள் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு 10000 அண்ட விண்கலங்கள் வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அதற்காகும் செலவு, ஒரு குதிரை வரைவதற்கு ஆகும் செலவை விட அதிகம் ஆகாது.

மெக்கலக்: மோபியஸ் உடனான உங்கள் முதல் வரைகதை 78-இல் வெளிவந்த ‘லே யூஹ் டு ஷாஹ்’. இது, அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு மோபியஸ் இணைந்து நிறுவியிருந்த லேஸ் ‘ஹுமனோய்ட்ஸ் அஸோஸியேஸ்’(Les Humanoïdes Associés)-க்கு நீங்கள் இலவசமாகக் கொடுத்தது போன்ற நூல். மோபியஸ் உடன் ஒரு வரைகதை இணைந்துருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருந்ததாக நீங்கள் முன்பே குறிப்பிட்டுள்ளீர்கள் – மெட்டல் உஹ்லானில் உள்ளது போன்ற அதிகற்பனை – அடிமன வழியான மிகைபுனைவு வகையை நோக்கிய பிரெஞ்சு வரைகதைகளின் வளர்ச்சியை கவனித்துக்கொண்டு வந்தீர்களா?

ஜோடராவ்ஸ்கி: ஆம், மெட்டல் உஹ்லானின் அடித்தளத்தில் எனது கருத்துக்களையும் இணைத்து – சூப்பர்மேனின் விந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியே உள்நுழைந்து உடல் முழுக்கவும் சென்று தலைக்குப் போய் தலை வெடித்து வானளாவிய கட்டடம் ஒன்றைச் சிதறடிப்பது போல் நான் சூப்பர்மேனின் விந்து வெளிப்படலை விவரித்திருந்த “சூப்பர்மேனின் கலவி வாழ்க்கை” போன்ற புரட்சிகர வாசகங்களையும் இணைத்து – உருவாக்கினேன்.

மெக்கலக்: அதன் பின்பு நீங்கள் பல ஓவியர்களுடன் பல்வேறு கதைகளில் பணியாற்றியிருக்கிறீர்கள். ஓர் ஓவியர் அதை வரைவதற்கு முன்பு உங்கள் கதை எவ்வாறு தொடரப் போகிறது என்பது பற்றி உங்களுக்கு உறுதியான திட்டம் உள்ளதா அல்லது ஓவியர்களோடு இணைந்து பணி புரியும் செயல்பாட்டில் உங்கள் கதைகள் இன்னும் அதிகமாக உருப்பெறுகின்றனவா? ஓவியர்கள் அவர்களின் ஓவியங்களைப் படைக்கும் போது அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றுகிறீர்கள்?

ஜோடராவ்ஸ்கி: எனக்கென்று ஒரு திட்டம் இருக்கும். அத்தோடு நான் எழுதத் தொடங்கும் போது, இன்னும் பல புதிய யோசனைகள் வரும். நான் தினமும் ஓவியரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசவும் செய்வேன்.

மெக்கலக்: இன்கல், தற்போது அமெரிக்க வாசகர்களுக்கு ஒரு சுவையான தொடராக இருக்கிறது, ஏனெனில் இதுதான் ‘மெட்டாபேரன்ஸ்’ (Metabarons), ‘த டெக்னோப்ரீஸ்ட்ஸ்’ (The Technopriests) போன்ற உங்களின் பிற தொடர்களின் பிறப்பிடம். ஆண்டுகள் செல்லச் செல்ல, கூடுதலான விவரங்களும் வரலாறும் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள், அவற்றோடு இந்தப் ‘பகிரப்பட்ட பிரபஞ்சத்தை’ மறுபார்வை இடும்போது, அதைப் பற்றிய உங்கள் அணுகுமுறை மாறுவதாகக் காண்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி: அது ஒரு மரம் போல. வளர்வதை நிறுத்துவதே இல்லை.

