பறித்திடாத பூ
அந்த ஆளுயர செம்பருத்திச் செடியில்
எத்தனையோ முறை நான்
பூப்பறித்திருக்கிறேன்
அதிலெதுவும் இப்போது
என்னிடம் இல்லை
மரம்தான் வைத்திருக்கிறது
இன்னும் அந்தப் பூவை
ஒவ்வொரு நாளும்
அதை மலர்த்திக் காட்டி
என்னை அழைக்கும்
ஒவ்வொரு முறையும்
நான் பறித்துவிட்டதாய்
நினைக்கையில்
நீர்ப்பறவை போல மூழ்கி
மறுநாள்
மற்றொரிடத்தில் பூக்கும்
இன்னும் நான்
பறித்திடாத பூ
***
ருசி
ஒளி
நிழல்
ஒளி
நிழல்
தன்னைப்
பிரட்டி
தன்னைப்
பிரட்டி
வரு
கிறது
ஒரு
இலை
நிதானமாக
பசித்திருக்கிறது
நிலம்
***
எனது வேலை
எனது வேலைக்கு
நீளமான உறுதியான கைகள்
எட்டுப் பக்கமும் கால்கள்
வேட்டை விலங்கின் கண்கள்
இரையின் காதுகள்
ஆனாலும்
சின்னப் பிரிவுக்கும் வாடும்
வீட்டுச்செடியின் வாசனை அதற்கு.
ஒருநாள் அதன்
உடலிற்கு பொருந்தாத
இரண்டு குட்டிச்சிறகுகள் அதன்மீது
முளைத்திருப்பதைக் கண்டேன்
அதனிடம் சொன்னதும்
கிக்கிரி பிக்கிரியென சிரிப்பு
ஒரே துள்ளாட்டம்;
பறந்து பறந்து பார்த்தது
ஒரு கோழியைப் போல
பொத்திப்பொத்தி நான்தான்
அதை பத்திரமாகப்
பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது
வெகுநெடுநாட்கள் கழித்து
வேலைக்குள் மூழ்கியிருந்த
ஒரு மழைநாளில்
சட்டென தோகை விரித்து
ஆடத்தொடங்கியது.
***
ஆனந்த் குமார் தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். இவரது முதல் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. 2022க்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். குழந்தைகள் புகைப்படக் கலைஞரான இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: ananskumar@gmail.com