Tuesday, April 23, 2024

அனந்தபத்மன்

சார்பினோ டாலி

ரையில் கிடந்த கால்சராயை எடுத்து அணிந்து கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்த அனந்தன் சுவரில் பொருத்தியிருந்த நீர் வடிகட்டிக் கலனின் திறப்பைத் திறந்து போத்தலை நிரப்பினான். தண்ணீர் போத்தலின் கழுத்து முட்ட நிரம்பவே, அண்ணாந்து குடித்து மீண்டும் நிரப்பிக் கொண்டான்.

குளியல் அறையில் நீர்விழும் சலசலப்பு கேட்டபடி இருந்தது. அனு உள்ளிருந்தாள். வீட்டில் ஒரு துர்சம்பவம் நடந்திருக்க வேண்டியது, அனுவின் நல்ல நேரத்திற்கு இன்று தப்பிவிட்டாள். அலுவலக பரபரப்பிற்கிடையில் அவள் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்தியைத் திறந்ததும் உண்மையிலேயே மிரண்டு போய்விட்டான். ஆறடி நீளத்தில் தலை நசுங்கிக் கிடக்கும் பாம்பினுடைய புகைப்படம். கருநீலம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலின் குறுக்காக வெண்ணிறக் கோடுகளுடன் இருந்தது. எட்டடி விரியன்.

அனுவை அழைத்தான். “எத்தன வாட்டி சொன்னாலும் ஒனக்குப் புரியாது” என்று கத்தினான். திருமணம் முடிந்து வந்த நாளில் இருந்து அனந்தன் இவ்வளவு கோபப்பட்டு அனு பார்த்ததில்லை.

சிந்தும் பருக்கைகளைத் தேடி எலி வரும், அதன் பின்னாலேயே பாம்பு வரும் என்று ஓராயிரம் முறை சொல்லியிருப்பான். செவுட்டுப் பாம்பாட்டம் தலையைத் தலையை ஆட்டிவிட்டு இருந்து விட்டாள்.

“பத்மா வீட்டுல இல்லையா?” அனந்தனின் கோப உஷ்ணத்தில் ஃபோன் சூடாயிற்று.

“அக்கா இருக்காங்க..”

“என்ன சொன்னா?”

“நல்ல அழுதுட்டாங்க. எனக்கு என்னவோப் போல ஆயிட்டு. சாயுங்காலம் அவுங்க கூட நாகராஜா கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்.”

“சரி” என்று அழைப்பைத் துண்டித்தான். பத்மாக்கா என்று பேச்சில் காட்டும் மரியாதை இன்று கோபத்தில் விடுபட்டதை அனு குழப்பத்துடன் மனதில் குறித்துக் கொண்டாள்.

அவர்கள் வசிக்கும் வீட்டு உடைமையாளரின் தகப்பனார் காலத்தில் தென்னந்தோப்பாக இருந்த நிலத்தை திருத்தி, வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தோப்பிருந்த ஞாபகத்திற்காக மூன்று மரங்களை விட்டு வைத்திருக்கிறார். மேலும் கீழுமாக இரண்டு வீடுகள். மேல் தளத்தில் பத்மா, மங்கள நாதன் தம்பதியினர் இரு சிறு மகள்களுடன் வசிக்க அனுவும், அனந்த பத்பநாபனும் கீழ் வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதுமணத் தம்பதிகளாகக் குடி வந்தனர்.

தினமும் முதல் கரண்டி சோற்றினை புற வாசலின் பின் கட்டு மதில் மீது வைத்த பிறகே சோறு விளம்பவோ, உண்ணவோ செய்வாள் அனு. அவள் கையால் சாப்பிட்டுப் பழகிய காகங்களும் அணிலும் வெயில் உச்சிக்கு ஏறியதும் குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். அனுவிற்கு வீட்டில் ஆட்கள் இருக்க வேண்டுமென்று இல்லை. அவள் பாட்டிற்கு விருந்திற்கு வரும் பட்சிகளுடன் பேசியபடி இருப்பாள்.

இன்றும் அப்படித் தான் நடந்திருக்கிறது. க்கிக்..க்கிக்..க்கிக்.. என்று அணில்கள் வாய்விடாமல் சத்தம் எழுப்பிய படியிருக்க சமையல் அறையின் கண்ணாடி சன்னலில் கருப்பாக சிறிய உருவம் வந்து முட்டி விலகிய படி இருந்திருக்கிறது.