மெக்கலக்: தொடக்கத்தில் மோபியஸின் வடிவமைப்புகளுக்கு நெருக்கமான பாணியில் ஜோரன் ஜான்ஜெடோவ் வரைந்த ‘அவண் எல் இன்கல்’(Avant l’Incal ) போன்ற பல இன்கலுக்கு நேரடியான தொடர்ச்சிகளும் உள்ளன. இந்தக் கதைகளை அவர்தான் முதலில் வரைந்தவர் என்பதால் மோபியஸின் வடிவமைப்புகளுக்கு நெருக்கமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ‘ஃபைனல் இன்கல்’ (Final Incal)-இல் லாட்ரான் உடனான உங்கள் கூட்டணியில் இது தாக்கம் செலுத்தியதா?

ஜோடராவ்ஸ்கி: ஆம், இந்தக் கதையை மோபியஸின் ஓவியங்களுக்கு நெருக்கமாக வைத்திருப்பது அவசியம், ஆனால் அவருடைய ஓவியங்களை அப்படியே நகலெடுத்து செழுமையாக்கியதாக இருக்கக் கூடாது.

மெக்கலக்: இன்கல், அவண் எல் இன்கல் ஆகிய இரண்டும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன, ஒரு கட்டத்தில் மோபியஸ், ஜான்ஜெடோவ் ஆகியோரின் ஓவியங்களின் மேல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய, கணிசமாக வேறுபட்ட வண்ணங்களுடன் உள்ளன. இந்தக் காட்சி மாற்றங்கள் குறித்து நீங்கள் ஆலோசிக்கப்பட்டீர்களா? ஒரு வரைகதை வெளியிடப்படுவதோடு அது “முடிந்துவிட்டது” என்று நினைக்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி: ஹுமனாய்ட்ஸ் ஆசிரியர் இளம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் வகையில் 3டி பாணியுடன் வரைகதையின் நிறங்களை மாற்றினார். எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் வரைகதைகள் என்பவை திரைப்படங்களைப் போலவே ஒரு தொழிற் கலை, அதுவும் அதன் தயாரிப்புகளை விற்க வேண்டும். ஆனால் காலம் நானே சரி என்றது. பார்வையாளர்கள் அசல் வண்ணங்களையே விரும்புகிறார்கள்.

மெக்கலக்: தொடர்புடைய ஒன்று, உங்கள் பல வரைகதைகள் ஒவ்வொரு ஆல்பமும் ஒரு தனித்த கதையைச் சொல்வது போலக் கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். எடுத்துக்காட்டாக, மெட்டாபேரன்ஸின் ஒவ்வோர் அத்தியாயமும் ‘டோண்டோ’(Tonto) கதாபாத்திரம் ஒரு கதையைத் தொடங்கி முyடிப்பது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘தி டெக்னோப்ரீஸ்ட்ஸ்’-இல் அல்பினோவின் விவரிப்புகளிலும் இதுவே நடக்கிறது. ‘மேட்வுமன் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்’-இல் கூட, காலப்போக்கில், அத்தியாயங்களுக்கு இடையில் மோபியஸின் வரைபடங்களில் ஒரு தனித்துவமான மாற்றம் உள்ளது. தனிப்பட்ட வரைகதை ஆல்பங்கள், அவை ஒரு பெரிய கதையில் ஓர் அத்தியாயம் மட்டும் என்று இருந்தால் கூட, தனியாக அனுபவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும் அமெரிக்காவில் உள்ள வாசகர்கள் இந்தத் தொடர்களைப் பெரிய சர்வபுல (ஓம்னிபஸ்) நூல்களாக மட்டுமே வாசிப்பதில் சில இன்பத்தை இழக்கிறார்களா?

ஜோடராவ்ஸ்கி: இந்தக் கேள்வி எனக்கு மிகவும் நீளமானதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது. வேண்டாம். விடுங்க.