“பொறு.. அதுக்குள்ள பசிச்சுடுச்சா.. என்ன தனியா வந்துருக்க? எங்க? காக்க பட்டாளத்த ஒன்னும் காணோம்?” என்று பேச்சு கொடுத்தபடி, கரண்டிச் சோறெடுத்துச் சென்றவள் சன்னலில் இருந்து வழுக்கி விழுந்த பாம்பைக் கண்டு திகைத்துப் போனாள். ‘பிள்ளைக இருக்க இடம், வீட்டுக்குள்ள வந்துட்டா என்ன ஆகும்’ என்ற எண்ணம் தோன்றிய மறு கணம் அருகில் தென்னை மர வரப்பில் பதித்திருந்த செங்கல்லை எடுத்து எறிந்ததில் பாம்பின் தலை பெயர்ந்துவிட்டது.

இன்று வெள்ளிக்கிழமை. பத்மாவிற்கு விடுமுறை என்ற ஞாபகம் வரவே, “பத்மாக்கா.. ஏ பத்மாக்கா சீக்கிரம் கீழ இறங்கி வாங்க” என்று குரல் கொடுத்தாள்.

அனுவின் முன் உயிர் போகும் வேதனையில் புழுவென புரண்டு கொண்டிருந்த பாம்பினைக் கண்டு “ஆ… எனக்க அனந்தா” என்று உடல் நடுங்க ஓடி வந்த பத்மா மண்டியிட்டமர்ந்தாள்.

“என்ன காரியம் பண்ணிட்ட அனு” என்று கண்ணீர் வழிய கேட்ட பத்மாவிற்கு என்ன பதில் கூறுவது என்று அறியாமல், பதறினாள் அனு.

“இல்லக்கா, விஷப் பாம்பு மாதிரி இருக்கு. யாரையும் கடிச்சுடுச்சின்னா”

“நாகரோயில்ல யார பாம்பு கடிச்சுருக்கு?” என்றாள் மூக்கு விடைக்க.

அசைவு நின்ற பாம்பை குழந்தையென கைகளில் தூக்கி கால் படாத இடமாகப் பார்த்து அமர்ந்தாள்.

“வெள்ளிக் கிழமையதுவுமா வீடேறி வந்த ஐஸ்வர்யம் இப்புடி ஆகிட்டே. பத்மநாபா, ஏன் என்னப் போட்டு வதைக்கிற?” என்று புலம்பிக் கொண்டே குழிதோண்டத் தொடங்கினாள்.

அனுவிடம் “வீட்டுல பால் இருந்தா எடுத்துட்டு வா” என்றாள். அதட்டலாக.

‘நல்ல பாம்புக்குத் தான பால் ஊத்திப் புதைப்பாங்க’ என்ற நினைப்பு வந்தாலும் அனுவிற்கு கேட்கத் தோன்றவில்லை. எப்போதும் கனிவாகப் பேசும் பத்மாவின் கோபம் புதியதாக இருந்தது.

புதைத்த இடத்தில் சிறிது நேரத்திற்கு தொழுது நின்றவள் அனுவிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்குப் படியேறினாள்.

பத்மநாபா என்று தானே அழைத்தாள் பத்மாக்கா?

2

குடிவந்த சில நாட்களிலேயே கூட்டு, குழம்பு பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அனுவுடன் நெருக்கமானாள் பத்மா. வேலை விட்டு வந்ததும் அனுவிடம் அமர்ந்து மணிக்கூர் கணக்கில் ஊர்க்கதை பேசியபடி இருப்பாள். அனந்தன் வீட்டினுள் நுழைந்த பிறகுதான் குறுஞ்சிரிப்புடன் விடை பெறுவாள்.

வழி வழியாக நாகர் வழிபாட்டில் இருந்து வந்த குடும்பத்தினர் பஞ்சம் பிழைக்க வெவ்வேறு இடங்களில் சென்று குடியேறி பத்மாவின் தாத்தா காலத்தில் மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். பத்மாவிற்கு பத்து வயதிருக்கும் போது, ஊர்த் திருவிழாவன்று பத்மாவின் பாட்டியின் மீது நாகம்மாள் ஏறி ஆடியதில் மீண்டும் நாகர் வழிபாட்டிற்குத் திரும்பினார்களாம்.

ஒரு வெள்ளி விடாமல் நாகராஜா கோவிலுக்குச் சென்று விடுவாள். ஒன்றிரண்டு முறை அனுவையும் கூட்டிச் சென்றிருக்கிறாள். ஒரு நாள் கோவிலில் கிடைத்த ஓடவல்லிக் கொடி இலைகளைப் பார்த்து “உனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் பாரு” என்று ஆருடம் சொல்லி வெண்ணிற பிரசாத மண்ணை அனுவின் நெற்றியில் பூசிவிட்டாள்.

3

“அத்தே என்ன குழம்பு வைச்சீங்க?” என்று பத்மாவின் பிள்ளைகள் உரிமையுடன் கேட்டு சோற்றுத் தட்டுடன் வீட்டில் வந்து அமர்ந்து உண்ணும்.

“அத்தே சுருளப்பம் சுட்டுத் தருவீங்களா?”

“சுருளப்பம் எனக்கு சுடத் தெரியாதே. அம்மாட்ட கேட்க வேண்டியது தான?”

“போங்கத்த, எங்கம்மைக்கு எங்களப் பார்க்க எங்க நேரம். ஒன்னுல வேலைக்கு நேரமாச்சு இருக்கத சாப்பிடும்பா.. வேலைக்குப் போயிட்டு வந்தப்புறம் கேட்டா தலவலிக்குது தொல்ல பண்ணாதீங்கன்னு போய்ப் படுத்துருவா”

“அப்பாட்ட சொன்னா ‘குட்டிப் போட மட்டும் தான் தெரியும்.. ஒருமாதிரி நல்லப்பாம்பு சாதி ஒங்கம்ம’ன்னு ஏசிட்டு அவரும் பேசாம இருந்துருவாரு.”

“சரி, நான் யூ டூப்ல எப்படி பண்றாங்கன்னு பார்த்து செஞ்சுத்தாறேன்”

மணிமேடை துணிக் கடை ஒன்றில் கணக்கராக இருக்கிறாள் பத்மா.

“எப்படியோ உருட்டிப் பிரட்டி இருவது பவுனு சேத்துட்டேன். அப்டி இப்டின்னு இன்னும் ஒரு முப்பது பவுனு சேத்துட்டா எம்பிள்ளைகளுக்கு போதும்”

“குண்டுமணி தங்கத்துக்குப் போக்கில்லாம, கண்ட எறப்பாளிக கையில பிடிச்சுக் குடுக்க நிலைமைக்கு எம்பிள்ளேளத் தள்ள மாட்டேன்.”

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனக்கிருக்கும் சாமார்த்தியத்தை பேச்சு மிடுக்கில் உணர்த்தும் பத்மாவை ஆமோதிப்பது போன்று நகைத்துக் கடந்து விடுவாள் அனு.

மகப்பேறு பரிசோதனைக்காக கோபாலப் பிள்ளை மருத்துவமனைக்கு சென்று வந்த அன்று மாலை வேலை விட்டு வந்த பத்மா, “ரெண்டு பேரும் ஜோடியா டவுனுக்குள்ள சுத்துன மாதிரி இருந்துச்சு” என்று கேட்டாள்.

“சும்மா படம் பாக்கப் போயிருந்தோங்க்கா”

“நான் எதுவும் விஷேசம் போலன்னு நினைச்சேன்”

வழக்கம் போல சிரித்து சாமளித்தாள் அனு.

“எனக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே.. உடன தான், பச்சுன்னு ஒட்டிக்கிச்சு.. செப்டம்பர்ல கல்யாணம், ஜூன்ல மூத்தவா பொறந்தாச்சு” என்ற பத்மாவின் துள்ளலான பதில் அனுவிற்கு ரசிக்கவில்லை.

“எதுவா இருந்தாலும் நாகராஜாவுக்கு நேர்ந்துக்கோ. எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று இருக்கையில் இருந்து எழுந்தாள்.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் பத்மாவின் உடலில் வாளிப்பும் கட்டும் குலையாமல் இருப்பது முதன் முறையாக அனுவின் கண்களை உறுத்தத் தொடங்கியது.

4

ஒரு நாள், சுகக் கேடால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தன் இளைய மகளை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுமாறு வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து ஃபோன் செய்தாள் பத்மா.