மெக்கலக்: 2000-களில் மெட்டல் உஹ்லான் புத்துயிர் பெற்ற போது, ஒரு கோளின் துண்டு பல்வேறு உலகங்களைக் கடந்து செல்லும் கருப்பொருளில் பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக எழுதினீர்கள் (பின்னர் அவை அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியின் ‘ஸ்க்ரீமிங் பிளானட்’-இல் சேகரிக்கப்பட்டன). பல கதைகளை எழுதுவதற்கு முன்பு நீங்கள் ஓவியர்களின் படைப்பு மாதிரிகளைப் பார்க்கவில்லை என்று மெட்டல் உஹ்லானின் பதிப்பாசிரியர்கள் குறிப்பிட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன், இது நீங்கள் வழக்கமாக ஓவியர்களுடன் பணிபுரியும் விதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தக் கதைகள் எப்படி உருப்பெற்றன? சிறிய மெட்டல் உஹ்லான் துண்டுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை என்று ஏதேனும் உள்ளனவா?

ஜோடராவ்ஸ்கி: ஓவியர்களின் பண்புகளையும் வரம்புகளையும் பதிப்பாசிரியர் என்னிடம் சொல்லிவிட்டார். எடுத்துக்காட்டாக, ஒருவர் கதாபாத்திரங்களை நன்றாக வரைந்தார், ஆனால் நகரங்களை ஒழுங்காக வரையவில்லை. அதனால் பாலைவனத்திலேயே நடக்கும் கதை ஒன்றைக் கண்டுபிடித்தேன். இன்னொருவருக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியவில்லை, அதனால் மனிதர்களே இல்லாத ஒரு ரோபோ உலகத்தைக் கண்டுபிடித்தேன். நான் அதை ஒரு சவாலாக, விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.

மெக்கலக்: வீடியோ கேம்களை, தொழிற்துறையின் வற்புறுத்தலால் வக்கிரப்படுத்தப்பட்ட படைப்பாக்க வெளிப்பாடாகவும், மனித உறவுகளை விழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கவலையாகவும் ‘டெக்னோப்ரீஸ்ட்ஸ்’முழுக்கக் காட்டப்படும் உருவகத்தை நான் பெரிதும் ரசித்தேன். காலப்போக்கிலும் தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாகவும் வரைகதைத் துறையின் வழிப்போக்கு மாறி இருக்கிறதா?

ஜோடராவ்ஸ்கி: எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது, வரைகதைகள் மட்டுமல்ல, மனிதர்களின் மூளையும் கூட மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

மெக்கலக்: ஒருமுறை நீங்கள் திரைத்துறை மாயவித்தைக்காரரா என்று கேட்டதற்கு, நீங்கள் மிகக் குறைவான படங்களையே தயாரித்துள்ளீர்கள் என்றும், திரைப்படத் தயாரிப்பு கராத்தே போன்றது என்றும், மாயவித்தையை வெளிக்கொணர நீங்கள் குத்து குத்தென்று குத்த வேண்டும் என்றும் பதிலளித்தீர்கள். நீங்கள் வரைகதைகளின் மாயவித்தைக்காரராக உங்களை நினைக்கிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி: நான் என்னை ஒரு மேதையாகவும் புனித வேசியாகவும் உணர்கிறேன்.

மெக்கலக்: நீங்கள் பல புதிய வரைகதைகளைப் படிக்கிறீர்களா? குறிப்பாக நீங்கள் ரசித்த ஏதேனும் உள்ளதா?

ஜோடராவ்ஸ்கி: இளவரசர் வேலியண்ட் (Prince Valiant), வில் ஐஸ்னரின் கிராஃபிக் நாவல்கள், [கட்சுஹிரோ] ஓத்தொமோவின் ‘அகிரா’(Akira).

மெக்கலக்: இறுதியாக, இன்று வரைகதைகளை உருவாக்கும் கலைஞர்களுக்கு நீங்கள் ஏதாவது கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

ஜோடராவ்ஸ்கி: சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்!!! உங்கள் சொந்தக் கனவுகளைச் சொல்லுங்கள்.

எழுதியவர்
ஜோ மெக்கலக் இடுகையிடப்பட்டது ஆகஸ்ட் 24, 2011

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com