நினைவிழந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த மகளைத் தூக்கி கிடத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார் மங்கள நாதன்.

“இந்த வீட்டுல வந்து பிறந்துட்டியே மக்ளே..” என்று தன் தலையில் அடித்தார். நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்த பிள்ளையின் நெற்றியில் பிரசாத மண் குறி இருந்தது.

அவ்வீட்டை அன்று தான் கவனித்தாள். பிள்ளைகள் சொன்ன வீட்டு விஷயங்கள் நினைவு வந்தது.

“எங்கம்மா எப்பவும் தனி ரூம்ல தான் படுப்பா. எங்களக் கூட உள்ள விடமாட்டா. நானும் அக்காவும் ஒரு ரூமுல படுத்துருப்போம். எங்க அப்பா வெளில ஹால்ல தான் படுப்பாரு. அப்பாட்ட எதுவும் பேசணும்னா கூட எங்க கிட்டத் தான் சொல்லுவா”

பத்மா ஒரு புதிராகப் படவே அவளுடனான பேச்சைக் குறைத்துக் கொண்டாள் அனு. இன்று பாம்பு வந்ததினால் அழைக்க வேண்டியதாகிவிட்டது.

மதிய உணவை முடித்துவிட்டு பாம்பு செத்த இடத்தில் அனு மண்ணெண்ணெய் தெளித்துக் கொண்டிருந்தாள்.

இறங்கி வந்த பத்மா, “எதுவும் நினைச்சுக்காத அனு… யேம் மனசுருகி வேண்டுன ஒன்னு நடக்கதா இருந்தா நான் நாகத்த பாத்துருப்பேன். அது எனக்குக் கண்ணுக்கு காட்ட வந்துரும். அத சாகப் பார்த்ததும், கோபப்பட்டுட்டேன். என்ன மன்னிச்சுடு” என்றாள்.

“ஸாரிக்கா… பதட்டத்துல தான் கல்லத் தூக்கிப் போட்டுட்டேன்… மனசே சரியில்ல.. இன்னைக்கு நீங்க கோவிலுக்குப் போறதா இருந்தா நானும் வாறேன்” என்றவள் கறவைப் பாலும், மஞ்சள் பொடியும் வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொண்டாள்.

5

வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் அனந்தனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமோ என்று பயந்திருந்த அனுவிடம், அவன் எதுவுமே கேட்கவில்லை. வேலை விட்டு வந்தவன் நேராகப் போய்க் குளித்து தயார் ஆகி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான்.

“கோவிலுக்குப் போயிட்டு வந்தப் பிறகு தான் ஒரு நிம்மதி” என்று இருவரும் பஸ் பிடித்துப் போய் வந்தக் கதையினைக் கூறிக்கொண்டே தோசை வார்த்து தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு வில்லைப் பிட்டு வாயில் இட்ட அனந்தனுக்கு உடல் சில்லிட்டு உள்ளுள் மெலிதாக உதறுவது போலிருந்தது. பற்கள் மெதுவாக அடித்துக் கொள்வது போலிருக்க நாவறண்டு தொண்டையில் எச்சில் பிரண்டு இறங்க மறுத்தது. நெஞ்சுக் கூட்டில் மென் நடுக்கம் எடுக்க, வயிற்றில் பிரளயம் கண்டது போன்றதொரு உணர்வு.

எழுந்து அடுப்படியில் அனு அருகில் சென்று சிரத்தையாக கதை கேட்கும் பாவனையில் நின்றவனின் கண்கள் ஒரு விதமாய் செருகி அனல் அடிப்பதைக் கண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

‘தோவாளைல இன்னிக்கு மல்லி விலை மலிவு போலிருக்கு’ என்று கொளத்து பஸ் ஸ்டாண்ட் பூக்கடையில் இருந்து, கூட ஒரு முழம் வாங்கி சூடிக் கொண்ட ஜாதி மல்லி வாசத்தின் விஷம் அனந்தனின் தலைக்கடித்து விட்டது.

6

தோசையிருந்த தட்டில் சட்டினி ஊற்றிக் கொண்டு அவளருகில் வந்தமர்ந்து ஊட்டிவிட்டு தானும் உண்ணத் தொடங்கினான்.

படுக்கை விரிப்பிற்குள் சுருண்டுக் கொண்டு வெட வெடத்தவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான்.

“நீங்க நாகராஜா கோவிலுக்குப் போயிருக்கீங்களா?”

“ஆமா, சின்ன வயசுல அம்மா கூட்டிப் போயிருக்கா. கை கால்கள்ள தோல் சுருங்கி வெடிச்சு பாளம் பாளமா இருந்த நோய் அங்கப் போய் தான் சரியாச்சு”

“இன்னைக்கு என்னா கூட்டம்னு நினைக்கறீங்க.. வரிசைல நின்னுதான் பால் ஊத்தினோம்”

“ம்”

“கருவறையை சுத்திட்டு இருக்கும் போது அதோட ஓலக் கூரைல இருந்து பொத்துனு ஒரு பாம்பு விழுந்து. அதுவும் என் கண்ணுல தான் பட்டிச்சு. அந்தக்காக்கு காணிச்சுக் குடுத்தேன். அனு நீ எவ்வுளோ குடுத்து வைச்சவன்னு தெரியுமான்னு கேட்டுட்டு அழுதுகிட்டே கொஞ்ச நேரம் கும்பிட்டு நின்னாங்க”

“ம்” அனந்தன் வேறெதோ யோசனையில் இருந்தான்.

“எல்லா வாரமும் கோவிலுக்கு வாறீங்களே, எதுவும் நேர்ச்சையாக்கானு கேட்டேன்”

“ம்” அவன் கண்கள் அனுவைக் கூர்ந்து கவனித்தன.

“பத்மாக்கா அவுங்க அம்மா வயித்துல இருக்கும் போது ஒரு பாம்பு ஏறிப் போச்சாம். அவுங்க வயசுக்கு வந்த மூணாவது வாரம் ஒரு வெள்ளிக் கிழமை ஒரு பெரிய பாம்பு அவுங்க உடம்பப் பின்னிக் கிடக்கிற மாதிரி கனவு கண்டு காச்சல்ல விழுந்துட்டாங்களாம். அப்புறம் நாகராஜா கோவிலுக்குப் போய் நாற்பது நாள் நெய் விளக்கு ஏத்தி தான் சரியாச்சாம்.”

“ம்” ஏற்கனவே தெரிந்த கதையைக் கேட்பவனைப் போல் சலிப்போடு பார்த்தான் அனந்தன். அவள் இன்னும் கூர்ந்து நோக்கியபடி தொடர்ந்தாள்.

“இப்போ திடீர்னு கொஞ்ச காலமா தொடர்ந்து அதே மாதிரி பாம்புக் கனவா வருதாம்”

இம்முறை சத்தம் வராமல் அனுவை நேரிட்டு பார்ப்பதைத் தவிர்த்து எழுவதற்கு அசைந்தான். அனு அமைதியாக அவனைப் பார்த்தபடி நின்றாள்.

இயல்பு நிலைக்குத் திரும்பியவனாக கடைசி தோசைத் துண்டினால் தட்டில் ஒட்டியிருந்த சட்டினியைத் துடைத்தெடுத்து அனுவிற்கு ஊட்டிவிட்டு அனந்தன் சமையல் கட்டிற்குச் செல்ல, கூகிள் தேடு தளத்தில் ‘ஏன் பாம்பு கனவு வருகிறது’ என்று தேடினாள் அனு.

மின் விசிறி தொங்கும் காண்கிரீட் கூரையின் மேல் தளத்தில், ஒருபுறம் ஒதுங்கி தனித்து உறங்கும் பத்மாவை நினைத்து ஒரு கணம் வருந்திய படி ஃபோனின் ஒளிர் திரையை மேல் தள்ளிக் கொண்டிருந்தாள். பத்மாவை நினைத்து தன் மனதில் தோன்றியது வருத்தமா, கோவமா இல்லை இரக்கமா என்று பல யோசனைகள்.

விளக்கணைத்து விட்டு அருகில் வந்து படுத்துக் கொண்ட அனந்தன் மூக்கினால் அவள் கன்னத்தில் கோலமிட்டபடி கால்களைப் பின்னிக் கொண்டான். அனுவிற்கு சட்டென அந்தப் பாம்பைத் தொட்டதைப் போலிருந்தது. ஒருவித சிலிர்ப்பும் அருவருப்பும். மறைத்துக் கொண்டாள்.

“இங்கப் பாருங்கத்தான், கனவுல பாம்பு வாரது அடக்கி வைச்சுருக்க தேக சுகத்துக்கான அறிகுறின்னு ஃபிராய்டுன்னு ஒரு ஃபிலாசபர் சொல்லிருக்கத.. இவளுக்கு அவ மாப்ள கூட இருந்தா என்னவாம்?”

அனந்தன் தன் முகத்தை விலக்கி நெற்றி, புருவம் நெறித்து அனுவைப் பார்த்தான். அவன் கண்கள் சீறுவதைப் போலிருந்தன.

“அமெரிக்கால கனவு ஆராய்ச்சி செய்ற ஒருத்தி சொல்றா கனவுல பாம்பு வந்துச்சுன்னா வேண்டாதவங்க யாரோ இடைஞ்சலா வாழ்க்கைல இருந்துட்டு இருக்காங்கனு அர்த்தமாம்.” அனு அவனது பதில் வந்தே தீர வேண்டும் என்பதைப் போல அவனைக் கூர்ந்து கவனித்தாள்.

அனந்தனின் கண்களில் செந்நரம்புகள் எழத் துவங்கி முகம் இறுகியது.

“தனியாப் படுக்குற அளவுக்கு மாப்ள பொண்டாட்டிக்க இடையில என்னவா இருக்கும்?” என்று கேட்கத் தொடங்கியவள் கைகளில் இருந்து போனைப் பிடுங்கி அணைத்து கட்டிலின் கீழ் தள்ளினான்.

அனு சட்டென எழுந்து உட்கார்ந்தாள். சற்று பயந்து கண் கலங்கியபடி இருந்தாள்.

“தூங்குற நேரம் பாம்பாராய்ச்சி இப்ப ரொம்ப முக்கியமா?” என்று பற்களைக் கடித்தான். விலகி, திரும்பி படுத்துக் கொண்டான். சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கி விட்டான். வழக்கம் போல நீண்ட குறட்டை.

நீண்ட நேரம் குழம்பியபடி யோசித்துக் கிடந்த அனு சோர்ந்து உறங்கிச் சரிந்தாள். பாம்புச் சுழல்களுக்குள் நுழைந்து முன் சென்று கொண்டிருக்கிறாள். எங்கும் இருளும் ஓலமும். இடையிடையே பாம்புச் சீறல்கள். தொலைவில் கலங்கிய பிம்பங்களாக நிர்வாண உடல்கள். தெளிந்து வந்த ஒரு வீட்டு முற்றம்.

ஈரத் துவாலையால் கொண்டை சுற்றிய பத்மா, முற்றத்தில் ஆயிரம் புள்ளி வைத்து காவல் இருக்க, காலருகே பூமித் துளைத்து வருகின்றன வெண் புழுக்கள் இரண்டு.

ஒன்றையொன்று பற்றிப் பின்னி வானெழும்பும் ஓருடல் புழுக்கள் திடீரென ஒரு ராஜ நாகமாயின.

அதன் அனல் மூச்சில் வான்மேகம் நஞ்சேறி கருக்க, அழுகலின் நிணம் சட சடவென பூமியில் விழுந்தது.

துளிகள் வெடித்து குட்டிகளாக விரிய, கொத்தாகப் பிடித்தள்ளி, புள்ளிகளின் மேல் உதறுகிறாள் பத்மா. நாககன்னியாக உருமாறி கைகளை நீட்டி வாவென அழைக்கிறாள்.

நெளியும் குட்டிகள் புள்ளிகளில் சேர்ந்து மலை போல் குவிந்து உயர்ந்து ஒற்றை சர்ப்பமாகி, பதறி விழுந்த அனுவின் உடலை நெறிக்கத் தொடங்கின. நாககன்னி தன் உடலைத் தன் கைகளால் தடவியபடி சீறிச் சிரிக்கிறாள். மூச்சு விடத் திணறி பயந்து அலறி விழித்தாள் அனு.

சற்றும் அசராமல் அனுவை இறுக அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான் அனந்த பத்மநாபன். சரியாக அந்நேரம் அவனது ஃபோனில் இருந்து டிங் என்று மணி சத்தம் கேட்க, கைநீட்டி எடுத்துப் பார்த்தாள். போனின் முகப்புப் படமாக ஒளிர்ந்தது நாகராஜா கோவில்.

***

சார்பினோ டாலி – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள் மீது பெருங்காதலுடன் எழுதிவருகிறார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular